’பசி’பரமசிவம் | ஒரு பக்கக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
’பசி’பரமசிவம் | ஒரு பக்கக் கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 மே, 2013

'குடி'மகன்கள் தினம்!.....விரைவில்!!

குடிச்சிட்டுப் ‘போனா’, பெண்ணைத் ‘திருப்தி’ படுத்தலாம் என்கிறார்கள்! கொலை செய்யப் போகிறவன் குடித்துவிட்டுத்தான் போகிறான். 70% இளைஞர்கள், ’தண்ணி’யடித்துவிட்டுத்தான், ‘காதலர் தினம்’, ’புத்தாண்டு தினம்’ போன்ற விழாக்களைக் கொண்டாடுகிறார்கள்! இந்நாட்டு மக்களில் கிட்டத்தட்டப் பாதிப்பேர் [48%-52%] நல்ல ‘குடிமகன்’களாக இருக்கிறார்கள். எனவே.....

‘குடிமகன்கள் தினம்’ கொண்டாடும் நாள் வெகு தொலைவில் இல்லை!!!


அந்த நாளை வரவேற்கும்  முகத்தான் ஒரு ஒ.ப.கதை.....



கதை:                       கேட்டானே ஒரு கேள்வி!   

”உங்க கம்பெனி வாட்ச்மேன் சேது வந்திருந்தார். உங்களைப் பார்த்தே ஆகணும்னு ரெண்டு மணி நேரம் காத்திருந்தார். மறுபடியும் வர்றதாச் சொல்லிட்டுப் போனார்.”

கம்பெனி வேலையாக இரண்டு நாள் வெளியூர்ப் பயணம் போய்விட்டுத் திரும்பிய கணேசனிடம் அவன் மனைவி சவீதா சொன்னாள்.

“என்ன விஷயம்னு கேட்டியா?”

“கேட்கல.” சொல்லிக்கொண்டே சமையல் கட்டில் புகுந்தாள் சவீதா.

எதற்கு வந்தான் சேது?”

’டியூட்டி நேரத்திலும் போதையில் மிதப்பவன். டிஸ்மிஸ் செய்வதாகப் பல தடவை மேனேஜர் எச்சரித்திருந்தார். செய்துவிட்டாரோ?’ என்று சந்தேகப்பட்டான் கணேசன். தான் மேலாளருக்கு நெருக்கமானவன் என்பதால் சிபாரிசுக்காக வந்திருப்பான் என்றும் நினைத்தான்.

வாழ வேண்டிய வயதில் குடித்துக் கெட்டவன் சேது. குறையக் குறையக் குடித்துவிட்டு நடைபாதையில் விழுந்து கிடப்பான். நான்கைந்து தடவை ஆட்டோ பிடித்து அவனை வீடு சேர்த்திருக்கிறான் கணேசன்.

சேது மீண்டும் வந்தான். நடையில் தள்ளாட்டம்.

“வாப்பா சேது. ஏற்கனவே வந்துட்டுப் போனியாமே. என்ன விஷயம்?” என்றான் கணேசன்.

“ஒரு முக்கியமான விஷயம்.....”

“சொல்லுப்பா.”

“குடிச்சிட்டுத் தெருவில் கிடக்கிற என்னை அடிக்கடி நீதான் வீட்டில் கொண்டுபோய்ச் சேர்க்குறே. ......” நா குழற, தெளிவற்ற வார்த்தைகளை உதிர்த்தான் சேது.

தொடர்ந்தான்: “இதோ பாரு சார், நான் குடிச்சிட்டு நடைபாதையில் கிடப்பேன்; நடுத் தெருவிலும் கிடப்பேன். உனக்கு எதுக்கு இந்த வேலை?”

சேதுவின் கேள்வி, கணேசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ”ஒரு உதவிதானேப்பா” என்றான்.

“எனக்கு உதவி செய்யுறேன் பேர்வழின்னு இனியும் என் வீடு தேடி வர்ற வேலையை உட்டுடு. ஆளு அம்சமா இருக்கே. கையில் தாராளமா காசு புரளுது. வெகு சுளுவா நீ என் பெண்டாட்டியைக் கணக்குப் பண்ணிடுவே. என்ன...சொன்னது புரிஞ்சுதா?” என்றான் சேது.

சொல்லிவிட்டுத் தள்ளாடியபடியே புறப்பட்டுப் போனான்.

புன்னகை படர்ந்த முகத்துடன் அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் கணேசன்.

“அவன் உங்களை அவமானப் படுத்திட்டுப் போறான். கோபப்படாம சிரிச்சிட்டே இருக்கீங்களே?” சவீதா கேட்டாள்.

“சிரிக்காம என்ன செய்யுறது, அவன் பெண்டாட்டி இன்னொருத்தனோட ஓடிப் போயி வருஷம் ஒன்னு ஆவுது” என்றான் கணேசன்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

23.01.2000 'இதயம் பேசுகிறது' இதழில் நான் எழுதியது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%






வியாழன், 2 மே, 2013

குமுதம் நிராகரித்த, “அட...ச்சே!” கதை! [இது ஆண்களுக்கானது]

ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை, அளவில் சிறியது. அதனால், ஆண்களே அதி புத்திசாலிகள் என்பார்கள். ஆனால், ’அது’ விஷயத்தில் மட்டும் பெண்களுக்குரிய ‘புத்திசாலித்தனம்’ ஆண்களுக்கு இல்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

கதை:                                    ஜன்னலோர இருக்கை

பேருந்து ஓட ஆரம்பித்தவுடன் பசுபதியின் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது.

அவனுக்கு நேர் முன் இருக்கையில்  ஒரு தேன்சிட்டு! அவளுக்கு இருபக்கமும்  இரண்டு பொக்கைவாய்க் கிழவிகள்.

அரைச்சந்திர வடிவில் தகதகத்த அவளின் பொன்நிற முதுகும், பூனை முடி படர்ந்த சங்குக் கழுத்தும் உறங்கிக் கொண்டிருந்த அவனின் இளமையைத் தட்டி எழுப்பின. ஒரு தடவை அவளைத் தொட்டுப் பார்க்க ஆசைப்பட்டான்.

இருக்கையில் நன்றாகச் சாய்ந்து, தன் கால் விரல்களால் அவளின் குதிகாலில் உரசி வெள்ளோட்டம் பார்த்தான். 

அவள் திரும்பிப் பார்க்கவோ முறைக்கவோ இல்லை.

அவனுக்குள் தைரியம் சுரந்தது. அவளின் ‘மெத்’தென்ற  கெண்டைக்கால் சதையை, இரு கால் விரல்களால் லேசாகக் கிள்ளினான்.

அவள் கண்டுகொள்ளவே இல்லை! அவளும் உணர்ச்சிவசப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்தான் பசுபதி.

காலைச் சற்றே பின்னுக்கு இழுத்து, மீண்டும் நுழைத்து, அவளின் வழுவழுப்பான கால் சதையில் மேலும் கீழுமாகத் தேய்த்தான்.

அதனால் கிடைத்த சுகம் அவனைச் சிலிர்க்க வைத்தது. ஆனால், அது ஓரிரு நிமிடமே நீடித்தது.

‘சரேல்’ என எழுந்து நின்ற அவள், சன்னலோரம் இருந்த கிழவியைப் பார்த்து, “ஆயா, கையை வெச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டியா? இந்தப் பக்கம் நகரு” என்று அதட்டலாய்ச் சொல்லி, ஜன்னலோர இருக்கைக்கு இடம் பெயர்ந்தாள்.

அவள் இடம் பெயர்ந்தபோது, அவனின் வலப்பக்கம் இருந்த ஜன்னலோர இருக்கையை அரைக் கண்ணால் முறைப்பதையும் அவன் கவனிக்கவே செய்தான். 

அந்த இருக்கை காலியாக இருந்தது.  தனக்கு இடப்பக்க இருக்கையில் ஒரு பத்து வயதுச் சிறுவன். அவள் மீது யாரும் கை வைக்க வாய்ப்பே இல்லாத நிலையில் அவள் ஏன் அப்படிச் சொன்னாள் என்று பசுபதிக்குக் குழப்பமாக இருந்தது.

