வெள்ளி, 29 டிசம்பர், 2017

அவர்கள் புத்திசாலிகள்! நாம்.....?!

'கோயில்களைக் கட்டியவர்கள் மனிதர்கள். நான்கு வாசல்கள் வைத்து, அவற்றிற்குப் பிரமாண்டக் கதவுகளை நிறுவி, ஒரு கதவை ஆண்டு முழுக்க அடைத்துவைத்து ஒரு நாள் மட்டும் திறந்துவிட்டு, அதில் புகுந்து வெளியேறினால் செத்த பிறகு சொர்க்கம் போகலாம்' என்று கதைகட்டியவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் புத்திசாலிகள். நம்புகிறவர்கள்?

#வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி, திருச்சி ஸ்ரீரங்கம், சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் இன்று (29ம் தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. கோவில்களில் கோவிந்தா கோஷத்துடன் மக்கள் பக்தி பரவசத்தில் மூழ்கினர்

மாதந்தோறும் கடை பிடிக்கப்படும் ஏகாதசியில் உபவாசமிருந்து, பெருமாளைப் பக்தர்கள் வணங்குவர். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி வைகுண்டத்தில் பின்பற்றப்படும் ஏகாதசி. அதனால் பூலோகத்தில் அன்று ஒரு நாளைக்கு மட்டும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதன் வழியே பக்தர்கள் கடந்தால் மோட்சம் கிட்டும் என்பது ஐதீகம். அதனால் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படுகிறது# -இது இன்றைய செய்தி[www.dinamalar.com/news_detail.asp?id=1928597

இது குறித்த கதை.....

//ஒருமுறை, பிரளயம் முடிந்த நேரம். சிருஷ்டிக்காக பிரம்மாவை தமது நாபிக் கமலத்திலிருந்து வரச் செய்தார் திருமால். 

சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மாவுக்கோ தன்னைப் பற்றி ஏக கர்வம். கர்வத்தை அடக்குவதற்காகத் தம்முடைய காதுப் பகுதியிலிருந்து லோகன், கண்டகன் என்னும் அசுரர்கள் இருவரைப் பெருமாள் வரவழைத்தார். அசுரர்கள் இருவரும் பிரம்மாவை மிரளச் செய்தனர். அவரின் கர்வமும் அடங்கியது. 

நன்மை செய்வதற்கு உதவிய அசுரர்களுக்கு என்ன வரம் வேண்டும் என்று திருமால் வினவ, அவர்களோ அவர் தங்களோடு சண்டையிடவேண்டும் என்னும் வினோத வரத்தைக் கோரினர். சண்டையின் முடிவில் நற்கதியையும் யாசித்தனர்.

இதன்படி அசுரர்கள் இருவரோடும் பெருமாள் போரிட்டார். போரின் முடிவில், வடக்கு வாசல் வழியாக அவர்களைப் பரமபதத்திற்கு அனுப்பி வைத்து, அங்கு தம்முடைய திவ்ய தரிசனத்தையும் தந்தார். இவ்வாறு வடக்கு வாசல் வழியாக அசுரர்கள் பரமபதம் அடைந்த நாள் வைகுண்ட ஏகாதசி நாள் ஆகும். 

தாங்கள் பெற்ற பேறு எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்னும் நல்லாசையில், ‘மார்கழி வளர்பிறை ஏகாதசியில் பூலோகத்துப் பெருமாள் கோவில்களின் வடக்கு வாசலில் நுழைபவர் யாராயினும், அவர்களுக்குப் பரமபதப் பேற்றினை அளித்து அவர்களைத் தம்முடைய திருவடியில் திருமால் சேர்த்துக் கொள்ளவேண்டும்’ என்று வேண்டினர்.

இவ்வேண்டுகோளை நிறைவேற்றும் வகையிலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்திலும், திருமால் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நடைபெறுகிறது. 

பரமபதமான வைகுண்ட பேற்றினைத் தரக்கூடியது என்பதாலேயே வடக்கு வாசலுக்கு வைகுண்ட வாசல், வைகுண்ட துவாரம், சொர்க்க வாசல், திருவாசல், பரமபத வாசல் போன்ற பெயர்கள் நிலவுகின்றன//

இது கதை. கதை மட்டுமே.

மிக மிக மிகப் பெரும்பாலான மக்கள் படிப்பறிவும் சிந்திக்கும் திறனுமின்றி வாழ்நாளைக் கடத்திய காலத்தில், படித்த சூட்சும புத்தி வாய்ந்த சில சுயநலவாதிகளால் கட்டிவிடப்பட்ட கதை இது.

காலங்காலமாய் ஊடகங்களின் துணையோடு செய்த பரப்புரையால், கல்வியறிவு இல்லாதவர் மட்டுமின்றி கற்றோரும் இக்கதையை நம்பும் நிலை உருவானது.

அனைத்தையும் படைத்தவர் கடவுளேயாதலால் அசுரர்களையும் அவரே படைத்தாரா? நிகரற்ற பேராற்றல் கொண்ட அவரை அசுரர்கள் எதிர்த்துப் போரிடுதல் சாத்தியமானது எப்படி? அரக்கர்களே வேண்டிக்கொண்டார்களா? என்னய்யா கதை இது? எதற்குக் காதில் பூச்சுற்றும் இந்த வேலை?

பிரம்மாவும் ஒரு கடவுளே[திருமாலின் நாபிக் கமலத்தில் தோன்றியவர்] எனும்போது கர்வம் எனும் இழிகுணத்திற்கு அவர் உள்ளானது எப்படி?

வடக்கு வாசலில் நுழைந்து வெளியேறினால் சொர்க்கம் போகலாம் என்றால், அசுர குணம் படைத்த அத்தனை அயோக்கியர்களும் சொர்க்கத்தில் நுழையலாமே,  'பாவம் தவிர்; புண்ணியம் செய்' எனும் போதனையெல்லாம் எதற்கு?

அதென்ன ஆண்டிற்கு ஒரே ஒரு நாள் மட்டும் வைகுண்ட வாசல் திறப்பு? ஆண்டு முழுதும் திறந்து வைத்தால் சொர்க்கம் தன் கொள்ளளவை எட்டிவிடுமா? 

சொர்க்கம் எங்கே இருக்கிறது?

செத்தொழிந்தவுடன் மனிதர்களின் பூதவுடல் அழிந்துவிடுவதால், ஆவி வடிவில் சொர்க்க பூமியில் நுழைகிறார்களா? "ஆம்" என்றால், ஆவி வடிவிலேயே அங்கு உலாவும் பிற ஆவி மனிதர்களைக் காண முடியுமா? உரையாடுவது சாத்தியமா? ஐம்புலன்களையும் இழந்துவிட்ட நிலையில் அங்கு ஆவிகளின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ கேள்விகள் கேட்கலாம். கேட்பவரை, 'இவன் நாத்திகன்; அயோக்கியன்; பொய்யன்' என்றெல்லாம் திட்டித்தீர்க்காமல் மனம் திறந்து பதில் சொல்வார் யார்?
********************************************************************************************************************

ஞாயிறு, 24 டிசம்பர், 2017

'இது'தான் அது! 'அது'தான் இது!!

'உறக்கம்’ என்பது ‘தற்காலிக’ மரணம்; மரணம் என்பது ‘நிரந்தர’ உறக்கம் என்கிறது அறிவியல். ஆன்மிகவாதிகளோ, மரணம்  ஒரு தற்காலிக உறக்கம்தான் என்கிறார்கள். எது சரி?

நாம் உறங்கும்போதுகூட, நம் மூளை உறங்குவதில்லை. அது, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். [now it's known that, according to the Harvard Medical School, the brain is always in an active state whether the body is sleeping or awake (specific groups of brain structures control the body's functions at different times).] 

ஆயினும், உறக்கத்தின் தேவை என்ன என்பதுபற்றி அவர்களால் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. [’Yet even experts who've dedicated their lives to the science of sleep confess they don't really understand why we sleep or why we seem to need it so badly’ -CANADA.com]

இருப்பினும், உறக்கம் பற்றிய ஆய்வுகளும், கண்டறிதல்களும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

'வேகமான விழி அசைவையும் [REM], அவ்வாறான அசைவு இன்மையையும் [NonREM] அடிப்படையாகக்கொண்டு, உறக்க நிலையை ஐந்தாக வகைப்படுத்தியிருக்கிறார்கள்' 

ஐந்தில், மூன்றையும் நான்காவதையும் மட்டும் கவனத்தில் கொள்வோம். அவற்றின் மூலம் நாம் அறியும் ஓர் நிலை.....

ஆழ்ந்த உறக்கம். [Deep Sleep]

இந்நிலை உறக்கத்தில்தான், நம் உடம்பின் தசைகளும் திசுக்களும் சீர் செய்யப்படுகின்றன. அழிந்த செல்கள் அகற்றப்படுகின்றன. மேலும் பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. கீழே உள்ள மேற்கோளைப் படியுங்கள்.

‘Growth hormone for muscle building and weight loss and chemicals essential to the immune system are secreted during sleep, and sleep gives the body a chance to repair muscle and tissues and replace ageing and dead cells.  Sleep also gives the brain a chance to organize and archive memories.  Furthermore, sleep lowers our energy consumption, so we do not need to eat as much.’[கூகிள் உதவி]

`if you don't sleep for a very long time, you will die.’

மேற்குறிப்பிட்ட இந்த உறக்க நிலையைத்தான், ’தற்காலிக மரணம்’ என்கிறார்கள

உறக்கம் என்பது தற்காலிக மரணமா என்பது குறித்து, மாறுபட்ட பல கருத்துகள் இருப்பினும்..........

நம் ஞாபகப்படுத்தலைத் [memory] தூண்டுகிற  நியூரான்கள் செயல்படாமல் அமைதி காக்கும்போது அல்லது, அவற்றின் இணைப்பு துண்டிக்கப்படுகிறபோது, நாம் உறக்கத்தைத் தழுவுகிறோம் என்கிறது விஞ்ஞானம்.

[இணைப்பு துண்டிக்கப்பட்ட கால இடைவெளியில் அவை தம்மைப் [recharge] புதுப்பித்துக் கொண்டு சுறுசுறுப்பாய் செயல்படுகின்றன. ஒரு காலக் கட்டத்தில், புதுப்பித்தல் இயலாமல் போய் அழிந்து போகின்றன]

Some neurons, such as the histaminergic neurons of the posterior hypothalamus , become active as soon as a person is awake but are completely silent during REM sleep. They are therefore described as “wake-on” or “REM-off”. 

உறக்க நிலை பற்றி, அறிவியலறிஞர்கள் தரும் செய்திகள் இன்னும் இன்னும் நிறைய உள்ளன.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது, உறக்க நிலையில், நாம் நினைவுபடுத்துவதை அல்லது சிந்திப்பதை முற்றிலுமாய் இழக்கிறோம் என்பதே.

அத்தகைய ஒரு நிலையை, ‘வெற்று நிலை’ அல்லது ஏதும் ’அறியா நிலை’ என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.

எனவே, ஆழ்ந்த உறக்க நிலையில், அல்லது, தற்காலிக மரணத்தில் நாம் அடைவது இந்த ஏதுமற்ற வெறுமை நிலைதான்.

இந்நிலையில், இன்பம் துன்பம் என்று நாம் எதையுமே பெறுவதோ உணர்வதோ இல்லை.

நாம் நிரந்தர மரணத்தைச் சந்திக்கிற போதும் இதே வெறுமை நிலைதான் நீடிக்கிறது.

மரணத்தைத் தழுவுகிறபோது, ஆன்மா, ஆவி என்று ஏதோ ஒன்று வெளியேறுவதற்கான சாத்தியமே இல்லை என்பது உறுதிப்படுகிறது.

அவ்வாறு, உடம்பில் ஏதோ ஒன்று ஒட்டிக்கொண்டிருந்திருக்குமாயின், நாம் உறக்கதில் ஆழ்கிறபோது அதுவும் உறங்கிக்கொண்டிருந்ததா என்ற கேள்வி தவிர்க்க இயலாதது.

உறங்கும்போது, ஆன்மா, தன்னிச்சையாக எங்கெல்லாமோ அலைந்து திரும்புகிறது என்பதெல்லாம் கலப்படமில்லாத கற்பனையாகும்.

தற்காலிக மரணமான உறக்கத்தின் போது நாம் அடைகிற வெறுமை நிலையைத்தான் மரணத்தின்போதும் [அனைத்து செல்களும் அழிந்துவிட்ட நிலை] அடைகிறோம். அத்துடன் முடிந்துபோனது நம் பிறவிப் பயன்.

இப்பதிவின் மூலம் நான் வழங்க விரும்பும் செய்தி இதுதான்..........

"செத்த பிறகும், ஆன்மாவாய் அலைந்து திரிந்து, பிறவிகள் எடுத்து, இன்பதுன்பங்கள் அனுபவித்து, இறைவனை வழிபட்டுப் பாவங்கள் நீங்கியபின் வீடுபேறு எய்துகிறோம்” என்று சொல்வதெல்லாம் வெறும் கற்பனை; பொய்யுரை என்பதை அறிக.
=====================================================================================

வெள்ளி, 22 டிசம்பர், 2017

'திருநங்கைகள்'.....சில திகைப்பூட்டும் செய்திகள்!

