வியாழன், 9 மே, 2013

'குடி'மகன்கள் தினம்!.....விரைவில்!!

குடிச்சிட்டுப் ‘போனா’, பெண்ணைத் ‘திருப்தி’ படுத்தலாம் என்கிறார்கள்! கொலை செய்யப் போகிறவன் குடித்துவிட்டுத்தான் போகிறான். 70% இளைஞர்கள், ’தண்ணி’யடித்துவிட்டுத்தான், ‘காதலர் தினம்’, ’புத்தாண்டு தினம்’ போன்ற விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்! இந்நாட்டு மக்களில் கிட்டத்தட்டப் பாதிப்பேர் [48%-52%] நல்ல ‘குடிமகன்’களாக இருக்கிறார்கள். எனவே.....

‘குடிமகன்கள் தினம்’ கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!


அந்த நாளை வரவேற்கும்  முகத்தான் ஒரு ஒ.ப.கதை.....



கதை:                       கேட்டானே ஒரு கேள்வி!   

”உங்க கம்பெனி வாட்ச்மேன் சேது வந்திருந்தார். உங்களைப் பார்த்தே ஆகணும்னு ரெண்டு மணி நேரம் காத்திருந்தார். மறுபடியும் வர்றதாச் சொல்லிட்டுப் போனார்.”

கம்பெனி வேலையாக இரண்டு நாள் வெளியூர்ப் பயணம் போய்விட்டுத் திரும்பிய கணேசனிடம் அவன் மனைவி சவீதா சொன்னாள்.

“என்ன விஷயம்னு கேட்டியா?”

“கேட்கல.” சொல்லிக்கொண்டே சமையல் கட்டில் புகுந்தாள் சவீதா.

எதற்கு வந்தான் சேது?”

’டியூட்டி நேரத்திலும் போதையில் மிதப்பவன். டிஸ்மிஸ் செய்வதாகப் பல தடவை மேனேஜர் எச்சரித்திருந்தார். செய்துவிட்டாரோ?’ என்று சந்தேகப்பட்டான் கணேசன். தான் மேலாளருக்கு நெருக்கமானவன் என்பதால் சிபாரிசுக்காக வந்திருப்பான் என்றும் நினைத்தான்.

வாழ வேண்டிய வயதில் குடித்துக் கெட்டவன் சேது. குறையக் குறையக் குடித்துவிட்டு நடைபாதையில் விழுந்து கிடப்பான். நான்கைந்து தடவை ஆட்டோ பிடித்து அவனை வீடு சேர்த்திருக்கிறான் கணேசன்.

சேது மீண்டும் வந்தான். நடையில் தள்ளாட்டம்.

“வாப்பா சேது. ஏற்கனவே வந்துட்டுப் போனியாமே. என்ன விஷயம்?” என்றான் கணேசன்.

“ஒரு முக்கியமான விஷயம்.....”

“சொல்லுப்பா.”

“குடிச்சிட்டுத் தெருவில் கிடக்கிற என்னை அடிக்கடி நீதான் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்குறே. ......” நா குழற, தெளிவற்ற வார்த்தைகளை உதிர்த்தான் சேது.

தொடர்ந்தான்: “இதோ பாரு சார், நான் குடிச்சிட்டு நடைபாதையில் கிடப்பேன்; நடுத் தெருவிலும் கிடப்பேன். உனக்கு எதுக்கு இந்த வேலை?”

சேதுவின் கேள்வி, கணேசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ”ஒரு உதவிதானேப்பா” என்றான்.

“எனக்கு உதவி செய்யுறேன் பேர்வழின்னு இனியும் என் வீடு தேடி வர்ற வேலையை உட்டுடு. ஆளு அம்சமா இருக்கே. கையில் தாராளமா காசு புரளுது. வெகு சுளுவா நீ என் பெண்டாட்டியைக் கணக்குப் பண்ணிடுவே. என்ன...சொன்னது புரிஞ்சுதா?” என்றான் சேது.

சொல்லிவிட்டுத் தள்ளாடியபடியே புறப்பட்டுப் போனான்.

புன்னகை படர்ந்த முகத்துடன் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன்.

“அவன் உங்களை அவமானப் படுத்திட்டுப் போறான். கோபப்படாம சிரிச்சிட்டே இருக்கீங்களே?” சவீதா கேட்டாள்.

