"கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் ! கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் ! கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி" என்று நான் சொல்வதால் சிலர் மனம் புண்படாதா?" என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும்.
அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப்பட்ட கோடிக் கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே பார்க்கலாம்!
"கோவில்கள் கள்ளர் குகை" என்று கூறிய கிறிஸ்து கொல்லப்பட்டாலும் இன்று அவரை நூற்றுக்கணக்கான கோடி மக்கள் கடவுளுக்கு மேலாகக் கருதுகிறார்கள்.
'கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்குகிறவர்கள் முட்டாள்கள், மடையர்கள்' என்று கூறிய முகம்மது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும் இன்று அவரைப் பல கோடி மக்கள் கடவுளைவிட மேலாகக் கருதுகிறார்கள்.
நம் கண் முன்னால், "கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி" என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் மகாத்மா என்கிறார்கள்.
உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக் கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக்கியர்களும், காட்டு மிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞானக் காலத்திலும் இருந்துவர இடம் ஏற்பட்டதே தவிர வேறு காரணம் என்ன?
இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற்பட்டபின் இதன் பயனாக இயற்கையான யோக்கியமான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனித னாவது தோன்ற முடிந்ததா? இருக்க முடிந்ததா? பொதுமக்கள் பயமில்லாமல் வாழ முடிந்ததா? சிந்தியுங்கள்.
எவ்வளவோ பொறுமைக்கு மேல்தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கிறேன்.
நான் பந்தயம் கட்டிச் சொல்லுவேன். நம் மக்களில் (இந்துக்கள் என்பவர்களில்) கடவுளை வணங்குகிறவர்களில் ஒருவர்கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந்தவரோ இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன்.
ஏனெனில், எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத்தைத்தான், மாடு, குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற்றிலும், மிகமிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால் ஒரு தலை, இரண்டு தலை, மூன்று தலை, நான்கு தலை, அய்ந்து தலை, ஆறு தலை, ஆயிரம் தலையும் அவை போன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை மனிதன், உடல் மிருகம், முதலிய உருவங்கள் கொண்ட சிலைகளையும் வணங்குகின்றான் என்பதே.
கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற்றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும் ஒவ்வொரு கூற்றைக் கற்பித்தால், பலப்பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள்தனமானது, காட்டுமிராண்டித்தனமானது அல்லவா என்றுதான் கேட்கிறேன்.
கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூசை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான், பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம் கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித்தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன்.
பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த, தினம் அய்ந்து வேளை ஆறு வேளை பொங்கல் அக்கார அடிசில் முதலியன படைத்தலும், பால், நெய், தேன், தயிர், இளநீர் எண்ணெய் அபிஷேகம் என்னும் பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதலும் வடிகட்டிய முட்டாள்தனமா? கடவுள் வணக்கமா? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால், இந்த முட்டாள்தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனருக்கு அல்லாமல் மற்ற யாருக்கும்[முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா? என்று கேட்கிறேன்.
மேலும் இதற்காக ஏற்படும் பொருள் செலவு, நேரச்செலவு எவ்வளவு?. இந்த நிலை ஒருபுறமிருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.
[கட்டுரை சற்றே சுருக்கப்பட்டது]
===============================================================
- ஈ.வெ.ரா - 'உண்மை' , 14.5.1970
- விடுதலை நாளேடு, 8. 9.19
https://periyar.mooligaimannan.com/2019/09/blog-post_41.html?m=1