புதன், 29 ஜனவரி, 2014

கவிஞர் இன்குலாப்.....“மதம் ஒரு நோய்!”

...சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க — டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு உயரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா...

கவிஞர் இன்குலாப்பின் பெயரைப் பார்த்தவுடன், இந்த வரிகளும் உங்கள் மனத்திரையில் வலம் வந்திருக்கும்.

எழுதுகோலில் எரிமலைக் குழம்பை நிரப்பி, இது போன்ற வரிகளடங்கிய பல கவிதைகளைப் படைத்தவர் இவர்!

 'மக்கள் கவிஞர் என்ற சுட்டுதலுக்கு முழுமையாகப் பொருந்துபவர் கவிஞர் இன்குலாப். திராவிட இயக்க அரசியலில் தொடங்கி, தீவிர இடதுசாரியாகப் பரிமாணம் எடுத்து, தமிழ் தேசிய விடுதலை அரசியலில் காலூன்றியவர்.' 

மக்கள் நலன் கருதிப் பல கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். ‘ஆனால்...’ என்னும் தலைப்பில், ஒரு கட்டுரைத் தொகுப்பு [முதல் பதிப்பு: செப்டம்பர், 2004. வெளியீடு: அகரம்] வெளியாகியுள்ளது.

இதிலுள்ள முதல் கட்டுரை, ‘மதமெனும் நோய்...’.  நல்ல சிறுகதை நடையில் அமைந்த அருமையான படைப்பு; என் உள்ளம் கவர்ந்தது. உங்களுடன் இதைப் பகிர வேண்டும் என்னும் வேட்கையின் விளைவே இப்பதிவு.

[எந்தவொரு சொல்லையும் வெட்ட மனம் வரவில்லை. இருப்பினும் அளவைக் குறைக்க, ஆங்காங்கே சில வரிகளைத் தவிர்த்திருக்கிறேன்.]

                               *                                      *                                   *

###திருப்பாலைக்குடி என்ற கிராமத்திலிருந்து பஸ்ஸில் ஏறினேன், என் மனைவியோடும் மகளோடும். மூன்று பேர் ஓடிவந்து ஏறவும் பஸ் புறப்படவும் சரியாய் இருந்தது.

அவர்களுக்கு உட்கார இடமில்லை; நின்றார்கள். ஒரு நடுத்தர வயதுக்காரர் எங்களை நோட்டமிட்டார்.

என் மனைவியின் நெற்றியில் பொட்டில்லை. மகளுடைய நெற்றியிலும்தான்.

அடுத்து நின்றவரிடம் உரக்கச் சொன்னார்:

“இந்த முஸ்லீம்களைக் கண்டாலே வெட்டணும்.”

பலர் அதைக் கேட்டார்கள். பஸ் இரைச்சலில் அமுங்கிவிடாத தொனியில்தான் அவர் அதைச் சொன்னார்.

சிறிது தயக்கத்திற்குப் பிறகு கேட்டேன்: “முஸ்லீம்களை ஏன் வெட்டணும்?”

“பக்கத்துக் கிராமத்தில் ஒரு பொம்பளையைக் கெடுத்துக் கொலை பண்ணிட்டானுவ.”

“ரொம்பக் கொடுமை. இதைச் செஞ்சது முஸ்லீம்தான்கிறதுக்கு என்ன ஆதாரம்?”

“கேள்விப்பட்டோம்.”

“கேள்விப்பட்டதை வச்சி இப்படிப் பேசலாமா?”

அமைதி.

“ஒரு பொம்பளையை மானபங்கப் படுத்தறவன் முஸ்லீமோ இந்துவோ எவனா இருந்தாலும் வெட்டணும்னுதான் நான் சொல்லுவேன். முஸ்லீமை வெட்டணும்னு நீங்க சொல்றது என்ன நியாயம்?”

அவர் சொன்னார்: “நீங்க சொல்றது சரி. எல்லாரும் சொல்றாங்கன்னு நான் வார்த்தையை விட்டுட்டேன்.

‘அண்ணன், தம்பி, மாமன், மச்சான், வாப்பா, காக்கா’ என்று நாங்கள் வளர்த்து வந்த உறவுகளுக்கு என்ன ஆனது? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எனது மண்ணில் இப்பொழுது வேகமாகப் பரவுவது...மத நோய்.

எனது ஊரில் பல தெருக்களில் சாக்கடை தேங்குகிறது. முக்குக்கு முக்கு குப்பை நாறுகிறது. குடிப்பதற்குப் போதுமான தண்ணீர் இல்லை. ஒழுங்கான மருத்துவ வசதி இல்லை. மின் விளக்குகள் சிம்னி விளக்குகள் போல் அழுது வடிகின்றன, விரல்விட்டு எண்ணக்கூடிய சில செல்வந்தர்களின் வீடுகள் தவிர. இந்த அவலம் எல்லாத் தெருக்களிலும் இருக்கிறது. இதில் இந்து முஸ்லீம் என்ற பேதமில்லை.

இத்ற்காக யாரும் போராட முன்வரவில்லை. ஆனால், மதத்தைக் காப்பதற்காக மட்டும் வன்முறை வெறியாட்டம் தூண்டி விடப்படுகிறது........

..........கொஞ்ச நாட்கள் முன்பு, எங்கள் ஊரிலும், நான் ஊரில் இல்லாதபோது, இப்படியொரு அநாகரிகம் நடந்து ஊர் அமளிப்பட்டு, துப்பாக்கி புகைந்தது.  சில நாள் கழித்து என் மருமகன் சொன்னார்: 

“கலவரம் தொடங்கினவுடனே எங்களை அந்த ஆசாரி அப்பு தன் வீட்டுக்குள்ளே கூட்டிகிட்டுப் போய்ட்டாரு. அதே மாதிரி சில முஸ்லிம் நண்பர்களுக்கும் இந்துக்கள்தான் புகலிடம் கொடுத்தாங்க. சில இந்துக்களை சில முஸ்லிம்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே கூட்டிட்டுப் போய்ப் பாதுகாத்தாங்க.”

