வியாழன், 4 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம் பிரச்சினை... நயினார் பக்தியை மெச்சி ஓடோடி வந்து உதவிய இறைவன்!!!

"திருப்பரங்குன்றம் வழக்கில் இன்று வந்திருப்பது இறைவனின் தீர்ப்பு” என்று சற்று முன்னர், ஊடகவியலாளர் பேட்டியில் நயினார் நாகேந்திரன் கூறினார்[ராஜ் தொ.கா].

மனிதர்களுக்கு இடையேயான வழக்கில்[தி.ப.குன்றம் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது] இறைவனே முன்வந்து தீர்ப்பளித்தது இதுவரை உலகம் கண்டிராத அதிசய நிகழ்வாகும்.

குறிப்பாக, தமிழர்களுக்கிடையேயான வழக்கில் இறைவன் தீர்ப்பளித்தது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் பரவசத்தில் ஆழ்த்துகிறது.

ஒரு தமிழனாக நாமும் பரவசப்படுகிறோம். நயினார் நாகேந்திரன் அவர்களிடம் ஒரு கோரிக்கையையும் சமர்ப்பிக்கிறோம்.

நயினார் அவர்களே, 

நீங்கள் 100% உண்மையான பக்தர் என்பதால்தான் இறைவனே தாமாக முன்வந்து உதவியிருக்கிறார்.

ஆகவே, இனியும் இந்தியாவெங்கும் உள்ள இது மாதிரியான வழக்குகளில் உதவுமாறு, பரிசுத்தப் பக்திமானான நீங்கள் வேண்டிக்கொண்டால், சந்தேகத்திற்கு இடமின்றி இறைவன் மனமுவந்து உதவி செய்வார்.

வேண்டிக்கொள்ளுங்கள் நயினார்.

உங்கள் வேண்டுதலுக்குப் பிறகு இந்த மண்ணில் நீதிமன்றங்களின் தேவையே இல்லாமல்போகும். இவற்றிற்காக அரசு கோடிக்கணக்கிலான ரூபாய் செலவிடுவது தவிர்க்கப்படும்.

இனியும் தங்களின் மக்கள் பணி சிறக்க மனமுவந்த வாழ்த்துகள்!

‘ஏவிஎம்’ சரவணன்> நேற்று பிறந்த நாள் கொண்டாட்டம்> இன்று உயிரிழப்பு... நல்ல சாவு!

பெரும் செல்வந்தராயினும் தன்னடக்கம் என்னும் உயரிய பண்பினராக வாழ்ந்தவர் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்கள். இரு கைகட்டி, சற்றே தலை தாழ்த்தி, அடங்கி ஒடுங்கிய கோலத்தில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை வழக்கமாக்கிக்கொண்ட பெருந்தன்மையாளர் அவர்.

அவரின் இறப்பு வருந்தத்தக்கது என்றாலும் இது இயற்கை நிகழ்வுதான் என்பதை நினைவுகூர்ந்து ஆறுதல் பெறலாம்.

“அடுத்த பிறவியில் என்னவாகப் பிறப்போம்? சொர்க்கமா நரகமா செத்த பிறகு நமக்கு வாய்க்கவிருப்பது எது?” என்றெல்லாம் புலம்பிக்கொண்டிராமல், ஆயுள் முழுவதும் இயன்றவரை நல்லவராக வாழ்ந்து, நோய்நொடிகளின் தாக்குதல் இல்லாமல், அமைதியான மனநிலையில் மரணத்தைத் தழுவுவதே விரும்பத்தக்கதாகும்.

அத்தகையதொரு நல்ல மரணம் ‘ஏவிஎம்’ சரவணன் அவர்களுக்கு வாய்த்துள்ளது.

இன்று அதிகாலை ‘மரணம்’ தழுவிய அவர், நேற்று ‘பிறந்த நாள்’ விழா கொண்டாடினார்* என்னும் ஊடகச் செய்தி அதை உறுதிப்படுத்துகிறது.

*https://cinema.vikatan.com/kollywood/tamil-cinema-producr-avm-saravanan-passed-away