வியாழன், 30 ஆகஸ்ட், 2018

ஒரு 'சொதப்பல்' சொல் ஆராய்ச்சி!

கடவுளின் ‘இருப்பு’ குறித்து நான் எழுதியதொரு பதிவைப் படித்த என் உள்ளூர் நண்பர், “என்ன சொல்ல வர்றீங்க, கடவுள் இல்லேன்னுதானே?” என்று கேட்டார்.
“சொல்ல நினைப்பதை இன்னும் சொல்லல. கடவுள் உண்டு என்பதற்குத் தரப்பட்ட ஆதாரங்களை நான் மறுத்திருக்கிறேன். அவ்வளவுதான்” என்றேன்.

“ஆதாரங்களை மறுக்கிறதுன்னா என்ன அர்த்தம்? இல்லேன்னு சொல்றது தானே?” - மடக்கினார்.

“ஆதாரங்களை மறுக்கிறது வேற; கடவுளே இல்லேன்னு சொல்றது வேற.”

“சரியான ஆதாரங்கள் தந்தா நம்புவீங்கதானே?”

“தாராளமா”.

“கடவுள் இருக்கிறார்னு அவரை நம்புறவங்க சொல்றாங்க. நம்பாதவங்க இல்லேன்னுசொல்றாங்க. ரெண்டு பேருமே கடவுளை முன்நிறுத்தித்தான் விவாதிக்கிறாங்க. இதிலிருந்தே கடவுள் இருக்கார்ங்கிறது உறுதியாகுது. இல்லையா?”

“இன்னும் விளக்கமா சொல்லுங்க”.

“நாம் பயன்படுத்துற ஒவ்வொரு சொல்லும் ஒரு பொருளைக் குறிக்குது. நிலம்கிற சொல் இருக்கு. ‘நிலம்’ கிற பொருளும் இருக்கு. கடவுள்ங்கிற சொல் இருக்கு; கடவுளும் இருக்கார். இப்படி எல்லாமே. இல்லாத எந்தப் பொருளுக்கும் வார்த்தைகளால் வடிவம் கொடுக்க முடியாது. கடவுள்ங்கிற சொல் இருப்பதால் கடவுளும் இருக்கார்னு நம்பணும்”.

சிறிது மவுனத்திற்குப் பிறகு நான் கேட்டேன்: “ஆகாயத் தாமரைன்னு தமிழ் இலக்கணக்காரங்க ஒரு எடுத்துக்காட்டுத் தருவாங்க. தாமரைன்னு ஒரு பொருள் தண்ணீரில்தான் இருக்க முடியும். ஆகாயத்தில் தாமரை ஏது? இங்கே, இல்லாத ஒரு பொருள்தான் நினைக்கப்படுது. இன்னும், ஆகாயத்தில், ஆயிரம் தலைகளோட அறுபதாயிரம் கால்களால ஒரு யானை நடந்து போச்சுங்கிற மாதிரி நிறையச் சொல்லலாம். அப்படிச் சொன்னால் அது உண்மை ஆயிடாது. கடவுளும் அப்படித் தான்”

நண்பர் லேசாகப் புன்னகைத்துவிட்டுச் சொன்னார்: “இங்கே ஒரு தனிச் சொல்லைத்தான் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளணும். ஆகாயத் தாமரையில் ரெண்டு சொற்கள் இருக்கு. ஆகாயம் ஒரு சொல். அது குறிக்கிற பொருள் ‘வெளி’. வெளின்னு ஒன்னு இருக்கு [இல்லையென்று சொல்கிற மதம் ஒன்று உண்டு]. தாமரை ஒரு சொல். அது குறிக்கிற தாமரைங்கிற பொருளும் இருக்கு. நீங்க ரெண்டு சொற்களை இணைச்சி இல்லாத ஒரு பொருளைக் [ஆகாயத் தாமரை] கற்பனை பண்ணியிருக்கீங்க. இது உண்மை அல்ல. இது மாதிரிதான் யானை உதாரணமும். இம்மாதிரி உதாரணமெல்லாம் இங்கே பொருந்தி வராது.” என்றார் நண்பர்.

நான் கேட்டேன்: “எல்லாத் தனிச் சொல்லுமே ‘நிஜமான’ பொருளை உணர்த்துதா?”

“பொருளை மட்டுமல்ல, உணர்ச்சியைக் குறிக்கலாம்; ஒரு பண்பைக் குறிக்கலாம். ‘வெறுமை’ ‘பொய்’ போல நம்மால் உணரத்தக்க ஒன்றைக் குறிக்கலாம். இன்னும் சொல்ல நிறைய இருக்கு.”- இது நண்பர்.

“நீங்க சொல்றதைப் பார்த்தா, தனிச் சொற்கள் தரும் பொருள்கள்தான் உண்மை. ரெண்டுக்கும் மேற்பட்ட கூட்டுச் சொற்கள் தர்ற பொருள் எல்லாம் உண்மை இல்லைன்னு ஆகுதே?”- நான்.

“ஆகாயத்தாமரை மாதிரி, திட்டமிட்டுத் தொகுத்த சொற்களும் தொடர்களும்
தான் அப்படி.” - அவர்.

“கடவுளும் அப்படித்தான்னு நான் சொல்றேன். இதுவும் திட்டமிட்டுத் தொகுத்த சொல்தான். அதைப் பிரிச்சா, கட+உள். ‘கட’ன்னா கடத்தல். ‘உள்’னா உள்ளே. இந்த ரெண்டு சொற்களும் இணைந்து கடவுள்ங்கிற பொருளைத் தந்துவிடா. உள்ளே கடப்பதுன்னா எதனுள்ளே? கடப்பது எது? அது கடவுளானது எப்படி? இப்படி எழும் கேள்விகளுக்கு இந்தச் சொற்கள் மட்டும் விளக்கம் தந்துவிடா. நீண்ட விவாதம் தேவைப்படும். அதிருக்கட்டும், தனிச் சொல்லானது கடவுள்ங்கிற பொருள் தரும்னு சொன்னீங்களே, உதாரணத்துக்கு ஒரு சொல் சொல்லுங்களேன்.”

“இறை.”

“பொருள்?”

“தங்கியிருப்பது. அதாவது கடவுள்.”

“இந்தத் தனிச்சொல்லும் நேரடியா கடவுளைக் குறிக்கல. ஒவ்வொரு பொருளிலும், அல்லது அணுவிலும்[?] தங்கியிருக்கிற ஒன்னு, அதாவது கடவுள்னு [ஆகுபெயராக] பிற சொற்களையும் சேர்த்து விளக்கம் தரணும். அது எளிதல்ல. கடவுள்ங்கிற வார்த்தை மனிதனால் உருவாக்கப்பட்டது. கடவுள் உண்டுன்னோ இல்லைன்னோ ஆதரிப்பவர், மறுப்பவர் என இரு தரப்பாரும் அதைச் சொல்றதால கடவுள்னு ஒருத்தர் இருப்பதை ஏற்க முடியாது.

அவ்வாறு ஏற்றால், சாத்தான், ஆவி, பூதம், காத்து, கருப்பு, பேய், பிசாசு, சொர்க்கம், நரகம் என்று அத்தனை கற்பனைகளையும் ‘உண்மை’ என ஏற்றாக வேண்டும்” என்றேன் நான்.

“இலக்கணம், சொல்லாராய்ச்சின்னு இறங்கினா,  குழப்பம்தான் மிஞ்சும்.” - நண்பர் சலித்துக்கொண்டார்; விடை பெற்றார்.
------------------------------------------------------------------------------------------------------------------





செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

'பத்தரை மாற்று'ப் பகுத்தறிவாளன்!!!

30.05.1778 அன்று இரவு 11 மணி.

200 ஆண்டுகளுக்கு முன்னரே , மக்களைப் பிணித்திருந்த மூடநம்பிக்கைத் தளைகளை அறுத்தெறிவதற்காக ஓய்வறியாது உழைத்த ஓர் இதயம் தன் இயக்கத்தை நிறுத்திக்கொண்டது. அந்த இதயத்துக்குச் சொந்தக்காரர்.....

''அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அவர்களின் உபதேசங்கள் அறிவுக்குப் பொருத்தமானவையா என்று எண்ணிப்பார். பொருத்தம் என்றால் ஏற்றுக்கொள். இல்லையேல், தயவுதாட்சண்யமின்றி அவற்றை ஒதுக்கித் தள்ளு'' என்று எவருக்கும் அஞ்சாமல் முழக்கமிட்ட பிரெஞ்சு நாட்டு அறிஞன் 'வால்ட்டேர்'[Voltaire] ஆவார்.
வால்ட்டேர், மரணத்தைத் தழுவுவதற்குச் சற்று முன்னர் மதகுருமார்கள்  இருவர் அவரை நெருங்கினார்கள். ஒருவரின் கையில் ஒரு பத்திரம் இருந்தது. அதில்.....

'எல்லாம் வல்ல ஆண்டவனே, நான் அறியாமை காரணமாக மதங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறேன். மதகுருமார்களின் செயல்பாடுகளையும் கண்டித்திருக்கிறேன். என் அறியாமை காரணமாகக் கடவுள் தத்துவங்களையும் மிக மோசமாக விமர்சனம் செய்திருக்கிறேன். என்னுடைய அடாத இச்செயல்களுக்காக இப்போது வருந்துகிறேன். இறைவனே, நான் மரணத்தைத் தழுவ இருக்கின்ற இந்தத் தருணத்தில் நீர் என்னை மன்னிப்பீராக!' என்று எழுதப்பட்டிருந்தது.

அப்பத்திரத்தில் வால்ட்டேர் கையொப்பம் இடுவாரேயானால், 'நம் மதத்தை எதிர்ப்பவர் எவராயினும் என்றேனும் ஒரு நாள் இப்படிச் சரணடைந்தே தீரவேண்டும்' என்று மக்களிடையே பரப்புரை செய்வது மதகுருமார்களின் நோக்கமாக இருந்தது. சாவைத் தழுவவிருந்த வால்டேரைப் பத்திரமும் கையுமாக அவர்கள் சந்தித்ததன் நோக்கமும் அதுவே.

பத்திரம் வைத்திருந்த மதகுரு, ''வால்ட்டேர் அவர்களே, உங்களுடைய வாழ்க்கை முடியப்போகிறது. இந்தத் தருணத்திலாவது, நீங்கள் ஏசுநாதர் கடவுளின் அவதாரம்தான் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பாவ மன்னிப்புக் கிட்டும்'' என்றார்.

வால்ட்டேர் அதற்கு உடன்பட்டாரா? ஊஹூம்!

மதகுருவின் நடவடிக்கையால் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளானார் பகுத்தறிவுச் சிந்தனையாளர் வால்ட்டேர்; ஒரு கையால் அந்த மதகுருவை ஒதுக்கித் தள்ளினார்; சொன்னார்:

''என்னை நிம்மதியாகச் சாகவிடுங்கள்.''