“அப்போ யாரெல்லாம் அடிச்சிகிட்டது?” என்று என் மாப்பிள்ளையிடம் கேட்டேன்.

“சமூக விரோதிகள். அவங்களுக்கு இது ஒரு சாக்கா அமைஞ்சிட்டுது” என்றார் மாப்பிள்ளை.

ஒரு வெறியாட்டத்துக்கு இடையிலும் பலர் மனிதர்களாய் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

எனக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.###

ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc
















































ஞாயிறு, 26 ஜனவரி, 2014

இப்பதிவு, மதவெறியர்களுக்கல்ல; ஆறறிவு மனிதர்களுக்கு!

“கடவுள் உண்டா? விடையே காண முடியாத கேள்வி இது. இதற்கு விடை காண முயன்று உன் வாழ்க்கையை வீணடிக்காதே” என்பது புத்தரின் மிக முக்கிய போதனை ஆகும்.

‘சர்வ சக்திகளும் கொண்ட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்கும்போது, மனிதன் தனக்கென்று சுதந்திரம் இல்லாதவன் ஆகிறான். ‘ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே’ என்பதற்கேற்ப, இறைவன் ஆட்டுகிறான்; மனிதன் ஆடுகிறான் என்றாகிவிடுகிறது. மனித முயற்சிக்கு இடமே இல்லாமல் போகிறது’ என்கிறார் அவர்.

“எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஏற்றுக்கொள்ளாதே” என்பதும் புத்தரின் போதனைதான்.

இந்து மதம்[?], ‘வேதங்கள் யாராலும் உருவாக்கப்பட்டவையல்ல; அவை கடவுளிடமிருந்து நேரடியாகக் காற்றில் கலந்து, மனிதக் காதுகளை வந்தடைந்தவை’ என்கிறது. அதன் காரணமாகவே, வேதங்களுக்குச் ‘சுருதி’ என்னும் பெயரை அது கொடுக்கிறது!

இறுதித் தூதரான நபிகள் நாயகத்தின் வாயிலாக இறைவனாலேயே இறக்கி வைக்கப்பட்டதுதான் ‘குர் ஆன்’ என்று இஸ்லாம் நம்புகிறது. இதை நம்ப மறுப்பவனை மார்க்க விரோதியாகவே அது பாவிக்கிறது.

‘பரமண்டலத்திலிருக்கிற பரமபிதாவால் உருவாக்கப்பட்டதுதான் பழைய ஏற்பாடும் புதிய ஏற்பாடுமாகிய விவிலியம்’ என்று கிறிஸ்தவம் கூறுகிறது. அதில் வரும் சுவிசேஷங்கள் எல்லாம் மனிதர்களின் ஊடாகத் தேவன் அருளியது என்று அது நம்புகிறது.

இவ்வாறு, மதங்களெல்லாம் தத்தம் நூலை இறைவன்தான் அருளினான் என்னும் நம்பிக்கையை வலுப்படுத்துவதில் முனைப்புக் காட்ட, பௌத்தமோ அந்த நம்பிக்கையைச் சுக்கல் சுக்கலாகத் தகர்த்தெறிய முயல்கிறது. ‘எந்த நூலையும் கடவுள் படைத்ததாக ஒப்புக் கொள்ளாதே’ என்று சம்மட்டித் தாக்குதல் நடத்துகிறது.

‘கடவுள் சொன்னார் என்பதை நீ ஒத்துக்கொண்டால், உன் அனுபவத்துக்கும் அதனால் நீ பெற்ற அறிவுக்கும் வேலையில்லாமல் போகிறது’ என்கிறார் புத்தர்.

இந்த மூடநம்பிக்கையால் எத்தனையோ கொடூர சம்பவங்கள் இந்தச் சமூகத்தில் நிகழ்ந்துவிட்டன.

பைபிலில், உலகம் தட்டையானது என்னும் செய்தி உள்ளது. உலகம் உருண்டை என்னும் உண்மையை உலகுக்கு உணர்த்த முயன்ற விஞ்ஞானி கலிலியோ, போப்பாண்டவர் போட்ட உத்தரவால் பொங்கும் நெருப்பில் உயிரோடு பொசுக்கப்பட்டார்!

பரிணாமக் கொள்கையை உருவாக்கிய டார்வின், தேவாலயத்தில் மதவாதிகளின் முன்பு மன்னிப்புக் கோரினார். அவர் கண்டறிந்த பரிணாமக் கொள்கை பொய்யானது என்று அறிவிக்கும்படி மதம் அவரை அச்சுறுத்த அதன்படியே அவர் செய்தார்!
                         
                   

புத்தர் மகானோ ரிஷியோ அல்லர். இந்தத் தன்மையை அவர் எதிர்த்தார். ‘ரிஷி சொன்னார்; மகான் சொன்னார் என்று எதையும் நம்பாதே. யார் எதைச் சொன்னாலும், உன் அறிவைக்கொண்டு தர்க்கம் செய்து ஏற்புடையதை எடுத்துக் கொள்’ என்றார்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்பவர்கள் பௌத்தர்களையும் சமணர்களையும், ‘திருடர்கள்’, ‘கொலைகாரர்கள்’, ‘வேத வேள்வியை மறுப்பவர்கள்’ என்றெல்லாம் பழித்தார்கள்;  “பௌத்தர்களின் பெண்டாட்டி பிள்ளைகளைக் கற்பழிக்கின்ற சக்தியை எங்களுக்குக் கொடு” என்று கடவுளிடம் வேண்டினார்கள்! இது எத்தனை பெரிய அநியாயம்!

புத்தன் என்ற சொல் ஓர் ஆளைக் குறிப்பதாகவே பலரும் நினைக்கிறார்கள். அது தவறு.

