புதன், 27 பிப்ரவரி, 2019

''மட்டும்''.....உளவியல் கதை!

தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மனைவி தனலட்சுமியிடம், “உன் மருமகளுக்கு ஃபோன் பண்ணிடு” என்றார் முத்துசாமி.

''எதுக்கு.”

“இங்கே வந்து ரொம்ப நாளாச்சி. பேரப் பிள்ளைகளைப் பார்க்கணும்னு தோணலையா? வந்து ஒரு மாசம் இருந்துட்டுப் போங்கன்னு சொல்லிட்டே இருக்கான் நம்ம புள்ள. நாளை  சென்னை கிளம்புவோம். விசயத்தை அவளுக்குச் சொல்லிடு” என்றார் முத்துசாமி.

“ஊருக்கு வர்றோம்னு சொன்னா பதிலே சொல்லாம ஃபோனை வெச்சுடுறா. அவனுக்குச் சொன்னா போதாதா?” என்றாள் தனலட்சுமி.

“போதாது. அவ ரோசக்காரியாச்சே. அவன் வேலைக்குப் போனதும் இவ வீட்டைப் பூட்டிட்டுப் போயிடுவா. நாம வாசப்படியில் காத்துக் கிடக்கணும். இப்பவே ஃபோன் பண்ணிடு.”

ஃபோனை உயிர்ப்பித்து, “நாளை கழிச்சி நானும் மாமாவும் அங்கே வர்றோம். அது வந்தும்மா...இங்கே ரெண்டு மூனு கல்யாணத்துக்கு அழைப்பு வந்திருக்கு. ரெண்டு நாள் மட்டும் தங்கிட்டு ஊர் திரும்பிடுவோம்.” -'மட்டும்' என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னாள் தனலட்சுமி.

“சரிங்க அத்தை” என்றாள் மருமகள்  வினிதா.

பேசி முடித்து செல்ஃபோனை அணைத்தபோது  முத்துசாமி சிரித்தார்; “கல்யாண அழைப்பு இருக்குன்னு எதுக்குப் பொய் சொன்னே?” என்று கேட்டார்.

“நாம ரெண்டு நாள்தான் இருப்போம்னு முன்கூட்டியே சொல்லிட்டா, கொஞ்சம் மரியாதை கொடுத்து உபசரிப்பா. சொல்லலேன்னா, நாள் கணக்கில் கேம்ப் போட்டுடுவோமோன்னு முகம் கொடுத்துப் பேச மாட்டா. உபசரிப்பும் படு மட்டமா இருக்கும்” என்றாள் தனலட்சுமி.

“நீ ரொம்பத்தான் புத்திசாலி.”
========================================================================

இப்பதிவு, indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

சனி, 23 பிப்ரவரி, 2019

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் அற நெஞ்சம்!

'சமரசம்'[1-15 பிப்ரவரி, 2019] என்னும் இதழுக்கு சாகித்திய அகாடமிப் பரிசு பெற்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் அளித்த பேட்டியிலிருந்து.....

''.....அடிப்படை அறங்கள் கைவிடப்படும்போது அது நம் மனதில் ஆழமான வருத்தத்தை உருவாக்குகிறது. ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

இது வடநாட்டில் நடந்தது.  சாலையோரத்தில் நடந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை நான்கு பேர் தூக்கிச்சென்று  ஒரு வயல்வெளியில் பாலியல் பலாத்காரம் செய்ய முயலுகிறார்கள்.

அப்போது, கிராமத்து விவசாயிகள் சிலர் கைகளில் தடிகளுடன் ஓடிவர, பெண்ணைப் பலாத்காரம் செய்ய முயன்றவர்கள் ஓடிவிடுகிறார்கள்.

அப்புறம் நடந்ததுதான் நம்மைப் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது.

பெண்ணைக் காப்பாற்றியவர்கள் என்று நினைக்கப்பட்ட விவசாயிகளே அந்தப் பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்கிறார்கள். 50, 60 வயதுகளைக் கடந்த, அன்றாடம் நாம் காணுகிற சாதாரணத் தோற்றத்தில் இருப்பவர்கள் அவர்கள்.

இத்தனை ஆண்டுகள் இந்திய விவசாயிகள் மீது நான் வைத்திருந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வண்ணம் அவர்கள் நடந்துகொண்டார்களே, ஏன்?

எது அவர்களை இப்படிச் செய்யத் தூண்டியது?

தம் மகள்களின் வயதில், அல்லது பேத்திகளின் வயதிலுள்ள ஒரு பெண்ணை எப்படி அவர்களால் வன்புணர்வு செய்ய முடிந்தது?

பாலியல் வறட்சிதான் இதற்கெல்லாம் காரணமா? இப்படிச் செய்தால் என்ன நடந்துவிடப்போகிறது என்று நினைப்பது காரணமா?

காலங்காலமாய் நாம் போற்றிவந்த அறவுணர்வு எங்கே போனது?

இந்தியச் சமூகத்தின் அடிப்படை அறவுணர்ச்சிகள் நொறுங்குவதை இப்போது நாம் காண்கிறோம். இனி எந்த நம்பிக்கையில் இம்மாதிரி அவலத்துக்குள்ளாகும் பெண்களை நாம் காப்பாற்றப் போகிறோம்?''

'சமரசம்' இதழுக்கும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் நம் நன்றி.

வியாழன், 21 பிப்ரவரி, 2019

உயிரே...என்னுயிரே...நின் 'இருப்பிடம்' எங்கே சொல் என் நுண்ணுயிரே!

கைவசம் 'புதுச்சரக்கு' இல்லாததால் இந்தப் பழஞ்சரக்கைப் பதிவு செய்திருக்கிறேன். இது போதை தரும் சரக்கல்ல; புத்துணர்ச்சியூட்டுவது. தவறாமல் படியுங்கள்.

Aleksand[e]r Oparin, in full Aleksandr Ivanovich Oparin என்னும், பிரபல சோவியத் உயிரியல் விஞ்ஞானியின் 'origin of life' [தமிழாக்கம்: நா.வானமாமலை, NCBH, சென்னை] நூலை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட பதிவு இது.

“புலன்களால் அறிய முடியாதது உயிர்.  இதுவே ‘ஆன்மாவின் சலனம்’; ‘கடவுளின் சிறு பொறி’;  ‘சூட்சுமம்’ என்றெல்லாம் அழைக்கப்படும்”. - இப்படிச் சொல்வது ‘கருத்துமுதல் வாதம்’[Idealism] ஆகும். இக்கொள்கையாளர்களைக் ‘கருத்துமுதல் வாதிகள்[Idealists]’ என்பார்கள்.

“பொருள் என்பது சலனம் அற்ற ‘ஜடம்’ ஆகும். அந்த ஜடத்திற்குள் உயிர் புகுந்தால் அது ‘உயிர்ப்பொருள்’[உயிருள்ள பொருள்] ஆகிறது. உள்ளே உயிர் இருக்கும் வரைதான் ஜடமானது வாழவும் வளரவும் செய்யும். உயிர் பிரிந்துவிட்டால் மீண்டும் ஜடமாகி அழுகி நாறி அழிந்து போகிறது. ‘கடவுளின் இச்சையினால் திடீரென்று உயிர் தோன்றுகிறது. செத்த சடலத்தில் கடவுளின் உயிர் மூச்சு  நிரம்பியதும் அது உயிர்ப் பிராணி ஆகிறது.  இந்த உயிரை அடக்கி ஆளும் வல்லமை மனிதனுக்கு எப்போதும் வாய்ப்பதில்லை.” என்பது இவர்கள் தரும் கூடுதல் விளக்கம் ஆகும்.

அனைத்து மதங்களும் உயிரைப் பற்றி மேற்கண்ட கொள்கைகளையே கொண்டுள்ளன.

'பிராணிகளின் உடலிலுள்ள பொருளுக்கு உயிரில்லை. உயிர் என்னும் சக்தி அதனுள் புகுந்தால்தான் அவை உயிருள்ளவை ஆகின்றன’ என்பது பிளாட்டோவின் கருத்து. அரிஸ்டாட்டிலும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். இரண்டாயிரம் ஆண்டுகளாக இக்கருத்து நிலைபெற்றிருந்தது. மதக் கோட்பாடு களுக்கு ஒத்துப் போகாத எந்தவொரு கொள்கையும் தலையெடுக்க முடியாத நிலை நீடித்தது.

ஆனாலும், இவர்களோடு ஒத்துப் போகாத ஒரு பிரிவினரும் தம் கருத்துகளை அன்றுதொட்டுச் சொல்லிக்கொண்டுதான் இருந்தார்கள். அவர்களைத்தான்,‘பொருள்முதல் வாதிகள் [Meterialists]’ என்கிறார்கள். அதாவது, ‘பொருள் முதல் வாதம்’[Meterialism] என்னும் கொள்கை உடையவர்கள்.

‘பொருளற்ற சூட்சுமம்’ என்பதெல்லாம் வெறும் கற்பனை. ‘வெறுமை’ என்பது எப்படிச் சாத்தியமற்றதோ[?], அது போல், சூட்சும நிலை என்பதும் சாத்தியமற்றதே. புலன்களால் அறிய முடியாத ‘பொருளற்ற ஒன்று’ இருப்பதாகச் சொல்வது வெறும் அனுமானமே. பொருளின் மிக...மிக...மிக நுண்மையான ஒரு வடிவமே உயிர். இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டு, அது சிதைவுகளையும் மாறுதல்களையும் பெறுகிறது.

மிக மிகப் புராதன காலத்தில், இன்று காணப்படும் நுண்ணுயிர்களைப்[Micro Organism] போல, மிக நுணுக்கமான சின்னஞ் சிறிய உயிர்களே இருந்தன. அவை மட்டுமே வாழ்ந்த ஒரு காலமும் இருந்தது. அவை மிக மிக நுண்ணிய பொருள்கள்.

பொருள் இல்லாமல், ‘சூட்சுமமானது’ என்று சொல்லப்படுகிற உயிர் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை.

பொருள், காலப்போக்கில், மிகப் பல சிறு சிறு மாறுதல்களைப் பெற்று, குறிப்பிட்ட ஒரு கால நிலையில் உயிர் என்று சொல்லப்படுகிற ‘நுண் பொருளாக’ மாறுகிறது என்பது இவர்களின் கருத்தாகும்.

விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்?

‘கரி, நீர்வாயு, ஆக்ஸிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் ஆகிய ஐந்து மூலப் பொருள்களும் ஒன்றுகூடி பொருளாகத் தோற்றம் தருகின்றன. இந்தச் சிக்கலான ‘அணுக்கூட்டு’தான்[Molecule] பின்னர் உயிர்த்தன்மை பெற்றது.’

‘உயிர் என்பது பொருளின் சலனத்தில் ஒரு சிறப்பான வடிவம்.’

’மிகச் சிறிய நுண்ணுயிர்கள்கூட, உயிரற்ற பொருள்களோடு ஒப்பிடும்போது மிகச் சிக்கலான அமைப்பு உடையவை. அவை திடீரென்று தோன்றிவிட முடியாது’

அனைத்துப் பொருள்களையும் உயிர்களையும் கடவுள் நினைத்த மாத்திரத்தில், நினைத்த படியெல்லாம் படைத்தார் என்பது 100% கற்பனையே.

‘உருவம் உடைய பொருள்களே உண்மையானவை[எத்தனை சிறிய அணுவாக இருந்தாலும் அதற்கும் உருவமுண்டு. உருவமற்றவை என்று சொல்லப்படுகிற, உயிர்[ஆன்மா], ஆவி [கடவுள் உட்பட!] போன்றவற்றைப் புலன்களால் அறிவது என்பது சாத்தியமே இல்லை.

‘சூட்சுமம்’ பற்றிப் பேசுபவர்களில் யாரேனும் அது பற்றி விளக்கியிருக்கிறார்களா என்றால், “இல்லை” என்பதே பதிலாக இருக்க முடியும்.

கழகத் தமிழ் அகராதி. சூட்சுமம் என்பதற்கு, ‘நுண்மை, கூரறிவு’ என்று பொருள் சொல்கிறது.

நுண்மை - நுட்பம்.

அறிவு - அறிதல், அது, சிந்திப்பதற்குக் காரணமாக இருப்பது. முற்ற முழுக்க மூளையின் இயக்கத்திற்கு உட்பட்டது. எனவே........

‘கூர் அறிவு’  என்பதற்கு, புலன்களால் அறிய முடியாத சூட்சுமம் என்று பொருள் கொள்ள வாய்ப்பே இல்லை.

'நுட்பமான உத்தி’ என்கிறது தமிழ் விக்சனரி. இது குழப்பமானதொரு விளக்கமாகும்.

‘நுண்ணுடம்பு’ பற்றிப் பேசாத பக்தி இலக்கியங்கள் இல்லை. ஆனால், அந்த நுண்ணுடம்பு பற்றி விளக்கிச் சொன்னவர் எவருமே இல்லை.

நுண்ணுடல், சூக்கும தேகம் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, மக்களின் மூளையில் வெகு ஆழமாக அதைப் பதிய வைத்துவிட்டார்கள்.

சூட்சுமத்தை ஆங்கிலத்தில், ‘subtlety' என்கிறார்கள். கூகிளில் தேடியதில் தெளிவான விளக்கம் பெறுவது சாத்தியப்படவில்லை.

'www.thefreedictionary.com/subtlety' தரும் விளக்கங்கள்:
n., pl. -ties.
1. the state or quality of being subtle.
2. acuteness or penetration of mind; delicacy of discrimination.
3. a fine-drawn distinction; refinement of reasoning.
4. something subtle.

penetration of mind = மனதின் ஊடுருவல்.

ஊடுருவல்! எப்படி?... தெளிவில்லையே!

acuteness = கூர்மை. மனக் கூர்மையா? கூர்மை மனதா? புரியவில்லையே!

something subtle ?    இப்படியொரு விளக்கமா?!

www.vocabulary.com/dictionary/subtlety:   Subtlety is the quality of being understated, - இதிலும் போதுமான விளக்கம் இல்லை.

உயிரைப் பற்றிய ஆய்வு ஒருபுறம் இருக்கட்டும். நாம் சிந்திக்கிறோமே அந்தச் சிந்தனைக்குக்கூட வடிவம் உள்ளதா என்றொரு கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

இதற்கும் அறிவியல் பதில் தருகிறது.

‘சிந்திப்பதென்பது முழுக்க முழுக்க மூளையின் செயலாகும். மூளை இல்லையேல் சிந்திப்பதும் சாத்தியமில்லை.’

ஆக, பொருள்முதல் வாதிகள் முன்வைக்கும் வாதங்களும், விஞ்ஞானிகள் தரும் விளக்கங்களும் ‘உயிர் என்பது சூட்சுமமானதும் தனியே இயங்கக்கூடியதுமான  ஒன்றல்ல; அதுவும் ஒரு பொருளே’ என்னும் கருத்தை உறுதி செய்கின்றன. எனினும்...........

“பொருள்களின் தோற்றம் நிகழ்ந்தது எவ்வாறு? பொருள்களின் பரிணாம மாறுதல்களால் உயிர் தோன்றியது எப்படி?” என்ற வினாக்களுக்கு இந்நாள்வரை விடை இல்லை!

வருங்காலத்திலேனும் விஞ்ஞானத்தால் விடை காண முடியுமா என்றால், “முடியும்’ என்று சொல்லும் துணிவு எவருக்கும் இல்லை.

“மனித இனம் இம்மண்ணில் நிலைபெற்றிருக்கும்வரை விடை தேடும் முயற்சி தொடரும்” என்று வேண்டுமானால் சொல்லலாம்.
00000000000000000000000000000000000000000000000000000000000000000000000

திங்கள், 18 பிப்ரவரி, 2019

விவேகானந்தரை இழிவுபடுத்தும் ஆன்மிகப் பொய்யர்கள்!

விவேகானந்தர் குறித்த, கீழ்க்காணும் தகவல் குறிப்பு ஒரு முன்னணி நாளிதழின் ஆன்மிகப் பக்கத்தில் வெளியானது.  

விவேகானந்தர் ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராயினும், சீரிய சிந்தனையாளரும்கூட; மூடநம்பிக்கைகளைச் சாடியவர்; இளைஞர்களின் மனங்களில் தளராத தன்னம்பிக்கையை விதைத்தவர். ''விழிமின்! எழுமின்!!'' என்றெல்லாம் மக்களைத் திரட்டி எழுச்சியுரைகள் நிகழ்த்தியவர்.

அவரை இழிவுபடுத்தும் வகையில் யாரோ ஒரு பொய்யன் கட்டிவிட்ட கதை இன்றளவும் ஊடகங்கள் வாயிலாகப் பரப்புரை செய்யப்படுகிறது.

இராமகிருஷ்ண பரமஹம்சரைத் தம் குருவாக ஏற்பதற்கு முன்னால் அவர் மேற்கொண்டிருந்த துறவறத்தின் உண்மைத்தன்மையைச் சோதிக்க விவேகானந்தர் ஒரு சோதனை நிகழ்த்தினார் என்பது அந்தக் கதை. கதையின் உள்ளடக்கம் என்ன? 

நகல் பதிவை வாசியுங்கள்.

கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளைப் பரமஹம்சரின் பார்வையில் படும்படி வைத்துச் சோதித்தார் என்று எழுதியிருந்தால்கூட, கதை கட்டியவர்களை மன்னிக்கலாம். துறவறத்தைச் சோதிக்க ஒற்றை ரூபாயை பயன்படுத்தினார் என்பது அறியாமையின் உச்சம்.

ஒளித்து வைத்த ஒரு பொருளைத்[இங்கே ரூபாய்] தேடிக் கண்டுபிடிப்பது தேவையற்ற செயல் என்பதோடு, பரமஹம்சர் போன்றவர்களுக்கும்கூட அது சாத்தியமல்ல என்பதை அறியாதவரல்ல விவேகானந்தர்.

இவ்வகை மூடநம்பிக்கை வளர்க்கும் கதைகளை மக்கள் மத்தியில் உலவவிடுபவர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள்.  

ஆட்சியாளர்கள் தண்டிக்கிறார்களோ இல்லையோ, இம்மாதிரியான ஆன்மிகப் பொய்யர்களை மக்களுக்கு அடையாளம் காட்டுவது அறிஞர் கடமையாகும்.
IndiBlogger

Your post is on the IndiBlogger homepage.

Dear pasiparamasivam,
Your post விவேகானந்தரை இழிவுபடுத்தும் ஆன்மிகப் பொய்யர்கள்! has been selected for IndiBlogger's Featured Posts, and is on the homepage of IndiBlogger right now!
Tweet this Share this
If you would like to add the 'Featured Post on IndiBlogger' badge to your post, you may get the badge at the following link:
Keep blogging!
The IndiBlogger Team

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

உலகமகா.....'புருடா' மன்னர்கள்!!!


தற்செயலாக, நேற்று[14.02.2018] 'கலைமகள்'[பிப்ரவரி,2018]' மாத இதழை வாசிக்க நேர்ந்தது. 'தாமிரவருணி கேள்வி-பதில்' பகுதியில் இடம்பெற்றிருந்த ஒரு கேள்வியும் அதற்கான பதிலும் என் கவனத்தை வெகுவாகக் கவர்ந்தன. வாசியுங்கள்.....

நம் முன்னோர்கள் எழுதி வைத்தது நாடி ஜோதிடமாம். சரி.

பிற்கால மனிதர்கள் பற்றி எழுதியிருப்பதாகச் சொல்கிறார்கள். 'பிற்காலம்' என்பதற்கு வரையறை என்ன? அத்தப் பிற்காலம் எத்தனை ஆண்டுகளை உள்ளடக்கியது? அவை கோடானுகோடி ஆண்டுகளா? கோடானுகோடி யுகங்களா?

நிலவுலகம் உள்ளவரை பிறந்து வாழ்ந்து மடிகிற அத்தனை மனிதர்களைப் பற்றியும்[ஆயுள், மனைவி, வாரிசுகள், சாதனைகள், வேதனைகள் என்றிப்படி] எழுதி வைத்திருக்கிறார்களா?

பிற்கால மனிதர்களுக்கு என்று 'பொத்தாம் பொதுவா' அடித்துவிட்டு, வாழ்ந்துகொண்டிருகிற அத்தனை பேர்களையும் மூடர்கள் ஆக்குகிறார்கள்.

