அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

தமிழ் நாளிதழ்களின் பின்னணியில் நாசகாரக் கும்பல்கள்!!!

''மகாவிஷ்ணு தன் திருமணச் செலவுக்காகக் குபேரனிடன் 'கடன்' வாங்கியதான கதையையெல்லாம் வெளியிடும் பத்திரிகையாளர்களே, உங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையா?!''  
வாரம் தவறாமல் ஆன்மிகச் செய்திகளுக்காக 'இணைப்பு' வெளியிட்டுப் பகுத்தறிவைப் பாழ்படுத்துவதில் தமிழ் நாளிதழ்களுக்கிடையே[சில வார இதழ்களும்தான்] கடும் போட்டி நிலவுகிறது. இதன் மூலம் முதலாளிகளின் கல்லா நிரம்புகிறது; மக்களின் மண்டை மூளை காலியாகிறது.

இவர்கள் வெளியிடும் மூடநம்பிக்கைக் கதைகளை மேற்கோள் காட்டிக் கண்டனம் தெரிவித்துக் கணிசமான எண்ணிக்கையில் பதிவுகள் எழுதியிருக்கிறேன். இன்று புதிதாக ஒன்று.

#'பிருகு' என்னும் பெயரில் ஒரு முனிவர். படைப்புத் தொழிலில் பிரம்மதேவனுக்கு உதவி புரிபவராம். இவருக்குப் பாதத்தில் 'ஞானக்கண்' இருக்கிறதாம். இவரைப் பற்றி நெடியதொரு சுவாரசியக் கதை உண்டு. அதில் தேவையானதை மட்டும் கீழே விவரிக்கிறேன்.

தன் தவ வலிமையால் பிறரைத் துன்புறுத்திச் சுகம் காணும் அற்ப குணம் படைத்த இந்த முனிபுங்கவர், பிரம்மன், சிவன் போன்ற கடவுள்களிடமெல்லாம் சேட்டை செய்துவிட்டு, ஆதிசேடன் மீது சயனம் கொண்டிருக்கிற மகாவிஷ்ணுவைப் பார்க்கப் போனாராம். அவர் தன்னை மதிக்காமல் துயில் கொண்டிருந்தது பொறாமல், அவரை எட்டி உதைத்தாராம் இந்தத் தவயோகி.

மகாவிஷ்ணுவுக்குக் கோபமே வரவில்லையாம். ஒரு குழந்தை தன்னை எட்டி உதைத்ததாகக் கற்பனை செய்து மகிழ்ந்தாராம். விஷ்ணுவின் இந்தச் செயலால் மகாலட்சுமி கோபமடைந்து, அவரைப் பிரிந்து பூலோகம் வந்து 'கோல்காப்பூர்' என்னுமிடத்தில் தங்கியருளினாராம்.

மகாவிஷ்ணுவும் தன் துணையைப் பின்தொடர்ந்து இந்தப் பூலோகத்துக்கு வந்து சேர்ந்தார்......#

நான் விமர்சிக்கத் தேர்வு செய்தது மேற்கண்ட கதையல்ல. பின்வரும் கதைப்பகுதியையும் படியுங்கள்.

#பூலோகம் வந்த மகாவிஷ்ணு மகாலட்சுமி தங்கியிருந்த கோல்காப்பூருக்குச் செல்லவில்லை. முன்பொருமுறை, 'வேதவல்லி' என்னும் பெண்மணியைக் கலியுகத்தில் மணம் புரிவதாகத் தான் உறுதி மொழிந்தது அவரின் நினைவுக்கு வந்தது.

திருமண நிகழ்வுக்கான ஏற்பாட்டையும் செய்யலானார். ஆனால், அந்தோ.....

மகாவிஷ்ணுவிடம் கையில் 'சிங்கிள் பைசா'கூட இல்லை. நன்கு யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார் அவர். அம்முடிவின்படி.....

செல்வத்துக்கு அதிபதியான குபேரனைத் தேடிப்போய், கலியுக முடிவில் வட்டி சேர்த்துக் கடனை அடைத்துவிடுவதாக உறுதியளித்து, ஒரு கோடியே 14 லட்சம்[அதென்ன கணக்கு?] கடன் பெற்றுத் தன் திருமணத்தை நடத்தினாராம்.

