*‘பாவத்தின் சம்பளம் மரணம்’[கடைசிப் பத்தி]
மேலே கண்டது[செய்தி> தமிழ் முரசு> 30.11.2025]போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது சமுதாயத்தில் இடம்பெறுபவைதான் என்றாலும், வாசிப்போரைக் கடும் அதிர்ச்சிக்கும் வருத்தத்திற்கும் உள்ளாக்குபவை அவை.
விலங்கு நிலையிலிருந்து விடுபட்டு ஆறறிவுடன் வாழத் தொடங்கிய பின்னர் மனிதர்கள் ஒன்றுபட்ட ஒரு சமூகமாக இணைந்தார்கள்.
ஒற்றுமையுடனும் மன அமைதியுடனும் வாழ்வதற்காகப் பல நெறிமுறைகளை வகுத்தார்கள்; கட்டுப்பாடுகளை விதித்தார்கள். அக்கட்டுபாடுகளில், ஓர் ஆணும் பெணும் இணைந்து அந்தரங்கச் சுகம் அனுபவிக்க விரும்பினால், திருமணம் செய்துகொண்டு என்றென்றும் பிரியாமல் வாழ்தல் வேண்டும் என்பதும் ஒன்று[அது சொர்க்கத்தில் நிர்ணயிக்கப்படுகிறது, புனிதமானது என்பதெல்லாம் ஒருவகை மூடநம்பிக்கையே].
ஆக, திருமணம் என்பது வெறும் ஒப்பந்தமே என்பதால், கணவன் மனைவிக்கிடையே முரண்பாடுகள் அதிகரித்து அவற்றைச் சீர் செய்ய இயலாதபோது இருவரையும்[குழந்தைகள் இல்லாமலிருந்தால்] உடனடியாகப் பிரிந்து வாழ அனுமதிப்பது ஏற்புடையது.
குழந்தைகள் இருந்தால், அவற்றின் எதிர்காலம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால்தான், சமூக ஆர்வலர்கள் திருமணம் ஆனவர்கள் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் சில ஆண்டுகள் கழித்தே குழந்தை பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்[சட்டம் இயற்றலாம்] என்கிறார்கள்.
பிரிந்து வாழும் உரிமை எளிதாக்கப்பட்டால், மனைவி துரோகம் இழைக்க நேரும்போது, அது தனக்கு அவமானம் என்று கணவன் அவளைத் தாக்குவதும் கொலை செய்வதும்[+மனைவி கணவனைக் கொல்வது] பெருமளவில் நிகழாது எனலாம்.
இது தொடர்பாக, ஆட்சியாளர்கள் ‘அறிஞர்கள் குழு’ அமைத்து ஆராய்ந்து விரைந்து முடிவெடுப்பது காலத்தின் கட்டாயம்.

