எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 31 மே, 2022

கடவுள் ஒரு பொருட்டல்ல! மதவாதிகளே நம் இலக்கு!!

டல் வலிமையைப் பொருத்தவரை ஓர் உயிரினம் மற்றொன்றைப் போல் இல்லை. பலம் குறைந்தவை, தம்மினும் பலம் வாய்ந்த உயிரினங்களைக் கண்டு அஞ்சி அவற்றிற்கு அடங்கி வாழும் நிலை உள்ளது.

உயிர்கள் ஒன்றையொன்று வதைத்துக் கொன்று உணவாக்கிக்கொள்வது மற்றொரு நிலை.

பிறப்பதும் இன்பதுன்பங்களை அனுபவித்துக்கொண்டே இனவிருத்தி செய்து வாழ்ந்து மடிவதும் இன்னுமொரு நிலை. இவை இயற்கையாய் அமைந்தவை எனலாம்.

இவை குறித்துக் காலமெல்லாம் சிந்தித்துச் சிந்தித்து மனிதர்கள் நொந்து சாவதும் இயற்கைதான். 

சிந்திப்பதற்கு அடிப்படையாய் அமைந்திருப்பது ஆறாவது அறிவு.

இது வாய்க்காமல் இருந்திருந்தால், 'ஏன், எதற்கு, எப்படி' என்றெல்லாம் கேள்விகள் எழுப்பாமால் ஏனைய உயிர்களைப் போலவே வாழ்ந்து மடிந்து மண்ணாகிப் போவான் மனிதன்; மரணபயம் குறித்த அனுபவம் தவிர்க்கப்பட்டிருக்கும். 

எது எப்படியோ, இந்த மரணபயம் உட்படப் பல துன்பங்களையும் குறைந்த அளவிலான இன்பங்களையும் அனுபவித்து மறைவதே 'இயற்கை' என்று சொல்லிக்கொண்டு கொஞ்சமேனும் ஆறுதல் பெறுவது சாத்தியமானதாக உள்ளது.

உலகங்களும் உயிர்களும் இயற்கையாய்த் தோன்றியவை அல்ல; எல்லாம் கடவுளின் படைப்பு என்று சொல்லிச் சொல்லி இதையும் சாத்தியமற்றதாக ஆக்கும் கைங்கரியத்தைச் செய்தார்கள் மதவாதிகள்.

இவர்கள் கற்பித்த கடவுளுக்கு வேறு வேறு திருநாமங்கள் சூட்டி[இயற்கைச் சிற்றங்களைக் கண்டு அஞ்சிய ஆதி மனிதன், நீர் ,நெருப்பு, காற்று ஆகிய இயற்கை அம்சங்களை மட்டுமே வழிபட்டான் என்பது நினைவுகூரத்தக்கது] அவர்களின் புகழ் பாடி, மக்களை நம்பவைத்துத் தங்களை அவதாரங்களாகவும் மகான்களாகவும் ஆக்கிக்கொண்டதோடு, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம், ஆவி, பூதம் என்று எவையெல்லாமோ இருப்பதாகச் சொல்லி மக்கள் மீது ஏராள மூடநம்பிக்கைகளைத் திணித்ததே இவர்கள் நிகழ்த்திய சாதனைகள் ஆகும்.

இதை நிகழ்த்த, இவர்களுக்கு இவர்களால் உருவாக்கப்பட்ட மதங்கள் பயன்பட்டன.

எனவே, மூடநம்பிக்கைகள் ஒழிய, தொடர் பரப்புரைகள் மூலம் மக்களின் சிந்திக்கும் திறனை வளர்த்தல் வேண்டும். மக்கள் சிந்தித்தால்.....

மதங்களோடு மதவாதிகளும் காணாமல் போவார்கள்.

இவர்கள் காணாமல் போனால், இல்லாத கடவுளை 'இல்லை' என்று சொல்லி மக்களை நம்பச் செய்வது ஒரு பொருட்டே அல்ல!

======================================================================================