புத்தியை, அதாவது அறிவைப் பயன்படுத்தி உண்மையைக் கண்டறிய முயல்பவன் புத்தன். சித்தார்த்தன், தன் புத்தியைப் பயன்படுத்தி பல உண்மைகளைக் கண்டறிந்ததால் அவர் புத்தர் என்று அழைக்கப்பட்டார். இவருக்கு முன்பு பல புத்தர்கள் வாழ்ந்திருக்கலாம் என்கிறார்கள்.

சித்தம் என்பதும் அது போன்றதே. சித்தத்தைக் கட்டுப்படுத்தி அதை நல்வழியில் செலுத்துபவன் சித்தன்.

என்சைக்ளோபீடியா, அபிதான சிந்தாமணி ஆகிய நூல்கள், புத்தன் என்பதற்கு, ‘எதையும் புத்தியின் மூலம் ஆராய்பவன்; குருட்டுத்தனமாக நம்பாதவன்’ என்று பொருள் தருகின்றன.

சைவ வைணவ மதத்தவரால் எண்ணற்ற புத்தமதத்தினர் கழுவேற்றப்பட்டார்கள்; செக்கிலிட்டு அரைக்கப்பட்டார்கள்; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் தூக்கி எறியப்பட்டார்கள்.

தமிழகத்தில் இருந்த பல புத்த கோயில்கள் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டன. தங்கம், வைரம் இவற்றால் ஆன புத்த விக்கிரகங்கள் களவாடப்பட்டன.

திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இவ்வாறான பல தீச்செயல்களால், பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழம்படி வலியுறுத்திய சிறந்த ஒரு மதம் [புத்தம் மதமல்ல; ஓர் இயக்கம் என்பாரும் உளர்] அது உருவான மண்ணைவிட்டே விரட்டியடிக்கப்பட்டது மிகப் பெரிய சோகம்!

*************************************************************************************

கீழ்க்காணும் நூல்களிலிருந்து திரட்டப்பட்ட கருத்துகளின் தொகுப்பே இப்பதிவு. நூலாசிரியர்களுக்கு நன்றி.

1. தமிழருவி மணியன் எழுதிய ‘ஞானபீடம்’, கற்பகம் புத்தகாலயம், தியாகராய நகர், சென்னை. மறுபதிப்பு: அக். 2009.

2.ஞான.அலாய்சியசு எழுதிய ‘பெரியார் பார்வையில் இஸ்லாமும் புத்தமும்’, புதுமலர் பதிப்பகம், ஈரோடு. முதல் பதிப்பு: டிசம்பர் 2005.

*************************************************************************************






திங்கள், 20 ஜனவரி, 2014

நாத்திகரைப் போற்றும் ஓர் ஆத்திக மனிதாபிமானி!!

 பிறரை மதிப்பதும் நேசிப்பதுமான உயர்ந்த குணம்தான் மனிதனை ‘மனிதன்’ ஆக்குகிறது.. ‘ஆலமர்ந்தார்’ ஒரு மனிதர்; ‘நாத்திகக் கேள்விகளுக்கு ஆத்திக பதில்கள் நூறு’ என்னும் நூலைப் படைத்தவர்.

‘பதில்கள் நூறு’ என்று குறிப்பிட்டிருந்தாலும் 121 வினாக்களுக்கு விடை தந்திருக்கிறார்.

அவருடைய பதில்கள், படிப்போர் அனைவருக்கும் உடன்பாடானவை அல்ல எனினும், பண்பாடு பிறழாமல் கருத்தை முன் வைக்கும் பாங்கு பாராட்டத் தூண்டுகிறது; வியக்க வைக்கிறது.

“நாஸ்திகர்கள் தெய்வங்களையும் மதங்களையும் தூஷணையாகப் பேசுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டு சரிதானா?” என்கிற கேள்விக்கான பதிலை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன். நீங்கள் அவரைப் புரிந்துகொண்டு போற்றுவதற்கு இது  பெரிதும் உதவும்.


மேற்கண்ட கேள்விக்கான ஆலமர்ந்தாரின் பதில்..........

### உண்மையான நாஸ்திகர்கள் தெய்வங்களையும் மதங்களையும் கடுமையாக விமர்சிப்பவர்களாக வேண்டுமானால் இருக்கலாம். அவர்கள் ஒரு போதும் தூஷணையாகப் பேச மாட்டார்கள். மனிதாபிமான உணர்வுதான் நாத்திகத்தின் அஸ்திவாரம்.

கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் இழைக்கப்படுகின்ற கொடுமைகளைக் கண்டு, தார்மீகக் கோபம் கொள்வதற்கு அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.

மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் கொடுமை புரிகின்றவர்களைவிட, நாஸ்திகர்களை உயர்ந்தவர்களாகவே கருத வேண்டும்.

கடவுளை மறுப்பதாலும் மதம் தேவையில்லை என்று சொல்வதாலும் ஒருவன் மோசமானவன் ஆகிவிட மாட்டான். மனித இனத்துக்குத் தீமை செய்கின்ற விஷயங்கள் தேவையில்லை என அவன் எண்ணுவதில் தவறில்லை.

நாஸ்திக வாதம் பேசுகிறவர்களை அலட்சியப்படுத்தாமல், அவர்கள் சொல்கின்றவற்றிலுள்ள நியாயங்களை ஏற்றுக்கொண்டு, கடவுள் நம்பிக்கை ஏன் அவசியம் என்பதை அவர்களிடம் விவாதித்து, சரியான முடிவுக்கு வரவேண்டும்.