வால்ட்டேர் இறந்த பின்னரும், குருமார்களின் பழிவாங்கும் போக்கு நீடித்தது. அவரைப் புதைப்பதற்கு எந்தவொரு கல்லறையிலும் அனுமதி கிடைக்கவில்லை. அவரின் கல்லறைப் பெட்டி 100 கல் தொலைவிலிருந்த திருச்சபையின் மண்ணில் புதைக்கப்பட்டது.

வால்ட்டேர் இறந்து 10 ஆண்டுகள் கழித்து, பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றது. ஆட்சிக்கட்டிலில் வீற்றிருந்த பதினாறாம் லூயியின் தலை துண்டிக்கப்பட்டது. பிரபுக்களின் அட்டகாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இவை அனைத்தையும்விட மகத்தானதொரு சம்பவமும் இடம்பெற்றது பிரெஞ்சு மண்ணில்! அது.....

வால்ட்டேரின் கல்லறைப் பெட்டியைத் தோண்டி எடுத்து, மாபெரும் ஊர்வலம் நடத்தி, பாரீஸ் நகரத்துக்குக் கொண்டுவந்து மீண்டும் புதைத்து வால்ட்டேருக்குச் சிறப்புச் செய்தார்கள் பிரெஞ்சு மக்கள்!
========================================================================
தார நூல்: 'வால்ட்டேர்', வ.உ.சி.நூலகம்; ராயப்பேட்டை, சென்னை. முதல் பதிப்பு: 2003.

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2018

அதென்ன 'நானோ டெக்னாலஜி'[Nanotechnology]?

'நானோ' என்பதற்கு அதி நுட்பமான என்று பொருள். 

'மைக்ரோ' என்பது 10 லட்சத்தில் ஒரு பகுதி. நானோ அதைவிட ஆயிரம் மடங்கு நுட்பமான சில்லுகளும் அதற்கொத்த உதிரிப் பாகங்களும் கொண்டு சாதனங்களைத் தயாரிக்கும் தொழில்நுட்பம்.

ந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் எறும்பு வடிவிலான ரோபாட்டுகள் செய்து, நம் உடம்புக்குள் அனுப்பி உறுப்புகளைப் பழுது பார்க்கலாம்.

நுண்ணியிரிகள்[பாக்டீரியா] வடிவில் ஒரு ரசாயன ஆராய்ச்சி சாலையையே அனுப்பிப் பெட்ரோல்கூட உற்பத்தி செய்யலாம்.

அமெரிக்க எம்.ஐ.டி.யின் ஏஐ[செயற்கை அறிவு] ஆராய்ச்சி சாலையின் இயக்குநர் 'ராட்னி ப்ரூக்ஸ்' எழுதிய கட்டுரையைப் படித்தால் பிரமிப்பாக இருக்கும்.

சிலிக்கான் சிப்களையும் டி.என்.ஏ.ஜினோம்களையும் கலக்கும் பாக்டீரியல் ஆராய்ச்சி தீவிரமடைந்திருக்கிறது. இதன் மூலம்.....

மரத்தை வளர்த்து, அதை வெட்டிப் பலகைகளாக்கி மேஜையாக மாற்றுவதற்குப் பதிலாக, மேஜையாகவே வளரக்கூடிய விதைகளைத் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதே போல.....

கண்ணுக்குள் சிலிக்கன் சிப் ஒன்றை வைத்து, நேரடியாக மூளைக்குக் காட்சிகளை அனுப்பும் ஆராய்ச்சியும் நடைபெறுகிறது.

இன்னும் ஐம்பது வருடங்களில் மனிதனும் இயந்திரமும் இரண்டறக் கலந்துவிடுவார்கள். 

தலைப்புக் கேள்விக்கான பதிலைத் தந்தவர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.
 ------------------------------------------------------------------------------------------------------------------
தகவல் இடம்பெற்ற நூல்: 'சுஜாதாவைக் கேளுங்கள்', குமுதம் பு[து]த்தகம் வெளியீடு; முதல் பதிப்பு: ஜனவரி 2009.

நன்றி: குமுதம்
------------------------------------------------------------------------------------------------------------------

சுஜாதாவின் தமிழ் மொழி மீதான பற்றினை வெளிப்படுத்தும் இன்னொரு பதில்.....

கேள்வி:
தமிழைவிட சஸ்கிருதம் உயர்வானது என்று சொல்லும் ஜெயகாந்தனின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடு உண்டா?

சுஜாதா பதில்:
ஜெயகாந்தன் மிகச் சரியாக என்ன சொன்னார் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள். இதுதான் சமயம் என்று ஆளாளுக்கு அவரவர் கருத்தை ஜே.கே.யின் மீது திணிக்கிறார்கள். 

எந்த எழுத்தாளனும் தான் எழுதும் மொழியைவிட மற்ற மொழி உயர்ந்தது என்று சொல்லமாட்டான். மேலும், சமஸ்கிருதத்தில் 'சில நேரங்கள்...' எழுத முடியாது.
------------------------------------------------------------------------------------------------------------------



வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

தரணி போற்றும் எழுத்தாளரும் தரமற்ற அவரின் [ஒரு] சிறுகதையும்!!!

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கடந்த வார 'விகடன்'[15.08.2018] இதழில் 'சிவப்பு மச்சம்' என்னும் தலைப்பில் சிறுகதை எழுதியுள்ளார். பிரபலமானவர் என்பதற்காகவே சில எழுத்தாளர்களின் படைப்புகளைச் சில பிரபல இதழ்கள் வெளியிடுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
தொழிலில் நொடித்துப்போனதால் ஓர் ஏழை விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார்.

அரசு எந்திரம் பரபரப்பாகச் செயல்படுகிறது.

விவசாயியின் வீடு தேடி வந்த அதிகாரிகள், உரிய ஆவணங்களில் விவசாயியின் மனைவி 'ராக்கி'யிடம் கையெழுத்துப் பெற்றதோடு, ''விரைவில் உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுவிடும். அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றி கூறிச்செல்கிறார்கள்.

ராக்கியும், கொஞ்சம் நாட்கள் கழித்து ஆட்சியர் அலுவலகம் சென்று விசாரிக்கிறார். அதிகாரிகளோ, ராக்கியை அலட்சியப்படுத்தியதோடு அவர் மனம் புண்படும் வகையில் நடந்துகொள்கிறார்கள்.

மனம் நொந்த ராக்கி, ''நீங்கெல்லாம் உருப்பட மாட்டீங்க'' என்று சாபம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

இதுவரையிலான நிகழ்வுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்பம்சம் ஏதுமில்லை. மிகச் சாதாரண நடையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

கதையின் மையப்பகுதியில், கதையோடு ஒட்டாத ஒரு நிகழ்வை ஒட்டவைத்து அடுத்து என்ன நிகழுமோ என்று அறியும் ஆவலை வாசகர் மனங்களில் தூண்ட முயல்கிறார் கதாசிரியர்

சுப்பிரமணியம் ஓர் உயர் அதிகாரி. ராக்கிக்கான உதவித் தொகைக்கு 'அனுமதி' வழங்குபவர் அவர். அனுமதி வழங்காததால், விவசாயியின் மனைவி ராக்கி சாபம் கொடுத்துச் சென்ற நிலையில், அவர்[சுப்பிரமணியம்] நெற்றியில் அன்று ஒரு சிவப்பு மச்சம் தென்படுகிறது; அது தோனறியதற்கான காரணத்தை மருத்துவ ரீதியாக அறிந்திட இயலாமல் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார் அவர்; குணப்படுத்த இயலாத நோயாக அது உருமாறும் என்று அஞ்சுகிறார்.

இந்நிலையில் இன்னொரு அதிசயமும் நிகழ்கிறது.

சுப்பிரமணியத்தின் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 23 பேர்களுக்கும் அதே மாதிரியான சிவப்பு மச்சம் அவரவர் நெற்றியில் தோன்றியிருக்கிறது.

எந்த ஒருவருக்கும் மச்சம் உருவானதற்கான காரணம் புரியவில்லை.

குணப்படுத்துவதற்கு, 'மச்சத்தின் மீது சந்தணம் பூசுதல், எச்சில் தடவுதல் , பச்சிலைகளை அரைத்துப் பூசுதல் என்று அவரவர்க்குத் தெரிந்த கை மருத்துவத்தைப் பரிந்துரைக்கிறார்கள்.

என்ன செய்தும் எந்த ஒருவருக்கும், கெடுதி விளைவிக்கும் அந்த மச்சம் மறையவே இல்லையாம்.

குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில், உடம்பின் குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிடத்தக்க ஒரே மாதிரியான சிவப்பு மச்சம் தோன்றுவது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை.

சாத்தியம் இல்லாத ஒன்று சாத்தியப்பட்டது என்றால், அதைச் சாத்தியப்படுத்தியது யார்?

கடவுள் என்கிறாரா எழுத்தாளர்?

இத்தகைய மாயாஜாலங்களை நிகழ்த்தி, எத்தனை எத்தனை ஆண்டுகளாக, எத்தனை எத்தனை குற்றவாளிகளைத் தண்டித்திருக்கிறார் அவர்?

போதிய புள்ளிவிவரங்கள் தருவாரா ராமகிருஷ்ணன்?

வெளியிடுவதற்குப் பத்திரிகைகள் உள்ளன என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் கதை கட்டிவிடுவதா?

இதன் பிறகும் கதை தொடர்கிறது.....

ராக்கிக்குரிய உதவித் தொகைக்கான ஆணையைப் பிறப்பித்ததோடு, உதவித் தொகையை எடுத்துக்கொண்டு ராக்கியின் வீடு தேடிச் செல்கிறார்கள் உயர் அதிகாரி சுப்பிரமணியமும் ஏனைய அலுவலர்களும். ஆனால் அந்தோ.....

ராக்கி அவரின் வீட்டில் இல்லை. எங்கு தேடியும் அவரைக் கண்டறியவும் இயலவில்லையாம். 

குற்றம் புரிபவர் தண்டிக்கப்படுவர் என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாத ஒரு நம்பிக்கை மட்டுமே. குற்றம் புரிந்த சுப்பிரமணியத்தையும் 23 பேரையும் சிவப்பு மச்சம் தோன்றித் தண்டித்தது என்று பிரபல எழுத்தாளர் கதை சொல்லியிருப்பது.....

