எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 10 அக்டோபர், 2025

இறைவி: “நீங்கள் மட்டும்தான் கடவுளா?”[கடவுள் கதை]

ண் மூடி, ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த இறைவனை நீண்ட நேரம் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார் இறைவி.

அதைக் கவனித்த இறைவன், "ஏதோ சொல்ல நினைக்கிறாய். சொல்” என்றார்.

“சொல்ல நினைக்கல. கேட்க நினைக்கிறேன்” என்றார் இறைவி..

“கேள்.”

“கடவுள் நீங்க ஒருத்தர்தானா?”

ஒரு முறை அதிர்ந்து அடங்கியது இறைவனின் பொன் நிற மேனி.

“நான் ஒரு போதும் அப்படிச் சொன்னதில்லை” என்றார் இறைவன்.

“நீங்க சொன்னதில்லை. மண்ணுலகில் வாழும் மனிதர்கள் சொல்கிறார்கள்.”

“எல்லாரும் சொல்வதில்லை. ‘நான் ஆன்மிகவாதி; கடவுளின் அவதாரம்’ என்று பீற்றிக்கொண்டு அலைபவர்கள் சொல்கிறார்கள்.”

“அதென்ன கணக்கு, ‘ஒன்று’? கட்டற்ற... கணிப்புக்கு உட்படாத... அதிபிரமாண்டமான பிரபஞ்சத்தில் ஒரே கடவுள்தான் உண்டு. அவர்தான் அனைத்தையும் தோற்றுவித்து இயக்குகிறார் என்பது என்ன கணக்கு? ஒருவருக்கே அத்தனை நற்குணங்களையும் நிகரற்ற பேராற்றலையும் உரித்தாக்கிக் கொண்டாடுவது ஏன்? நற்குணங்கள் கொண்ட பல நல்ல கடவுள்கள், ஆதிக்க மனப்பான்மை இன்றி, ஒத்த மனப் போக்குடன் ஒருங்கிணைந்து இந்தப் பிரபஞ்சத்தை ஆளுவது சாத்தியமான ஒன்றுதானே?..... இப்படிச் சிலர் கேட்கிறார்கள்! அவர்கள்.....”

குறுக்கிட்ட இறைவன், “அவர்கள் சிறந்த சிந்தனையாளர்கள்..... பகுத்தறிவாளர்கள்” என்றார்.

“எது? எப்படி? எப்போது? என்பன போன்ற கேள்விகள் விடை காண முடியாத புதிர்கள். மேம்போக்காக நோக்கும்போது, பிரபஞ்ச இயக்கம் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டது போல் தோன்றினாலும், உண்மையில் கடவுளின் கட்டுப்பாட்டில் அது இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, கடவுள் என்ற ஒருவர் தேவையற்றவர் ஆகிறார் என்று சொல்பவர்களும் நிலவுலகில் இருக்கிறார்கள்” என்றார் இறைவி.

“அவர்கள்தான் நாத்திகர்கள்.” -மெலிதாகப் புன்னகைத்தார் இறைவன்.

“கடவுள் உண்டுங்கிறாங்க. இல்லைன்னும் சொல்றாங்க. நரகம் சொர்க்கம்கிறாங்க. செத்த பிறகு ஆவியா பேயா அலையணும்னு அடிச்சிப் பேசுறாங்க. அதெல்லாம் ஒன்னுமில்ல. செத்தா மண்ணு; இல்லேன்னா சாம்பல். அவ்வளவுதான்னும் அலட்சியமா சொல்றவங்களும் இருக்காங்க. ஒன்னும் புரியல. மனுசனா ஏன் பிறந்தோம்னு தெரியல.... இப்படிப் புலம்பறவங்களும் அங்கே இருக்காங்க” என்று இறைவி சொல்ல.....

“அவர்கள் எல்லாம் சராசரி மனிதர்கள்” என்றார் இறைவன்.

“இப்படி இன்னும் எப்படியெல்லாமோ கேள்விகள் கேட்கிறாங்க பூலோகவாசிகள். இதுக்கெல்லாம் எனக்கு விடை தெரியலையேங்கிற உறுத்தல் இருந்துட்டே இருக்கு. எல்லார்த்துக்கும் நீங்கதான் விடை சொல்லணும்” என்று தன் கேள்விகளுக்கு முத்தாய்ப்பு வைத்தார் இறைவி.

முகத்தில் சிறு விரக்திப் புன்னகை மலர்ந்து மறைய, இறைவன் சொன்னார்:

“யுகம்... யுகம்... யுகம்... யுகம்... யுகங்களாகச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். இதுவரை எந்தவொரு கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை. எப்போது கிடைக்கும் என்பதும் எனக்குத் தெரியாது. யோசித்துக்கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை.”

சொல்லிக்கொண்டே மோனத்தில் புதைந்தார் இறைவன்!

தேவை ஆகச் சிறந்த பகுத்தறிவாளருக்கான ‘நோபல் பரிசு’!

நோபல் பரிசு இயற்பியல், வேதியியல், மருத்துவம் அல்லது உடலியல், இலக்கியம், அமைதி, பொருளாதாரம் என ஆறு முக்கியத் துறைகளில் வழங்கப்படுகிறது.

மேற்கண்ட துறைகள் வாழ்க்கைக்கு மிக அவசியமானவைதான் என்றாலும், உலகில் நிரந்தர அமைதி நிலவிடப் ‘பகுத்தறிவு’ வளர்ச்சி மிகவும் இன்றியமையாதது.

பரிசுப் பட்டியலில் உடனடியாக இத்துறை[பகுத்தறிவு] சேர்க்கப்பட ‘டிரம்ப்’ போன்ற அதிரடி ஆட்சியாளர்கள் நோபல் பரிசுக் குழுவிடம் பரிந்துரை செய்தல் வேண்டும்.

இந்த ஆண்டுக்கான பரிசாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய் அவர்களுக்கு இப்பரிசு[பகுத்தறிவிற்கானது] வழங்கப்படுதல் வேண்டும் என்பது நம் விருப்பம்.

கடந்த மாதம் 16ஆம் தேதி கஜுராஹோவில் உள்ள 7 அடி உயர விஷ்ணுவின் உடைந்த சிலையை மீட்டெடுப்பது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டதோடு, "நீங்கள் விஷ்ணுவின் தீவிரப் பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று அவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கருத்துத் தெரிவித்துள்ளார் கவாய் அவர்கள்.
தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அவர்கள் சாமானியர்களில் ஒருவரல்ல; உலகோரால் அறியப்பட்ட ஆகச் சிறந்த பகுத்தறிவாளர்.

இவரைப் போன்றவர்களின் எண்ணிக்கை பெருகினால்தான், கற்பனைக் கடவுள்களுக்கும், குரங்குகளுக்கும், கோட்டான்களுக்கும் கோயில் கட்டிக் கொண்டாடி, மூடநம்பிக்கை வளர்க்கும் காட்டுமிராண்டிகள் ஓரளவுக்கேனும் திருந்துவார்கள்.

எனவேதான், நம் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரிய நீதிபதி அவர்களுக்கு நோபல் பரிசு வழங்குதல் மிக அவசியம் என்கிறோம்.

வாழ்க பகுத்தறிவாளர் பி.ஆர்.கவாய் அவர்கள்! பெருகுக பகுத்தறிவாளர் எண்ணிக்கை!!