ஒன்றை மறந்துவிடக் கூடாது. எல்லா உயிர்களையும் நேசிப்பவனே உண்மையான ஆஸ்திகன். ஆஸ்திகமும் புரியாமல் நாஸ்திகமும் புரியாமல் குழப்பத்தில் இருப்பவர்கள் வேண்டுமானால் தூஷணைகளில் ஈடுபடலாம். ஆஸ்திகம் பேசுகிற சிலரிடம் மூட நம்பிக்கைகள் இருப்பது போலவே, நாஸ்திகம் பேசுகிற சிலரிடமும் மூட நம்பிக்கைகள் உண்டு.

நல்ல ஆஸ்திகர்களும் நல்ல நாஸ்திகர்களும் மனிதாபிமானிகளாகத்தான் இருப்பார்கள். மனித இனம் சிறப்படைய வேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோளாக இருக்கும். மனம் பண்பட்டுவிட்ட இடத்தில் இரண்டும் ஒருங்கே சங்கமித்துவிடும் ###

                                   *                              *                               *
ந்த நூலைக் கற்றதன் மூலம், செறிவான பல கருத்துகளை அறிந்தேன் என்று சொல்வதைவிடவும், ‘ஒரு முழுமையான மனிதரைக் காணும் நல்லதொரு வாய்ப்பு அமைந்தது’ என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

இவரைப் போன்ற உயர் பண்பாளர்கள் / மனிதாபிமானிகள் உள்ளவரை மனித குலம் வாழும் என உறுதிபடச் சொல்லலாம்.

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

நூலின் பெயர்:     “நாத்திகக் கேள்விகளுக்கு ஆத்திக பதில்கள் நூறு’  

நூலாசிரியர்:        'ஆலமர்ந்தார்'

பதிப்பகம்:             நர்மதா, தியாகராய நகர், சென்னை - 17

முதல் பதிப்பு:       மே, 1995

இப்பதிப்பு:            ஆகஸ்டு, 2002

OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO

           

செவ்வாய், 14 ஜனவரி, 2014

சில சொட்டு ‘விந்து’வில் பல கோடி ஆன்மாக்களா?!?!?!

“உடல் அழிந்த பிறகு மிஞ்சுவது ஆன்மா என்கிறார்கள் ஆன்மிகவாதிகள்.

அது வெறும் நம்பிக்கை சார்ந்தது. ஆன்மாவின் ‘இருப்பு’ இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்கிறார்கள் பகுத்தறிவாளர்கள்.

இது பற்றிய விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில்,  அறிவியல் அறிஞர் ஒருவர் அதை நிரூபித்திருப்பதாகச் சொல்லி மகிழ்கிறார் ஒரு பதிவர்[tamil and vedas.wordpress.com]. அவர் சொல்கிறார்..........

###பிரிட்டிஷ் இயற்பியல் நிபுணரான ரோஜர் பென்ரோஸுடன் இணைந்து க்வாண்டம் பிரக்ஞை’ என்ற புதிய கொள்கையை Dr. Stuart Hameroff [of University of Arizona] என்பவர் அறிவியல் உலகின் முன் வைத்துள்ளார்.
மூளை செல்களுக்குள் ‘மைக்ரோட்யூபூல்’ என்ற அமைப்பு உள்ளது. இந்த மைக்ரோட்யூபூலில் ஆன்மா உறைந்திருக்கிறது. செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆராய்ந்து பார்க்கையில் உயிர் உடலை விட்டு நீங்கும் போது பிரக்ஞையானது [‘நான்’என்னும் உணர்வு/ ஆன்மா]இந்த மைக்ரோட்யூபூலிலிருந்து நீங்கி பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைகிறது. உயிர் மீண்டும் உடலுடன் இணைகையில் இந்தப் பிரக்ஞை மைக்ரோட்யூபிலில் [ஏதேனும் ஒரு உடம்பில்]வந்து இணைகிறது. எனவே, உடம்பில் ஆன்மா இருப்பது உண்மை. இதை நிரூபிக்க முடியும். மூளையை ஒரு பயாலஜிகல் கம்ப்யூட்டராக அதாவது உயிரியல் கணினியாகக் கொண்டு ஆன்மாவை நிரூபித்து விட முடியும் என்கிறார் ஹாமராஃப்.

ஒரு பில்லியன் என்பது நூறு கோடியைக் குறிக்கும் எண். இப்படி நூறு பில்லியன் நியூரான்கள் ஒவ்வொரு மனித மூளையிலும் இருக்கின்றன. இந்த நியூரான்கள் அனைத்துத் தகவலையும் ஏந்திச் செல்லும் திறன் படைத்தவை. இவற்றுள் இருக்கும் மைக்ரோட்யூபூல் தான் பிரக்ஞைக்கும் ஆன்மாவுக்கும் இருப்பிடம் என்கிறார் ஹாமராஃப்.

இந்த ஆன்மா உடலைவிட்டு நீங்கினாலும் பிரபஞ்ச பிரக்ஞையுடன் இணைந்து விடுவதாலேயே ஆன்மாவுக்கும் மரணம் இல்லை என்று அவர் கூறுகிறார்......இத்தகவல், சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோரை வியப்புடன் கூடிய சந்தோஷத்தில் திளைக்க வழி வகுத்து விட்டது! வேதாந்தத்தைப் போதிக்கும் பாரதமோ தன் ஆழ்ந்த ஆன்மீகக் கொள்கையில் இன்று தலை நிமிர்ந்து கம்பீரமாக நிற்கிறது,! ###

விஞ்ஞானி, ‘பிரபஞ்ச பிரக்ஞை” என்கிறாரே, அது என்ன என்று விளக்கியிருக்க வேண்டும்; அப்படி ஒன்று இருப்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டதா என்றும் சொல்லியிருக்க வேண்டும். இவற்றில் எதையுமே அவர் செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

செத்தவர்கள் பிழைப்பது சாத்தியமே இல்லாத நிலையில், ‘செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்கள்’ என்று சொல்வது தவறாகும்.

ஒரு விஞ்ஞானி சொல்கிறார் என்பதற்காக அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொண்டுவிடாது.

