திங்கள், 24 டிசம்பர், 2012

காமம் பொல்லாதது!

’காமம் வலியது: பொல்லாதது’ என்பதை உணர்த்த முயலும் கதைகள்!!!

காமக் கதை1:                        நடுநிசிக் காமம்

தூக்கம் கலைந்து புரண்டு படுத்தான் தங்கராசு.

அவனுடைய ஒரு கை, முந்தானை விலகிய மருக்கொழுந்துவின் மார்பகத்தின் மீது விழுந்தது.

மனதில் காமம் துளிர்விட, அதை இன்னும் சுதந்திரமாகப் புழங்கவிட்டபோது....

“எடுய்யா கையை.” மருக்கொழுந்து அதட்டினாள்.

கையைப் பின்னுக்கு இழுத்தான் தங்கராசு.

‘என்னய்யா நடு ஜாமத்தில் சேட்டை பண்றே?”

“அது வந்து மருக்கொழுந்து.....தூக்கக் கலக்கத்தில்.....” வாய் குழறியது தங்கராசுக்கு.

“உன் கை பட்டவுடனே எனக்கு விழிப்பு வந்துட்டுது. மேற்கொண்டு என்ன நடக்குதுன்னு பார்க்கத்தான் தூங்குற மாதிரி நடிச்சேன். இதோ பாருய்யா, இந்த மாதிரி அர்த்த ராத்திரியில் எல்லாம் இது வெச்சுக்கக் கூடாது. உடம்பு கெட்டுடும்னு சொல்லியிருக்கேன் இல்லியா? நல்ல தூக்கத்தைக் கெடுத்துட்டியே.”

உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாத நிலையில்,  “என்னை மன்னிச்சுடு மருக்கொழுந்து. காத்தால இருந்து ராத்திரி எட்டு மணி வரைக்கும் மூட்டை சுமந்துட்டு வர்றேன். சுடு தண்ணியில் குளிச்சுட்டு, சுடச்ச்சுட நீ போடுற சோத்தை வயிறு முட்டத் தின்னதும் அடிச்சிப் போட்ட மாதிரி படுத்துத் தூங்கிடறேன். ஒரு தூக்கம் தூங்கி முழிக்கும் போது, பக்கத்தில் உன்னைப் பார்த்ததும் ‘அந்த நினைப்பு’ வந்துடுது.....”

அவன் பேசி முடிப்பதற்குள் அவசரமாய் அவனை இழுத்து அணைத்து, “நீ தப்புப் பண்ணல. நான்தான் உன் நிலைமை புரியாம தப்பாப் பேசிட்டேன். இனி, உன் மனசறிஞ்சி நடந்துக்குவேன்” என்றாள் இன்னும் ’புதுசு’ மாறாத மருக்கொழுந்து!

                        *                                            *                                          *

காமக் கதை 2:                    திணவு    

“மல்லிகா,   எங்கடி போய்ட்டு வர்றே?”

வீட்டுக்குள் நுழைந்த மகளை முறைத்தபடி கேட்டாள் செல்லம்மா.

“புவனாவைப் பார்த்துட்டு வர்றேன்” என்றாள் மல்லிகா.

“இல்ல. அவ புருஷனைப் பார்த்துட்டு வர்றே. புவனா நேத்தே அவ அம்மா வீட்டுக்குப் போய்ட்டா. உன்கிட்டே சொல்லிட்டுத்தான் போனா. உங்க பேச்சைப் பாத்ரூமிலிருந்து கேட்டேன்.

மல்லிகா மவுனம் போர்த்து நின்றாள்.

“புருஷன் இருக்க வேறொருத்தன் மேல ஆசைப்படுறது தப்புடி.”

“நீயும் அந்தத் தப்பைப் பண்ணியிருக்கே. நான் வயசுக்கு வந்தப்புறம்தான் ’அந்த ஆளு’ உன்னைத் தேடி வர்றதை நிறுத்தினான்.” அவள் பிரசவித்த வார்த்தைகளின் சூடு, செல்லம்மாவை வெகுவாக வாட்டியது.

மனதைத் தேற்றிக் கொள்ளச் சற்றே அவகாசம் தேவைப்பட்டது அவளுக்கு.

சொன்னாள்: “இளம் வயசிலேயே என் புருஷன், அதான் உன் அப்பன் செத்துட்டான். கொஞ்ச வருஷம் இன்னொருத்தனுக்கு வைப்பாட்டியா இருந்தேன்.

நான் செஞ்சது தப்புன்னாலும், அதுக்குப் பாவ மன்னிப்பு உண்டு. ஆனா நீ.....

புருஷன் இருக்கும்போதே, அவனுக்குத் துரோகம் பண்ண நினைக்கிறே. இதோ பாருடி.......மற்றதில் எப்படியோ, இந்த விஷயத்தில் கண்டிப்பா ‘போதும்’கிற மனசு வேணும். ‘இன்னும் வேணும்.....இன்னும் வேணும்’னு திணவெடுத்துத் திரிஞ்சா குடும்பம் சிதைஞ்சி சின்னாபின்னம் ஆயிடும். புரிஞ்சுதா”

“புரிந்தது” என்பதுபோல் தலையசைத்தாள் மல்லிகா.

**************************************************************************************************************************************

குறிப்பு: இரண்டு கதைகளுமே நான் கிறுக்கியவைதான்!

**************************************************************************************************************************************




2 கருத்துகள்:

  1. ரெண்டு கதையும் நல்லா சொல்லி இருக்கீங்க பரமசிவம்.தலைப்பு இப்படி வேண்டாம்னு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. நன்றி முரளிதரன்.

    நான் கொடுத்த தலைப்பு சரியன்று என்பது புரிந்தது.அதனால்தான், தமிழ்மணம் அதை நீக்கியிருக்கிறது.

    ‘காமம் பொல்லாதது’ என்று மாற்றியிருக்கிறேன்.

    தவற்றைச் சுட்டிக் காட்டியதற்கு மீண்டும் நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு