திங்கள், 31 ஆகஸ்ட், 2020

இப்படியும் தமிழை அழிக்கலாம்!!!


#பக்தியும் ஹ்ருதயமும் : தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி]

...பக்தியின் அன்பும் நைச்ய பாவமும் உண்டாகி விருத்தியாகிறபோது இதுவரை பண்ணின ஸாதனைகளால் லேசாக, அதாவது ஒல்லியாக ஆன மனஸ், புத்தி ஆகிய இரண்டையும் அஹங்காரம் அப்படியே ஹ்ருதயத்திற்குள் உறிஞ்சிக் கொண்டுவிடும். பக்தியில் – ஸரியான, ஸத்யமான பக்தியில் – ஆத்ம நிவேதனம், [அதாவது] பரமாத்மாவுக்கு ஜீவாத்மா தன்னை நிவேதனம் செய்து கொள்வதான பக்தியில் – புத்திக்கு வேலை இல்லை என்று எல்லோருக்கும் தெரியும் அது மட்டுமில்லை. அங்கே மனஸுக்கும் வேலை இல்லை. ஸங்கல்ப, விகல்ப மயமானதே மனஸ். அந்த இரண்டுக்கும் நிஜமான பக்தியில் வேலை இல்லை. ஸங்கல்ப, விகல்ப மயமானதே மனஸ். அந்த இரண்டுக்கும் நிஜமான பக்தியில் வேலை இல்லை.

‘உன் ஸங்கல்பம்’- ‘Thy will’ என்று கிடக்கிற நிலை அது. பக்தியுணர்ச்சி மனஸ் உண்டு பண்ணி, அநுபவிக்கிற அநேக உணர்ச்சிகளைச் சேர்ந்ததில்லை. பக்தி பாவங்கள் என்பதாக வாத்ஸல்யம், மதுரம், தாஸ்யம் என்று பலது சொன்னாலும் இவற்றுக்கும் ஸாதாரணமாக ஒரு தாயார் குழந்தையிடம் வைக்கும் வாத்ஸல்யம், பதி பத்னிகள் பரஸ்பரம் கொண்டிருக்கும் ப்ரேமை, ஒரு விச்வாஸ வேலைக்காரன் ப்ரபுவிடம் காட்டுகிற பணிவு ஆகியவற்றுக்கும் மலைக்கும் மடுவுக்குமாக இருக்கும். அடுத்தகத்து குழந்தையிடம் ஒரு ஸ்த்ரீ வைக்கும் ப்ரியத்திற்கும் ஸொந்தக் குழந்தையிடம் வைக்கும் வாத்ஸல்யத்திற்கும் எத்தனை வித்யாஸமிருக்கும்? அதைவிட ஜாஸ்தி இவளுடைய வாத்ஸல்யத்திற்கும் பகவானிடம் ஒரு பரம பக்தர் காட்டுகிற பக்தி வாத்ஸல்யத்திற்கும் இருக்கும்! இப்படியேதான் ப்ரேமை, தாஸ்யம் முதலானவை பக்தி ரூபமாக அவனிடம் செலுத்தப்படும்போதும்!நமக்கே எவன் மூலமோ அவனைக் குறித்து உண்டாவதால் இந்த உணர்ச்சிகள் மனஸின் உணர்ச்சிகளை விட மஹா சக்தி வாய்ந்த தனி க்ளாஸான பரிசுத்த பாவங்களாக இருக்கும்.

ஆக, நிஜமான பக்தி மனஸின் கார்யமில்லை. மனஸின் ஆட்டங்கள் இல்லாமல், இன்னும் ஆழமாக ஒருபோதும் ஆடாமல் ‘நான்’என்கிற ஸ்திரமான மூல உணர்ச்சியோடு உள்ள அஹங்காரத்திலிருந்தே உண்டாவது பக்தி. அதோடு அந்த அஹங்காரத்தைப் போஷித்து வளர்த்துக் கொள்வதற்காக இல்லாமல், அதை ஒல்லி பண்ணி ஆத்ம ஸ்தானத்திற்குள் போய்த் தனக்கும் மூலமான ஒரே தானிடம் கரையப் பண்ணுவதற்காக உண்டாவது. கரைய வேண்டும் என்று ஆசைப்படுவதற்காக ஒன்று இருந்தாதானே ஆகணும்? இருந்துதானே தொலையணும்?என்பதற்காக இருக்கிற ஒன்றாக அப்போது அஹங்காரம் ஆகிவிடும். அஹங்காரம் பக்தி செய்வதற்காகவே அஹங்காரம் இருப்பதாக இருக்கும்.

