புதன், 21 செப்டம்பர், 2016

‘நான் லட்சத்தில் ஒருவன்!’ [அனுபவக் கதை!!]

து நடந்து ஆறு மாதம்போல இருக்கலாம்.

அந்தி மயங்கும் நேரத்தில், அந்தப் பேருந்து நிறுத்தத்தின் அருகே அழகிய பருவப் பெண்ணொருத்தி ரவுடிகளால் கடத்தப்பட்டாள். அப்போது அங்கு நிறையவே இளவட்டங்கள் இருந்தார்கள். கடை வாசல்களில் அதிவேக ‘பைக்’குகள் வரிசை கட்டியிருந்தன. அவள் கடத்தப்பட்ட இடத்துக்கு நேர் எதிரே ஒரு ‘வாடகைக் கார் நிறுத்துமிடம்’கூட இருந்தது. எல்லாம் இருந்தும்..........

‘விருட்’டென ஒரு வாகனத்தில் அல்லது, வாகனங்களில் சீறிப் பாய்ந்து ரவுடிகளை விரட்டிப் பிடித்து, கடத்தப்பட்ட பெண்ணை மீட்பதற்குக் கதாநாயகனோ நாயகர்களோ இல்லை என்பது கொடுமை. கொடுமையிலும் கொடுமை.

அவள் கடத்தப்பட்ட சில வினாடிகளில் ஒரு மாயாஜாலம் போல நூறுபேர் கூடிவிட்டார்கள். வேறெதற்கு? வேடிக்கை பார்க்கவும் கதை பேசவும்தான்!

“இந்நேரம் ரவுண்டானாவைக்கூடக் கடந்திருக்க மாட்டானுக. பத்து பேர் சேர்ந்து ரெண்டு டாக்ஸி பிடிச்சிச் சேஸ் பண்ணினா அவனுகளை அமுக்கிறலாம்.” -யாரோ ஒருவர் யோசனை சொன்னார். சொன்னவர் யாரென்று ஆளாளுக்குக் குரல் வந்த திக்கில் தேடினார்கள். ஆளைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

“கார் போற வேகத்தைப் பார்த்தா ரவுண்டானாவைக் கடந்து ரொம்ப தூரம் போயிருப்பாங்க. நாமக்கல், சங்ககிரி, ஓமலூர்னு நாலஞ்சி கிளையா ரோடு பிரியுது. எதுல போனானுகன்னு கண்டுபிடிக்கிறது அவ்வளவு சுலபமா என்ன?” -எதார்த்தமாகச் சொன்னார் ஓர் உள்ளூர் ஆசாமி.

“அப்படியே கண்டுபிடிச்சாலும் நாம வெறுங் கையோட போயி அவனுகளை மடக்குறது அவ்வளவு சுலபமில்லீங்க. அவங்க கையில்  ஆயுதம் இருக்கும். போட்டுத் தள்ளிட்டானுகன்னா நம்ம புள்ள குட்டிகளை யார் காப்பாத்துறதாம்?” -சொன்னவர் கடமை உணர்வுள்ள ஒரு குடும்பஸ்தர்.

”பிக்பாக்கெட், வழிப்பறி மாதிரி பொண்ணுகளைக் கடத்துறதும் சர்வ சாதாரணம் ஆயிடிச்சி.”

“கடத்திட்டுப் போயிக் கற்பழிக்கிறது மட்டுமில்ல, துண்டு துண்டா வெட்டிப் போட்டுடறானுக.”

“கிழவிகளைக்கூடத் தூக்கிட்டுப் போயிக் கற்பழிக்கிறாங்க.” சொல்லி முடித்த ஒரு வழுக்கைத் தலையர் சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் சிரிக்காததால் சீரியஸான முகபாவம் காட்டினார்.

இம்மாதிரியான வீண் பேச்சுகள் தொடர்ந்தபோது அதற்கு முட்டுக்கட்டை போட்டார் ஒரு ஜோல்னா பையர். “ஆளாளுக்கு வெட்டிக் கதை பேசிட்டிருந்தா எப்படி? செல்ஃபோன் வச்சிருக்கிறவங்க போலீஸுக்கு ஒரு ஃபோன் போடுங்கப்பா” என்றார் உரத்த குரலில். அவரிடம் செல்ஃபோன் இல்லையாம்!

“ஃபோன் பண்றது பெரிய காரியம் இல்ல. ‘நீ யாரு? எங்கிருந்து பேசற? பொண்ணுக்கும் உனக்கும் என்ன உறவு? இப்படிக் கேள்வி மேல கேள்வி கேப்பான் போலீஸ்காரன். கேஸ்ல நம்மை முக்கிய சாட்சியா போட்டுடுவான். சொந்த வேலையை விட்டுட்டுக் கோர்ட்டுக்கு நடையா நடக்கணும். ரவுடிங்களும் நம்மைப் பழி வாங்காம விடமாட்டாங்க. நமக்கு எதுக்கய்யா இந்த வம்பு தும்பெல்லாம்” என்று பேசிவிட்டு இடத்தைக் காலி செய்துகொண்டிருந்தார் ஒரு புத்திசாலி.

அவருடைய எதார்த்தமான பேச்சு எல்லோரையும் பாதித்திருக்க வேண்டும்.

கும்பல் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது.