“காலை வெச்சுட்டுச் சும்மா இருக்க மாட்டியா? என்று தன்னைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியைத்தான் இப்படிப் பதட்டத்தில் மாற்றிக் கேட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். பாட்டியிடம் சொல்வது போல, நாகரிகமாகத் தன்னை எச்சரித்திருக்கிறாள் என்றும் நம்பினான்.

 நல்ல பிள்ளையாய்க் கைகளையும் கால்களையும் மடக்கி வைத்து இருக்கையில் சாய்ந்து கண் மூடினான் பசுபதி.

தூங்கினது போதும் எழுந்திரு” என்ற அதட்டல் கேட்டுப் பசுபதி கண்விழித்தான்.

“ஊர் வந்திடிச்சி” என்று சொன்ன  ஜன்னலோரச் சிட்டு, “போ...போ...” என்று கிழவியை முன்னுக்குத் தள்ளினாள்.

இடத்தைக் காலி செய்வதற்கு முன்னால், ”மர மண்டை...” என்று பசுபதிக்குக் கேட்கும்படியாக மூன்று தடவை சொன்னாள்; வெறுப்பில் வடித்த ஒரு கடைக்கண் பார்வையை அவன் மீது வீசவும் செய்தாள்.

‘மரமண்டை’ என்று அவள் சொன்னது தன்னைத்தான் என்பது புரிய பசுபதிக்கு நிறையவே அவகாசம் தேவைப்பட்டது. புரிந்தபோது.....

“நான் மடையன்...அடிமடையன்...”என்று அருகில் இருப்பவர்கள் தன்னை வேடிக்கை பார்ப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் முணுமுணுத்தான்.

அதற்கப்புறமும் அந்தச் சம்பவம் நினைவுக்கு வரும்போதெல்லாம் இப்படி முணுமுணுப்பது அவனுக்கு வழக்கமாகிவிட்டது.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000





திங்கள், 29 ஏப்ரல், 2013

இது, சுடுகாட்டில் சுட்ட கதை!!! பயப்படாமல் படியுங்கள்.

இறந்துபோன என் நண்பர், முந்தாநாள் எரிக்கப்பட்டார். இன்று ஈமச் சடங்கு. சடங்கு நிகழ்த்த வேண்டிய அவரின் ஒரே மகன், மொட்டை அடித்துக்கொண்டான்; தாடி மழிக்க மறுத்துவிட்டான்! 

“இது ‘காதல் யுகம்’. இதுவும் நடக்கும்...இன்னும் என்னவெல்லாமோ நடக்கும்” என்று பேசிக்கொண்டு போனார்கள் ஈமச்சடங்கில் கலந்துகொண்டவர்கள்!

கதை:                               காதல் யுகம்

“தாடி வளர்க்கிறியே, உடம்பு சுகமில்லையா?” என்று கேட்டான் குமார்.

“இல்ல” என்றான் கீர்த்தி.

“ஸ்டைலுக்கா?”

“இல்ல.”

“வேண்டுதலா?”

“இல்ல.”

“கேட்கிறதுக்கெல்லாம் இல்ல நொள்ளைங்கிற. காரணத்தை சொல்லப் போறியா இல்லையா?” கோபத்தின் எல்லையைத் தீண்டிவிட்டிருந்தான் குமார்.

“சர்மிளாகிட்டப் பல தடவை ‘ஐ லவ் யூ’ சொல்லிட்டேன். அவ மவுனம் சாதிக்கிறா. ’உன் பதில் கிடைச்சப்புறம்தான் தாடி எடுப்பேன்’னு  சொல்லிட்டேன். இன்னிக்கி வரைக்கும் பதில் இல்ல” என்றான் கீர்த்தி, வருத்தம் தோய்ந்த வார்த்தைகளால்.

“காதலிக்க வேற பெண்ணா இல்ல. அவளை மறந்துடு.”

“முடியாதுடா.”

து நடந்து சில நாட்களில், கீர்த்தியின் அப்பா மாரடைப்பில் காலமானார்.

சுடுகாட்டில் எரியூட்டப்பட்டார்.

இன்று ’காரியம்’.

”மொட்டை போடணும் , வா கீர்த்தி.” காரியம் செய்பவர் கீர்த்தியை ஒரு மர நிழலுக்கு அழைத்துச் சென்றார்.

அவனின் தலை முடியைச் சிரைத்து முடித்து, தாடி மீசையை மழிக்க முனைந்த போது, கீர்த்தி சொன்னான்; “தாடியை எடுக்க வேண்டாம்.”

“எடுக்காம சடங்கு செய்யக் கூடாது.”

“செஞ்சா என்ன?”

கூடியிருந்தவர்கள் எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக மறுத்தான் கீர்த்தி.

வேறு வழியில்லாமல், இறந்துபோன நண்பருக்கு ’மகன் முறை’ ஆகும் ஒருவரை வைத்து சடங்குகள் செய்யப்பட்டன.

கீர்த்தி, தாடி மழிக்க மறுத்ததற்கான காரணம் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது.

சுடுகாட்டில் குழுமியிருந்த கும்பல் களையத் தொடங்கியபோது, “கலியுகம் முடிஞ்சி போச்சி. இது காதல் யுகம்” என்று அடங்கிய குரலில் ஒருவர் சொன்னார், அருகில் இருந்தவர்களுக்கு மட்டும் கேட்கும்படியாக. துக்ககரமான அந்த நேரத்திலும் அவர்கள் ஒப்புக்குச் சிரித்து வைத்தார்கள்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

சடங்கில் கலந்துகொண்டவர்களில் நானும் ஒருவன். வீடு திரும்பிக் குளித்து முடித்தவுடன், நேற்று [ஞாயிறு] எழுதிய கதை இது.]

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ



சனி, 27 ஏப்ரல், 2013

ஒரு ‘கிளுகிளுகிளு’.......... `குமுதம்’ கதை!!!

குமுதத்திற்கு அனுப்ப வேண்டிய இந்தக் ‘கிளுகிளுகிளு’ கதையை, ‘ஜாதவ்’ [கதாசிரியர்] என்பவர் தவறுதலாக எனக்கு அனுப்பிவிட்டார்! நானும் பெருந்தன்மையுடன், என் வலைப்பக்கத்தில் வெளியிடுகிறேன்!

படித்து ரசித்திடுக!! என்னைப் பொறுத்திடுக!!!

கதைத் தலைப்பு;             அட.....ச்சீய்!

ன் கணவர் ஆபீஸிலிருந்து வரும்போதே அலுத்துக் களைத்துப் போய் வருகிறார்.....எதைக் கண்டாலும் எரிச்சல் கொள்கிறார்.....இதற்கு என்ன செய்யலாம் என்று தயவு செய்து வழி சொல்லுங்க” என்று மனோதத்துவ நிபுணரிடம் கேட்டாள் அந்த இளம் பெண்.

நிபுணர் சிரித்தார்.

“நிறையப் பேர் செய்யுற தப்பை நீங்களும் செய்யுறீங்கன்னு நினைக்கிறேன். புருஷனுக்கு நாள் பூரா ஆபீஸில் டென்ஷனா இருக்கும். அதைக் குறைத்து அவரைக் குஷிப்படுத்த வேண்டும். அது மனைவியின் கடமை” என்று கூறி, சில வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து அனுப்பினார்.

மறு நாளே அதைக் கடைபிடிக்க முடிவு செய்தாள் அந்தப் பெண்.

றுநாள் மாலை.

கணவன் அலுவலகத்திலிருந்து வந்தான்.

முக மலர்ச்சியுடன் வரவேற்றாள் அந்தப் பெண்.

அவன் நாற்காலியில் உட்கார்ந்தான். அவள் எழுந்து சென்று கதவைத் தாளிட்டுவிட்டு வந்தாள்.

கணவனின் ஷூவைக் கழட்டினாள்; டையைத் தளர்த்தினாள். அவன் மடியில் ‘மெத்’தென்று உட்கார்ந்தாள்; ஆசையுடன் அவன் கன்னங்களை வருடினாள்.

இதழோடு இதழ் பதித்தாள்.

இன்னும் ஏதேதோ செய்து, ’கடுகடு’ என்றிருந்த அவன் முகத்தில் கலகலப்பை வரவழைக்க முயன்றாள்.