ஆனந்தவிகடனின் வெளியீடான 'ஜீன் ஆச்சரியம்' வாசித்தவர்கள் இப்பதிவைப் புறக்கணித்திடுக. அந்நூலிலிருந்து கொஞ்சம் தகவல்களைத் திரட்டிப் பதிவாக்கி வெளியிட்டிருக்கிறேன். விகடனுக்கு நன்றி.

அலிகள் எனப்படும் திருநங்கைகள், பிறக்கும்போதே ஒருபுறம் ஆணின் விந்தகமும் மறுபுறம் பெண்ணின் அண்டகமும் உடையவர்களாகப் பிறக்கிறார்கள்.

வெளித் தோற்றத்தில், இயல்பான ஆண் அல்லது பெண் உருவத்தில் காணப்பட்டாலும், இவர்களுக்கு ஆண் பெண் ஆகிய இருவகைப் பிறப்பு உறுப்புகளுமே ஓரளவு வளர்ச்சியடைந்த நிலையில் காணப்படும்[விலங்கினங்களில் மிகவும் சகஜமாக[?] இந்த நிலை காணப்படுகிறது. ஊர்வனவற்றுள் மண் புழுக்கள் இப்படிப்பட்ட{True hermaphrodite} இனம்தான். 

இடைப்பட்ட இந்த இனத்தவர்களுக்கு, ஆணுறுப்பும் இரு விதைக்காய்களும் மிகவும் சிறுத்துக் காணப்படும். பெண்ணாக மாற விரும்புவோர், அறுவைச் சிகிச்சை மூலம் இவற்றை முற்றிலும் அகற்றிவிடுகிறார்கள். வலிந்து, பெண்ணுக்கான செக்ஸ் ஹார்மோன்களைச் செலுத்திக்கொள்பவர்களும் உண்டு. இதன் மூலம் இவர்களின் மார்பகம் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது.

மேலும் சிலர், பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை நிபுணர்களிடம் சென்று பெண் உறுப்பை உருவாக்கிக்கொள்வதும் உண்டு. ஆனாலும், உள்ளுறுப்பான அண்டகத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்கிறார்கள்.

மிக அபூர்வமாக, பெண்ணாகப் பிறந்து பிறகு தாடி - மீசையோடு 'பக்கா'வாக ஆண்களின் தோற்றத்தைப் பெற்றுவிடுபவர்களும் உளர். அட்ரினல் சுரப்பியில் உண்டாகும் கட்டிகளோ அண்டகத்தில் ஏற்படும் கட்டிகளோ பெண் ஹார்மோன்களின் சுரப்பி வற்றிப்போகக் காரணமாக அமைகின்றன. மாறாக, ஆண்ட்ரோஜன்கள் அதிகமாகச் சுரக்க ஆரம்பித்துவிடுவதால் இந்த நிலை ஏற்படுகிறது. முறையாகப் பரிசோதித்து அந்தக் கட்டிகளை அகற்றிவிட்டால் தாடி - மீசையெல்லாம் மாயமாக மறைந்துவிடும். இயல்பான பெண்களாக மாறிவிட வாய்ப்புள்ளது.

மத்திய அமெரிக்காவின் ஒரு மாகாணமான ஒக்லஹாமாவில் ஓர் அழகான குழந்தை பிறந்தது. இது வளர்ந்து, 42 ஆவது வயதில் ஏதோ சிறு பிரச்சினை என்று மருத்துவரிடம் போனாள்[ன்?]. மருத்துவர் பரிசோதித்தபோது பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

முழுமையாக வளர்ச்சியடைந்த ஆண், பெண் இரண்டு பேருடைய பிறப்பு உறுப்புகளும் அவளி[னி]டம் காணப்பட்டன. ஒரு பதினைந்து வயதுப் பெண்ணுக்கு இருக்கவேண்டிய மார்பக வளர்ச்சியும் இருந்தது.

இந்த நபரை ஆண் என்பதா, பெண் என்பதா?

இப்படி நேர்வதன் காரணம்.....

செக்ஸ் குரோமோசோம்களில் ஏற்படும் குளறுபடிகள்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆண்களுக்கானது 'xy' குரோமோசோம்கள். மேற்கண்ட அவனு[ளு]க்கு கூடுதலாக x குரோமோசோம் இருந்ததாம். அதாவது, 'xxy' ஆக.

இப்படிக் கூடுதலாக ஒர் 'x' உள்ளவர்களுக்குத் திருமணம் கூடாது என்கிறார்கள். மனநலக் காப்பகங்களில் இருக்கும் மன நோயாளிகளில் பெரும்பாலானவர்கள் இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்கள்தானாம்.

உயரமாக இருக்கும் ஆண் குற்றவாளிகளின் செக்ஸ் குரோமோசோம்களை ஆராய்ந்ததில் இவர்களில் பெரும்பான்மையோருக்கு 'xyy' இருந்ததாம். கூடுதலாக ஒரு 'y' குரோமோசோம்.

செக்ஸ் குரோமோசோம்களில் இப்படி இன்னும் நிறைக் குளறுபடிகள் உள்ளனவாம்.

சில பெண்கள் 'எடுப்பான' தோற்றத்துடன் காணப்படுவார்கள். ஆனால், இவர்களின் உடல் செல்களெங்கும் xx க்குப் பதிலாக xy தான்[ஆண்களின் குரோமோசோம்கள்] காணப்படும்.

இவர்களின் அடிவயிற்றுப் பகுதியின் உள்ளே விந்தகமும் காணப்படும். இதை இவர்கள் குடலிறக்கம் என்று தவறாகப் புரிந்துகொண்டு அறுவைச் சிகிச்சைக்குப் போனால், விந்தகம் இருப்பதை அறிவார்கள். இயல்பாகப் 'பெண்ணுறுப்பு' இருந்தாலும் இவர்களால் கருத்தரிக்க இயலாது.

இவர்கள் எல்லாம் அலிகளா என்றால், இல்லை என்பதே பதில். கரு வளர்ச்சியின்போது ஏற்பட்ட குளறுபடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள். [இக்குளறுபடிகள் குறித்து இன்னும் சொல்லலாம். பதிவு மிக விரியும் என்பதால் தவிர்க்கப்படுகிறது].

திருநங்கைகள் குறித்து மேலும் கொஞ்சம் செய்திகள்:

இவர்களை இரு வகையினராகப் பிரித்திருக்கிறார்கள்.

முதலாம் வகையினர், பிறக்கும்போதே ஆண்களாகப் பிறந்துவிட்டாலும் சிறு வயது முதலே பெண்களின் உடைகளை அணிவதிலும் பெண்களைப் போல அலங்கரித்துக்கொள்வதிலும் நாட்டம் உடையவர்கள். இவர்களில் பலர் மருத்துவமனைகளுக்குச் சென்று அறுவைச் சிகிச்சை மூலம் ஆணுறுப்பை நீக்கிக்கொள்கிறார்கள். 'டுபாக்கூர்' மருத்துவர்களை நாடிச் சென்று ஆபத்தை விலைகொடுத்து வாங்குபவர்களும் உளர்.

இரண்டாம் வகையினர், பிறக்கும்போது ஆண்களாகப் பிறந்தாலும் மிகச் சிறு வயது முதற்கொண்டு ஆண்களுக்கான செக்ஸ் சுரப்பி சரிவரச் சுரக்காததால் பெண் சாயலுடன் வளர்ந்து பின்னர் [அறுவை இல்லாமலே] முழுமையான திருநங்கைகளாக ஆகிவிடுபவர்கள்.

இந்த இருவகைத் திருநங்கைகளும் அடிப்படையில் ஆண்களே[Biological Males] என்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.

ஆக.....

எல்லாம்வல்ல கடவுளின் படைப்பில்தான் எத்தனை எத்தனை குளறுபடிகள்!!!

["எதை எழுதினாலும் சுத்தி வளைச்சி கடவுளைக் குறை சொல்வதே உனக்கு வழக்கமாப் போச்சு" என்று என்னை ஏசுகிறீர்களா?

என்ன செய்ய, சின்ன வயசிலிருந்தே இப்படியொரு சின்னப்புத்தியோட வளர்ந்துட்டேன்! ஹி...ஹி...ஹி!!]
=====================================================================================










வியாழன், 14 டிசம்பர், 2017

கடவுளும் 'காப்பி - பேஸ்ட்'டும்!!!

அண்டவெளியிலுள்ள[பூமி உட்பட] பொருள்களிலோ உயிர்களிலோ ஒன்றைப் போல் இன்னொன்று இருந்ததில்லை; இருந்துகொண்டிருக்கவுமில்லை' என்று விஞ்ஞானிகள் சொல்வதாக ஆய்வியல் அறிஞர்கள் சொல்கிறார்கள்.

பொருள்களும் உயிர்களும் உருவாவதற்கு மூலமாக விளங்குகிற கோடி கோடி கோடானுகோடியோ கோடி 'அணுத்திரள்'களிலும் ஒன்றைப்போல் இன்னொன்று இல்லை என்கிறார்கள்.

புதிது புதிதாக அணுக்களும் பொருள்களும் உயிர்களும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. அதாவது, பழையன கழிந்து புதியன புகுதல் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.

தோன்றிக்கொண்டிருக்கிற எந்த ஒன்றும், தோன்றி மறைந்த இன்னொன்றைப் போல இல்லை என்பது மிகப் பெரிய விந்தை.

இந்த விந்தை தன்னிச்சையாய் நிகழ்கிறதா அல்லது நிகழ்த்தப்படுகிறதா?

நிகழ்கிறது எனின் அது இயற்கை. நிகழ்த்தப்படுகிறது எனின் அது கடவுள்[கடவுள் தோன்றியது எப்படி? படைப்பாற்றல் அவருக்கு எப்படி வாய்த்தது என்பன போன்ற வினாக்களுக்கு இந்நாள்வரை விடை பகர்ந்தவர் எவருமிலர்] எனப்படுபவரின் சாகசமாக இருக்கக்கூடும்.

ஒன்றைப் போல இன்னொன்று உருவாதல் என்னும் நிகழ்வு, கடந்த காலங்களில் இல்லை[???]; நிகழ்காலத்திலும் இல்லை.

நிகழ்வுகள் என்பது இனியும் கால வரம்பற்றுத் தொடரவிருப்பது. அதாவது, பொருள்களும் உயிர்களும், 'வெளி' உள்ளளவும் புதிது புதிதாகத் தோன்றிக்கொண்டே இருக்கக்கூடும்.

நம் கேள்வி: எதிர்காலத்திலேனும் அச்சு அசலாக ஒன்று போல்  இன்னொன்று [தன்னிச்சையாகத்] தோன்றுமா? அல்லது, கடவுள் எனப்படுபவர் தோற்றுவிப்பாரா?

குறிப்பாக.....

ஒரு திருவள்ளுவரைப் போல் இன்னொரு திருவள்ளுவரும் பெரியாரைப் போல் இன்னொரு பெரியாரும் தோன்றுவார்களா, தோற்றுவிக்கப்படுவார்களா?

'பசி'பரமசிவம் போல்[ஹி...ஹி...ஹி...] இன்னொரு 'பசி'பரமசிவம் தோன்றுவாரா, தோற்றுவிக்கப்படுவாரா?!

எப்போது?

செவ்வாய், 12 டிசம்பர், 2017

கடவுள்...கடவுள்...கடவுள்! யாரய்யா கடவுள்?

#தஞ்சாவூருக்குப் போகும் வழியில், கரூர் 'பைபாஸ்'இல் மதிய உணவுக்காக ஒரு விடுதியின் முன் காரை நிறுத்தியபோது அவரைக் கண்டேன்.

அந்தப் பெரியவருக்கு அறுபது வயதிருக்கும். கையில் 'சிக்னல் ஸ்டிக் லைட்'டும் வாயில் விசிலுமாய், நெடுஞ்சாலையில் வாகனங்களில் போவோரைச் சாப்பிட அழைத்துக்கொண்டிருந்தார்.

வயோதிகம் காரணமாகவோ நின்றுகொண்டே இருப்பதன் காரணமாகவோ வலி தாளாமல் கால் மாற்றித் தவித்துக்கொண்டிருந்தார்.

உணவுண்டு வந்தபோதும் அவரிடத்தில் மாற்றத்தைக் காண இயலவில்லை. கால் மாற்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.

என் மனதில் இரக்கம் சுரக்க, அவரை அணுகி மதிப்புள்ள ஒற்றைத் தாளை நீட்டினேன். வாங்க மறுத்துவிட்டார்.

மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.

"பேரு என்னங்க ஐயா?"

"முருகேசனுங்க."

"ஊரு?"

"தஞ்சாவூர்ப் பக்கம்" என்றவர் தொடர்ந்து சொன்னார்: "தொழில் விவசாயம். பொழப்புக்கு வேறே வழி இல்ல. ஒரு பொண்ணு ஒரு பையன். மழை இல்லாம விவசாயம் படுத்துப்போச்சு. கடன் ஒடன் வாங்கி என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். பலனில்லை. கடனை அடைக்க முடியல. கடவுளும் கண் திறக்கல.....