சிந்திக்க வைக்கிறதா, சிரிக்கத் தூண்டுகிறதா??
=======================================================================
முதல் 10 சூடான இடுகைகளில் இடம்பெற்ற இப்பதிவை, முகப்புப் பக்கத்தில் தோன்றாதவாறு தமிழ்மணம் இருட்டடிப்புச் செய்துள்ளதால், தலைப்பை மாற்றி மீண்டும் இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்மணம் தற்சார்புடன் செயல்படுவது வருந்தத்தக்கத

வியாழன், 23 ஆகஸ்ட், 2018

எஸ்.ராமகிருஷ்ணனின் சிரிப்பூட்டும் 'சிவப்பு மச்சம்' சிறுகதை!!!

பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கடந்த வார 'விகடன்'[15.08.2018] இதழில் 'சிவப்பு மச்சம்' என்னும் தலைப்பில் சிறுகதை எழுதியுள்ளார். பிரபலமானவர் என்பதற்காகவே சில எழுத்தாளர்களின் படைப்புகளைச் சில பிரபல இதழ்கள் வெளியிடுகின்றன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
தொழிலில் நொடித்துப்போனதால் ஓர் ஏழை விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார்.

அரசு எந்திரம் பரபரப்பாகச் செயல்படுகிறது.

விவசாயியின் வீடு தேடி வந்த அதிகாரிகள், உரிய ஆவணங்களில் விவசாயியின் மனைவி 'ராக்கி'யிடம் கையெழுத்துப் பெற்றதோடு, ''விரைவில் உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுவிடும். அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளுங்கள்'' என்றி கூறிச்செல்கிறார்கள்.

ராக்கியும், கொஞ்சம் நாட்கள் கழித்து ஆட்சியர் அலுவலகம் சென்று விசாரிக்கிறார். அதிகாரிகளோ, ராக்கியை அலட்சியப்படுத்தியதோடு அவர் மனம் புண்படும் வகையில் நடந்துகொள்கிறார்கள்.

மனம் நொந்த ராக்கி, ''நீங்கெல்லாம் உருப்பட மாட்டீங்க'' என்று சாபம் கொடுத்துவிட்டுச் செல்கிறார்.

இதுவரையிலான நிகழ்வுகளில் குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறப்பம்சம் ஏதுமில்லை. மிகச் சாதாரண நடையில் கதை சொல்லப்பட்டிருக்கிறது. 

கதையின் மையப்பகுதியில், கதையோடு ஒட்டாத ஒரு நிகழ்வை ஒட்டவைத்து அடுத்து என்ன நிகழுமோ என்று அறியும் ஆவலை வாசகர் மனங்களில் தூண்ட முயல்கிறார் கதாசிரியர்

சுப்பிரமணியம் ஓர் உயர் அதிகாரி. ராக்கிக்கான உதவித் தொகைக்கு 'அனுமதி' வழங்குபவர் அவர். அனுமதி வழங்காததால், விவசாயியின் மனைவி ராக்கி சாபம் கொடுத்துச் சென்ற நிலையில், அவர்[சுப்பிரமணியம்] நெற்றியில் அன்று ஒரு சிவப்பு மச்சம் தென்படுகிறது; அது தோனறியதற்கான காரணத்தை மருத்துவ ரீதியாக அறிந்திட இயலாமல் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகிறார் அவர்; குணப்படுத்த இயலாத நோயாக அது உருமாறும் என்று அஞ்சுகிறார்.

இந்நிலையில் இன்னொரு அதிசயமும் நிகழ்கிறது.

சுப்பிரமணியத்தின் அலுவலகத்தில் பணிபுரியும் மேலும் 23 பேர்களுக்கும் அதே மாதிரியான சிவப்பு மச்சம் அவரவர் நெற்றியில் தோன்றியிருக்கிறது.

எந்த ஒருவருக்கும் மச்சம் உருவானதற்கான காரணம் புரியவில்லை.

குணப்படுத்துவதற்கு, 'மச்சத்தின் மீது சந்தணம் பூசுதல், எச்சில் தடவுதல் , பச்சிலைகளை அரைத்துப் பூசுதல் என்று அவரவர்க்குத் தெரிந்த கை மருத்துவத்தைப் பரிந்துரைக்கிறார்கள்.

என்ன செய்தும் எந்த ஒருவருக்கும், கெடுதி விளைவிக்கும் அந்த மச்சம் மறையவே இல்லையாம்.

குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில், உடம்பின் குறிப்பிட்ட ஓரிடத்தில், குறிப்பிடத்தக்க ஒரே மாதிரியான சிவப்பு மச்சம் தோன்றுவது எவ்வகையிலும் சாத்தியமே இல்லை.

சாத்தியம் இல்லாத ஒன்று சாத்தியப்பட்டது என்றால், அதைச் சாத்தியப்படுத்தியது யார்?

கடவுள் என்கிறாரா எழுத்தாளர்?

இத்தகைய மாயாஜாலங்களை நிகழ்த்தி, எத்தனை எத்தனை ஆண்டுகளாக, எத்தனை எத்தனை குற்றவாளிகளைத் தண்டித்திருக்கிறார் அவர்?

போதிய புள்ளிவிவரங்கள் தருவாரா ராமகிருஷ்ணன்?

வெளியிடுவதற்குப் பத்திரிகைகள் உள்ளன என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் கதை கட்டிவிடுவதா?

இதன் பிறகும் தஒடர்கிறது கதை.....

ராக்கிக்குரிய உதவித் தொகைக்கான ஆணையைப் பிறப்பித்ததோடு, உதவித் தொகையை எடுத்துக்கொண்டு ராக்கியின் வீடு தேடிச் செல்கிறார்கள் உயர் அதிகாரி சுப்பிரமணியமும் ஏனைய அலுவலர்களும். ஆனால் அந்தோ.....

ராக்கி அவரின் வீட்டில் இல்லை. எங்கு தேடியும் அவரைக் கண்டறியவும் இயலவில்லையாம். 

குற்றம் புரிபவர் தண்டிக்கப்படுவர் என்பது அறிவியல் ரீதியாக உறுதி செய்யப்படாத ஒரு நம்பிக்கை மட்டுமே. குற்றம் புரிந்த சுப்பிரமணியத்தையும் 23 பேரையும் சிவப்பு மச்சம் தோன்றித் தண்டித்தது என்று பிரபல எழுத்தாளர் கதை சொல்லியிருப்பது.....

சிந்திக்க வைக்கிறதா, சிரிக்கத் தூண்டுகிறதா?
=======================================================================


செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

பூக்குழி மிதிக்கும் பக்தகோடிகளுக்கான பரிந்துரைகள்!!


#சென்னை வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே உள்ளது பாலி அம்மன் கோவில்.  மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடிமாதத் திருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி நேற்று முக்கிய நிகழ்ச்சியான 'தீ மிதி' விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, சுமார் 1000–க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு திரண்டனர். பின்பு, பக்தர்கள் 15 பேர் கொண்ட குழுவாக அக்கினிக் குண்டத்தில் இறங்கித் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினார்கள்.

அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த கதிர்வேல் (வயது 33) மற்றும் வில்லிவாக்கம் யுனைடெட் காலனி அன்னை தெரசா தெருவைச் சேர்ந்த மனோகரன் (52) ஆகியோர் 15–க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் சேர்ந்து அக்கினிக் குண்டத்தில் இறங்கித் தீ மிதித்தனர்.

அப்போது, மனோகரனும் கதிர்வேலும் எதிர்பாராதவிதமாக அக்கினிக் குண்டத்தில் தவறி விழுந்தனர். அங்கு திரண்டு நின்றுகொண்டிருந்த பக்தர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அங்கு ஏற்கனவே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு நெருப்புக் கனலில் சிக்கிய இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்[அம்மன் வேடிக்கை பார்த்தார்!!!!!]. அக்கினியின் பிடியில் சிக்கியதால் கதிர்வேலும், மனோகரனும் உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டுப் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக, தீயணைப்புத் துறையினர் 2 பேரையும் சிகிச்சைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பக்தர்கள் இருவருக்கும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீ மிதி விழாவின்போது பக்தர்கள் இருவர் அக்கினிக் குண்டத்தில் சிக்கிப் படுகாயம் அடைந்து இருப்பது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்# -இது 'தினத்தந்தி' யின் இன்றைய[21.08.2018] செய்தி.

அப்பாவி பக்தர்களே,

நீங்கள் உண்மையான பக்தர்; நீங்கள் கும்பிடுகிற சாமியும் சக்தி வாய்ந்தது என்றால்.....

குளுகுளு தண்ணீரில் குளிச்சிட்டு, ஈரமான ஆடைகளுடன் நெருப்புக்குழியை ஓட்டமாய் ஓடிக் கடவாதீர். பதிலாக.....

வழக்கம்போல, உலர்ந்த ஆடைகளை உடுத்து, அடிமேல் அடிவைத்து மெல்ல மிக மெல்ல நடந்துகாட்டுவீர்.

அல்லது,

பூக்குழியில் வெற்றுடம்புடன் பத்து நிமிடமாவது படுத்துப் புரளுங்கள்.

அல்லது,

அக்கினிப் பிரவேசம் செய்யுங்கள்[சீதாப்பிராட்டி செய்தது போல].

அல்லது,

கும்பங்களில் நெருப்புத் துண்டங்களை நிரப்பி, தலையில் சுமந்து, பிற பக்தகோடிகள் கண்டுகளிக்கும் வகையில் 'கரகாட்டம்' நிகழ்த்துங்கள்.

அல்லது,

உலகின் எங்காவது ஒரு மூலையில் எரிமலை வெடித்தால், கூட்டமாகச் சென்று அக்கினிக் குழம்பில் நீச்சலடித்துவிட்டு வாருங்கள். 

இவற்றில் ஏதாவது ஒன்றையோ அனைத்தையுமோ சாதித்துக் காட்டினால் மட்டுமே.....

நீங்கள் உண்மையான பக்தர். நீங்கள் கும்பிடுவது உண்மையான சாமி.

பைத்தியக்காரர்களா,

இன்னும் எத்தனை காலத்துக்கு  மனம் பதைபதைக்க, உடம்பு நடுநடுங்க நெருப்புக் குண்டத்தை  ஓடிக் கடந்து உங்களை நீங்களே முட்டாளாக்கிப் பிறரையும் முட்டாள்களாக்கிப் பெருமிதப்படுவீர்கள்?!
======================================================================
குறிப்பு:
''ஆஹா, ஒரு நாத்திகன் ஆத்திகரின் மனங்களைப் புண்படுத்திவிட்டான். அவனுக்குப் புத்தி புகட்டுவோம்'' என்று சீறி எழாதீர்! ''சாமியை வழிபடுவதற்கும் நெருப்புக்குண்டத்தில் நடப்பதற்கும் என்ன சம்பந்தம்?'' என்பது குறித்துக் கொஞ்சமே கொஞ்சமேனும்  சிந்திப்பீர்!!
======================================================================
நன்றி: தினத்தந்தி

ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2018

நான் 'இன்னொரு' ஹிரண்யன்!!

