வெள்ளி, 28 செப்டம்பர், 2018

'வசவு'களை மானாவாரியாய் எனக்கு வாரி வழங்கிய பழைய இடுகை!!!

பதிவின் தலைப்பு:                    கடவுளின் 'தன்விவரக் குறிப்பு'!

1] பெயர்: ...................................கடவுள்.


2] சிறப்புப் பெயர்கள்:............     சொல்லி மாளாது!
[பக்தர்கள் சூட்டியவை]              [’ஆதி மூலன்’,  'ஆபத்பாந்தவன்’
                                                           ‘கருணைக் கடல்’ என்றிவ்வாறான     
                                                             நாமங்களையும், மதம்
                                                             சார்ந்த பெயர்களையும் நினைவு
                                                             கூர்க]

3] பிறந்த தேதி:...........................தான் அவதரித்த அந்தப் புனித
                                                             மான நாளைக் கண்டறிய, யுக      
                                                             யுக யுகங்ளாக ...கோடி கோடி 
                                                             கோடி ஒளி ஆண்டுகளாகச் 
                                                             சிந்தித்துக் கொண்டிருக்கிறார்
                                                             கடவுள்.

4] கல்வித் தகுதி:......................அனைத்தும் அறிந்தவர்.

5] தொழில்:..............................அளந்தறிய இயலாத, விரிந்து
                                                           பரந்த ‘வெளி’யில் கணக்கில் 
                                                           அடங்காத கோள்களையும் 
                                                           நட்சத்திரங்களையும் பிற
                                                           வற்றையும் படைத்து உலவச்
                                                           செய்து, அவ்வப்போது அவற்றை 
                                                           மோத விட்டு, அவை வெடித்துச் 
                                                           சிதறும் கண்கொள்ளாக் காட்சி
                                                           யைக் கண்டுகண்டு ரசிப்பது.      
                                                     
                                                           மண்ணுலகில், உயிர்கள் ஒன்றோடு
                                                           ஒன்று மோதித் துன்புற்று அழிவதை
                                                           யும், வறுமை, நோய் போன்றவற்றால்                                                                               சித்திரவதைக்கு  உள்ளாவதையும்                                                                           வேடிக்கை பார்ப்பது.                                 
                                                                 
6] நண்பர்கள்:..........................காணிக்கை செலுத்தியும், நேர்த்திக் 
                                                          கடன்களை நிறைவேற்றியும், “இதைக் 
                                                          கொடு...அதைத் தா” என்று தொல்லைக்கு
                                                          உள்ளாக்காதவர்கள்.

7] நல்ல நண்பர்கள்:.............    அடுக்கடுக்கான வேதனைகளுக்கு
                                                          உள்ளானாலும் கடவுளை ஏசாமல்
                                                          “எல்லாம் என் தலைவிதி” என்று 
                                                          தன்னைத்தானே நொந்து கொண்டு    
                                                          நடைப் பிணமாய்க் காலம் கழிப்ப
                                                          வர்கள்.

8] எதிரிகள்:.............................கடவுள் இல்லை என்று சொல்லி, 
                                                         மூடநம்பிக்கைகளைச் சாடும்
                                                         நாத்திகர்கள் அல்ல.

                                                         கடவுளைக் காப்பதாகச் சொல்லிக்
                                                         கொண்டு, மாற்று மதத்தவர்களைக்
                                                         கொன்று குவித்து, அவர்களின் 
                                                         சொத்துகளை நாசப்படுத்தி, மிருகங்
                                                         களாய்த் திரியும்  மதவெறியர்கள்.

9] நிரந்தர எதிரிகள்:............    “நானே கடவுள்” என்று சொல்லித்
                                                         தினவெடுத்து அலையும் புதுப்
                                                         புது ‘அவதாரங்கள்’.

10] இப்போதைய கவலை:        தம் படைப்பில் நேர்ந்த தவறுகளை
                                                         நீக்குவதற்காக, மனிதனுக்குத் தந்த
                                                         ஆறாவது அறிவை, அவன் தன் 
                                                         சுயநலத்துக்காகப் பயன்படுத்துவது.

11] நிரந்தரக் கவலை:.........    படைத்தல், காத்தல், அழித்தல் 
                                                        ஆகிய தமக்குரிய முத்தொழிலை
                                                        இன்னும் எவ்வளவு காலத்துக்குச்
                                                        செய்வது?*************************************************************************************************
மிக முக்கிய குறிப்பு:
கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவர் மனதைப் புண்படுத்துவது மட்டுமே இப்பதிவின் நோக்கம்; அவருடைய பக்தர்களின் மனங்களை அல்ல...அல்லவே அல்ல!
                                                         

வியாழன், 27 செப்டம்பர், 2018

நான் உலகமகா கிறுக்கன்!?!?

''நான் ஓய்வில்லாமல் உழைத்து வாழ்நாளில் சாதனைகள் நிகழ்த்த நினைப்பவன். வயிற்றுக்கு உணவு தேடி அலைவதும், ஓய்ந்துபோய் உறங்கிக் கிடப்பதும் இதற்குத் தடைகளாக உள்ளன. ஆகவே, நான் உண்ணாமலும் உறங்காமலும் உழைத்து வாழ்ந்திட அருள்புரிவாய் கடவுளே.''

''நான் உன் பக்தன்; 100% உண்மையான பக்தன். உன்னைத் துதிபாடி உவப்பதுடன், தரணியெங்கும் நின் புகழ் பரப்பி மகிழ்ந்திட ஒரு நூறாண்டு வாழ்க்கை போதாது. ஆகவே ஐயனே, அருள்கூர்ந்து நீ எனக்கு மரணமில்லாப் பெருவாழ்வைத் தந்தருள வேண்டும்.''

பக்தனொருவன் மேற்கண்டவாறு கடவுளிடம் வேண்டுதல் வைப்பானாகில் அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?
'அவன் உலகமகா கிறுக்கன்!' என்றுதானே? காரணம்.....

உணவு, உறக்கம், மரணம் என்ற இம்மூன்றும் இல்லாமல் எந்தவொரு உயிரினமோ மனித இனமோ வாழ்தல் என்பது இயற்கை நெறியல்ல என்பதை நாம் புரிந்துகொண்டிருப்பதுதான்.

உண்டு உறங்கி வாழ்ந்து முடித்து மரணத்தைத் தழுவுகிற நாம், வாழும் சூழலுக்கேற்ப இன்பதுன்பங்களையும் அனுபவிக்கிறோம். அதுவும் இயற்கையே.