.....இதுக்கு மேல தாளாதுன்னு நிலத்தை வித்துக் கடனெல்லாம் அடைச்சுட்டு மிச்சப் பணத்தில் பொண்ணுக்குக் கல்யாணத்தைப் பண்ணினேன்.....

.....பையனைப் படிக்க வைக்கப் பணம் இல்ல. இங்க வந்து வேலைக்குச் சேர்ந்தேன். மூனு வேளைச் சாப்பாடு. தங்க இடம். மாசம் 7500 ரூபா சம்பளம். சிக்கனமா செலவு பண்ணினதில் பையனை எஞ்சினீயரிங்க் படிக்க வைக்க முடிஞ்சுது. கோயம்புத்தூரில் வேலையில் சேர்ந்துட்டான்....."

நான் குறுக்கிட்டேன்; "ரொம்பச் சந்தோசம் பெரியவரே. கடவுள் புண்ணியத்தால உங்களுக்கு நல்லது நடந்திருக்கு" என்றேன்.

நான் சொல்லி முடித்தபோது, ஓட்டல் பையன் வந்து பெரியவரிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போனான்.

பெரியவர் முகம் மலர்ந்ததோடு என்னைப் பார்த்துப் பேசலானார். "என்ன சொன்னீங்க? கடவுளால நல்லது நடந்ததா? அவர் யாருங்க கடவுள்? அவர் கொடுமைக்காரருங்க. அவர் நல்லவரா இருந்தா என்னைக் கடனாளியாக்கி, இப்படிக் கால்கடுக்க நாளெல்லாம் நிக்க வைப்பாரா? இப்படியொரு கடவுள் எனக்குத் தேவையில்லீங்க. என்னைப் பொருத்தவரைக்கு...."

சற்றே நிறுத்துப் பெருமூச்செறிந்தவர், "என்னைப் பொருத்தவரைக்கும் மனுசங்கதாங்க கடவுள். 'பேசாம எங்ககூட இருந்துடுங்க. கூழோ கஞ்சியோ இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிடலாம்'னு சொன்ன என் மாப்பிளை எனக்குக் கடவுள். 'நான் பரவாயில்லாம சம்பாதிக்கிறேன். இனி நீ ஓட்டல் வேலைக்குப் போக வேண்டாம்'னு சொன்ன என் மகன் எனக்குக் கடவுள். என்னை நம்பிக் கடன் கொடுத்தவங்க எனக்குக் கடவுள். எனக்குக் கால் வலிக்குமேன்னு கொஞ்ச நேரம் உட்காரச் சொன்ன இந்த ஓட்டல் முதலாளி எனக்குக் கடவுள். எனக்காகப் பரிதாபப்பட்டுப் பணம் கொடுத்த நீங்க எனக்குக் கடவுள். இன்னும் சொல்லப்போனா நல்ல மனசு உள்ள மனுசங்க எல்லாருமே கடவுள்தாங்க" என்றார் நெகிழ்ந்த குரலில்.

பெரியவர் முருகேசனிடம் தலை குனிந்து வணங்கி விடை பெற்றேன்#
=====================================================================================
தன் அனுபவக் கதையை, 'பாக்யா' வார இதழ்[டிசம்பர் 15 _ 21, 2017] மூலம் பகிர்ந்துகொண்ட 'ஜெயராமன் வேணு' அவர்களுக்கு நன்றி.

ஆசிரியரின் அனுமதியின்றிச் சற்றே சுருக்கி வெளியிடப்பட்டது. 





வெள்ளி, 8 டிசம்பர், 2017

'அது' படுத்தும் பாடு!!.....சிறுகதை.

கடவுள் என்றில்லை, 'காம இச்சைக்குக்'கூட ஏழை என்றால் இளக்காரம்தான். பணக்காரர்களைக் காட்டிலும் ஏழைகளையே அது அதிகம் படுத்துகிறது!
பகலெல்லாம் கூலிக்கு உழைத்துக் களைத்துப் போனதால், சூடாக நாலுருண்டைக் ’களி’ உள்ளே போனவுடன் அடித்துப் போட்டாற் போல தூங்கிப் போனான் செல்லப்பன். விடிவதற்குக் கொஞ்சம் முன்னால்தான் உறக்கம் கலைந்தும் கலையாத நிலையில் ‘பொம்பளை’ நினைப்பு வரவே, கைகளை நீளவிட்டுப் பக்கவாட்டில் தடவினான்; பரவலாகத் துழாவினான்.

வெள்ளச்சியின் கட்டுடலுக்குப் பதிலாக, ஒரு துண்டுக் காகிதம் மட்டுமே அவன் கையில் சிறைபட்டது.

தரையோடு தரையாகக் குந்தியிருந்த குடிசையிலிருந்து வெளியேறி, பக்கத்துக் குடிசைப் பழனியைக் கூப்பிட்டுத் துண்டுச் சீட்டைக் கொடுத்து, "படிடா" என்றான்.

‘என்னத் தோட [தேட] வாண்டாம்’ என்று எழதியிருந்ததைப் படித்துக் காட்டினான் பழனி. தனக்குத் தெரிந்த தமிழில், தன் செயல்பாட்டைப் புரிய வைத்திருந்தாள் வெள்ளச்சி.

“இதோ பாருண்ணா, அவ கோழி கேவறாப்பல கேவிகிட்டுத் திரியறா. நீ இல்லாதப்போ, சுருட்டையன்கிட்ட இளிச்சி இளிச்சிப் பேசுறான்னு படிச்சிப் படிச்சிச் சொன்னேன். நீ கண்டுக்கல. அவனை இழுத்துட்டு ஓடிட்டா பார்த்தியா” -அங்கலாய்த்தான் பழனி.

“ஏமாந்துட்டேன்” -பதறினான் செல்லப்பன்.

“ஈரோட்டில் ஒரு செருப்புக் கடையில் வேலைக்குச் சேருறதா சுருட்டையன் யார் கிட்டயோ நாலு நாள் முந்தி சொல்லிட்டிருந்தான். வெள்ளச்சியோட அவன் அங்கதான் போவான். இப்பவே சைக்கிளை எடுத்துட்டுப் பஸ் ஸ்டாண்டுக்குப் போ. ரெண்டு பேரும் பஸ் ஏறாம இருந்தா கையும்களவுமா பிடிச்சுடலாம்" என்றான் பழனி.

நிலையத்தில் நுழைந்தபோது ஈரோடு செல்லும் பேருந்து நின்றுகொண்டிருப்பதைக் கண்டான் செல்லப்பன்.

பேருந்துப் படியருகே நின்றுகொண்டிருந்த வெள்ளச்சியும் அவன் கண்ணில் பட்டாள். கொஞ்சம் தள்ளி சுருட்டையன் நின்றுகொண்டிருந்தான்.

பாய்ந்து சென்று வெள்ளச்சியின் கூந்தல பற்றினான்; அவள் கன்னத்தில் அறைந்தான்.

நிலை குலைந்த வெள்ளச்சி, சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு, “இதோ பாருய்யா, உன்னோட பொளப்பு  நடத்த எனக்கு இஷ்டமில்ல. என்னை அடிக்காதே, வுட்டுடு? என்றாள்.

“அவ்வளவு சுளுவா வுட்டுடுவேனா?” அவனின் தாக்குதல் தொடர்ந்தது.

“ஓ...” என ஓலமிட்டுப் புலம்பத் தொடங்கினாள் வெள்ளச்சி.

“அய்யோ...என்னை அடிச்சிக் கொல்றானே...கேட்பாரில்லையா? இவன் வூட்ல எருக்கு முளைக்க...வயத்தில் புத்து முளைக்க...”

முன்னறிவிப்பில்லாத இந்த நாடகத்தைப் பார்க்கக் கூடியிருந்த கும்பலில் ஒருவர், “ஏம்மா, இந்த ஆளு யாரு? உன் புருஷனா?" என்றார்.

“யாரு இவனா என் புருஷன்? இவன் பொண்டாட்டி செத்துப் போயி மூனு மாசம் ஆவுது. 'உன்னை வெச்சிப் பொழைச்சிக்கிறேன் வா’ன்னு கூப்பிட்டான். வந்தேன். ஆறு மாசம் இருந்தேன், இப்போ இஷ்டமில்லே போறேன்னு சொன்னா கை நீட்டி .....”

இடை மறித்தான் செல்லப்பன். “நீ எங்கே வேணுன்னாலும் போடி. எவனை வேணுன்னாலும் கூட்டிகிட்டு ஓடுடீ ஓடுகாலி. அதுக்கு முன்னால, மருவாதையா கணக்கைத் தீர்த்துட்டுப் போ. இல்லே...வெட்டிப் போடுவேன்...வெட்டி...”

வெள்ளச்சி செல்லப்பனை ஏளனமாகப் பார்த்தாள். கேட்டாள்: “என்னய்யா கணக்கு? ஐயாயிரம் பத்தாயிரம்னு என்கிட்டே  குடுத்து வெச்சியா?”

"உன் மொகறக்கட்டைக்கு எவன் அவ்வளவு பணம் அவுப்பான்?  உன்னைக் கூட்டியாந்தப்போ, புதுத் துணிமணி எடுத்துக் குடுத்தேன்; புதுச் செருப்பு வாங்கித் தந்தேன். மறந்து போச்சா?"

“சும்மாவா எடுத்துக் குடுத்தே? பொழுது சாஞ்சா முந்தானை விரிச்சிப் படுக்கலே?"

“கூலி வேலைக்குப் போன உன்னை உட்கார வெச்சிக் கஞ்சி ஊத்துனதும் கட்டிக்கத் துணிமணி எடுத்துக் குடுத்ததும் சினிமாவுக்குக் கூட்டிப் போனதும் அப்பப்போ கைச் செலவுக்குப் பணம் குடுத்ததும்...எல்லாம் அதுக்கே சரியாப் போச்சின்னு சொல்றியாடி?”

“ஆமா” -வெள்ளச்சி சிலிர்த்து நின்றாள்.

“சரி போகட்டும். ரெண்டு காலிலும் வெள்ளிக் கொலுசு போட்டிருக்கியே, அது நான் வாங்கிக் குடுத்தது. அதுவும் இந்தக் கணக்கில் சேருதா?”

வெள்ளச்சிக்கு ஏனோ பேச்சு எழவில்லை. குரலில் சுருதி குறையச் சொன்னாள்: “உன்னோட பெரிய எளவாப் போச்சு. இப்படி ஒன்னொன்னுக்கும் கணக்குப் போடுவீன்னு தெரிஞ்சிருந்தா உன்னோட வந்திருக்க மாட்டேன்”என்றவள், கொலுசுகளைக் கழற்றிச் செல்லப்பனிடம் தந்துவிட்டுச் சொன்னாள்: "உனக்கும் எனக்கும் இனிமே எந்தத் தொடுப்பும் இல்ல. ஞாபகம் வெச்சுக்கோ.”

வெளிறிய முகத்துடன் தனக்குப் பின்னே நின்றுகொண்டிருந்த சுருட்டையனிடம், ”வாய்யா போலாம்” என்று அவன் கரம் பற்றி, நகரத் தொடங்கிய ஈரோடு பேருந்தில் ஏறினாள்.

“ஏம்ப்பா, போட்ட கொலுசைப் பிடுங்கிட்டியே. இதை வெச்சிக் கோட்டையா கட்டிடப் போறே?” என்று செல்லப்பனிடம் கேட்டார் ஒரு பெரியவர்.

“கோட்டை கட்டப் போறது ஒன்னுமில்ல. நாளக்கி, இன்னொருத்தியைக் கூட்டியாந்தா அவளுக்குப் போட்டுவிடலாமே” என்றான் செல்லப்பன்!
#####################################################################################






செவ்வாய், 5 டிசம்பர், 2017

கடவுளுக்குக் கண்கள் எத்தனை?[சின்னஞ்சிறு குறுங்கதை]

சாலையைக் கடந்து கொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அடையாள அட்டையிலிருந்த தொ.பே. எண்ணுக்குத் தகவல் தந்தான் தங்கராசு, கூலித் தொழிலாளி.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர், சிகிச்சை பெற்று உயிர்பிழைத்த தம் பிள்ளையைப் பார்த்துவிட்டு, சிகிச்சையளித்த மருத்துவரையும் சந்தித்த பின்னர்  தங்கராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளாப் பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று சொல்லி, தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

குரல் தழுதழுக்கச் சொன்னான் தங்கராசு; "என் ரெண்டு வயசுப் பெண் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. கடவுளை வேண்டாத நாளில்லை. அவர் கண் திறக்கல. அவருக்கு உங்க மேல ரொம்பப் பிரியம் போலிருக்கு. நீங்க கேட்காமலே உங்களுக்கு உதவியிருக்கார். நீங்க சொன்னா கடவுள் கேட்பாரு. தயவு பண்ணி என் குழந்தையைக் கண்டுபிடிச்சிக் கொடுக்கச் சொல்லுங்க.”

என்ன சொல்வதென்று புரியாமல் பேந்தப் பேந்த விழித்தார் சிறுவனின் தந்தை!