''நானே கடவுள்'' என்று                                                                                   
அவ்வப்போது
நடுத்தெருவில் நின்று
நான் நவில்வது உண்டு.

இமை விரித்துப் புருவம் நெறித்து
''நீ எப்படிக் கடவுளானாய்?''
என்று
கேட்போரிடமெல்லாம்
''நீவிர் நம்புகிற பிறிதொரு கடவுளிடம்
இதே கேள்வியைக் கேளும்.
அவர் பதில் சொன்னால்
நானும் சொல்வேன்''
என்பது என் பதிலாக இருக்கும்.

மனிதன் மனிதன்தான்;
மரணிக்கும்வரை அவன்
மனிதன்தான். ஆனால் இங்கு.....

சிலர்  சிலரைக்
'கடவுளின் அவதாரம்...
நடமாடும் கடவுள்' என்கிறார்கள்.
நீங்களும் நம்புகிறீர்கள்.
''நான் கடவுள்..... நானே கடவுள்''
என்றால்
நம்பமாட்டீர்களா என்ன?

''நீ கடவுள் என்றால்...
உன்னை நேர்ந்துகொண்டால்...
அது நிறைவேறுமா?''
என்று
கேட்கிறீர்கள்?

''ஆம்...ஆம்'' என்பதே என் பதில்.
நிறைவேறினால்
அது என்னால் நிகழ்ந்தது.
தவறினால் அது உங்களின் தலைவிதி.

நான்
பிறிதொரு கடவுளின் மறுபிரதி அல்ல;
மகனுமல்ல;
இம்மண்ணுக்கு அனுப்பப்பட்ட
தூதுவனும் அல்ல.

பரமண்டலத்தைப் படைத்து
வெட்ட வெளியிலும் வெறுமையின் அடர்
இருட்டிலும்
கால இடைவெளியின்றி
இரண்டறக் கலந்து கிடப்பவன் நான்.

அனைத்தையும் படைத்தவன் நானே.
இந்தப் பூவுலகில் நான்
அவதரித்தது
இதனை மேற்பார்வையிட மட்டுமே.

நானே கடவுள்.....
ஆம்...கடவுள் நானே.
என்னை நம்புவதால் உங்களுக்கு
எந்தவொரு இழப்பும் இல்லை.

இழப்பு.....இழப்புகள்.....
கணக்கின்றிக் கடவுளரைப் படைத்துப்
பிழைப்பு நடத்தும்
ஆன்மிக வணிகர்களுக்கு மட்டுமே.

இனி.....
''நானே கடவுள்'' என்பதால்
'அவர்கள்' பதறுவார்கள்;
''இவன் இன்னொரு ஹிரண்யன்
இன்றே சம்ஹாரம் செய் இறைவா'' என்று
வானம் பார்த்து அலறுவார்கள்.

நரசிங்கமூர்த்தி வருவார்;
வந்து என்னை வதம் செய்வார்.
பார்த்திருங்கள்; அவரை எதிர்பார்த்துக்
காத்திருங்கள்!
------------------------------------------------------------------------------------------------------------------

வியாழன், 16 ஆகஸ்ட், 2018

பாரு...பாரு...தமிழன் பாரு! அவன் சிறுமை கேளு!!

பழம்பெருமை பேசித் திரிவதில் கில்லாடிகளான தமிழர்களை நான்கு வகையினராகப் பாகுபாடு செய்கிறார் முன்னாள் துணைவேந்தரான ஒரு தமிழறிஞர். வாசித்து வருத்தம் சுமப்பீர்!

அப்பாவித் தமிழர்கள் - தண்ணீர்ப் பாம்பு வகையினர் [60%]
இவர்கள் களிமண்ணைப் போன்றவர்கள். திரைப்படம், மேடைப்பேச்சு முதலான கவர்ச்சிகள் மூலம் இவர்களை மிக எளிதாக அடிமை ஆக்க முடியும். தமக்கென்று நிலையான எந்தவொரு கொள்கையும் இல்லாதவர்கள். கடவுளையும் கர்மாவையும் முன்னிறுத்தி இவர்களை முட்டாள்களாக்கிப் பின்பற்றச் செய்வது எளிது. இவர்கள் எப்போதும் திரைப்பட / அரசியல் / மத / சாதித் தலைவர்களைச் சார்ந்தே வாழ்வார்கள்.

பாவித் தமிழர்கள் [அயோக்கியர்கள்] - நாகப் பாம்பு வகையினர் [11%]
தமிழ்ச் சமுதாயத்தில் 11 விழுக்காட்டினர் என்ற சிறுபான்மை எண்ணிக்கையினர் என்றாலும், மற்றவர்களை அழித்து வாழும் கொடிய குணமுடையவர்கள் இவர்கள்; பழி பாவங்களுக்கு அஞ்சாதவர்கள்; திருவள்ளுவர், ‘கயமை’ அதிகாரத்தில் வடித்துக் காட்டும் அனைத்துத் தீய குணங்களும் உடையவர்கள்; இவர்கள் கையிலேயே செல்வமும் செல்வாக்கும் அதிகாரமும் இருக்குமாறு எச்சரிக்கையுடன் செயல்படுபவர்கள்.

இரண்டும் கெட்டான் தமிழர்கள் - தவளை வகையினர் [20%].
தவளை, நீரிலும் நிலத்திலும் வாழ்வது போல இவர்கள் சூழ்நிலைக்கேற்ப நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் வாழத் தெரிந்தவர்கள்; நிலையான கொள்கையினர் அல்லர்; அங்கும் இங்குமாகத் தாவிக் கொண்டிருப்பவர்கள்; நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்லர்.

நல்ல தமிழர்கள் [யோக்கியர்கள்] - கோயில் யானை வகையினர் [09%].
தமிழரிடையே மிகச் சிறுபான்மையினராக இவர்கள் உள்ளனர்; தன்னிடம் வலிமை வாய்ந்த இரு தந்தங்கள், ஆற்றல் மிக்க நீண்ட துதிக்கை, மிகப் பெரிய நான்கு கால்கள், பருத்த உடல், கூரிய இரு கண்கள் இருந்தும், தன்னைவிடப் பன்மடங்கு சிறிய பாகனுக்கும், அவன் கையில் உள்ள சிறு குச்சிக்கும் [அங்குசம்] கோயில் யானை அடங்கிக் கிடக்கிறது; தன்னுடைய பேராற்றலை அறியாமல் இருக்கிறது. அதைப் போலவே, இந்த நல்லவர்களும் தங்களிடமுள்ள பேராற்றலை அறியாமல் இருக்கிறவர்கள்; பதவிப் பாகனுக்கும் அதிகார அங்குசத்துக்கும் அடங்கிக் கிடப்பவர்கள்.

தாம் எழுதிய, ‘தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?’ என்னும் நூலில், தமிழனை இவ்வாறு வகைப்படுத்திய அறிஞர் க.ப.அறவாணன்[முன்னாள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்]  அவர்கள், தமிழரிடையே ‘மிக நல்லவர்கள்’ என்னும் பிரிவு சுத்தமாக இல்லை என்கிறார்.
சிறுபான்மையினராக நலிந்திருக்கும் நல்லவர்கள், தம்மைப் போலவே சிறுபான்மையினராக உள்ள அயோக்கியர்களுக்கு அடங்கிக் கிடப்பது வெட்கக் கேடானது என்று வருந்துகிறார் முன்னாள் துணைவேந்தர்.

தமிழன், தன் அடிமைக் குணத்திலிருந்து விடுபடுவதற்கான வழி வகைகளையும் ஆராய்கிறார். அவர் ஆரய்ந்து சொல்லும் வழிகளில் சில..........

சினிமா, மது, சாதி, மதம், கட்சி, கிரிக்கெட் போன்ற நேரத்தையும் உத்வேகத்தையும் வீணடிக்கும் விளையாட்டு, தொலைக்காட்சி, நுகர்வுப் பொருள்கள் போன்றவற்றின் மீது கொண்டுள்ள மயக்கத்திலிருந்து விடுபடுதல் வேண்டும்.

ஓர் இனம் வளர்வதற்கும், உயர்வதற்கும், தளர்வதற்கும், தாழ்வதற்கும் முதன்மைக் காரணம், அவ்வினத்துக்கு அவ்வப்போது அமையும் தலைமை ஆகும்.

முகமது நபி தலையெடுப்பதற்கு முன்பு அரேபியரிடையே ஓயாத போர்கள் நடை பெற்றன. அவர்களை நபி மனம் மாற்றினார்; ஒன்றுபடுத்தினார். உலகத்தின் சரிபாதி நபி நாயகத்தின் பக்கம் சேர்ந்தது.

சிறந்த போர் வீரர்களாக இருந்தும் தமக்குள்ளே சண்டையிட்டு மடிந்ததால், மங்கோலியரால் அரசு எதையும் நிறுவிட இயவில்லை. செங்கிஸ்கான் தலையெடுத்து, உலகின் பல்வேறு நாடுகள் மீது படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டினார். அவர் வழி வந்த தைமூர் மன்னனின் கொள்ளுப் பேரனே பாபர்.

அலெக்ஸாண்டரால் கிரேக்க இனம் பெருமை பெற்றது. அசோகனால் மௌரிய இனமும், அக்பரால் இசுலாமிய இனமும், மாசேதுங்கால் சீன இனமும், ஹோ-சி-மின் ஆல் வியட்நாமிய இனமும் பெருமை பெற்றன.


சிங்கப்பூர், சீனா முதலான நாடுகளின் வேகமான வளர்ச்சிக்கு அந்நாட்டுத் தலைவர்களும் அந்நாட்டு அரசியல் சாசனங்களுமே காரணம் ஆகும்.

நம் மாநிலத்தில் வாழும் தமிழினம் முன்னேற வேண்டுமானால், இங்கே மிகச் சிறந்த தன்னலம் கருதாத தலைமை தேவை.

அரசியல் தலைவர்களையும் தலைவிகளையும் மிதமிஞ்சிய வழிபாட்டு வார்த்தைகளால் அர்ச்சித்தும் பூசித்தும் வெட்டுருவங்களை [cut out] நிறுத்தியும் சுவரொட்டிகள் ஒட்டியும் பக்தியையும் பாவத்தையும் வளர்ப்பதை இங்கு உடனடியாக நிறுத்த வேண்டும்.

சுருங்கச் சொன்னால்...........

சிறந்ததொரு  தலைமையைத் தேர்ந்தெடுப்பதில் தமிழனின் அறிவுக்கூர்மை வெளிப்பட வேண்டும். அப்போதுதான்,  தமிழன் உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்பான்.
*************************************************************************************************
தமிழறிஞர், டாக்டர் க. ப. அறவாணன் அவர்களுக்கு நன்றி.

