வியாழன், 13 ஆகஸ்ட், 2026

‘கடவுளின் கடவுள்!!!’... கூகுள் ஜெமினி[Ask Gemini] அளித்த மதிப்புரை!

 //கடவுளின் கடவுள்!!! https://kadavulinkadavul.blogspot.com வலைப்பக்கத்திற்கு ஒரு மதிப்புரை// -இது ‘கூகுள் ஜெமினி[Ask Gemini]யிடம் வைத்த வேண்டுகோள்[13.08.2026]. அது அளித்த பதில்[திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை]: 

கடவுளின் கடவுள்! வலைப்பதிவு (kadavulinkadavul.blogspot.com) பற்றிய ஒரு விரிவான மதிப்புரை

மையப்பொருள் & நோக்கம்

இந்த வலைப்பதிவு முக்கியமாக பகுத்தறிவு, ஆன்மீகம், அறிவியல், மனித உளவியல் மற்றும் சமூக சிந்தனைகளை மையமாகக் கொண்டு இயங்குகிறது. 'கடவுள்', 'ஆன்மா', 'மூடநம்பிக்கை' போன்ற மரபு சார்ந்த தலைப்புகளைப் பகுத்தறிவுப் பார்வையுடன் கேள்விக்குட்படுத்துவதும், சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டுவதுமே இதன் முதன்மை நோக்கமாகும்.

உள்ளடக்க சிறப்பம்சங்கள்

பல்வேறு தலைப்புகள்: கடவுள் மற்றும் பகுத்தறிவு மட்டுமின்றி, தமிழ்/தமிழர் பண்பாடு, பெண் விடுதலை, காதல்/காமம், கதைகள் மற்றும் உடல்நலம் போன்ற பரந்த அளவிலான தலைப்புகளில் கட்டுரைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

  • எளிய நடை & கவித்துவ சிந்தனை: "நான் பொறாமையில் புழுங்குகிறேன்" போன்ற பதிவுகளில், நிலையாமையையும் கடவுள் குறித்த கருத்தையும் எளிய வரிகளில் கவித்துவமாக வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

  • அறிவியல் & ஆரோக்கியம்: "சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்க உதவும் பயிற்சிகளும் உணவுகளும்" போன்ற பதிவுகள் வழியாக டோபமைன் (Dopamine) நரம்புக்கடத்தி, உடற்பயிற்சி மற்றும் உணவுகளின் முக்கியத்துவத்தை அன்றாட வாழ்க்கைக்கு உதவும் வகையில் எளிமையாக விளக்குகிறது.

நிறைகள்

தொடர்ச்சி (Consistency): பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருவது ஆசிரியரின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது.

  • சிந்தனைத் தூண்டல்: வாசகர்களை எதையும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க தூண்டும் வகையில் வினாக்களையும் கருத்துகளையும் முன்வைக்கிறது.

மேம்படுத்தக்கூடிய இடங்கள்

பக்க வடிவமைப்பு (Layout): பிளாக்கரின் (Blogger) பழைய பாணி வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதால், நவீன மொபைல் போன்களுக்கு ஏற்ப வாசிப்பு அனுபவத்தை (Mobile Responsiveness) இன்னும் மேம்படுத்தலாம்.

பகுத்தறிவுச் சிந்தனைகளையும், அன்றாட ஆரோக்கிய விழிப்புணர்வையும் ஒரே இடத்தில் விரும்பி வாசிக்கும் வாசகர்களுக்கு இது ஒரு பயனுள்ள வலைப்பதிவு.

புதன், 12 ஆகஸ்ட், 2026

சிந்திக்கும் ஆற்றலை அதிகரிக்க உதவும் பயிற்சிகளும் உணவுகளும்!

னித மூளையில் சிந்திக்கும் திறனை அதிகரிப்பது முக்கிய நரம்புக்கடத்தியான(neurotransmitter) டோபமைன்(Dopamine) ஆகும். இது ஒரு ஹார்மோனாகவும் செயல்பட்டு, புதியனவற்றைக் கற்பதற்கும், சாதனைகள் நிகழ்த்துவதற்கும் ஆன உந்துசக்தியையும் அளிக்கிறது.

இதை அதிகரிப்பதற்கான உடற்பயிற்சி: ஓடுதல், மெதுவோட்டம்[ஜாகிங்> Jogging), எடை தூக்குதல், நடனம், மூச்சுப் பயிற்சி,
சூரிய ஒளியில் காய்தல், குளிர்ந்த நீரில் குளித்தல் போன்றவை. இப்பயிற்சிகள் மூளையில் டோபமைன், எண்டார்பின் ஆகியவற்றின் அளவை வேகமாக உயர்த்துகின்றன.

மனப்பயிற்சி: பிடித்த பாடல்களைக் கேட்பது; ஓவியம் வரைவது போன்ற பிடித்தமான கலைகளில் ஈடுபாடு கொள்வது; எந்தவொரு செயலையும் மகிழ்ச்சியுடன் செய்வது; செய்த பின் மனநிறைவு பெறுவது.

உணவுகள்:

புரதச் சத்து நிறைந்த முட்டை, பால் பொருட்கள், பாதாம், கோழி இறைச்சி, மீன், வாழைப்பழம், சோயா பொருட்கள், பீன்ஸ் வகைகள், புளித்த மோர், தயிர் வகைகள்.

***உதவி: இணையம்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

நான் பொறாமையில் புழுங்குகிறேன்!!!

நான் இருந்துகொண்டிருக்கிறேன். 


இன்றோ நாளையோ 

இன்னும் சில/பல ஆண்டுகள் கழித்தோ 

இருந்துகொண்டிருக்கும் நான் 

இல்லாமல் போயிருப்பேன். 


இருந்துகொண்டிருந்து இல்லாமல்போகும் 

என்னைப் போலவே, 

மனிதர்கள் உட்பட

மண்ணில் இருந்துகொண்டிருக்கும் 

உயிரினங்களில் பலவோ மிகப் பலவோ 

இல்லாமல் போய்க்கொண்டே இருக்கும். 


