திங்கள், 10 ஆகஸ்ட், 2026

ஆன்மா இல்லை... இல்லை... இல்லவே இல்லை!!!

சிந்திக்கப் பயன்படுகிற நம் மூளைதான் நம் வாழ்வின் கடந்த கால நிகழ்வுகளை[அனுபவங்கள்] நினைவுகூர்தலையும் செய்கிறது[மனம் என்று ஒன்று இருப்பது அறிவியலால் உறுதிப்படுத்தப்படவில்லை].

மூளை முற்றிலுமாகச் செயலிழந்தால் நடந்துமுடிந்தவை உட்பட, எந்தவொரு நிகழ்வையும் நினைவுகூர்தல் சாத்தியமே இல்லை.

ஆன்மிகவாதிகள் சொல்வதுபோல நம் உடம்புக்குள் ‘அழியாத ஆன்மா’ இருப்பது உண்மையானால், அது மூளைக்கு ‘மாற்றாக’ச் செயல்பட்டு, பழைய நிகழ்வுகளை நினைவுகூர்ந்திட[இப்பிறவியில்] அது பயன்படுதல் வேண்டும். அதன் மூலம் இப்பிறவி நிகழ்வுகள் மட்டுமல்லாமல், நம் முற்பிறப்பு[பிறவிகள் பல உண்டு என்கிறார்கள் ஆன்மிகர்கள்] நிகழ்வுகளை நினைவுக்குக் கொண்டுவருதலும் சாத்தியப்படுதல் வேண்டும்.

எவரொருவருக்கும் இவ்வாறான அனுபவம்[ஆன்மா மூலம் முற்பிறப்பு நிகழ்வுகளை[அனுபவங்கள்] நினைவுகூர்தல்] வாய்த்ததில்லை; உரிய வரலாற்று ஆதாரமும் இல்லை.

அப்புறம் எப்படி ஒவ்வொரு மனித உடம்பிலும் ஆன்மா இருக்கிறது, ஆன்மா உள்ள ஒவ்வொரு மனிதனும் பல பிறவிகள் எடுக்கிறான் என்கிறார்கள்?

நெருப்பில் கருகாததும், நீரில் கரையாததும் வெட்டிச் சிதைக்க இயலாததுமான ஆன்மா[இதற்கு மேல் ஆன்மா பற்றி விளக்கம் தந்தவர் எவரும் இல்லை; ‘பாவப் புண்ணியங்களைச் சுமத்தல்’ தவிர இதன் செயல்பாடுகள் குறித்தும் எவரும் விவரித்ததில்லை] உடம்புக்குள் இருப்பதன் பயன்தான் என்ன?

ஏதும் இல்லை.

எனவே, “ஆன்மா இல்லை... இல்லவே இல்லை” என்று உறுதிபடச் சொல்லலாம்.

இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பும் மூடத்தனத்திலிருந்து விடுபட்டு, ஒரு பிறப்பு மட்டுமே நமக்கு உள்ளது என்பதை நம்பி, வாய்த்த இந்தப் பிறவியில் இயன்றவரை சிறப்பாக வாழ்ந்து முடிக்க முயல்வதே அறிவுடைமை ஆகும்!