நான் நெஞ்சுக்குள் குமுறினேன்.

‘சே, என்ன மனிதர்கள்!’

ஓர் இளம் பெண் பட்டப்பகலில் கடத்தப்படுகிறாள். நூறு ஆண்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்!

ஆண்களா இவர்கள்?

ஆண்மை உள்ளவர்களே ஆண்கள். பெண்ணை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல, உரிய தருணங்களில் அவளின் ‘மானம்’ காப்பதுதான் உண்மையான ஆண்மை.

இந்த மண்ணில் ஆண்மையுள்ள ஆண்களின் எண்ணிக்கை அருகிவிட்டதா?

லட்சத்திற்கு பத்துபேர் தேறுவார்களா?

கோபிக்காதீர்கள்..........அந்தப் பத்தில் நீங்களும் ஒருவரா?

யோசிக்கிறீர்கள்?

ஏதோ கேட்க நினைக்கிறீர்கள் போலிருக்கிறதே.

“இந்த அசம்பாவிதம் எப்போது நடந்தது?” என்கிறீர்களா?

ஆறு மாசம் முந்தி.

“எங்கே?”

சேலத்தில்.

“உனக்கு எப்படித் தெரியும்? செய்தித்தாள்ல படிச்சியா?””

இல்லீங்க. நானே நேரில் பார்த்தேன்.

“அட!...வேடிக்கை பார்த்த நூறு பேரில் நீயும் ஒருத்தன்! இல்லையா?”

அது வந்து.......

“என்னய்யா வந்து போயி, பத்தோட பதினொன்னா நீயும் வேடிக்கைதான் பார்த்திருக்கே. அந்தப் பொண்ணைக் காப்பாத்த நினைக்கலே. அப்போ, நீயும் ஒரு பேடிதான். அதாவது, ஆண்மையில்லாதவன். சரிதானே?”

அது வந்து.....அது வந்து.....வந்து.....



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$










ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

தமிழ்மணத்தின் கடமையும் தமிழ்ப்பதிவர் எதிர்வினையும்!

கீழ்வரும் குறிப்புகளைக் கவனமாகப் படித்து முடியுங்கள். பின்னர் தமிழர்களாகிய நீங்களே ஒரு தீர்மானத்தை முன்னெடுப்பீர்கள்.


*அரசியல் அறிவற்றவர்கள் என்று நீங்கள் அவர்களை குறிப்பிடுகிறீர்கள். சந்தர்ப்பவாதமும், காலை நக்குவதும்தான் அறிவு என்றால் கன்னட மக்கள் தமிழர்களோடு ஒப்பிட்டால் முட்டாள் கள் தான்.-https://naanmani.wordpress.com/2016/09/17/learn-from-revolt-kannadas/

* .....பினாத்தி திரியும் ஜெயமோகனை பெற்ற மண் இது.

* .....ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உண்டு … &*$… தின்ற நாய்க்கு பேரு முத்து மாலையாம்.

* .....என்ன செய்வது.. கன்னடர்களின் சுயமரியாதைக்கான காவிரி போராட்டத்தை இந்திய நீதிமன்றமும், மத்திய அரசும், தமிழ் இன வெறியர்களும் கை கோர்த்து மூடுவதையும், அந்த குழியின் பிடி சாம்பலில் தனது வியாபாரத்தை துவக்க திருநீறு பாக்கெட் போட வரும் வேளாண் விஞ்ஞானி சுவாமிநாத மாமாவையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் முற்போக்காளர்களும் வருகிறீர்களே..கொஞ்சம் காதுகளை முன்பக்கமாக திருப்பி வையுங்கள். உங்களுக்கு மாத்திரம் முன்பக்க மடல் இருப்பதால்

*சுதந்திரம் பெற்ற பிறகும், முன்னர் அந்நியர் ஆட்சியின் கீழ் ஒரு பென்சன் மகாராசா சார்பில் அந்த அந்நியர்கள் நியமித்த ரெசிடெண்டான ஐசிஎஸ் அதிகாரியும், அந்நியர் ஆட்சியின் ஒரு மாகாணத்தின் ஐசிஎஸ அதிகாரியும் போட்ட ஒப்பந்த்தை மதிக்க கோரும் உங்களது அடிமை புத்தியை எந்த செருப்பால் அடிப்பது, இல்லை கன்னடத்து வெளக்குமாருதான் வேண்டுமா..-.- 

மேற்கண்டவை, https://naanmani.wordpress.com/2016/09/17/learn-from-revolt-kannadas/ லிருந்து எடுத்தவை.


https://naanmani.wordpress.com/2016/09/15/cavery-sorrow-of-canara-i/  முகவரியிலிருந்து....
***(காவிரி பிரச்சினையில் கன்னட மக்களின் பக்கம் நியாயம் இருக்க கூடும் என்பதை பரிசீலிக்க விரும்பாதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். மீறி படித்து மனம் புண்படும் என்றால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.)