புதிது புதிதாய்த் 

தோன்றிக்கொண்டே இருக்கும் உயிரினங்கள் 

இருந்துகொண்டே இருக்கும்.


அவையும் பின்னர் இல்லாமல்போய், 

புதியன தோன்றி இருந்துகொண்டிருப்பதும் 

இல்லாமல்போவதும் 

தொடர்ந்துகொண்டே இருக்கும். 


இருந்துகொண்டிருந்து 

இல்லாமல் போய்க்கொண்டே இருப்பதற்குக் 

கால வரம்பு ஏதுமில்லை. 


இதற்கு விதிவிலக்கானவர் 

கடவுள் எனப்படுபவர் மட்டுமே என்கிறார்கள். 


இல்லாமல் போகாமல் 

என்றென்றென்றென்றென்றென்றும் 

இருந்துகொண்டே இருக்கும் அவரை நினைத்து 

என் மனம்

பொறாமையில்

புழுங்கிக்கொண்டே இருக்கிறது! 

திங்கள், 10 ஆகஸ்ட், 2026

ஆன்மா இல்லை... இல்லை... இல்லவே இல்லை!!!

சிந்திக்கப் பயன்படுகிற நம் மூளைதான் நம் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகளை[அனுபவங்கள்] நினைவுகூர்தலையும் செய்கிறது[மனம் என்று ஒன்று இருப்பது அறிவியலால் உறுதிப்படுத்தப்படவில்லை].

மூளை முற்றிலுமாகச் செயலிழந்தால் நடந்துமுடிந்தவை உட்பட, எந்தவொரு நிகழ்வையும் நினைவுகூர்தல் சாத்தியமே இல்லை.

ஆன்மிகவாதிகள் சொல்வதுபோல நம் உடம்புக்குள் ‘அழியாத ஆன்மா’ இருப்பது உண்மையானால், அது மூளைக்கு ‘மாற்றாக’ச் செயல்பட்டு, பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்திட[இப்பிறவியில்] அது பயன்படுதல் வேண்டும். அதன் மூலம் இப்பிறவி நிகழ்வுகள் மட்டுமல்லாமல், நம் முற்பிறப்பு[பிறவிகள் பல உண்டு என்கிறார்கள் ஆன்மிகர்கள்] நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டுவருதலும் சாத்தியப்படுதல் வேண்டும்.

எவரொருவருக்கும் இவ்வாறான அனுபவம்[ஆன்மா மூலம் முற்பிறப்பு நிகழ்வுகளை[அனுபவங்கள்] நினைவுகூர்தல்] வாய்த்ததில்லை; உரிய வரலாற்று ஆதாரமும் இல்லை.

அப்புறம் எப்படி ஒவ்வொரு மனித உடம்பிலும் ஆன்மா இருக்கிறது, ஆன்மா உள்ள ஒவ்வொரு மனிதனும் பல பிறவிகள் எடுக்கிறான் என்கிறார்கள்?

நெருப்பில் கருகாததும், நீரில் கரையாததும் வெட்டிச் சிதைக்க இயலாததுமான ஆன்மா[இதற்கு மேல் ஆன்மா பற்றி விளக்கம் தந்தவர் எவரும் இல்லை; ‘பாவப் புண்ணியங்களைச் சுமத்தல்’ தவிர இதன் செயல்பாடுகள் குறித்தும் எவரும் விவரித்ததில்லை] உடம்புக்குள் இருப்பதன் பயன்தான் என்ன?

ஏதும் இல்லை.

எனவே, “ஆன்மா இல்லை... இல்லவே இல்லை” என்று உறுதிபடச் சொல்லலாம்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பும் மூடத்தனத்திலிருந்து விடுபட்டு, ஒரு பிறப்பு மட்டுமே நமக்கு உள்ளது என்பதை நம்பி, வாய்த்த இந்தப் பிறவியில் இயன்றவரை சிறப்பாக வாழ்ந்து முடிக்க முயல்வதே அறிவுடைமை ஆகும்!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

'அது’ தப்பு! ‘இது’?[சற்றே பெரிய ‘ஒ.ப.’ கதை]

லைபேசியின் அழைப்பு.

“அலோ...” சொன்னார்  மனோகர்.

“தலைவரே, நான் குமார் பேசுறேன். அமுதா நம்ம ஜாதிப் பொண்ணு. ‘அந்த’ ஜாதிப் பயலோட மலைக் கோயிலுக்குப்  போற பஸ்ஸில் ஒன்னா உட்கார்ந்திருக்கா. ரெண்டு பேரும் காதலிக்கிறாங்கன்னு காலேஜ் பசங்க பேசிக்கிறாங்க. இது விசயத்தை ஏற்கனவே உங்ககிட்டே சொல்லியிருக்கேன். இப்போ சாமி சந்நிதியில் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்களோன்னு சந்தேகமா இருக்கு” என்றான் குமார்.
“பல தடவை எச்சரிக்கை பண்ணியும் அமுதாவோட பழகுறதை அவன் நிறுத்தல. இது சம்பந்தமா அமுதாவோட அப்பன் காளியப்பன்கூட ஃபோனில் பேசிட்டேன். நீ உடனே புறப்பட்டு வா. காளியப்பனைச் சந்திப்போம். அடியாட்களோட அவரையும் கூட்டிட்டுக் கோயிலுக்குப் போவோம். அவனைக் கடத்திட்டுப் போயிக்  காலி பண்ணிடலாம்.” -கொதிக்கும்  நெருப்பு வார்த்தைகளை உதிர்த்தார் மனோகர்.

காளியப்பன் வீடு.

சற்று நேரக் கலந்தாலோசனைக்குப் பிறகு அவர்கள் புறப்பட ஆயத்தமானார்கள். அப்போது அமுதாவே அங்கு வந்து சேர்ந்தாள்.