தோல்வியே மிஞ்சியது.

“ஏன் இப்படி இருக்கீங்க? என் கொஞ்சல் குலாவலெல்லாம் உங்களுக்குக் கொஞ்சமும் பிடிக்கலையா?” என்று அழாக்குறையாகக் கேட்டாள் அவள்.

“நாசமாப் போச்சு. ஆபீஸில்தான் அந்த ஸ்டெனோ பாடாய்ப்  படுத்தறான்னா வீட்டுக்கு வந்தா  நீயும்...” என்று அலுத்துக்கொண்டான் கணவன்.

“ஐயோ...” என்று தலையில் அடித்துக்கொண்டு தரையில் சரிந்தாள் அந்த அப்பாவிப் பெண்!

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000













வெள்ளி, 26 ஏப்ரல், 2013

காணாமல் போன புதுப் பெண்டாட்டி! [ஒரு பக்கக் குடும்பக் கதை]

கனமான ‘கதைக்கரு’! ‘super fast' நடை!! இது............... பத்தாயிரத்தில் ஒரு படைப்பு!!! படியுங்கள் தவறாமல்.

கதை:                                                காணாமல் போனவள்

படைத்தவர்:                                  கிருஷ்ணகாந்த்

இதழ்:                                                 குங்குமம்

வெளீயான தேதி:                        செல்லரித்துவிட்டது!




ராஜி.....என் பிரிய ராஜி.....!

ராஜிக்கண்ணு.....!

என் ராஜுக்குட்டீ.....!

எங்கே போய்விட்டாய் நீ?

திருமணமான ஆரேழு வருஷத்தில் எங்கே காணாமல் போனாய்?

உன்னைப் பெண் பார்த்த அனுபவத்தை மறக்க முடியுமா?

முதன் முதலில் என்னை ஏறிட்ட உன் விழிகளில் எத்தனை குளிர்ச்சி!

நீண்ட கூந்தல்; மெல்லிய தேகம்; தெத்துப்பல்; அதில் உனக்கு ஒரு காம்ப்ளெக்ஸ்; ஆனால், அதை எனக்குப் பிடிக்கும்.

தெத்துப்பல் தெரிய நீ சிரிப்பதே என்னை மயக்கும்!

உன் காதோரப் பூனை முடி; கழுத்தோர செம்பட்டை கேசம்; அப்பாவித்தனமான முகம்!

புதிய வீட்டில், எல்லோரையும் பார்த்து மிரண்ட உன் விழிகள்!

ஆஹா...நீ மிரள்வது எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

இருட்டில்...தனியறையில்...நீ மிரண்டு புரள்கையில்.....

உன் இடுப்பும், சரேலென்று வழியும் கூந்தலும், முதுகின் செழுமையும்.....அடடா!

பணிவோடும் அன்போடும் நீ எனக்குச் செய்த பணிவிடைகளை மறக்க முடியுமா?

என் ஒரு அதட்டலில் அடங்கிவிடும் உன் பயந்த சுபாவம்!

எழுந்தவுடன் என் கால் தொட்டுக் கும்பிடும் உன் பதிபக்தி!

படித்திருந்தும் ”எனக்கென்னங்க தெரியும்/?” என்று அடக்கத்தோடு பேசும் உன் அருங்குணம்!

கொடுத்து வைத்தவன் நான் என்று மனசுக்குள் பூரித்த என் தலை மேல் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டாயே!

அந்த ராஜியை இனி பார்க்கவே முடியாதா?

ஏக்கத்துடன், கையிலிருந்த ’கல்யாண ஆல்பத்தை’ மெதுவாக மூடிவிட்டு நான் நிமிர்ந்த போது.....

எதிரே என் மனைவி!! என் ராஜி!!!

“காலையில கல்யாண ஆல்பத்தோட உட்கார்ந்தாச்சா? அதொண்ணுதான் குறைச்சல்.....க்கும்..... காஸ் தீர்ந்து போச்சு. மண்ணெண்ணை வாங்கிட்டு வரணும். கிரைண்டர் வாங்கிக் குடுங்கோ குடுங்கோன்னு கரடியாக் கத்தறேன். வாங்கித் தரல. உங்க வீட்ல இட்லிக்கு மாவு அரைச்சு அரைச்சே சாகப் போறேன்.....போறேன்.....போய்த் தொலையறேன்!.....அப்புறமாவது எல்லாரும் நிம்மதியா இருங்க..........”

வார்த்தைகளைக் கோபம் என்னும் எண்ணையில் பொரித்துச் சுடச்சுட வீசினாள் ராஜி!

உப்பிய அவளின் உடம்பு அருவருக்கும் வகையில் எசகுபிசகாய் ஆடியது; கோபித்துக் கோபித்தே கோணிய வாய் துடித்தது. சினத்தால் சிறுத்த கண்களில் ஒருவித உக்கிரம். நெறித்து நெறித்தே நிரந்தரமான வளைவில் நின்றுவிட்ட புருவ முடிச்சுகள்.

தெத்துப்பல் , பார்க்கவே பயங்கரமாக இருந்தது.

இருட்டில் துழாவுகிற மாதிரி, அவள் முகத்தில், உடம்பில், கண்களில்...இன்னும் எங்கெல்லாமோ தேடினேன்.....

ஊஹூம்.....

ஆரேழு  வருடங்களுக்கு முன்னர் என்னை மணந்த ராஜி முழுசாகக் காணாமல் போயிருந்தாள்!!!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@





வியாழன், 25 ஏப்ரல், 2013

ஒரு நாத்திகரின் ஆத்திக வேடம்!

மூட நம்பிக்கை கூடாதுதான். ஆனாலும் அது, சில நேரங்களில் சிலருக்கு நன்மை பயப்பதும் உண்டு!

கதை:                                    கடவுள் துணை

”டாக்டர் கூப்பிடுறாருங்க.” செவிலி சொல்ல, உள்ளே போனான் மோகன்.

“உங்கப்பாவை அழைச்சிட்டுப் போகலாம்” என்றார் டாக்டர் எழிலரசு.

“ஏன் டாக்டர், அப்பா பிழைக்க மாட்டாரா?” 

"ஹார்ட் ரொம்பவே டேமேஜ் ஆயிடிச்சி. இனி, அவர் பிழைக்கிறது டாக்டர்கள் கையில் இல்ல. கடவுளை வேண்டிக்கோங்க. அவர் கருணை காட்டினா உண்டு” என்று சொல்லி விரித்த கையை மேலே உயர்த்திக் காட்டினார் எழிலரசு.

வருத்தம் மீதூர, தொங்கிய தலையுடன் நகர்ந்தான் மோகன்.

“ஏம்ப்பா, நீதான் நாத்திகனாச்சே. அப்புறம் ஏன் அந்த ஆள்கிட்ட கடவுளை வேண்டிக்கச் சொன்னே?” டாக்டரைப் பார்க்க வந்திருந்த அவரின் நண்பர் கேட்டார்.

“அதுவா.....?” சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் டாக்டர் எழிலரசு:

“சில நேரங்களில் டாக்டர் கணிப்பையும் மீறி, நோயாளிகள் பிழைச்சுடறது உண்டு. அந்த மாதிரி நேரங்களில், 'இவரெல்லாம் ஒரு டாக்டரா?'ன்னு சம்பந்தப்பட்ட டாக்டரைப் பழிப்பாங்க. கடவுளைக் கைகாட்டி விட்டுட்டா, 'கடவுள் கருணை காட்டினா உண்டுன்னுதான் டாக்டரும் சொன்னாரு. கடவுளும் கண் திறந்துட்டார்'னு சொல்லுவாங்களே தவிர டாக்டரைக் குறை சொல்ல மாட்டாங்க.”

“மக்கள் மனசை நல்லாவே படிச்சி வெச்சிருக்கே. புத்திசாலியப்பா நீ? என்று பாராட்டினார் நண்பர்.

#########################################################################################################

திங்கள், 22 ஏப்ரல், 2013

இந்தக் கதையை வெளியிட எந்தப் ’பிரபல வார இதழுக்கும்’ தைரியமில்லை!!! படியுங்கள்.