‘மைக்ரோட்யூபிலில் ஆன்மா இடம் கொண்டிருக்கிறதா என்பதை நிரூபித்துவிட முடியும்’ என்றுதான் இந்த விஞ்ஞானி சொல்கிறார். ‘நிரூபித்துவிட்டதாக’ச்  சொல்லவில்லை. அவரை மேற்கோள் காட்டி, ஆன்மா நிரூபிக்கப்பட்டதாகப் பதிவர் சொல்வது ஏற்கத்தக்கது அல்ல.


ஆன்மாவின் ‘இருப்பு’ இந்நாள்வரை நிரூபிக்கப்படவில்லை என்பதே நாம் அறியலாகும் உண்மை நிலை.

ஆன்மா என்றால் என்ன?

‘ஆன்மா [ஆத்மா] எப்போதும் பிறப்பதுமில்லை; இறப்பதுமில்லை; ஒரு சமயம் இருந்து மறுசமயம் இல்லை என்பதுமில்லை. இது  பிறப்பற்றது; என்றுமுள்ளது; நிலையானது; பழமையானது. சரீரம் கொல்லப்படும்பொழுதும் இது கொல்லப்படுவதில்லை. இந்த ஆத்மாவை ஆயுதங்கள் வெட்டுவதில்லை (நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி); நெருப்பு எரிப்பதில்லை (நைநம் தஹதி பாவக:); தண்ணீர் நனைப்பதில்லை (ந சைநன்ம் க்லேதயந்த்யாபோ); காற்று உலர்த்துவதும் இல்லை’ என்கிறது கீதை (ந சோஷயதி மாருத:) (2ம் அத்தியாயம் 21ம் ஸ்லோகம்).

 அகந்தை முதலிய எல்லாம் ஒழிந்தபின் எந்த சொரூபம் ஆன்மாவாக மிஞ்சுமோ அது பிரம்மம்[கடவுள்]’ என்கிறது தத் த்வம் அஸி என்னும் உபநிடத மகா வாக்கியம். 

கீதையும் உபநிடதமும் முன்வைத்துள்ள கருத்துகளின்படி, ஆன்மா, அழிவில்லாதது; என்றும் இருப்பது. எனவே, அதுவும் கடவுளின் ஓர் அம்சமே என்றாகிறது.

இதைக் கருத்தில் கொண்டு நாம் எழுப்பும் முதல் கேள்வி..........

“கடவுளின் அம்சமான இந்த ஆன்மா, எதன்பொருட்டு மானுட தேகங்களில் சென்று புகுகிறது? ஏன் அகந்தையைச் சுமக்கிறது? கணக்கற்ற பிறவிகள் எடுப்பதும் பாவபுண்ணியங்களைச் சுமப்பதும் ஏன்?” என்பதுதான்.

ஆன்மா உண்டு என்று பன்னெடுங்காலமாப் பிரச்சாரம் செய்தவர் எவரும் இவ்வாறெல்லாம் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஆன்மாவின் செயல்பாடு என்ன?

‘ ஐம்புலன்களை கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டு இருக்கின்றது.’

  • "ஐம்புலன் ஒடுக்கம் அறிதலின்" - சிவஞானபோதம் 3
ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவது ஆன்மா என்பது உண்மையானால் ‘மூளை’ என்ற ஒன்று அவசியம் அற்றதாகிறது. மூளைதான் அறிவின் உறைவிடம் என்று விஞ்ஞானம் சொல்வது தவறு என்றாகிறது.

மூளையிலுள்ள செல்கள் புதுப்பிக்கப்படுகையில் நாம் உறக்கத்திற்கு உள்ளாகிறோம். நெருப்பில் எரிந்து போகாத நீரில் நனையாத ஆன்மா எப்போதும் ‘விழிப்பு’ நிலையில்தான் இருக்க வேண்டும். நாம் உறங்கும்போது என்ன ஆகிறது? அதுவும் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறதா? கடவுளைப் போல எப்போதும் இருந்துகொண்டிருக்கிற ஒன்று தன்னைப் புதுப்பித்துக்கொள்வது அவசியமற்றது.

நம் உடலில் மயக்க மருந்து செலுத்தப்படும் போது நினைவிழக்கிறோம். அப்போது ஆன்மாவும் செயலற்றுப் போகிறதே, அது எப்படி?!

இது போன்ற சந்தேகங்களுக்கு ஆன்மாவை நம்புவோர் போதிய விளக்கம் தராத நிலையில் அது ஐம்புன்களையும் கட்டுப்படுத்துவதாகச் சொல்வதை அங்கீகரிப்பது இயலாத ஒன்றாகும்.

ஆன்மா உடம்புக்குள் நுழைவது எப்படி?

விஞ்ஞானத்தின் உதவியால், ஆணிடமிருந்து வெளிப்படும் விந்துவில் உள்ள பல கோடி உயிரணுக்களில் [ஒரு மி.லிட்டர் விந்துவில் 12 கோடிவரை உயிரணுக்கள் இருக்குமாம்] ஒன்று பெண்ணின் கருப்பையிலுள்ள சினை முட்டையுடன் இணைந்து வளர்வதன் மூலம் குழந்தை உருவாகிறது என்பது நாம் அறிந்ததே.

குழந்தை பிறந்து, வளர்ச்சி பெற்று வாழ்ந்து மடிகிறது.

அந்த உடம்புக்குள்தான் ஆன்மா புகுந்து உடம்பு அழியும்வரை அதை ஆண்டு, அது அழியும்போது வெளியேறுவதாகச் சொல்கிறார்கள்.

அந்த ஆன்மா, உடம்புக்குள் புகுவது எவ்வாறு?

காது, மூக்கு, வாய், மலத்துவாரம், மர்ம உறுப்பு ஆகிய முக்கிய துவாரங்கள் வழியாகவா, இல்லை, வேர்வைத் துவாரங்கள் மூலமாகவா?

