புதன், 15 ஆகஸ்ட், 2018

கர்னாடக முதல்வர்...23...82...34...!!!

மதிப்பிற்குரிய, கர்னாடக மாநில முதல்வர் குமாரசாமி அவர்களுக்கு, தங்களின் அண்டை மாநிலத்  தமிழ்ச் சகோதரன் ஒருவன் வரையும் மனம் திறந்த மடல்.

முதல்வர் அவர்களே,
தாங்கள், 23.05.2018இல் கர்னாடக மாநில முதல்வராகப் பதவி ஏற்றது முதல் இன்றுவரையிலான 82[84?] நாட்களில், 34 முறை[பத்திரிகையின் பத்தித் தலைப்பில் 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது]உடல் நலக்குறைவு காரணமாகப் பல்வேறு கோயில்களுக்குச் சென்று இறை வழிபாடு நிகழ்த்தியதாக இன்றைய தமிழ் நாளிதழில்[தினகரன், 15.08.2018] செய்தி வெளியாகியுள்ளது.

82 நாட்களில் 34 தடவை என்பது சற்றே மிகையாகத் தோன்றினாலும், கடவுள் வழிபாடு என்பது அவரவர் நம்பிக்கையின் பாற்பட்டது என்பதால் இது குறித்து விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை.

ஆயினும், விமர்சனம் என்றில்லாமல், பல்வேறு கடமைகளைச் சுமந்து வாழும் ஒரு மாநில முதல்வர் என்ற வகையில், தங்களின் நலம் கருதிச் சில ஆலோசனைகளைத் தங்கள் முன் வைத்திட விரும்புகிறேன்.

கடவுள் வழிபாடு, வழிபடுவோரின் குறையைத் தீர்க்கும் என்பது தாங்கள் உட்பட இறைப்பற்றுள்ள அனைத்து ஆன்மிக நேயர்களின் நம்பிக்கையாகும்.

தாங்கள் 34 முறை வழிபாடு செய்திருக்கிறீர்கள். முதல் வழிபாட்டிலேயே தங்களின் உடம்பு முழுமையாகக் குணம் பெற்றிருத்தல் வேண்டும். அது நடைபெறவில்லை. 33ஆவது வழிபாட்டிலேனும் அது நிகழ்ந்திருத்தல் விரும்பத்தக்கது. அது நிகழாததால்[காரணம் குறித்த ஆய்வு வேண்டாம்] 34 ஆவது முறையாக ஒரு கோயிலுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்தியிருக்கிறீர்கள்.

தங்களின் இந்த நடவடிக்கையும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்றே கொள்ளலாம். ஆனாலும், இங்கு நினைவுகூரத்தக்கது ஒன்று உண்டு. அது.....

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் தங்களுக்கு 'நேரம்' மிக முக்கியம். 34 முறை கோயில் கோயிலாகச் சென்றதால், உங்களின் பணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவு விரையமாகிவிட்டது என்பது மறுக்க இயலாத உண்மை.

இனியும், இவ்வகையிலான   நேர விரயத்தைத் தவிர்க்க நான் சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன்.

*தங்களின் குடியிருப்பு வளாகத்திலேயே ஒரு சிறு கோயிலைக் கட்டி, தாங்கள் விரும்புகிற கடவுள்களையெல்லாம் 'பிரதிஷ்டை'[மந்திரம் ஓதி, கடவுள்களைச் சிலைகளில் இரண்டறக் கலக்கச் செய்தல்] செய்து, தினம் தினம் சிறிது நேரம் வழிபாடு நிகழ்த்தலாம். 

அதைக்காட்டிலும்.....

*உங்களின் நல்ல மனதையே கோயிலாக்கிக்கொண்டு, பணிகளுக்கிடையே ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இறைத்தியானத்தை மேற்கொள்ளலாம்.

*கோயில் கோயிலாக அலைவதைத் தவிர்ப்பதால் மிச்சப்படும் நேரத்தை மக்கள் பணி ஆற்றுவதற்குப் பயன்படுத்தலாம்.

*34 முறை கோயில்களுக்குச் சென்றீர்கள். அதற்குப் பதிலாக, 34 முறை குடிசைகளில் வாடும் பாமரர்களையும்,  அனாதையர் விடுதிகளிலும் முதியோர் இல்லங்களிலும் வதியும் பாவப்பட்டவர்களைம், மருத்துவமனைகளில் துயருறும் நோயாளிகளையும் சந்தித்து ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்தியிருந்தால் அவர்கள் மனதாரத் தங்களை வாழ்த்தியிருப்பார்கள். ஊடகங்கள் உங்களை 'ஓஹோ' என்று புகழ்ந்து தள்ளியிருக்கும்.

வாழ்த்துக்களும் புகழ்மொழிகளும் தங்களின் உடல் நோவுகளைக் கணிசமாகக் குறைத்திருக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயத்திற்கு இடமில்லை.

மாண்புமிகு கர்னாடக முதல்வர் அவர்களே, 

இம்மடல், தங்களின் உடல் நலம் மேம்படவும், மேற்கொள்ளும் பணிகள் சிறந்திடவும் நான் மனப்பூர்வமாக வரைந்த ஒன்று என்பதை நம்புங்கள். 

நன்றி.
=======================================================================

6 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. கர்னாடக முதல்அமைச்சர் தனது பெறுமதியான நேரத்தை வீணடிப்பதுடன் மக்களுக்கும் தவறாக வழிகாட்டகிறார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //மக்களுக்கும் தவறாக வழிகாட்டுகிறார்//

      உண்மையே. இதைக் கர்னாடக மக்கள் உணர்ந்திருப்பார்களா, எதிர்க்கட்சிகள் கண்டித்திருக்குமா தெரியவில்லை.

      நன்றி நண்பர் வேகநரி.

      நீக்கு
  2. 82 நாட்களில் 34 நாட்கள் என்பது குறைவாகவே தோன்றுகிறது நண்பரே...

    தொங்கட்டான்பட்டி முண்டக்கன்னியம்மனுக்கு 90 நாட்கள் உண்ணாவிரதமிருந்து அலகு குத்தி வெள்ளிரதம் இழுத்தால் எல்லாம் முடிவுக்கு வரும் நண்பரே இத்தகவலை அவரது பார்வைக்கு அனுப்பி வையுங்கள்.

    நாட்டில் உள்ள கோயில்கள் போதாதென்று இவரையும் ஒரு கோயில் கட்டச் சொல்கின்றீர்களே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இத்தகவலை அவரது பார்வைக்கு அனுப்பி வையுங்கள்//

      தகவல் அதிவிரைவுத் தபாலில் போய்க்கொண்டிருக்கிறது!

      எது எப்படியோ, இவர் கர்னாடகாவின் முதல்வர் ஆன நேரம் காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இவருக்குள்ள மிதமிஞ்சிய கடவுள் பக்திதான் காரணமோ என்னவோ!

      நன்றி கில்லர்ஜி.

      நீக்கு