புதன், 15 ஆகஸ்ட், 2018

கர்னாடக முதல்வர்...23...82...34...!!!

மதிப்பிற்குரிய, கர்னாடக மாநில முதல்வர் குமாரசாமி அவர்களுக்கு, தங்களின் அண்டை மாநிலத்  தமிழ்ச் சகோதரன் ஒருவன் வரையும் மனம் திறந்த மடல்.

முதல்வர் அவர்களே,
தாங்கள், 23.05.2018இல் கர்னாடக மாநில முதல்வராகப் பதவி ஏற்றது முதல் இன்றுவரையிலான 82[84?] நாட்களில், 34 முறை[பத்திரிகையின் பத்தித் தலைப்பில் 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது]உடல் நலக்குறைவு காரணமாகப் பல்வேறு கோயில்களுக்குச் சென்று இறை வழிபாடு நிகழ்த்தியதாக இன்றைய தமிழ் நாளிதழில்[தினகரன், 15.08.2018] செய்தி வெளியாகியுள்ளது.

82 நாட்களில் 34 தடவை என்பது சற்றே மிகையாகத் தோன்றினாலும், கடவுள் வழிபாடு என்பது அவரவர் நம்பிக்கையின் பாற்பட்டது என்பதால் இது குறித்து விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை.

ஆயினும், விமர்சனம் என்றில்லாமல், பல்வேறு கடமைகளைச் சுமந்து வாழும் ஒரு மாநில முதல்வர் என்ற வகையில், தங்களின் நலம் கருதிச் சில ஆலோசனைகளைத் தங்கள் முன் வைத்திட விரும்புகிறேன்.

கடவுள் வழிபாடு, வழிபடுவோரின் குறையைத் தீர்க்கும் என்பது தாங்கள் உட்பட இறைப்பற்றுள்ள அனைத்து ஆன்மிக நேயர்களின் நம்பிக்கையாகும்.

தாங்கள் 34 முறை வழிபாடு செய்திருக்கிறீர்கள். முதல் வழிபாட்டிலேயே தங்களின் உடம்பு முழுமையாகக் குணம் பெற்றிருத்தல் வேண்டும். அது நடைபெறவில்லை. 33ஆவது வழிபாட்டிலேனும் அது நிகழ்ந்திருத்தல் விரும்பத்தக்கது. அது நிகழாததால்[காரணம் குறித்த ஆய்வு வேண்டாம்] 34 ஆவது முறையாக ஒரு கோயிலுக்குச் சென்று வழிபாடு நிகழ்த்தியிருக்கிறீர்கள்.

தங்களின் இந்த நடவடிக்கையும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்றே கொள்ளலாம். ஆனாலும், இங்கு நினைவுகூரத்தக்கது ஒன்று உண்டு. அது.....

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் தங்களுக்கு 'நேரம்' மிக முக்கியம். 34 முறை கோயில் கோயிலாகச் சென்றதால், உங்களின் பணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவு விரையமாகிவிட்டது என்பது மறுக்க இயலாத உண்மை.

இனியும், இவ்வகையிலான   நேர விரயத்தைத் தவிர்க்க நான் சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன்.

*தங்களின் குடியிருப்பு வளாகத்திலேயே ஒரு சிறு கோயிலைக் கட்டி, தாங்கள் விரும்புகிற கடவுள்களையெல்லாம் 'பிரதிஷ்டை'[மந்திரம் ஓதி, கடவுள்களைச் சிலைகளில் இரண்டறக் கலக்கச் செய்தல்] செய்து, தினம் தினம் சிறிது நேரம் வழிபாடு நிகழ்த்தலாம். 

அதைக்காட்டிலும்.....

*உங்களின் நல்ல மனதையே கோயிலாக்கிக்கொண்டு, பணிகளுக்கிடையே ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் இறைத்தியானத்தை மேற்கொள்ளலாம்.

*கோயில் கோயிலாக அலைவதைத் தவிர்ப்பதால் மிச்சப்படும் நேரத்தை மக்கள் பணி ஆற்றுவதற்குப் பயன்படுத்தலாம்.

*34 முறை கோயில்களுக்குச் சென்றீர்கள். அதற்குப் பதிலாக, 34 முறை குடிசைகளில் வாடும் பாமரர்களையும்,  அனாதையர் விடுதிகளிலும் முதியோர் இல்லங்களிலும் வதியும் பாவப்பட்டவர்களைம், மருத்துவமனைகளில் துயருறும் நோயாளிகளையும் சந்தித்து ஆறுதல் சொல்லி ஆற்றுப்படுத்தியிருந்தால் அவர்கள் மனதாரத் தங்களை வாழ்த்தியிருப்பார்கள். ஊடகங்கள் உங்களை 'ஓஹோ' என்று புகழ்ந்து தள்ளியிருக்கும்.

வாழ்த்துக்களும் புகழ்மொழிகளும் தங்களின் உடல் நோவுகளைக் கணிசமாகக் குறைத்திருக்கும் என்பதில் கொஞ்சமும் ஐயத்திற்கு இடமில்லை.

மாண்புமிகு கர்னாடக முதல்வர் அவர்களே, 

இம்மடல், தங்களின் உடல் நலம் மேம்படவும், மேற்கொள்ளும் பணிகள் சிறந்திடவும் நான் மனப்பூர்வமாக வரைந்த ஒன்று என்பதை நம்புங்கள். 

நன்றி.
=======================================================================

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

தமிழ் நாளிதழ்களின் பின்னணியில் நாசகாரக் கும்பல்கள்!!!

''மகாவிஷ்ணு தன் திருமணச் செலவுக்காகக் குபேரனிடன் 'கடன்' வாங்கியதான கதையையெல்லாம் வெளியிடும் பத்திரிகையாளர்களே, உங்களுக்கு மனசாட்சி என்பதே இல்லையா?!''  
வாரம் தவறாமல் ஆன்மிகச் செய்திகளுக்காக 'இணைப்பு' வெளியிட்டுப் பகுத்தறிவைப் பாழ்படுத்துவதில் தமிழ் நாளிதழ்களுக்கிடையே[சில வார இதழ்களும்தான்] கடும் போட்டி நிலவுகிறது. இதன் மூலம் முதலாளிகளின் கல்லா நிரம்புகிறது; மக்களின் மண்டை மூளை காலியாகிறது.

இவர்கள் வெளியிடும் மூடநம்பிக்கைக் கதைகளை மேற்கோள் காட்டிக் கண்டனம் தெரிவித்துக் கணிசமான எண்ணிக்கையில் பதிவுகள் எழுதியிருக்கிறேன். இன்று புதிதாக ஒன்று.

#'பிருகு' என்னும் பெயரில் ஒரு முனிவர். படைப்புத் தொழிலில் பிரம்மதேவனுக்கு உதவி புரிபவராம். இவருக்குப் பாதத்தில் 'ஞானக்கண்' இருக்கிறதாம். இவரைப் பற்றி நெடியதொரு சுவாரசியக் கதை உண்டு. அதில் தேவையானதை மட்டும் கீழே விவரிக்கிறேன்.

தன் தவ வலிமையால் பிறரைத் துன்புறுத்திச் சுகம் காணும் அற்ப குணம் படைத்த இந்த முனிபுங்கவர், பிரம்மன், சிவன் போன்ற கடவுள்களிடமெல்லாம் சேட்டை செய்துவிட்டு, ஆதிசேடன் மீது சயனம் கொண்டிருக்கிற மகாவிஷ்ணுவைப் பார்க்கப் போனாராம். அவர் தன்னை மதிக்காமல் துயில் கொண்டிருந்தது பொறாமல், அவரை எட்டி உதைத்தாராம் இந்தத் தவயோகி.

மகாவிஷ்ணுவுக்குக் கோபமே வரவில்லையாம். ஒரு குழந்தை தன்னை எட்டி உதைத்ததாகக் கற்பனை செய்து மகிழ்ந்தாராம். விஷ்ணுவின் இந்தச் செயலால் மகாலட்சுமி கோபமடைந்து, அவரைப் பிரிந்து பூலோகம் வந்து 'கோல்காப்பூர்' என்னுமிடத்தில் தங்கியருளினாராம்.

மகாவிஷ்ணுவும் தன் துணையைப் பின்தொடர்ந்து இந்தப் பூலோகத்துக்கு வந்து சேர்ந்தார்......#

நான் விமர்சிக்கத் தேர்வு செய்தது மேற்கண்ட கதையல்ல. பின்வரும் கதைப்பகுதியையும் படியுங்கள்.

#பூலோகம் வந்த மகாவிஷ்ணு மகாலட்சுமி தங்கியிருந்த கோல்காப்பூருக்குச் செல்லவில்லை. முன்பொருமுறை, 'வேதவல்லி' என்னும் பெண்மணியைக் கலியுகத்தில் மணம் புரிவதாகத் தான் உறுதி மொழிந்தது அவரின் நினைவுக்கு வந்தது.

திருமண நிகழ்வுக்கான ஏற்பாட்டையும் செய்யலானார். ஆனால், அந்தோ.....

மகாவிஷ்ணுவிடம் கையில் 'சிங்கிள் பைசா'கூட இல்லை. நன்கு யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார் அவர். அம்முடிவின்படி.....

செல்வத்துக்கு அதிபதியான குபேரனைத் தேடிப்போய், கலியுக முடிவில் வட்டி சேர்த்துக் கடனை அடைத்துவிடுவதாக உறுதியளித்து, ஒரு கோடியே 14 லட்சம்[அதென்ன கணக்கு?] கடன் பெற்றுத் தன் திருமணத்தை நடத்தினாராம்.

இதையறிந்து பெரிதும் அகமகிழ்ந்த[!!!] மகாலட்சுமி  கோல்காப்பூரிலிருந்து இடம்பெயர்ந்து மகாவிஷ்ணுவைத் தேடி வந்தார். அம்மையின் வரவு மகாவிஷ்ணுவை அளப்பரிய மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவரைத் தம் மார்பில் தாங்கினார்#

இம்மாதிரிக் கதைகளைக் கணக்கு வழக்கில்லாமல் பக்திச் சொற்பொழிவாளர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம்; வாசித்தும் இருக்கிறோம்.

இந்தக் கதையைப் பொருத்தவரை என் மனதை வெகுவாக உறுத்தியது.....

மகாவிஷ்ணு குபேரனிடம் ஒருகோடியே 14 லட்சம் வட்டிக்குக் கடன் பெற்றதுதான்[இது குறித்த, தினமலர் கொசுறுச் செய்தி பதிவின் இறுதியில்].