********************************************************************************************************************
இது 'பசி'பரமசிவத்தின் படைப்பு! 26.07.2011இல் எழுதியது.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

மதம் கடந்த ஒரு 'பெருந்தகை'யின் மரண உரை!

#என் தன்[சுய]நினைவோடு எழுதும் கடிதம் இது. எப்பொழுதும் இறப்பு நேரலாம் என்ற சூழ்நிலையில் என் இறுதி விருப்பங்களைப் பதிவு செய்கிறேன். என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, தோழமைக்குரிய நண்பர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இது.

என்னை முழுமையாக என் மக்களுக்கு உரித்தாக்க விரும்பினேன். ஆனால், எனக்கு நேர்ந்த வாழ்க்கை அதற்கான முழு வாய்ப்பையும் தரவில்லை.

இறப்பு என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத கூறு. இறப்புக்குப் பின் மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை.

வாழ்ந்த மட்டும் சமயச் சார்பற்றவனாகவே வாழ்ந்தேன். அதனால் எல்லார்க்குமானவனாக என்னை உணர முடிந்தது. உடலால் வாழ்ந்த இவ்வாழ்க்கை இறப்போடு முடிகிறது. மக்களுக்கு முழுமையாக உரித்தாக்கும் வண்ணமே என் சிந்தனையும் செயலும் அமைய வேண்டும் என்று விரும்பிய போதிலும், அதை முழுமையாக்க முடியாத குறை என் மனத்தில் உண்டு.

இறப்பு உடலின் செயல்களை நிறுத்துகிறது. எனினும், என் உடல் இறப்புக்குப் பிறகும் பயன்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால், என் உடலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்க என் குடும்ப உறுப்பினர்களும் தோழர்களும் ஆவன செய்ய வேண்டுகிறேன். அப்படி வழங்குவது என்னை, என் வாழ்க்கையை என் விருப்பப்படி அர்த்தப்படுத்தும் என்று நம்புகிறேன்.

இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த நான் இவ்வாறு விருப்பம் எழுதி வைப்பது சரியா என்று என் உறவினர்களும் இஸ்லாமிய நண்பர்களும் கருதலாம். 

மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன்; மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன்.

உறுப்புக் கொடையும் உடற்கொடையும் மானுடத்துக்குச் செய்யும் உதவி என்று கருதுகிறேன். எத்தனை முஸ்லிம் மாணவ மாணவியர் மருத்துவம் பயில்கின்றனர். உடற்கூறு சோதனையின்றிப் பயிலும் மருத்துவக் கல்வி நிறைவு பெறுமா? எனவே, சமயம் சார்ந்தவர்கள்கூட இக்கொடைகளைத் தயங்காமல் வழங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

வாழ்வது இனிமையானது - போராட்டங்களோடும் புன்னகையோடும் இறப்பது நிறைவானது.

                                                                                                                    அன்புடன்,
                                                                                             இன்குலாப்[செகசீ.சாகுல் அமீது]# 

முதுமை முற்றுகையிட்டபோது, நீரிழிவால் ஒரு கால் நீக்கப்பட்ட நிலையில் கவிஞர் 'இன்குலாப்'[மறைவதற்கு முன்பு] எழுதிய கடிதம் இது.

சாவுக்கு அஞ்சியும், செத்த பிறகு என்ன ஆவோம் என்று புலம்பிக் கலங்கியும், தாடிமுடி வளர்த்த சாமியார்களையும் போலி ஞானியார்களையும் சரணடைகிற  மாந்தருக்கிடையே, மரணத்தைப் புன்னகையுடன் வரவேற்ற கவிஞர் இன்குலாப்பின் மனப்பக்குவம் நம்மால் என்றென்றும் நினைவுகூரத்தக்கது; [சாதி]மதம் கடந்து வாழ்ந்த அவரின் மனித நேயம் எக்காலத்தும் போற்றத்தக்கது.

கவிஞர் இன்குலாப்: முந்தைய பதிவுகள்:
http://kadavulinkadavul.blogspot.com/2014/01/blog-post_29.html
http://kadavulinkadavul.blogspot.com/2016/12/blog-post_9.html
=====================================================================================
இந்த ஆண்டில்[2017] இக்கடிதத்தை[கவிஞர் 07.02.09இல் எழுதியது] வெளியிட்ட கவிஞர் இன்குலாப் அவர்களின் மகள் 'ஆமினா பர்வினா' அவர்களுக்கும், கவிஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் 'நினைவுகூர்தல்' கட்டுரை வழங்கிய மூத்த எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் அவர்களுக்கும், வெளியிட்ட 'தி இந்து[03.12.2017]வுக்கும் நம் மனம் நிறைந்த நன்றிகள்.



வெள்ளி, 1 டிசம்பர், 2017

அந்தக்கால விகடனின் 'அசத்தல்' ஒரு பக்கக் கதை!

இது பழைய, கையடக்க விகடனில் [14.04.1985]  வெளியான ‘தரமான’ ஒரு பக்கக் கதை. அரியதொரு படைப்பு. தவறாமல் படியுங்கள்.

ஆலமரத்தடியில் ஒட்டுமொத்த சோமனூரும் கூடியிருந்தது.

‘டாப்லெஸ்’ ஆக நின்ற முனியப்பனின் கண்கள் சங்கடமாய்ப் புரண்டன.

பஞ்சாயத்துத் தலைவர் ஆதிலிங்கம், ஒரு செருமலை உதிர்த்துவிட்டுச் சொன்னார்: “முனியப்பா, உங்க காலனிக்குன்னுதான் தனிக் கிணறு ஒதுக்கித் தந்துட்டமே. அப்புறம், ஊர்க் கெணத்துல ஒங்க வீட்டுப் பொம்பள தண்ணி எடுக்கிறது பெரிய அடாவடித்தனம் இல்லையா?”

வாணலியில் அப்பளமாய் நெளிந்தான் முனியப்பன்.

“அது நம்ம ஊருப் புள்ள இல்ல சாமி. கொளத்தூர்லே இருந்து நம்ம வூட்டுக்கு விருந்தாளியா வந்தவ. தெரியாம உங்க கெணத்துல எறச்சிட்டா. அவள நல்லா திட்டிபுட்டமுங்க. பெரிய மனசு பண்ணி.....”

“.....மன்னிக்க முடியாதுப்பா. தண்டனையை வேணுன்னா கொஞ்சம் கொறைக்கலாம்...ம்ம்...”

அபராதத் தொகையைச் சொன்னார் ஆதிலிங்கம். முனியப்பனும் லேசாகத் தலையசைத்தான்.

முனியப்பன் நகரவில்லை: ஆதிலிங்கத்திடம் தலையைச் சொறிந்து நின்றான்; தயக்கத்துடன் சொன்னான்: "ஐயா, பெரியவங்க சமூகத்தில் ஒன்னு சொல்லணுமுங்க.....”

“சொல்லு.”

“வயசுக்கு வந்த என் புள்ளகிட்ட சின்ன எசமான் தாறுமாறா நடந்துக்கிறதும், மெரட்டி உருட்டி அவ வாயை அடைக்கிறதும்.....”

கூட்டம் ஆக்ரோஷித்தது.

“அடி செருப்பால...”

“எங்களப் பத்தியே ‘கம்ப்ளேன்’ கொண்டு வர்றியா...?”

“அவ்வளவும் திமிரு...” சத்தம் அதிககமாக, முனியப்பன் நடுங்கிப் போய்ப் பின் வாங்க, “சரி...சரி...போவட்டும் விடுங்க...” என்று பஞ்சாயத்தைக் கலைத்தார் ஆதிலிங்கம்.

முனியப்பன் எழுப்பிய பிரச்சினை அனாதையாய் நின்றது!

தலை குனிந்தவாறு நடந்தான் முனியப்பன்.

இருபது வருடங்கள் கழிந்தன.

பஞ்சாயத்தைக் கூட்டி ஆதிலிங்கம் கேட்டார்:

“என்னவே முனியப்பன்! ஒம் பேரனுக்குத் தெனாவெட்டு கூடிப் போச்சு. டிரான்சிஸ்டரைக் கழுத்தில் மாட்டிகிட்டு, சிகரெட் பிடிச்சிட்டு, சீட்டியடிச்சுட்டு, நெஞ்சை நிமிர்த்தி எங்க தெருவில் அலையறான். எங்க ஓட்டலில் எங்களுக்குச் சமதையா பேப்பர் படிக்கிறான்.....”

முதுமையில் தளர்ந்து ஒடுங்கிய முனியப்பன், இடுங்கிய கண்களால், அதே சமயம் நேர்க்கோட்டில் பார்த்தார். அவர் முகத்தில் லேசான புன்னகை அரும்பியது. பயமின்றி வந்தன வார்த்தைகள்.

“இருபது வருஷம் முந்தி நான் சொன்னபோது நீங்க மதிக்கல... என் வாயைக் கட்டி அனுப்பினீங்க...இப்பவும் என் வாரிசுகள் அடக்கமாத்தான் நடந்துக்கிறாங்க. ஆனா, என் பேரன் விதிவிலக்கா இருக்கான். அவன் ஒடம்புல எங்க பரம்பரை ரத்தம் ஓடல. யாரு ரத்தம் ஓடுதுன்னு உங்களுக்கே தெரியும். நான் என்ன செய்யட்டும்? எங்க வாரிசா இருந்தா நான் ‘கண்ரோலு’ பண்ண முடியும்!”

அவமானத்தில் தலை குனிந்தபடி நகர்ந்தார் ஆதிலிங்கம்!

-இது முல்லை வசந்தனின் படைப்பு.

ஞாயிறு, 26 நவம்பர், 2017

யார் 'இந்த' மகா.....பெரியவர்?

மன்னார்குடி.

அது தன்மான இயக்கத்தின் தொடக்க காலம்.

பெரியதொரு பொதுக்கூட்டத்தில் 'அவர்' பேசிக்கொண்டிருந்தார்.

மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த ஒருவர், தாள்களில் பென்சிலால் எழுதிய கேள்விகளைப் பேச்சாளருக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். பேச்சாளரும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருந்தார்.

அனாவசியக் கேள்விகளால் சொற்பொழிவுக்கு இடையூறு நேர்வதைச் சகிக்காத பார்வையாளர்கள், மனம் கொதித்துக் கேள்விகள் எழுப்பியவரைச் சாட முற்பட்டார்கள்.

சொற்பொழிவாளரோ, அவர்களை அமைதிப்படுத்தியதோடு அல்லாமல், கேள்வி எழுப்பியவரை மேலும் தொடருமாறு மரியாதையுடன் வேண்டிக்கொண்டார்.

அந்த நபரும் தொடர்ந்து கேள்விகளை எழுதி அனுப்பிக்கொண்டிருந்தார்; பேச்சாளரும் பதில் தந்துகொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில்.....

கேள்வியாளரின் பென்சில் உடைந்துவிட்டது.

செய்வதறியாது திகைத்த அவரை அழைத்து, "அய்யா, இதனால் எழுதுங்கள்" என்று சொல்லித் தம்மிடமிருந்த பேனாவை அவரிடம் தந்தார் பேச்சாளர்.

எதிர்பாராத இந்த நிகழ்வால் பெரிதும் மனம் நெகிழ்ந்த அந்த நபர் பேனாவைத் திருப்பித் தந்துவிட்டு, "நாயக்கர்வாள், என்னை மன்னிக்க வேண்டும். எதிரிகள் தங்களைப் பற்றிக் கூறுவது முற்றிலும் தவறு. நீங்கள் மகாப் பெரியவர். நமஸ்காரம்" என்றார்.

கேள்வியாளர் ஒரு பிராமணர்[அய்யர்].

அவரால் "நீங்கள் மகாப் பெரியவர்" என்று பாராட்டப்பட்டவர் சக அரசியல்வாதிகளால் 'நாயக்கர்' என்று அழைக்கப்பட்ட 'பெரியார் ஈ.வெ.ரா' ஆவார். நூலில்[பெரியாரின் பெண்ணுரிமை'] 'வே'என்று தவறாக அச்சாகியுள்ளது.
=====================================================================================
பெரியாரை 'மகாப் பெரியவர்' ஆக்கிய இன்னுமொரு நிகழ்வு பிறிதொரு பதிவில்! 
====================================================================================
நன்றி: 'பெரியாரின் பெண்ணுரிமை[என்.டி.சுந்தரவடிவேலு], மணி புத்தக நிலையம், விழுப்புரம். பதிப்பு ஆண்டு: 2013.

சனி, 25 நவம்பர், 2017

ஒரு தேவதையும் சில வெறி நாய்களும்!!!...'பகீர்' சிறுகதை.

நினைத்தபடி வாழ முடிவதில்லை; நினைத்தபடி சாவதும் சாத்தியமாக இல்லை. இப்படியொரு அவல வாழ்வுக்கு நம்மை ஆளாக்கியது யார்? நம்மில் மிகப் பெரும்பாலோர் நம்பும் கடவுள்தானே?!

அவள் அழகானவள்..

பெயர்?

உண்மைப் பெயர் வேண்டாம். ‘பாமா’ என்று அழைப்போம்.

