சனி, 16 நவம்பர், 2024

கறுப்புச் சட்டைக்காரர்[தி.க.] ஆளுநர் ஆர்.என்.ரவி!!!

ணையத்தில் மேய்ந்தபோது தற்செயலாக, கறுப்புச் சட்டை அணிந்த மாண்புமிகு நம் ஆளுநரைக் காண நேர்ந்தது.

சுத்த இந்துத்துவாவில் ஊறித் திளைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி எப்போது திராவிடக் கட்சியில் சேர்ந்தார் என்னும் கேள்வி அடியேன் மனதை வெகுவாகக் குழப்பியது.

ஆயினும்,

நேற்று ஊடகங்களில் வெளியான, ‘திருவள்ளுவர், கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நயைபெறுகிறது. இந்தச் சர்வதேசக் கருத்தரங்கம் தொடர்பான ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் அச்சிடப்பட்டுள்ளது. வள்ளுவரின் அதிகாரப்பூர்வப் படத்தை அரசு வெளியிட்டுள்ள நிலையில், அதற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் ஆளுநர் மாளிகை காவி நிற வள்ளுவர் படத்தை வெளியிட்டதற்குத் தமிழ் ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்’ என்னும் செய்தி, கறுப்புச் சட்டையில் நம் ஆளுநர் காட்சியளிப்பது குறித்து ஆழ்ந்து சிந்திக்கத் தூண்டியது.

விளைவு.....

மதச் சார்பு, இனப்பற்று என்றிவற்றைப் புறந்தள்ளி, வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிவகைகளை மட்டுமே அறிவுறுத்திச்சென்ற வள்ளுவருக்குக் காவி உடை உடுத்திய ஆளுநரின் சிறுபிள்ளைத்தனமான செயலுக்குப் பதிலடியாகவே யாரோ அவருக்குக் கறுப்புச் சட்டை அணிவித்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.

எது எப்படியோ, ஆளுநர் கறுப்பு உடையில் காட்சி தருவது கற்பனையானதுதான் என்றாலும், அவர் உண்மையாகவே மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்து மூச்சுத் திணறும் சங்கிகளின் கூட்டத்திலிருந்து வெளியேறி, திராவிட இயக்கத்தில் இணைவாரேயானால், அது ஒட்டுமொத்தத் தமிழர்களையும் பெருமகிழ்ச்சியில் ஆழ்த்துவதாக அமையும்.

வாழ்க ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள்!