இதையறிந்து பெரிதும் அகமகிழ்ந்த[!!!] மகாலட்சுமி  கோல்காப்பூரிலிருந்து இடம்பெயர்ந்து மகாவிஷ்ணுவைத் தேடி வந்தார். அம்மையின் வரவு மகாவிஷ்ணுவை அளப்பரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவரைத் தம் மார்பில் தாங்கினார்#

இம்மாதிரிக் கதைகளைக் கணக்கு வழக்கில்லாமல் பக்திச் சொற்பொழிவாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்; வாசித்தும் இருக்கிறோம்.

இந்தக் கதையைப் பொருத்தவரை என் மனதை வெகுவாக உறுத்தியது.....

மகாவிஷ்ணு குபேரனிடம் ஒருகோடியே 14 லட்சம் வட்டிக்குக் கடன் பெற்றதுதான்[இது குறித்த, தினமலர் கொசுறுச் செய்தி பதிவின் இறுதியில்].

மகாவிஷ்ணுவையே வட்டிக்குக் கடன் வாங்க வைக்கும் ஒரு கதையைக் கற்பனை செய்த அந்த அதிபுத்திசாலி பக்திமான் யாரென்று நமக்குத் தெரியாது. அவரைச் சாடும் எண்ணமும் எனக்கு இல்லை. ஏதோ ஒரு காலக்கட்டத்தில், ஏதோ ஒரு சூழலில், எவரையெல்லாமோ திருப்திபடுத்துவதற்காக இதை அவர் கற்பித்திருக்கலாம்.

அறிவியல் வெகுவாக வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில், விற்பனையில் முன்னணி வகிக்கிற ஒரு நாளிதழ்[மற்ற இதழ்களும் இம்மாதிரியான கண்டிக்கத்தக்க செயலில் ஈடுபடுவதால் பெயர் குறிப்பிட விரும்பவில்லை] பிரசுரித்திருப்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது; பேராச்சரியத்தில் திகைக்க வைக்கிறது.

இம்மாதிரியான, மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்யும் இப்பத்திரிகையின் பொறுப்பாளரையோ இவரனைய பிற பத்திரிகையாளரையோ சாடுவதில் கிஞ்சித்தும் விருப்பம் இல்லை. காரணம், அதனால் பயனேதும் விளையாது என்பதுதான்.

இவர்களைக் கண்டிப்பதில் விருப்பம் இல்லையாயினும், ஆழ்ந்த வருத்தத்துடன் சில கேள்விகளை  மட்டும் இவர்கள் முன் வைக்கிறேன்.

''இம்மாதிரிக் கதைகளை நம் மக்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்பதை எவ்வாறு அனுமானித்தீர்கள்? மக்கள் விரும்பினாலும் இவை அவர்களின் சிந்திக்கும் அறிவை அழிக்கும்; மூடநம்பிக்கைகளை வளர்க்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? 

தெரிந்தும் இம்மாதிரி அடாத செயல்களைத் தொடர்ந்து செய்கிறீர்கள் என்றால்.....

'உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்ற ஒன்று எள்முனை அளவுகூட இல்லையா?''
------------------------------------------------------------------------------------------------------------------
'தினமலர்'[டிசம்பர், 2014] நாளிதழ்ச் செய்தி[நகல்]:
நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்றான திருப்பதிக்கு, ஆண்டு தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள், பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்து கின்றனர். இந்த உண்டியல் காணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது.இதுதவிர, பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மூலமும் தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. எனினும், இந்த வருவாய் அனைத்தும், ஏழுமலையான் தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது.
இதற்கிடையே, கோவிலுக்கு கிடைக்கும் வருவாய் அனைத்தையும், கடனுக்கான வட்டியாக செலுத்துவதாகக் கூறி, தேவஸ்தானம் போர்டு பக்தர்களை ஏமாற்றுவதாக, பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.ஆந்திர மாநில தகவல் ஆணையத்திடம், அவர் அளித்துள்ள ஆர்.டி.ஐ., விண்ணப்பத்தில், 'ஏழுமலையான் பெற்ற கடன் தொகை எவ்வளவு? அதற்கான வட்டியாக இதுவரை எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது? இந்தக் கடன் எப்போது முடியும்?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விண்ணப்பத்தை, ஆந்திர மாநில தகவல் ஆணையம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. நரசிம்ம மூர்த்தியின் இந்த கேள்விகளால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
எப்போது முடியும்:






13 கருத்துகள்:

  1. மரியாதையுடன் கருத்துச் சொல்ற மாதிரி இருந்தாலும், கூர்ந்து கவனிச்சா உம்முடைய விமர்சனம் ரொம்பவும் கடுமையானதுன்னு புரியும். வம்பை விலைகொடுத்து வாங்கிடாதீர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மீதான உங்க பரிவுக்கு நன்றி பக்கா வாத்தியம்.