எதிர்பாராத அதிர்ச்சியை உள்வாங்கிக்கொண்ட மனோகர், அமுதாவை விசாரிக்கும்படி காளியப்பனுக்கு ஜாடை காட்டினார்.

“மலைக் கோயிலுக்குப் போயிருந்தியா?” -மகளை முறைத்தபடி கேட்டார் காளியப்பன்.

“ஆமாப்பா. நான் என்னோடு படிக்கிற கலைச்செல்வனைப் பத்தி உங்ககிட்டே சொல்லியிருக்கேன். அவன் ரொம்ப நல்லவன்; புத்திசாலி. நான் பி.எஸ்ஸி. முதல் வகுப்பில் தேறினதுக்கு அவன்தான் காரணம். இப்போ பி.ஜி.யிலேயும் என்னோடுதான் படிக்கிறான். அவனை நான் கூடப் பிறக்காத சகோதரனா நேசிக்கிறேன். நாங்க ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்கிறதா யாரோ வதந்தியைக் கிளப்பிவிட்டிருக்காங்க. அதனால மலைக்கோயிலுக்குப் போயி நண்பர்கள் முன்னிலையில் கலைச்செல்வனுக்கு ‘ராக்கிக் கயிறு’ கட்டிட்டேன். தாழ்த்தப்பட்ட சாதிப் பையனைக் காதலிக்கிறதுதான் தப்புன்னா, சகோதரனா ஏத்துக்கிறதுகூடத்  தப்பாப்பா?”

-சொல்லி முடித்துத் தன் தந்தையின் முகத்தை உற்றுநோக்கினாள் அமுதா. அவரின் பார்வை தரையில் தாழ்ந்து கிடந்தது; முகத்தில் அசடு வழிந்துகொண்டிருந்தது.

மனோகர் முகத்திலும்தான்!

சனி, 8 ஆகஸ்ட், 2026

‘தமிழ் ஆளுமைகள்’[எழுத்தாளர்கள்] தளத்தின் பட்டியலில் ‘பசி’[ப]பரமசிவம்!!!!!

Tamil Personalities

//தமிழின் ஜனரஞ்சக இதழ்களில் ஏராளமான ஒரு பக்கக் கதைகளையும், சிறுகதைகளையும் எழுதிப் புகழ் பெற்றவர் எழுத்தாளர் பசி.ப.பரமசிவம்.

இவர் சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், கிடையூர் கிராமத்தில் பிறந்தவர்.

ஈரோடு, சிக்கையா நாயக்கர் மகாஜனக் கல்லூரியில் புதுமுக(பி.யூ.சி) வகுப்பில் படித்தபோது எழுத்தாளர் தமிழ்வாணன் நடத்திய ‘கல்கண்டு’ இதழின் தீவிர வாசகர் ஆனார். இவர் எழுதிய மூன்று கடிதங்கள் கல்கண்டு இதழில் வெளியானது எழுதுவதற்கு இவருக்கு உற்சாகம் அளித்தது.

1962-இல் கோவை, பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ்க் கல்லூரியில் ‘தமிழ் வித்துவான்’ கல்வி பயின்றபோது, நாரண.துரைக்கண்ணன் நடத்திய ‘பிரசண்ட விகடன்’ இதழில் இவரது முதல் சிறுகதை ‘ஓடாதே நில்’ வெளிவந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ‘பி.ஓ.எல்’ படித்த காலக்கட்டத்தில் ஏராளமான நூல்களைப் படித்தார்; கதை எதுவும் எழுதவில்லை.

கேரளப் பல்கலைக் கழகத்தில் ‘முது கலை’ பயின்றபோது, ஆண்டு மலர்களில் மட்டும் இவரது படைப்புகள் வெளிவந்தன.

கல்லூரி ஆசிரியர் ஆன பிறகு எழுத்துப் பணியில் ஈடுபட்டார்.

இவரது மொழி நடையானது தூய தமிழில் அமைந்தது; உணர்ச்சிமயமான சொல்லடுக்குகளை உள்ளடக்கியது; வினா, வியப்புக் குறியீடுகளைத் தன்னகத்தே கொண்டது.

1975-இல் இவரது ‘எவர்சில்வர் அண்டா’ என்னும் சிறுகதை ‘ராணி’ இதழில் வெளிவந்தது. அதன்பிறகு இவ்விதழில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கதைகளை எழுதினார்.

1982-இல் ‘குமுதம்’ இதழில் வெளிவந்த இவரது முதல் ஒரு பக்கக் கதை ‘டெஸ்ட்’. அதன் பிறகு இவருடைய ஒரு பக்கக் கதைகள் பல அவ்விதழில் வெளியாயின.

‘தமிழில் ஒரு பக்கக் கதைகள்’ எனும் தலைப்பில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து 1990-இல் முனைவர் பட்டம் பெற்றார். இவ்வாய்வு பின்னர் நூலாக வெளிவந்து, ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ – ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு பெற்றது.

இவர் கதைகள் எழுதத் தொடங்கிய காலக்கட்டத்தில் சேலம் மாலை முரசு – ‘கதை மலர்’ பகுதியில் 20க்கும் மேற்பட்ட இவருடைய கதைகள் பரிசுக் கதைகளாக வெளிவந்தன.

1982-இல் ‘ராணி’ வார இதழ், குடும்ப நலத் துறையுடன் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல் பரிசு பெற்றது.

1983-இல் ‘ராணி’ வார இதழ் நடத்திய ‘ரூபாய் நோட்டுக் கதை’ போட்டியில் இவருடைய ‘பெண் நினைத்தால்’ கதை பரிசு பெற்றது.

தினமலர் – வாரமலர் சிறுகதைப் போட்டியில் இவரது ‘துருவ நட்சத்திரம்’ கதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.

குமுதம், ஓம் சக்தி, ராணி, தினமலர், இதயம் பேசுகிறது, பாக்யா, குங்குமம், தினத்தந்தி, தினகரன், தாய், தேனமுதம், பூங்கனல், இளந்தமிழன் ஆகிய இதழ்களில் 135 கதைகளை எழுதியுள்ளார்.

