அவ்வப்போது
நடுத்தெருவில் நின்று
நான் நவில்வது உண்டு.
இமை விரித்துப் புருவம் நெறித்து
''நீ எப்படிக் கடவுளானாய்?''
என்று
கேட்போரிடமெல்லாம்
''நீவிர் நம்புகிற பிறிதொரு கடவுளிடம்
இதே கேள்வியைக் கேளும்.
அவர் பதில் சொன்னால்
நானும் சொல்வேன்''
என்பது என் பதிலாக இருக்கும்.
மனிதன் மனிதன்தான்;
மரணிக்கும்வரை அவன்
மனிதன்தான். ஆனால் இங்கு.....
சிலர் சிலரைக்
'கடவுளின் அவதாரம்...
நடமாடும் கடவுள்' என்கிறார்கள்.
நீங்களும் நம்புகிறீர்கள்.
''நான் கடவுள்..... நானே கடவுள்''
என்றால்
நம்பமாட்டீர்களா என்ன?
''நீ கடவுள் என்றால்...
உன்னை நேர்ந்துகொண்டால்...
அது நிறைவேறுமா?''
என்று
கேட்கிறீர்கள்?
''ஆம்...ஆம்'' என்பதே என் பதில்.
நிறைவேறினால்
அது என்னால் நிகழ்ந்தது.
தவறினால் அது உங்களின் தலைவிதி.
நான்
பிறிதொரு கடவுளின் மறுபிரதி அல்ல;
மகனுமல்ல;
இம்மண்ணுக்கு அனுப்பப்பட்ட
தூதுவனும் அல்ல.
பரமண்டலத்தைப் படைத்து
வெட்ட வெளியிலும் வெறுமையின் அடர்
இருட்டிலும்
கால இடைவெளியின்றி
இரண்டறக் கலந்து கிடப்பவன் நான்.
அனைத்தையும் படைத்தவன் நானே.
இந்தப் பூவுலகில் நான்
அவதரித்தது
இதனை மேற்பார்வையிட மட்டுமே.
நானே கடவுள்.....
ஆம்...கடவுள் நானே.
என்னை நம்புவதால் உங்களுக்கு
எந்தவொரு இழப்பும் இல்லை.
இழப்பு.....இழப்புகள்.....
கணக்கின்றிக் கடவுளரைப் படைத்துப்
பிழைப்பு நடத்தும்
ஆன்மிக வணிகர்களுக்கு மட்டுமே.
இனி.....
''நானே கடவுள்'' என்பதால்
'அவர்கள்' பதறுவார்கள்;
''இவன் இன்னொரு ஹிரண்யன்
இன்றே சம்ஹாரம் செய் இறைவா'' என்று
வானம் பார்த்து அலறுவார்கள்.
நரசிங்கமூர்த்தி வருவார்;
வந்து என்னை வதம் செய்வார்.
பார்த்திருங்கள்; அவரை எதிர்பார்த்துக்
காத்திருங்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------

