'பிரபஞ்சத் தோற்றம்' குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், 'ஏதும் புரியவில்லை' என்பது புரியும். தோற்றுவித்தவர் கடவுள் என்பது வெறும் அனுமானம்தான்!

Saturday, August 18, 2012

குயவனும் கடவுளும்

இது சிறுகதையல்ல..........இது சிறுகதை அல்ல..........இது சிறுகதை அல்ல.......

         குயவனும் கடவுளும் [சிந்தனைப் பதிவு]

கடவுள் உண்டென்று சொல்லும் ஆன்மிக அறிஞர்கள் [ வஞ்சப் புகழ்ச்சியல்ல] வழக்கமாக முன்வைக்கும் ஓர் எடுத்துக்காட்டு, ’ஒரு மண்பானை தானாகத் தோன்றாது. அதைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல, உலகங்களையும் உயிர்களையும் பிறவற்றையும் படைக்கக் கடவுள் தேவை’ என்பதாகும்.

ஒரு குயவன், கண்களை மூடித் திறந்தோ, விரித்த உள்ளங்கையை மேலே உயர்த்தியோ[அபயக்கரம் போல] பானையைப் படைத்ததில்லை; களிமண், நீர் போன்ற மூலப் பொருள்களை சேர்த்து, தண்டச் சக்கரம், தட்டுப் பலகை [பானையைத் தட்டிச் சீர்படுத்தும் கருவி] போன்ற துணைக் கருவிகளைக் கொண்டுதான் படைத்தார்; படைக்கிறார். அது போல, கடவுள் தனக்குரிய மூலப் பொருள்களையும் துணைக் கருவிகளையும் எங்கிருந்து அல்லது எவரிடமிருந்து பெற்றார் என்று எம்மைப் போன்றவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு,  உரிய விளக்கம் தரப்படாத நிலையில்................

அவற்றைக் கடவுள் தனக்குள்ளிருந்தே  எடுத்துக் கொண்டிருக்கலாம். அது உண்மை என்றால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் கடவுள் தன்மை வாய்ந்தவையே. அது அவ்வாறாயின், கடவுளின் கூறான நம் உடம்பு, ஒரு துன்பம் வரும்போது  கிடந்து துடிக்கிறதே, அது ஏன் என்று  ஐயம் எழுப்பினோம்.

இதற்கான விளக்கத்தையும், கடவுள் இருப்பதை உறுதிப்படுத்த முயலும் அறிஞர்களிடமிருந்து பெற இயலவில்லை.

இந்நிலையில் மீண்டும் ஒரு வினாவை, அவர்கள் முன் வைக்கிறோம். [பிரபஞ்சம், கடவுள் என்று சொல்லிச் சொல்லி வினாக்கள் தொடுப்பதே இந்த ஆளுக்கு வேலையாகப் போய்விட்டது என்று எரிச்சலடையாதீர். ‘சரக்கு’ தீர்ந்துவிட்டதால், கடவுள் தொடர்பான ‘தொடர் பதிவு’களுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறோம். ‘இதை எப்போதோ செய்திருக்கலாம்’ என்று ஏடாகூடமாக எவரும் பின்னூட்டம் போட்டுவிடாதீர்!!]


குயவன் தனக்குத் தேவையான  துணைக் கருவிகளை அவரே உருவாக்கிக் கொள்ளவில்லை. அவற்றைப் படைத்தளித்தவர்கள் குயவனைப் போன்ற பிற மனிதர்களே.

ஆக, குயவர் பானையைப் படைக்கத் தொடங்குவதற்கு முன்னரே, துணைக் கருவிகளை உருவாக்கும் படைப்புத் தொழில் ஆரம்பம் ஆகிவிட்டது என்பது உண்மை.

இதைப் போலவே, கடவுள் படைப்புத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, துணைக் கருவிகளைப் படைக்கும் தொழில் நடைபெற்றிருக்க வேண்டும் {தரப்பட்ட எடுத்துக்காட்டை [குயவனின் பானை படைக்கும் தொழில்] அடிப்படையாகக் கொண்டுதான் இந்த விளக்கங்களைத் தருகிறோம்}

அந்தத் தொழிலைச் செய்தவர்கள் யார்?

கடவுளுக்கு இணையாக, படைக்கும் ஆற்றல் பெற்ற அவர்கள் யார்?

அவர்களும் கடவுள்கள்தானே?

அக் கடவுளர்கள் எத்தனை பேர்?  படைக்கப்படாமல் என்றென்றும் இருந்து கொண்டிருப்பவர்கள் என்பதால் அவர்களையும் போற்றிப் புகழ்ந்து வழிபடலாமா?

நம் கண் முன்னே நடக்கும் சில நிகழ்ச்சிகளை உதாரணம் காட்டி, புலன்களாலோ ஆறாவது அறிவாலோ அறியப்படாத, கடவுள் என்று சொல்லப்படுபவரை நிரூபிக்க முயல்வது எத்தனை தவறு என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும்.

அறியப்பட்ட ஒன்றை ஒப்புமை காட்டி அறியப்படாத ஒன்றை விளக்கும் போது, அந்த ஒப்புமை முழுமையானதாக [’முழுமையாகஎன்று நாம் குறிப்பிடுவது, மூலப் பொருட்கள், துணைக்கருவிகள், துணை நின்றவர்கள், படைப்புத் தொழிலைச் செய்தவர் என்று ஒரு படைப்புக்குக் காரணமான அனைத்தையும்...அனைவரையும் உள்ளடக்கியது] இருத்தல் அவசியம்.

போகிற போக்கில், “பானையைப் படைக்க ஒரு குயவன் தேவை. அது போல், உலகத்தைப் படைக்கக் கடவுள் தேவை” என்று சொல்லிச் செல்வது ஏற்கத்தக்க விவாத முறையல்ல.

ஏற்புடைய பதில் தருவதைத் தவிர்த்து..............................