  1. 1991 முதல் 2007 வரை நடைபெற்ற சட்ட போராட்டத்தில் தமிழக விவசாயிகளின் தரப்பில் நின்று அறிவியலுக்கு புறம்பான ஒரு சாட்சியை சொல்லி, அதனை தனது இமேஜின் மூலம் நம்ப வைத்த யோக்யன் எம்.எஸ். சுவாமிநாதன்
  2. *துரோகத்தின் மறுபெயராக தமிழகமும், தியாகத்தின் போராட்டத்தின் மறுபெயராக கன்னடமும் இருப்பதைப் புரிந்து கொள்வீர்கள். அதனால் தான் புகழ்பெற்ற கவிஞர் சீத்தாராமையாவை அவர்கள் முதல்வராக பெற்றிருக்கிறார்கள். நமக்கோ நல்லம நாயுடு புகழ் மைசூர் மகாராசாவின் தங்க ஒட்டியாணத்தை பரிசாக பெற்றவர்களின் பிள்ளைகள் பதவியில் இருக்கிறார்கள்.
  3. *சம காலத்தில் சரபோஜியின் காலை நக்கிக் குடித்துக் கொண்டிருந்த வாண்டையார்களும், மூப்பானார்களும் அரசின் பண்டக சாலைகளையும், வியாபாரிகளின் வணிக கிடங்குகளையும் சூறையாட மக்களை தூண்டிக் கொண்டிருந்தார்கள். அதுதான் மானமிகு தமிழகத்தின் நிலைமை.
  4. *ஆனால் திப்பு போன பிறகு அந்த இடங்களை மூப்பனார், வாண்டையார் போன்ற திருட்டு கும்பல் ஆட்டையை போட்டது தான் வரலாறு. 
  5. * சோழியன் குடுமியான சுவாமிநாதன் சும்மாவா வந்திருப்பான் சாட்சி சொல்ல.
  6. *இதோ திப்புவின் வாய்க்கால்களை தூர்வாரி விட்டார்கள் கன்னடத்து வீர மக்கள். இப்போது தடுப்பணை கட்டி விட்டார்கள் என புலம்புகிறார்கள் தமிழ் தேசிய வெறியர்கள்.
மேலே இடம்பெற்ற அனைத்துக் குறிப்புகளையும் நீங்கள் ஏற்கனவே படித்திருக்கக்கூடும். வண்ணம் சேர்க்கப்பட்ட இடங்களை[சில இடங்களில் சேர்க்க இயலவில்லை. நகல் எடுத்த பத்திகளையும் சீர் செய்ய இயலவில்லை] மீண்டும் ஒரு முறை படியுங்கள். இந்த அளவுக்கு நம்மை மிகக் கீழ்த்தரமாகச் சாடியிருக்கும் அந்த அயோக்கியன் யார் என்பதையும் யூகித்திருப்பீர்கள்
அவன்.....
‘நான் மணி’ என்னும் வலைப்பக்கத்தில் அண்மைக்காலமாக எழுதிக்கொண்டிருக்கும் ஒரு பொறுக்கி. அவன் எதையோ எழுதிவிட்டுப்போகட்டும்; நம்மவரை எத்தனை கீழ்த்தரமாகச் சித்திரிக்கிறான் என்பதுதான் நமக்குச் சினமூட்டுகிறது.
புகார் செய்து, எளிதில் அகற்ற இயலாத வகையில், முகநூலிலோ, ட்விட்டரிலோ, பிளாகரிலோ வெளியானவை அல்ல இவை. தமிழ் வளர்க்கும் நோக்கத்துடன் அமெரிக்கத் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் ‘தமிழ்மணம்’ திரட்டியில் வெளியானவை.
கன்னடனை மேம்படுத்தியும் தமிழனை இழிவுபடுத்தியும் ஒரு கன்னடன்[தமிழனாகவும் இருக்கக்கூடும். அவன்தான் இன மொழி வேறுபாடுகளைக் கடந்தவனாயிற்றே!] தமிழ் வளர்க்கும் நோக்குடன் அமெரிக்கத் தமிழர்களால் நிர்வகிக்கப்படும் தமிழ்மணத்தில் அண்மைக் காலமாக எழுதிக்கொண்டிருக்கிறான்.
இது, தமிழ்ப் பதிவர் கண்களிலும் தமிழ்மணம் வாசிக்கும் தமிழ் இன உணர்வாளர் கண்களிலும் படவில்லையா? பட்டும் பெருந்தன்மையுடன் அமைதி காக்கிறார்களா?
அது, என்னளவில் சாத்தியப்படவில்லை. இவனின் வலைப்பக்கத்தை அகற்ற வேண்டும் என்று தமிழ்மணம் நிர்வாகிகளுக்குப் புகார் அனுப்பினேன். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தமிழ் படித்த கன்னடர்கள்தான் தமிழ்மணத்தின் நிர்வாகிகளோ என்ற சந்தேகம் எனக்கு! இப்பதிவைப் படித்துவிட்டு என்னை அவன் இழிவுபடுத்தி எழுதினால், அதையும் தமிழ்மணம் வெளியிடக்கூடும்! அது நிகழ்ந்தால் எனக்குக் கவலையில்லை.
தமிழ்ப்பதிவர்களாகிய நண்பர்களே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? தமிழ்மணம் போலவே அமைதி காக்கப் போகிறீர்களா? அல்லது, அந்த அயோக்கியனின் வலைப்பக்கப் பதிவை நீக்கும்படி தமிழ்மணத்தை வற்புறுத்துவீர்களா?
அது உங்கள் விருப்பம். நான் மிகச் சாதாரணன். நான் சொல்லி நீங்கள் செயல்பட வேண்டாம்; பின்னூட்டமிடுதலும் கட்டாயமில்லை.