மகாவிஷ்ணுவையே வட்டிக்குக் கடன் வாங்க வைக்கும் ஒரு கதையைக் கற்பனை செய்த அந்த அதிபுத்திசாலி பக்திமான் யாரென்று நமக்குத் தெரியாது. அவரைச் சாடும் எண்ணமும் எனக்கு இல்லை. ஏதோ ஒரு காலக்கட்டத்தில், ஏதோ ஒரு சூழலில், எவரையெல்லாமோ திருப்திபடுத்துவதற்காக இதை அவர் கற்பித்திருக்கலாம்.

அறிவியல் வெகுவாக வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில், விற்பனையில் முன்னணி வகிக்கிற ஒரு நாளிதழ்[மற்ற இதழ்களும் இம்மாதிரியான கண்டிக்கத்தக்க செயலில் ஈடுபடுவதால் பெயர் குறிப்பிட விரும்பவில்லை] பிரசுரித்திருப்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது; பேராச்சரியத்தில் திகைக்க வைக்கிறது.

இம்மாதிரியான, மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்யும் இப்பத்திரிகையின் பொறுப்பாளரையோ இவரனைய பிற பத்திரிகையாளரையோ சாடுவதில் கிஞ்சித்தும் விருப்பம் இல்லை. காரணம், அதனால் பயனேதும் விளையாது என்பதுதான்.

இவர்களைக் கண்டிப்பதில் விருப்பம் இல்லையாயினும், ஆழ்ந்த வருத்தத்துடன் சில கேள்விகளை  மட்டும் இவர்கள் முன் வைக்கிறேன்.

''இம்மாதிரிக் கதைகளை நம் மக்கள் விரும்பி வாசிக்கிறார்கள் என்பதை எவ்வாறு அனுமானித்தீர்கள்? மக்கள் விரும்பினாலும் இவை அவர்களின் சிந்திக்கும் அறிவை அழிக்கும்; மூடநம்பிக்கைகளை வளர்க்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? 

தெரிந்தும் இம்மாதிரி அடாத செயல்களைத் தொடர்ந்து செய்கிறீர்கள் என்றால்.....

'உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்ற ஒன்று எள்முனை அளவுகூட இல்லையா?''
------------------------------------------------------------------------------------------------------------------
'தினமலர்'[டிசம்பர், 2014] நாளிதழ்ச் செய்தி[நகல்]:
நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் கோவில்களில் ஒன்றான திருப்பதிக்கு, ஆண்டு தோறும் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. மேலும், ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள், பணம், நகை, விலை உயர்ந்த பொருட்கள் போன்றவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்து கின்றனர். இந்த உண்டியல் காணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக அதிகரித்து வருகிறது.இதுதவிர, பக்தர்கள் செலுத்தும் முடி காணிக்கை, தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கும் விடுதிகள் மூலமும் தேவஸ்தானத்திற்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. எனினும், இந்த வருவாய் அனைத்தும், ஏழுமலையான் தன் திருமணத்தின் போது, குபேரனிடம் பெற்ற கடனுக்கான வட்டியாக செலுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக, பக்தர்களால் நம்பப்படுகிறது.
இதற்கிடையே, கோவிலுக்கு கிடைக்கும் வருவாய் அனைத்தையும், கடனுக்கான வட்டியாக செலுத்துவதாகக் கூறி, தேவஸ்தானம் போர்டு பக்தர்களை ஏமாற்றுவதாக, பெங்களூருவை சேர்ந்த டி.நரசிம்மமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.ஆந்திர மாநில தகவல் ஆணையத்திடம், அவர் அளித்துள்ள ஆர்.டி.ஐ., விண்ணப்பத்தில், 'ஏழுமலையான் பெற்ற கடன் தொகை எவ்வளவு? அதற்கான வட்டியாக இதுவரை எவ்வளவு தொகை செலுத்தப்பட்டுள்ளது? இந்தக் கடன் எப்போது முடியும்?' என, கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த விண்ணப்பத்தை, ஆந்திர மாநில தகவல் ஆணையம், திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. நரசிம்ம மூர்த்தியின் இந்த கேள்விகளால் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
எப்போது முடியும்:






ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

கலைஞர் மறைவும் காலம் கடந்த விருதும்!!

#'தன்னிகரில்லாத் தலைவர் கருணாநிதி..... எழுத்தாற்றலும் சொல்லாற்றலும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற ஒரே மக்கள் தலைவர்; 'குறளோவியம்', 'தொல்காப்பியப் பூங்கா', 'சங்கத் தமிழ்', 'ரோமாபுரிப் பாண்டியன்', 'பொன்னர் சங்கர்' போன்ற அவரின் படைப்புகள் சாகாவரம்  பெற்றவை.

5 முறை தமிழக முதல்வராக இருந்து அளப்பரிய சாதனைகள் நிகழ்த்தியவர்; கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் தமிழகச் சட்டப்பேரவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை நிறைவேற்றிய வரலாறு கருணாநிதிக்கு மட்டுமே உண்டு.

திராவிட இயக்கத்தின் ஆணிவேரான சமூக நீதி தழைப்பதற்காகப் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி, இட ஒதுக்கீட்டு உரிமையை நிலைநாட்டியவர்.

பெண்களுக்குச் சொத்துரிமை, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என எண்ணற்ற சமூக நலத்திட்டங்களைச் செயபல்படுத்தித் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றியவர். மாநில எல்லைகளைக் கடந்து நாட்டு மக்கள் அனைவரது பேரன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய தலைவரான கருணாநிதிக்கு நடுவணரசு நாட்டின் உயரிய 'பாரத ரத்னா' விருதை வழங்கிச் சிறப்பித்தல் வேண்டும்.#

மேற்கண்டவகையில் பாராட்டுக்குரிய ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ம.தி.மு.க. தலைவர் 'வைகோ' அவர்கள்[மேலும் சில தலைவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள்]. 

விருது வழங்குவது குறித்துப் பரிசீலிப்பதற்கென்று குழு அமைக்கப்பட்டிருப்பதாகப் 'பாசக' தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் அவர்களும் அறிவித்திருக்கிறார்.

வைகோ குறிப்பிட்டிருப்பது போல, 'பாரத ரத்னா' விருது பெறுவதற்குரிய முழுத் தகுதியும் பெற்றவர் கலைஞர் கருணாநிதி அவர்கள்.

இந்த விருது, ராஜாஜி, சி,வி,ராமன், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அவர்கள் உயிர்வாழ்ந்த போதே வழங்கப்பட்டிருக்கிறது. இன்றளவும் வாழ்ந்துகொண்டிருக்கும் அடல் பிகாரி வாஜ்பேய் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

'மதன்மோகன் மாளவியா'வுக்கு, அவரின் மறைவுக்குப் பின்னர் வழங்கப்பட்டது.

இம்மாதிரி விருதுகள் வழங்கப்படுவதன் முக்கிய நோக்கம், விருது பெறுபவர்களின் சேவையைப் பாராட்டுவதுதான்; நாடு அவர்களுக்கான தன் நன்றிக்கடனை வெளிப்படுத்துவதற்காக என்றும் சொல்லலாம். இதன் மூலம் விருது பெறுபவர் தொடர்ந்து சேவை புரிவதற்கான கூடுதல் ஊக்கத்தைப் பெறுகிறார்[சிலருக்கு இவை தேவையற்றனவாகவும் இருத்தல்கூடும்].

எனவே, சேவை புரிபவர் உயிர் வாழும்போதே விருது வழங்குவது மிக்க பயன் தருவதாக அமையும்.

கலைஞர், தம் மறைவுக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே 'பாரத ரத்னா' விருதைப் பெறுவதற்கான முழுத் தகுதியும் பெற்றவராக இருந்தார். இதை நடுவண் ஆட்சியாளர்கள் உட்பட அனைத்துத் தரப்பினரும் அறிவார்கள்.

கலைஞர் காலமாவதற்கு முன்பே இவ்விருது வழங்கப்பட்டிருந்தால் அது போற்றுதலுக்குரியதாக அமைந்திருக்கும். இப்போதைய நடவடிக்கை காலம் கடந்த ஒன்று[விருது பெறுவதற்கான தகுதி பெற்ற ஒருவர் எதிர்பாராத வகையில் இறந்துபடுவாரேயானால் இறப்புக்குப் பின்னர் விருது வழங்குவதில் தவறில்லை].

பாரத ரத்னா பதக்கத்தில், அரச மர இலையில் சூரியனின் உருவமும் 'பாரத ரத்னா' என்னும் சொல்லும் இடம்பெற்றுள்ளன.  அச்சொல் இந்தியில் எழுதப்பட்டுள்ளது. பதக்கத்தின் மறு பக்கத்திலும் அதுவே இடம்பெற்றுள்ளது.

விருது பெறுபவரின் தாய்மொழியில் அது எழுதப்படுதல் வேண்டும். பத்ம பூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகளின் பெயர்களும் விருது பெறுபவரின் தாய்மொழியிலேயே அமைவது மிக அவசியம்[தேசிய கீதத்தைக்கூட அவரவர் தாய்மொழியில் மொழியாக்கம் செய்து பாடுவதற்கு அனுமதித்தல் வேண்டும்]. இந்தியா ஒரு தேசம் என்பதற்காக மற்ற மொழிகளைப் புறக்கணித்து இந்தியை மட்டுமே முதன்மைப்படுத்தும் வழக்கத்தை நடுவணரசு கைவிடுதல் நாட்டு நலனுக்கு நல்லது.

மறைந்த கலைஞருக்கு[பெறுவோரிடம்]ப் 'பாரத ரத்னா' என்னும் இந்திச் சொல் தாங்கிய பதக்கம் வழங்கப்படுமேயானால், கலைஞர்[ஆவி வடிவில் அலைவது சாத்தியம் என்றால்] மட்டுமல்ல, அந்நிகழ்வை ஊடகங்கள் வாயிலாகக் காணுகிற அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் மிக வருந்தும் என்பதை நடுவண் ஆட்சியாளர்கள் உணர்தல் வேண்டும்.
=======================================================================







சனி, 11 ஆகஸ்ட், 2018

இறந்தவர் வீட்டில் இசைத்தட்டு நடனம்!!

ஒருவர் இறந்துவிட்டால், அவர் மிகவும் விரும்பிப் பயன்படுத்திய பொருள்களையும் அவரோடு சேர்த்து அடக்கம் செய்வது இன்றளவும் வழக்கத்தில் உள்ள ஒன்று. கைத்தடி, கண்ணாடி, மதுபாட்டில், சிகரெட் பாக்கெட் என்றிப்படிப் பட்டியல் நீளும்.

இவையெல்லாம் மூடநம்பிக்கையின் பாற்பட்டவை எனினும், இவற்றால் விளையும் தீங்குகள் மிகவும் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. ஆனால், 'தைவான்' நாட்டின் கிராம மக்களிடமுள்ள சில மூடநம்பிக்கைகள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன.