2011 முதல் இணையத்தில் வலைப்பதிவு மூலம் சிறுகதைகளையும், ஒரு பக்கக் கதைகளையும், கட்டுரைகளையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

© 2026 Tamil Personalities

***‘தமிழ் ஆளுமைகள்’ பட்டியலில் இடம்பெறுவதற்குப் போதுமான தகுதி எனக்கு இல்லையென்றாலும், எவ்வெப்போதோ எங்கெல்லாமோ நான் பதிவிட்டத் தகவல்களை ஒருங்கிணைத்து, முறைப்படுத்தித் தளத்தில் இடம்பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.

https://tamilpersonalities.com/people/%e0%ae%aa%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%aa-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d/

வியாழன், 6 ஆகஸ்ட், 2026

நான்... நான் மட்டுமே கடவுள்!!![பக்திப் பித்தர்களுக்கான பகுத்தறிவுப் பித்தனின் படைப்பு]

“நானே கடவுள்” என்று
அவ்வப்போது
நடுத்தெருவில் நின்று கூவுவது
என் வழக்கம்.

இமை விரித்துப் புருவம் நெறித்து
''நீ எப்படிக் கடவுளானாய்?''
என்று
கேட்போரிடமெல்லாம்
''நீவிர் நம்புகிற பிறிதொரு கடவுளிடம்
இதே கேள்வியைக் கேளும்.
அவர் பதில் சொன்னால்
நானும் சொல்வேன்''
என்பது என் பதிலாக இருக்கும்.

மனிதன் மனிதன்தான்;
மரணிக்கும்வரை அவன்
மனிதன்தான். ஆனால் இங்கு.....

சிலர்  சிலரைக்
'கடவுளின் அவதாரம்...
நடமாடும் கடவுள்' என்கிறார்கள்.
நீங்களும் நம்புகிறீர்கள்.
''நான் கடவுள்..... நானே கடவுள்''
என்றால்
நம்பமாட்டீர்களா என்ன?

''நீ கடவுள் என்றால்...
உன்னை நேர்ந்துகொண்டால்...
அது நிறைவேறுமா?''
என்று
கேட்கிறீர்கள்?

''ஆம்... ஆம்'' என்பதே என் பதில்.
நிறைவேறினால் 
அது என்னால் நிகழ்ந்தது.
தவறினால் அது உங்களின் தலைவிதி.

நான்
பிறிதொரு கடவுளின் மறுபிரதி அல்ல;
மகனுமல்ல;
இம்மண்ணுக்கு அனுப்பப்பட்ட
தூதுவனும் அல்ல.

பரமண்டலத்தைப் படைத்த பிறகு,
வெட்டவெளியிலும் வெறுமையின் அடர் 
இருட்டிலும்
கால இடைவெளியின்றி
இரண்டறக் கலந்து கிடப்பவன் நான்.

அனைத்தையும் படைத்தவன் நானே.
இந்தப் பூவுலகில் நான்
அவதரித்தது
இவற்றை மேற்பார்வையிட மட்டுமே.

நானே கடவுள்.....
ஆம்... கடவுள் நானே.
என்னை நம்புவதால் உங்களுக்கு
எந்தவொரு இழப்பும் இல்லை.

இழப்புகள்.....

கணக்கின்றிக் கடவுளரைப் படைத்துப்
பிழைப்பு நடத்தும்
ஆன்மிக வணிகர்களுக்கு மட்டுமே.

இனி.....
''நானே கடவுள்'' என்பதால்
'அவர்கள்' பதறுவார்கள்;
''இவன் இன்னொரு ஹிரண்யன்
இன்றே சம்ஹாரம் செய் இறைவா'' என்று
வானம் பார்த்து அலறுவார்கள்.

நரசிங்கமூர்த்தி வருவார்;
வந்து என்னை வதம் செய்வார்.
பார்த்துப் பார்த்து ஆனந்தப் பரவசத்தில்
நீங்கள்  அலுப்பின்றித் திளைக்கலாம்.
அவரை எதிர்பார்த்துக்
காத்திருங்கள்! 

புதன், 5 ஆகஸ்ட், 2026

அரசியல்வாதிகளின் அடி தொழுது ஆதாயம் தேடும் தமிழ் ஊடகங்கள்!!!

மேற்கண்ட காணொலியை வெளியிட்டது ‘பாலிமர்’ என்னும் பெயருடைய தொலைக்காட்சி. 

நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடரில், ஒரு முதல்வராக ஜோசப் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார். கோட்டு அணியாமல் வெகு இயல்பாகக் காட்சியளிக்கிறார்; சிக்கனமாகச் சிரித்து[முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியவெல்லாம் இல்லை] அவையில் உள்ளவர்களைக் கும்பிட்டு வணக்கம் சொல்கிறார்; அவைத் தலைவருக்குத் தனியாக ஒரு கும்பிடு போடுகிறார்; தனக்கே தனக்கான இருக்கையில் அமர்கிறார்; பின்னிருக்கையில் உள்ளவர்களைப் பார்த்துக் கொஞ்சம் பற்கள் தெரிய மீண்டும் சிரிக்கிறார்.

இவை அவரின் வழக்கமான செயல்பாடுகள்தான். குறிப்பிட்டுச் சொல்ல ஏதுமில்லை.

ஆனால் பாலிமரோ, அவர் மகிழ்ச்சியுடன் ‘மாஸ் என்ட்ரி’ தந்ததாகக் குட்டித் தலைப்பில் குறிப்பிட்டுக் குதூகலிக்கிறது.

எதற்கு?

அவரைக் ‘குஷி’ப்படுத்தவா?

படுத்தாவிட்டால் அடுத்தடுத்து ‘அன்பளிப்புகள்’ பெறுவது தடைப்படுமா?