ஒவ்வொரு துவாரத்திலும்  கணக்கற்றவை நுழைய முடியும். ஒன்றுக்குத்தான் அனுமதி என்பது கடவுள் வகுத்த விதியா? ஒன்றுக்கும் மேற்பட்டவை போட்டியிட்டு, வென்ற ஒன்று உட்புகுகிறதா?

உடம்புக்குள் புகுகிற அந்த ஒன்று, துவாரம் இல்லாத சினை முட்டையைத் துளைத்தது எவ்வாறு?

கருப்பையில் இருக்கும் சினை முட்டையை அடைவதற்கான வழி, பெண்ணுறுப்புப் புழைதான்.

எனவே, ஆண், தன் விந்துவைப் பெண்ணுறுப்பில் தெளிக்கும்போதே, அதன் ஒவ்வொரு துளியிலும் கோடானுகோடி ஆன்மாக்கள் கோடிக் கணக்கான உயிரணுக்களுடன் பயணித்தல் வேண்டும். உயிரணுக்களுக்கான ஓட்டப்  போட்டியில் வென்று, சினை முட்டையைத் துளைத்து உட்புகும் ஒற்றை உயிரணுவுடன் ஒட்டிக் கொண்டு வீரியமுள்ள ஓர் ஆன்மா மட்டும் சினை முட்டைக்குள் நுழைதல் வேண்டும்; மூளை உருவாகக் காரணமான செல்களில் அது நிரந்தரமாகத் தங்கிவிட வேண்டும். 

இவ்வாறுதான் ஓர் ஆன்மா சினை முட்டைக்குள் நுழைகிறதா?

மேலும்...........

ஒவ்வொரு ஆன்மாவுக்கும், தனக்குரிய உடம்பைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் உண்டா?

புகுந்த உடம்பின் மீது வெறுப்பு ஏற்பட்டால், அதிலிருந்து எப்போது வேண்டுமானாலும் ஆன்மா வெளியேறலாமே! ஏன் அவ்வாறு செய்வதில்லை? கடவுள் கட்டுப்படுத்துகிறாரா? நிபந்தனைகள் விதித்திருக்கிறாரா?

இன்றுவரை இவ்வினாக்களுக்கு விடை ஏதும் இல்லை.

ஆன்மாதான் ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துகிறது என்றால், மூளை இல்லாமலே மனித உடம்பு இயங்க வேண்டும்; சிந்திக்கவும் வேண்டும். இவையெல்லாம் சாத்தியமா என்றால் நகைப்புதான் மிஞ்சுகிறது.

'உடலின் இயக்கத்துக்கு மூளைதான் காரணம்; ஆன்மாவின் பணி, இந்த மண்ணில் மனிதன் பெறும் அனுபவங்களையும் செய்யும் பாவ புண்ணியங்களையும் மரணத்துக்குப் பின்னர் சுமந்து செல்வது மட்டுமே' என்றால், அடுத்த பிறவியில், இப்போது பெற்ற அனுபவங்கள் நினைவுக்கு வருதல் வேண்டும். அதுவும் சாத்தியப்பட்டதாகத் தெரியவில்லை.

‘ஆன்மா இருப்பதும், பிறவிதோறும் வேறு வேறு உடல்களில் புகுந்து புகுந்து இருந்து இருந்து வெளியேறுவதும் உண்மையாயின், ஒரு பிறவியில் மருத்துவராக இருந்து அனுபவம் பெற்ற ஓர் ஆன்மா அடுத்த பிறவியில் மருத்துவக் கல்லூரியில் கற்காமலே அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும்’ என்று பதிவர் ‘வவ்வால்’ அவர்கள், பதிவர் ‘சார்வாகன்’  அவர்களின் ஒரு பதிவுக்கான பின்னூட்டமாகப் பதிவு செய்த கருத்து இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.

இப்படி, விளக்கம் தரவேண்டிய ஐயப்பாடுகள் எவ்வளவோ உள்ளன [பதிவின் நீட்சிக்கு அஞ்சி இத்துடன் முடிக்கப்படுகிறது]. இவை பற்றி எள்ளளவும் அக்கறை காட்டாமல் யாரோ சிலர் அனுமானம் செய்து சொல்லிவிட்டுப் போனவற்றை நம்புவதும் பிறரை நம்பத் தூண்டுவதும் ஏற்கத்தக்க செயல்களல்ல; அல்லவே அல்ல.

சனி, 11 ஜனவரி, 2014

குமுதம் ஒரு பக்கக் கதைகள் [2009-10] தொகுப்பில் என் படைப்புகள்!

குமுதம் இதழ், 2009-10 ஆம் ஆண்டுகளில் பிரசுரித்த ஒரு பக்கக் கதைகளில் சிறந்த படைப்புகளைத் தொகுப்பாகக் [பாகம்-1] கடந்த ஆண்டு வெளியிட்டது. அதில் நான் படைத்த இரு கதைகள் இடம்பெற்றுள்ளன என்பதை மகிழ்வுடன் [தற்பெருமையுடன் என்று நீங்கள் எண்ணினாலும் சரியே!] தெரிவிப்பதோடு அவற்றை ஒரு பதிவாகவும் வெளியிடுகிறேன்.

படித்து மகிழுங்கள். உங்கள் பொன்னான நேரத்தை இவை வீணடித்திருந்தால் பெருந்தன்மையுடன் மன்னியுங்கள்.



கதை ஒன்று:                     ‘யாருங்க இவர்?’ [பரமசிவம்]

“ஐயா, காம்பவுண்டைச் சுத்தியிருந்த புல் பூண்டெல்லாம் செதுக்கிச் சுத்தம் பண்ணிட்டேன்.” சொல்லிக்கொண்டு வந்த துரைசாமி, வருவாய்த்துறை அதிகாரி சங்கரன் முன்னால் கைகட்டி நின்றான்.