      நீக்கு
  2. இந்த கடன் வாங்கும்போது ரிசர்வ் பேங்க் பணத்தை வெளியிட்டு இருந்ததா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேவலோகத்தில் ஒரு ரிசர்வ்பேங்க் இருப்பதைக் கில்லர்ஜி கேள்விப்பட்டதில்லையா?!

      நன்றி நண்பரே.

      நீக்கு
    2. வங்கி இருப்பது தேவலோகத்தில். குபேரனும் அங்கேதான் இருக்கிறார்.அப்போது விஷ்ணு பகவான் இருந்தது பூலோகத்தில். பணப்பரிவர்த்தனை எல்லாம் ஆன்லைனில்தான்.

      நீக்கு
  3. குபேரனுக்கு வட்டியை எந்தக் வங்கியில் என்ன இலக்கக் கணக்கிலிடுகிறார்கள். அவற்றுக்கான பற்றுச் சீட்டுக்களுண்டுதானே!
    அத்துடன் இந்த 1 கோடி 14 லட்சம் முதலை மொத்தமாக , உடலெல்லாம் நகையால் மறைக்கும் லட்டு முகவரிடம் கட்டும்படி கூறி , திருப்பணி வேலை செய்யும் ஒப்பந்தக்காரரிடம் வாங்கி, பெருமாளைக் கடனிலிருந்து விடுவிக்கலாம். அல்லது ஶ்ரீதர் பட்டர் கூறுவதுபோல் , சுரங்கத்தில் இருக்கும் நகைகளை விற்று பகவானை , இனியாவது விடுவிக்கக் கூடாதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அருமையான யோசனை. அவர்கள் விரும்பிக் கேட்டால் இன்னும் நல்ல ஆலோசனைகளையும் நாம் வழங்கலாம்.

      ம்ம்ம்...கேள்வி கேட்பார் இல்லாததால் நாட்டில் என்னவெல்லாமோ நடக்குது?!

      நன்றி யோகன் பாரிஸ்.

      நீக்கு
  4. புதிய ஒரு கதையை இன்று தான் அறிந்தேன்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது மாதிரி கதைகள் இன்னும் கைவசம் இருக்கின்றன.

      நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. இதையெல்லாம் யார் படித்துக்கொண்டிருக்கிறார்கள் என்று பிரசுரிக்கிரார்களோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரும்பிப் படிப்பவர்கள் இருந்தால்தானே பத்திரிகை விற்பனை கூடும். வாசகர் கடிதங்களை வைத்து முடிவு செய்வார்களோ?

      நன்றி கும்மாச்சி.

      நீக்கு
  6. பலருக்கு இது சுவாரசியமானதாக இருக்கிறது. இப்படிப்பட்ட கதைகள் தேவையில்லாத உண்மையான தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள், இதை நம்பாதவர்கள் என்று இரு சாராரும் இது போன்றதை ரசிக்கிறார்கள். ஒரு சினிமா நடிகனின் விசிறி எப்படி அந்த நடிகன் திரைக்கு வெளியே செய்யும் காரியத்தில் அதீத ஆர்வம் காட்டுகிறானோ,
    கிட்டதட்ட அதே ஆர்வத்தை அந்த நடிகனை விமர்சிப்பவர்களும் காட்டுகிறார்கள். குப்பையென்று தன் கருத்தை வெளியிட வேண்டுமென்பதற்காகவாது அவனுடைய படத்தைத் தவறாமல் பார்த்துவிடுகிறார்கள்.
    இதை வெளியிடும் பத்திரிகைகளுக்கு இத்தகைய மனப்பான்மை போதும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி வாஞ்சிநாதன்.

      நீக்கு