வெள்ளி, 5 ஜூலை, 2019

ஒரு மனைவியாக விக்டோரியா மகாராணி!

விக்டோரியாவுக்கும் 'ஆல்பர்ட்'டுக்கும் 1940ஆம் ஆண்டு ஜேம்ஸ் அரண்மனையில் இருந்த சிரிய சர்ச்சில் திருமணம் நடந்தது.

மகாராணியாக விக்டோரியா. அவருக்குத் துணையாக ஆல்பர்ட்.

மகாராணியின் கணவன் என்னும் பெயர்தானே தவிர, தனிப்பட்ட முறையில் ஒரு மன்னருக்குரிய அதிகாரம் ஏதும் ஆல்பர்ட்டுக்கு இல்லை. ஆனாலும், சில முக்கியமான  விசயங்களில், தனியாகத் தன் கணவனின் யோசனையைக் கேட்டு அதன்படி நடந்துகொண்டார் ராணி விக்டோரியா.

தன் குழந்தைகளுக்கு நல்ல தாயாகவும்  கணவனுக்கு அன்பான மனைவியாகவும் அவர் இருந்தார்.

எப்போதாவது விவாதம் என்று வந்தால், தன் பதவியை வைத்து ஆல்பர்ட்டை அவர் அடக்கிவிடுவதும் உண்டு. அம்மாதிரிச் சூழ்நிலையில் கோபத்துடன் தன் அறைக்குச் சென்று தாளிட்டுக்கொள்வார் ஆல்பர்ட்.

அவரைச் சமாதானம் செய்வதற்காக, அவருடைய அறைக்குச் சென்று கதவைத் தட்டுவார் மகாராணி.

''மகாராணி வந்திருக்கிறேன்'' என்று ராணி சொன்னால் கதவைத் திறக்கவே மாட்டார் ஆல்பர்ட்; ''உங்களின் பிரிய மனைவி வந்திருக்கிறேன்'' என்றால் மட்டுமே கதவைத் திறப்பது அவர் வழக்கம்.

கதவு திறந்த மறுகணமே ஒருவர் அணைப்பில் இன்னொருவர்!

இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் பிறந்தன. மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தியதால் பிரிட்டிஷ் மக்கள் மகாராணியை மிகவு நேசித்தார்கள்.

ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்கான அனைத்து வசதிகளும் இருந்தும்கூட, அந்த அரச தம்பதியினர் மிக எளிமையாக வாழ்ந்துகாட்டியதால், பத்தொன்பதாம் நூற்றாண்டில் இவர்களைப் போன்றதொரு இணை வேறெங்கும் இல்லை என்று உலகம் வியந்தது.

மகாராணிக்கு உதவியாக மிகக் கடுமையாக உழைத்ததால் ஆல்பர்ட் தன் 42ஆம் வயதில் காலமானார்.

கணவனின் இழப்பு மிகவும் வாட்டியதெனினும், தனக்கான அரசாங்கக் கடமைகளைச் செவ்வனே செய்துவந்தார் விக்டோரியா,

எப்போதும் வெண்ணிற ஆடை உடுத்து விதவைக் கோலத்திலேயே காட்சியளித்தார்.

எத்தனை முயன்றும் மறைந்த கணவனைப் பிரிந்த வருத்தத்திலிருந்து அவரால் விடுபடவே இயலவில்லை.

தன் படுக்கையின் எதிரே தொங்கவிடப்பட்ட ஆல்பர்ட்டின் உருவப்படத்தைப் பார்த்துக்கொண்டேதான் உயிரைவிட்டாராம் மகாராணி விக்டோரியா.

இவர்களைப் போல மனம் ஒன்றி வாழ்ந்த தம்பதியர் பிரிட்டிஷ் வரலாற்றில் மிக மிகக் குறைவு என்கிறார்கள் வரலாற்றாய்வாளர்கள் 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: ரா.வேங்கடசாமியின் 'பிரபலங்களின் காதல் வாழ்க்கை'; சஞ்சய் புக்ஸ், காஞ்சிபுரம்.