எவ்வகையிலேனும் நம்மவர் அனைவரும் தமிழ்மணத்தை வற்புறுத்தி, ‘நான் மணி’ என்ற அயோக்கியனின் வலைப்பக்கப் பதிவைத் த. ம.விலிருந்து அகற்றினால் போதும்.

நன்றி.
========================================================================================
நண்பர் வலிப்போக்கன், ‘கடவுளின் கடவுளையே புலம்ப வைத்த ..நான் மணி யார்???’http://valipokken.blogspot.com/2016/09/blog-post_18.html என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். நான் ‘புலம்பல்’ செய்திருப்பதாக நகையாடவும் செய்திருக்கிறார்.

அந்தப் பதிவுக்கான பின்னூட்டமாக, என் கருத்தை அப்பதிவில் பதிவு செய்திருக்கிறேன். ஒப்புதலுக்குப் பின்னர் அது வெளியிடப்படும் என்னும் குறிப்பு வெளியாகியுள்ளது.

அது வெளியிடப்படுமா இல்லையா என்பதை அறிய இயலாத நிலையில்......

அக்கருத்தை இங்கு பதிவு செய்கிறேன்.

வலிப்போக்கனின் பதிவுக்கான பின்னூட்டம்:

நண்பரே,

நான் உங்களைத் திட்ட வரவில்லை. இப்போதும் நல்ல நண்பராகத்தான் நினைக்கிறேன்.

என் பதிவின் நோக்கத்தைப் புறக்கணித்து, மறுப்பெழுதத் துப்பில்லைய்யா, இயலவில்லையா என்று கேட்கிறீர்கள்.

அவ்வாறே வைத்துக்கொள்ளுங்கள்.

என் பெயரைப் ‘பசி ராமசாமி’ என்று மறைமுகமாகச் சுட்டத் தேவையில்லை; நேரடியாகப் ‘பசி’பரமசிவம் என்றே குறிப்பிடுங்கள். விரும்பினால் தலைப்பைத் திருத்தலாம்.

தமிழ் இனம் இழிவுபடுத்தப்படக்கூடாது என்ற எண்ணத்தில்[நான் மணி ஒரு கன்னடர் என்னும் நம்பிக்கையில்] மட்டுமே எழுதப்பட்டது என் பதிவு என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். வேறு எந்தவொரு சார்பும் குழுத் தொடர்புகளும் எனக்கு இல்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை.

நீங்களும் தமிழின உணர்வு மிக்கவர் என்பதை உங்களின் பழைய பதிவுகளின் வாயிலாக உணர்ந்திருக்கிறேன். அத்தகைய நீங்களே என்னை எள்ளி நகையாடியிருப்பது எனக்கு வருத்தம்தான்.

உங்களுக்கும் ‘நான் மணி’க்கும் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருப்பதை என்னால் உணர முடிகிறது.

சாதிக்க இயலாதபோது புலம்புவது என் இயல்புதான்.

உங்களின் இந்தப் பதிவின் மூலம், உங்களைப் போலவே ‘நான் மணி’யும் ஒரு தமிழரே என்பதை என்னால் உணர முடிகிறது.

ஆக, முனைப்புடன் செயல்படும் தமிழர்களை[இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது] எதிர்த்து நான் செயல்படுவதா? அது தேவையா?  தனித்து இயங்கும் என்னால் சாதிக்க இயலுமா?

நிச்சயம் இல்லை.

புலம்புவதைப் பழக்கமாகக் கொண்ட நான், இனியும் தமிழ் தமிழன் என்று புலம்புவதை நிறுத்திக்கொள்கிறேன். தமிழ்மணத்திற்கு வைத்த கோரிக்கை ஏற்கப்படும் என்பதிலும் 100% எனக்கு நம்பிக்கை இல்லை. பயனற்றுப் போகவிருக்கும் இப்பதிவை என்ன செய்வது என்பது குறித்தும் யோசிக்கிறேன்.

உங்கள் பதிவின் மூலம், எதைச் சாதிக்க நினைத்தீர்களோ அதைச் சாதித்துவிட்டதாக நினைத்து மகிழுங்கள். 

நன்றி...நன்றி வலிப்போக்கன்.



வெள்ளி, 16 செப்டம்பர், 2016

'கர்னாடகா கலவரம்’ -கர்னாடகத்தில் வாழும் எழுத்தாளர் வாஸந்தியின் கருத்து

வாய்ப்புக் கிடக்கும்போதெல்லாம் அங்குள்ள தமிழருக்கு எதிராக அராஜகத்தில் ஈடுபடும் கன்னடத்தாரின் உள்நோக்கம் புரியாமல், இப்போதைய கலவரம் குறித்து ‘நடுநிலை வாதம்’ புரிவோர் கவனத்திற்கு இப்பதிவு.
’தி இந்து[16.09.2016]வில் வெளியான எழுத்தாளர் வாஸந்தியின் கட்டுரை:

நீர் என்பது உணர்வுபூர்வமான விஷயம். வெறுப்பைக் கக்கும் அபாயம் அதனுடன் பிணைந்திருப்பது; ‘தமிழனுக்கு ஒரு சொட்டு நீர் கிடையாது’ என்கிற வாட்டல் நாகராஜின் வாக்கியம் வெறியேற்றுவது.