’ஒருவனுக்கு ஒருத்தி’ என்னும் கொள்கை அவனுக்குப் பிடித்திருந்தது. ‘ஒருத்தி’யுடன் மட்டும் அவன் ‘உறவு’ வைத்திருந்தான். ஆனால், அவள்...?!

கதை:                           அவளோடு மட்டும்.....  

வாக்கையாளர்களை எதிர்கொண்டு வரவேற்கும் வழக்கமுள்ள மாலா, அன்று படுக்கையில் கிடந்தவாறே, “வாங்க சார்” என்று  இதமான குரலில் மணிமொழியனை வரவேற்றாள்.

“உடம்புக்கு என்னம்மா?” என்றான்  மணிமொழியன்.

“ரெகுலர் செக்கப் போயிடுறேன்; வழக்கமான உடற்பயிற்சி. உடம்புக்கு ஒன்னும் இல்ல. மாடிப்படியில் தடுக்கி விழுந்ததில் இடுப்பில் அடி. பத்து நாள் போல ஓய்வில் இருக்கணும்னு டாக்டர் சொல்லிட்டார். ஆசையோட என்னைத் தேடி வந்த உங்களைத் திருப்பி அனுப்புறேன். சாரி சார்” ரொம்பவே வருத்தப்பட்டாள் மாலா.

“ரெண்டு வாரம் கழிச்சி வர்றேன். உடம்பைப் பார்த்துக்கோ.” நகர முற்பட்டான் மணிமொழியன்.

“சார் இருங்க. என் ஃபிரண்டு சாலினியை வரச்சொல்லி ஃபோன் பண்றேன். என்னைவிட ஆள் நல்லா இருப்பா.” என்றாள் மாலா.

“வேண்டாம்.”

“ஏங்க?”

“மாலா, எனக்கு எப்பவும் ‘அது’ உன்னோட மட்டும்தான்.”

அழகிய புருவங்கள் வளைந்து நெளிய, “அப்படியா?” என்றாள் அவநம்பிக்கை நிறைந்த தொனியில்.

“அது விஷயத்தில் கட்டுப்பாடில்லாமல் விளையாடினதில், என் அப்பா எயிட்ஸ் நோயாளி ஆனார்; அம்மாவுக்கும் தானம் பண்ணினார். அந்த நோய்க்கு ரெண்டு பேருமே பலியானாங்க. ....”

“அடடா... அப்புறம்.....?”

“எப்பவும் மனைவியோடு  மட்டும்தான் உடலுறவு கொள்வேன்னு சபதம் எடுத்தேன். ஆனா, என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ‘அந்த’ நோய்க்கு ஆளானதால, யாருமே எனக்குப் பெண் தர முன் வரல. பிரமச்சாரியாவே காலம் கடத்திட நினைச்சேன். அது சாத்தியமில்லேன்னு புரிஞ்ச போது, ஒரு புரோக்கர் மூலமா விலைமகளான உன்னைச் சந்திச்சேன்; நிரந்தர வாடிக்கையாளராகவும் ஆனேன். .....”

இடைவெளி கொடுத்துச் சொன்னான் மணிமொழியன்; “இப்பவும் நான் ஏக பத்தினி விரதன்தான் மாலா. உன்னைத் தவிர வேறொருத்தியை நான் மனசாலும் நினைக்கிறதில்ல.” 

கண்கள் கலங்க அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள் மாலா. 

”நானும் இனி உங்களுக்கு மட்டுமே சொந்தமானவளாக இருப்பேன்” என்றாள் திடமான குரலில்.

முகத்தில் பரவசம் பொங்கி வழிய, அவள் கன்னங்களில் மிருதுவாய்ச் சில முத்தங்கள் பதித்து, “நன்றி” என்றான் மணிமொழியன்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




சனி, 20 ஏப்ரல், 2013

ஒரு பெண், தன் கற்பைக் காத்துக்கொள்ள மிக ’எளிய’ வழி!!!

``பெண், தன் கற்பைக் காத்துக்கொள்ளப் பற்களையும் நகங்களையும் ஆயுதமாகப் பயன்படுத்தலாம். வெளியில் செல்லும்போது, தவறாமல் கைவசம் ஒரு கத்தி வைத்துக்கொள்ள வேண்டும்” என்றார் மகாத்மா காந்தி. 

``ஆயுதங்கள் எதற்கு? கொஞ்சம் நிதானமும் மன உறுதியும் இருந்தாலே போதுமானது”- இது நான்.

கதை:                            சாகசம்

ருப்பாயி, பெயருக்கேற்ப நல்ல கறுப்பு. ஆனாலும், அழகும் கவர்ச்சியும் கட்டுமஸ்தான தேகக் கட்டும் உள்ளவள்; கிராமத்துப் பெண்; விவசாயக் குடும்பம்.

கொஞ்சம் மேட்டுக்காடு [மானாவாரி] மட்டுமே இருந்தது.

அவள் கணவன், சந்தை சந்தைக்கு, கால்நடைகளை வாங்கி விற்கும் ’தரகு’த் தொழில் செய்தான்.

கருப்பாயி, எருமை[கள்] வளர்த்துப் பால் விற்பனை செய்தாள்.

பொழுது புலர்வதற்கு முன்னதாகவே, பால் கறந்து, மொபட்டில் எடுத்துச் சென்று, பக்கத்து டவுனில் உள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் கொடுத்து வருவாள்.

அன்றும், வழக்கமான நேரத்துக்கு சுந்தரம் தேனீர்க் கடையை அடைந்தாள்.

முதன் விநியோகம் அவனுக்குத்தான்.

அவள் போகும்போது, பாய்லருக்குத் தீ மூட்டிக் கொண்டிருக்கும் சுந்தரம், அன்று கட்டிலில் போர்த்துப் படுத்திருந்தான்.

” எனக்கு உடம்பு சரியில்ல. பாலை உள்ள வெச்சுட்டுப் போ” என்றான்.

அவன் நாடகம் போடுகிறான் என்பதை அறியாத கருப்பாயி, கடைக்குள் சென்றாள். கதவைத் தாளிட்டான் சுந்தரம். அவனுடன் வசித்த அவனின் அம்மாவும் அப்போது இல்லை.

திடீர் அதிர்ச்சிக்குள்ளானாலும், சுதாரித்துக் கொண்ட கருப்பாயி, “வேண்டாம். நான் அந்த மாதிரி பொம்பளையில்ல. வழிவிடு” என்றாள்.

சுந்தரம், தன்வசம் இழந்திருந்தான்.  ”உன்னை அடையணும்கிறது என் ரொம்ப நாள் ஆசை. மறுக்காதே கருப்பாயி” என்றவாறு அவளை நெருங்கினான்.

பதற்றப்படாமல் அவன் நடவடிக்கையைக் கவனித்தாள் அவள்.

அவளின் தோள்களைத் தொட்டு, மெல்லத் தரையில் சரித்தான் சுந்தரம்.

அவளிடமிருந்து எதிர்ப்பு இல்லாத நிலையில், அவள் மீது மெல்லப் படர்ந்தான். ஆடைகளைக் களைவதில் கவனம் செலுத்தினான். அப்போதுதான், அவன் சற்றும் எதிர்பாராத அது நடந்தது.

இத்தனை சீக்கிரம் அது எப்படி நிகழ்ந்தது என்று அனுமானிப்பதற்குள்ளாகவே, தன் விரைகளை அவள் தன் இரு கைகளாலும் பற்றி இறுக்க முற்பட்டுவிட்டதை அவனால் உணர முடிந்தது.

ஏதோ சொல்ல நினைத்தான். நாக்கு சுழலவில்லை.

அவளிடமிருந்து அவற்றை விடுவிக்க நினைத்தான். உடல் உறுப்புகள் ஒத்துழைக்கவில்லை.

அவனின் ஒட்டு மொத்த உடம்பும் வெலவெலத்தது. நாடி நரம்புகள் முடங்க ஆரம்பித்தன. விழிகள் பிதுங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நினைவாற்றல் குறைய ஆரம்பித்தது.

இனியும் பிடியை இறுக்கினால் அவன் வைகுண்ட பதவி எய்துவது உறுதி என நினைத்த கருப்பாயி, அவற்றிற்கு விடுதலை அளித்து, கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

தன் கணவனிடம் இது பற்றி அவள் பேசவில்லை.

