எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

சனி, 16 நவம்பர், 2024

’கற்பு’... காலத்தை வென்ற ‘கல கல’ கவிதைகள்!!!

“அடடா... ஆகா... இவையல்லவோ கவிதைகள்!” என்று வியந்து பாராட்டிக் குதூகளிக்கத் தூண்டும் 7 கவிதைகள்[எந்த ஒன்றும் ‘பசி’பரமசிவம் படைப்பல்ல. ஹி... ஹி... ஹி!!!] கீழே.

6 ஆண்டுகளுக்கு முன்பு இவை இத்தளத்தில் வெளியானபோது வாசித்து இறும்பூதெய்தும் நல்வாய்ப்பைப் பெறாதவர்களுக்காக இந்த மீள்பதிவு.

'ஒருத்தி போதாதென்று ஒரு நூறும் நாடுவீர்
உற்றயாம் பிறரை நோக்கின் 
ஓலமிட்டு உறுமியே கற்பு போச்சென்பீர்
ஒரு பாலர்க்கு ஒரு நீதியோ?' -முருகேச பாகவதர்.

'ஸ்கூட்டருக்கும் ஃபிரிட்ஜிக்காகவும்
அலுவலகம் செல்ல
அனுமதிக்கப்படும்போது
எங்கள் கற்பின் எல்லை
விரிவாக்கப்படுகிறது'  -கவிஞர் ரோகிணி.

'கற்பின் திறத்தால் ஒரு 
நகரத்தைக் கரியாக்கலாம்
நல்ல மழை பெய்விக்கலாம்
என்றார்கள்.
வேலை கேட்டுப்போனால்
சேலையை அவிழ்க்கச் சொல்கிறார்கள்.
கையில் ஆயுதம் இருந்தால் ஓங்கி அடிக்கலாம்;
கற்பை வைத்து என்ன செய்வது?
 -கந்தர்வன்.

'மதுரையைக் கொளுத்திய தெய்வீகக் கற்பைப்
பத்துக்கும் அஞ்சுக்கும் பேரம்பேசுவது
சிலம்பை ஏந்திய சிலையின் கீழேதான்'  -கவிஞர் இன்குலாப்.

'இழுத்து மூடும் சேலையிலும்
ஆணின் ஸ்பரிசம் படாத உடலுக்குள்ளும்
கற்பு ஒளிந்து கொண்டிருப்பதாய்
நான் நம்பவில்லை'  - கவிதாயினி.

'அடுக்களை அரசி,
கற்புத் தெய்வம்,
மெல்லியலாள் என்றிவை
எல்லாம் வெறும் கனவுப்
பொன் விலங்குகள்
சுயநலக்காரர்கள் உன் மேல் சூட்டிய
மாயமுள் கிரீடங்கள்'  -மைத்ரேயி.

'கருப்பை சுமப்பதனால்
கற்பையும் சுமக்கும் பாவப்பட்ட
ஜென்மங்கள் நாங்கள்'  -பெயர் அறியப்படாத கவிஞர்.

                    *   *   *   *   *
நன்றி: 'Dr.இரா.பிரபா' அவர்களின் 'கற்பு-கலாச்சாரம்'[தமிழ்ப் புத்தகாலயம்] 

கறுப்புச் சட்டைக்காரர்[தி.க.] ஆளுநர் ஆர்.என்.ரவி!!!

ணையத்தில் மேய்ந்தபோது தற்செயலாக, கறுப்புச் சட்டை அணிந்த மாண்புமிகு நம் ஆளுநரைக் காண நேர்ந்தது.

சுத்த இந்துத்துவாவில் ஊறித் திளைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி எப்போது திராவிடக் கட்சியில் சேர்ந்தார் என்னும் கேள்வி அடியேன் மனதை வெகுவாகக் குழப்பியது.

ஆயினும்,

நேற்று ஊடகங்களில் வெளியான, ‘திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நயைபெறுகிறது. இந்தச் சர்வதேசக் கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது. வள்ளுவரின் அதிகாரப்பூர்வப் படத்தை அரசு வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் ஆளுநர் மாளிகை காவி நிற வள்ளுவர் படத்தை வெளியிட்டதற்குத் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்’ என்னும் செய்தி, கறுப்புச் சட்டையில் நம் ஆளுநர் காட்சியளிப்பது குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியது.

விளைவு.....

மதச் சார்பு, இனப்பற்று என்றிவற்றைப் புறந்தள்ளி, வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிவகைகளை மட்டுமே அறிவுறுத்திச்சென்ற வள்ளுவருக்குக் காவி உடை உடுத்திய ஆளுநரின் சிறுபிள்ளைத்தனமான செயலுக்குப் பதிலடியாகவே யாரோ அவருக்குக் கறுப்புச் சட்டை அணிவித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

எது எப்படியோ, ஆளுநர் கறுப்பு உடையில் காட்சி தருவது கற்பனையானதுதான் என்றாலும், அவர் உண்மையாகவே மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்து மூச்சுத் திணறும் சங்கிகளின் கூட்டத்திலிருந்து வெளியேறி, திராவிட இயக்கத்தில் இணைவாரேயானால், அது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக அமையும்.

வாழ்க ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள்!