நான்கு வயதுக் குழந்தையாய் இருந்தபோதே பெற்ற தாயை இழந்தவள் பாமா. கனவுகளும் கற்பனைகளுமாய் இன்ப உலகில் சஞ்சரிக்க வேண்டிய பதின் பருவத்தில்  அவளுக்கு வாழ்க்கை வெறுத்துப்போனது.

காரணம்.....

நச்சு மனம் படைத்த சித்தி. அவளின் குடிகாரத் தம்பி பாமாவிடம் அத்துமீற முயன்ற போதெல்லாம் அதைக் கண்டுகொள்ளாத அவளின் கயமைக் குணம். பல முறை அழுது முறையிட்டும் சித்தியைக் கண்டிக்காத பெண்டாட்டி தாசனான தந்தை.

“உன் தம்பி மொடாக்குடியன். அவனை எனக்குப் பிடிக்கல. அடிக்கடி இங்க வந்து என்னைத் தொட்டுத் தொட்டுப் பேசுறான். அசிங்கமாப் பேசிட்டுக் கட்டிப் பிடிக்கிறான்” என்று சித்தியிடம் சொன்னால், “அவன்தானே உன்னைக் கட்டிக்கப் போறவன். தொட்டா என்ன?” என்பாள் சித்தி. அப்பாவிடம் முறையிட்டால், “உன் சித்தியிடம் சொல்லி அவனைக் கண்டிக்கச் சொல்றேன்” என்பார்; ஒரு நாளும் சொன்னதில்லை.

இப்படியொரு நிராதரவான நிலையில்தான் தற்கொலை முடிவுக்கு வந்தாள் பாமா.

இரண்டு முறை  முயன்றாள்.

முதல் முறை, நைந்துபோன பழைய தாவணியில் தூக்கிட்டுக்கொள்ள, அது அறுந்து விழுந்ததில் அவளின் மரணம் ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது முயற்சியாகப் பூச்சி மருந்து குடித்தாள். அது காலாவதி ஆகியிருந்ததால் மரணத்தின் வருகை தாமதப்பட்டபோது, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு  உயிர் பிழைத்துவிட்டாள்.

அன்று மொட்டை மாடியில் துணிகளை உலர்த்திவிட்டுப் பார்வையை உயர்த்திய போது, எதிரே அந்த மலை தென்பட்டது.

அதை மலை என்பதைவிட, ஒற்றக் கல்லால் ஆன பிரமாண்டமான குன்று என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.

அந்தக் குன்று ஊரின் நடுவே இருந்தது. உச்சியில் பழைய கோட்டைச் சுவர்கள்.

தோழிகளுடன் இரண்டு முறை அங்கே போயிருக்கிறாள் பாமா.

கோட்டையின் வடக்குப் பக்கம் சரிவானது. அதில்தான் படிக்கட்டுகள் செதுக்கப்பட்டிருந்தன. மற்ற பக்கங்கள் செங்குத்தானவை. அங்கிருந்து குதித்தால், வழியில் ஒரு சிறு கீரல்கூட இல்லாமல் தரையை முத்தமிட்டுச் சாவைத் தழுவிக் கொள்ளலாம். சிலர் தவறி விழுந்தும், வேறு சிலர் தற்கொலை முயற்சியிலும் செத்திருக்கிறார்கள்.

குன்றை வெறித்தவாறு, சில கணங்கள் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள் பாமா.

மீண்டும் தூக்கில் தொங்க நினைத்தாள். ஏற்கனவே மேற்கொண்ட தற்கொலை முயற்சிகள் தோல்வியில் முடிந்தது நினைவுக்கு வந்தது. குன்றின் உச்சிக்குப் போய், கோட்டைச் சுவர் ஏறிக் குதித்துவிடுவது  என்ற முடிவுக்கு வந்தாள்

வீட்டிலிருந்து வெளியேறினாள். “எங்கே போகிறாய்?” என்று கேட்க அப்போது அங்கு எவருமில்லை.

பாறையே உருகி ஆவியாவது போல, அனல் பறக்கும் நண்பகல் நேரம்.

மக்கள் நடமாட்டம் இல்லை.

படிகளில் தாவித் தாவி ஏறிக் குன்றின் உச்சியை அடைந்தாள் பாமா.

கோட்டைச் சுவர்மீது ஏறி நின்றாள்.

அவளின் அழகிய வதனம் கற்பாறை போல இறுகிக் கிடந்தது.

சில கணங்கள் அவள் பார்வை எங்கோ நிலைகுத்தி நின்றது. சற்று நேரம் எதையெதையோ யோசித்தாள்.

“இந்த முறை என் சாவு நிச்சயம்” என்று அவள் உதடுகள் முணுமுணுத்தன. குதித்துவிட முடிவெடுத்து, இரு கண்ணிமைகளையும் இறுக மூடிய போது..........................

‘விசுக்’கெனத் தான் பின்னுக்கு இழுக்கப்பட்டதை உணர்ந்தாள் பாமா. அடுத்த கணமே, இரு கரங்களின் இரும்புப் பிடியில் தான் சிக்குண்டு கிடப்பதையும் அவளால் உணர முடிந்தது.

மீனெனெத் துள்ளி நழுவி விடுபட்டு நின்றாள்.

அவளெதிரே, கார்காலத்துத் தெரு நாய்கள் போல நான்கைந்து முரடர்கள் பல்லைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தார்கள். களவாடிய பணத்தை வைத்து, அங்கே அந்த நேரத்தில் சூதாடும் ரவுடிக் கும்பல் அது.

“என்னம்மா பொண்ணு, காதல் தோல்வியா?” என்றான் ஒருவன்.

“காதல் பண்ணிக் கதையையும் முடிச்சுட்டுக் கம்பி நீட்டிட்டானோ அவன்?” என்றான் இன்னொருவன்.

“போனாப் போறான். கவலையை வுடு. நாங்க இருக்கோம்” என்று கண்சிமிட்டியபடி பாமாவை நெருங்கினான் மற்றொருவன்.

“ஐயோ.....” என்று அலற நினைத்தாள் பாமா. வறண்டுவிட்ட அவள் நாக்கு ஒத்துழைக்க மறுத்தது.

“கடவுளே...” என்று உள் மனம் அலற, உடல் நடுங்கப் பின்னோக்கி நகர்ந்தாள். கல்லொன்று அவள் கால்களை இடற மல்லாந்து சரிந்தாள்.

சரிந்து விழுந்த அவள் அதன் பிறகு எழவே இல்லை. கரைபுரண்டு வரும் காட்டாறெனப் பெருகிவிட்ட அந்த வெறி நாய்களின் வெறியுணர்ச்சி அவளை எழவிடவில்லை.

அந்த இளம் மொட்டு கசக்கிச் சீரழிக்கப்பட்ட போது, தன் முழுச் சக்தியையும் திரட்டி அவள் எழுப்பிய அவலக் குரலைப் பிறர் கேட்கவோ, அழகு கனிந்திட்ட இடங்களெல்லாம் கடித்துக் குதறப்பட்டு அவள் அலங்கோலமாய்க் கிடந்த காட்சியைப் பிறர் காணவோ இயலாதவாறு அந்தப் பழங்கோட்டை காவல் புரிந்தது.

பாவம் பாமா! அவள் சாவைத் தேடி ஓடினாள் என்பது உண்மைதான். அதற்காக இப்படியொரு சாவா?

அடக் கடவுளே!
********************************************************************************************************************

வியாழன், 23 நவம்பர், 2017

சொறிதலும் சொறிதல் நிமித்தமும்!

'ஒவ்வொரு உயிரின் வாழ்வும் தாழ்வும், வறுமையும் வளமும், நோயும் சுகமும், இறப்பும் மறுபிறப்பும் ஆண்டவனின் இயக்கமே தவிர வேறென்ன?'[அர்த்தமுள்ள இந்துமதம் 69ஆம் பதிப்பு, 2005; பக்கம்: 121] என்கிறார் கவியரசு கண்ணதாசன்.

கண்ணதாசனின், கடவுள் குறித்த   கருத்துகளில் இதுவும் ஒன்று. தொடர்ந்து, 'ஒரு தாயின் வயிற்றில் நாம் பிறக்க வேண்டிய நேரத்தை முடிவு செய்வதும் அவனே' என்கிறார் கவியரசு, 'நமக்குச் சூட்டப்பட வேண்டிய பெயரையும் அவனே குறிக்கிறான்' என்று  குறிப்பிடுவதோடு, 'மனிதராகப் பிறந்திருக்கிற எவருக்கும் பெயரிட்டவர் கடவுளேயாவார். .....தலையெழுத்தை ஆணுக்கு வலது உள்ளங்கையிலும் பெண்ணுக்கு இடது உள்ளங்கையிலும் சுருக்கெழுத்து போன்ற ரேகை பொறித்து.....' என்னும் மதுரை ஆதீனக்கர்த்தரின் கருத்தையும் மேற்கோள் காட்டுகிறார்.

தன் உள்ளங்கையிலிருந்த ரேகையைப் படித்திருப்பாரா கவிஞர்? 'ஆம்' என்றால் அதைப் பிரதி எடுத்து இந்த நூலிலும் இணைத்திருக்கலாம். மறந்துவிட்டார் போலும்!

தனக்குப் பெற்றோர் வைத்த 'முத்தையா' என்னும் பெயரும், 'கண்ணதாசன்' என்னும் புனைபெயரும்கூட, தான் தன் தாய் வயிற்றில் கருவாக வளரும்போதே இறைவனால் குறிக்கப்பட்டது என்கிறார்.

முத்தையா என்பது வைத்தீஸ்வரன் கோயில் சாமி பெயராம்!

கவிஞர் உயிரோடு இருந்தால், "வைத்தீஸ்வரன் சாமிக்குப்[சாமிக்கே] பெயர் சூட்டியது எந்தக் கடவுள்?" என்று கேட்கலாம். அவர் காலமாகிப் பல ஆண்டுகள் கழிந்துவிட்டதால் அதற்கு வாய்ப்பில்லை.

அனைத்துப் பிரபஞ்ச நிகழ்வுகளுக்கும் கடவுளே காரணம் என்கிறார் கண்ணதாசன். அவ்வாறாயின் அந்த இறைவன் மனிதனுக்கு ஆறறிவைத் தந்தது ஏன்?

சுயமாகப் பெயர் சூட்டுவதற்குக்கூடப் பயன்படவில்லை என்றால், ஆறாவது அறிவு எதற்கு?

எதற்கு.....?

உடம்பில் அரிப்பெடுத்தால் சொறிந்துகொள்வதற்கா?

அரிப்பை உண்டாக்குபவனும் கடவுளே; சொறிந்துகொள்ளத் தூண்டுபவனும் அவனே என்கிறீர்களா?

உண்மைதான். எல்லாம் அவன் செயல்தான்.

அவனின்றி அணுவும் அசையாது. நம் ஆறறிவைப் பயன்படுத்திச் சுயமாகச் சொறிந்துகொள்ளக்கூட இயலாது!

செவ்வாய், 21 நவம்பர், 2017

போற்றி...போற்றி! ஏழுமலையான் திருவடி போற்றி!!

குங்கமப்பூ ஸ்பெயினிலிருந்தும், கஸ்தூரி நேபாளத்திலிருந்தும், புனுகு, கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம்[?], நிரியாசம்[?] போன்றவை சீனாவிலிருந்தும் மேலும் சில வாசனைத் திரவியங்கள் பாரீசிலிருந்தும்.  ரோசாப்பூ[ஒரு பூவின் விலை ரூ80] ஐரோப்பாவிலுள்ள  ஆம்ஸ்ட்ராங்கிலிருந்தும் வரவழைக்கப்படுகின்றன['பாக்யா', அக்டோபர் 06-12; 2017] வார இதழ்ச் செய்தி].

பெரும் பொருட் செலவிலான இந்த இறக்குமதிகள் யாருக்காக? எதற்காக?

திருப்பதி ஏழுமலையான் என்னும் குபேரக் கடவுளுக்காக; அவருக்கு அபிஷேகம் செய்வதற்காக.

ஏழுமலையான் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய். இவற்றை இருப்பில் வைப்பதற்குப் போதுமான இடம் இல்லையாம்.

மேட்டுக்குடிக் கடவுளான இவருக்குச் சாத்தியிருக்கும் சாளக்கிராமத் தங்க மாலை 12 கிலோ எடை கொண்டதாம். மூன்று திடகாத்திரமான அர்ச்சகர்கள் சேர்ந்துதான் சாத்த முடியுமாம்.

சூரிய கடாரியின்[?] எடை 5 கிலோ என்கிறார்கள். ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்புக் கொண்டதாம்.

இத்தனை பெரிய கோடி கோடி கோடீஸ்வரக் கடவுளுக்கான அபிஷேகத்துக்கு உள்ளூர் வாசனைப் பொருள்களைப் பயன்படுத்துவது மரியாதைக் குறைவு அல்லவா? அதனால்தான் பல்வேறு உலக நாடுகளிலிருந்து செய்யப்படுகிறது இந்த இறக்குமதி. தினமும் அபிஷேகம்தான். ஓர் அபிஷேகத்துக்கு மட்டும் ரூபாய் ஒரு லட்சம் ஆகிறதாம்.