கடவுள் என்று ஒருவர் இருப்பினும்.....

அவரைப் போற்றிப் புகழ்ந்து வழிபட்டு, நம்மை வருத்தும் துன்பங்களைப் போக்குமாறு வேண்டிக்கொள்வதால் அத்துன்பங்கள் அகன்றுவிடா. உண்டு உறங்கி வாழ்ந்து சாவது எவ்வாறு இயற்கை நிகழ்வோ, அது போன்றதுதான் வாழ்க்கையில் துன்பங்களை அனுபவிப்பதும்.

அவரை வேண்டிக்கொள்வதால், உண்ணுதல் உறங்குதல் இறத்தல் என்பனவற்றிலிருந்து எவ்வாறு விடுபட இயலாதோ, அவ்வாறே துன்பங்களிலிருந்தும் விடுபட இயலாது என்பது உறுதி.

சக மனிதர்களின் ஆறுதல் மொழிகளையும், மனப்பூர்வமான உதவிகளையும் பெறுவதன் மூலமும், எதையும் தாங்கும் மன உறுதியை வளர்த்துக்கொள்வதன் மூலமும் துன்பங்களின் தாக்கத்தை இயன்றவரை குறைக்கலாம். மற்றபடி.....

கடவுளை நம்பி ஏமாறுவதும், அவர் பெயரால் நிறுவப்பட்டிருக்கும் சிலைகளைக் காணப் பல மணி நேரங்களை வீணடிப்பதும் அவரவர் விருப்பம்!

வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி.

செவ்வாய், 25 செப்டம்பர், 2018

சிந்திக்கத் தெரியாதவர்களுக்கான சிறப்பு இடுகை!!!

மூடநம்பிக்கை என்னும் குட்டையில் காலமெல்லாம் ஊறிக் கிடப்பதில் அற்ப சுகம் காணும் அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்.....

கீழ்க்காணும் பதிவை நிதானமாகப் படியுங்கள். இந்த வாசிப்பு அனுபவம் உங்களை மிக ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டும். விளைவு.....

உங்களின் சிந்திக்கும் திறன் நாளும் அதிகரிக்கும். பல்வேறு மூடநம்பிக்கைகளின் பிடியிலிருந்து படிப்படியாய் விடுதலை பெறுவீர்கள்.

இது உறுதி.

நன்றி.

திங்கள், 24 செப்டம்பர், 2018

என் 'அஞ்ஞானம்' அகன்றது!!!

''கடவுள் உண்டா, இல்லையா?'' என்னும் கேள்விக்கு 'ஞான சூனியன்' ஆன நான் மிகப் பல்லாண்டுகளாக விடை காணும் வகையறியாமல் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தேன். தவிப்புக்குக் காரணம்.....

கடவுளின் 'இருப்பை' ஆறறிவால் அறியவோ, மனதால் உணரவோ எனக்கு வழிகாட்ட எவருமில்லை; கடவுள் குறித்த ஆன்மிகவாதிகளின் அனுமானங்களும் கற்பனைகளும் என்னளவில் ஏற்புடையனவாக இல்லை என்பதே.

அகவை ஏற ஏற என் தவிப்பும்  அதிகரித்துக்கொண்டே போனது.

'மரணத்தைத் தழுவும்வரை அந்தப் பரம்பொருளை உணர்ந்தறியும் பேறு வாய்த்திடாதோ?' என்னும் அளப்பரிய கவலை என்னை அரித்தெடுக்கலாயிற்று. இந்த அவல நிலையில்.....

தமிழின் 'அந்த'ப் 'பலசரக்கு' வார இதழை, பல வாரங்களாக வாசிக்கும் வாய்ப்புக் கிட்டியது. 

'நடமாடும் கடவுள்' என்று ஒரு மனிதரை முன்னிலைப்படுத்தியதோடு, அவர் தொடர்பான பேரதிசய நிகழ்வுகளைப்[மனிதர்களுக்கான குறைகளைத் தம் மெய்ஞானத்தால் அறிந்து நிவர்த்தி செய்தல்] பட்டியலிட்டார்கள். 'அவரே கடவுள்' என்று ஒட்டுமொத்த உலகுக்கும் பறையறைந்து சொன்னார்கள்.

முக்காலமும் அறிந்த அந்த ஞானி, அடுக்கடுக்காய் மக்களுக்கு ஆற்றிய நற்பணிகளைப்[ஆதாரங்களுடன்!!!] பட்டியலிட்டார்கள்.

இந்த வார இதழ்க்காரர்களின் போற்றுதலுக்குரிய இப்பணி பக்தர்களைப் பரவசப்படுத்தியது; என் போன்ற பரம நாத்திகர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. 'இவரே கடவுள்' என்று எண்ண வைத்தது!

'மண்ணில் நடமாடும் கடவுளாக அருள்பாலித்த இவர் மட்டுமே கடவுள். பிரபஞ்ச வெளியில் பிறிதொரு கடவுள், அல்லது கடவுள்கள் இல்லை...இல்லவே இல்லை' என்று நம்ப வைத்தது!!

மண்ணில் நடமாடிய... இஞ்ஞான்றும் எஞ்ஞான்றும் விண்ணில் நடமாடும் இந்த 'மகா.....பெரிய' கடவுள் வாழிய வாழியவே!
------------------------------------------------------------------------------------------------------------------





ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

''சாமியாரில் என்னடா போலிச் சாமியார்?''

கேரளாவின் மல்லப்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்[பெயர் வேண்டாம்] மன அமைதி வேண்டி, தேவாலயத்துக்குச் சென்று 'பாவ மன்னிப்பு' வேண்டினார். பாவ மன்னிப்பு அளிக்க வேண்டிய பாதிரியாரோ, ''திருமணத்திற்கு முன்பே நீ கற்பிழந்ததை உன் கணவனிடம் சொல்லிவிடுவேன்'' என்று மிரட்டி அவரை வல்லுறவுக்கு ஆளாக்கினார். இது ஒரு சம்பவம். இன்னும் இருக்கு!

'பிராங்கோ முள்ளக்கல்' என்னும் 'பிஷப்'பின் லீலை குறித்த செய்தி ஊடகங்களில் மானாவாரியா அடிபட்டுக்கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த ஆள்.....

ஒரு கன்னியாஸ்திரியை மிரட்டிக் கற்பழித்தார். அவரின் அட்டூழியம் தொடர்ந்தது[இது கேரள மாநிலத்தையே நாறடித்த சம்பவம்]. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாக, சக கன்னியாஸ்திரிகள் போராட்டம் நடத்தினார்கள். முதலில், ''நான் கற்பழிக்கவில்லை'' என்று சமாளித்துப் பின்னர், ''இது ஆன்மிகத்தில் ஒரு நிலை'' என்று அசடுவழிந்தார்.

சில அரசியல்வாதிகளும் தேவசபையும்கூட அவருக்கு ஆதரவளித்தன. இருந்தும்.....

இப்போது அவர் கைது செய்யப்பட்டுக் கம்பி எண்ணுகிறார். 'ஜாமீன்' வழங்கவும் நீதிமன்றம் மறுத்திருக்கிறது.

கேரளாவின் கண்ணூரிக்கு அருகில் உள்ள செபாஸ்டியன் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த ஒரு பக்திமான், 2016ஆம் ஆண்டில் 16 வயதே ஆன ஒரு சிறுமியை வன்புணர்வு[ஆண்டு முழுக்க] செய்து ஒரு குழந்தைக்குத் தாயாக்கினார்[அதற்குப் பின்னரான நிகழ்வுகள் நமக்கு முக்கியமல்ல].

கீழ்வரும் தகவல் வெகு வெகு வெகு சுவாரசியமானது.

தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரிப்பவர் பிரபலமாயிருந்த தமிழ் எழுத்தாளர். சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்ட அவர் 'அனுராதா ரமணன்'. சொல்கிறார்:

#1992 ஆம் ஆண்டு மடத்திலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சென்றேன்.

அந்தச் சாமியார் ஆன்மிகம் பேசினார். ஆன்மிகப் பேச்சு ஆபாசப் பேச்சாக மாறியது. எனக்குள் அதிர்ச்சி.....

எழுதிக்கொண்டிருந்த நான் தலை நிமிர்த்திப் பார்த்தேன். அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. காரணம்.....

என்னுடன் வந்திருந்த பெண், அந்தச் சாமியாருடன் மிக நெருக்கமாக இருந்தார்; சாமியாரின் விருப்பத்துக்கு இணங்கும்படி என்னையும் வற்புறுத்தினார். சாமியாரைப் பார்த்து, ''நீயெல்லாம் மனுஷனா?'' என்று கேட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினேன்#

சாமியார்களின் 'லீலை' குறித்த பட்டியல் நீளுகிறது!

''சாய்பாபாவின் சீடன்'' என்று தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டவர் 'சிவ்முரத் திவிவேதி' என்னும் சாமியார். 2000 கோடிக்கு மேற்பட்ட சொத்துக்கு அதிபதி. கான்பூரில் சாய்பாபாவுக்குப் பிரமாண்ட கோயில் கட்டியவர்.

இந்தச் சாமியார், மதத்தைக் கேடயமாகப் பயன்படுத்திப் பாலியல் வக்கிரங்களில் ஈடுபட்டவர்; பெண்களைப் பாலியல் தொழிலும் ஈடுபடுத்திச் சம்பாதித்தவர். இவரின் கோயிலில் காவல்துறையினர் நடத்திய அதிரடிச் சோதனையில் இவ்வுண்மைகள் வெளியாயின.

இன்னும்...இன்னும்...இன்னும்...

ஆசாரம் பாபு, பிரம்மரிஷி[பட்டத்தைப் பாருங்கய்யா!!!!!] சுபாஷ் பத்திரி, ரஜினீஷ் குரோவா, சாமி அமிர்த்சைதன்யா, ஶ்ரீஹரி கணேஸானந்தா[நம்ம ராமகிருஷ்ண பரமஹம்சா சாமியார் நினைவுக்கு வருகிறார்] என்று இவ்வகைச் சாமியார்களின் பட்டியல் நீண்டுகொண்டே.....போகிறது.

மேற்கண்ட தகவல்களை உள்ளடக்கிய 'அந்த'க் கட்டுரையின் முடிவில்.....

'பக்தியின் போர்வையில் இம்மாதிரிச் சாமியார்கள் நிகழ்த்தும் அட்டூழியங்களும் பாலியல் கொடுமைகளும் சொல்லில் அடங்காதவை. மக்கள் விழிப்புணர்வு பெறாவிட்டால்...சட்டம் இவர்களைத் தண்டித்துத் திருத்தாவிட்டால்...தந்தை பெரியார் கேட்ட, ''சாமியாரில் என்னடா போலிச் சாமியார்?'' என்ற கேள்வியை ஒட்டுமொத்தச் சமுதாயமும் கேட்க நேரிடும்' என்கிறார் கட்டுரை ஆசிரியர்.

கட்டுரையை வெளியிட்ட, 'தமிழ் இந்து, 23.09.2018'['பெண் இன்று'] நாளிதழுக்கு நன்றி...நன்றி...நன்றி![கட்டுரை, பொருள் மாறாமல் சற்றே சுருக்கப்பட்டது].


சனி, 22 செப்டம்பர், 2018

காமமே வெல்லும்!!!

ஒரு கத்துக்குட்டிக் கவர்ச்சி நடிகையின் கண்சிமிட்டலை இணையத்தில் கண்டு ரசித்தவர்கள் சில[பல?] லட்சம் பேர்! நெஞ்சை நெகிழவைக்கும் கீழ்க்காணும் கதையை[2012இல் வெளியானது]வாசித்தவர்களின் எண்ணிக்கை சில நூறு மட்டுமே. காரணம்.....

பதிவின் தலைப்பைக் கவனியுங்கள். தலைப்புக்கும் கதைக்கும் தொடர்பில்லை என்பதையும் அறிவீராக!

ண்ணுச்சாமி ரொம்பவும் இளகிய மனசுக்காரன்.

மாலை நேரத்தில், வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த எழுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவரை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டான் ஒரு வாகன ஓட்டி.

ரத்தக் காயங்களுடன் தார்ச்சாலையில் சரிந்து விழுந்தார் பெரியவர்.

யாரும் உதவாத நிலையில், ஃபோன் செய்தும் உரிய நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வராததால் வாடகைக் கார் பிடித்து அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தான் கண்ணுச்சாமி. சோதித்த மருத்துவர்கள், “மயக்கமா இருக்கார். பயப்பட ஒன்னுமில்ல” என்றார்கள்; மிகவும் தாமதமாகவே சிகிச்சையளித்தார்கள்.

நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவரைப் பார்க்க அவன் அனுமதிக்கப் பட்டான்.

முதியவருக்குச் சுயநினைவு திரும்பியிருந்தது.

அவரை நெருங்கி, “நல்லா இருக்கியா பெரியவரே?” என்று குரலில் கனிவு பொங்கக் கேட்டான் கண்ணுச்சாமி.

அவனை உற்றுப் பார்த்த அவர், “நல்லா இருக்கேன்பா. நீ.....நீதான் என்னை இங்கே கொண்டுவந்து சேர்த்தியா?” என்றார்.

“ஆமா. மோட்டார் சைக்கிளில் அடிபட்டு மயங்கி விழுந்துட்டே. உன்கிட்டே செல்ஃபோன் இல்ல. ஒரு அடையாள அட்டைகூட இல்ல. உன் குடும்பத்தார்க்குத் தகவல் தர முடியல. உனக்கு மயக்கம் தெளியட்டும்னு காத்திருந்தேன்” என்றான்.

“கடவுளாப் பார்த்து உன்னை அனுப்பியிருக்கார். நீ நல்லா இருக்கணும்ப்பா.”  -குரல் தழுதழுக்கச் சொன்னார் முதியவர்.

''பெரியவரே, நீ நினைக்கிற மாதிரி கடவுள்தான் என்னை அனுப்பியிருக்கணும். ஆனா, செலவுக்குப் பணம் கொடுத்து அனுப்பல. இன்னிக்கிப் பாரம் சுமந்து சம்பாதிச்ச பணத்தை உன்னை ஏத்திட்டுவந்த வாடகைக் காருக்குக் கொடுத்துட்டேன். வெறும் கையோட வீட்டுக்குப் போனா, ‘கைப்பிடி அரிசியில்ல; மறக்காம வாங்கிவான்னு சொல்லி அனுப்பிச்சேன். யாருக்கோ உதவி பண்ணினேன்னு இப்படி வெறுங்கையோட வந்து நிக்கிறியே, உனக்கு ஏன்தான் இப்படிப் புத்தி கெட்டுப்போச்சோ’ன்னு என் பெண்டாட்டி கத்துவா. நீ ரூபா ஏதும் வெச்சிருக்கியா?'' என்றான் கண்ணுச்சாமி.
“எனக்கு ஒரே புள்ள. ஒன்னுக்கும் உபயோகம் இல்லாத இந்தக் கிழவனை வீட்டோட இருக்க வெச்சி ஒரு வேளைச் சோறு போடுறான். எப்பவாவது அஞ்சோ பத்தோ தருவான்” என்று சொல்லி, சட்டைப் பையைத் துழாவிய முதியவர் கொஞ்சம் சில்லரையை எடுத்துக் காட்டினார்.

''பத்து ரூபாகூடத் தேறாது போலிருக்கு. சில்லரையை நீயே வெச்சிக்கோ. நான் நடந்தே வீட்டுக்குப் போயிடுறேன்'' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்தான் கண்ணுச்சாமி.
------------------------------------------------------------------------------------------------------------------
இது பழைய கதை. நிகழ்வுகள் மாற்றியமைக்கப்பட்டுப் பிழைகளும்[தமிழ்மணம் இணைப்புக்குப் பின்னர்] திருத்தப்பட்டுள்ளன. தலைப்புப் படம் கூகுளின் உதவி.


வெள்ளி, 21 செப்டம்பர், 2018

'கருணாநிதி ↔ ஜெயலலிதா'...இவர்களில் 'ஆகச் சிறந்த' அறிவாளி யார்?

ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராக இருந்தபோது, அவரைச் சந்தித்த ஊடக நிருபர்கள்,  ''கலைஞர் கருணாநிதி பற்றி உங்கள் கருத்து என்ன?''  என்று அதிரடியாய் ஒரு கேள்விக்கணையைத் தொடுத்தார்கள்.

அம்மையார் அவர்கள் சற்றும் யோசியாமல் பதில் சொன்னார். அந்தப் பதில்.....

''அவர் குடும்பப் பாசம் மிக்கவர்.''

அதே நிருபர் கூட்டம், பிறிதொரு நாளில் கலைஞர் கருணாநிதியைச் சந்திக்க நேர்ந்தபோது, ''ஜெயலலிதா பற்றி உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டுவிட்டுப் பதிலுக்காகப் பேராவலுடன் காத்திருந்தார்கள். கருணாநிதி சொன்னார்:

''அம்மையார் பாசத்துக்காக ஏங்குபவர்.''

 கொஞ்சமே கொஞ்சம் நுணுகி ஆராய்ந்து.....

'கருணாநிதி குடும்பப் பாசம் மிக்கவர்' என்ற பதிலில், 'அவர் குடும்ப அரசியல் நடத்துகிறார். தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்காக எதையும் செய்பவர்' என்றெல்லாம் அர்த்தம் பண்ணத் தேவையில்லை. கலைஞரின் பாச உணர்வை மட்டுமே மனதில் கொண்டு அம்மையார் கருத்துச் சொல்லியிருக்கிறார் என்பதே உண்மை.

'பாசத்துக்காக ஏங்குபவர் ஜெயலலிதா' என்றாரே கலைஞர் கருணாநிதி, அந்தப் பதிலின் மூலம் அவர் சொல்ல நினைத்தது.....

'அவர் திருமணம் ஆகாதவர். குடும்பப் பாசத்துக்காக ஏங்குபவர்' என்பது மட்டுமே.

இருவருமே தேர்ந்த அரசியல்வாதிகள். அசாதாரணப் புத்திசாலிகள்; வார்த்தை ஜாலம் புரிவதில் வல்லவர்கள். தத்தம் அரசியல் எதிரி குறித்து மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாய்ச் சொல்லத் தெரிந்தவர்கள். இருந்தும்.....

பேட்டிகளில் இருவரும் ஒருவரையொருவர் 'மதித்து'க் கருத்துச் சொன்ன அதிசய நிகழ்வு இது.

நீங்க பாட்டுக்கு, ஏடாகூடமாக ஏதேதோ அர்த்தம் எல்லாம் பண்ணி என்னை வம்பில் மாட்டிவிட்டுடிவீங்களோன்னு பயந்து.....

கருத்துப் பெட்டியைப் பூட்டி வைத்துள்ளேன்!
------------------------------------------------------------------------------------------------------------------
நடிகர் ராஜேஷ், தினத்தந்தியில் எழுதும் 'மனதைத் தொட்ட மனிதர்கள்' என்னும் தொடரிலிருந்து சுட்டது[இருவர் பேட்டி நிகழ்வு மட்டும்].