ஆனால், கன்னட அமைப்புகளே திகைக்கும் வகையில் பிரச்சினை சென்ற வாரம் கைமாறி, தீயாய்ப் பரவி, மாநிலத்தை, அதன் கௌரவத்தைப் பொசுக்கிற்று. ஊரடங்குச் சட்டம் போடும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமான பெங்களூரு  ரணகளமாகிப் பற்றி எரிந்தது.

தொலைக்காட்சிப் பதிவுகளைப் பார்க்கும்போது, காட்சிகள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடக்கும் கலவரத்தைவிட மோசமானதாக வயிற்றைக் கலக்கியது. 40 வாகனங்களுக்கு மேல்[100க்கும் மேல் என்பது பின்னர் வந்த ஊடகச் செய்தி] தீக்கிரையாகிப்போனது நம்ப முடியாத அராஜகமாகத் தோன்றியது. அவர்களை அடக்க நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இரண்டுபேர் மரணமடைந்தார்கள். அவர்கள் அப்பாவிகள் என்று செய்தித்தாள் சொல்கிறது. 

அதை ஊதிப் பெருக்குவது அரசியல் மட்டுமல்ல, பெங்களூருவின் பொருளாதார வரைபடத்தை அலைக்கழிக்கும் சமூகவியல் காரணங்களும்தான்.

[பெங்களூருவில்] வன்முறை என்பது கடந்த 30 ஆண்டுகளாகத்தான். 

தமிழ்நாட்டுப் பேருந்துகளைச் சுட்டுப் பொசுக்கியவர்களுக்கும் காவிரிப் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் இதில் இருக்கும் நகை முரண். தலைக்குத் தலை அம்பலமாக, சட்டத்தைக் கையில் எடுத்து ராட்சச வெறியுடன் அலைந்தவர்கள் எல்லாம் கன்னட இளைஞர்கள். 

அவர்கள் விவசாயம் பொய்த்துப்போன கிராமப் பகுதியிலிருந்து வேலை தேடித் தொழில்நுட்பத் தலைநகரான பெங்களூருவுக்கு வந்தவர்கள். ஆட்டோ ஓட்டிகள், பெட்ரோல் பங்கில் வேலை செய்பவர்கள், வேலை கிடைக்காமல் அலைபவர்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பெங்களூரு இப்போது இல்லை.

எங்கள் குடும்பம் ஐந்து தலைமுறைகளாக கர்னாடகத்தில் வசிக்கிறது. என்னுடைய தாயும் அவருடன் பிறந்தவர்களும் கன்னடம்தான் படித்தார்கள். என்னுடைய பாட்டி பிசிபேளா ஹூளிஅன்னாவையும் ஒப்பட்டுவையும் செய்து, யுகாதியை, கன்னட வருடப் பிறப்பைக் கொண்டாடுவார். தமிழரும் கன்னடியரும் வெகு இணக்கமாக இருந்த காலம். தமிழர்கள் கன்னட சமூகத்துடன் ஒன்றியிருந்த காலம்.

முகம் மாறிய கன்னடம்

இப்போதிருக்கும் பெங்களூரு தகவல் தொழில்நுட்பத் தலைமுறைக்கும் கன்னடியருக்குமே ஒட்டுறவு இல்லை. தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சி கன்னட முகத்தையே மாற்றிவிட்டது. பூங்காவிலும் மால்களிலும் திரையரங்குகளிலும் கன்னட மொழி காதில் படுவதில்லை. அவர்களுக்கு விளங்காத ஆங்கிலமும் இந்தியும்தான் ஒலிக்கின்றன.

வறண்ட கிராமங்களிலிருந்து வேலை தேடி பெங்களூரு வந்து வேலை கிடைக்காமல் திண்டாடும் இளைஞர்கள், எல்லா வேலை வாய்ப்புகளையும் வெளி மாநிலத்தவர் அபகரித்துவிட்டதாகக் கருத ஆரம்பித்தனர். தங்கள் வயதொத்த வாலிபர்கள், யுவதிகள் மாதத்துக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் வாங்குவதாகக் கேள்விப்படுகிறார்கள்.

பெங்களூருவின் நிலத்தையெல்லாம் வெளியூர் ஆட்கள் வாங்கி அடுக்குமாடி கட்டுகிறார்கள். தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்த ஓர் ஆண்டுக்குள் ஃபிளாட் வாங்குகிறார்கள். கப்பல் போல வாகனம் வாங்குகிறார்கள்.

அவர்கள் வருகையால் அடுக்கு மாடிகள் பெருகிவிட்டன. நிலம் நீர் வரண்டுவிட்டது. குடிசைப் பகுதிகளில் தண்ணீர்ப் பஞ்சம் இருக்கும்போது, பணம் உள்ளவர்களுக்கு டாங்கரில் நீர் செல்கிறது.

கோபத்தின் வடிகாலா அராஜகம்?