வாழ்ந்துகொண்டிருக்கிற, இனி பிறந்து வாழவிருக்கிற அவ்வளவு பேருக்கும் சுவடிகள் உள்ளனவென்றால், அவற்றின் எண்ணிக்கை என்ன? அவை யாரிடமெல்லாம் உள்ளன? எங்கெல்லாம் சேமித்து வைக்கப்பட்டுள்ளன?

இந்த விவரங்கள் எல்லாம், அனைத்து உலகங்களையும் உயிர்களையும் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுளுக்காவது தெரியுமா?

'பிரபஞ்சம் முழுமைக்கும்' என்கிறார்கள். எந்தவித அளவுகோல்களால் யாரெல்லாம் இந்தப் பிரபஞ்சத்தின் பரப்பைக் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பதற்கு இவர்கள் ஒரு பட்டியல் தருவார்களா?

இவர்கள் அள்ளி இறைக்கும் புளுகுகளுக்கு அளவே இல்லையே!!!

இவர்களின் இழி செயலைத் தட்டிக் கேட்பார் எவருமில்லையா?

ஆன்மிக வேடம் புனைந்து பொய் சொல்லி, மக்களை மூடர்கள் ஆக்கிப் பிழைப்பு நடத்தும் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தண்டனை வழங்க அரசியல் சட்டத்தில் இடமேதும் இல்லையா?

மக்கள் நலனில் அக்கறை கொண்டோரே சிந்திப்பீர்!
___________________________
இப்பதிவு, indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

வியாழன், 14 பிப்ரவரி, 2019

மதவெறியர்களால் அழியப்போவது மதங்களா, மனிதகுலமா?!


#ஷியா முஸ்லிம் என்பதால் சவுதியில் 6 வயது சிறுவன் தனது தாயின் முன் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், சகாரியா அல் ஜாபர் என்ற 6 வயது சிறுவன் தனது தாயுடன் மெதினாவில் உள்ள புனிதத் தளத்திற்குச் செல்வதற்காகத் தனது தாயுடன் யாத்திரைக்கு வந்தார். அப்போது டிரைவர் ஒருவர்[சன்னி முஸ்லிம்] அவர்களிடம் ''நீங்கள் ஷியா முஸ்லிமா?'' என்று கேட்டுள்ளார்.
அதற்கு சகாரியாவின்  தாய் ''ஆம்'' என்று கூற, டாக்ஸியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த டிரைவர், சகாரியாவிடம், ''நீ இஸ்லாமின் தவறான வேரிலிருந்து வந்தவன்'' என்று கூறிக்கொண்டே சகாரியாவின் தொண்டையில் குத்திக் கொலை செய்தார். இதனைக் கண்ட சகாரியாவின் தாய் மயங்கி விழுந்தார்'' என்று செய்தி வெளியானது
இதனைத் தொடர்ந்து சகாரியாவின் கொலைக்கு நியாயம் வேண்டி, அந்நாட்டு முற்போக்காளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களிலும் #JusticeforZakaria என்று பதிவிட்டு அவரது மரணத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்#['தமிழ் இந்து, 13.02.2018].

சகாரியா அல் ஜாபர்.....

நன்றி: makkalviruppam.blogspot.com

காதல் வெறியோ, காம வெறியோ, மத வெறியோ வெறி பிடித்து அலைபவர் எவராயினும் அவர்களால் மனித சமுதாயம் அளவிறந்த அல்லல்களுக்கு உள்ளாகி, ஒரு காலக்கட்டத்தில் முற்றிலுமாய் அழிந்தொழியும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கண்டது போன்ற சூதுவாதற்ற மழலைச் செல்வங்களைச் சிதைத்து அழிக்கும் கொலைவெறியர்கள் பிற மதங்களிலும் இருக்கிறார்கள்.

இந்தக் கொலைகாரர்களுக்கு எதிராகப் பல்முனைத் தாக்குதல் நிகழ்த்துவது உடனடித் தேவையாகும். மனித நேயம் போற்றும் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
================================================================================
அமேசான் கிண்டிலில் என் படைப்புகள்.....