ஓர் ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து வாழ அனுமதி வழங்கும் ‘சடங்கு’தான் திருமணம். இதை முன்னின்று நடத்துபவர்கள் சாட்சிகளான உற்றார் உறவினர்கள்.
விலங்கு நிலையிலிருந்து விடுபட்டு, மனிதர்களிடையே குடும்ப வாழ்க்கை முறை உருவானதன் பின்னர் இந்தச் சடங்கு பெரியோர்களால் நடைமுறை ஆக்கப்பட்டது.
காரணத்தைத் தொல்காப்பியர் சொல்கிறார், “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர்[சான்றோர்கள்] யாத்தனர் கரணம்[திருமணச் சடங்கு >தொல். பொ. 145 ]” என்று.
ஆணும் பெண்ணும் ஒரு குடும்பமாக வாழ்ந்த அந்தக் காலக்கட்டத்தில், அவர்களில் ஆணோ பெண்ணோ, இணைந்து வாழ்வதில் விருப்பம் இல்லாமை போன்ற காரணங்களால், பொய் சொல்லுதல்[“இவளுடன்/இவனுடன் நான் இணைந்திருந்து உடலுறவு கொள்ளவில்லை என்பது போல] முதலான குற்றங்களை இழைக்கலானார்கள்.
இவ்வகைக் குற்றங்கள் அதிகரித்தபோது, இவற்றைத் தடுப்பதற்காக, சான்றோர்கள் ஒருங்கிணைந்து சிந்தித்துத் திருமணச் சடங்குகளை உருவாக்கினார்கள் என்பது அறியத்தக்கது.
எனவே, மனிதர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வதற்காக நடைமுறை ஆக்கப்பட்டவையே திருமணச் சடங்குகள் ஆகும்.
இந்தச் சடங்குகளால் மனித சமுதாயம் பெற்ற நன்மைகள் முன்பு எப்படியோ, இன்றளவில், சடங்குகளை அர்த்தமற்றவை ஆக்கி, குடும்ப நல்லுறவைச் சீர்குலைப்பது என்பது அவ்வப்போதைய நிகழ்வாகிவிட்டது.
சீர்குலைப்பவர்கள் கணிசமானவர்கள்தான் என்பதாலோ என்னவோ, பெரும்பான்மை மக்களுக்கு இச்சடங்கு இன்றளவும் தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளது.
ஆக, திருமணம்[கல்யாணம்] என்பது மனிதர்களுக்காக மனிதர்களால் செய்யப்படும் சடங்கு என்பது உறுதியாகிறது.
இவ்வாறானதொரு புரிதலுக்கிடையே நமக்கு எழும் பிரமாண்டமானதொரு ஐயம்[சந்தேகம்] என்னவென்றால்.....
சாமி[கள்] உண்டோ இல்லையோ, இருப்பதாகக் கொண்டாலும்,
சாமிகளில் ஆண், பெண் பாகுபாடு உண்டு என்று ஏற்றுக்கொண்டாலும்,
அவர்கள் தங்களுக்குள் உடலுறவு என்னும் அந்தரங்கச் சுகத்தை அனுபவிக்கிறார்கள் என்பது உண்மையாயினும்.....
பொய்யுரைத்தல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் போன்ற இழிசெயல்களை[குற்றங்களை] அவர்கள் செய்திட வாய்ப்பே இல்லாத[அனைத்து நற்குணங்களும் பொருந்தியவர்கள்> கடவுள்கள்< அல்லவா?] நிலையில்.....
ஆண் பெண் சாமிகளுக்குத் திருமணம் செய்தல் சடங்கு எதன்பொருட்டு?
மனிதர்களுக்கான திருமணச் சடங்குகளை உருவாக்கியவர்கள் மனிதர்கள்.
தெய்வங்களுக்கான திருமணச் சடங்குகளை உருவாக்கியவர்கள் யார்?
உருவாக்கத் தூண்டியவர்கள் யார்?
வேத விற்பன்னர் எனப்படுபவர்கள்[?].
இவ்வாறான மிக உயரிய அந்தஸ்தைத் தாங்களாகவே தங்களுக்கு வழங்கிக்கொண்டு, படிப்பறிவில்லாத மக்களை நேற்றுவரை ஏமாற்றித் தங்களை மேம்படுத்திக்கொண்டவர்கள் அவர்கள்.
படிப்பறிவில்லாததால் அன்று மக்கள் ஏமாளிகளாக இருந்தார்கள்.
இன்று கல்வியறிவு இல்லாதவர்களே இல்லை என்னும் நிலை.
இந்நிலையிலும், மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் கல்யாணம்[எத்தனை எத்தனை முறை நடத்தினார்கள்? இன்னும் எத்தனை எத்தனை ஆண்டுகளுக்கு நடத்துவார்கள்? மனித இனம் உள்ளவரையா, கடவுள்கள் இருக்கும்வரையா?] செய்வதாகச் சொல்லி, தினம் தினம் கண்டதைத் தின்று மலம் கழித்து வாழும் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள், ‘புரோகிதர்’ என்னும் பெயரில் அன்னை மீனாட்சிக்கே தாலி கட்டுகிறார்களே.....
இந்த அயோக்கியத்தனத்தை மனித உருவில் அலையும் லட்சக்கணக்கான மூடர்கள் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வேடிக்கை பார்ப்பார்கள்?
* * * * *
எச்சரிக்கை!
இந்து மதத்தைத் தாக்கி எழுதும் நீ, இஸ்லாம், கிறித்தவம் ஆகியவற்றைத் தாக்கி எழுதாதது ஏன் என்று சங்கிகள் கேள்வி எழுப்ப வேண்டாம்.
மூடநம்பிக்கைகளைச் சாடுவதில் எந்தவொரு மதத்திற்கும் நாம் விதிவிலக்குத் தந்ததில்லை[மதத்தின் பெயரைக் குறிப்பிட்டு இத்தளத்தில் தேடலாம்].
அவர்களும் நம்முடன் சண்டையிட்டதில்லை.