பெங்களூருவின் ஒரு பகுதி அக்கினிக் குண்டமாக மாறிவருவதைச் சமூகவியலாளர்கள் கவலையுடன் கவனித்துவருகிறார்கள். கன்னட நடிகர் ராஜ்குமார் இறந்த அன்றும் மறுநாளும் இப்படித்தான் ஒரு வெறியாட்டம் நடந்தது. துக்கம் கோபமாக, வெறியாக உருப்பெற்றது. பன்னாட்டு நிறுவனங்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. தமிழ்நாட்டு வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

நான் அப்போதுதான் சென்னையிலிருந்து அங்கு குடிபெயர்ந்திருந்தேன். தமிழ்நாட்டுப் பதிவெண் உடைய என் காரை காரேஜில் மூடி வைக்க வேண்டியிருந்தது.

இந்த வெறியர்களுக்கு எந்த உணர்வுபூர்வமான விஷயமும், அவர்களது உள்ளார்ந்த கோபத்துக்கு வடிகாலாகிவிடுவதுதான் சோகம். இது வெறும் நீர்ப் பிரச்சினை இல்லை. ஒரு சமூகவியல் பிரச்சினை. அதன் தீவிரத்தை உணராமல் கன்னட அமைப்புகளும் அரசுகளும் அரசியல் செய்தால் கர்னாடகத்துக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ஆபத்து. ஜனநாயகப் பண்புகளுக்கு ஆபத்து.
===============================================================================
வருகை புரிவோர் மிக எளிதாகக் கட்டுரையை வாசிப்பதற்குப் பத்திகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளேன். சில கருத்துகளின் அதி முக்கியத்துவத்தை அறிவதற்காக அவற்றிற்கு வண்ணம் சேர்த்துள்ளேன்.

கட்டுரையின் ஆசிரியரும் பிரபல எழுத்தாளருமான ‘வாஸந்தி’ அவர்கள் என்னை மன்னித்திட வேண்டுகிறேன்.

அவருக்கும் கட்டுரையை வெளியிட்ட, ‘தி இந்து[ 16.09.2016]’வுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்.

வியாழன், 15 செப்டம்பர், 2016

கர்னாடகக் கலவரம் குறித்த, கவிஞர் முத்துநிலவனின் கருத்துடன் சில முரண்பாடுகள்

‘கர்னாடகாவில் நடக்கும் வன்முறைக்கு எதிர்வினை புரியாமல் தமிழ்நாடு அமைதி காப்பதா என்று நம்மவர் சிலர்[அவர்களில் நானும் ஒருவன்தான்] ஷோல்டரைத் தூக்குகிறார்கள்’என்று, ‘பெங்களூரு - இன்னா செய்தாரை ஒறுத்தல்...?’ என்னும் தலைப்பிலான பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் முத்துநிலவன் அவர்கள்.
கர்னாடகாவில் காலங்காலமாக நம் இனத்தான் அடிஉதை படுவதைப் பொறுக்கமாட்டாமல் நம்மில் சிலர்[சிலர் மட்டுமே] ஷோல்டரைத் தூக்குவது கவிஞருக்கு  இளக்காரமாகப்படுகிறது.

"தமிழா எழு! கன்னட வெறியரை வீழ்த்த எழு” என்று சூளுரைப்பவர்களைத் ‘தமில்க்கவிஞர்கள்’ என்று கிண்டலடிக்கிறார்!

இருக்கட்டும். இவ்வகையில் அவர் மகிழ்ச்சி பெறுவதைத் தடுக்க நாம் யார்?

பதிலடி தருவதென்றால் என்னவெண்று புரியவில்லை என்கிறார். உண்மையிலேயே புரியவில்லையா?!

இங்கே நம்மவர் ஒரு சில வாகனங்களை மட்டுமே சிதைத்த மறு நாளே கன்னடத்தான் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளுக்கும் லாரிகளுக்கும் தீயிட்டுக் கொளுத்தியதோடு, ஓட்டுநர்களை அம்மணமாக்கியும் கைகூப்பிக் கெஞ்ச வைத்தும் துடிக்கச் செய்தானே அதுக்குப் பேர்தாங்க ‘பதிலடி’. 

அறிவிலித்தனத்துக்குப் பதிலடியாக நாமும் அறிவிலிகள் ஆகக் கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறார் முத்துநிலவன் அவர்கள்.

தமிழன் இதற்கு முன்பு[இப்போது அறிவிலி ஆனதாகவே வைத்துக்கொள்ளுங்கள்] எப்போதாவது அறிவிலி ஆகியிருக்கிறானா என்பது பெங்களூரின் பழைய வரலாற்றைப் புரட்டினால் தெரியும். 

பெங்களூரில் என் மகன் 20 ஆண்டுகளுக்கு மேலாகக் குடும்பத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறான். மிகப் பலமுறை அங்கு சென்று திரும்பிய அனுபவம் எனக்கு உள்ளது[உடனடியாக என் புகைப்படத்தை இந்த வலைப்பக்கத்திலிருந்து நீக்க வேண்டும். காரணம் பயம்தாங்க]. அப்போது பெற்ற அனுபவங்களுடன் கேட்டறிந்த/ படித்தறிந்த தகவல்களைக் கொண்டு இதை எழுதுகிறேன்.

1991இல் இன்றைய முதல்வரும் அப்போதைய முதல்வருமான செல்வி ஜெயலலிதா அவர்கள், இதே காவிரிநீர்ப் பிரச்சினைக்காக உண்ணா நோன்பு[அமைதியான முறையில்] மேற்கொண்ட போது, அங்கே மிகப் பெரும் கலவரம் மூண்டது. அதன் விளைவுகளை, கவிஞர் மேற்கோள் காட்டியிருக்கும் பிரபல எழுத்தாளர் வா. மணிகண்டன் அவர்களே வர்ணித்திருக்கிறார். படியுங்கள்[மணிகண்டன் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்].....