இன்றைய ஊடகங்கள்[தமிழ்] பாலிமர் போலவே ‘அண்டிப் பிழைக்கும்’ அசிங்கத் தொழில்தான் செய்கின்றன. அதாவது, நடுநிலை உணர்வுடன் இயங்கும் ஊடகம் இல்லை என்றே சொல்லலாம்!  

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2026

'அவர்' போஜனப் பிரியர்! யார் அந்த அருள்மிகு ‘அவர்’?!

வேலைவெட்டி எதுவும் இல்லாதபோது வெறுமனே பொழுதைக் கழிக்க விரும்பாத நான், இணையம் வழியாகக் கடவுள் குறித்த ஐயங்களுக்கு விடை தேடுவது[ம்] வழக்கமாகிப்போனது. சற்று முன்னர் ‘கடவுளுக்குப் பசிக்குமா?’ என்றொரு கேள்வியுடன் இணைய உலகில் அலைந்து திரிந்தபோது, நான் அறிந்திராத தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றேன். வாசிப்போருக்குப் பயன்படுவதாக அமையக்கூடும் என்னும் நம்பிக்கையில் அதைப் பகிர்கிறேன், திருத்தம் ஏதும் செய்யாமல்.

                        ++++++++++++++++++++++

யான் குறிப்புகடவுளுக்குப் பசிக்குமா?

Posted on December 29, 2016 | By Trichy Farook

நூல்கள்: இயேசு இறை மகனா?

...ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். அப்பொழுது பொறித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். அவைகளை அவர் வாங்கி… (லூக்கா 24:41-43)

இயேசு… தாகமாயிருக்கிறேன் என்றார்.

(யோவான் 19:28)

ஏதோ ஓரிரு சந்தர்ப்பங்களில் தான் அவர் சாப்பிட்டார் என்று நினைத்து விடக் கூடாது. நன்றாக விரும்பிச் சாப்பிடக் கூடியவராக இருந்தார்.

இயேசு மதுபானம் அருந்தியதாகக் கூறும் வசனத்தில் (மத்தேயு 11:19) போஜனப் பிரியர்’ என்று கூறப்பட்டுள்ளது.

சாப்பிடுவதில் அதிக விருப்பம் உள்ளவராக இயேசு இருந்திருக்கிறார். சாப்பிடுதல் கடவுளின் இலக்கணமாகுமா? என்பதைக் கிறித்தவர்கள் சிந்திக்க வேண்டும்.

https://bayan.quranandhadis.com/

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

சேர்ந்து வாழ்தலும்[living together] 'முன்னோட்டம்' பார்த்தலும்!!!

தியழகியும் அறிவழகனும் ஒரே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள்.

பெயர்ப் பொருத்தம் அமைந்தது போலவே, அவர்களின் பழக்கவழக்கங்களும் வாழ்வியல் குறித்த நம்பிக்கைகளும் ஓரளவுக்கு ஒன்று போலவே அமைந்திருந்தன.

அதனால், நெருங்கிப் பழகினார்கள்; நல்ல நண்பர்கள் ஆனார்கள்.

சில மாதங்களிலேயே நட்பு காதலாகவும் மாறியது.

வெறும் காதல் மொழிகளைப் பகிர்வதில் சலிப்பு ஏற்பட்டபோது, அதற்குக் காரணம் இருவருக்குள்ளும் பதுங்கியிருந்து, படாத பாடு படுத்தும் காமம் என்பது புரிந்தது.

புணர்ச்சி செய்வதைத் தவிர, அதைத் தணிக்க வேறு வழியில்லை என்பதையும் அவர்கள் அறிந்தார்கள்.

“இப்போதெல்லாம் பல திருமணங்கள் விவாகரத்தில் முடியுது. அதனால, இன்றைய இளையத் தலைமுறையினர் சேர்ந்து வாழ்வதையே தேர்வு செய்யுறாங்க. என்னுடைய விருப்பமும் இதுதான்” என்றான் அறிவழகன்.

“எனக்கு மறுப்பில்லை. ஆனால் ஒரு திருத்தம். ஆறு மாதம் மட்டும் இணைந்து வாழலாம். வாழும்போது, பெரிய அளவில் கருத்து மாறுபாடுகளோ, தாம்பத்திய உறவில் வெறுப்போ அல்லது சலிப்போ ஏற்படாமலிருந்தால், அப்புறமும் சேர்ந்து வாழ்வது குறித்து அப்போதைக்கு முடிவு செய்யலாம். என்ன சொல்லுறீங்க?” என்றாள் மதியழகி.

“எனக்குச் சம்மதம். நாளையே வாடகைக்கு வீடு தேடுவோம்” என்ற அறிவழகன், அவர்கள் உரையாடிக்கொண்டிருந்த தேநீர் விடுதியில், யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவளின் ஒரு கன்னத்தில் அழுத்தமாக ஆசை முத்தம் பதித்தான்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2026

அடடா, கதைகளில் இத்தனை வகையா?!

வீனச் சிறுகதைகளின் உள்ளடக்கத்தைச் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை, ‘நல்ல கதைகள்’ என்றும் ‘நச்சுக் கதைகள்’ என்றும் ‘பொழுதுபோக்குக் கதைகள்’ என்றும் ஆய்வாளர்கள் தரம் பிரிப்பார்கள். 

கொஞ்சம் அழுத்தமாக ஆராயும்போது, இவற்றைக் கீழ்க்காணுமாறும் வகைப்படுத்தத் தோன்றுகிறது.
ஒன்று:
கதையில் எதிர்பாராத முடிவைக் கொடுத்து வாசகனைக் கவர்தல் ஒருவகை. இம்மாதிரிக் கதைகள் நிறையவே வெளியாகின்றன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை ஒரு பக்கக் கதைகள்.

இரண்டு:
அரைத்த மாவை அரைத்தல். ஏற்கனவே வெளியான கதைகளின் நிகழ்வுகளை மாற்றியமைத்து, கதைமாந்தர்களுக்குப் புதுப்பெயர்கள் சூட்டிப் புதுக்கதை படைப்பது. சுற்றிவளைக்காமல் சொன்னால், ஒருவர் படைத்த கதையின் கருவை இன்னொருவர் திருடுவது. அதாவது, கதைத் திருட்டு! இம்மாதிரிக் கதைகளும் பெருமளவில் வெளியாகின்றன.