“சிரிக்காம என்ன செய்யுறது, அவன் பெண்டாட்டி இன்னொருத்தனோட ஓடிப் போயி வருஷம் ஒன்னு ஆவுது” என்றான் கணேசன்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

23.01.2000 'இதயம் பேசுகிறது' இதழில் நான் எழுதியது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%






ஞாயிறு, 5 மே, 2013

ஐன்ஸ்டீனும் “ஐயோ”ன்ஸ்டீனும்!! [இது ஓர் ’அனுதாப’ப் பதிவு]

வலைப்பக்கம் தொடங்கியதிலிருந்து, பெரும்பாலும், கதைகளையும் கடவுளையும் கட்டிக்கொண்டு அழுபவன் நான்! எங்கோ எப்போதோ படித்த, விஞ்ஞானி ஐன்ஸ்டீன் பற்றிய அரிய சிறு தகவலை ஆர்வம் காரணமாக உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

விஞ்ஞானி ஐன்ஸ்டீன், அணுசக்தி பற்றிய ஆய்வுகளிலேயே வாழ்நாளைக் கழித்தவர்.

ஒரு முறை உலாவப் போன அவர், தன் வீடு இருக்கும் இடத்தையே மறந்து, பிறரிடம் விசாரித்து வீடுபோய்ச் சேர்ந்ததாகச் சொல்வார்கள்! [ஆபிரஹாம் லிங்கன் பற்றியும் இப்படிச் சொல்லப்படுவதுண்டு] எந்நேரமும் அறிவியல் ஆய்வுகளில் மனம் ஒன்றிக் கிடந்தது இம்மறதிக்குக் காரணம் என்பர்.

இவர், கீழ்க்காணும் கட்டளைகளைத் தன் மனைவிக்குப் பிறப்பித்திருந்தாராம்!!!

1] என் உடைகள் சலவை செய்யப்பட்டு எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

2] நான் சொல்லும்போது என் அறைக்கு வந்து உணவு பரிமாற வேண்டும்.

3]என் படுக்கை அறையும் படிப்பு அறையும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.

4] என் எழுத்து மேஜையை யாரும் தொடக் கூடாது. அதன்மீது எந்தவொரு பொருளையும் வைக்கக் கூடாது.

5] எந்நேரமும் நான் உன்னுடன் இருப்பதும், அடிக்கடி உன்னை வெளியில் அழைத்துச் செல்வதும் சாத்தியமில்லை.

6]  அளவு கடந்த அன்பை என்னிடம் எதிர்பார்க்காதே.

7] என் படிப்பறையிலிருந்து, அல்லது, படுக்கை அறையிலிருந்து நான் சொன்ன உடனே வெளியேறிவிட வேண்டும்.

8] குழந்தைகள் முன்னால் என்னைப் பற்றித் தரக்குறைவாகப் பேசக் கூடாது.

இவ்வாறெல்லாம் மனைவிக்குக் கட்டுப்பாடுகள் விதித்து, அவற்றை நடைமுறைப் படுத்தியதால்தான் அவரால் அணுசக்தியைக் கண்டுபிடிக்க முடிந்ததாம்!

”அந்த அம்மா பாவம்! வாழ்நாளெல்லாம் எப்படித்தான் இவருடன் குடும்பம் நடத்தினாரோ?!” என்று அனுதாபப்படுகிறீர்களா? அதற்கு அவசியமே இல்லாமல்போனதும் ஒர் ஆச்சரியம்தான்!

ஆம். இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு அந்த அம்மையார், ஐன்ஸ்டீனுக்கு “டா...டா...” காட்டிவிட்டுப் போய்விட்டாராம்!!

இப்போது, ஐன்ஸ்டீனுக்காக, “ஐயோ பாவம்” என்று ஆதங்கப்படுகிறீர்களா? அதுவும் தேவையில்லை.

அவருக்குப் பெண்டாட்டி பிள்ளைகளை நினைக்க எங்கேங்க நேரம் இருந்தது?

#########################################################################################################


வியாழன், 2 மே, 2013

குமுதம் நிராகரித்த, “அட...ச்சே!” கதை! [இது ஆண்களுக்கானது]

ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை, அளவில் சிறியது. அதனால், ஆண்களே அதி புத்திசாலிகள் என்பார்கள். ஆனால், ’அது’ விஷயத்தில் மட்டும் பெண்களுக்குரிய ‘புத்திசாலித்தனம்’ ஆண்களுக்கு இல்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

கதை:                                    ஜன்னலோர இருக்கை

பேருந்து ஓட ஆரம்பித்தவுடன் பசுபதியின் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.