#தொண்ணூறுகளில் காவிரிப் போராட்டம் தலையெடுத்த போது கோபியில் வசித்தவர்களுக்கு அதன் ஆழ அகலங்கள் தெரிந்திருக்கும். தஞ்சை வாசிகளுக்கும் தெரிந்திருக்கக் கூடும். போலீஸ் தடியடிகளிலும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயந்து ரத்தம் தெறிக்க ஓடியவர்களையும் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. தோட்டமும் காடும் சல்லிசாகக் கிடைக்கிறது என தாளவாடி மலையைத் தாண்டிச் சென்று கன்னட தேசத்தில் பயிர் செய்தவர்கள் அறுவடைச் சமயத்தில் அத்தனையையும் விட்டுவிட்டு ‘தப்பித்தால் போதும்’ என்று இரண்டு மூன்று துணிமணிகளை வாரியெடுத்துக் கொண்டு வந்த கதையெல்லாம் இன்னமும் பண்ணாரி காட்டு காற்றில் ஒலித்துக் கொண்டேதான் இருக்கின்றன# http://www.nisaptham.com/2016/09/blog-post_6.html

இந்தக் கலவரம் மூள்வதற்கு முன்போ பின்போ தமிழன் அறிவிலியா நடந்துகொள்ளவில்லை; புத்திசாலியாகத்தான் நடந்துகொண்டான்; அதன் விளைவாக, அடிஉதை பட்டதோடு ஏராள பொருள் இழப்புக்கும் ஆளானான் என்பதை நண்பர் அறியவில்லை போலும். நாதியற்று உதைத்து விரட்டப்பட்டவர்களில் என் உறவினர்கள்/ ஊர்க்காரர்கள் சிலரும் அடங்குவர் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியின் போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் குடிநீத் தேவைக்கான திட்டம் வகுக்கப்பட்டுச் செயல்படுத்த முயன்றபோதுகூட, தமிழன் புத்திசாலியாகத்தான் நடந்துகொண்டான். கன்னடத்தான், வழக்கம்போல, அடி உதை என்று ஆரம்பித்த நிலையில்தான், தமிழக இளைஞர்கள் சிறு சிறு தாக்குதல்களைத் தொடங்கினார்கள்.

தமிழினத் தலைவரான கலைஞர்,  “அவர்களும் நாமும் சகோதரர்களே” என்பதாக அறிக்கைகள் விட்டு, முளைவிட்ட போராட்டத்தை ஆரம்ப நிலையிலே வேரோடு கிள்ளி எறிந்துவிட்டார்கள்; நடுவணரசு தலையிட்டால் தன் பதவி பறிபோகும் என்று பயந்துவிட்டதாக நான் சொல்லவில்லை.

அடுத்து,

நீங்கள் மேற்கோள் காட்டுகிற எழுத்தாளர் வா. மணிகண்டனின் பதிவுகளிலிருந்தே கன்னடர்களின் மனப்போக்கைப் படம் பிடிக்கிற சில கருத்துகளையும் இங்கே தருகிறேன்.

#...கன்னட பதிவு எண் கொண்ட ஈருருளியில் சென்றிருந்தேன்..... 
....வீட்டில் நிற்கும் கார் ஞாபகம் வந்தது. தமிழ்நாட்டு பதிவு எண் வண்டி அது. எலெக்ட்ரானிக் சிட்டியில் அந்தப் பையனை இறக்கிவிட்டு வந்து பதிவு எண் வெளியில் தெரியாதபடிக்கு மூடி வைத்துவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினேன். நாளைக்கு முதல் வேலையாக வீட்டில் கன்னட கொடி ஒன்றை நட்டு வைக்க வேண்டும்.

விவசாய பூமிகளை அழிப்பதும், டிராக்டர்களை அடித்து நொறுக்குவதும், தமிழ் விவசாயிகளின் கால்நடைகளை நாசம் செய்வதும் நிகழ்ந்தால் அவர்களின் ஒட்டு மொத்த வாழ்வாதாரமும் கரைந்து போய்விடும்# http://www.nisaptham.com/2016/09/blog-post_6.html

இப்படியெல்லாம் மணிகண்டன் அவர்களைச் சொல்ல வைத்தது எது? அவர் பெற்ற அனுபவங்களா, கேட்டறிந்த தகவல்களா?

அவர்,  தம்முடைய இன்னொரு  பதிவில்,

#டிரினிட்டி மெட்ரோ நிலையத்திற்கு முன்பாக லிவிங் ஸ்மைல் வித்யா அமர்ந்திருந்தார். போக்குவரத்து வசதி இல்லாமல் அமர்ந்திருக்கிறாரோ என நினைத்துப் பேசினேன் ‘அய்யோ தமிழில் பேசாதீங்க’ என்று சிரித்தபடியே சொன்னார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அங்கு ஓரிடத்தில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாரக்ளாம். அதிகமாகப் பேசிக் கொள்ளாமல் நகர்ந்துவிட்டேன்#  என்கிறார். http://www.nisaptham.com/2016/09/blog-post_84.html

இந்த அச்ச உணர்வு அங்குள்ள தமிழர்களுக்கு எப்போதும் உண்டுதானே? வேறு எந்தவொரு மாநிலத்திலும் வேறு எந்தவொரு இனத்தானும் இப்படியொரு இழிநிலைக்கு ஆளாகியிருக்கிறானா? இல்லையே!