நடிகர் ராஜேஷ் அவர்களுக்கும் 'தந்தி' குடும்பத்தார்க்கும் என் நன்றி.

வியாழன், 20 செப்டம்பர், 2018

சாமிகளை ஏமாற்றும் ஆசாமிகள்!...ஹா...ஹா...ஹா!!!

'படையல்' என்னும் பெயரில் பூஜைக்கு வைத்த உணவுப் பண்டங்களைத் தானே தின்று தீர்ப்பது; செய்த பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்கிறேன் பேர்வழி என்று உடம்பு நோகாமல் தோப்புக்கரணம் போடுவது; ஆண்டு முழுக்கக் காடை, கவுதாரி, ஆடு, மாடு, கோழி என்று கறி விருந்து உண்டு களித்துப் புரட்டாசியில் மட்டும் அசைவம் தவிர்ப்பது என்றிப்படிப் பலவகையிலும் சாமிகளை ஏமாற்றத் தெரிந்தவர்கள் நம் ஆசாமிகள். 

இந்த வரிசையில் முன்னிலை வகிப்பது 'முடி காணிக்கை'.

''எதற்கு இந்த தலைமுடி காணிக்கை?'' என்று சிந்தித்து அறிய முயன்றவர் எவருமில்லை. ''முன்னோர்கள் செய்தார்கள். நாமும் செய்கிறோம்''...அவ்வளவுதான். 

தலைமுடி காணிக்கைக்கான காரணத்தைத் திருப்பதி தேவஸ்தானம் தெரியப்படுத்தியிருக்கிறது, அதன் வெளியீடான 'சப்தகிரி' என்னும் மாத இதழில். 'கல்யாண கட்டா'வில் இடம்பெற்றுள்ள தகவல்களை வாசியுங்கள்.


'மனிதனின் பாபங்கள், தோஷங்கள் மற்றும் அகங்காரம் போன்றவையெல்லாம் தலையில்தான் சேரும் என்பார்கள்' என்பது, முதல் மூன்று வரிச்செய்தி. அடுத்த சில வரிகளில், 'இவையெல்லாம் நம்மிடமிருந்து தொலைய வேண்டுமானால் திருவேங்கடவனுக்கு முடி காணிக்கை செலுத்துவது ஒன்றே வழி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலையில் சேருகிற பாபங்கள் முதலானவை நம்மிடமிருந்து தொலைய வேண்டுமானால் நம் தலையையே காணிக்கை ஆக்க வேண்டும். தலையிலுள்ள முடியை மட்டும் காணிக்கை ஆக்கலாம் என்கிறார்களே?!!? ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா...ஹா!!!

தலை நிறைய மூளை இருக்கிறது என்பதற்காக, ஆசாமிகள் இப்படியெல்லாமா சாமிகளை ஏமாற்றுவது?!?!
--------------------------------------------------------------------------------------------------------------------------
சிறப்புச் செய்தி:
IndiBlogger இன் முகப்புப் பக்கத்தில் இப்பதிவு!

Your post "சாமிகளை ஏமாற்றும் ஆசாமிகள்!...ஹா...ஹா...ஹா!!!" is on the IndiBlogger homepage.


இன்பாக்ஸ்
x

IndiBlogger donotreply@indiblogger.in

பிற்பகல் 1:12 (2 மணிநேரத்திற்கு முன்பு)
பெறுநர்: நான்

IndiBlogger

Your post is on the IndiBlogger homepage.

Dear pasiparamasivam,
Your post சாமிகளை ஏமாற்றும் ஆசாமிகள்!...ஹா...ஹா...ஹா!!! has been selected for IndiBlogger's Featured Posts, and is on the homepage of IndiBlogger right now!
Tweet this Share this
If you would like to add the 'Featured Post on IndiBlogger' badge to your post, you may get the badge at the following link:
Keep blogging!
The IndiBlogger Team





வெள்ளி, 14 செப்டம்பர், 2018

எழுத்தாளர் ஜெயகாந்தனும் எழில்மிகு சுந்தரியும்!!!

மறைந்த கவிஞர் கண்ணதாசனும் எழுத்தாளர் ஜெயகாந்தனும் அந்தரங்க நண்பர்கள். இருவரும்[?] மதுவருந்தி மகிழ்ந்திருந்த ஒரு சூழலில்[அழகுப் பெண்களும் உடன் இருந்ததாக ஜெயகாந்தனே சொல்லியிருக்கிறார்] பிரபல ஜோதிடர்[பிரதமர் இந்திராகாந்தியின் அந்தரங்க ஜோதிடராக இருந்தவர்] ஒருவர் இவர்களைச் சந்தித்தார்.

''இவர் சொல்வது பலிக்கும்'' என்று கண்ணதாசன் உறுதிபடச் சொல்லவே, ஜோதிடரிடம் கை நீட்டினார் ஜெயகாந்தன்.
ஜோதிடர் சொன்னார்: ''நீங்கள் ஒரு சுந்தரி மீது கட்டுக்கடங்காத காதல் கொண்டிருக்கிறீர்கள். இதனால் உங்களுக்குப் பல அபவாதங்கள் ஏற்படும். மான நஷ்டமும் பொருள் நஷ்டமும் பந்துமித்திரர்களின் விரோதமும் ஏற்படும். ஒரு உண்மை ஜோதிடன் என்ற முறையில், இந்த உண்மையைச் சொல்லி உங்களை எச்சரிப்பது என் கடமை. நம்புவதும் நம்பாததும் தங்களின் சித்தம்.'' 

''நீங்கள் சொல்வதென்னவோ உண்மைதான் சாமி. ஆனால், நான் கட்டுக்கடங்காத காதல் கொண்டிருக்கிற அந்தச் சுந்தரி என் மனைவிதான். அவளை நான் என்ன செய்யட்டும்?'' என்றார் ஜெயகாந்தன்.

ஜெயகாந்தனின் பதிலைக் கேட்டவுடன் அதிரடியாக வெடிச் சிரிப்புகளை உதிர்த்துக்கொண்டே அவர்கள் இருந்த அறையிலிருந்து ஓட்டம் பிடித்தாராம் கண்ணதாசன்.

ஜோதிடர் திருதிருவென்று விழித்தார்.

இடத்தைக் காலிசெய்ய முயன்ற ஜோதிடரிடம் ஜெயகாந்தன் சொன்னார்: ''முன்னொரு காலத்தில் சேர நாட்டு அரண்மனைக்கு ஒரு ஜோதிடன் வந்தான். அண்ணனும் தம்பியுமாய் அழகிய இரண்டு அரச குமாரர்கள் அங்கே நின்றிருந்தனர்.

ஜோதிடர் இளைய குமாரனைப் பார்த்து, ''இவனுக்கே அரசாளும் லட்சணங்கள் நிரம்பியிருக்கின்றன. ஜோதிட சாஸ்திரப்படி இவனே அரசாள்வான்'' என்று மொழிந்தாராம்.

உடனே அந்த இளவரசன், ''நான் சந்நியாசம் மேற்கொண்டு உன் ஜோதிடத்தைப் பொய்யாக்குகிறேன். அண்ணனே அரசாள்வான்'' என்று சொன்னதோடு, துறவறம் பூண்டு ஜோதிடத்தைப் பொய்யாக்கினான். அந்த இளவரசன்தான் சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள். இது நடந்தது இன்றைய மலையாள தேசமான சேரநாட்டில்தான்.''

அசடு வழிந்த பிரபல ஜோதிடர், ''ஞான் மலையாளி'' என்று சொல்லி நழுவினாராம்.

வெகு சுவையான இந்த நிகழ்வை, 'ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்'[கவிதா பப்ளிகேஷன், தி.நகர், சென்னை; முதல் பதிப்பு, செப், 2007; பக்கம் 153] என்னும் நூலில் ஜெயகாந்தனே விவரித்துள்ளார்.
========================================================================
ஜெயகாந்தனின் இயற்பெயர் 'முருகன்' <முருகேசன்.


  

புதன், 12 செப்டம்பர், 2018

முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனை!

16 ஜூலை 1945.

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள மெக்சிகோ பாலைவனத்தில் 'அலமோகார்டோ' என்று ஓரிடம்.

அங்கு, ஒரு கோபுரத்தின் மீது அணுகுண்டு வைக்கப்பட்டிருந்தது.

நோபல் பரிசு பெற்ற  அறிவியல் அறிஞர்கள், பொறியாளர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட, பலர் அணுகுண்டு வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மிக மிகப் பாதுகாப்பாகப் பல கிலோ மீட்டர் தொலைவில், மண்மேட்டுக்குப் பின்னால் தரையில் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தார்கள். 9 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் அணுகுண்டு வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது.

அவர்கள், தங்களின் கண்களைப் பாதுகாத்துக்கொள்ள வெல்டர்கள் பயன்படுத்துகிற விசேடக் கண்ணாடி போன்ற ஒன்றை அணிந்திருந்தார்கள்.

ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது.

மூன்றாண்டுக் காலமாகப் பாடுபட்டு உருவாக்கிய அணுகுண்டு வெடிக்குமா? வெடித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பன போன்ற கேள்விகளால் உண்டான திகில் அவர்களை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.

அணுகுண்டு வெடிப்பால் காற்று மண்டலமே தீப்பற்றி எரியக்கூடும் என்றெண்ணிப் பீதியடைந்தார்கள்.

பரபரப்பான, அதிபயங்கரமான இந்தச் சூழலில், பொறுப்பான அதிகாரி ஒருவர் பள்ளமான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடாரத்தில் இருந்தவாறு ஒரு விசையை அழுத்தினார். சில கணங்களில்.....

அணுகுண்டு வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அதிபிரமாண்டமான ஒளிப்பிழம்பு மேலெழுந்தது. அது, காளான் குடை போன்ற வடிவத்தில் மேலெழும்பிக்கொண்டே இருந்தது. அக்கணங்களில்.....
நிலம் அதிர்ந்தது. கண்களைக் கூசச் செய்யும் மின்னல் வான வெளியெங்கும் பரவி மறைந்தது. மின்னல் மறைந்த சில வினாடிகளில் இடி முழக்கங்கள்; இனம் புரியாத உறுமல்கள்; அதிர்ச்சி அலைகள் அனைத்துத் திசைகளிலும் பரவின; கூடாரங்கள் கிடுகிடுத்தன; அங்கிருந்தவர்கள் நிலைதடுமாறிக் கீழே உருண்டார்கள்.

குண்டு வெடித்த இடத்திலிருந்து 200 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் கிடுகிடுத்து ஒலி எழுப்பின. 250 கிலோமீட்டருக்கு அப்பாலும் அணுகுண்டு வெடிப்பின் அதிர்ச்சி உணரப்பட்டது.

அதிர்ச்சி அலைகள் வீசுகையில், விஞ்ஞானி 'என்ரிகோ ஃபெர்மி' ஒரு காகிதத்தைக் கிழித்துத் துண்டுகளாக்கித் தரையில் போட்டார். அவை நேர் கீழாகத் தரையில் விழாமல் அதிர்ச்சி அலைகள் காரணமாகச் சற்றுத் தள்ளிப்போய் விழுந்தன.

அணுகுண்டுச் சோதனை வெற்றி பெற்றதில் அறிவியல் அறிஞர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் இனம்புரியாத கவலை. அது.....

'ஒரு கொடிய பெரும் பூதத்தைக் கட்டவிழ்த்து விட்டுவிட்டோம். இந்த உலகுக்கு என்னவெல்லாம் தீங்கு விளையுமோ?!'
------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'அணு'; ஆசிரியர்: எஸ்.ராமதுரை. 



திங்கள், 10 செப்டம்பர், 2018

'கோமா'வில் கடவுள்!!!

முன்குறிப்பு:  சலிப்பூட்டக்கூடிய நீண்ட சிறுகதை. சகிப்புத்தன்மை இருப்பின் வாசிக்கலாம்!!

லகப் பிரசித்தி பெற்ற அந்தக் கோடி கோடி கோடீஸ்வரக் கடவுளின் கோயிலுக்குத் தன் மனைவி தேவியுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார் செல்வநாயகம்.

அவர்களின் முகங்களில் கனமான சோகத்தின் ஆழமான கீறல்கள்.

அவர்களின்  ஆசைக்கும் ஆஸ்திக்கும் ஒரே வாரிசு ஆறு வயது அமுதன். அவன் மாடிப்படிகளில் உருண்டு மண்டையில் அடிபட்டுக் கோமாவில் விழ, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதும், சிறுவனின் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், மனித முயற்சியில் நம்பிக்கை இழந்த செல்வநாயகம் தம்பதியருக்குக் கடவுளின் நினைப்பு வந்தது.

