புதன், 21 மார்ச், 2018

'உச்ச நடிகர்' ரஜினிகாந்த் உலக மகா புத்திசாலி!

நடிகர்களுக்கும் அவர்களையொத்த பிரபலங்களுக்கும் அதி முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிட்டுப் பிழைப்பு நடத்தும் தமிழ்த் தொலைக்காட்சிகளில் 'புதிய தலைமுறை'யும் ஒன்று.

இன்று முற்பகல் 09.30 மணியிலிருந்து அரை மணி நேரம்[பின்னர் சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தது], ரஜினியின் வீடியோ பேச்சை[தென்சென்னை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம்] 'முக்கியச் செய்தி'யாக மீண்டும் மீண்டும் வெளியிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

''ஆண்டவன் ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறான். அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்கள் மன்ற உறுப்பினர்கள், பதவி கிடைக்கவில்லையே என்ற பொறாமையுடன் செயல்படக் கூடாது'' என்பதுதான் அந்த முக்கியச் செய்தியின் சாராம்சம். [சொன்னதையே திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டிருப்பதையும், அதை ''முக்கிய செய்தி'யாக தமிழ்த் தொலக்காட்சிகள் காட்சிப்படுத்துவதையும் நினைத்துக் கொதிப்படைய வேண்டாம்].

ரஜினிக்கு மட்டும் இந்த அரிய வாய்ப்பை ஆண்டவன் ஏன் தந்தருளினார் என்று நாம் கேள்வி எழுப்புதல் கூடாது. 

அவர் கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம் காரணமாக இருக்கலாம். அவரை மிஞ்சிய புண்ணியவான் இந்த மண்ணில் இல்லாமல் இருக்கலாம்.

எது எப்படியோ, 'ஆண்டவன் வாய்ப்பளித்திருக்கிறான்' என்று பேசிய ரஜினி மகா புத்திசாலி என்பது என் எண்ணம்.

எதிர்காலத்தில், நடிகர் ரஜினியின் 'ஆன்மிக அரசியல்', தோல்வியைத் தழுவியது என்றால்.....

''ஆண்டவன் எனக்குக் கொடுத்த வாய்ப்பைப் பறித்துக்கொண்டுவிட்டான். சிஸ்டத்தை மாற்ற நினத்தேன். அவன் தடுத்தாட்கொண்டுவிட்டான்'' என்று சொல்லிச் சமாளித்துவிடலாம்.

எனவே, ரஜினி மகா புத்திசாலி என்று நான் சொன்னதில் தவறேதும் இல்லைதானே?