நினைவு மறக்காமலிருக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அத்வைத லக்ஷ்யத்தில் வருகிற இந்த பக்தி ஸாதாரணமாக பக்தி என்று சொல்லப்படுவது போல வித வித ரஸாநுபவத்தையே லக்ஷ்யமாகக் கொண்டதல்ல என்பது. அப்போது அந்த ரஸாநுபவத்திற்காக ஒரு தனி ஜீவ நானை விடாமல் வைத்துக் கொண்டேதான் இருக்க வேண்டியிருக்கும். பக்தியே முடிவு. அதுவே முக்தி என்கிற ஸித்தாந்திகள் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் இங்கேயோ, சாச்வதமாக பக்தி பண்ணிக் கொண்டேயிருப்பதற்காக சாச்வதமாக பக்தி பண்ணிக் கொண்டேயிருப்பதற்காக சாச்வதமாக பக்தி பண்ணிக் கொண்டேயிருப்பதற்காக சாச்வதமாக அஹங்கார ஜீவியும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை எடுபட்டுப் போய்விடுகிறது.

அஹங்காரத்தை அன்பினால் கரைக்கிறதல்லவா இங்கு உத்தேசமே? சாச்வதமாக எப்படி கரைக்க முடியும்? கரைந்து கரைந்து ஒரு பீரியடுக்கு அப்புறம் கரைய ஒன்றுமே இல்லை என்றுதானே [அஹங்காரம்] அழிந்துவிட வேண்டியிருக்கும்? மேலே மேலே பக்தியை ‘கோட்டிங்’ கொடுத்துக் கொண்டு போவது என்றால் சாச்வதமாக அப்படிப் பண்ணிக் கொண்டு போகலாம். ‘கோட்டிங்’ காக இல்லாமல், ஆஸிட் போட்டுப் போட்டுக் கரைக்கிறதென்றால் அது எப்படி சாச்வதமாயிருக்கும்? இங்கே அஹங்காரத்திற்கு ஆஸிடாகத்தான் பக்தி. அப்படி பக்தியில் தன்னைக் கொடுத்துக் கொள்ளும்போது அஹங்காரத்தின் ஸ்தானமான ஹ்ருதயத்தில் அஹங்காரம் மெலிந்து மெலிந்து பக்தியே வியாபித்து அது பக்தியின் ஸ்தானந்தான் என்னும்படியாக ஆகிவிடும்.

அப்படி பக்தியில் பக்குவமாகி ஆச்ரமம் வாங்கிக் கொண்டு பக்தியோடுகூட – அதாவது அஹங்காரத்தை லக்ஷ்யத்திலே கொஞ்சம் கொஞ்சமாக அன்போடு கரைத்து – ச்ரவண மனன நிதித்யாஸனங்களைப் பண்ணிக் கொண்டே போனால் பக்தி ஹ்ருதயத்திலே நன்றாக, வேகமாகப் பொங்கிக்கொண்டு வருவதில் அஹங்காரம் என்கிற உணர்ச்சி அடிபட்டுப் போகிறதோடுகூட, அது முழுக்க அடிபட்டுப் போகிறதற்கு முந்தியே, ஹ்ருதயம் என்று பௌதிகம் மாதிரி இருக்கிற ஸ்தானம் பக்தியினுடைய ஸூக்ஷ்ம அணுக்களாலேயே ரொம்பினதாக ஆகிவிடும்.

அஹங்கார ஸ்தானமான ஹ்ருதயத்தைப் பற்றி உபநிஷத்துக்களில் வருகிற இடங்களிலெல்லாம் ஆசார்யாள் அதை ‘மாம்ஸ பிண்டம்’ என்றே சொல்லியிருப்பார்*. ஆனாலும் அப்படிச் சொன்னதால் முழுக்க ஸ்தூலமான அவயம் என்று நினைத்துவிடக் கூடாது. அதனால் தான் ‘பௌதிகம் மாதிரியான ஸ்தானம்’என்றது. ரத்தத்தைப் பாய்ச்சுகிற ஹ்ருதயந்தான் முழுக்க ஸ்தூலம். இந்த ஹ்ருதயமோ ஸ்தூலத்திற்கும் ஸூக்ஷ்மத்திற்கும் நடுவில் வருவது. யோகிகள் சொல்லும் சக்ரங்கள், நாடிகளில் அநேகம் முழு ஸூக்ஷ்மம். எந்த எக்ஸ்-ரேயிலும் அவை அகப்படுவதில்லை. இந்த ஹ்ருதயமும் எக்ஸ்-ரேயில் விழாதுதான்.

