ஆண்டாண்டுதோறும் விசேட நாட்களில், பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயச் சாமி[நாமக்கல்]க்கு, வெண்ணெய்க் காப்பு, திருமஞ்சனக் காப்பு(மஞ்சள், பால், தயிர், சந்தனம்) என்றிவற்றால் குளிப்பாட்டி, விதம் விதமாய் அலங்கரித்து, அபிஷேக ஆரதனைகள் நிகழ்த்தி வழிபடுகிறீர்கள். மகிழ்ச்சி.
வெறும் தகரக் கவசம், பித்தளைக் கவசம், செம்புக் கவசம் எல்லாம் அணிவிக்காமல், முலாம் பூசிய தங்கக் கவசத்தை அவருக்கு அணிவித்து, தீபாராதனை காட்டி[அர்ச்சகர்கள் மூலம்]ஆனந்தப் பரவசத்துடன் நீங்கள் பிரார்த்திப்பது கண்கொள்ளாக் காட்சி; காண்போரின் இரு கண்களிலும் மாலை மாலையாய் ஆனந்தக் கண்ணீர் வழிய வைப்பதும்கூட.
ஆனால், நீங்கள் மாமூலாகச் செய்கிற ஒரு பெரிய தவற்றை உணரத் தவறிவிட்டீர்கள். அத்தவறு உங்கள் மீது ஆஞ்சநேயக் கடவுள் கடும் சினம்கொள்ளத் தூண்டும் என்பதை அடியோடு மறந்துவிட்டீர்கள்.
தங்க முலாம் பூசிய கவசத்தை அவருக்கு அணிவித்துவிட்டு, தங்கக் கவசம் அணிவித்து வழிபட்டதாக ஊடகங்களுக்குச் செய்தி அளிப்பதுதான் அந்தத் தவறு.
இனியேனும் அந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்.
‘தங்க முலாம் பூசிய கவசம் அணிவிக்கப்பட்டது’ என்றே செய்தி வெளியிடுங்கள். அதைச் செய்தால், உங்களின் நேர்மையையும் அளப்பரிய பக்தியையும் மெச்சி, உங்களுக்கு[எங்களைப் போன்ற தெய்வ நிந்தனை செய்யும் பாவிகளுக்கும்தான்] அனுமார் சாமி அருள்மழை பொழிவார் என்பது உறுதி.
நலம் தரும் நாமக்கல் ஆஞ்சநேயரின் திருவடி போற்றி!