அவனுக்கு நேர் முன் இருக்கையில்  ஒரு தேன்சிட்டு! அவளுக்கு இருபக்கமும்  இரண்டு பொக்கைவாய்க் கிழவிகள்.

அரைச்சந்திர வடிவில் தகதகத்த அவளின் பொன்நிற முதுகும், பூனை முடி படர்ந்த சங்குக் கழுத்தும் உறங்கிக் கொண்டிருந்த அவனின் இளமையைத் தட்டி எழுப்பின. ஒரு தடவை அவளைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டான்.

இருக்கையில் நன்றாகச் சாய்ந்து, தன் கால் விரல்களால் அவளின் குதிகாலில் உரசி வெள்ளோட்டம் பார்த்தான். 

அவள் திரும்பிப் பார்க்கவோ முறைக்கவோ இல்லை.

அவனுக்குள் தைரியம் சுரந்தது. அவளின் ‘மெத்’தென்ற  கெண்டைக்கால் சதையை, இரு கால் விரல்களால் லேசாகக் கிள்ளினான்.

அவள் கண்டுகொள்ளவே இல்லை! அவளும் உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான் பசுபதி.

காலைச் சற்றே பின்னுக்கு இழுத்து, மீண்டும் நுழைத்து, அவளின் வழுவழுப்பான கால் சதையில் மேலும் கீழுமாகத் தேய்த்தான்.

அதனால் கிடைத்த சுகம் அவனைச் சிலிர்க்க வைத்தது. ஆனால், அது ஓரிரு நிமிடமே நீடித்தது.

‘சரேல்’ என எழுந்து நின்ற அவள், சன்னலோரம் இருந்த கிழவியைப் பார்த்து, “ஆயா, கையை வெச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டியா? இந்தப் பக்கம் நகரு” என்று அதட்டலாய்ச் சொல்லி, ஜன்னலோர இருக்கைக்கு இடம் பெயர்ந்தாள்.

அவள் இடம் பெயர்ந்தபோது, அவனின் வலப்பக்கம் இருந்த ஜன்னலோர இருக்கையை அரைக் கண்ணால் முறைப்பதையும் அவன் கவனிக்கவே செய்தான். 

அந்த இருக்கை காலியாக இருந்தது.  தனக்கு இடப்பக்க இருக்கையில் ஒரு பத்து வயதுச் சிறுவன். அவள் மீது யாரும் கை வைக்க வாய்ப்பே இல்லாத நிலையில் அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று பசுபதிக்குக் குழப்பமாக இருந்தது.

“காலை வெச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டியா? என்று தன்னைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியைத்தான் இப்படிப் பதட்டத்தில் மாற்றிக் கேட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். பாட்டியிடம் சொல்வது போல, நாகரிகமாகத் தன்னை எச்சரித்திருக்கிறாள் என்றும் நம்பினான்.

 நல்ல பிள்ளையாய்க் கைகளையும் கால்களையும் மடக்கி வைத்து இருக்கையில் சாய்ந்து கண் மூடினான் பசுபதி.

தூங்கினது போதும் எழுந்திரு” என்ற அதட்டல் கேட்டுப் பசுபதி கண்விழித்தான்.

“ஊர் வந்திடிச்சி” என்று சொன்ன  ஜன்னலோரச் சிட்டு, “போ...போ...” என்று கிழவியை முன்னுக்குத் தள்ளினாள்.

இடத்தைக் காலி செய்வதற்கு முன்னால், ”மர மண்டை...” என்று பசுபதிக்குக் கேட்கும்படியாக மூன்று தடவை சொன்னாள்; வெறுப்பில் வடித்த ஒரு கடைக்கண் பார்வையை அவன் மீது வீசவும் செய்தாள்.

‘மரமண்டை’ என்று அவள் சொன்னது தன்னைத்தான் என்பது புரிய பசுபதிக்கு நிறையவே அவகாசம் தேவைப்பட்டது. புரிந்தபோது.....

“நான் மடையன்...அடிமடையன்...”என்று அருகில் இருப்பவர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் முணுமுணுத்தான்.

அதற்கப்புறமும் அந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்போதெல்லாம் இப்படி முணுமுணுப்பது அவனுக்கு வழக்கமாகிவிட்டது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000