 அடுத்த நாள், பால் கொண்டு போன போது, சுந்தரத்தின் கடை அடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தாள்.

ஒரு வாரம் கழிந்த நிலையில், மீண்டும் கடை திறக்கப்பட்டது. அவள் கடையைக் கடந்த போது, கண்டும் காணாதது போல, குனிந்த தலையுடன் பாய்லருக்கு நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தான் சுந்தரம்

அப்புறமும் அந்நிலையே நீடித்தது.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

இதுவும் நடந்த கதைதான்! நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





வெள்ளி, 19 ஏப்ரல், 2013

நிர்வாண ஓவியக் கண்காட்சி! [இது, ஓர் ‘உளவியல்’ கதை!!]

``உங்கள் நண்பரின் வீடு. அவர், அவசர வேலையாய் வெளியே போகிறார். ஒரு பெண் நிர்வாணமாக உங்கள் எதிரில் வருகிறாள். என்ன செய்வீர்கள்?”- இப்படியொரு கேள்வி, பல்லாண்டுகளுக்கு முன்பு, ‘I.A.S' வாய்மொழித் தேர்வில் கேட்கப்பட்டதாகச் சொல்வார்கள். இந்தக் கேள்விக்கும் இந்தக் கதைக்கும் நெருங்கிய தொடர்புண்டு!

கதையின் தலைப்பு:               பதிவின் தலைப்பே கதையின் தலைப்பு!

மாலினிக்கு ரொம்பவே ஏமாற்றம்; அழுகை அழுகையாய் வந்தது; கோபமாகவும் இருந்தது.

காரணம் வேறொன்றுமில்லை. அவள், தான் வரைந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்தினாள். அன்று ஞாயிற்றுக் கிழமையாய் இருந்தும் எண்ணிப் பத்துபேர் மட்டுமே வந்தார்கள்.

“சே...ரசனை கெட்ட ஜென்மங்கள்...உணர்ச்சியில்லாத பிண்டங்கள்...” ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் மனிதராய்ப் பிறந்த அத்தனை பேரையும் திட்டிக்கொண்டிருந்தாள்.

“இதோ பார் மாலு, இந்த மாதிரி கண்காட்சிக்கெல்லாம் இவ்வளவுதான் கூட்டம் வரும். ஒரு நிர்வாணக் கண்காட்சி நடத்திப்பார். மக்கள் வெள்ளம் அலைமோதும். பத்திரிகை நிருபர்கள் பேட்டி காணப் போட்டி போடுவார்கள். டிக்கெட் போட்டால் ஆயிரக் கணக்கில் பணத்தை அள்ளிடலாம்” என்றாள் அவள் தோழி சிநேகா.

“நடத்திடறேன்” என்றாள் மாலினி, திடமான குரலில்.

“அடியே, நான் விளையாட்டுக்குச் சொன்னேன். அப்படிச் செய்துடாதே” என்று பதறினாள் சிநேகா..

“ரொம்பத் தேங்ஸ்டி” என்று மட்டும் சொன்னாள் மாலினி.

ன்று, நிர்வாண ஓவியக் கண்காட்சியின் தொடக்க நாள்.

பத்து மணிக்குக் கண்காட்சி தொடக்கம். எட்டு மணியிலிருந்தே கூட்டம் அலைமோதத் தொடங்கியது.

’இது, நிர்வாண ஓவியக் கண்காட்சி. ஓவியங்களுக்கு அருகிலேயே மாடல்களும் நிற்பார்கள்’ என்று விளம்பரப்படுத்தியிருந்தாள் மாலினி.

அலை மோதிய ஜனத்திரளைப் போலீஸ் வந்து ஒழுங்குபடுத்தி, கியூவில் நிற்க வைத்தது.

தோள்களில் கேமராக்களுடன் ஏகப்பட்ட பத்திரிகை நிருபர்கள்.

மணி பத்தாயிற்று.

ஓவியக்கூடம் திறக்கப்பட்டது.

’நான் முந்தி, நீ முந்தி’ என்று காத்திருந்தவர்கள் உள்ளே பாய்ந்தார்கள்.

அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அசடு வழிந்தார்கள். அவர்களின் முகங்களில் கோபமும் வெறுப்பும் தாண்டவமாடின.

காரணம்..........

நிர்வாண ஓவியங்களுக்கு ‘போஸ்’ கொடுத்தவர்கள்...........

சுமதி, பத்மா, மது ஆகியோர். எல்லோருமே மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்! மில்க் சாக்லேட் சுவைத்தவாறு நின்றுகொண்டிருந்தார்கள்!

அன்று, தான் அடைந்த ஏமாற்றத்தின் பிரதிபலிப்பை, இன்று, அந்த ரசிகர்கள் முகத்தில் கண்டு ரசித்து மகிழ்ந்துகொண்டிருந்தாள் மாலினி.

                                           *   *   *    *   *

'I.A.S' கேள்விக்கான விடைகளில் ஒன்று.....

“நிர்வாணமாக வரும் பெண்ணைக் கட்டியணைத்து முத்தமிடுவேன்”

“இது உங்கள் நண்பருக்குச் செய்யும் துரோகம் ஆகாதா?”- கேள்வி.

“ஆகாது. நிர்வாணமாக வருபவள் சிறுமியாகத்தான் இருக்க முடியும். இங்கே ‘பெண்’ [female]என்பது பெண் இனத்தைக் குறிக்கும் பொதுச்சொல்.”
[சில நுணுக்கமான கேள்விகளை, ‘விகடன்’ தமிழாக்கம் செய்து வெளியிட்டிருந்தது]
                                               *   *   *   *   *

கதையின் முடிவு உங்களை ஏமாற்றிவிட்டதா?

என்னைத் திட்டாதீர்கள். இதை எழுதியவர்.....

‘ஜெயரூபன்’

கதை வெளியான தேதி:                  14.02.1985.

வெளியிட்ட வார இதழ்:                    குமுதம் [14.02.1985, பக்கம்-79.]

புதன், 17 ஏப்ரல், 2013

இது கடவுளைச் சாடும் கதையல்ல; எதார்த்த வாழ்க்கையைப் புரிய வைக்கும் படைப்பு!

தோல்விகளைச் சந்திக்கும்போதெல்லாம், கடவுளைத் துணைக்கு அழைக்கிறோம். நாம் நம்புகிற கடவுளும், தன் படைப்புத் ‘தொழிலில்’ தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர் என்பது ஆழ்ந்து சிந்தித்தால் புரியும்!

கதைத் தலைப்பு:                     சாமியும் கந்தசாமியும்

ந்தசாமி, கோயிலுக்குப் போறியாப்பா?” அம்மா கேட்டார்.

”எனக்குத்தான் கடவுள் நம்பிக்கை இல்லேன்னு தெரியுமில்ல. அப்புறம் ஏன் இந்தக் கேள்வி?” அம்மாவிடம் பொய்க் கோபம் காட்டினான் கந்தசாமி.

“அதில்லப்பா. நீயும் அப்பாவும் நடத்துற ஓட்டலில், வர்ற கொஞ்சம் லாபமும் வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சரியாப் போயிடுது. அஞ்சாறு வருசமா அசல் அப்படியே இருக்கு. குடும்பச் செலவுக்குப் பணமில்ல. நம்பிக்கையிழந்த உன் அப்பா, தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டார். தொழில் இன்னும் லாபகரமா நடக்கணும்னு, பிடிவாதத்தைக் கைவிட்டு, சாமி கோயிலுக்குப் போயி, சாமி சந்நிதியில் நெடுஞ்சாண்கிடையா விழுந்து கும்பிட்டு வாப்பா.”

அம்மாவின் குரலில் என்றுமில்லாத கண்டிப்புத் தெரிந்தது.

மவுனமாகக் கிளம்பிப் போனான் கந்தசாமி.

அவன் வீடு திரும்பியது, “விழுந்து கும்பிட்டயா? மனப்பூர்வமா வேண்டிகிட்டியா?” என்றார் அம்மா.

