எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

கலைஞர் மறைவும் காலம் கடந்த விருதும்!!

#'தன்னிகரில்லாத் தலைவர் கருணாநிதி..... எழுத்தாற்றலும் சொல்லாற்றலும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற ஒரே மக்கள் தலைவர்; 'குறளோவியம்', 'தொல்காப்பியப் பூங்கா', 'சங்கத் தமிழ்', 'ரோமாபுரிப் பாண்டியன்', 'பொன்னர் சங்கர்' போன்ற அவரின் படைப்புகள் சாகாவரம்  பெற்றவை.

5 முறை தமிழக முதல்வராக இருந்து அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியவர்; கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் தமிழகச் சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.

திராவிட இயக்கத்தின் ஆணிவேரான சமூக நீதி தழைப்பதற்காகப் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர்.

பெண்களுக்குச் சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என எண்ணற்ற சமூக நலத்திட்டங்களைச் செயபல்படுத்தித் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியவர். மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய தலைவரான கருணாநிதிக்கு நடுவணரசு நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருதை வழங்கிச் சிறப்பித்தல் வேண்டும்.#

மேற்கண்டவகையில் பாராட்டுக்குரிய ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ம.தி.மு.க. தலைவர் 'வைகோ' அவர்கள்[மேலும் சில தலைவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்]. 

விருது வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதற்கென்று குழு அமைக்கப்பட்டிருப்பதாகப் 'பாசக' தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் அவர்களும் அறிவித்திருக்கிறார்.

வைகோ குறிப்பிட்டிருப்பது போல, 'பாரத ரத்னா' விருது பெறுவதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

இந்த விருது, ராஜாஜி, சி,வி,ராமன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அவர்கள் உயிர்வாழ்ந்த போதே வழங்கப்பட்டிருக்கிறது. இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கும் அடல் பிகாரி வாஜ்பேய் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

'மதன்மோகன் மாளவியா'வுக்கு, அவரின் மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டது.

இம்மாதிரி விருதுகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம், விருது பெறுபவர்களின் சேவையைப் பாராட்டுவதுதான்; நாடு அவர்களுக்கான தன் நன்றிக்கடனை வெளிப்படுத்துவதற்காக என்றும் சொல்லலாம். இதன் மூலம் விருது பெறுபவர் தொடர்ந்து சேவை புரிவதற்கான கூடுதல் ஊக்கத்தைப் பெறுகிறார்[சிலருக்கு இவை தேவையற்றனவாகவும் இருத்தல்கூடும்].

எனவே, சேவை புரிபவர் உயிர் வாழும்போதே விருது வழங்குவது மிக்க பயன் தருவதாக அமையும்.

கலைஞர், தம் மறைவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே 'பாரத ரத்னா' விருதைப் பெறுவதற்கான முழுத் தகுதியும் பெற்றவராக இருந்தார். இதை நடுவண் ஆட்சியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் அறிவார்கள்.

கலைஞர் காலமாவதற்கு முன்பே இவ்விருது வழங்கப்பட்டிருந்தால் அது போற்றுதலுக்குரியதாக அமைந்திருக்கும். இப்போதைய நடவடிக்கை காலம் கடந்த ஒன்று[விருது பெறுவதற்கான தகுதி பெற்ற ஒருவர் எதிர்பாராத வகையில் இறந்துபடுவாரேயானால் இறப்புக்குப் பின்னர் விருது வழங்குவதில் தவறில்லை].

பாரத ரத்னா பதக்கத்தில், அரச மர இலையில் சூரியனின் உருவமும் 'பாரத ரத்னா' என்னும் சொல்லும் இடம்பெற்றுள்ளன.  அச்சொல் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. பதக்கத்தின் மறு பக்கத்திலும் அதுவே இடம்பெற்றுள்ளது.

விருது பெறுபவரின் தாய்மொழியில் அது எழுதப்படுதல் வேண்டும். பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளின் பெயர்களும் விருது பெறுபவரின் தாய்மொழியிலேயே அமைவது மிக அவசியம்[தேசிய கீதத்தைக்கூட அவரவர் தாய்மொழியில் மொழியாக்கம் செய்து பாடுவதற்கு அனுமதித்தல் வேண்டும்]. இந்தியா ஒரு தேசம் என்பதற்காக மற்ற மொழிகளைப் புறக்கணித்து இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்தும் வழக்கத்தை நடுவணரசு கைவிடுதல் நாட்டு நலனுக்கு நல்லது.

மறைந்த கலைஞருக்கு[பெறுவோரிடம்]ப் 'பாரத ரத்னா' என்னும் இந்திச் சொல் தாங்கிய பதக்கம் வழங்கப்படுமேயானால், கலைஞர்[ஆவி வடிவில் அலைவது சாத்தியம் என்றால்] மட்டுமல்ல, அந்நிகழ்வை ஊடகங்கள் வாயிலாகக் காணுகிற அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் மிக வருந்தும் என்பதை நடுவண் ஆட்சியாளர்கள் உணர்தல் வேண்டும்.
=======================================================================