வயதான ஆடவர் ஒருவர் இறந்துவிட்டால்.....

சம்பவம் நிகழ்ந்த வீட்டின் முன்னால் ஒரு வேன் நிறுத்தப்படும். அதன் மீது மேடை அமைக்கப்பட்டு, வண்ண விளக்குகளால் அது அலங்கரிக்கப்படும். மேடையில் அழகான இளம் பெண்கள் தோன்றி, பாட்டுப்பாடி நடனம் ஆடுவார்கள்.
நேரம் செல்லச் செல்ல இசைக்கருவிகளின் முழக்கம் அதிகரிக்கும். பெண்கள், இசைக்கப்படும் பாடலுக்கேற்பக் குழைந்து குலுங்கி ஆடிக்கொண்டே தாங்கள் உடுத்திருக்கும் ஆடைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி வீசுவார்கள். விடியும்வரை இந்த ஆபாசக்கூத்து தொடர்ந்து நடக்கும்.

இது நம் கிராமப்புறக் கோயில் விழாக்களில் அரங்கேறும் இசைத்தட்டு நடனம் போன்றதுதான்.

இம்மாதிரித் 'துகிலுரி' நடனங்களுக்கு தைவான் அரசு தடை விதித்திருக்கிறதாம். இருந்தும் நடைமுறையில் இவற்றைத் தடுத்து நிறுத்துவது சாத்தியப்படவில்லையாம்.

''ஆடவர்களில் பெரும்பாலோர் இம்மாதிரி ஆட்டம்பாட்டங்களைக் கண்டுகளிப்பதில் ஆர்வம் உடையவர்களாகவே இருக்கிறார்கள். இறந்த பிறகு அவர்களின் ஆன்மாவை இந்நடனங்கள் திருப்திபடுத்துகின்றன'' என்பது இந்த நடன நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வோரின் வாதம் என்கிறார்கள்.

ஆன்மாவின் பெயரால் நடத்தப்படும் கூத்துகளில் இதுவும் ஒன்று. தைவான் மக்கள் நம்மைப்போலவே மகா புத்திசாலிகள்!
------------------------------------------------------------------------------------------------------------------
பழைய வார இதழ் ஒன்றில் வாசித்தறிந்த தகவல் இது. 


வியாழன், 9 ஆகஸ்ட், 2018

இதுவும் பொதுவுடைமைதான்!!!

எச்சரிக்கை.....! சரக்கு ரொம்பப் பழசு; மருட்டும் 'மரண பயம்' பற்றியது. மறுவாசிப்பு  உங்கள் உள்மன விருப்பத்தைப் பொருத்தது.
றறிவு வாய்த்ததால் மனிதனுக்கு நேர்ந்த தீய விளைவுகளுள் தலையாயது மரண பயம். இது இவனின் தனி உடைமை!

உயிருக்கு ஆபத்து நேரும் சமயங்களில் மட்டுமே பிற உயிர்கள் மரணத்தை உணர்ந்து அஞ்சுகின்றன. மற்ற நேரங்களில் அது பற்றிய சிந்தனை அவற்றிற்கு இல்லை.

மரணம் பற்றிய இடையறாத சிந்தனையால் ஒரு முறை சாவதற்குப் பதிலாகப் பல முறை செத்துச் செத்துப் பிழைப்பவன் மனிதன் மட்டுமே!

மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள்.

மிகக் குறைந்த அளவில் சிந்திக்கும் அறிவு பெற்ற சாமானியர் முதல் மிகப் பெரிய ஞானிகள் என்று சொல்லப் படுகிறவர்கள் வரை மரணத்தை எண்ணி அஞ்சாதவர் எவரும் இலர்.

“கடவுளைச் சரணடைந்தால்...அவன் கருணைக்கு ஆளானால் ‘மரணமில்லாப் பெரு வாழ்வு’ வாய்க்கும் என்று சொல்லப் படுவதெல்லாம் நிரூபணம் ஆகாத அனுமானங்கள்; சாத்தியப் படாத வெறும் நம்பிக்கைகளே.

அப்படி வாழ்ந்தவர்கள்... வாழ்பவர்கள் எத்தனை பேர்?

எத்தனை நூறு பேர்?

எத்தனை ஆயிரம் பேர்?

லட்சக் கணக்கிலா? கோடிக் கணக்கிலா?

எண்ணிக்கை கடந்தவர்களா?

அவர்களின் உறைவிடம்...வாழ்விடம் எங்கே?

நீண்ட நெடுங்காலமாக.....யுகம் யுகமாக.....காலம் கடந்து கடவுளைப்[?] போலவே அவர்களும் ‘இருந்து’ கொண்டிருக்கிறார்களா?

இவற்றையெல்லாம் அறிந்து சொன்னவர்.....சொன்னவர்கள் யார்?

எவரும் இல்லை...இல்லை...இல்லை...இல்லவே இல்லை.

பகைமை, வறுமை, நோய்மை...என்று எதை எதையோ நினைந்து அஞ்சுவது மனித இயல்பு.

எனினும், எந்த வகையான அச்சத்திலிருந்தும் அவனால் விடுபட முடியும்... மன வலிமையால்...இடைவிடா முயற்சியால்.

ஆனால், மரண பயத்திலிருந்து விடுபடுவது மட்டும் அவனுக்குச் சாத்தியமே இலலாத ஒன்று. இந்தச் சாவைப் பற்றிய அச்சம்தான் மனிதன் கடவுளை நம்புவதற்கான தலையாய காரணம்.

கடவுளை நம்பியதால் அந்த அச்சத்திலிருந்து அவன் விடுபட்டுவிட்டானா?

இல்லையே!

கடவுளை நம்புகிற...பிறரையும் நம்பும்படி வற்புறுத்துகிற 'அவதாரங்கள்’ இந்தச் சாவைப் பற்றிய அச்சத்திற்கு ஆளாவதில்லையா?

“ஆம்” என்றால், எள்ளளவும் மரண பயத்திற்கு ஆளாகாமல், எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்தவாறே மரணத்தைத் தழுவியவர்கள் எத்தனை பேர்?

“அவர் அருட்பெரும் ஜோதியில் கலந்தார்!”, ''இவர் செத்துப் பிழைத்தார்!”,  “இவர் பூத உடலோடு சொர்க்கத்தில் புகுந்தார்!” என்பன போன்ற கட்டுக் கதைகள் வேண்டாம்.

'உண்மை அறியும்’ நடு நிலை நெஞ்சம் நம் அனைவருக்கும் தேவை.

கடவுளின் பெருமைகளை...அவதாரங்களின் மகிமைகளை வாய் கிழியப் பேசிக்கொண்டிருப்பது வெட்டி வேலை.

நம்மை நிரந்தரமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ‘மரணம்’ பற்றி ஆராய்ந்து “உண்மை’களைக் கண்டறிந்து, மரண பயத்தைப் போக்க...அல்லது...குறைக்க முயல்வது அறிவுடைமை...இன்றியமையாத் தேவையும்கூட.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

பஸ்லுதீன் முஸ்லீம் அல்ல! ஆக்னஸ் கிறிஸ்தவர் அல்ல!! இவர்கள் மனிதர்கள் மட்டுமே!!!

கடவுளின் தேசம்[கேரளா] புனலூரில் ஒரு வீட்டின் பெயர் 'காஸ்ட்லெஸ்'. அந்த வீட்டில் வசிக்கும் 'பஸ்லுதீன் - ஆக்னஸ்' தம்பதியர், அவர்களின் வாரிசுகள் என்று அனைவருமே எந்தவொரு சாதியையும் மதத்தையும் சாராதவர்கள்.

பஸ்லுதீனும் ஆக்னஸ் கேப்ரியேலும் காதலித்து மணம் புரிந்தவர்கள். இவர்களுக்கு, இரண்டு ஆண்கள் ஒரு பெண் என மூன்று பிள்ளைகள். தான் வாழும் வீட்டிற்கு மட்டுமல்ல, தன்னுடைய மூத்த மகனுக்கும் 'காஸ்ட்லெஸ்' என்றே பெயரிட்டார் பஸ்லுதீன். 

காஸ்ட்லெஸ்ஸின் மனைவி சபிதா. இவர்களும் மதங்களைப் புறக்கணித்து மணம் புரிந்துகொண்டவர்களே.
குடும்பத்துடன் 'காஸ்ட்லெஸ்'
இளைய மகன் 'காஸ்ட்லெஸ் ஜூனியர்'. இவரின் மனைவி ராஜலட்சுமி. இவர்களுடையதும் மதம் சாராத திருமணம்தான்.
'காஸ்ட்லெஸ் ஜூனியர்' குடும்பம்
தன் மகள் 'ஷைன் காஸ்ட்லெஸ்'ஸுக்கும் இதே வழியில்தான் மணம் செய்துவைத்தார் பஸ்லுதீன். 

இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது குறித்து.....

''நான் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தவன். அந்த மார்க்கத்தின் முறைப்படிதான் வளர்க்கப்பட்டேன். நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ளவன் நான். ஒரு கட்டத்தில்..... மதத்தை முன்னிறுத்திப் போதிக்கப்படுகையில், பேசுவது ஒன்றாகவும் செய்வது வேறாகவும் இருப்பதாகத் தோன்றியது. இதை அனைத்து மதங்களிலும் உணர்ந்தேன். மெல்ல மெல்ல மதங்களை விலக்கி மானிடச் சிந்தனையை வளர்த்துக்கொண்டேன்'' என்கிறார் பஸ்லுதீன்.

இஸ்லாமியக் குடும்பத்தைச் சார்ந்த பஸ்லுதீனும் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்த ஆக்னஸ்ஸும் ஒன்பது ஆண்டுகளாகக் காதலித்தனர். இரு தரப்பு வீடுகளிலும் கடும் எதிர்ப்பு. மிகக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்தார்கள்.

பஸ்லுதீன் தொடர்ந்து சொல்கிறார்:
''எங்க மூனு பிள்ளைகளின் திருமணங்களைக்கூட மதச் சடங்குகள் இல்லாமல்தான் நடத்தினோம். சார்பதிவாளர்களே மண்டபத்துக்கு வந்து திருமணங்களைப் பதிவு செய்தார்கள். எங்கள் குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கையின்போது மதமும் சாதியும் கேட்டனர். படிவங்களில், இரண்டையும் 'இல்லை' என்றே பதிவு செய்தோம். பள்ளிப் பாடங்களில், 'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு' என்று சொல்லிக்கொடுத்துவிட்டு, சேர்க்கையின்போது சாதி மதம் கேட்பது பெரிய முரண் அல்லவா?''

