புதன், 12 செப்டம்பர், 2018

முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனை!

16 ஜூலை 1945.

அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் உள்ள மெக்சிகோ பாலைவனத்தில் 'அலமோகார்டோ' என்று ஓரிடம்.

அங்கு, ஒரு கோபுரத்தின் மீது அணுகுண்டு வைக்கப்பட்டிருந்தது.

நோபல் பரிசு பெற்ற  அறிவியல் அறிஞர்கள், பொறியாளர்கள், ராணுவ உயர் அதிகாரிகள் உட்பட, பலர் அணுகுண்டு வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து மிக மிகப் பாதுகாப்பாகப் பல கிலோ மீட்டர் தொலைவில், மண்மேட்டுக்குப் பின்னால் தரையில் குப்புறப் படுத்துக்கொண்டிருந்தார்கள். 9 கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் அணுகுண்டு வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது.

அவர்கள், தங்களின் கண்களைப் பாதுகாத்துக்கொள்ள வெல்டர்கள் பயன்படுத்துகிற விசேடக் கண்ணாடி போன்ற ஒன்றை அணிந்திருந்தார்கள்.

ஒவ்வொரு வினாடியும் அவர்களுக்கு ஒவ்வொரு யுகமாகக் கழிந்தது.

மூன்றாண்டுக் காலமாகப் பாடுபட்டு உருவாக்கிய அணுகுண்டு வெடிக்குமா? வெடித்தால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பன போன்ற கேள்விகளால் உண்டான திகில் அவர்களை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.

அணுகுண்டு வெடிப்பால் காற்று மண்டலமே தீப்பற்றி எரியக்கூடும் என்றெண்ணிப் பீதியடைந்தார்கள்.

பரபரப்பான, அதிபயங்கரமான இந்தச் சூழலில், பொறுப்பான அதிகாரி ஒருவர் பள்ளமான பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடாரத்தில் இருந்தவாறு ஒரு விசையை அழுத்தினார். சில கணங்களில்.....

அணுகுண்டு வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து அதிபிரமாண்டமான ஒளிப்பிழம்பு மேலெழுந்தது. அது, காளான் குடை போன்ற வடிவத்தில் மேலெழும்பிக்கொண்டே இருந்தது. அக்கணங்களில்.....
நிலம் அதிர்ந்தது. கண்களைக் கூசச் செய்யும் மின்னல் வான வெளியெங்கும் பரவி மறைந்தது. மின்னல் மறைந்த சில வினாடிகளில் இடி முழக்கங்கள்; இனம் புரியாத உறுமல்கள்; அதிர்ச்சி அலைகள் அனைத்துத் திசைகளிலும் பரவின; கூடாரங்கள் கிடுகிடுத்தன; அங்கிருந்தவர்கள் நிலைதடுமாறிக் கீழே உருண்டார்கள்.

குண்டு வெடித்த இடத்திலிருந்து 200 கிலோமீட்டருக்கு அப்பால் இருந்த கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் கிடுகிடுத்து ஒலி எழுப்பின. 250 கிலோமீட்டருக்கு அப்பாலும் அணுகுண்டு வெடிப்பின் அதிர்ச்சி உணரப்பட்டது.

அதிர்ச்சி அலைகள் வீசுகையில், விஞ்ஞானி 'என்ரிகோ ஃபெர்மி' ஒரு காகிதத்தைக் கிழித்துத் துண்டுகளாக்கித் தரையில் போட்டார். அவை நேர் கீழாகத் தரையில் விழாமல் அதிர்ச்சி அலைகள் காரணமாகச் சற்றுத் தள்ளிப்போய் விழுந்தன.

அணுகுண்டுச் சோதனை வெற்றி பெற்றதில் அறிவியல் அறிஞர்களுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் இனம்புரியாத கவலை. அது.....

'ஒரு கொடிய பெரும் பூதத்தைக் கட்டவிழ்த்து விட்டுவிட்டோம். இந்த உலகுக்கு என்னவெல்லாம் தீங்கு விளையுமோ?!'
------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: 'அணு'; ஆசிரியர்: எஸ்.ராமதுரை. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக