செவ்வாய், 12 டிசம்பர், 2017

கடவுள்...கடவுள்...கடவுள்! யாரய்யா கடவுள்?

#தஞ்சாவூருக்குப் போகும் வழியில், கரூர் 'பைபாஸ்'இல் மதிய உணவுக்காக ஒரு விடுதியின் முன் காரை நிறுத்தியபோது அவரைக் கண்டேன்.

அந்தப் பெரியவருக்கு அறுபது வயதிருக்கும். கையில் 'சிக்னல் ஸ்டிக் லைட்'டும் வாயில் விசிலுமாய், நெடுஞ்சாலையில் வாகனங்களில் போவோரைச் சாப்பிட அழைத்துக்கொண்டிருந்தார்.

வயோதிகம் காரணமாகவோ நின்றுகொண்டே இருப்பதன் காரணமாகவோ வலி தாளாமல் கால் மாற்றித் தவித்துக்கொண்டிருந்தார்.

உணவுண்டு வந்தபோதும் அவரிடத்தில் மாற்றத்தைக் காண இயலவில்லை. கால் மாற்றி அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.

என் மனதில் இரக்கம் சுரக்க, அவரை அணுகி மதிப்புள்ள ஒற்றைத் தாளை நீட்டினேன். வாங்க மறுத்துவிட்டார்.

மெல்லப் பேச்சுக் கொடுத்தேன்.

"பேரு என்னங்க ஐயா?"

"முருகேசனுங்க."

"ஊரு?"

"தஞ்சாவூர்ப் பக்கம்" என்றவர் தொடர்ந்து சொன்னார்: "தொழில் விவசாயம். பொழப்புக்கு வேறே வழி இல்ல. ஒரு பொண்ணு ஒரு பையன். மழை இல்லாம விவசாயம் படுத்துப்போச்சு. கடன் ஒடன் வாங்கி என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன். பலனில்லை. கடனை அடைக்க முடியல. கடவுளும் கண் திறக்கல.....

.....இதுக்கு மேல தாளாதுன்னு நிலத்தை வித்துக் கடனெல்லாம் அடைச்சுட்டு மிச்சப் பணத்தில் பொண்ணுக்குக் கல்யாணத்தைப் பண்ணினேன்.....

.....பையனைப் படிக்க வைக்கப் பணம் இல்ல. இங்க வந்து வேலைக்குச் சேர்ந்தேன். மூனு வேளைச் சாப்பாடு. தங்க இடம். மாசம் 7500 ரூபா சம்பளம். சிக்கனமா செலவு பண்ணினதில் பையனை எஞ்சினீயரிங்க் படிக்க வைக்க முடிஞ்சுது. கோயம்புத்தூரில் வேலையில் சேர்ந்துட்டான்....."

நான் குறுக்கிட்டேன்; "ரொம்பச் சந்தோசம் பெரியவரே. கடவுள் புண்ணியத்தால உங்களுக்கு நல்லது நடந்திருக்கு" என்றேன்.

நான் சொல்லி முடித்தபோது, ஓட்டல் பையன் வந்து பெரியவரிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போனான்.

பெரியவர் முகம் மலர்ந்ததோடு என்னைப் பார்த்துப் பேசலானார். "என்ன சொன்னீங்க? கடவுளால நல்லது நடந்ததா? அவர் யாருங்க கடவுள்? அவர் கொடுமைக்காரருங்க. அவர் நல்லவரா இருந்தா என்னைக் கடனாளியாக்கி, இப்படிக் கால்கடுக்க நாளெல்லாம் நிக்க வைப்பாரா? இப்படியொரு கடவுள் எனக்குத் தேவையில்லீங்க. என்னைப் பொருத்தவரைக்கு...."

சற்றே நிறுத்துப் பெருமூச்செறிந்தவர், "என்னைப் பொருத்தவரைக்கும் மனுசங்கதாங்க கடவுள். 'பேசாம எங்ககூட இருந்துடுங்க. கூழோ கஞ்சியோ இருக்கிறதைப் பகிர்ந்து சாப்பிடலாம்'னு சொன்ன என் மாப்பிளை எனக்குக் கடவுள். 'நான் பரவாயில்லாம சம்பாதிக்கிறேன். இனி நீ ஓட்டல் வேலைக்குப் போக வேண்டாம்'னு சொன்ன என் மகன் எனக்குக் கடவுள். என்னை நம்பிக் கடன் கொடுத்தவங்க எனக்குக் கடவுள். எனக்குக் கால் வலிக்குமேன்னு கொஞ்ச நேரம் உட்காரச் சொன்ன இந்த ஓட்டல் முதலாளி எனக்குக் கடவுள். எனக்காகப் பரிதாபப்பட்டுப் பணம் கொடுத்த நீங்க எனக்குக் கடவுள். இன்னும் சொல்லப்போனா நல்ல மனசு உள்ள மனுசங்க எல்லாருமே கடவுள்தாங்க" என்றார் நெகிழ்ந்த குரலில்.

பெரியவர் முருகேசனிடம் தலை குனிந்து வணங்கி விடை பெற்றேன்#
=====================================================================================
தன் அனுபவக் கதையை, 'பாக்யா' வார இதழ்[டிசம்பர் 15 _ 21, 2017] மூலம் பகிர்ந்துகொண்ட 'ஜெயராமன் வேணு' அவர்களுக்கு நன்றி.

ஆசிரியரின் அனுமதியின்றிச் சற்றே சுருக்கி வெளியிடப்பட்டது.