இந்தப் பணக்காரக் கடவுள், அபிஷேகத்தின்போது மூன்றாவது கண்ணைத் திறந்து பார்ப்பது போன்ற அதிசயங்களையும் நிகழ்த்துகிறாராம். குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும்போது இவருக்கு வியர்ப்பதாகவும், பட்டு பீதாம்பரத்தால் அதை அர்ச்சகர்கள் துடைப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இப்படி அபூர்வ சக்திகள் வாய்த்த கடவுளாக இவர் இருப்பதால்தான், 'உள்சாத்து' வஸ்திரம் அணிவிப்பதற்காக ரூபாய் 20 ஆயிரம் செலுத்தி, 10 ஆண்டுகள் வரை காத்திருக்கிறார்கள் பக்தகோடிகள். 'மேல்சாத்து' வஸ்திரம் சாத்துவதற்காக, 12500 ரூபாய் செலுத்தி 3 ஆண்டுகள் காத்திருக்கிறார்கள்.

சாத்து வஸ்திரம் போர்த்துவதற்காகப் பெருந்தொகை செலவழிப்பதோடு மிகப் பல ஆண்டுகள் காத்திருக்கும் பக்தர்களும், அர்ச்சனை அபிஷேகம் ஆராதனை என்று தத்தம் இறைப்பணியைச் செவ்வனே செய்துவரும் அர்ச்சகர்களும்[?] வேண்டுகோள் வைத்தால்.....

மூன்றாம் கண்ணைத் திறந்து பார்க்கிற ஏழுமலையான் கண்டிப்பாக வாய் திறந்து பேசவும் செய்வார்.

பேசினால் என்னவெல்லாம் பேசுவார்?

"நான் கடவுள். உங்களின் பாரம்பரியமான உபசரிப்புகள் போதா. மண்ணுலக வாசனைத் திரவியங்களைத் தவிர்த்துத் விண்ணுலக வாசிகளின் தயாரிப்பான அமிழ்தத்தால் என்னைக் குளிப்பாட்டுங்கள். அவர்கள் அணியும் ஆபரணங்களால் என்னை அலங்கரியுங்கள்" என்று சொல்வாரா?  அல்லது.....

"அனைத்தையும் படைத்தவன் நான். விருப்பு வெறுப்பு அற்றவனும்கூட. புகழ்மொழிக்கும் வழிபாட்டுக்கும் நேர்த்திக்கடன்களுக்கும் மயங்குபவனல்ல. அபிஷேக ஆராதனைகளாலும் அலங்கரிப்புகளாலும் என்னை  மகிழ்வித்துப் பயனடையும் எண்ணத்தைக் கைவிட்டு, சக மனிதர்களையும் பிற உயிர்களையும் நேசிக்கப் பழகுங்கள்" என்பாரா?

என்னதான் பேசுவார் கடவுள்?

ஒரே ஒருதடவை வேண்டுகோள் வைக்கலாமே! செய்வார்களா?

திங்கள், 20 நவம்பர், 2017

உயிரே...என் உயிரே! நீ போகுமிடம் சொல் ஆருயிரே!!

கடவுள் குறித்த ஆய்வுகளைக் காட்டிலும் ‘உயிர்’ பற்றிய ஆய்வுகளே மனித குலத்தின் மேன்மைக்குப் பெரிதும் பயன்படுவனவாக அமையும்.

கடவுள் உண்டா  என்னும் கேள்விக்கு இன்றுவரை விடை இல்லாதது போலவே, மரணத்திற்குப் பிறகு உடம்பிலிருந்து, உயிர், ஆவி, ஆன்மா என்னும் இவற்றில் ஏதோ ஒன்று வெளியேறுகிறதா என்ற கேள்விக்கும் விடையில்லை.

‘புதிதாகப் பிறந்த குழந்தைக்கு மண்டையோட்டின் குறிப்பிட்ட பகுதி இன்னமும் சரியாக உருவாகாமல் இருப்பதை கவனிக்க முடியும். அந்தப்பகுதி இன்னமும் தோலாகத்தான் இருக்கிறது, எலும்பு உருவாகவில்லை. இந்தப் பகுதி யோகாவில் ‘பிரம்மரந்த்ரா’ அல்லது ‘ரந்த்ரா’ என அழைக்கப்படுகிறது. அதற்கு சிறிய துவாரம் அல்லது வழி என்று பொருள். கருவில் குழந்தை வளரும்போது இந்தப் பகுதி வழியாகத்தான் உயிர் அந்த குழந்தைக்குள் இறங்குகிறது. இறங்கிய உயிர் இந்த(குழந்தையின்) உடல் தன்னை தாங்கக்கூடிய அளவில் இருக்கிறதா என்று தொடர்ந்து கவனிக்கிறது. அந்த அளவிற்கு அதற்கு விழிப்புணர்வு இருக்கிறது. தன் இருப்பிற்கு அந்த உடல் தகுதியானதல்ல என்று அது கருதினால் தான் வந்த வழியாகவே திரும்பிப் போய்விடும்’[இன்னொரு உடம்பிலிருந்து விடுபட்ட ஒன்றா அது? சிந்திக்கும் ஆற்றல் பெற்றதா? புதிய உடம்பில் புகும்வரை பரந்த வெளியில் அலைந்துகொண்டிருக்குமா? எங்கு? எங்கெல்லாம்? இப்படி அலையும் உயிர்களின் எண்ணிக்கை என்ன? கணக்கிட்டது யார்? யாரெல்லாம்? இப்படி இன்னும் பல கேள்விகள் உள்ளன].  [http://isha.sadhguru.org/blog/ta/udalil-uyir-nulaiyum-ragasiyam/] என்று அறிவியல் அடிப்படையிலான நிரூபணம் ஏதுமின்றி, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் கதையளந்து, தம்மைப் பிரபலப்படுத்திக்கொள்வதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது!

கடவுள் என்று ஒருவர் இருப்பதையோ, சாவுக்குப் பிறகு, மேற் சொன்னவற்றுள் ஏதோ ஒன்று உடம்பிலிருந்து வெளியேறுகிறது என்பதையோ நம்பாதவர்கள்கூட, மரணத்தை எண்ணி அஞ்சவே செய்கிறார்கள்.

பெரும் பெரும் மாற்றங்களுக்கு உள்ளானாலும்கூட, பிரபஞ்ச வெளியில் ஏதேனும் ஒன்றோ பலவோ இருந்து கொண்டே இருக்கும். வகை வகையான நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்யும். நாம் மட்டும் இனி எக்காலத்துக்கும் இல்லாமல் போகிறோம். பார்த்த எதையும் இனி பார்க்கவே முடியாது; அனுபவித்த எதையும் இனி அனுபவிக்கவே முடியாது. இம்மாதிரியான அவலங்களுக்கு நாம் உள்ளாவது ஏன்? யார் காரணம்? எது காரணம்? இப்படிப் பலவாறாக எண்ணி மயங்கி அஞ்சி அஞ்சி வாழ்கிறது மனித குலம்.

இந்தவொரு அச்சத்திலிருந்து என்றாவது ஒரு நாள் விடுபட இயலுமா?

“இயலும்” என்று அறிவியல் சொல்லும் காலம்  வருமா?

யாருக்கும் தெரியாது.

அதுவரை......................

‘உயிர்’ பற்றிய ஆய்வுகளும் விவாதங்களும் தவிர்க்க இயலாதவை.

இம்மண்ணில் தோன்றி வாழ்ந்து மறைகின்ற அனைத்து ‘வாழ்வன’ வற்றையும் ‘உயிர்கள் என்று அழைக்கிறோம்.

உயிர்களின் தோற்றம் பற்றி ஓரளவுக்கு அறிவியல் கற்ற அனைவருக்கும் தெரியும்.

ஆணின் ‘உயிரணு’வும் பெண்ணின் ‘சினை முட்டையும் ’ இணைந்து புதிய ஓர் ’உயிர்’ உருவாகிறது.

புதிய உயிர்கள் உருவாவதற்குக் காரணமான உயிரணு, சினை முட்டை ஆகியவை என்றும் அழியாத ‘நிலைபேறு’ கொண்டவை அல்ல.

சினை முட்டையில் சங்கமம் ஆகும் உயிரணுவைத் தவிர, ஆண் வெளியேற்றும் விந்துவிலுள்ள கோடிக்க கணக்கான உயிரணுக்கள் தோன்றிய சில கணங்களிளேயே அழிந்து போகின்றன.

பெண்ணின் உடம்பில் உற்பத்தியாகும் சினை முட்டைகளும் அழியும் தன்மை கொண்டவையே.

ஆக, அழியும் தன்மை கொண்ட ஓர் உயிரணுவும் ஒரு சினை முட்டையும் பெண்ணின் கருப்பையில் இணைந்து, ஓர் உடம்பைப் பெற்று, மண்ணில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் பிறந்து வளர்ந்து வாழ்வதன்  மூலம், ‘தற்காலிகமாக’  அவை ’அழிவிலிருந்து’ தப்பிப் பிழைக்கின்றன.

வாழ்ந்து முடித்து..................................

அழிவிலிருந்து தற்காலிகமாகத் தப்பிப் பிழைத்த அவை, உடம்பு அழியும்போது நிரந்தரமாக அழிந்து போகின்றன. பல கோடி உயிரணுக்களும் சினை முட்டைகளும் தோன்றிய சில கணங்களிலேயே அழிந்து போக, விதிவிலக்காக, அவற்றினும் மிக மிக மிகக் குறைந்த எண்ணிக்கையிலான உயிரணுக்களும் சினை முட்டைகளும் இரண்டறக் கலப்பதன் மூலம் தம் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கின்றனவே தவிர, அவை அழிவிலிருந்து தப்பிப் பிழைப்பதில்லை.

ஆக, தோற்றம் கொண்ட அனைத்து உயிரணுக்களும் சினை முட்டைகளும் ஏதோ ஒரு நிலையில் அழிந்து போவதென்பது தவிர்க்கவே இயலாத ஒன்று என்பது தெளிவாகிறது.

இதுவே இயற்கை நியதி.

உண்மை இதுவாக இருக்கையில், ‘உயிர் என்றும் அழியாதது; உடம்பு அழியும் போது அது அங்கிருந்து வெளியேறுகிறது என்று நம்புவது அடிப்படை ஆதாரங்களற்ற அனுமானம்தான்.

கரு உருவாகும் போது ஆன்மா என்ற ஒன்று அதனுள் புகுந்து விட்டது; உடம்பு அழியும் போது அதிலிருந்து வெளியேறுகிறது எனச் சொல்வதற்கும் கூட அடிப்படை ஆதாரங்கள் ஏதுமில்லை. [இது பற்றி இரண்டு பதிவுகள் எழுதியுள்ளேன். ஆன்மாவும் மறுபிறப்பும் http://kadavulinkadavul.blogspot.com/2011/10/blog-post.html , ஆன்மாவுடன் ஓர் உரையாடல் http://kadavulinkadavul.blogspot.com/2011/11/blog-post_16.html ]

இம்மாதிரியான அனுமானங்களைச் செய்வதற்கும் அவற்றை நம்புவதற்கும் அடிப்படைக் காரணம்........................

ஆசைதான். ஏதேனும் ஒரு வடிவில் நிரந்தரமாய் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்னும் ஆசைதான்.

ஆசைப்படுவதில் நியாயம் இருக்கிறது. அது ‘உண்மை’ ஆவது சாத்தியமா?

 அறிவியலால் அது சாத்தியப்படும் காலம் வருமா?

அதற்குக் ’காலம்’தான் பதில் சொல்ல வேண்டும்.

அதுவரை,  கடவுள், பாவம் புண்ணியம், சொர்க்கம் நரகம், மறுபிறப்பு என்று எதைஎதையோ நம்பி எண்ணற்ற மூட நம்பிக்கைகளுக்கு ஆளாகி, இருக்கிற கொஞ்சம் வாழ்நாளை  வீணடிக்காமல், தமக்கும் பிறருக்கும் நன்மை தரும் வகையில் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.
*******************************************************************************************************************
மிகப் பழைய பதிவு. புதுப்பிக்கப்பட்டது.

சனி, 18 நவம்பர், 2017

பெண்களுக்குக் ‘கற்பு’ ஏன்? கண்ணதாசன் கண்டறிந்த உலக நீதி!!!

#ஒருவன், தனக்குச் சொந்தமான நிலத்தை உழவு செய்து ‘வித்து’ இடுகிறான்[பயிர் செய்கிறான்]. அந்நிலத்தில் விளையும் பொருள் அந்த நில உரிமையாளனுக்குத்தான் சொந்தம்[இது உலக நீதி]. அது போல.....

மனைவி என்பவள் கணவனின் ‘உடைமை’. மனைவி என்னும் நிலத்தில் ‘வித்து’ இடுபவன் கணவன். எனவே, மனைவி பெற்றெடுக்கிற குழந்தைகள் கணவனின் குழந்தைகள் ஆகின்றன. அதனால்தான்.....

