சிவபெருமான் என்னும் சாமிக்குத் தனது தொண்டையை அறுத்து ரத்ததால் அபிஷேகம் செய்ததால் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது[https://www.kumudam.com/news/national/25058].
மகாராஷ்டிராவின் பைதான் நகரில் உள்ள மகாதேவ் கோயிலில் 25 வயது நபர் தனது தொண்டையை அறுத்து, சிவலிங்கத்தின் மீது ரத்தம் ஊற்றியுள்ளார்; நிகழ்விடத்திலேயே இறந்தும்விட்டாராம்.
இவரின் இந்த அடிமுட்டாள்தனமான செயலுக்கு மூலகாரணமாக அமைந்தது எது? யார்?
நாடெங்கும் உள்ள கோயில்களில் நாள் தவறாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அபிஷேகங்களும் அதைச் செய்பவர்களும்தான்.
மனிதர்கள் மிகவும் விரும்பும் பொருள்களான எண்ணெய், மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், கரும்புச்சாறு, பழ ரசங்கள், இளநீர், சந்தனம் போன்றவற்றைச் சாமிகளும் விரும்புவதாகச் சொல்லி, அந்தச் சாமி சிலைகளின் மீது கொட்டி வீணடிக்கிறார்களே, அவர்கள்தான் காரணம்.
இதைச் செய்வதால், செய்த பாவம் கழியும், புண்ணியம் சேரும் என்று சொல்லிச் சொல்லி மக்களை நம்பச் செய்திருக்கிறார்களே, அவர்களே காரணம்.
இந்த நம்பிக்கைதான் தன் கழுத்தை அறுத்து ரத்த அபிஷேகம் செய்ய வைத்திருக்கிறது ஓர் அப்பாவிப் பக்தனை. மேற்கண்ட உணவுப்பொருள்களை அபிஷேகம் செய்வதால் கிடைக்கும் பலனைவிட மிகப் பல மடங்கு, ரத்த அபிஷேகத்தால் கிடைக்கும் என்று அவன் நம்பியிருக்கிறான்.
இம்மாதிரி மூடத்தனமான செயலுக்குத் தாங்கள்தான் முன்னோடிகள் என்று எவரும் குற்றம் சுமத்திவிடக் கூடாது என்று அந்த நபரை 'அகோரி' ஆக்கியிருக்கிறார்கள். கங்கை ஆற்றங்கரைகளில் வாழ்ந்துவரும் சைவ சமய சாதுக்களான இவர்கள் மனித மாமிசம் உண்பவர்கள்; கையில் மண்டையோடு ஏந்தி நிர்வாணமாகத் திரிபவர்கள்[விக்கிப்பீடியா].
எனவே, கேரளாவைச் சேர்ந்த இவன் அகோரியாக இருக்க வாய்ப்பே இல்லை.
இவன் அகோரி என்றால், கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே விதுரா கிராமத்தில் உள்ள காளி கோவில் உள்ள காளி சிலைக்குப் பக்தர்களிடம் ரத்தம் தானமாகப் பெற்று அபிஷேகம் செய்தார்களே[கேரள அரசு இப்போது இதற்குத் தடை விதித்துள்ளது என்பது அண்மைச் செய்தி -தினமணி.காம்] அவர்களும்கூட அகோரிகளா?
[அடுத்து, அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று அறிவிப்பார்கள்!]
கர்னாடகாவில், 'வில்லன்' படத்தில் நடித்த சிவராஜ் குமாருக்கும், சுதீப் என்பவருக்குமான விளம்பரத் தட்டிகளுக்கு[கட் அவுட்] எருமைக் கன்றின் ரத்தத்தால் அபிஷேகம் செய்த முட்டாள் ரசிகர்களும், தமிழகத்தில் நடிகர் அஜீத் குமாரின் தட்டிக்கு ரத்த அபிஷேகம் செய்த[#ajith #viswasam #fans #ut #utcinema #cinemanews #universaltamil]மூடர்களும் அகோரிகளா?
ஆந்திராவில் ஒரு சிவன் கோயிலில், 1.07.2019இல் மூன்று பேரின் தலையை வெட்டி, சிவலிங்கத்திற்கு ரத்த அபிஷேகம் செய்தார்களே, அவர்களும் அகோரிகளா?[http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=124340]
ஆக, ரத்ததானம் செய்தல் என்னும் படுமுட்டாள்தனமான செயல்களுக்குத் தூண்டுதலாக, அங்கிங்கெனாதபடி நாடெங்கும் நிறைந்து காணப்படும் கோயில்களில் நிகழ்த்தப்படுகிற வகை வகையான அபிஷேகங்களே காரணம் ஆகும்.
உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டியவை ரத்த அபிஷேகங்கள் மட்டுமல்ல, எண்ணெய், பஞ்சகவ்யம், மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், நெய், தேன், கரும்புச்சாறு, பழ ரசங்கள், இளநீர், சந்தனம் போன்ற உணவுப் பொருள்களைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்களும்தான்!
இவ்வகையான அபிஷேகங்களைச் செய்வது நீடித்தால்.....
சாமிகளுக்குச் 'சரக்கு' அபிஷேகம்[சில சாமிகளுக்கு, சரக்குப் 'படைப்பது' வழக்கத்தில் உள்ளது] செய்யும் அவல நிலை உருவாகக்கூடும்!!!
===============================================================