“உன்னுடைய அறிவைக் கொண்டு, கடவுள் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டேன்” என்று எவராயினும் சவால் விடக்கூடும்

எம்மைப் பொருத்தவரை, ”கடவுள் இல்லை” என்று சொல்வதைத் தவிர்த்து, கடவுளானவர் அடிப்படை ஆதாரங்களுடன் நிரூபிக்கப் படவில்லை என்றுதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

”கடவுளை விமர்சனம் செய்வதற்கு, அவரினும் மேலான அறிவு படைத்தவர்க்கே தகுதி உண்டு” என்று வாதம் புரிபவர்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நாம் தரும் பதில்........................

“முதலில் கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபியுங்கள். அதன்பிறகு, ஒரு போதும் அவர் குறித்து நாங்கள் வாய் திறக்க மாட்டோம்” என்பதுதான்.

தன்னளவில் ஒருவர் கடவுளை நம்பினால் அதைக் குற்றம் சாட்ட எமக்கோ பிறருக்கோ உரிமையில்லை. அதே அவர், பொது மக்கள் மனங்களில் தன் நம்பிக்கையைத் திணிக்க முயலும்போது, அதில் குறுக்கிட எல்லோருக்கும் உரிமை உண்டு.

கடவுளின் ‘இருப்பை' நிலைநாட்ட முயலும் ஆன்மிக அறிஞர்களுக்கு நாம் நினைவுபடுத்துவது......................................

துணைக் கருவிகளை வழங்கிய கடவுளர் எத்தனை பேர்?

நேரிடையான பதில் தேவை.

”நீ நாத்திகன். கடவுள் இல்லை என்று சொல்லித் திரிகிறாய். அப்படிச் சொல்லி என்ன சாதிச்சே? உன் குடும்பத்தில் உள்ளவர்கள் கோவிலுக்குப் போவதில்லையா? ஊருக்கும் உலகத்துக்கும் நீ என்ன செஞ்சி கிழிச்சே?” என்பதான கேள்விகளை முன் வைப்பது விவாதத்தின் போக்கைத் திசை திருப்பும் முயற்சியாகும்

மீண்டும் சொல்கிறோம்.

ஒரே ஒரு கேள்வியைத்தான்  முன் வைத்திருக்கிறோம்.

அறிஞர்களிடமிருந்து எதிர்பார்ப்பது அதற்கான பதிலை மட்டுமே.

இது சவால் அல்ல; வேண்டுகோள் மட்டுமே.

*******************************************************************************

அடுத்த பதிவுப் பொருள் [ நாள் குறிப்பிட இயலவில்லை]...............

//அண்டவெளியில் பெரும் அற்புதங்களை நிகழ்த்துகிற, மனித அறிவைக் காட்டிலும் மேம்பட்ட பேரறிவு வாய்க்கப் பெற்ற அந்த ‘ஏதோ.....’ நீங்கள் நம்புகிற கடவுள் அல்ல//

*******************************************************************************
Wednesday, August 15, 2012

சிந்தனையாளர்களுக்குச் சில கேள்விகள்

இங்கே எழுப்பப்படும் கேள்விகளுக்கு, ‘கடவுள்”,  ’இயற்கை’  என்னும் பதில்களை முன்வைத்து முற்றுப்புள்ளி இட வேண்டாம். அன்பு கொண்டு தொடர்ந்து சிந்தியுங்கள்.            

  சிந்தனையாளர்களுக்குச் சில கேள்விகள்

இது மிகக் கடுமையான, காரசாரமான விவாதத்திற்கு வித்திடும் பதிவல்ல; மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் சிந்திக்கத் தூண்டுவது மட்டுமே இதன் நோக்கம்.

அவ்வப்போது, வயிற்றுப்பாட்டையும் வாழ்க்கைப் பிரச்சினைகளையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, அகன்று அடர்ந்து விரிந்து பரந்து கிடக்கும்  பிரமாண்ட அண்டவெளியையும், அங்கே வகை வகையான வடிவங்களில் சுற்றித் திரியும் வித விதமான கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும், அவ்வப்போது அவை நிகழ்த்தும்  மாயாஜாலங்களையும் கண்டு கண்டு, அல்லது, கற்பனை செய்து செய்து மகிழாதவர் எவருமிலர் எனலாம்.

அனைத்தையும் ரசித்து இன்புறுவதோடு நில்லாமல்........................

இவை அனைத்திற்கும் மூலமாக இருப்பது எது, அல்லது எவை, அல்லது எவர், அல்லது எவரெல்லாம்? இவை படைக்கப்பட்டதன் நோக்கம், அல்லது படைக்கப்படாமலே ’என்றென்றும் இருந்துகொண்டே இருப்பதற்கு’ உண்டான அடிப்படை, அல்லது என்றேனும் ஒரு நாள் இவை அனைத்தும் இல்லாமல் போவதற்கான வாய்ப்பு குறித்தெல்லாம் நாம் எல்லோருமே சிந்தித்திருக்கிறோம்; நம் முன்னோர்கள்  சிந்தித்து அறிவித்த முடிவுகளை மனதில் கொண்டு நாம் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அனைவரும் ஏற்கத்தக்க ‘முடிவு’ மட்டும் எட்டப்படவில்லை.

இந்நிலையில்................................................................

விண்வெளியில் மறைந்திருக்கும் அல்லது புதைந்து கிடக்கும் ஒரு ‘புதிர்’ அல்லது ‘மர்மம்’ குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கு,  உங்கள் அனைவரையும்  தூண்ட வேண்டும் என்னும் பேரார்வம் காரணமாக, உங்கள் முன்னால் சில கேள்விகளைச் சமர்ப்பிக்கிறேன்.

