சனி, 22 டிசம்பர், 2012

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் படைத்த ஒரு பக்கக் கதை!

அற்புதமான ‘சஸ்பென்ஸ்’ கதை இது!!

1981 ஆம் ஆண்டில், ‘ராணி’ இதழில் [26.07.81] ராஜேஷ்குமார் எழுதிய கதை இது.

கதையைப் பிரதி எடுக்கவில்லை. எழுதி வைத்த குறிப்பின் துணைகொண்டு என் சொந்த நடையில் எழுதியிருக்கிறேன்.

எழுத்தாளரின் கொள்கையைப் பின்பற்றி, ‘ஆபாசம்’ கலவாத நடையைக் கையாண்டிருக்கிறேன்.

சாதனை எழுத்தாளருக்கு என் மனப்பூர்வ நன்றி.

ஒரு பிரபல படைப்பாளரின் ஒரு பக்கக் கதையைப் படிப்பதில் அனைவரும் ஆர்வம் காட்டுவர் என்ற நம்பிக்கையில் இதை வெளியிடுகிறேன்.

கதைத் தலைப்பு:                அவளுக்கு வெட்கமில்லை     

“என்னடா யோசிக்கிறே? காரியத்தில் இறங்கு” என்றான் துரைசாமி.

”அண்ணே, பட்டுப் புடவையில் ரூபி ஒரு அப்சரஸ் மாதிரி இருக்கா. பார்த்துட்டே இருக்கணும்னு தோணுது” என்றான் செல்வம்.

“சும்மா பார்த்துட்டே இருந்தா காரியத்தை எப்போ முடிக்கிறது. போடா. சீக்கிரம் போயி அவள் சேலையை உருவு.” அதட்டும் தொனியில் சொன்னான் துரைசாமி.

”துரையண்ணே, நீங்க எனக்கு சீனியர். நீங்க ஆரம்பிச்சி வைங்க.”

“இதுல என்னடா சீனியர் ஜூனியர்? போடா. உன் திறமையைக் காட்டுடா.”

“அவ கட்டியிருக்கிறது விலை உயர்ந்த பட்டுச்சேலை. கண்டபடி கை வெச்சா சீலை பாழாயிடும். பக்குவமா கையாளணும்.....” தயங்கினான் செல்வம்.

இவர்கள் பேசுவதை ரூபி நின்ற நிலையில், புன்னகை தவழும் முகத்துடன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“யாரும் வந்துடுவாங்க. போ. சீக்கிரம்  ஆரம்பிச்சுடு.” துரிதப்படுத்தினான் துரைசாமி.

தயக்கத்துடன் அவளை நெருங்கினான் செல்வம்.

அப்போது..........

அவர்களின் முதுகுப்புறத்திலிருந்து காலடி அரவம் கேட்டது.

இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள்.

முதலாளி நின்றுகொண்டிருந்தார்!

“ரெண்டுபேரும் அரட்டை அடிச்சிட்டு நிக்கிறீங்களே. வாடிக்கையாளர் வர்ற நேரமாச்சில்ல. ’ஷோகேஸ்’ பொண்ணு ரூபிக்குச் சீக்கிரம் சேலையை மாத்துங்கப்பா...ம்ம்ம்...சீக்கிரம்” என்றார் அந்த ஜவுளிக்கடை முதலாளி.

கையில் புதிய பட்டுச்சேலையுடன் இருந்த செல்வமும் துரைசாமியும் பொம்மையை நெருங்கினார்கள்.

000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000

          


2 கருத்துகள்:

  1. எக்ஸலன்ட் ஆயிரம் நாவல்களுக்கு மேல் எழுதிய ராஜேஷ்குமாரின் கதை. நல்ல கதைகளை அறிமுகப் படுத்துகிறீர்கள்.சிறந்த ரசனை உங்களுடையது.

    பதிலளிநீக்கு
  2. உங்களின் தொடரும் பாராட்டுரைகளுக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன் முரளிதரன்.

    பதிலளிநீக்கு