ஆனாலும் அந்த அளவு ஸூக்ஷ்மமில்லை. ஸ்தூல ஹ்ருதயத்தால் நடக்கும் ரத்த ஒட்டம், ஸ்தூலமான ஸ்வாச கோசத்தால் நடக்கும் மூச்சின் ஒட்டம், ஸ்தூலமான மூளையின் ஏவுதல்களின்படி நடக்கும் நாடிகளின் ஒட்டம், ஸ்தூலமான ஜீர்ணக் கருவிகள் முதலியவற்றிலும், அவற்றின் குழாய்களிலும் நடக்கும் கார்ய ஒட்டங்கள் எல்லாவற்றையும் சேர்த்துப் பிடித்து ஒரு தினுஸாகக் கன்ட்ரோல் பண்ணி ஜீவஸத்தை ஊட்டுவது இந்த ஹ்ருதயந்தான். அதிலிருந்து புறப்படும் நாடிகளைக் கொண்டு இந்த [கன்ட்ரோல் செய்யும்] கார்யத்தைப் பண்ணுகிறது. ஜீவனின் நான் என்ற உணர்ச்சியில்லாமல் ஒரு சரீரத்தில் என்ன நடக்க முடியும்? அதனால்தான் அஹங்கார ஸ்தானமான ஹ்ருதயத்திற்கு இந்த பவர் கொடுத்திருக்கிறது. ஸ்தூல சரீர விஷயங்களே ஜீவ ஸமூஹத்திற்கு முக்யமாக இருந்து, அவற்றையே இது கண்காணித்து நடத்திக் கொடுக்க வேண்டியிருப்பதாலோ என்னவோ இதையும் ‘ஸெமி’ஸ்தூலமாக வைத்திருக்கிறது.

அப்படி [ஒரளவு ஸ்தூலமாக] இருப்பதே அஹங்காரம் கரையணும் கரையணும் என்று அப்யாஸம் பண்ணும்போது ஸூக்ஷ்மமாகி ‘ஆகாசம்’ என்னும்படி ஆகும். இன்னும் அதிஸூக்ஷ்மமான காரண ஆகாசமாக ஆத்ம ஸ்தானம் இருக்கிறது – ஹ்ருதயத்தின் மைய த்வாரமாக!அந்த ஸூக்ஷ்ம தரத்திற்கு ஸ்தூலம், ஸெமி-ஸ்தூலம் எதுவும் நேரே போக முடியாது. நன்றாக க்ருசப்படுத்தி ஒல்லி பண்ணி ஸூக்ஷ்மமாக்கித்தான் ஸூக்ஷ்மதரத்திற்குள் பிரவேசிக்க வைக்க முடியும். அந்த அஹங்கார கார்ச்யத்தை [மெலிதாக்குவதை]த் தான் பக்தி என்பது செய்கிறது.
=====================================================================
நன்றி: http://www.kamakoti.org/tamil/dk6-118.htm

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

‘ப.சி’[ப.சிதம்பரம்]யின் கேள்விக்குப் ‘பசி’யின் பதில்![100% நகைச்சுவைப் பதிவு]

“கொரோனாத் தொற்று நோய் கடவுளின் செயல்”னு நம் நாட்டு நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சொல்லி வைக்க[கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற ஜி.எஸ்.டி. 41ஆவது குழு ஆலோசனைக் கூட்டத்தில்], நம் முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம்[‘ப.சி’], “2017-2018, 2018-2019, 2019-2020 ஆண்டுகளுக்கான உங்களின் தவறான பொருளாதார நிர்வாகத்திற்கு, காரணமானவரும் கடவுளா?[அல்லது நீங்களா?]”னு கேட்டிருக்கார்(தினத்தந்தி, 30.08.2020)

கொஞ்சமே கொஞ்சம் யோசிச்சிருந்தா நிர்மலா அம்மா அப்படிப் பேசியிருக்க மாட்டாங்க. சிதம்பரம் அய்யாவும் கேள்விக்கணை தொடுத்திருக்க மாட்டார். கொரோனா தொற்றுக்கு மட்டுமல்ல, அம்மாவின் பொருளாதாரச் சீர்கேட்டுக்கு[‘ப.சி’யின் கருத்து] மட்டுமல்ல, பிரபஞ்ச நிகழ்வுகள் அத்தனைக்கும் கடவுள்தான் காரணம் என்பது இருவருக்குமே புரிந்திருக்கும்.

இதையே சற்று விரிவாகவும் தெளிவாகவும் சொன்னால்.....

‘நாம் எல்லோரும் தினம் தினம் தின்னுறது, தூங்குறது, குறட்டை விடுறது, கன்னிப் பெண்களுடன் ‘கபடி’ விளையாடுவதாகக் [கிழவர்கள்] கனவு காண்றது[ஹி...ஹி...ஹி!],  விழிக்கிறது, ஒன்னுக்கு ரெண்டுக்குப் போறது, வேலை பார்க்குறது, வெட்டி அரட்டை அடிக்கிறது, சளிப் பிடிச்சா இருமுறது, காறித் துப்புறது, ஒருத்தனை ஒருத்தன் கட்டிப்பிடிச்சிக் குழாவுறது, காலை வாருறது, கல்யாணம் கட்டிக்கிறது, பிள்ளை பெத்துக்கிறது, கள்ளக்காமம் பண்ணுறது, வேண்டாதவனைத் தீர்த்துக்கட்டுறது, இருக்கிறவரைக்கும் கும்மாளம் அடிச்சுட்டுத் தீராத நோய் நொடின்னு வதைபட்டுச் செத்துச் சுடுகாடு போய்ச் சேருறது உட்பட நாம செய்யுற அத்தனை காரியங்களுக்கும் கடவுளே காரணம். எல்லாம் அவன் செயல்.’

'இப்படியெல்லாம் கடவுளை நக்கல் பண்ணி இவன் எழுதுறானே'ன்னு என் மேல கோப்படாதீங்க. காரணம்.....

இதை எழுதியவன் நானல்ல; நான் வெறும் கருவிதான். எழுத வைத்தவர் கடவுள்.

அவனின்றி அணுவும் அசையாது! ஹ...ஹ...ஹா!!
=====================================================================
பின் குறிப்பு:

“நாலு பேர் உன் வீடு தேடி வந்து உன்னை உதைச்சா, ‘ஏன் என்னை உதைக்கிறீங்கன்னு?’ கேட்டுடாதே. உன்னை உதைச்சது கடவுள். அவங்க வெறும் கருவிதான்” என்று எவரெல்லாமோ முணுமுணுப்பது அசரீரியாகக் கேட்டது... கேட்டுக்கொண்டிருக்கிறது. வம்பே வேண்டாம்னு, தலைப்பில் ‘நகைச்சுவைப் பதிவு’ சேர்த்துட்டேன். ஹி...ஹி...ஹி!

சனி, 29 ஆகஸ்ட், 2020

ஊடக அதர்மம்!!!

இன்று[29.08.2020] காலையில், தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றில் கீழ்வரும் செய்தி வெளியானது.

‘அருப்புக்கோட்டையில் [கடவுள்] சிவன் கண்  திறந்தார். தரிசனம் பண்ண அலைமோதியது பக்தர்கள் கூட்டம்’

இது தொடர்பான செய்தி வழக்கமாகக் காலையில் நான் வாசிக்கும் நாளிதழில் இல்லை. இணையத்தில் தேடினேன். ஒரு ‘காணொலி’ மட்டுமே கிடைத்தது. அதில், ஒரு சிவலிங்கத்தின் மீது  இடப்பட்ட சந்தனப் பொட்டுக்கு நடுவில் குங்குமம் வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அது, நெற்றிக்கண் திறந்திருப்பது போல்[பூக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது] காட்சியளித்தது. அவ்வளவுதான். சிவலிங்கம் கண் திறக்கவும் இல்லை; விழித்துப் பார்க்கவும் இல்லை


உண்மை இதுவாக இருக்கையில், ஊடகர்கள் ஏன் இவ்வாறெல்லாம் தலைப்புக் கொடுத்துச் செய்தி வெளியிடுகிறார்களோ தெரியவில்லை.