அவர்கள் அறிந்த கடவுளரின் திருநாமங்களை நாள்தோறும் உச்சரித்தார்கள்; கோயில் கோயிலாகச் சென்று வழிபட்டார்கள். பலனில்லை.

மனத்தளவில் கடவுளைத் துதித்தால் போதாது என்று செல்வநாயகத்தின் உள்ளுணர்வு எச்சரித்தது. 

ஒரு ஜோதிடரின் ஆலோசனைப்படி, அந்தக் குபேரக் கடவுளைத் தரிசித்து, உண்டியலில் சில லகரங்களைக் காணிக்கையாக்கித் திரும்புவதென முடிவெடுத்தார்.

மனைவியுடன் பயணத்தைத் தொடங்கினார்.

கோயிலை அடைய அரைக் கிலோமீட்டர் இருக்கையில், காரை வழிமறிப்பது போல, கையில் குழந்தையுடன், ஏழ்மைக் கோலத்தில் ஒரு நடுத்தர வயது ஆணும் பெண்ணும் நின்று கொண்டிருந்தார்கள்.

காரின் கண்ணாடியைத் திறந்தார் செல்வநாயகம்.

அவர்கள் அவரை நெருங்கி,  கைகளை நீட்டியவாறு ஏதோ சொல்ல முற்படுவதற்குள், “ரெண்டு பேரும் நல்லாத்தானே இருக்கீங்க. உழைச்சிப் பிழைக்கலாமே. பிச்சை எடுக்க வெட்கமாயில்லை?” என்று சீற்றம் மிகுந்த குரலில் கேட்டார் அவர்.

அந்த இருவரில், குழந்தையை ஏந்தியிருந்த பெண் பேசினாள்: “சாமி, நாங்க உழைச்சிப் பிழைக்கிறவங்கதான். பிச்சை எடுக்கிற ஜாதியில்ல. இப்பத்தான் முதல் தடவையா பிச்சை கேட்கிறோம்” என்றாள்.
அவளைப் புரியாமல் பார்த்தார் செல்வநாயகம். “நீ என்னம்மா சொல்றே?’

“நாங்க எங்க வயித்துப் பாட்டுக்காகப் பிச்சை எடுக்கல, ஐயா.”

“வேறெதுக்குப் பிச்சை எடுக்குறீங்க? மத்த பிச்சைக்காரங்களுக்குப் பிச்சை போடவா?” -விவரிப்புக்கு அடங்காத கொடிய துன்பத்தால் மனம் துவண்டு கிடந்த நிலையிலும் நக்கலான வார்த்தைகளால் அவர்களைச் சீண்டினார்.

“சாகக் கிடக்கிற எங்க குழந்தைக்கு வைத்தியம் பார்க்கணும். கையில் காசில்ல. உதவறதுக்கு யாரும் இல்ல. எங்க சொந்தபந்தங்க எல்லாமே எங்களை மாதிரி தினக் கூலிங்க ஐயா.”

“குழந்தைக்கு என்ன தொந்தரவு?”

“இருதயத்தில் ஓட்டை இருக்கு. ஆப்ரேசன் பண்ணலேன்னா சீக்கிரம் செத்துடுவான்னு டாக்டர் சொன்னாருங்க.”

“இன்னும் ஆப்ரேசன் பண்ணலையா?”

“நெறையச் செலவாகுமாம். அன்னாடுங்காச்சி நாங்க. எங்ககிட்ட அவ்வளவு பணம் ஏதுங்க?”

“தர்ம ஆஸ்பத்திரிக்குப் போகலாமே?”

“போனோம். இது மாதிரி ஆப்ரேசன் நிறைய இருக்காம். ஆறுமாசம் கழிச்சி வரச் சொல்லிட்டாங்க. அதுவரைக்கும் எங்க புள்ள உசுரு தங்காது எசமா.”

யோசனையில் ஆழ்ந்திருந்தார் செல்வநாயகம்.

அந்த ஏழைத் தாய் தொடர்ந்தாள்: “கடவுள்தான் எங்க புள்ளையைக் காப்பாத்தணும்னு கோயில் கோயிலா போயிக் கும்பிட்டுத் தவம் கிடந்தோம். மத்த மதச் சாமிங்களையும் மனசில் நினைச்சிக் கண்ணீர் விட்டு அழுதோம். எந்தச் சாமியும் கண் திறக்கல. உழைச்சிப் பிழைக்கிற நாங்க யாருக்கும் கெடுதல் செஞ்சதில்ல. கடவுள் எங்களை ஏன் சோதிக்கிறார்னு தெரியல.....”

அவள் தேம்பி அழ ஆரம்பித்ததால் அவளுக்கு நா குழறியது.

“அழாம சொல்லு” என்றார் செல்வநாயகம்.

“எங்க செல்லம் அணு அணுவாச் சாகிறதைக் கண்ணால பார்க்க முடியல ஐயா. பிச்சை எடுத்தாவது பிள்ளையைக் காப்பாத்தணும்னு நினைச்சித்தான் முதல் தடவையா உங்ககிட்டக் கை ஏந்தினோம். நீங்க நல்லா இருக்கணும். அம்பதோ நூறோ நீங்க இஷ்டப்பட்டதைக் குடுத்து உதவுங்க சாமி.”

சற்றே தயக்கத்துடன் கேட்டார் செல்வநாயகம்: “உங்களை நம்பலாமா?”

குழந்தையின் அப்பன் தன் வசமிருந்த ஒரு பையிலிருந்து, மருத்துவமனை தந்த மருத்துவ அறிக்கையைப் பவ்வியமாய் நீட்டினான்.

அதை ஆராய்ந்த செல்வநாயகத்தின் முகத்தில் திருப்தி பரவியது. அவர் ஏதோ சொல்ல முற்படுவதற்கு முன்.....

''முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டம்னு இருக்கே. தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையைச் சேர்த்து.....'' என்று பேசத் தொடங்கினார் தேவி.

குறுக்கிட்ட செல்வநாயகம், ''பரம ஏழைங்க. அதெல்லாம் இவங்களுக்குத் தெரியாது'' என்றவர், ஏழைத் தம்பதியரைப் பார்த்து, “காரில் உட்காருங்க. உங்க குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துடறேன். ஆகிற செலவை நான் ஏத்துக்கிறேன்” என்றார்.

தயக்கத்துடன் அவர்கள் காரில் அனமர்ந்தார்கள்.

ஓட்டுனரிடம் காரைத் திருப்பச் சொன்னார்.