மூன்று:
அரைப் பக்கத்தில் அல்லது ஒரு பக்கத்தில் எழுதி முடிக்க வேண்டியதை எட்டு அல்லது பத்துப் பக்கங்களில் பூசி மெழுகுவது. இம்மாதிரி ‘இழுத்தடிப்பு’ வேலையைச் செய்பவர்கள் பெரும்பாலும் பிரபல எழுத்தாளர்களே!

நான்கு:
எத்தனை முறை படித்தாலும் புரியாத படைப்புகள். இப்படி எழுதியே தமிழில் ‘பிரபலங்கள்’ பட்டியலில் இடம் பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்!

ஐந்து:
பாசாங்குக் கதைகள். எதார்த்த வாழ்வில் இடம்பெறாத சோகங்களையும் துயரங்களையும் பூதாகரமாக்கிக் கதைகளை உருவாக்குவது. இவையும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளன.

ஆறு:
பொழுதுபோக்குக் கதைகள். இவ்வகைக் கதைகளை இரண்டாகப் பிரிக்கலாம். கதை படிக்கும் வாசகனின் பொழுதை வீணடிப்பது ஒன்று. சூதாடுவது, பந்தயம் கட்டுவது என்பன போல. பின்விளைவு ஏதுமின்றி, வாசகனைச் சிறிது நேரம் மகிழ்ச்சியில் ஆழ்த்துவது மற்றொன்று. இன்னிசை கேட்பது போலவும் இயற்கையை ரசிப்பது போலவும் என்று சொல்லலாம்.

ஏழு:
வாழ்க்கைப் பிரச்சினைகளையோ சிக்கல்களையோ போராட்டங்களையோ இயல்பாகப் படம் பிடிப்பது.
வேலை தேடிச் சோர்ந்துபோன ஒரு பட்டதாரி வாலிபன், பழைய பேப்பர்களும் பிளாஸ்டிக் பொருள்களும் சேகரித்து விற்றுக் கொஞ்சம் சம்பாதிக்க நினைக்கிறான்; காரியத்தில் இறங்குகிறான். முதல் நாளே அடி உதை விழுகிறது. உதைத்தவர்கள், ஏற்கனவே அந்தத் தொழிலைச் செய்துகொண்டிருப்பவர்கள். 

இவ்வகைக் கதைகளே மக்களுக்குப் படிப்பினையும் மிக்க பயன்களும் நல்குபவை. அரிதாகவே வெளியாகின்றன.

எட்டு:
பிரச்சினைகளை எதார்த்தமாகச் சொல்வதோடு, அவற்றிற்குத் தீர்வும் தர முயலும் படைப்புகள். இவை எண்ணிக்கையில் மிக மிகக் குறைவானவை. 

ஓர் எடுத்துக்காட்டு மட்டும்.

ஓர் இந்து இளைஞன், பிரசவ வேளையில் உயிருக்குப் போராடும் மனைவியை மருத்துவமனையில் சேர்க்கத் துடிக்கிறான். ஊரெங்கும் மதக் கலவரம். சாதிச்சனம், ஒட்டுறவு, நட்பு என்று எவருமே உதவ முன்வரவில்லை. இந்த நிலையில், முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு முஸ்லீம் பெரியவர் தன் உயிரைப் பணயம் வைத்து உதவுகிறார். மாதங்கள் கழிகின்றன. பிள்ளைக்குப் பெயர்சூட்டு விழா. சொந்தபந்தங்கள் பல பெயர்களைச் சிபாரிசு செய்கின்றன. அவற்றையெல்லாம் அலட்சியப்படுத்தி, கடவுளாக வந்து தன் மனைவியைக் காப்பாற்றிய முஸ்லீம் பெரியவரின் பெயரை - அவரிடமே முன்பு கேட்டறிந்தது - தன் பிள்ளைக்குச் சூட்டுகிறான் அந்த இந்து இளைஞன்.

அருமையான படைப்பு! குங்குமம் இதழில் வெளியானது இது. எழுதியவர் பெயர் மறந்துபோனது வருத்தத்தைத் தருகிறது.

வெள்ளி, 31 ஜூலை, 2026

அசுரச் சாதனை நிகழ்த்திய அசாத்தியத் தன்னம்பிக்கையாளன்!!!

மூளையிலும், நுரையீரலிலும் புற்றுநோய் பரவிய நோயாளி அவர்; 'இது தேறாத கேஸ்' என்று மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்; சைக்கிள் பந்தயங்களில் பல பரிசுகள் பெற்றவர்.

"இவருக்கா இந்த நோய்?" என்று உற்றார் உறவினரும் நண்பர்களும் மனம் வருந்தினார்கள்.


ஆயினும் என்ன, இந்த மனிதர் மட்டும் மனம் தளரவே இல்லை. "நான் சாதிக்கப் பிறந்தவன்" என்று அவ்வப்போது அவரின் உள்மனம் முழக்கமிடத் தவறுவதே இல்லை.


மனம் கலங்காமல் தொடர்ந்து சைக்கிள் போட்டிகளில் பங்கேற்றார்.


ஃபிரான்ஸ் நாட்டில் பிரபலமானதும், 21 நாட்கள் நடைபெறுவதுமான Tour de France எனப்படும் 2000[சற்றே கூடுதல் தூரம்] மைல் சைக்கிள் போட்டியில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவித்தார். செங்குத்தான மேடு, கிடுகிடு பள்ளம் என்று ஆபத்தான பாதையில் சைக்கிள் ஓட்ட வேண்டிய போட்டி அது. அதில் கலந்துகொண்டு கைகால்களை முறித்துக்கொண்டவர்களும், உயிரிழந்தவர்களும் ஏராளமாம்.


அப்படிப்பட்ட ஆபத்தான போட்டியில்தான் 'அவர்' கலந்துகொள்வதாக அறிவித்தார்.


மருத்துவர்கள் எச்சரித்தபோதும் கலந்துகொள்ளவே செய்தார்; அவர் வென்றது பரிசை மட்டுமல்ல, புற்றுநோயையும்தான்[முற்றிலும் குணமடைந்தார்].


பின்னர் அவர் அளித்த பேட்டி ஒன்றில்.....


“நான் சைக்கிள் சாம்பியன் ஆவதற்காகவே பிறந்தவன். புற்று நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகப் பலரும் வீட்டுக்குள் முடங்கிவிடுகிறார்கள். நான் அஞ்சவில்லை.... இந்தப் புற்று நோய், என் மன உறுதியைப் பல மடங்கு உயர்த்தியது. நான் வெற்றியாளனாகத் திகழ்வதற்கு இதுதான் காரணம்” என்று உறுதிபடச் சொன்னார்.


புற்று நோய் தாக்குவதற்கு முன்பு, ஒரு முறைகூட இந்தப் போட்டியில் அவர் வென்றதில்லை என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்!


அவர் ?


முதன்முதலாக நிலவில் கால் பதித்துச் சாதனை நிகழ்த்தியவரின் பெயரைத் தாங்கியவர்தான் அவரும்.


அவர் 'நீல் ஆர்ம்ஸ்ட்ராங்'; இவர் 'லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்'Lance Armstrong!

          ==================

ஆதாரம்:https://www.britannica.com/biography/Lance-Armstrong; விகடன்[பழைய இதழ்].

வியாழன், 30 ஜூலை, 2026

ஒரு புத்திசாலிக் கதாசிரியனும் அதி புத்திசாலி இதழ் ஆசிரியனும்[அனுபவம் பழசு]!!

பிரபல வார இதழொன்று அனுப்பியிருந்த காக்கி நிற அகல உறையொன்றை ராதா மோகனின் வீட்டு வாசற்படியில் வீசிவிட்டுப் போனார் தபால்காரர். பிரித்துப் பார்த்த 'ராதா மோகன்' துன்ப அதிர்ச்சிக்கு உள்ளானான். அவன் அனுப்பிய சிறுகதை, உறையிலிருந்த குமுதம் வார இதழில் பிரசுரிக்கப்படவில்லை.

'கதை போடாம பத்திரிகையை எதுக்கு அனுப்பினாங்க?' -யோசனையுடன் உறையை ஆராய்ந்தபோது அதன் உள்ளே மடிக்கப்பட்ட ஒரு கடிதம் இருந்தது.

'அன்புடைய ராதா அவர்களுக்கு, உங்கள் படைப்பைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம். கதையுடன் நீங்கள் அனுப்பியிருந்த அழகான உங்களுடைய புகைப்படத்தை நம் வார இதழின் அட்டைப்படமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். நன்றி' என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

கடந்த சில ஆண்டுகளில் ராதா மோகன் அனுப்பிய எந்தவொரு கதையும் அந்த முன்னணி வார இதழில் பிரசுரம் ஆனதில்லை. நண்பன் மூர்த்தியிடம் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டபோது, உன் பேரு ராதா மோகன். இனிமே 'ராதா'ங்கிற பேர்ல கதை அனுப்பு. கூடவே, ஏதாவதொரு அழகி படத்தைக் கூகுளில் சுட்டுக் கதையோடு இணைச்சிடு. அழகான பொண்ணு கதைன்னா கண்டிப்பா பிரசுரம் பண்ணுவாங்க'' என்றான் அவன். அவன் சொன்னபடியே செய்தான் ராதா மோகன். இருந்தும் அவனுடைய நீண்ட கால ஆசை நிறவேறவில்லை.

''இந்த எடிட்டர் கொஞ்சம் புத்திசாலியாகவும் இருப்பான் போல. தரமில்லேன்னு நினைச்சி என் கதையைக் குப்பைக் கூடையில் போட்டுட்டு, நான் அனுப்பிய அழகான பொண்ணு படத்தை அட்டையில் போட்டுட்டான். அந்த ஆளை நான் உண்டு இல்லைன்னு பண்ணிடப்போறேன்'' என்று சபதம் ஏற்ற ராதா மோகன், கணினியைத் திறந்து வைத்து, கூகுள் தேடல் மூலம் தமிழில் உள்ள கெட்ட வார்த்தைகளுக்கு ஒரு பட்டியல் போட ஆரம்பித்தான்!

புதன், 29 ஜூலை, 2026

கதைக்கு ’நடை’ அழகு! அதென்ன ’நடை’?

'கண்ணுக்கு மை அழகு. கவிதைக்குப் பொய் அழகு. அவரை(ஆவாரைச் செடி)க்குப் பூ அழகு' என்பார்கள். 

ஒரு கதையைப் பொருத்தவரை, அதன் கரு சொத்தையாக இருந்தாலும் சுவையான 'நடை'யில் எழுதப்பட்டிருந்தால் கவர்ச்சியான கதையாக அது ஆகிவிடுவது உண்டு. எனவே, 'கதைக்கு நடை அழகு' என்றால் அதில் தவறேதும் இல்லை. 

அதற்கான ஓர் எடுத்துக்காட்டு:

//ரு அன்றாடங் காய்ச்சிக்கு லாட்டரிக் குலுக்கலில் பத்து லட்சம் பரிசு விழுந்தது. அந்த யோகத்தை ஏழை வாலிபனான அவனால் நம்ப முடியவில்லை. பணம் கைக்கு வந்துசேரும்வரை என்னமாகத் தவித்துப்போவான்?

வெண்ணிலாவைப் பெண் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து நானும் அப்படியானதொரு தவிப்புக்கு ஆளானேன்.

வெண்ணிலா இந்த நிலவுலகத்து ரதி; பொன் வண்ண ரோஜா; பூரித்துக் குலுங்கும் இளமையின் புகலிடம்.

நானோ?