சிவலிங்கத்திற்கு[சிலைக்கு]க் கண் இருக்கிறதா? அது திறந்திருந்தது என்பது உண்மை நிகழ்வா? ஊடக நிருபர் அதை நேரில் கண்டாரா? 

இம்மாதிரிக் கேள்விகள் கேட்டால் இவர்களிடமிருந்து பதில் கிடைக்காது.

அம்மன் சிலையில் கண்ணீர் வழிந்ததாகவும் அடித்துவிடுகிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால், வழிந்த கண்ணீரை என் கைக்குட்டையால் துடைத்தேன் என்றுகூட எழுதுவார்கள் போலிருக்கிறது.

‘ஆண்டுதோறும், ஆண் பெண் சாமிகளுக்குக் கல்யாணம் கட்டி வைப்பது போல, சிவலிங்கத்திற்கு அல்லது, சிலைக்குச் சந்தனப் பொட்டின் நடுவே குங்குமம் வைத்து, கண் திறப்புச் செய்து[செயற்கையாக] விழாக் கொண்டாடுவது ஒரு வழக்கமான நிகழ்வு. நிகழ்ந்ததை நிகழ்ந்தவாறே எழுதுவதுதானே ஊடக தர்மம்? இந்தத் தர்ம நெறியை எத்தனை பேர் பின்பற்றுகிறார்கள்?

கள்ளழகர் சிலையை வைகையில் இறக்குவதும் ஒரு வழக்கமான நிகழ்வுதான். சிலை ஆற்றில் இறக்கப்பட்டது என்று எழுதினால் கள்ளழகர் கோபிக்கமாட்டார். ‘கள்ளழகர் வைகையில் இறங்கினார்’ என்று எழுதுவதன் மூலம் எதைச் சாதிக்க நினைக்கிறார்கள் இவர்கள்?

இம்மாதிரித்  ‘திரிப்பு’ வேலைகளை இவர்கள் தொடர்ந்து செய்வதால்.....

“கண் திறந்த கடவுள் இமைகளை அசைத்தாரா? கண் சிமிட்டினாரா? எத்தனை தடவை? எப்போது மீண்டும் கண் மூடினார்? கண் திறந்த அவர் வாய் திறந்து பேசினாரா? கொரோனா பற்றி ஏதும் சொன்னாரா?” -இப்படியெல்லாம் நமக்குக் கேட்கத் தோன்றுகிறது.

கேட்டால், மனம் புண்படுவதாகச் சொல்பவர்கள் பத்திரிகைக்காரர்கள்[ஊடகர்கள்] அல்ல; பக்தர்கள்தான். கேட்பவன் மீது வழக்குத் தொடுப்பவர்களும் அவர்கள்தான்; முடிந்தால் அடி உதை கொடுத்துத் தண்டனையும் வழங்குவார்கள்.

ஆக, பக்தர்களை வன்முறையில் ஈடுபடத் தூண்டுவதில் ஊடகர்களுக்கு முக்கிய பங்குண்டு என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஆதலினால் ஊடகரே,

இனியேனும் திருந்துங்கள். ஊடக தர்மம் போற்றுங்கள்.

நும் பணி சிறக்க நம் வாழ்த்துகள்!!
=====================================================================

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

கொடிது! கொடிது!! காமம் கொடிது!!!

பழைய[தேதி சிதைந்துவிட்டது] தினத்தந்தி ‘ஞாயிறு மலர்’ பகுதியில் ‘வேகத் தடை’ என்னும்  தலைப்பில் வெளியான சிறுகதை. வாலிப வயதில் எழுதியது. சற்று முன்னர் புதுப்பிக்கப்பட்டது!

ரந்தாமன், தான் பல ஆண்டுகளாகக் கட்டிக் காத்த பிரமச்சரியம் கொஞ்ச நாட்களாகவே ஆட்டம் கண்டுகொண்டிருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருந்தான்.

“முதலில் தங்கையின் கழுத்தில் தாலி. அப்புறம்தான் இந்த அண்ணனின் கல்யாணம்” என்று சங்கல்பம் செய்துகொண்டதோடு, ’பெண்  சகவாசமே’ வேண்டாம் என்று ‘முழுப் பட்டினி’ கிடந்ததெல்லாம் இப்போது முட்டாள்தனமாகப்பட்டது.