“ஏங்க, கோயிலுக்கு.....” -சொல்ல நினைத்ததைச் சொல்லி முடிக்காமல் நிறுத்தினார் அவர் மனைவி தேவி

“இந்தப் பரம ஏழைகளுக்கு உதவாத கடவுள் நமக்கு நிச்சயம் உதவப்போறதில்ல. நம்ம பையனைப் போலவே அவரும் கோமாவில் இருக்கார் போல.” -வறட்சியானதொரு  புன்னகையை  நழுவவிட்டுக் கண்மூடி யோசனையில் ஆழ்ந்தார் செல்வநாயகம்.
*************************************************************************************************





சனி, 8 செப்டம்பர், 2018

ஐயோ பாவம் இந்தக் குலசாமி!!!

“மேஸ்திரி, நாளைக்கு என் குடும்பத்தோட எங்க குலதெய்வம் கோயிலுக்குப் போறேன். வேலைக்கு வர முடியாது'' என்றான் சித்தாள் பழனி.

“நாளைக்கு நிறைய ஆள் வேணும். வர்ற ஞாயிறு அன்னிக்கிப் போப்பா” என்றார் மேஸ்திரி.

“இல்ல மேஸ்திரி. போன மாசமே போறதா இருந்தேன். முடியாம போச்சு..

“எதுக்குப் போறே? சாமிக்குத் தங்கக்கிரீடம் காணிக்கை செலுத்தப் போறியா?  உண்டியலில் கத்தை கத்தையா பணம் போடப் போறியா? இல்ல, ஆயிரம் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யப் போறியா?” -மேஸ்திரியின் குரலில் ஏகத்துக்குக் கிண்டல்.

“அதுக்கெல்லாம் எங்கமாதிரி அன்னாடுங்காச்சிகளுக்கு வசதி இல்லீங்க.”

“வேறென்ன, உன் குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் மொட்டை போடப் போறீங்களோ? இதுக்குச் செலவும் குறைவுதான்.”

“எங்க குலசாமியும் எங்கள மாதிரியே  ஏழைதான் மேஸ்திரி. வசதியுள்ள எங்க ஜாதிக்காரங்களே இதைச் சீந்துறதில்ல. கோயிலுக்கு வருமானமும் இல்ல. கோயிலைச் சுத்திக் கண்ட கண்ட செடியெல்லாம் முளைச்சிப் புதர் மண்டிக் கிடக்குதுன்னு கோயில் பூசாரி சொன்னாரு. அதையெல்லாம் புடுங்கிப் போட்டுச் சுத்தம் பண்ணனும். ஒரு ஏழைச் சாமிக்கு ஒரு பரம ஏழை செய்யுற சேவை இது'' என்றான் பழனி.
 =======================================================================

வெள்ளி, 7 செப்டம்பர், 2018

''பொறுத்திருந்து பார்ப்போம்'' -நடுவணமைச்சர்...எதை?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழ்நாடு ஆளுநருக்கு உள்ளதாகவும், ஏழு பேரையும் விடுதலை செய்யுமாறு ஆளுநருக்குத் தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இச்செய்தி இன்றைய[07.09.2018] நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.
''7 பேரையும் விடுவித்தல் வேண்டும் என்பதுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கை; ஆசையும்கூட. அதற்காகப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி நடுவணரசுக்கு அனுப்பினார்'' என்ற தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர், ''சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசித் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுப்பார்'' என்றும் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசு அவர்களும்,  ''தம் தந்தை கொல்லப்பட்டது தங்களைப் பெரும் துயரத்துக்கு உள்ளாக்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்களும் நீண்ட காலத் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். அவர்களை மன்னிக்கலாம்'' என்பதாக ராகுல்காந்தி முன்பு குறிப்பிட்டதை மேற்கோள் காட்டியதோடு, ''நீதிமன்றமும் தீர்ப்பளித்திருக்கிறது'' என்று நாளிதழ்களுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். நீதிமன்றத் தீர்ப்பை அவர் எதிர்க்கவில்லை என்பதை அவரின் பேட்டி உய்த்துணர வைக்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடத்தக்கது, 'விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது; தமிழ்நாடு அரசு பரிந்துரை வழங்கலாம்' என்பதுதான்.

மறைந்த ஜெயலலிதா இவ்விசயத்தில் வழிகாட்டியாக இருப்பதால், தமிழ்நாடு அரசு, ஆளுநருக்குப் பரிந்துரை செய்யும் என்பதில் சிறிதும் ஐயத்திற்கு இடமில்லை. ஆனால், 'ஆளுநருக்கு அதிகாரம் இருப்பினும் விடுதலைக்கான ஆணையை அவர் பிறப்பிப்பாரா?[மாநில அரசின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றல் வேண்டும் என்பது கட்டாயமில்லை] அதற்கான [வாய்மொழியிலான] இசைவை நடுவணரசிடமிருந்து பெறுவது சாத்தியமா?' என்பவை மிகப் பெரிய கேள்விகள்.

ஆக, எழுவரின் விடுதலை என்பது கேள்விக்குரியதாக உள்ள நிலையில், நடுவணமைச்சர் மாண்பமை பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்.....

''மத்தியில் காங்கிரசும் தமிழ் மாநிலத்தில் தி.மு.க.வும் ஆட்சி நடத்தியபோதே இந்த ஏழு பேரும் ஏன் விடுதலை செய்யப்படவில்லை?'' என்றொரு கேள்வியை முன்வைத்திருக்கிறார். 

இந்தக் கேள்வி, ''இப்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாவும் மாநில அ.தி.மு.க.வும் இதைச் செய்தல் தேவையா?'' என்னும் இன்னொரு கேள்வியையும் உள்ளடக்கியிருக்கிறது.

ஏறத்தாழ, விடுதலைக்கு எதிரான[?] தம் கருத்தைக் கோடிட்டுக் காட்டிவிட்ட அமைச்சர், ''பொறுத்திருந்து பார்ப்போம்'' என்றும் கூறியிருக்கிறார். 

எதை?

தமிழக அரசின் நடவடிக்கையை; அதாவது, எழுவர் விடுதலைக்கான பரிந்துரையை!?

பரிந்துரைத்தால் அதைப் பா.ஜ.க. அரசு வேடிக்கை பார்க்குமா? 'பார்க்காது' என்பது நம்பத்தகுந்ததெனின்.....

வேறு என்ன செய்யும்?

பொறுத்திருந்து பார்ப்போம்...ஹி..ஹி..ஹி!
------------------------------------------------------------------------------------------------------------------