கடவுள் என்றில்லை, 'காம இச்சைக்குக்'கூட ஏழை என்றால் இளக்காரம்தான். பணக்காரர்களைக் காட்டிலும் ஏழைகளையே அது அதிகம் படுத்துகிறது!
பகலெல்லாம் கூலிக்கு உழைத்துக் களைத்துப் போனதால், சூடாக நாலுருண்டைக் ’களி’ உள்ளே போனவுடன் அடித்துப் போட்டாற் போல தூங்கிப் போனான் செல்லப்பன். விடிவதற்குக் கொஞ்சம் முன்னால்தான் உறக்கம் கலைந்தும் கலையாத நிலையில் ‘பொம்பளை’ நினைப்பு வரவே, கைகளை நீளவிட்டுப் பக்கவாட்டில் தடவினான்; பரவலாகத் துழாவினான்.
வெள்ளச்சியின் கட்டுடலுக்குப் பதிலாக, ஒரு துண்டுக் காகிதம் மட்டுமே அவன் கையில் சிறைபட்டது.
தரையோடு தரையாகக் குந்தியிருந்த குடிசையிலிருந்து வெளியேறி, பக்கத்துக் குடிசைப் பழனியைக் கூப்பிட்டுத் துண்டுச் சீட்டைக் கொடுத்து, "படிடா" என்றான்.
‘என்னத் தோட [தேட] வாண்டாம்’ என்று எழதியிருந்ததைப் படித்துக் காட்டினான் பழனி. தனக்குத் தெரிந்த தமிழில், தன் செயல்பாட்டைப் புரிய வைத்திருந்தாள் வெள்ளச்சி.
“இதோ பாருண்ணா, அவ கோழி கேவறாப்பல கேவிகிட்டுத் திரியறா. நீ இல்லாதப்போ, சுருட்டையன்கிட்ட இளிச்சி இளிச்சிப் பேசுறான்னு படிச்சிப் படிச்சிச் சொன்னேன். நீ கண்டுக்கல. அவனை இழுத்துட்டு ஓடிட்டா பார்த்தியா” -அங்கலாய்த்தான் பழனி.
“ஏமாந்துட்டேன்” -பதறினான் செல்லப்பன்.
“ஈரோட்டில் ஒரு செருப்புக் கடையில் வேலைக்குச் சேருறதா சுருட்டையன் யார் கிட்டயோ நாலு நாள் முந்தி சொல்லிட்டிருந்தான். வெள்ளச்சியோட அவன் அங்கதான் போவான். இப்பவே சைக்கிளை எடுத்துட்டுப் பஸ் ஸ்டாண்டுக்குப் போ. ரெண்டு பேரும் பஸ் ஏறாம இருந்தா கையும்களவுமா பிடிச்சுடலாம்" என்றான் பழனி.
நிலையத்தில் நுழைந்தபோது ஈரோடு செல்லும் பேருந்து நின்றுகொண்டிருப்பதைக் கண்டான் செல்லப்பன்.
பேருந்துப் படியருகே நின்றுகொண்டிருந்த வெள்ளச்சியும் அவன் கண்ணில் பட்டாள். கொஞ்சம் தள்ளி சுருட்டையன் நின்றுகொண்டிருந்தான்.
பாய்ந்து சென்று வெள்ளச்சியின் கூந்தல பற்றினான்; அவள் கன்னத்தில் அறைந்தான்.
நிலை குலைந்த வெள்ளச்சி, சில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு, “இதோ பாருய்யா, உன்னோட பொளப்பு நடத்த எனக்கு இஷ்டமில்ல. என்னை அடிக்காதே, வுட்டுடு? என்றாள்.
“அவ்வளவு சுளுவா வுட்டுடுவேனா?” அவனின் தாக்குதல் தொடர்ந்தது.
“ஓ...” என ஓலமிட்டுப் புலம்பத் தொடங்கினாள் வெள்ளச்சி.
“அய்யோ...என்னை அடிச்சிக் கொல்றானே...கேட்பாரில்லையா? இவன் வூட்ல எருக்கு முளைக்க...வயத்தில் புத்து முளைக்க...”