தீர்த்தகிரி அடிக்கடி சொல்வான்:  “டேய் பரந்தாமா, உன்னையும் என்னையும் மாதிரி தலைச்சனாய்ப் பிறந்து, பெத்தவங்களையும் பறி கொடுத்த ஆண்பிள்ளைகளுக்குக் கல்யாணம் என்பது கானல்நீர். பொம்பளை சுகத்துக்கு ‘அந்த மாதிரி’ பொண்ணுகளைத்தான் தேடிப் போகணும்.” -நண்பனின் பேச்சு எத்தனை எதார்த்தமானது என்பது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்தது பரந்தாமனுக்கு.

தீர்த்தகிரி சொல்லி, குறிப்பேட்டில் குறித்து வைத்த மோகனாவின் முகவரியைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தான்.

ஒரு தடவை, அவள் வீட்டு வாசல்படிவரை போய்விட்டு, மனசாட்சி முரண்டு பிடிக்கவே வீடு திரும்பினான். 'சேலத்துக்காரர்கள், தங்கை பொன்மணியைப் பெண் பார்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்களின் பதில் பாதகமா இருந்தா விரதத்துக்கு அழுத்தமாய் ஒரு முற்றுப்புள்ளி’ என்று முடிவெடுத்திருந்தான்.

அவர்களின் பதில் பாதகமாகவே அமைந்துவிட்டதென்பது மிகப் பெரிய சோகம்.

“உடம்பை வித்துப் பிழைச்சாலும் மோகனா மாதம் தவறாம முழுப் பரிசோதனை பண்ணிடுவாள். வி.டி., எயிட்ஸுன்னு பயந்து சாகாம அவளைக் கையாளலாம்” என்று தீர்த்தகிரி அளித்த சான்றிதழ், பரந்தாமனிடமிருந்த கொஞ்சநஞ்சத் தயக்கத்தையும் விரட்டியடித்தது.

அலைபேசியை எடுத்தான்.

“அலோ...மோகனாவா...?”

“ஆமா...நீங்க....?”

“நான் பரந்தாமன்...தீர்த்தகிரி நண்பன்.”

“சொல்லுங்க.”

“அது வந்து...வந்து...”

வஞ்சனையில்லாமல் சிரித்தாள் மோகனா. “பாவம் சார் நீங்க. பயந்து பயந்தே வாலிப் பருவத்தை வீணடிக்கிறீங்க. தீர்த்தகிரி உங்களைப் பத்தி நிறையச் சொல்லியிருக்கார். பயப்படாம வாங்க.” -தேன் தடவிய குரலில் பரந்தாமனைக் கிறங்கடித்தாள் மோகனா.

பரந்தாமன் தங்கையை அழைத்தான்.

‘ஒருத்தரைப் பார்க்கணும். வெளியே போய் வர்றேம்மா.”

“அவர் யாருண்ணா?”

“அவர் நீ தெரிஞ்சிக்க வேண்டிய ஆளல்ல.”

“நீங்க எப்பவுமே இப்படிப் பூடகமா பேசினதில்ல. இன்னிக்கி உங்க நடவடிக்கை எல்லாமே வித்தியாசமா இருக்கு. காலையில் டிபனுக்கு ரசம் கேட்டீங்க. எப்பவும் என்னோடு சேர்ந்துதான் சாப்பிடுவீங்க. இன்னிக்கி நீங்க பாட்டுக்குத் தனியாவே சாப்பிட்டீங்க......”

திடுக்கிட்டான் பரந்தாமன். “அது வந்து...ஏதோ ஞாபகத்துல...” -வார்த்தைகளை மென்று விழுங்கினான்.

“எல்லார்த்தையும்விட பெரிய அதிர்ச்சி என்ன தெரியுமா? இன்னிக்கி என் பிறந்த நாள். என் பிறந்த நாள் அன்னிக்கித் தவறாம கோயிலுக்கு அழைச்சிட்டுப் போவீங்க. அதையும் செய்யல.” -அழுகையைக் கட்டுப்படுத்தி வெறுமனே சிரித்தாள் பொன்மணி.

“நீங்க உங்க ஃபிரண்டோட போனில் பேசினதை அரைகுறையாக் கேட்டேன். உங்க குழப்பத்துக்கான காரணத்தை ஓரளவு புரிஞ்சிட்டேன். இப்போ நான் ஒரு முடிவெடுத்திருக்கேன்.......” -தொடராமல் சற்றே இடைவெளி கொடுத்தாள்.