“வெரிகுட். இன்னிக்கி ஈரோட்டிலிருந்து என் சொந்தக்காரங்க வர்றாங்க. நிறைய லக்கேஜ் இருக்கும். டிரைவரோட ரெயில்வே ஸ்டேஷன் போயி அவங்களை அழைச்சுட்டு வா. அப்புறம், மார்க்கெட் போயி இலை வாங்கி வந்து கொடுத்துட்டு நேரே ஆஃபீஸ் வந்துடு” என்றார் சங்கரன்.

துரைசாமி இடம்பெயர்ந்ததும் சங்கரனை நெருங்கிய அவர் மனைவி மணிமேகலை, “எல்லா வேலைக்கும் நம் வீட்டில் ஆள் இருக்கும்போது, வீடு தேடி வந்த இவர்கிட்டே நிறைய வேலை வாங்குறீங்களே, யாருங்க இவர்?” என்று கேட்டார்.

“இவன் ஒரு கூலிக்காரன். செத்துப்போன அப்பன் பேரில் உள்ள குடிசை வீட்டுப் பட்டாவை இவன் பேருக்கு மாத்தணுமாம். பைசா தரமாட்டான். இப்படி ஏதாச்சும் வேலை வாங்கினாத்தான் உண்டு” என்றார் அதிகாரி சங்கரன்!

‘எத்தனை அல்ப மனசு என் புருஷனுக்கு’ என்று மனதுக்குள் முணுமுணுத்தார் மணிமேகலை.

                     *                    *                *                  *                      *                    *

கதை இரண்டு:                               ‘தானம்’ [பரமசிவம்]

யிரம் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் அன்னதானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தொழிலதிபர் பெரிய கருப்பன்.

வியாபாரத்தில் அந்த ஆண்டிலும் நல்ல லாபம் என்பதால் மகிழ்ச்சியோடு கணக்குப்பிள்ளையை அழைத்து, “அன்னதானத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க என்றார்.

“போஸ்டர் அடிச்சி ஒட்டிடச் சொல்றேன். சமையல்காரருக்கு ஃபோன் பண்ணி வரவழைக்கிறேன். மண்டபம் புக் பண்ணிட்டு.....”

குறுக்கிட்டார் பெரிய கருப்பன், “மண்டபம் வேண்டாம். இந்த வருஷம் அன்னதானத்தை ஒரு கோயிலில் நடத்திடுவோம்” என்றார்.

புரியாமல் விழித்தார் கணக்கு.

“மண்டபத்திலோ, சத்திரம் சாவடியிலோ வெச்சி அன்னதானம் பண்ணினா பெரும்பாலும் பிச்சைக்காரங்கதான் வர்றாங்க. கோயிலில் செய்யும்போது, வயிறாரச் சாப்பிட வழியில்லாத மத்தவங்களும், ‘சாமி பிரசாதம்’னு தயங்காம வந்து சாப்பிடுவாங்க” என்றார் பெரிய கருப்பன்.

“முதலாளி, உங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனசு” என்று வாய்விட்டுப் பாராட்டினார் கணக்குப்பிள்ளை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

ஞாயிறு, 5 ஜனவரி, 2014

சுஜாதாவின் ‘உயிரின் ரகசியம்’ நூலிலிருந்து..........

நான் ‘கிறுக்கிய’ ஒரு சிறுகதையைத்தான் இன்று பதிவிட இருந்தேன். தற்செயலாக ‘உயிரின் ரகசியம்’ நூலை இரண்டாம் முறையாகப் படிக்க நேர்ந்ததில் இந்த முடிவு தடம் புரண்டது!

சுஜாதா கடவுள் நம்பிக்கை உள்ளவர்தான் [அவரே சொல்லியிருக்கிறார்]. ஆனால், கடவுள் பற்றியோ, படைப்பின் ரகசியங்கள் பற்றியோ ஆராய்கிற போது அணுவளவும் ‘நடுநிலை’ பிறழ்ந்தவர் அல்ல.

படிப்பறிவு உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய மிகச் சிறந்த தமிழ் நூல்களுள் இதுவும் ஒன்று என்பது என் கருத்து.

இந்த நூல் வெளியாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன [முதல் பதிப்பு: டிசம்பர் 2007; உயிர்மை பதிப்பகம், சென்னை-600 018]. உங்களில் பலரும் இதைப் படித்திருக்கக்கூடும். இன்னும் பலர் படிக்காமலும் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை காரணமாக, நூலில் இடம்பெற்றுள்ள மிகச் சிறந்த கருத்து முத்துகளை மட்டும் இங்கே தொகுத்திருக்கிறேன்.


‘உயிர்’ பற்றிய ரகசியங்கள்..........

*நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமி எப்படி இருந்தது? என்று கேட்டால்,  “நான் போய்ப் பார்த்ததில்லை” என்பீர்கள். நானும் போனதில்லை. ஆனால், விஞ்ஞானிகள் இன்றைய சாட்சியங்களையும் அடையாளங்களையும் ஆதாரமாகக் கொண்டு அப்போது எப்படி இருந்திருக்கும் என்பதைச் சாத்தியக்கூறுகளாகச் சொல்லியிருக்கிறார்கள். முதன் முதலாக உயிர் எப்படித் தோன்றியது என்றும் சொல்லியிருக்கிறார்கள். எந்தக் கடவுளும் ‘இன்றிலிருந்து உயிர் ஆரம்பம்’ என்று அறிவிக்கவில்லை. உயிர் தோன்றியது........................ அவ்வளவுதான்.*

* அணுவுக்கு உயிர் கிடையாது. உங்கள் உடம்பில் இருக்கும் அணுக்களைப் பிரித்தால் அதில் எதிலும் ‘உயிர்’ கிடையாது. குறிப்பிட்ட அணுக்கள் ஒரு ‘செல்’ என்னும் குடிலுக்குள் ஒன்று சேரும்போது ‘உயிர்’ என்னும் நடனம் நிகழ்கிறது.*