“நான் கோயிலுக்குப் போகல; கடன் கொடுத்தவங்களைத் தேடிப் போயி, அவங்க காலில் விழுந்து கும்பிட்டு நிலைமையைச் சொன்னேன். வட்டியைத் தள்ளுபடி பண்ணிட்டு, அசலைக் கொஞ்சம் கொஞ்சமா சம்பாதிச்சிக் கொடுன்னு சொல்லிட்டாங்க” என்றான் கந்தசாமி.

அம்மா, சாமி படத்தின் முன்னால் நின்று கண்மூடித் தியானத்தில் ஆழ்ந்தார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

எச்சரிக்கை! இது ஒரு ’மரண மொக்கை’ப் பதிவு! தயவு செய்து இதைப் படிக்க வேண்டாம்!!

என் அண்மைப் பதிவொன்றுக்குப் பின்னூட்டம் இட்ட ஒரு 'unknown', என்னைப் பற்றி, ‘ஹிட்ஸ் வெறியன்’ என்று குறிப்பிட்டிருந்தார்! அவரைத் திருப்திபடுத்தவே இந்தப் பதிவு!!

[`0`ஹிட்ஸ் பெற்றுச் சாதனை படைக்கவிருக்கும் பதிவு இது!!!]

கதைத் தலைப்பு:                        உணர்தல்

லட்சோபலட்சம் மக்களால், ‘கடவுள் அவதாரம்’ என்று போற்றப்படும் அந்த மகான், அலங்கரிக்கப்பட்ட அரியணையில் வீற்றிருந்தார்.

அவரைச் சுற்றி ‘அரண்’ அமைத்தது போல அவரின் முரட்டு சீடர்கள்.

அருளாசி பெறக் காத்திருந்த மக்கள் வெள்ளம் அரங்கில் நிரம்பி வழிந்தது.

மகான் இன்னும் திருவாய் மலர்ந்தருளவில்லை; யாருடைய வரவுக்காகவோ காத்திருப்பதுபோல் தெரிந்தது.

மக்கள் வெள்ளத்தை ஊடுருவிக்கொண்டு உள்ளே நுழைந்தான் அந்த மனிதன். பலமுறை வேண்டுகோள் வைத்து, மகானைச் சந்திக்கச் சிறப்பு அனுமதி பெற்றவன் அவன்.

நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை மகானின் திருப்பாதங்களில் விழுந்து எழுந்தான்.

சொன்னான்: “தங்களைப் போன்ற மகான்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகச் சொல்கிறார்கள். மக்களும் நம்புகிறார்கள். அந்தக் கடவுளை அற்ப ஜீவிகளான என் போன்றவர்களுக்குக் காட்ட முடியுமா?” என்றான்.

“காட்ட முடியாது; ஐம்புலன்களால் அறியவும் முடியாது. ஆறாவது அறிவால் உணர மட்டுமே முடியும்” என்றார் மகான்.

“கடவுளின் ஒரு கூறான ஆன்மாவை...?”

“உணர மட்டுமே முடியும்.”

“கடவுளை உணரத்தான் முடியும் என்கிறீர்கள். தங்களைப் போன்ற மகான்களால்கூடவா பிறருக்கு உணர்த்த முடியாது?”

“யாரும் யாருக்கும் உணர்த்த முடியாது. அவரவர் ஊணர்வது மட்டுமே சாத்தியம்.”

“கடைசியாக ஒரு கேள்வி. தாங்கள் கடவுள் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்கள்தானே?”

“நிச்சயமாக.”

“தாங்கள் உணர்ந்திருக்கிறீர்கள் என்பதை என்னைப்போன்ற சாதாரண மனிதர்கள் உணர்ந்து நம்புவது எப்படி மகானே? நம்பினால்தானே தங்களை மகான் என்று ஏற்றுக்கொள்ள முடியும்?” என்றான் அந்த மனிதன் வெகு பவ்வியமாக.

மகானின் வதனம் சிவந்தது; உதடுகள் துடித்தன.

“நீ ஒரு குதர்க்கன்...கசடன்...நாத்திகன்...சாத்தானின் வாரிசு. கடவுள் உன்னைத் தண்டிப்பார்.”

அவர் சொல்லி முடிக்கும் முன்னரே, பக்த கோடிகள் அந்த மனிதனின் மீது பாய்ந்தார்கள்.

ஆக்ரோஷமாய்த் தாக்கினார்கள்; ஆடை கிழித்துத் தரையில் தள்ளிப் புரட்டியெடுத்தார்கள்; அவனின் உடம்பெங்கும் வீக்கங்கள்; ரத்தக் காயங்கள்.

“தொலையட்டும்... அவனை உயிர் பிழைத்துப் போக விடுங்கள்” என்றார் மகான்.

பிறந்த மேனியாய்த் தள்ளாடியபடியே வெளியேறினான் அந்த மனிதன்!

##############################################################################################################################

‘மரண மொக்கை’ என்பதற்கு என்னால் விளக்கம் தர இயலாது. அது unknown' க்கு மட்டுமே சாத்தியம்.

###################################################################################




செவ்வாய், 9 ஏப்ரல், 2013

இது ஒரு பாலியல் ‘தொழில்காரி’யின் கதை!

தப்பு என்று தெரிந்தும் அவள் பாலியல் தொழிலில் ஈடுபட்டாள்! அது தப்பாமல் அவளுக்கொரு தண்டனையும் பெற்றுத் தந்தது!!

ரைவாசி திறந்திருந்த தட்டிக் கதவு தட்டப்பட்டது.

“வாங்க.” வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்து அழைத்தாள் கனகா. கதவு தட்டியவர் திரும்பிப் போய்விடக்கூடாதே என்ற கவலை அவளுக்கு.

‘சரக்கு’ ஏத்திக்கொண்டு சைக்கிள் மிதித்து, ’சரக்கு’ லாரியில் அடிபட்டுச் செத்தான்  மாணிக்கம். அவளுக்கு அவன் புருஷன்; அவளின் ‘பலான’ தொழிலுக்குப் புரோக்கரும் அவனே. அவன் பரலோகம் போனதால் தொழில் வெகுவாகப் பாதித்தது.

வீடுவீடாகப் போய்ப் பத்துப்பாத்திரம் தேய்த்தவளைப் ‘பரத்தை’ ஆக்கியதே அவன்தான். குடித்துப் பழகிய கொஞ்ச நாளில் குடிப்பதே  தொழில் என்றான பிறகு, பெண்டாட்டி சம்பாதனை குடும்பச் செலவுக்கும் ‘குடி’ச் செலவுக்கும் போதுமானதாக இல்லை. ‘குட்டி’ தேடும் ’குஷால்’ பேர்வழிகளை அடிக்கடி தன் குடிசைக்கு அழைத்து வந்தான்.

ஆரம்பத்தில், அவனைக் கண்டித்த அவள், ஒரு நாள் முழுக்க வேர்வை சிந்திச் சம்பாதிக்க முடியாததை ஒரு மணி நேரத்தில் சம்பாதித்துவிடும் கலை அது என்பது புரிந்தபோது இணங்கிப் போனாள்.

அப்புறம் அதுவே பழகிப் போனது.

நல்ல துணிமணி, மூன்று வேளையும் வயித்துக்கு உணவு  என்று வாழ்க்கை ஓடியது.

அவளுடைய போதாத காலமோ என்னவோ, மாணிக்கம் செத்துப் போனான்.

புதிய நபர்களின் வரவு  தடைபட்டது. தெருவில், பலான தொழில்காரிகளின் எண்ணிக்கை கூடியதால், வாடிக்கையாளர்களின் வருகையும் மட்டுப்பட்டது. கனகா கவலையில் மூழ்கினாள்.

சரிந்துகொண்டிருந்த மார்க்கெட்டைத் தூக்கி நிறுத்துவது எப்படி என்று அடிக்கடி யோசிக்கலானாள். அப்படி ஒரு நாள் யோசித்துக்கொண்டிருந்த போதுதான் அவள் குடிசையின்  தட்டிக் கதவு தட்டப்பட்டது.

வெளியே தயங்கி நின்றவருக்கு, “உள்ளே வாங்க” என்று மீண்டும் அழைப்பு விடுத்தாள் கனகா.

அவளைத் தேடி வந்தவர் ஒரு நடுத்தர வயதுக்காரர். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் போலவும் தெரிந்தார்.

சல்லடைப் பார்வையால் கனகாவின் வயதையும் உடல் வாகையும் வனப்பையும் ஆராய்ந்தார்.

முகத்தில் திருப்தி பரவி நிலை கொள்ள, அங்கிருந்த ஒரேயொரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து, “வெய்யில் வறுத்தெடுக்குது. குடிக்கத் தண்ணி கொடு” என்றார்.

தடுப்புச் சுவரைக் கடந்து உள்ளே போன கனகா, ‘ஆள் புதுசு. இவரை அனுப்பிச்சது யாராயிருக்கும்?’ என்று யோசித்தாள். ’அவர் போகும்போது கேட்டுக்கலாம்’ என்று முடிவெடுத்தாள்.

அவருக்கு எலுமிச்சை ஜூஸ் கொடுத்து உபசரித்தாள்.

தரையில் பாய் விரித்தாள்; “என்னைப் பிடிச்சிருக்குதானே?” பவ்வியமாய்க் கேட்டாள்; முந்தானை விலக்கிக் கவர்ச்சி காட்டினாள்; ‘இனி என்னைக் கையாளலாம்’ என்பது போல மேலாடை நெகிழ்த்து, மெல்லிய புன்னகையை அவர் மீது படர விட்டாள்.

மாதக் கணக்கில் பெண் வாசனையே நுகராதவர் போல, அவளைத் தாவி அணைத்தார் அவர்; செயலில் வேகம் காட்டினார். கனகா அவருக்கு ஈடுகொடுத்தாள். தான் கற்று வைத்திருந்த சாகசங்களால் அவரைத் தன்வயம் இழக்கச் செய்தாள்.

நிமிடங்கள் கரைந்தன.

தாபம் தணிந்ததும், ‘இருந்த’ நேரத்தைக் கணக்குப் பார்க்காமல், சில நூறுகளைக் கனகாவிடம் நீட்டினார் அவர். அவளும் திருப்தியுடன் பெற்றுக் கொண்டாள்.

அவர் வெளியேற முனைந்த போது, கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டாள் கனகா: “ எப்படி இந்த இடத்தைக் கண்டுபிடிச்சீங்க?”

”தெரு முனையில் நின்னுட்டு ’நோட்டம்’ விட்டுட்டிருந்தேன். ஒரு பொடியன், ’சார் பொம்பளை வேணுமா?’ன்னு கேட்டான்;  இந்த இடத்தையும் காட்டினான்” என்று சொன்னதோடு, சிறிது தொலைவில், ஒரு வேம்பின் நிழலில் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுவனைச் சுட்டிக் காட்டிவிட்டு நகர்ந்தார்.

அந்தச் சிறுவன்..........

பத்து வயதுகூட நிரம்பாத, கனகாவின் செல்வ மகன்!

அதிர்ச்சியில் கனகாவின் சப்த நாடிகளும் அடங்கின. அவள் இதயம் கட்டுப்பாடு இழந்து தாறுமாறாய்த் துடிக்கலாயிற்று. நெஞ்சு கனத்தது; மூச்சுத் திணறியது.

”ஐயோ.....அவனா?..... என் புள்ளையா?....என் உதிரமும் சதையுமான நான் பெத்த புள்ளையா எனக்கு ஆள் பிடிச்சி அனுப்பினான்? ஈனத் தொழில் செஞ்சி, நான் சம்பாதிக்கிற பாவத்தில் இனி அவனுக்கும் பங்குண்டா?.....கடவுளே, என்னை எதுக்கய்யா ஒரு மனுஷியா பிறக்க வெச்சே?.....என்னை எதுக்.....” நாடித் துடிப்பு அடங்கும்வரை, இப்படி ஈனஸ்வரத்தில் ஏதேதோ முனகிக்கொண்டிருந்தாள் கனகா.

00000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000















வெள்ளி, 5 ஏப்ரல், 2013

வேலைக்காரி ஜாக்கிரதை!

“அவள்[வேலைக்காரி] ‘குனிந்து’ குப்பை கூட்டிக்கொண்டிருந்தாள். என் மனம் குப்பையானது!”-கவிஞர் பழனி பாரதி.

அம்சவேணி எங்கள் வீட்டு வேலைக்காரி; விதவை; அம்சமான தேகக் கட்டுக்குச் சொந்தக்காரி. அவளை அனுபவிக்கும் ஆசை எனக்கு இருந்தது.

“என் குடிகாரப் புருஷன் பத்தாயிரம் கடன் வெச்சிட்டு மண்டையைப் போட்டுட்டான். வீட்டு வேலை செஞ்சி சம்பாதிக்கிறது வயித்துப்பாட்டுக்கே பத்தல. எப்படித்தான் கடனை அடைக்கப்போறனோ?’ என்று என் இல்லத்தரசியிடம் அவள் புலம்புவது வழக்கம். அந்தப் பத்தாயிரத்தைக் கொடுத்தால் படிந்துவிடுவாள் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. மேலாடையைச் சரி செய்வதில் அவள் காட்டும் அசட்டை, என் தாபத்துக்குத் தூபம் போடுவதாக இருந்தது. தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

அந்தத் தருணமும் வந்தது.

கோடை விடுமறையானதால், பிள்ளைகளுடன் பிறந்த வீட்டுக்கு புறப்பட்டுப் போய்விட்டாள் என் மனைவி.

வீடு பெருக்கிக்கொண்டிருந்தாள் அம்சவேணி.

“அம்சா” -அழைத்தேன்.

“என்னங்கய்யா?” -நெருங்கி வந்தாள்.

“பத்தாயிரம் இருக்கு. வாங்கிக்கோ” பணக்கட்டை நீட்டினேன்.

“எதுக்குங்க?”

“உன் கடனை அடைச்சுக்கோ. திருப்பித் தரவேணாம்.”  -என் ஒரு கை ஆறுதலாய் அவள் தோளைத் தொட்டுச் சரிந்து அவள் இடையைத் தடவியது.

என்னை ஏறிட்டுப் பார்த்த அம்சவேணி, "இது ஒரு தடவைக்கா, ஒரு நைட்டுக்கா, இல்லே எல்லா நாளுக்குமா?” என்று கேட்டாள்.

அவளின் இந்தக் கேள்வி என்னை நிலை தடுமாற வைத்தது; உன்மத்தனாய் நின்றேன்.

”உடம்பை வித்துப் பிழைக்கறவகூட, ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு வாங்குறா. என் புருஷன் கை தவிர இன்னொரு கை என்னைத் தொட்டதில்லை. கட்டுக் குலையாத கவர்ச்சியான உடம்பும் எனக்கிருக்கு. பத்தாயிரம் போதாதுன்னு சொல்றேன். புரியுதா?” -நக்கலாய்ச் சிரித்தாள் அம்சவேணி.

தொடர்ந்தாள்: "பத்தாயிரம் தர்றேன்னு சொல்லாம,  பத்து லட்சம் தர்றேன். எனக்கு ’வைப்பாட்டியா இரு’ன்னு  சொல்லியிருந்தா ரொம்பப் பெருமைப்பட்டிருப்பேன். ஒரு வேலைக்காரிதானேன்னு ரொம்பச் சீப்பா நினைச்சிட்டீங்க. அப்படித்தானே?" இப்போது வாய்விட்டுச் சிரித்தாள் அம்சவேணி. அது கட்டுப்படுத்தப்பட்ட கடுங்கோபத்தின் வெளிப்பாடு என்பது எனக்குப் புரிந்தது.

“அம்மா வந்ததும், நீ இல்லாத நேரத்தில் அம்சவேணி பத்தாயிரம் பணம் கேட்டா. அவள் நல்ல நடத்தையுள்ளவளாத் தெரியல. இனி வேலைக்கு வராதேன்னு விரட்டிட்டேன்னு சொல்லுங்க. தனக்கு வாய்ச்சது எத்தனை உத்தமப் புருஷன்னு அம்மா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. அதனால எனக்கொன்னும் பாதிப்பு இல்ல. ஏன்னா,  நான் வேலைக்காரிதானே.”

கையிலிருந்த துடைப்பத்தைத் தூக்கிக் கடாசிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தாள் அம்சவேணி.