“நீ யாருடைய பிள்ளை?” என்று கேட்டால் தந்தை பெயரைச் சொல்கிறோம். இன்னும் சொல்லப்போனால், தந்தை யார் என்பதைத் தாயார் சொல்லித்தான் அறிகிறோம்; அவரைத் தந்தையாக ஏற்கிறோம். தாயாருக்கே தான் பெற்ற பிள்ளையின் தகப்பன் யார் என்பது தெரியாவிட்டால்[?!] தாயார் பெயர் சொல்வதைத் தவிர வேறு வழி இல்லை#

‘ஆணுக்குப் பெண் அடிமையல்ல’ என்னும் உண்மையை ஏறத்தாழ உலகம் ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், பெண் என்பவள் ஆணுக்குச் சொந்தமான விளைநிலம் ஆவாள்’ என்னும் பத்தாம்பசலித்தனமான கருத்துக்குச் சொந்தக்காரர் வேறு யாருமல்ல; மறைந்த கவிஞர்[இவர் சிறந்த கவிஞர் என்பதில் சந்தேகமில்லை] கண்ணதாசன்தான்.

தன்னுடைய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் நூலில் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரியாரின்  கருத்தை மேற்கோள்  காட்டி அதைப் பாராட்டவும் செய்கிறார் கவிஞர்.

‘மனைவியானவள் கணவனின் உடைமை ஆதலால், அவள் கற்பு நெறி பிறழாமல் வாழ்வது அவசியம்; அது உலக நீதி’ என்றும் வலியுறுத்தியிருக்கிறார் கவியரசர் கண்ணதாசன்.

இப்படிப் பல அபத்தமான கருத்துகளின் தொகுப்புத்தான் கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’[‘கண்ணதாசனின் அர்த்தமற்ற இந்துமதம்’என்னும் தலைப்பில் நூல் இருப்பதை அறிவேன். அதை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை].

இந்நூலில், பெரும்பான்மை மக்களின் மனங்களில் ஆழமாய்ப் பதிந்துவிட்ட மூடநம்பிக்கைகளுக்குப் பகுத்தறிவு முலாம் பூசியிருக்கிறார் கவிஞர்.

எளிய இனிய கவித்துவ நடையைக் கையாண்டு, மூடநம்பிக்கைகளைத் திணிப்பதில் கண்ணதாசன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றும் சொல்லலாம். பல்லாயிரக்கணக்கில் இந்நூல் விற்பனையாகியிருப்பதே இதற்குச் சான்று[இப்பதிவுக்குப் பயன்பட்டது ‘கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்’, அறுபத்து ஒன்பதாம் பதிப்பு: ஃபிப்ரவரி, 2005].

தற்காலிக அல்லது, இறுதி மூச்சுவரை நீடிக்கிற துன்பங்களைத் தாங்குவதற்கான மன உறுதியைப் பெறுவதில் நம் மக்களுக்கு நாட்டமில்லை; அது குறித்துச் சிந்திப்பதும் இல்லை. கடின உழைப்பின் மூலம் பெற வேண்டியவற்றைக் கடவுளை வழிபடுதல், ஜோதிடனின் வழிகாட்டு நெறிகளைப் பின்பற்றுதல் என்று குறுக்கு வழிகளில் பெற நினைக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருப்பதுதான் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ போன்ற நூல்கள் பல்லாயிரக் கணக்கில்  விற்பனையாவதற்கான காரணம் ஆகும்.

கண்ணதாசன் போன்ற ஆன்மிகப் பரப்புரையாளர்களையே பெரும்பாலான ஊடகங்களும் ஆதரிக்கின்றன; மிகச் சிறுபான்மையினராக உள்ள பகுத்தறிவாளர்களைச் சீந்துவதே இல்லை. 

ஊடகங்களைத் திருத்தும் முயற்சியில் சிறுபான்மைச் சிந்தனையாளர்கள்[எண்ணிக்கை என்ன?] ஈடுபடுவார்களா? அவர்களின் முயற்சி எள்ளளவேனும் பலன் தருமா?

ஆழ்ந்து சிந்தித்தால் கவலைதான் மிஞ்சுகிறது.

காலம் ஒரு நாள் மாறும்[?]. காத்திருப்போம்.

[அர்த்தமுள்ள இந்துமதத்தால் விளையும் அனர்த்தங்கள் குறித்து வாய்ப்புக் கிட்டும்போதெல்லாம் எழுதுவேன்].

நன்றி.

வியாழன், 16 நவம்பர், 2017

காந்தி கண்ட கனவும் சிங்கப்பூர்ப் பெண்களும்!....[பத்து வரிப் பதிவு]

‘அழகான இளம் பெண்கள், நகையணிந்து நட்ட நடு இரவில் அச்சமின்றித் தன்னந்தனியாக நடந்து செல்லும் நிலை உருவாகும்போதுதான் நம் நாடு சுதந்திரம் பெற்றதாகக் கருத முடியும்’ என்றார் காந்தியடிகள்.

காந்தி கண்ட கனவை அவர் வாழ்ந்த இந்தப் புண்ணிய பாரதம் நனவாக்கவில்லை. குட்டி நாடான சிங்கப்பூர் அதைச் சாதித்திருக்கிறது. வாழ்க சிங்கம் நிகர் ‘சிங்கை’ ஆடவர்கள்!

சிங்கப்பூரில்.....

#பெண்கள், குறிப்பாக, நகையணிந்த  இளம் பெண்கள் தத்தம் பணி முடித்து, நடந்தோ வாகனங்களை ஓட்டிக்கொண்டோ நள்ளிரவில் கொஞ்சமும் அச்சமின்றி வீதிகளில் செல்கிறார்கள்#

நன்றி: பேரா.பா.சீதாராமன், ‘சிங்கையில் 50 நாட்கள்’, ஸ்ரீவிவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை, தர்மபுரி. முதல் பதிப்பு: 2008.

செவ்வாய், 14 நவம்பர், 2017

அடச்சீ...த்தூ...இவர்களா உங்கள் எதிர்காலத்தைக் கணிக்க உதவும் கடவுள்கள்?!?!

“ஜோதிடம் ஓர் அறிவியல் கலையே” என்று  வாதிடும் இன்றைய ஜோதிடர்கள் பலரும், நவக்கிரகங்களைக் கடவுள்களாக உருவகித்தே ஜாதகம் கணித்துப் பலன் சொல்லுகிறார்கள். 

நவக்கிரகங்கள் கடவுள்களா?

இந்தக் கடவுள்களின் அவதாரம் பற்றிய வேதபுராணக் கதைகளை இங்கே தொகுத்திருக்கிறேன். படித்து முடித்து, இவர்களெல்லாம் கடவுள்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

சூரியன்:
இந்தக் கடவுள், காசியப முனிவருக்கும் ‘அதிதி’ என்கிற பெண்ணுக்கும் மகனாகப் பிறந்ததால், ‘ஆதித்தன்’[சூரியனின் வேறு பெயர்] என்ற பெயரைப் பெற்றான் [பாரதம்]. அதிதி 12 சூரியன்களைப் பெற்றதாகவும்  ஒரு சூரியனே மாதந்தோறும் வேறு வேறு கோலம் பூணுவதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

[சூரியன் தோன்றுவதற்கு முன்பே காசியபர் போன்ற மானுடர்கள் தோன்றியது எப்படி என்று கேள்வி கேட்கத் தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு?]

மார்க்கணடேய புராணம் சொல்லும் இன்னொரு கதை.....

இருள் மயமான இந்த அண்டத்தைப் பிரமன் பிளந்தான்[எதற்கு?]. அப்போது ‘ஓம்’ என்ற ஒலி உண்டாயிற்று. அந்த ஒலியிலிருந்துதான் சூரியன் தோன்றினான். 

[கற்பனையானவை எனினும் மேற்கண்ட கதைகள் சுவாரசியமானவை என்பதில் சந்தேகமில்லை].

சந்திரன்:
வில்லிபுத்தூரார் சொல்கிறார்: “எங்கள் இறைவனாகிய திருமாலின் இருதயத்திலே பிறந்தவன் இவன்; நாள்தோறும்[?!?!?!?!?!] வானில் உள்ள நட்த்திர மங்கையரைக் கூடிக் குலபுபவன்.....”

இவனின் பிறப்பை விவரிக்கும் இதனினும் சுவையானதோர் அதிசயக் கதை.........

‘அத்திரி’ என்னும் பெயர் கொண்ட முனிவர் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரிடமிருந்து வெளிப்பட்ட ‘விந்தணு’அவரின் உள்ளுறுப்புகள் வழியாக மேல் நோக்கிச் சென்று அவரின் கண் வழியாக வெளிப்படலாயிற்று.

அதனைக் கண்ணுற்ற இந்திரன், ஒரு பெரிய யோகியின் விந்தணு வீணாவதைத் தவிர்க்க, அதைத் தன் கரங்களில் ஏந்தி[கர்மம்...கருமாந்தரம்...] ப் பக்குவமாய் ஒரு பாத்திரத்தில் சேமித்துத் தன் [இந்திர]விமானத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தான். அவ்விந்தணுவே காலப்போக்கில் சந்திரனாய் உருக்கொண்டது.

செவ்வாய்:
‘அங்காரகன். எனப்படும் செவ்வாய்க்கு, ‘மங்களன்’, ’ ‘குஜன்’ முதலான வேறு பெயர்களும் உண்டு.

சிவபெருமான் உமையம்மையைப் பிரிந்திருந்த காலத்தில், ஒரு நாள், அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து வேர்வை வெளிப்பட்டுப் பூமியில் விழுந்தது. அந்த வியர்வையே பின்னர் சந்திரனாக உருவெடுத்தது. இவனை நிலமகள் வளர்த்து ஆளாக்கினாள்.
[மனித உயிர்கள் தோன்றுவதற்கு விந்தணு தேவைப்படுகிறது. ஆனால், தேவர்களின் பிறப்புக்கு வெறும் வியர்வையே போதும் போலிருக்கிறது!]

பாரத்துவாச முனிவரின் விந்தணுவிலிருந்து சந்திரன் தோன்றினான் என்பதும் மற்றுமொரு புராணக்கதைதான்!

புதன்:
‘தாரை’ என்பவள் குருபகவானின் மனைவி. இவள் சிலகாலம் சந்திரனின் அழகில் கிறங்கி மயங்கி, அவனுடன் தாம்பத்திய சுகத்தை அனுபவித்தாள்; கருவுற்றாள்.

கருவுற்ற நிலையில் மீண்டும் குருபகவானோடு இணைந்து இல்லற இன்பம் துய்க்கலானாள்[அடத் தூ.....!]. இந்நிலையில் புதனைப் பெற்றெடுத்தாள்.

‘குழந்தை யாருக்குப் பிறந்தது?’ என்ற ஐயம் பலருக்கும் எழவே, “இக்குழந்தைக்குச் சந்திரனே தந்தையாவான்” என்று அறிவித்தாளாம் தாரை.

[தேவருலகில் எந்த அளவுக்குப் பெண்ணுரிமை போற்றப்பட்டிருந்தது பார்த்தீர்களா?]

இந்த உண்மையைப் பலரும் அறியும் வகையில் பிரமதேவனே அறிவிப்புச் செய்ததாகவும் புராணங்கள் சொல்லுகின்றன.

பிருகஸ்பதி [எ] வியாழ பகவான்:
தேவர்களுக்கெல்லாம் ஆசானாக விளங்கிய ‘குரு’வைத்தான் இவ்வாறு அழைப்பார்கள். இச்சொல்லுக்கு ‘அறிவில் சிறந்தவன்’ என்பது பொருள்.

பிரமதேவனின் பிரியத்திற்குரிய புத்திரர்களில் ஒருவரான ஆங்கீரச முனிவரின் மகன் இவன். தாய் பெயர் சிரத்தா தேவி.

பிருகஸ்பதி பொன் வண்ண மேனி கொண்டவராம். நான்கு திருக்கரங்களை உடையவராம்[இரண்டு போதாதா?].

சுக்கிரன்:
இவர் பிருகு முனிவரின் திருமகனாக உதித்தவர்; அசுரர்களின் குரு.

முழுமுதல் கடவுளான சிவபெருமானின் திருவயிற்றில் தங்கியிருந்து ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிந்த அதிசயப் பிறவி இவர்![ஹே.....என்ன அதிசயம்!] இயல்பான தன் உடலிலிருந்து வெளி்யேறி, அந்தணன், அரசன், வேடன், மலைப்பாம்பு என்று பல உருவங்கள் பெற்று அலைந்து திரிந்து ஞானம் பெற்று, காலனின் ஆணையால் அசுரர்களுக்குக் குருவானான் என்பது கதை.

சனி:
இவன் சூரியனின் மகனாவான்.

சூரியன், சஞ்ஞிகை என்பாளை மணந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றான்.
சூரியனிடமிருந்து வெளிப்பட்ட சூட்டைத் தாங்கும் சக்தியில்லாத சஞ்ஞிகை, தன் நிழலையே ஒரு பெண்ணாக்கி அங்கே விட்டுவிட்டுத் தன் தந்தையிடம் சென்றாள்.

அந்த நிழல் பெண்ணுடன்  சூரியன் புணர்ந்ததால்[நம் காதில் பூ!] பிறந்தவனே ‘சனி’ ஆவான்.

ராகு & கேது:
‘விப்பிரசித்தி’ என்னும் அசுரனுக்கும் ‘சிம்ஹிகை’ என்பவளுக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு.

