எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 5 ஜூன், 2023

அவர்கள் பாரம்பரிய முட்டாள்கள்! இவர்கள் புத்தம்புதுசு!!

சிகர்கள், தங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களுக்கு, அவர்களின் உருவம் பதிக்கப்பட்ட பிரமாண்டமான ‘தட்டிப் படங்கள்’ஐ[கட்டவுட்] மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது இடங்களில் நிலைநிறுத்தி, அவற்றிற்குப் பாலாபிஷேகம்[தீபாராதனையும் உண்டு] செய்யும் நிகழ்வுகள் நிறையவே இடம்பெறுகின்றன.

ரசிகர்களின் இச்செயல்பாடு கண்டனங்களுக்கும், கடும் விமர்சனங்களுக்கும் உள்ளாவதும் நிகழவே செய்கின்றன.

ரசிகர்களைக் கண்டிப்பது நிந்திப்பதெல்லாம் தேவையா?

தேவைதான்.

நடிகர்களை நடிகர்களாகப் பார்க்காமல், அதிசயப் பிறவிகளாகவும், அவதாரங்களாகவும் கற்பிதம் செய்து அபிசேகம் ஆராதனை எல்லாம் செய்வது அடிமுட்டாள்தனம் என்பதால் அவை தேவைதான்.

ஆயினும், நடிகர்களின் படத்தட்டிகளை ரசிகர்கள் இப்படிச் சிறப்பிப்பதெல்லாம் அண்மைக்கால வழக்கம்தான் என்பது அறியத்தக்கது. 

எனவே, இவர்களைப் ‘புதிய முட்டாள்கள்’ என்று சொல்லலாம்.

இவர்களுக்கு முன்னோடியான பாரம்பரிய முட்டாள்கள் இங்கு மிகப் பல நூற்றாண்டுகளாக இருந்ததையும், இருந்துகொண்டிருப்பதையும் நாம் மறத்தல் கூடாது. 

அவர்கள்?

கற்களாலும் உலோகங்களாலும் குழைத்த மண்களாலும் சிலைகள் செய்து, மந்திரம் என்னும் பெயரில் புரியாத எதையெல்லாமோ சொல்லி, அவற்றிற்குப் பாலாபிசேகமும் இன்ன பிற அபிசேகங்களும் செய்தவர்கள்; செய்கிறவர்கள்.

இவர்கள்[ரசிகர்கள்] முட்டாள்கள் ஆனது அவர்களால்தான்.

அவர்களைத்தான் முதலில் திருத்த வேண்டும்.

அவர்கள் திருந்தினால் இவர்கள் தாமாகத் திருந்துவார்கள்.