*மற்றொரு உயிரை, அது ஒரு தங்க மீனோ, கரப்பான் பூச்சியோ, பாக்டீரியாவோ, ஐஸ்வர்யா ராயோ படைக்கத் தேவையான அணுக்கள் நான்கு. கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரிஜன். இவற்றுடன் மிகச் சிறிய அளவில் மற்ற தனிமங்கள். உயிரில் வேறு தந்திரங்கள் ஏதுமில்லை. எல்லாப் பொருள்களையும் போலக் கூட்டணுக்களின் கூட்டு முயற்சிதான் உயிர்.*

*இன்னும் பின்னோக்கிப் போனால் - ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர் ஒரு மீன். இருநூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர்கள் அனைவரும் பாக்டீரியாக்கள் என்னும் நுண்ணுயிர்களே. ..........அந்த நுண்ணுயிர் எங்கே வாழ்ந்தது; எப்படி உண்டாயிற்று என்பதுதான் கேள்வி.*

*மனமற்ற, சுய சிந்தனையற்ற அணுக்களுக்கு எப்படி அப்படியொரு சிக்கலான உயிர் என்னும் கூட்டணுவை உண்டாக்கத் தெரிந்தது..........மேற்பார்வையாளர் இல்லாமல்? விஞ்ஞானத்தால் இந்த நிகழ்வின் அதிசயத்தை , காரணத்தை விளக்கவே முடியாது என்று சிலர் கருதுகிறார்கள். அறிவியலால் இந்த முதல் ‘செல்’ எப்படிக் கட்டமைக்கப்பட்டது என்பதை விவரிக்கவே முடியாது என்கிறார்கள். முடியும் என்கிறார்கள் சிலர். அது எப்போது சாத்தியமாகும்?*

*ப்ரிஸ்டல் ஆராய்ச்சி சாலையில் கண்டறிந்த விஷயங்கள் ஆச்சரியம் அளித்தன.  பூமிக்கு ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில்கூட பாக்டீரியாக்கள் பிழைத்துத் தழைத்திருக்கின்றன 110 டிகிரி வரை.. பாக்டீரியாக்கள் உஷ்ணம் தாங்கக் கூடியவை என்றால் அவை 4 கிலோ மீட்டர் ஆழத்தில்கூட பிழைத்திருக்க முடியும்..........பூமியின் அடி ஆழத்தில் வாழ விரும்பும் பாக்டீரியாக்கள்தான் நம் முதல் முன்னோர்கள் ஆவார்கள்.*

*1969 ஜூலை 20, உலக சரித்திரத்தில் முக்கியமான தினம். சந்திரனில் மனிதன் கால் வைத்த தினம். சந்திரனுக்குச் சென்று வந்தவர்கள் மீது ஏதாவது பாக்டீரியா இருக்குமோ என்று கவலைப்பட்டு , சில தினங்கள் அவர்களைத் தனியே வைத்திருந்தார்கள். சந்திரனில் எந்தக் கிருமியும் இல்லை என்பது தெரிந்ததும் அவர்களுடன் கை குலுக்கினார்கள்.*

*பூமியில் உயிர் வந்தது மிக மிக தற்செயலானது. ஏதோ ஒரு கணத்தில் தன்னைத்தானே இரட்டித்துக்கொள்ளும் மூலக்கூறு உண்டாகி, அதன்பின் பரிணாம விதிகள் பொறுப்பேற்றன.*

*அறிவியலுக்கு, ‘காரணம்’, ‘விதி’ போன்ற வார்த்தைகள் எல்லாம் உதவாதவை: தடை செய்யப்பட்டவை. மதம், நம்பிக்கை இவை சார்ந்த வார்த்தைகள் அறிவியலில் இருக்கக் கூடாது என்று சொல்பவர்கள்தான் பெரும்பான்மையோர்.*

*செவ்வாய் கிரகத்தில் தன்னிச்சையாக அங்கே பிறந்த ஒரு பாக்டீரியாவை நிரூபித்தாலே போதும். பிரபஞ்சம் பற்றிய நம் கருத்துகள் திருத்தப்பட்டுவிடும்.*

*பிரபஞ்சத்தில் நாம் யார்? நம் பங்கு என்ன? எதற்காகத் தோன்றியிருக்கிறோம்? எதற்காக நமக்குச் சிந்திக்கும் அறிவு ஏற்பட்டது? பிரபஞ்சத்தின் பிரமாண்ட அமைப்பில் நாம் ஓர் அங்கமா? பிரபஞ்ச கானத்தின் ஒரு ராகமா?*

*உயிர் வடிவம் சிக்கலானது; தற்செயலானதே.*

*நாமெல்லோரும் விதியின் புதல்வர்கள் அல்ல. தற்செயலாகத் தோன்றிய தறுதலைகள்! கடவுளின் செயலோ, அவதார புருஷர்களோ அல்ல. உயிரின் மிகப் பரவலான மாறுதல்களால் ஏற்பட்ட அபார தற்செயலின் விளைவுகள். நாம் தோன்றியது எந்தவொரு விதியின் நிர்ணயத்தாலும் அல்ல*

                            *                                      *                              *

நான் என் விருப்புக்கிணங்கத் தொகுத்த இவற்றைக் காட்டிலும் சிறந்த கருத்துகள் நூலில் இடம்பெற்றிருக்கக் கூடும். முழு நூலையும் படிப்பதன் மூலம் அவற்றை நீங்கள் அறிவது சாத்தியமாகும்.

இத்தொகுப்பின் நோக்கம், ‘உயிரின் ரகசியம்’ முழுவதையும் நீங்கள் படித்தறிய வேண்டும் என்பதே.

வருகைக்கு நன்றி.

*************************************************************************************