எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

ரவுடி படப்பைக் குணாவுக்கு நம் வாழ்த்துகள்!!!

8 கொலைகள், 11 கொலை முயற்சிகள், கொள்ளை, ஆள்கடத்தல் என்று 48 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி படப்பை குணா, ‘பாஜக’வில் இணைந்து மாவட்ட அளவிலான ஒரு பதவியைப் பெற்றிருப்பது பற்றி ஊடகங்கள் பலவும் பரபரப்பூட்டும் செய்திகளை வழங்கிவருகின்றன.

பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட... படும் ஒரு பக்கா ரவுடி மாவட்ட அளவில் பதவி பெற்றது குறித்துப் பாஜக தொண்டர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது விசயம் பிரதமர் மோடிக்குத் தெரியாதா என்றால் அவசியம் தெரிந்திருக்கும்.

தெரிந்திருந்தும் இவனுக்கு இவருக்குப் பதவி வழங்கப்பட்டதை மோடி அனுமதித்திருப்பது அநியாயம், அக்கிரமம் என்றெல்லாம் கொந்தளித்துக் கூக்குரல் எழுப்புவோர், பல குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தாலும், எந்தவொரு வழக்கிலும் படப்பையார்[உலகமகா புத்திசாலி] மீதான எந்தவொரு குற்றமும் இந்நாள்வரை நிரூபிக்கப்படவில்லை என்பதை நினைவுகூரத் தவறிவிட்டார்கள். பெரும் பெரும் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பொதுமக்களின் பழிப்புரைகளை அலட்சியப்படுத்துபவர் களாகவும், காவல்துறையின் ‘கவனிப்பு’களுக்கு அஞ்சாத இரும்பு நெஞ்சம் படைத்தவர்களாகவும் இருப்பதை நாம் மறந்துவிடுதல் கூடாது.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தப் படப்பைக் குணா.

இவர் கவுரவிக்கப்பட்டதை அடுத்து.....

குற்றங்கள் பல புரிந்து காவல்துறையின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்துகொண்டிருக்கும் பக்கா ரவுடிகள் பலரும், படப்பையாரின் பரிந்துரை பெற்று மோடியாரின் ஆசீர்வாதத்துடன் ‘பாஜக’வில் இணைவார்கள் என்பது உறுதி.

கடத்தல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி என்று அவர்கள் செய்த குற்றங்கள் பட்டியலிடப்பட்டு, தகுதி நிர்ணயம் செய்யப்பட்டு, அவரவர் தகுதிக்கேற்ப மாவட்ட அளவிலோ, வட்ட அளவிலோ பதவிகள் வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்படுவார்கள் என்பது நிச்சயம்.

‘பாஜக’வின் வாழ்நாள் விசுவாசிகளாக மாறும் அவர்கள், தேர்தல் பணிகள் தொடங்கியவுடன், வெற்றி வாய்ப்புள்ள மாற்றுக் கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தி வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவிடாமல் தடுப்பார்கள்.

அவர்களின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் எதிராளிகள் போட்டியிடும் தொகுதிகளில், வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல், வாக்குப் பெட்டிகளைக் கடத்துதல் போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபட்டு, மறு வாக்குப்பதிவின் மூலம் ‘பாஜக’ வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புக்குப் பேருதவி செய்வார்கள்.

இதன் மூலம், திராவிடக் கட்சிகள் முற்றிலுமாய் முடங்கிப்போக, தமிழ்நாட்டில் ‘பாஜக’ ஆட்சியைக் கைப்பற்றும் நிலை உருவாகும்.

லகில் முதன்முதலாக, ரவுடிகளுக்குக் கட்சியில் உயர் பதவிகள் கொடுத்து, தேர்தல்களில் தொடர் வெற்றிகளைக் குவித்த வரலாற்று நாயகன் என மோடியை ஒட்டுத்த உலகமும் போற்றிப் புகழும். இது 1000% உறுதி!