அசுரரும் தேவரும் பாற்கடலைக் கடைந்ததால் கிடைக்கப் பெற்ற அமுதத்தை அசுரர்கள் பருகுவதைத் தடுக்க நினைத்தார் திருமால். மோகினியாக வடிவெடுத்து, இனிமையாகப் பேசி, எல்லோரையும் வரி்சையில் அமரச் சொன்னார். வரிசையில் முந்துவதற்கு அசுரர்கள் முண்டியடித்த நிலையில் தேவர்களுக்கு மட்டும் அமுதம் வழங்கினார். இதைக் கண்ணுற்ற ராகு, தேவ உருக்கொண்டு அமுதம் பெற்றுப் பருகினான். உண்மை வெளிப்பட்டபோது, திருமாலின் சக்ராயுதத்தால் அவன் தலை துண்டிக்கப்பட்டது.

தலையுடன் இரண்டு கைகளும் சேர்ந்து விழுந்தன. மற்றொரு பகுதி ஒரு தேசத்தில் விழுந்தது. அமுதம் பருகிய காரணத்தால் ராகு சாகாமல் இரு வேறு உருவங்களில் ராகுவாகவும் கேதுவாகவும் வளர்ந்தான்.

இவன் சூரிய சந்திரர்கள் மீது பகை கொண்டு அவர்களைப்பீடிக்கத் தொடங்கினான். கிரகணம் என்பது இதுதான்.

உண்மையில், ராகு கேது என்னும் பெயர்களில் கிரகங்கள் இல்லை. இவற்றைச் ‘சாயாக் கிரகங்கள்’ என்று சொல்லி ஜோதிட வல்லுநர்கள்[கில்லாடி ஜோதிடர்கள்!] சமாளிக்கிறார்கள்.

சனி, 11 நவம்பர், 2017

தியானமும் மயானமும்!!!

'தியானம் என்பது மனம் அமைதி பெற அதை ஒருநிலைப்படுத்திச் செய்யப்படும் பயிற்சி ஆகும்.'  -தியானத்திற்குத் ‘தமிழ் விக்கிப்பீடியா’ தரும் சுருக்கமானதொரு விளக்கம் இது.

தியானம் செய்வது குறித்துக் கூகிளிலும் புத்தகங்களிலும் பல்வேறு விளக்கங்கள் காணப்படுகின்றன. ஆனால், அவற்றில் எந்த ஒன்றையும்  புரிந்துகொள்வது எளிதாக இல்லை.

#rightmantra.com என்னும் தளம், ‘உங்கள் உணர்வு மையத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லவும். அங்கே 12 இதழ்கள் கொண்ட சிவப்புத் தாமரை இருப்பதாகக் கற்பனை செய்யவும். அதில் உங்கள் இஷ்ட தெய்வம் வீற்றிருப்பதாக எண்ணவும். அந்தத் தெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரிக்கவும். இது உங்கள் உடலையும் உள்ளத்தையும் அமைதிப்படுத்தும்’ என்கிறது# 

அதென்ன ‘உணர்வு மையம்’? புரியவில்லையே. இதுவே புரியாத நிலையில் சிவப்புத் தாமரையைக் கற்பனை செய்வது எப்படி? இஷ்ட தெய்வத்தை அங்கே அமர்த்துவது எப்படி? கடவுளின் இருப்பே சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில் இம்மாதிரியான தியான முறைகள் பித்துக்குளித்தனமானவை. 

#நல்ல இடத்தை தேர்ந்தெடுத்துக்கொண்டு அந்த இடத்தில் ஊதுபத்தி ஏற்றி விட்டு ஆசனத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். அமர்ந்த பின் உங்களால் முடிந்தவரை மூச்சுக் காற்றினை நாசியின் வழியாக வேகமாக உள்ளிழுத்து வேகமாக வெளியிடவும். காற்றை உள்ளிழுப்பதும், வெளியிடுவதும் சம அளவில் இருக்க வேண்டும். இப்பயிற்சியினை ஒரு நிமிடம் வரை செய்யலாம்.

இப்பயிற்சி முடிந்ததும் அமைதியாக இருந்து உங்கள் மூச்சுகாற்று சாதாரண நிலைக்கு வந்தபின் மனதில் உதடுகள் அசையாமல்,

“நான் தளர்வாக இருக்கிறேன.

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நான் தயாராக இருக்கிறேன்.

என் மனம் முழுவதும் என் மூச்சுக்காற்றின் மீது கவனமாக இருக்கிறது.

நான் இடைவிடாமல் விழிப்புணர்வோடு என் மூச்சுகாற்றினை கவனித்துக்கொண்டு இருக்கிறேன்” 
என்று  மனம் உருகிச் சொல்ல வேண்டும்.

நீங்கள் பத்மாசனத்திலோ அல்லது வஜ்ஜிராசனத்திலோ அமர்ந்து ஐந்து நிமிடம் மட்டுமே செய்ய வேண்டும். ஆசனம் தெரியாதவர்கள் சப்பணமிட்டு அமர்ந்த நிலையில் முதுகுத்தண்டை நேராக வைத்துக்கொண்டு உடல் அசைவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன வார்த்தைகளை மனதில் ஒரு நிமிடம் பதியும்படி சொல்லவும். இவ்வார்த்தைகளுக்குத் தகுந்தாற்போல் நம் மனம் அமைய வேண்டும். ஏழு நாட்களில் நாம் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏற்றார் போல் உடலும் மனமும் அமையும்# என்றிப்படிச் சொல்பவர்களும் உண்டு[http://www.eegarai.net/t3077-topic.

மூச்சுக்காற்றை இழுத்துவிடுவது நல்ல உடல்நலப் பயிற்சிதான்; ‘யோகா’வில் சேர்த்தி. எளிதாகச் செய்துவிடலாம். தளர்வாகவும் மகிழ்ச்சியாகவும் தயாராகவும்[எதற்கு?] இருக்கிறேன் என்றெல்லாம் சொல்வதும் அரிய செயலல்ல; சொல்லிவிடலாம். மூச்சுக் காற்றைக் கவனித்துக்கொண்டிருக்கிறேன்னு சொல்லணுமாமே, அது எதற்கு?

மூச்சுக் காற்றை ஏன் கவனிக்கவேண்டும்? 


மனம் உருகிச் சொல்லணுமாம். சொன்னால் ஏழு நாட்களில் மன அமைதி கிட்டுமாம்.  கிட்டுமா?


ஊஹூம்...பைத்தியம்தான் பிடிக்கும்.

நம் சத்குரு ஜக்கி வாசுதேவ் அய்யா தியானம் பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். அவற்றின் சுருக்கம் கீழே.....

#கண்களை மூடிக் கொண்டு அமர்வதை தியானம் என்கிறார்கள். கண்களை மூடிக் கொண்டு நீங்கள் பல விஷயங்களைச் செய்ய முடியும். சிலவற்றின் மீது கவனத்தைக் குவிக்க முடியும், ஒரு மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருக்க முடியும். இப்படி பல விஷயங்கள் உள்ளன. ‘நீங்கள்’ என்பது என்ன? தற்போதைய நிலையில் உங்களுக்கு உடல் இருக்கிறது, எண்ண ஓட்டங்கள் உள்ளன, உணர்ச்சிகள் உள்ளன. இந்த மூன்று அடிப்படைத் தன்மைகளைத்தான் ‘நான்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள், இல்லையா? 

இந்த உடலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள்? நீங்கள் பிறக்கும் போது இவ்வளவு சிறிதாக இருந்தீர்கள். இப்போது இவ்வளவு பெரிதாய் வளர்ந்திருக்கிறீர்கள். எப்படி? சாப்பாட்டின் மூலமாகத்தான், இல்லையா? எனவே உடல் என்பது ஒரு சாப்பாட்டுக் குவியல்தான். நீங்கள் சாப்பிட்ட சாப்பாடு தான் இங்கே ஒருவித உடலாக அமர்ந்திருக்கிறது. மனம் என்று எதைச் சொல்லுகிறீர்கள்? மனம் என்பது நீங்கள் பார்த்த, கேட்ட, நுகர்ந்த, சுவைத்த, தொட்டதன் மூலமாக பதிந்த பதிவுகளின் குவியல்தான். ஐம்புலன்களின் மூலமாகச் சேர்ந்தவற்றை மனம் என்கிறீர்கள். 

எனவே, ‘மனம்‘ என்று நீங்கள் சொல்வதும் உண்மையில் உங்கள் மனமல்ல. இவை வெளியிலிருந்து சேகரமாகும் பதிவுகள் தான். உங்கள் உணர்ச்சியென்பது நீங்கள் உங்கள் தலையில் சேகரித்து வைத்துள்ளவற்றின் வெளிப்பாடுதான். எனவே தியானம் என்பதன் நோக்கம், எவை நீங்கள் இல்லையோ அவற்றிலிருந்து உங்களைத் தனியே பிரித்தெடுப்பதுதான்’[http://isha.sadhguru.org/blog/ta/enakku-dhyanam-varuma]

‘எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்குள் உடலின் மூலமாகவோ மனதின் மூலமாகவோ தான் வருகிறது. பலவிதமான துன்பங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். மனிதர்கள் தாங்களாகவே எல்லாவிதமான துன்பங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள்[மனிதர்களா கண்டுபிடித்தார்கள்?! அது இயற்கையானதல்லவா?]. ஆனால் எல்லாத் துன்பங்களையும் உடலின் மூலமாகவோ அல்லது மனதின் மூலமாகவோ தான் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். நீங்கள் கண்மூடி தியானத்தில் அமர்ந்திருக்கும் போது நான் உடலல்ல; நான் மனமல்ல என்று தெளிவாக உணர்ந்தால் துன்பம் உங்களைத் தொடமுடியுமா? இதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு#

தான் சொல்ல நினைத்தவற்றை அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் சத்குரு ஜக்கி.

ஒரு வரியில் சொன்னால், உணர்ச்சி, எண்ணம் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பிரித்தெடுப்பதுதான்[மனதை வெறுமை ஆக்குவது] ‘தியானம்’ என்பது இவரின் கருத்து.

சொல்வது எளிது. செயல்படுத்த இயலுமா? 

இது சாத்தியப்பட்டால் மனத் துன்பம், உடல் துன்பம் ஆகிய இரண்டிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்.

இவ்விரண்டிலிருந்தும் விடுபட்ட ஞானிகள், மகான்கள் ஆகியோருக்கான ஒரு பட்டியலை சத்குரு கொடுத்திருக்கலாம். செய்யவில்லை.

ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், புட்டபர்த்தி சாயிபாபா, சீரடி சாயி, ரமண மகரிஷி என்றிவர்களைப் போன்ற மகான்களில் இவ்விரண்டு துன்பங்களிலிருந்தும் முற்றிலுமாய் விடுபட்டவர்கள் எத்தனை பேர்?

மனத் துன்பங்களிலிருந்து விடுபட்டார்களோ இல்லையோ, உடல் துன்பங்களிலிருந்து.....?


மேற்கண்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள்.  அவர்களின் சாவுக்கான காரணங்கள் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும்; அவர்கள் செய்த தியானத்தால் விளைந்த பயன்  புரியவரும்.

ஆக, செத்தொழிந்து மயானத்தில் அடைக்கலம் புகும்வரை உணர்ச்சி, எண்ணம் போன்றவற்றிலிருந்து முற்றிலுமாய் விடுபடுவது சாத்தியமே இல்லை; இல்லவே இல்லை.

எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அகற்றி மனதை வெறுமையாக்குவது தேவையா என்னும் கேள்வியும் இங்கு எழுகிறது.

நம் பதில், தேவையற்றது என்பதுதான். தியானத்திற்குப் பதிலாக.....

தீய எண்ணங்களை மட்டும் மனதிலிருந்து அகற்றி எந்நேரமும் நல்ல எண்ணங்களை அதில் நிறைத்து வாழ்வது சிறந்தது.

நல்ல எண்ணங்களை மனதில் சேமிப்பதற்கு நேரம் காலம் ஏதும் தேவையில்லை. அது தனியிடமோ பொது இடமோ, ஓய்வு கிடைக்கும்போதெல்லாம்.....

‘வீண் கவலைகளுக்கு ஒருபோதும் இடம் தரமாட்டேன்.’


‘இயன்றவரை பிறருக்கு உதவிகரமாக இருப்பேன்.’


‘தோல்விகளால் மனம் தளர மாட்டேன்; கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பேன்; சாதிப்பேன்.’


‘மூடநம்பிக்கைகளை அடியோடு விட்டொழிப்பேன்.’

‘தன்னம்பிக்கையை வளர்ப்பேன். இறுதி மூச்சுவரை, தீய உணர்வுகளை அண்டவிடாமல் வாழ்ந்து முடிப்பேன்.’

என்றிவை போன்ற நல்லெண்ணங்களை அசைபோட்டு உள் மனதில் அவற்றைப் பதிய வைக்கும் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

மனிதராய்ப் பிறந்த அனைவருக்குமான இன்றியமையாத் தேவை இப்பயிற்சிதான்; தியானம் அல்ல.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முகப்புப் படம்[[Header] சத்குருவின் வலைப்பக்கத்திலிருந்து சுட்டது. அன்னாருக்கு நன்றி.