                                     *   *   *   *   *

‘நான்’ என்று தன்மையில் கதை சொல்வது, புனைகதை ‘உத்தி’களுள் ஒன்று. இந்த ‘நான்’, ‘பசி’பரமசிவமாகிய நான் அல்ல! நம்புங்கள்.

                                    *   *   *   *   *

புதன், 3 ஏப்ரல், 2013

'இது’க்குமா கூட்டணி! இதற்காகவா ‘ஆறாவது’ அறிவு!! அடப்பாவிகளா!!!

பின்வரும், ‘இறைவியின் சீற்றம்’ என்னும் கதை, இறை நம்பிக்கையாளர்களை என் மீது சீற்றம் கொள்ளச் செய்யும்! அவர்களின் மனசாட்சியோ அதைத் தடுக்கும்!!

‘இறைவியின் சீற்றம்’,  04.07.11 இல் பதிவிடப்பட்டது. நீண்ட காலம் நெஞ்சில் ஊறிக் கிடந்த எண்ணங்களின் வெளிப்பாடு அது.  அது சம்பாதித்தது, வெறும் ’37’ பக்கப் பார்வைகள்[ஹிட்ஸ்] மட்டுமே.

என்னுடைய மற்ற சில பதிவுகளுக்கான [கவர்ச்சி மிக்க தலைப்புகளுடன்] பக்கப் பார்வைகளை’ப் பார்வையிட்டுவிட்டுக் கதையைப் படியுங்கள்.



உள்ளீடுபக்கக்காட்சிகள்
6457
5121
28 செப்., 2012, 11 கருத்துகள்
4050
19 ஜன., 2013, 15 கருத்துகள்
3637
14 பிப்., 2013, 6 கருத்துகள்
3218
24 டிச., 2012, 2 கருத்துகள்
3210
3064
2243
2070
1723


இக்கதையை, மீள்பதிவு செய்வதற்கான காரணம் இப்போது புரிந்திருக்கும்!


இதோ கதை..........

தலைப்பு:                       இறைவியின் சீற்றம்

றைவனும் இறைவியும் [அரூபமாக], வாகனப் போக்குவரத்தையும் மனித நடமாட்டத்தையும் நோட்டமிட்டவாறு, ஒரு நகரத்தின் அகன்ற பெரிய தெருவில் நடந்துகொண்டிருந்தார்கள்.

திடீரென, இறைவனைத் தன்பால் இழுத்து நிறுத்திய இறைவி, “அங்க பாருங்க” என்று ஒரு குப்பைத் தொட்டியின் அருகே, சிக்குப் பிடித்த பரட்டைத் தலையும் உடம்பு முழுக்க அழுக்குத் திட்டுகளுமாக, நைந்து கிழிந்த ஆடையுடன் காட்சியளித்த ஒரு பெண் உருவத்தைச் சுட்டிக் காட்டினார்.

முகம் சுழித்த இறைவன், “சே, மனித நடமாட்டம் மிகுந்த தெருவில் இப்படி முக்கால் நிர்வாணமாக நிற்கிறாளே, பெண்ணா இவள்?” என்று கோபத்தில் முகம் சிவக்கக் கேட்டார்.

பார்த்தவுடனே முழுப் பைத்தியம்கிறது தெரியுது. பெண்ணான்னு கேட்கிறீங்களே, இவளைப் பைத்திய ஆக்கியது யாருன்னு கேளுங்க” என்றார் இறைவி.

அசடு வழிந்த இறைவன், “சரி, சரி. சொல்லு” என்றார்.

“உங்க ஆசீர்வாதத்தோடு நாலு காலிப் பசங்கதான் இவளை இந்த நிலைக்கு ஆளாக்கினாங்க.”

வெகுண்ட இறைவன், கண்கள் சிவக்க, “என்ன உளறுகிறாய்?” என்றார்.

“உளறவில்லை. நடந்ததைச் சொல்றேன். ஆத்திரப்படாம கேளுங்க” என்ற இறைவி, குரலில் விரக்தி தொனிக்கச் சொல்லத் தொடங்கினார்.

“இவளுக்கு அப்போ பதினாறு வயசு. மக்கள் நடமாட்டம் குறைந்த தெருவில் இவள் தனியே போனபோது, நான்கு காலிகள் இவளைக் கடத்திப் போனாங்க. தனி அறையில் அடைச்சி, அவங்களோட காம வெறிக்கு இவளை இரையாக்க முயற்சி பண்ணினாங்க...........

.....ஐயோ.....என்னைக் காப்பாத்துங்களேன்னு அலறித் துடிச்சிக் கூக்குரல் எழுப்பினா இவ. காப்பாத்த யாருமே வரல........

.....கடவுளே...ஏ...ஏ...ஏ.....ஓ...ஓஒ...ஓஓ...கடவுளே.....நீயாவது என்னைக் காப்பாத்துன்னு வெறியர்களின் பிடியிலிருந்து விடுபடப் போராடிகிட்டே அழுது புலம்பி அபயக் குரல் எழுப்பினா.....

....துடிதுடிச்சி ஓடோடிப் போய்க் காப்பாத்தவேண்டிய நீங்களும் காப்பாத்தல; என்னையும் தடுத்துட்டீங்க....

.....சூதுவாது அறியாத ஒரு அப்பாவிப் பெண்ணைச் சீரழிச்சி, சித்ரவதை பண்ணி நடுத் தெருவில் அலைய விட்டுட்டானுக.....

....தனக்குக் கடவுள் தந்த பரிசை நினைச்சி நினைச்சி, எந்நேரமும் சிரிச்சிட்டே தெருத் தெருவா அலையுற இந்தப் பைத்தியக்காரியைப் பாருங்க. ரெண்டு கண்ணாலயும் நல்லாப் பார்த்து ரசிங்க” என்றுகுரல் தழுதழுக்க, விழிகளில் அருவியாய் நீர் பெருகி வழிந்திட வெகு சிரமப்பட்டுச் சொல்லி முடித்தார் இறைவி.

இறைவன் மவுனமாக நடக்கத் தொடங்கினார்.

ஒரே தாவலில் அவரை வழி மறித்த இறைவி, “இப்படிக் கொடூரமா தண்டிக்கப்படுற அளவுக்கு இவள் செஞ்ச குற்றம்தான் என்ன?” என்றார்.

“கடந்த பிறவிகளில் இவள் செய்த பாவம்.”

“அப்படி என்ன பெரிய பாவம்?”

“அதைச் சில வார்த்தைகளில் சொல்ல முடியாது. அது ஒரு நீண்ட சங்கிலித் தொடர். எப்பெப்போ செய்த பாவங்களுக்கு எந்தெந்தப் பிறவியில் தண்டனை அனுபவிக்கணுங்கிறது ஏற்கனவே விதிக்கப்பட்டது. நீ கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் அவளோட கணக்கைப் புரட்டிப் புள்ளிவிவரம் தர்றது என்னோட வேலையில்லை. இந்தப் பைத்தியக்காரி பாவம் பண்ணினவள். அதுக்கான தண்டனையை இப்போ அனுபவிக்கிறா. அவ்வளவுதான்.”

நகர முற்பட்டார் இறைவன்.

“நில்லுங்க.”

இறைவியிடமிருந்து கடும் சீற்றத்துடன் வெளிப்பட்ட வார்த்தை, இறைவனை மேலும் நகரவிடாமல், ஆணி அடித்தாற் போல நிற்க வைத்தது.

“இவள் செய்த பாவத்துக்குத் தண்டனை அனுபவிக்கிறாள்...சரி. இந்தப் புத்தம் புது மலரை, நாள் கணக்கில் அனுபவிக்கிற அதிர்ஷ்டம் அந்த நாலு நாய்களுக்கும் வாய்ச்சுதே, அதுக்கு அவங்க கடந்த பிறவிகளில் புண்ணியம் செஞ்சாங்களா?” அப்படி என்ன பெரிய புண்ணியம்? இதுக்காவது அவங்க கணக்கைப் புரட்டிப் பார்த்துப் பதில் சொல்வீங்களா?” என்றார் இறைவி.

இப்படியொரு கேள்வியைச் சற்றும் எதிர்பாராத இறைவன், கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி, நின்ற இடத்திலேயே மோனத்தில் புதையுண்டார்!

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@