எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 23 ஆகஸ்ட், 2017

தமிழன் ஏ.ஆர்.ரகுமான்!

தமிழன் பிற இனத்தவருக்கு அடிமையாக வாழ்ந்தே[பெரும்பாலும்] பழக்கப்பட்டவன். இது தமிழகத்தின் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு சொல்லும் உண்மை. இன்றளவும் அடிமை வாழ்வுதான்.
“தமிழ் வளரணும்; தமிழன் ஆளணும்[தமிழ் மண்ணைத்தான்]” என்று ஒரு சில தமிழ் இன உணர்வாளர் அவ்வப்போது கூக்குரல் எழுப்புவதைத் தமிழராய்ப் பிறந்த பலரும் பொருட்படுத்துவதில்லை.  பாரதி குறிப்பிட்டாற் போல, ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும்’[தமிழ் இனமும்தான்] என்று எவனோ ஒரு பேதை[அறிஞன்!] சொன்னது நடைமுறை சாத்தியம் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞர் ஏ.ஆர். ரகுமான், சில நாட்கள் முன்பு சென்னையில் நடைபெற்ற ‘மெர்சல்’ பட விழாவில், என் திரையுலக வாழ்வில் 25 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறேன். இப்போது உள்ள ரசிகர்கள் புதிய தலைமுறையைச் சார்ந்தவர்கள். எனவே எனக்கு வயது குறைந்துவிட்டது.....

.....‘ஆளப்போறான் தமிழன்’ என்று இப்படத்தில் பாடல் உள்ளது. தமிழர்கள் ஆளவேண்டும் என்பதை ரசிகர்கள் உண்மையாக்க வேண்டும். எந்தத் துறையாக இருந்தாலும் தமிழன் அதை ஆள வேண்டும் என்று பேசியிருக்கிறார்[மாலை மலர், கோவை 21.08.2017].

அவரின் பேச்சைக் கேட்டு ரசிகர்கள் கை தட்டியதாக மாலை மலர்ச் செய்தி குறிப்பிடுகிறது.

கை தட்டுவதும் ஆரவாரிப்பதும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, நம் மக்களுக்கும் கைவந்த கலை. அதை மட்டுமே செய்து பழக்கப்பட்டவர்கள் இவர்கள். ‘தமிழன் ஆள வேண்டும்’ என்னும் ரகுமானின் பேச்சை அப்புறம் அடியோடு மறந்துவிடுவார்கள் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடமில்லை!

எது எப்படியோ, கோடி கோடியாய்ப் பணம் குவிப்பதிலும்,  புகழைத் தக்க வைத்துக்கொள்வதிலும், இளிச்சவாய்த் தமிழனுக்குத் தலைவன் ஆவதிலும் கருத்துச் செலுத்தும் திரைப்படப் பிரபலங்களுக்கிடையே,  உள்நோக்கம் ஏதுமின்றி உலகறியத் தன் இன உணர்வை வெளிப்படுத்திய தமிழன் ஏ.ஆர். ரகுமானை  மனதாரப் பாராட்டுவோம்.
=====================================================================================================