கேள்வி ஒன்று:

விஞ்ஞான ரீதியாக, பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது என்பார்கள். கணிப்புக்கு அப்பாற்பட்டு, காலங்காலமாக, எந்தவொரு அளவுகோலுக்கும் கட்டுப்படாமல்,  எல்லை கடந்த நிலையில் அகன்று விரிந்து பரந்து கிடக்கிற பிரபஞ்சத்தில், ’அது விரிவடைந்துகொண்டே போகிற ஒரு நிலை’ உருவாக வாய்ப்பே இல்லை என்று சொன்னால், அது ஒரு நாள் மெய்ப்பிக்கப்படுகிற ’உண்மை’யாகவும் இருக்கலாம்.

இதே போல, இருக்கிற ஒரு பிரபஞ்சமே எல்லை காண இயலாத பெரும் புதிராக இருக்கையில், ’பிரபஞ்சங்கள் பல’ உள்ளன என்று சொல்வதும் ஏற்கத்தக்க ’உண்மை’ அல்ல என்றே சொல்லத் தோன்றுகிறது.

இந்த அடிப்படைகளை எல்லாம் சொல்லி, உங்களை நான் தயார் செய்வதன் நோக்கமே அண்ட வெளியில் மறைந்து கிடக்கும் புதிரைக் கண்டறியத்தான்; மர்ம முடிச்சை அவிழ்ப்பதற்காகத்தான்.

இனியும் உங்கள் பொறுமையைச் சோதிப்பது அழகல்ல.

வாருங்கள் அந்த மர்ம முடிச்சைத் தேடுவோம்.

முதலில், அதற்கான சூழ்நிலை அமைவது அவசியம்.

தனி அறையில், தனிமையில் கதவை அடைத்துப் படுத்துவிடுங்கள்.

உங்கள் சிந்தனையை அண்டவெளிப் பரப்பில் உலவ விடுங்கள். [இச்செயல் சிறுபிள்ளைத்தனமானது என்று எண்ண வேண்டாம்]

நாம் அறிந்த சூரியன் , அதைச் சுற்றிவரும் கோள்கள், நட்சத்திரக் கூட்டங்கள் என அனைத்தையும் அகற்றுங்கள் [கற்பனையில்தான். கற்பனைகள் உண்மைகளைக் கண்டறியக் காரணமாவது உண்டுதானே?].

எண்ணற்ற சூரியக் குடும்பங்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவற்றையும் இல்லாமல் செய்யுங்கள்.

பிரபஞ்ச வெளியின் ஒரு புறத்தில், பல கோடி மைல் பரப்பளவில் பெரும் பாறைத் திட்டு இருக்கலாம். அதையும் மறைந்து போகச் செய்யுங்கள்.

இன்னொரு பெரும் பரப்பு நெருப்புக் கோளமாகவும், மற்றொரு பிரமாண்ட வெளிப் பரப்பு வெள்ளக் காடாகவும் இருக்கக்கூடும். மேலும் ஒரு அண்டவெளிப் பரப்பில், மனதை மயக்கும் மாயாஜாலங்கள் நிகழ்ந்து கொண்டிருத்தலும் சாத்தியம். இப்படி இன்னும் நம்மால் அறியப் படாத எதுவெல்லாமோ எங்கெல்லாமோ இருக்கவே செய்யலாம். எந்த ஒன்றையும் மிச்சம் வைக்காமல் நீங்கள் அகற்றிவிட்டதாகக் கற்பனை செய்யுங்கள். அணுக்களையும் விட்டுவைக்காதீர்கள்.

உங்கள் செயல்பாட்டால், விண்வெளியில், காற்று வெளிச்சம் உட்பட பஞ்சபூதங்களால் [பூதம்? ’மூலக்கூறு’ என்று வைத்துக் கொள்வோம்] ஆன எதுவுமே இல்லை என்றாகிறது.

இப்போது, உங்களின் ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனையை அண்டவெளியில் உலவ விடுங்கள்.

வெளியில் இப்போது எஞ்சியிருப்பது எது? எது? எது?

இருள்?

அதுவும் அகற்றப்படுகிறது.

இனி, இனம் புரியாத ’ஏதோ’ ஒருவித வண்ணம் அல்லது ’ஏதோ ஒன்று’ மிஞ்சியிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். சலிக்காதீர்கள் அதையும் அகற்றுங்கள்.

சிந்தனையாளர்களே, ஆழ்ந்த சிந்தனையின் வசப்பட்ட உங்களிடம் நான் முன்வைக்கும் முதல் கேள்வி இதுதான்..........................................

எல்லையற்றுப் பரந்து விரிந்து கிடக்கும் இந்தப் பிரபஞ்ச வெளி, அதாவது, விண்வெளி இப்போது எப்படி இருக்கும்?

ஒளி, ஒலி என்று எதுவும் இல்லாத, பருப்பொருள் நுண்பொருள், அணுக்கள் என்று எப்பொருளும் இல்லாத ’வெளி’ எப்படியிருக்கும்?

இப்படி எதுவுமே இல்லாமல் ‘வெளி’ என்று ஒன்று இருப்பது சாத்தியமா? [’வெளி’ என்னும் மூலக்கூறே இல்லை என்று ஆகிறதே? பஞ்ச பூதங்களில் ஒன்று அடிபடுகிறது அல்லவா?]

சாத்தியமே என்றால், மனித அறிவால் அதை உணர்ந்து அறிந்து, பிறர் அறிய விளக்கிச் சொல்வது இயலக்கூடிய ஒன்றா?

”ஆம்” என்றால், எப்போது?

”தெரியாது” என்றால், இந்தப் ’புதிர்’ பற்றிச் சிந்திக்கிற மனிதனால், அந்தப் புதிரை விடுவிக்க இயலாத நிலை நீடிப்பது ஏன்? ஏன்? ஏன்?

“இல்லை” என்றால், மனித அறிவுக்கு எட்டாத ஒரு ’மர்மத்தை’ அண்ட வெளியில் மறைத்து வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டுவது எது? அல்லது எவை? அல்லது எவர்? அல்லது எவரெல்லாம்?

