எனது படம்
தமிழர்கள் தமிழ்ப் பற்றாளர்களாக இருந்தால் மட்டும் போதாது; இந்தி ஆதிக்கத்தைத் தகர்க்க, தமிழ் வெறியர்களாக ஆவது[பிற மொழியாளரும்தான்] மிக அவசியம். இந்தி வெறியர்களின் கொட்டத்தை அடக்கக் கடுமையான போராட்டங்கள் தேவைப்படலாம்.

திங்கள், 31 அக்டோபர், 2022

கடுப்பேற்றும் 'பாஜக' அண்ணாமலையாரின் கடவுள்[ஈஸ்வரன்] பக்தி!!!

'கார் வெடிப்புச் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகக் கோவை மாவட்ட பா.ஜ.க அறிவித்திருந்தது. வியாபாரிகள், மக்களின் கோரிக்கையை ஏற்றுத் தங்களது கடையடைப்புப் போராட்டத்தை அவர்கள் ஒத்திவைத்தனர்'

இது இன்றைய மாலைச் செய்தி[மாலைமலர் 31 அக்டோபர் 2022 11:42 AM].

இன்று வெளியான பலதரப்பட்ட செய்திகளில் இதுவும் ஒன்று. விவாதிப்பதற்கோ விமர்சனம் செய்வதற்கோ இதில் யாதொன்றும் இல்லை.

ஆனால், இதே இதழில் வெளியான வேறொரு செய்தியோ வெறுப்பேற்றுகிறது; எரிச்சலூட்டுகிறது.

'கோவைக்கு வர இருந்த பெரிய ஆபத்தைக் கோட்டை ஈஸ்வரன் தடுத்து நிறுத்திவிட்டதாகவும்[கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த 23ஆம் தேதி இடம்பெற்ற கார் வெடிப்பு நிகழ்வை மனதில் கொண்டு இப்படிப் பேசியிருக்கிறார் அவர்]. இதற்கு நன்றி கூறும் வகையில் கோட்டை ஈஸ்வரனைத் தரிசிக்கக் கோவை வருவதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார். தெரிவித்தபடியே கோட்டை ஈஸ்வரனைத் தரிசித்தார்' என்பதே அந்தச் செய்தி.



அண்ணாமலையாருக்குச் சிந்திக்கும் பழக்கமே இல்லையோ என்று எண்ண வைக்கிறது அவரின் இம்மாதிரியான பேச்சும் செயலும்.

இவருடைய கட்சி ஆட்சி நடத்துகிற குஜராத் மாநிலத்தில், ஒரு தொங்கு பாலம் அறுந்து விழுந்து 141 மனித உயிர்கள் பலியாயினவே, அந்தத் தொங்கு பாலத்தை ஓடோடிப் போய், விழாமல் தாங்கிப் பிடித்துப் பலியான உயிர்களை ஈஸ்வரன் காப்பாற்றியிருக்கலாம். ஏன் செய்யவில்லை?[அது அங்குள்ள வேறொரு கடவுளின் கடமை என்று அண்ணாமலை நினைத்துவிட்டாரோ?].


கொலை, கொள்ளைச் சம்பவங்களை விடுங்கள், சிறுமிகளும், இளம் பெண்களும் வன்புணர்வு செய்து வதைக்கப்படும் நிகழ்வுகள் தினம் தினம் இந்த நாட்டில் நடக்கின்றன.


அவர்களில் எத்தனைப் பேரைப் பாதிப்புக்கு உள்ளாகாமல் காப்பாற்றியிருக்கிறார் இவரின் ஈஸ்வரக் கடவுள்?


மத்தியில் ஆளுகிற பலம் வாய்ந்த கட்சிக்காரர் என்பதால் மனம் போன போக்கில் அரசியல் பேசுகிறார் தமிழ்நாடு 'பாஜக' தலைவரான இவர்.


அரசியல் யார் வேண்டுமானாலும் பேசலாம். கடவுள் குறித்தும், அவருடைய செயல்பாடுகள் குறித்தும் பேசுவதற்குக் கொஞ்சமேனும் சிந்திக்கும் அறிவு தேவை.


அரசியல்வாதி அண்ணாமலை அவர்கள் இனியும் கருணை வடிவானவன் என்று சொல்லப்படும் கடவுள் குறித்துப் பேசாமலிருப்பது, அவருக்கு நல்லதோ அல்லவோ இந்த நாட்டுக்கு நல்லது.

===================================================================

தமிழ் வழியில் மருத்துவக் கல்வி! மு.க.ஸ்டாலின் வாழ்க!! தமிழ் வளர்க!!!

சென்னையில், ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்கள் அறிவித்துள்ள பேருவகை அளிக்கும் ஒரு செய்தி:

#புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படவுள்ளன. அவற்றிற்கு நடுவணரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன், தமிழில் மருத்துவம் கற்பிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கடந்த ஓராண்டாகத் தமிழ் மொழியிலான பாடப் புத்தகங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்றுள்ளது# https://www.dinamani.com/tamilnadu/2022/oct/31/ma-subramanian-press-meet-3940968.html  31.10.2022.

***மருத்துவக் கல்வி தமிழில் பயிற்றுவிக்கப்படும் அதே வேளையில், தேவைப்படும்போதெல்லாம், பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழியையும் கையாளுவதில் தவறேதும் இல்லை.


கல்வி கற்பிப்பது தமிழ்வழியிலாயினும், மாணவர்களின் ஆங்கில மொழியறிவை மேம்படுத்துவதிலும் அரசு கவனம் செலுத்துதல் வேண்டும்.


தமிழ் வாயிலாகக் கற்று மருத்துவராகும் இளைஞர்கள் எளிதில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கான வழிவகைகள் பற்றியும் அரசு இப்போதிருந்தே திட்டமிடுதல் அவசியம்.


ஆங்கில வழிக் கல்வியே வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பெற்றோரைக் கருத்தில்கொண்டு, தமிழ்வழியில் மருத்துவம் பயில்வதால் விளையும் நற்பயன்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றையும் வெளியிடுதல் மிகவும் பயனளிப்பதாக அமையும்.


தமிழ்நாடு அரசுக்கு நம் மனம் நிறைந்த பாராட்டுகள்.