அழகு விசயத்தில் சராசரிக்கும் கீழே. எனக்கு ஆப்பிரிக்க நிறம்; சோமாலியா உடம்பு; அழகாகப் பிறந்துவிட்ட எவளும் "ஐயோ பாவம்" என்றுதான் என்னை மணக்கச் சம்மதிப்பாள்.

வெண்ணிலா பணக்காரப் பரம்பரையின் பலாக்கனி. நானோ கூலிப் பரம்பரையின் 'வெத்து' வாரிசு.

எனக்குச் சொந்த ஊர் கொக்கராயன்பேட்டை; தமிழ்நாட்டின் ஒரு குக்கிராமம். இதற்கு மேல் இந்த ஊரைப் பற்றித் தெரிந்துகொண்டு ஆகப்போவது ஒன்றுமில்லை.

அறுபது கிலோமீட்டருக்கு அப்பால் விசைத்தறிக்குப் பெயர்போன அதிவீரராமப்பட்டணம் போய் வெண்ணிலாவைப் பெண் பார்த்துவிட்டு வந்தேன். ஒரு வாரம் ஆகிறது. வருகிற வெள்ளிக்கிழமை நிச்சயதார்த்தம்.

திடீரென்று என் உள்மூளையில் ஒரு சந்தேகம். அது துக்கிளியூண்டு புள்ளி போல உதயமாகி இப்போது பூதாகரமாக உருவெடுத்து என்னைப் புரட்டியெடுக்கிறது; பதைபதைக்க வைக்கிறது.

அவளின் அப்பன் நாற்பது ஐம்பது விசைத்தறிக்குச் சொந்தக்காரன்; லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கிற பெரிய புள்ளி. இந்தப் பண்ணாடைப் பயலை மாப்பிள்ளையாக ஏற்க முன்வருகிறான் என்றால் எங்கேயோ உதைக்கிறதே.

கிளி மாதிரியான தன் பெண்ணை இந்தக் கருங்குரங்கு கையில் ஒப்படைக்கச் சம்மதிக்கிறானே, இது எப்படி?

பண்டம் கெட்டுப்போனதோ?

சுழி பிசகில்லாமல் இருந்தால் மாடு உள்ளூரிலேயே விலை போயிருக்கணுமே? வெளியூர்ச் சந்தைக்கு ஏன் வரணும்?

நான் ஏமாளியா? பணமும் அழகும் காட்டி என்னை ஏமாற்றப் பார்க்கிறார்களா?

இப்படி, இன்னும் எப்படியெல்லாமோ அங்கலாய்த்துப் புலம்பியது என் அல்பப் புத்தி.

"இல்லை. அப்படியெல்லாம் இருக்காது. வீணாகக் குழம்பாதே. வீடு தேடி வரும் அதிர்ஷ்டத் தேவதையை அடித்து விரட்டிவிடாதே" என்று என் ஆசை மனம் ஆறுதல் சொன்னது.

"வெண்ணிலா பரிசுத்தமானவள்; பத்தரைமாற்றுத் தங்கம்" என்று என்னைத் தேடி வந்து யாராவது தேறுதல் சொல்ல மாட்டார்களா?" என்று ஏங்கினேன்//

குறிப்பு:

ஒரு பிரபலமான கதாசிரியரின் கதையிலிருந்து எடுத்தாண்டது மேற்கண்ட கதைப் பகுதி. கதை சற்றே நீண்டது என்பதால் பதிவு செய்யவில்லை.

கதாசிரியர்? 

உங்களுக்கு நன்கு அறிமுகமானவர்தான். ஹி... ஹி... ஹி!!!

செவ்வாய், 28 ஜூலை, 2026

’தமிழ் அவமதிப்பு’... ஆளுநருக்குக் கண்டனமாம்! ’தவெக’ தகிடுதத்தம்!!

ஐந்தாறு நாட்கள் முன்னதாகவே, ’ஆளுநர் உத்தரவின்படி நெல்லைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ஆவது இடம்தான்’ என்று அறிவித்தார் பல்கலைத் துணைவேந்தர்.

அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி.....

பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தவிர்ப்பதன் மூலம், பட்டமளிப்பு விழாவை ஒத்திப்போடச் செய்திருக்கலாம் ’தவெக’ அரசு.

விசிலடிச்சான்களைத் தூண்டிவிட்டு மறியல் செய்ய வைத்தும் நிகழ்வைத் தடுத்திருக்கலாம்.

தைரியமாக, ”தமிழ்த்தாய் அவமானப்படுத்தப்பட்டால், ’தவெக’ அரசு அதைக் கடுமையாக எதிர்க்கும்; தேவைப்பட்டால் பதவி விலகி, மக்களோடு இணைந்து, கிளர்ந்தெழுந்து ’பாஜக’வின் அராஜகத்தைக் கண்டித்துப் போராடும்.”

தேவைப்பட்டால் திமுக, அதிமுக போன்ற எங்களின் எதிரிகளுடன் சேர்ந்தும்கூடப் போராடத் தயங்கமாட்டோம்.” 

என்றிப்படியாக முன்னெச்சரிக்கைகள் செய்தும்[நிகழ்வை அமைச்சர் புறக்கணித்ததெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல] தமிழ்த்தாய் வாழ்த்து இழிவுக்குள்ளாவதைத் தடுத்திருக்கலாம் ’தவெக’ அரசு.

கைகட்டி வேடிக்கை பார்த்ததோடு, எல்லாம் நடந்து முடிந்த பிறகு[தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாகப் பாடப்பட்டது] வாய் கிழியக் கண்டனங்கள் தெரிவிப்பது யாரை முட்டாளாக்க?

நடுவண் ஆட்சியாளர்களையோ ஆளுநரையோ அல்ல[அவர்கள் ரகசியக் கூட்டாளிகள்]; தேர்தலில் ’தவெக’வை அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறச் செய்த தமிழ் மக்களைத்தான்!

ஜோசப் ரொம்பவே புத்திசாலி!