முன்னறிவிப்பில்லாத இந்த நாடகத்தைப் பார்க்கக் கூடியிருந்த கும்பலில் ஒருவர், “ஏம்மா, இந்த ஆளு யாரு? உன் புருஷனா?" என்றார்.
“யாரு இவனா என் புருஷன்? இவன் பொண்டாட்டி செத்துப் போயி மூனு மாசம் ஆவுது. 'உன்னை வெச்சிப் பொழைச்சிக்கிறேன் வா’ன்னு கூப்பிட்டான். வந்தேன். ஆறு மாசம் இருந்தேன், இப்போ இஷ்டமில்லே போறேன்னு சொன்னா கை நீட்டி .....”
இடை மறித்தான் செல்லப்பன். “நீ எங்கே வேணுன்னாலும் போடி. எவனை வேணுன்னாலும் கூட்டிகிட்டு ஓடுடீ ஓடுகாலி. அதுக்கு முன்னால, மருவாதையா கணக்கைத் தீர்த்துட்டுப் போ. இல்லே...வெட்டிப் போடுவேன்...வெட்டி...”
வெள்ளச்சி செல்லப்பனை ஏளனமாகப் பார்த்தாள். கேட்டாள்: “என்னய்யா கணக்கு? ஐயாயிரம் பத்தாயிரம்னு என்கிட்டே குடுத்து வெச்சியா?”
"உன் மொகறக்கட்டைக்கு எவன் அவ்வளவு பணம் அவுப்பான்? உன்னைக் கூட்டியாந்தப்போ, புதுத் துணிமணி எடுத்துக் குடுத்தேன்; புதுச் செருப்பு வாங்கித் தந்தேன். மறந்து போச்சா?"
“சும்மாவா எடுத்துக் குடுத்தே? பொழுது சாஞ்சா முந்தானை விரிச்சிப் படுக்கலே?"
“கூலி வேலைக்குப் போன உன்னை உட்கார வெச்சிக் கஞ்சி ஊத்துனதும் கட்டிக்கத் துணிமணி எடுத்துக் குடுத்ததும் சினிமாவுக்குக் கூட்டிப் போனதும் அப்பப்போ கைச் செலவுக்குப் பணம் குடுத்ததும்...எல்லாம் அதுக்கே சரியாப் போச்சின்னு சொல்றியாடி?”
“ஆமா” -வெள்ளச்சி சிலிர்த்து நின்றாள்.
“சரி போகட்டும். ரெண்டு காலிலும் வெள்ளிக் கொலுசு போட்டிருக்கியே, அது நான் வாங்கிக் குடுத்தது. அதுவும் இந்தக் கணக்கில் சேருதா?”
வெள்ளச்சிக்கு ஏனோ பேச்சு எழவில்லை. குரலில் சுருதி குறையச் சொன்னாள்: “உன்னோட பெரிய எளவாப் போச்சு. இப்படி ஒன்னொன்னுக்கும் கணக்குப் போடுவீன்னு தெரிஞ்சிருந்தா உன்னோட வந்திருக்க மாட்டேன்”என்றவள், கொலுசுகளைக் கழற்றிச் செல்லப்பனிடம் தந்துவிட்டுச் சொன்னாள்: "உனக்கும் எனக்கும் இனிமே எந்தத் தொடுப்பும் இல்ல. ஞாபகம் வெச்சுக்கோ.”
வெளிறிய முகத்துடன் தனக்குப் பின்னே நின்றுகொண்டிருந்த சுருட்டையனிடம், ”வாய்யா போலாம்” என்று அவன் கரம் பற்றி, நகரத் தொடங்கிய ஈரோடு பேருந்தில் ஏறினாள்.
“ஏம்ப்பா, போட்ட கொலுசைப் பிடுங்கிட்டியே. இதை வெச்சிக் கோட்டையா கட்டிடப் போறே?” என்று செல்லப்பனிடம் கேட்டார் ஒரு பெரியவர்.
“கோட்டை கட்டப் போறது ஒன்னுமில்ல. நாளக்கி, இன்னொருத்தியைக் கூட்டியாந்தா அவளுக்குப் போட்டுவிடலாமே” என்றான் செல்லப்பன்!
#####################################################################################