அலுக்காமல், சலிக்காமல் சிந்திப்பீர்கள்தானே?

இரண்டு:

பாமரன் முதன் பகுத்தறிவாளன் [ஆத்திகரோ நாத்திகரோ] வரை, “ஏன்?” என்று கேள்விகள் எழுப்பி, விடை தேடி அலையாதவர் எவருமிலர். அவரவர் வாழும் சூழலைப் பொருத்து, அமையும் வசதிகளைப் பொருத்து எழும் கேள்விகளின் எண்ணிக்கை கூடலாம்; குறையலாம்.

இன்ப நினைவுகளில் திளைக்கும் தருணங்களைவிடவும், துன்பங்களில் சிக்கிச் சீரழிந்து மூச்சுத் திணறும் போது நாம் எழுப்பும் கேள்விகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்.

விடைகளை எளிதில் கண்டுவிடுவதற்கான கேள்விகள் மிக மிகக் குறைவு. எத்தனை தேடியும் விடைகளே கிடைக்காத கேள்விகளின் எண்ணிக்கையோ மிக மிக அதிகம்.

முக்கியத்துவம் இல்லாத கேள்விகளுக்கு விடை தெரியாமல் போவதால் நாம்  பாதிக்கப் படுவதில்லை; இழப்பேதுமில்லை. ஆனால், மிகச் சில கேள்விகள் ஆயினும், விடை தெரிந்தே ஆக வேண்டிய அவற்றிற்கு விடைகளைக் கண்டறிய இயலாத போது நாம் நிலைகுலைந்து போகிறோம்.

கணிப்புக்கும் கணக்கீடுகளுக்கும் கட்டுப்படாத நீ.....நீ......நீ........ண்ட, நெடு ஆயுள் கொண்ட இந்தப் பிரபஞ்சத்தில் உள்ளடங்கியிருக்கும் இந்த உலகத்தில் வாழும் வாய்ப்பு நமக்கு இப்போதுதான்  கிடைத்திருக்கிறது.  பிரபஞ்சத்தின் தொடக்க நாள் எதுவாகவோ இருந்துவிட்டுப் போகட்டும், அந்த நாள் முதல் இந்த நாள் வரை, நாம் என்னவாக இருந்தோம்? எங்கே இருந்தோம்?

நாம் எங்கேயும் என்னவாகவும் இருந்திடவில்லையா?

விடை கிடைக்காத கேள்விகளில் இதுவும் ஒன்று என்பது  நமக்குத் தெரியும். இந்த இயலாமைக்காக நாம் கவலைப் படுவதும் இல்லை. ஆனால்....................

மரணத்திற்குப் பிறகு என்னவாகப் போகிறோம் என்பன போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்காத நிலை வரும்போது, அதை எண்ணி மனம் வருந்துகிறது; கிடந்து தவிக்கிறது.

ஆன்மாவோ, உயிரோ, வேறு எதுவோ, ஏதோ ஒன்று நம் உடம்பில் இடம் கொண்டிருப்பது உண்மை என நம்பினால், நாம் செத்துத் தொலைத்த பிறகு, அதன் கதி என்ன? எங்கெல்லாம் அலைந்து திரியும்? எதில் எதிலெல்லாம் அடைக்கலம் புகுந்து அல்லல்படும்? இந்த நிலை எவ்வளவு காலத்துக்கு நீடிக்கும்? என்று பலவாறு சிந்தித்துக் குழம்பி, தெளிவு பெற வழியின்றி மனம் பாடாய்ப்படுவது உண்மை.

’உடம்பில் ஆன்மா, ஆவி, உயிர் என்று எதுவும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லை. மண்டைக்குள் திணிக்கப் பட்டிருக்கும் ‘மூளை’யே எல்லாம்’ என்னும் முடிவுக்கு நம்மை ஆட்படுத்திக் கொண்டால்..................................

உடம்போடு சேர்த்து இந்த மூளையும் அழிந்த பிறகு [மரணத்திற்குப் பின்] நாம் முற்றிலும் இல்லாமல் போகிறோம். ஆனால், இடைவிடாத மாற்றங்களைச் சந்தித்தாலும், பிரபஞ்சமும் பொருள்களும் இயக்கங்களும் இருந்து கொண்டே இருக்குமே. நாம் மட்டும் இனி எப்போதுமே திரும்பி வரப் போவதில்லை என எண்ணும் போது நம் நெஞ்சு வேதனையில் சிக்குண்டு தவியாய்த் தவிப்பது நிஜம்தானே?

சிந்திக்க வைக்கும் ஆறாவது அறிவை நமக்குத் தராமல், மற்ற உயிரினங்களைப் போல, வாழ்ந்து முடித்தோ முடிக்காமலோ செத்தொழியும்படிப் படைத்திருக்கலாமே?

அவ்வாறின்றி, அல்லலுற்றுத் தவிக்கும் நிலைக்கு நம்மை ஆளாக்கிய அதுவை அல்லது அவைகளை அல்லது அவரை அல்லது அவர்களை நான் மனம் போனபடியெல்லாம் ஏசுகிறேன்; நினைத்த போதெல்லாம் திட்டித் தீர்க்கிறேன்.

சிந்தனையாளர்களே,

உங்களுடைய எதிர்வினை என்ன?

மூன்று:

மேற்கண்டன போல, நமக்கு விடை தெரியாத கேள்விகள் எத்தனை எத்தனையோ உள்ளன.

தெரியாவிட்டால் போகிறது என்ற அலட்சியப் போக்குடன் நம்மால் அமைதியுடன் காலம் கடத்த முடிகிறதா?

இல்லைதானே?

“ஏன்? ஏன்? ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளைத் தொடுக்கும் திறனுடன்  படைக்கப் பட்டிடுக்கிறோம் நாம். ஆனால், எத்தனை சிந்தித்தாலும் சில உயிர்நாடிக் கேள்விகளுக்கு நம்மால் விடை காணவே முடியாது என்ற ’புரிதல்’ நமக்கு இருக்கிறது.

கேள்விகள் எழுப்புவதற்கான ’அறிவு’ இருந்தும், ’விடை காணும் திறன்’ இல்லாத ஓர் அவல நிலைக்கு நம்மை ஆளாக்கிய அந்த அதுவை அல்லது அவைகளை அல்லது அவரை அல்லது அவர்களை  நான்  நிந்தித்துக் கொண்டே இருக்கிறேன்; மனத்தளவில் அவ்வப்போது கடின வார்த்தைகளால் சாடிக் கொண்டே இருக்கிறேன்.

சிந்தனையாளர்களே,

நீங்களும் என் போன்றவர்தானா?

******************************************************************************

குறிப்பு: எண்ணங்களை வெளிப்படுத்தப்  பொருத்தமான வார்த்தைகளைக் கையாளும் வகையறியாமல் நான் திணறியிருப்பதை நீங்கள் நன்றாகவே புரிந்துகொண்டிருப்பீர்கள்!

******************************************************************************ற்

Monday, August 13, 2012

கடவுளும் ஒரு கருணைக் கொலையும்

’மரணம்’ என்பது கடவுள் தந்த வேதனை. வலி உணராத மரணம் மனித குலத்தின் சாதனை!
     
கடவுளும் ஒரு கருணைக் கொலையும்! [சிறுகதை]

வீடு திரும்பிய தந்தையும் தாயும் தன்னருகே வந்து அமர்ந்ததும் சந்திரன் கேட்டான்: “வக்கீலைப் பார்த்தீங்களா?”

அவன் அப்பா மட்டும் “இல்லை” என்பதாகத் தலையாட்டினார்.

“அப்படீன்னா இவ்வளவு நேரமும் எங்கே போயிருந்தீங்க?”

அப்பா தலை குனிந்தார். அம்மா சொன்னார்:  ”கோயிலுக்கு”.

“எதுக்கு?”

“ஏம்ப்பா இப்படிக் கேள்வி கேட்டு எங்களை நோகடிக்கிறே? உனக்கு நோய் குணமாகணும்னு வேண்டிக்கத்தான் போனோம்”.

“வேண்டுதல் நிறைவேறிச்சா?”

“நிறைவேறுதோ இல்லையோ, ஏதோ கொஞ்சம் நிம்மதி கிடைக்குது”.

“நிம்மதி கடவுளை வேண்டிக்கிற உங்களுக்குத்தான். தீராத நோயால் பாதிக்கப்பட்ட எனக்கல்ல. என் உடம்புல எதிர்ப்புச் சக்தி ரொம்பவே குறைஞ்சுட்டுது. நோவு அதிகரிச்சிட்டே போகுது. டாக்டர்கள் கை விட்ட என்னை எந்தக் கடவுளும் காப்பாத்தாதுன்னு திரும்பத் திரும்பச் சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்காம, கடவுள் கைவிட மாட்டார் மாட்டார்னு கண்ட கண்ட கோயிலுக்கெல்லாம் போறீங்க; தலைமுடி வளர்த்துத் தாடி மீசை வெச்சவன் காலில் எல்லாம் விழறீங்க. இந்த நிலைமை நீடிச்சா நான் சாகறதுக்குள்ளே உங்க ரெண்டு பேருக்கும் பைத்தியம் பிடிச்சுடும்”.

”அப்படியெல்லாம் சொல்லாதேப்பா” குரல் தழுதழுக்கச் சொன்னார் அப்பா.

”சொன்னா என்ன? நடக்கக் கூடாததையா நான் சொன்னேன்? புருஷனை இழந்த எதுத்த வீட்டு அமுதா மாமியோட பத்து வயசுப் பொண்ணு ஆறு மாசம் முந்தி காணாம போச்சு. போலீசில் சொன்னாங்க; எல்லாப் பேப்பரிலும் விளம்பரம் குடுத்தாங்க. பொண்ணு திரும்பக் கிடைக்கல.  கண்ட சாமியார் காலில் எல்லாம் விழுந்தாங்க. கோயில் கோயிலா அலைஞ்சாங்க. பலன் இல்ல. மனசைத் தேத்திக்கணும். செய்யல. அது அவங்களால் முடியலேன்னும் சொல்லலாம்.  ”கடவுளே என் மகளை மீட்டுக் கொடு..... மீட்டுக் கொடுன்னு சோறு தண்ணி இல்லாம தியானத்தில் மூழ்கிக் கிடந்தாங்க. என்னாச்சு?..............

..............’என் மகளைப் பார்த்தீங்களா, பார்த்தீங்களா சாமி’ன்னு எதிர்ப்பட்டவங்களை எல்லாம் விசாரிச்சுட்டுப் பைத்தியமா அலைஞ்சிட்டிருக்காங்க...........”

கொஞ்சம் இடைவெளியில் தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்ட சந்திரன் தொடர்ந்தான். “நீங்களும் அந்த நிலைக்கு ஆளாயிடக் கூடாதுன்னுதான் ரெண்டு பேரையும் வக்கீல்கிட்டே அனுப்பினேன்” என்றான்.

அம்மா சொன்னார்:  “வக்கீல் மூலமா, உன்னைக் கருணைக் கொலை செய்யக் கோர்ட்டில் அனுமதி வாங்கணும்னு சுலபமா சொல்லிட்டே. இதுக்கு உன்னப் பெத்த எங்க மனசு இடங்கொடுக்குமா ராசா?”

”இடம் கொடுக்காதுதான். வேற வழி இல்லியேம்மா. இப்போ ஓரளவுக்கு நோவைத் தாங்கக் கூடிய சக்தி எனக்கு இருக்கு. நாளாக ஆக, தாங்குற சக்தி குறையக் குறைய வேதனை அதிகமாகும். அப்புறம் அணு அணுவா துடிச்சிச் சாக வேண்டிய பரிதாப நிலைக்கு நான் ஆளாயிடுவேன். அப்படியொரு நிலைக்கு ஆளாகாம இப்பவே நிம்மதியாச் செத்துடணும்னு ஆசைப்படுறேன். என் விருப்பத்தை இனியாவது நிறைவேத்தப் பாருங்க...........

...........அப்பா, அம்மா வேண்டாம். ஒரு தாய் மனசு எந்த வகையிலும் இதுக்கெல்லாம் சம்மதிக்காது. நீங்க மட்டுமே போங்க. நான் சொன்ன லாயரைப் பாருங்க. செய்ய வேண்டியதைச் சீக்கிரம் செஞ்சி முடிங்க. நான் சீக்கிரமா சாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கேன்” என்றான் சந்திரன்.

பொங்கி வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இயந்திர கதியில் நகர முற்பட்ட தந்தையிடம்,  ”அப்பா, மனசு மாறி மறுபடியும் கோயிலுக்குப் போயிடாதீங்க. என்னை நிம்மதியா சாகடிக்க டாக்டர்களால்தான் முடியும் ; கடவுளால் முடியாது” என்றான் மெல்லிய வேதனை கலந்த புன்முறுவலுடன்.

அதிகம் பேசிவிட்ட களைப்பில் கண்மூடி மயக்கத்தில் ஆழ்ந்தான்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Saturday, August 11, 2012

கவியரசு கண்ணதாசன் சாகவில்லை!!!

       கவியரசு கண்ணதாசன் சாகவில்லை!!!

கடவுள் நம்பிக்கை மற்றும் அது சார்ந்த மூட நம்பிக்கைகள் பற்றிய ஆய்வுரைகள் மட்டுமே இடம் பெறுகிற என் பதிவுகளில், பெயர் குறிப்பிட்டு, ஒரு மதத்தையோ மதவாதியையோ தனி மனிதரையோ விமர்சனம் செய்ததில்லை.

இன்று மட்டும் விதிவிலக்காக ஒரு பதிவு.

இது இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் பற்றியது.

‘அர்த்தமுள்ள இந்துமதம்’ அவர் படைத்த, பல்லாயிரக் கணக்கில் விற்பனையான ஒரு நூல். ’தினத்தந்தி’  நாளிதழ் அதைத் தொடராக வெளியிட்டு வருகிறது [சனிதோறும்].

இன்று வெளியான ’நாத்திகவாதம்’ என்னும் தலைப்பிலான பகுதியை மீண்டும் படிக்க நேர்ந்தது.

அதன் விளைவாக என் மனதில் முகிழ்த்த சில எண்ணங்களை உங்களுடன்  பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமே இப்பதிவை எழுதக் காரணம்.

‘கடவுள் இல்லை என்று மறுப்பவன் காலகாலங்களுக்கு உயிரோடு இருப்பானானால், ‘இல்லை’ [கடவுள் இல்லை] என்ற எண்ணத்தையே நான் இன்றும் கொண்டிருப்பேன்’ என்று கட்டுரையின் தொடக்க நிலையிலேயே குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.

அவரின் இந்தக் கூற்றுக்கு விளக்கம் தேவையில்லை.

‘அனைவரும் [நாத்திகர்கள்] பெறவேண்டிய தண்டனையைப் பெற்றுப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள்’ என்கிறார்.

என்ன தண்டனை பெற்றார்கள் என்பதை அவர் விளக்கவில்லை. போகட்டும்.

நாத்திக வாதம் பேசியவர்கள் போய்விட்டார்கள். ஆத்திகர்கள்?

’கடவுள் உண்டு’ என்று சொன்ன ஆத்திகர்கள் எவரும் ‘போகவில்லை’ என்றுதானே இதற்குப் பொருள்?

அந்த உத்தமர்கள் எல்லாம் இந்த உலகில் எங்கெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. இன்னும் சாகாமல் நம்மில் ஒருவராய் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கிற கவிஞர், நம்முன் தோன்றி, அந்தப் புண்ணியவான்களையெல்லாம் கண்ணாரக் காணச் செய்து நம் எல்லோரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவாரா?

எப்போது?

‘மேற்கத்திய நாடுகளில்,கிறித்துவத்திற்கு எதிராக நாத்திகர்கள் தோன்றினார்கள். அவர்களை எதிர்த்துக் கிறித்துவ மதம் போர் புரிந்தது. இஸ்லாத்தை எதிர்த்து நாத்திகம் தோன்றவே முடியாதபடி அது பயங்கர ஆயுதத்தோடு நிற்கிறது [இஸ்லாமியர்கள் இதை ஏற்கிறார்களா?] என்கிறார்.

மேலும் சொல்கிறார்: ‘இந்து மதத்தில் நாத்திகம் தோன்றுவது சுலபம். காரணம், அது சாத்விக மதம்’.

பல்லவர் காலத்தில், ஆயிரக் கணக்கில் சமண மதத்தவரை கழுவில் ஏற்றிக் கொன்றது இந்துமதம்தானே என்ற உண்மையை, எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிற கவிஞரைக் கண்டு பிடித்து யாரேனும் எடுத்துச் சொல்வார்களா? [இந்தப் புண்ணிய தேசத்தில், அண்மைக்காலத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை இப்போது நினைவுகூர வேண்டாம். இந்து மதத்திற்கு எதிரான பதிவு இது என்று தயவு செய்து நினைக்க வேண்டாம்]

நாத்திகத்தின் முக்கிய நோக்கமே கடவுள் மறுப்புதான் என்ற உண்மையையும் அவர்கள் அவரிடம் கூறுவார்களா? 

ஏற்கனவே நாத்திகர்கள் எல்லாம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள் என்று சொல்கிற கவிஞர், நாத்திகத்தில் போற்றத் தக்க புத்தகம் இல்லை என்றும் சாதிக்கிறார்..

’போற்றத்தக்க’ புத்தகம்தான் இல்லை என்கிறாரா, இல்லை, நாத்திகம் பற்றிப் ‘புத்தகமே இல்லை’ என்கிறாரா? அவரைக் காணக் கொடுத்து வைப்பவர்கள் கேட்டுச் சொல்வார்களா?

இங்கர்சால் போன்றவர்கள் நாத்திக வாதத்தில் உறுதியாக இல்லையாம்.
அது என்ன உறுதியாக இருப்பது? அவர் நாத்திகர் என்பதிலும் கவிஞருக்குச் சந்தேகமா?

கடவுளை உறுதியாக மறுப்பவர்கள் என்று, பெர்னார்டு ஷா, சிக்மண்ட் ஃபிராய்டு, ரஸ்ஸல், நேரு, பெரியார், கோவூர் என்று நிறைய அறிஞர்களைச் சொல்கிறார்களே, அவர்களில் சிலரையாவது இந்த உத்தம சீலருக்குத் தெரியுமா?

நாத்திகனாக இருந்தவரை என்னால் அதிகம் பாட முடியவில்லை என்கிறார்!

ஓ.........கவிஞரே, கவிதை எழுதுவதற்கும் ஆத்திக நாத்திகம் பேசுவதற்கும் என்னய்யா சம்பந்தம்?

ஆத்திகன் மனசு மலர் போல மென்மையானது; கலையுணர்வு மிக்கது. நாத்திகன் மனது கருங்கல் பாறை போன்றது; உணர்ச்சியற்றது என்கிறீரா? நீர்தான் இன்னும் உயிர் வாழ்கிறீரே, நேரில் வந்து சொல்லுமய்யா.

கவிஞர் இன்னும் என்னவெல்லாம் திருவாய் மலர்கிறார் பாருங்கள்..............

‘நாத்திகன் பண்பாடு அறியாதவன்; பவித்திரமில்லாதவன்; யாருடைய பெண்டாட்டியையும் கை வைத்துவிடுவான்’.

‘எதுவும் தாரம்தான் என்று கருதுகிறவன் நாத்திகன்’

இதற்கு மேலும் இந்த ஆள் போதையில் [புகழ் போதை என்று வைத்துக் கொள்ளுங்கள்] கிறுக்கியிருப்பதையெல்லாம் எடுத்துக் காட்டி விமர்சனம் செய்ய என் மனம் இடம் தரவில்லை.

நீங்களே ஒரு முறை படித்துவிடுங்கள்.

படித்து முடித்ததும்.....................

அவரைப் போற்றுவதோ, அவருக்காகப் பரிதாபப் படுவதோ உங்கள் மனப் பக்குவத்தைப் பொறுத்தது.

குறிப்பு: அவசரகதியில், சற்றே உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவு இது. நிறைவான வடிவமைப்பு இல்லை. குறையோ குற்றங்களோ இருப்பின் பொறுத்துக் கொள்ளுங்கள்.

பொறுமையுடன் படித்ததற்கு நன்றி.

*********************************************************************************Wednesday, August 8, 2012

கடவுளைக் காட்டிய மகான்?!?!

               கடவுளைக் காட்டிய மகான்?!?!

மனித மூளையில் கடவுள் பற்றிய சிந்தனை அரும்பிய நாளிலிருந்து இந்நாள் வரை, ‘கடவுள் உண்டா, இல்லையா?’  என்னும் விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அனைவரும் ஏற்கும்படியான ‘முடிவு’ இதுகாறும் எட்டப்படவில்லை.

“அனைத்தையும் இயக்கவல்ல, ஆறறிவைக் காட்டிலும் மேம்பட்ட அறிவு படைத்த,  ’விவரிப்பு’க்கு அப்பாற்பட்ட  ஏதோ ஒன்றன் ’இருப்பை’க் ’கடவுள்’ என நான் ஏற்கிறேன்; அவரை வழிபடுகிறேன். அதனால் விளையும் பயன் பற்றி நான் கவலை கொள்ளவில்லை” என்று ஒரு கடவுள் நம்பிக்கையாளர், அதாவது ஓர் ஆத்திகர் சொன்னால், அவர் மீது எவ்வகையிலும் நாம் குற்றம் சுமத்த இயலாது.

அவர் பிறரிடம்,  ”சிந்தியுங்கள். உங்களுக்கும் நம்பிக்கை பிறக்கலாம்” என்று பரிந்துரை செய்யும் போதும் அவர் குற்றமிழைத்தவர் ஆகமாட்டார். “கடவுளை  வழிபடாவிட்டால் துன்பங்களிலிருந்து விடுபட முடியாது; பல பிறவிகள் எடுத்துப் பாவங்கள் இழைத்து இறுதியில் நரகம் சேர்வாய்” என்பதான பிரச்சாரங்களில்  இறங்குகிற போது, கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்தும் வியாபாரி ஆகிறார் அவர்.

“கடவுளை நான் பார்த்திருக்கிறேன்” என்று மக்களிடம் அப்பட்டமாகப் பொய்யுரைக்கும் போது அவர் மக்களுக்குத் தீங்கிழைக்கும் குற்றவாளி ஆகிறார்.

பொய்களை மெய் போலச் சொல்லிச் சொல்லி, பிறர் மூளையில் அதைப் பதியச் செய்து, அறிவை ஊனமுறச் செய்வதும் ஒரு குற்றச் செயல் அல்லவா??

இம்மாதிரிக் குற்றச் செயல் புரிந்தோர் இம்மண்ணில் கணிசமாக வாழ்ந்திருக்கிறார்கள்; இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர்,  ’மகான்கள்’ என்று போற்றப்படுகிறார்கள்.