அவரைத்  தொடர்ந்து ஆக்னஸ் சொல்கிறார்:
''சாதியும் மதமும் இல்லை என்பதே எங்கள் குடும்பத்தின் அடையாளம் ஆகிவிட்டது. விலகி நின்ற உறவுகளும் இப்போது கைகோத்துவிட்டனர். எங்கள் கொள்கையில் நாங்களும் அவர்கள் நம்பிக்கையில் அவர்களுமாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.....

.....எங்கள் வீட்டில் மூன்று மதங்களின் பண்டிகைகளையும் கொண்டாடுவோம்.  ஓணத்தின்போது அத்தப்பூ கோலம் போடுவோம். கிறிஸ்துமஸ் வந்துவிட்டால் வீட்டில் ஸ்டார் கட்டுவோம். ரம்ஜானுக்குப் பிரியாணி சமைப்போம். பண்டிகைகள் சாப்பிட்டு மகிழத்தான் வருகின்றன. மதம் பார்த்து நாங்கள் எதையும் விலக்கி வைப்பதில்லை.''

சாதி மத வேறுபாடுகளற்ற சமத்துவ சமுதாயம் உருவாகிட விதை தூவியிருக்கிறார்கள் 'காஸ்ட்லெஸ் பவன்' குடும்பத்தினர். இவ்வகையில், விதை தூவுவோர் எண்ணிக்கை பன்மடங்கு பெருகுதல் வேண்டும். இவர்களுக்கு இடையூறு செய்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

'காஸ்ட்லெஸ்' குடும்பத்தார்க்கு நம் வாழ்த்துகள். செய்தி வெளியிட்ட 'இந்து தமிழ்'[05.08.2018] நாளிதழுக்கு நம் பாராட்டுகளும் நன்றியும்.
========================================================================





வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

கடவுளின் விதி!!!!!

''நமக்கும் மேலான ஒரு சக்தி இருக்கிறது. அதுவே கடவுள்'' என்று சொல்லி, கடவுளின் 'இருப்பு' குறித்துக் கேள்வி எழுப்புவோரின் வாயை அடைத்திட முயல்வோருக்காக இப்பதிவு.

'உயிருள்ளனவோ உயிரற்றனவோ, கண்ணுக்குத் தெரிவனவோ தெரியாதனவோ அண்டவெளியிலுள்ள அனைத்துப் பொருள்களும் இயக்கத்தில் இருக்கின்றன; இயங்குவதற்கான சக்தியை அவை உள்ளடக்கியிருக்கின்றன' என்கிறது அறிவியல்.
ஒரு பொருள் 'உள்ளது' என்றாலே, அது தன்னுள் தனக்குரிய சக்தியை உள்ளடக்கியிருக்கிறது; இயங்கிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். அதாவது, பொருள், சக்தி, இயக்கம் ஆகிய மூன்றும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை என்பது அறியத்தக்கது.

மேலும் விரித்துச் சொன்னால்.....

பொருள் இல்லாமல் சக்தியும் இயக்கமும் இல்லை. சக்தி இல்லாமல் பொருளும் இயக்கமும் இல்லை. இயக்கம் இல்லாமல் பொருளும் சக்தியும் இல்லை[உயிருள்ள பொருள்களின் இயக்கத்தைக் காணக் குறைந்த கால அவகாசம் போதும்; உயிரற்ற பொருள்களின் இயக்கத்தை அறிய, பத்து, நூறு, ஆயிரம், லட்சம் கோடி என்று அதிக அளவு கால அவகாசம் தேவைப்படலாம். [நிகழ்காலத்தில் தென்படுகிற ஒரு கற்பாறையின் உருவம் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு நிச்சயம் மாறுபட்டிருக்கும். அதாவது, பாறையின் உட்கூறுகள் இயங்கிக்கொண்டிருப்பதால் இது நிகழ்கிறது].

ஆன்மிகவாதிகள் குறிப்பிடுவதுபோல் அனைத்துப் பொருள்களும், மிக மேம்பட்ட சக்தி வடிவமான கடவுளால் படைக்கப்பட்டன என்றால்.....

அண்டவெளியிலுள்ள பொருள்கள் வேறு கடவுள் வேறு என்றாகிறது. பொருள்கள் அவரால் படைக்கப்படுவதற்கு முன்னால், அவர் மட்டுமே அண்டவெளியில் தனித்த பெரும் சக்தியாக இயங்கிக்கொண்டிருந்திருக்கிறார் என்று கருத நேரிடுகிறது.

அறிவியலாளர்களின் கருத்துப்படி, 'பொருள்[பிளக்கப்படுவதால் அணுக்களும் பொருள்களே] இல்லாத நிலையில், சக்தி வெளிப்படுதலோ, அது மட்டுமே இயங்குவதோ சாத்தியமில்லை. இது, இயற்கை விதி.' 

இந்த விதி கடவுளுக்கும் பொருந்தும்.

அண்டவெளிப் பொருள்கள் தோன்றுவதற்கு[எப்படித் தோன்றின என்பது நீண்ட நெடுங்கால ஆய்வுக்கு உட்பட்டது] முன்னால், கடவுள் மட்டுமே தனிப்பெரும் சக்தியாக இருந்துகொண்டிருந்தார்; அல்லது, இயங்கிக்கொண்டிருந்தார் என்பது ஆன்மிகவாதிகளின் ஆதாரமற்ற வெற்று அனுமானம் ஆகும்.
------------------------------------------------------------------------------------------------------------------
-அறிவியல் தொடர்பான தகவல் குறிப்புகள், 'அஸ்வகோஷ்' எழுதிய, 'சொர்க்கம் எங்கே இருக்கிறது?' என்னும் நூலிலிருந்து[மங்கை பதிப்பகம், வேளச்சேரி, சென்னை]  பெறப்பட்டன.



வியாழன், 2 ஆகஸ்ட், 2018

தக தகக்கும் 'தங்கச் சாமியார்'!!!

கழுத்தில் 20 கிலோ தங்க நகைகளுடனும்,  கையில் 27 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் கடிகாரத்துடனும்  திரிகிற ஒரு சாமியாரைப் 'பாபா' ஆக்கியிருக்கிறார்கள் நம் மக்கள்! சொகுசுக் கார்களில்[இவரிடம் பிஎம்டபிள்யூ கார் 1, பார்ச்சூனர் 3, ஆடி 2  என 6 கார்களுக்கு மேல் உள்ளன] பயணிக்கிற இந்த ஆசாமிக்குப் போகிற இடமெல்லாம் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு! என்னவெல்லாம் நடக்கிறது இந்த நாட்டில்!!

பக்தகோடிகளால், 'சுதிர் மக்கார்' என்று அழைக்கப்படும் இந்த நபர், சிறு வயதில் சாலையோரங்களில் ஜெப மாலை, துணிகள் போன்ற விலை மலிவான பொருள்களை விற்று வயிறு வளர்த்தவர்; பின்னர், பெரிய அளவில் துணி வணிகமும் வீட்டுமனைத் தரகர் தொழிலும் செய்து செல்வந்தர் ஆனவர்.
நன்றி: 'இந்து தமிழ்'; தலைப்புப்படம்: 'தினமலர்'
கங்கையிலிருந்து புனித நீர் எடுத்துவந்து சிவ ஆலயங்களில் அபிசேகம் செய்வதற்காகப் பக்தர்கள் மேற்கொள்ளும் வழக்கமானதொரு யாத்திரையில், கடவுளின் அருளால் தான் பணக்காரன் ஆனதாக நம்பும் இந்தச் சுதிர் மக்காரும் கலந்துகொள்வது வழக்கம்.

ஹரித்வாரிலிருந்து டெல்லிக்கு யாத்திரை செல்லும் இவரை மக்கள் வியப்போடு பார்ப்பார்களாம். ஏராளமான தங்க நகைகளை அணிந்துகொண்டு, காரின் மேல் நின்றவாறு மக்களைப் பார்த்துக் கையசைத்தபடி இவர் செல்வாராம்.

2016 ஆம் ஆண்டு, இவர் சுமந்து திரிந்தது 12 கிலோ நகைகள். 2017இல், கழுத்தில் 21 தங்கச் செயின்கள்; கைகளில் தங்கத் தகடுகள்; விரல்களில் தங்க மோதிரங்கள் என மொத்தம 14.05 கிலோ எடையுள்ள நகைகள்.

25 ஆண்டுகளாக, பல்லாயிரம் ரூபாய் செலவு செய்து பக்தர்களுடன் புனிதமான[?] கங்கை நீருக்காக யாத்திரை செல்லும் இவர், ''எனக்கு 'நகை ஆசையும் கார் ஆசையும் சாகும்வரை போகாது. இந்த ஆண்டு யாத்திரைக்காக ரூ1.25 கோடி செலவழித்துள்ளேன். என்னுடன் 300 பேர்வரை யாத்திரை வருகிறார்கள். அவர்களுக்கு உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி போன்றவற்றைச் செய்துள்ளேன்'' என்கிறார்[இந்து தமிழ், 02.08.2018] இந்தக் கோடீசுவரச் சாமியார்

கங்கையிலிருந்து புனிதநீர் எடுத்துவந்து கோயில்களுக்கு அபிசேகம் செய்பவர்கள் பக்தர்கள். ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அரசு அவர்களுக்குக் காவல்துறைப் பாதுகாப்புத் தருவதில் தவறேதும் இல்லை.

நகைப்பித்து தலைக்கேறிய ஒரு சொகுசுச் சாமியாருக்கு[பெருமளவில் பணம் செலவு செய்து பக்தர்களை அழைத்துப்போவதால் 'பாபா' ஆக்கப்பட்டுவிட்டார் போலும்!] அரசாங்கம் துப்பாக்கி ஏந்திய காவலர்களைப் பாதுகாப்புக்காக அனுப்புவது ஏன்? 

கணக்கு வழக்கில்லாமல், கோயில் நகைகள் கொள்ளை போகின்றன; சிலைகள் களவாடப்படுகின்றன. நாடெங்கும், வீதிகளில் நடந்துசெல்லும் பெண்களின் ஒன்றிரண்டு கழுத்து நகைகளும் தாலிக்கொடிகளும் பறிக்கப்படுகின்றன.  இது விசயங்களில் பெரிதும் அலட்டிக்கொள்ளாத அரசு[மத்திய, மாநில அரசுகள்], தன் பொறுப்பில் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்துகொள்ளும் வசதி படைத்த பணக்காரச் சாமியாரின் நகைகளைப் பாதுகாப்பதில் காட்டும் விசேட அக்கறை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது!

ஆள்வோரைத் திருத்தும் கடமை மக்களுக்கானது. மக்களோ சாமியார்கள் மீதான அதீத பயபக்தியில் தம்நிலை இழந்து மயங்கிக் கிடக்கிறார்கள்.

மக்களுக்கான  கடமையை வேறு யார்தான் செய்வது?!
------------------------------------------------------------------------------------------------------------------