தமிழில் பதிவெண் கொண்டிருந்த என் மகனின் கார் ஒரு பைக்கின்மீது உரசிச் சிறு சேதம் விளைவித்ததற்காகக் கார்க் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியது ஒரு கன்னட வெறிக் கும்பல். போலீசுக்கும் போகவில்லை. போனால் உதைப்பான் என்ற பயம். பயம் தவிர வேறில்லை. இந்தப் பயம் அங்குள்ள தமிழருக்கு எப்போது இருந்துகொண்டிருக்கிறது என்பதை நண்பர் மணிகண்டன் அறிவார் என்று நம்புகிறேன்.

இந்தப் பயம் தமிழனின் மனதில் நிரந்தரமாய் இடம்பெற்றுவிடக் காரணமானது தமிழனின் அறிவின்மையா, கர்னாடகத்தானின் தமிழன் மீதான பொறாமையா?

பம்பாயில் தமிழன் தாக்கப்பட்டபோதுகூட,  அறிவிலியாகத் தமிழன் நடந்துகொள்ளக்கூடாது என்று  அகிம்சாவாதிகள் தமிழனுக்கு அறிவுரை சொல்லியிருப்பார்கள். அதனால்தான் அவன் எதிர்த்துப் போராடவில்லை; அடி உதை பட்டே பழகிவிட்டான்.

தமிழில் பெயர்ப்பலகை வைக்கக் கூடாது; புதிய திரைப்படம் குறிப்பிட்ட நாட்கள் வரை வெளியிடக்கூடாது என்பன போன்ற கட்டுப்பாடுகளைத் தமிழன்மீது கன்னடத்தான் திணித்திருப்பது வேறு எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அட்டூழியம். கட்டுப்படுத்தும் துணிவு அவனுக்கு எப்படி வந்தது?

எதிர்வினை இல்லை என்பதால்தான்.

அந்த எதிர்வினையை அங்குள்ள தமிழனால் நிகழ்த்த முடியாது என்பது உண்மைதான். அங்குள்ள அத்தனை அரசியல்வாதிகளும், ஆட்சி புரிபவர்களும் இன வெறியர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பதே காரணம். இங்கோ காந்திய நெறி பரப்புவோரின் அகிம்சா போதனை!

தமிழ் இளைஞனைக் கன்னடத் தடியர்கள் அடித்து மண்டியிட வைத்ததே இந்தக் கலவரங்களுக்கான மூல காரணம். எவரும் மறுக்க முடியாது. நடிகர்களைக் கிண்டல் செய்ததால்தான் அடித்தார்கள் என்று சமாதானப்படுத்துவது எவ்வகையில் நியாயம்?

நம்மில் சிலர், அடித்தவனை அங்கே போய் அடிக்க வேண்டுமே தவிர இங்குள்ளவர்களைத் தாக்கக் கூடாது என்கிறார்கள். இங்கிருந்து பல்லாயிரக்கணக்கில் திரண்டுபோய், போலீசாரின் கட்டுக்காவலையும் கடந்து, குற்றவாளிகளைத் தேடிப்பிடித்துத் தண்டிப்பது சாத்தியமே இல்லை என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள் அதனால், கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க முடியுமா? அது தமிழனின் தன்மானத்தைப் பாதிக்காதா?

இவ்வாறெல்லாம் சிந்தித்ததன் விளைவுதானோ என்னவோ, நம் இளைஞர்கள் லேசான தாக்குதலைத் தொடங்கினார்கள். பெருந்தன்மையாளர்களின் அறிவுரை /அறவுரை அவர்களையும் முடக்கிவிட்டது.

அறிவுரைகளும் அறவுரைகளும் தேவைதான். யாருக்கு?

உதைபடுபவனுக்கல்ல; உதைப்பவனுக்குத்தான்.

கீழ்க்காணும் முகவரி கொண்ட பதிவையும் படியுங்கள். பதிவருக்கு என் நன்றி.
ttps://villavan.wordpress.com/2016/09/15/கர்நாடகாவிடம்-இருந்து-நா/
=================================================================================
கன்னடர் நிலையை ஆதரித்து ‘நான் மணி’ என்பவர், நீண்ட பதிவொன்றை எழுதியிருக்கிறார்; ‘தொடரும்...’ போட்டிருக்கிறார். [முகவரி தர விரும்பவில்லை]

இதற்கான துணிவை இவர்[எந்த இனத்தவரோ தெரியாது] பெற்றது எவ்வாறு என்பது ‘இன்னா செய்தாரை ஒறுத்தல்...’என்னும் குறளை மேற்கோள் காட்டும் நண்பர்களுக்குப் புரியாதா என்ன?!

ஜெய் கன்னடர்! ஜெய் கர்னாடகா!!
================================================================================
ஒரு முறை மட்டுமே பிழை திருத்தம் செய்தேன். பிழை காணின், வழக்கம்போல் பொறுத்தருள்க.