 பாரத தேசத்தின் மிகப் பெரிய மகானாகப் போற்றப்பட்டவர் அவர் [மதம், மதவாதிகள் பெயர்கள் தவிர்க்கப் படுகின்றன]. ”விழிமின்! எழுமின்!” என்று இளைஞர்களிடையே விழிப்புணர்வைத் தூண்டிய இவரின் சீடரைக் கொண்டு இவரை நினைவு கூர்வது மிக எளிது.

இவர் கடவுளைக் கண்களால் கண்டவர் என்று இவரைப் பின்பற்றுவோர் சொன்னார்கள்; இன்றும் சொல்கிறார்கள்.

கடவுளை மனதில் இருத்தி, தன்னை இழந்த நிலையில் இவர் தியானத்தில் மூழ்கியிருந்த போது, ஒரு குதர்க்கவாதி இவர் தொடை மீது நெருப்புத் துண்டத்தை வைத்துச் சோதிக்க, சிறிது நேரம் கழித்தே இவர் விழித்துப் பார்த்தாரென்று சொல்லி, இவரின் ஆழ்ந்த பக்தியுணர்வை இன்றளவும் சிலாகிப்பவர்கள் உண்டு!

இவரைச் சந்தித்த ஒரு நாத்திகன், [‘குதர்க்கவாதி’ என்றே வைத்துக் கொள்ளுங்களேன்] ”நீங்கள் கடவுளைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். உண்மையா?” என்றான்.

“ஆம்” என்றார் மகான்.

“எனக்குக் காட்ட முடியுமா?”

“முடியும். என் பின்னால் வா”.

அவர் முன்னே செல்ல, குதர்க்கவாதி பின்னால் சென்றான்.

இருவரும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற ஓர் ஆற்றை அடைந்தார்கள்.

ஆற்றுக்குள் இறங்கினார் மகான்.

அவரைப் பின் தொடர்ந்த குதர்க்கவாதி, “கடவுளைக் காட்டுவதாகச் சொல்லி ஆற்றுக்குள் இறங்குகிறீரே?” என்று தன் ஐயத்தை வெளிப்படுத்தினான்.

”கடவுளை ஆற்று நீருக்குள் பார்க்கலாம்” என்ற மகான், “நீருக்குள் முழுகிப் பார்” என்றார்.

மிரட்சியோடு நீருக்குள் மூழ்கிய அவனை மேலே எழ முடியாதவாறு அமுக்கிப் பிடித்துக் கொண்டார்.

நேரம் செல்லச் செல்ல குதர்க்கவாதிக்கு மூச்சு முட்டியது. தன்னை விடுவித்துக் கொள்ளப் போராடினான். மகானோ தன் பிடியைத் தளர்த்தவே இல்லை.

’இந்நிலை இனியும் நீடித்தால் இவன் உயிர் பிரியும்’ என்று நினைத்த அவர், தன் பிடியைத் தளர்த்தினார்.

’குபீர்’ என்று மேலெழும்பிய குதர்க்கவாதி, சிறிது நேரம் மூச்செறிந்து ஆசுவாசப் படுத்திக் கொண்ட பின்னர், “கடவுளைக் காட்டுவதாகச் சொல்லி என்னைக் கொன்றுவிடப் பார்த்தீரே?” என்றான் குரலில் சூடு பறக்க.

அவன் கேள்வியை அலட்சியப் படுத்திய மகான், “நான் உன்னை விடுவித்ததும் அசுர வேகத்தில் மேலெழும்பினாயே, அது ஏன்?” என்றார்.

“தாமதித்திருந்தால் என் உயிர் போயிருக்கும்” என்றான் அவன்.

“ நீ உன் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் இத்தனை வேகம் காட்டினாய். இல்லையா?”

“ஆம்”

“இதே வேகத்தைக் கடவுளைக் காணும் முயற்சியில் நீ காட்டினால் அவரைக் காணலாம்” என்றார் அவர்.

குதர்க்கவாதி தலை குனிந்து நின்றான் என்றோ, மகானிடம் மன்னிப்புக் கோரினான் என்றோ உண்மைச் சம்பவம் என்று சொல்லப் படுகிற இக்கதை முற்றுப் பெறுகிறது.

இக்கதை மிகப் பல முறை மேடைகளில் சொல்லப்பட்டது. மிகப் பலர் கேட்டு ரசித்தார்கள். மகானின் மதி நுட்பத்தைப் போற்றினார்கள்.

அவர்கள் எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டார்கள்.

குதர்க்கவாதிக்குக் கடவுளைக் காட்டுவதாகச் சொன்ன மகான்  ஏன் காட்டவில்லை?

மிகக் கடுமையாக முயற்சி செய்தால் கடவுளைக் காணலாம் என்று சொல்வதற்கு ஒரு மகான் தேவையா?

அவ்வாறு முயன்று யாரேனும் கடவுளைக் கண்டதுண்டா? மகான் அதற்கு ஆதாரம் காட்டினாரா?

”ஓர் அடர்ந்த காட்டுக்குள் தனியாகச் செல்கிறாய். ஒரு புலி விரட்டுகிறது. தப்பி ஓடுவதில் நீ எத்தனை வேகம் காட்டுவாய்? அப்படியொரு வேகத்தைக் காட்டினால்........”

”அருகில் யாருமில்லை என நினைத்து ஓர் இளம் பெண்னைக் கட்டியணைத்துவிட்டாய். அவள் அபயக் குரல் எழுப்ப, எங்கிருந்தோ பத்து பேர் வந்துவிட்டார்கள். அவர்களிடம் பிடிபடாமலிருக்க நீ ஓடுகிறாய். அப்போது காட்டுகிற வேகத்தை..............”

இப்படி இன்னும் நிறையச் சொல்லலாம். ஆழ்ந்து சிந்திக்கத் தெரிந்தால் போதும். அதீத ஞானம் அவசியமில்லை. ஞானிகளும் மகான்களும் நமக்குத் தேவையில்லை.

#################################################################################