பேசினாள்: ”ஒடிசலான தேகம்; ஒடுங்கிய கன்னம். இரண்டு உதடுகளையும் ஒட்டவிடாம தடுக்கிற தூக்கலான பல்லுங்க. அட்டக் கறுப்பு. இதுதான் நான். அழகு ரசனையுள்ள எவனும் கத்தை கத்தையாப் பணம் கொடுத்தாலும் என்னைக் கட்டிக்க மாட்டான். கொடுக்க நம்மகிட்டப் பணமும் இல்ல. ஐயோ பாவம்னு ஒருத்தன் கட்டிக்கிட்டாலும் காலம்பூரா எனக்குப் புருசனா இருப்பானாங்கிறது நிச்சயமில்ல. அதனால, இனி எனக்கு மாப்பிள்ளை தேடுறதை நிறுத்திடுங்க.” -சொல்லி நிறுத்தி, பரந்தாமன் மீது பார்வையைப் படரவிட்டாள்.

அவன் குனிந்த தலை நிமிராமல் நின்றுகொண்டிருந்தான்.

தொடர்ந்தாள் பொன்மணி:  “வீட்டை ஒட்டியிருக்கிற நம் காலிமனையில் சின்னதா ஒரு செட் போட்டு ’டெய்லரிங் கடை’ வைத்துக் கொடுங்க. என்னால முடிஞ்சவரை உங்க குடும்பத்துக்கு ஒத்தாசையா இருந்து காலம் கழிச்சுடுவேன். உடனே ஒரு தரகரைப் பார்த்து உங்களுக்குப் பெண் தேடச் சொல்லுங்க.”

மவுனமாய்த் தலையசைத்தான் பரந்தாமன்.
=====================================================================

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

முடிவற்ற ஓர் அறிவியல் பயணம்!

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய ஐந்து மூலப்பொருள்களால்[பூதங்கள்!] ஆனது இந்த உலகம் என்பது பழங்காலத்தில் ஏற்பட்ட புரிதல். இந்த ஐந்தும்தான் அடிப்படைப் பொருள்கள், என்று மக்கள் நம்பினார்கள்.

பிறகு, இந்த அடிப்படைப் பொருள்கள் ஐந்து அல்ல. நிறைய இருக்கின்றன என்பது புரிந்துகொள்ளப்பட்டது. ஹைட்ரஜன் முதலான தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்விதம் இப்போது 118 வகைத் தனிமங்கள் உள்ளன. ஆனால், இந்த தனிமங்களும் அடிப்படைப் பொருள்கள் இல்லை என்ற புரிதல் வந்தது.
கிறிஸ்து பிறப்பதற்கு முன்பு வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி டெமாக்ரிடஸ் இந்த உலகம் கண்ணால் காண முடியாத, பகுக்க முடியாத அணுக்களால் ஆனது என்றார். ஆனால், அவரது கருத்து எல்லோராலும் ஏற்கப்படவில்லை. பிறகு வந்த விஞ்ஞானிகள் அணுவை ஏற்றாலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை அணுவைப் பிளக்க முடியும் என்று யாரும் நம்பவில்லை.
பிறகு அணுவைப் பிளக்க முடியும் என்றும், அணு அதைவிட நுண்ணிய எலக்ட்ரான், நியூட்ரான், புரோட்டான், போட்டான் போன்ற துகள்களால் ஆனது என்றும் நிரூபிக்கப்பட்டது.
நியூட்ரான், புரோட்டான் போன்ற பெரிய துகள்கள், தம்மினும் நுண்ணிய 'ஹெட்ரான்கள்' என வகைப்படுத்தப்பட்டன. 
இந்த ஹெட்ரான் துகள்களைப் பிரித்தால்[பிளந்தால்?] அவை குவார்க் எனப்படும் அதனினும் நுண்ணிய துகள்களால் ஆனவை என்று பின்னர் தெரியவந்தது.
                     *                    *                      *
இவ்வளவும் நான் https://www.bbc.com/tamil/science-53410739 இல் படித்தறிந்து புரிந்துகொண்டது. இதற்கு மேல் எவ்வளவு சிந்தித்தாலும் எனக்கு எதுவும் புரியாது; புரிந்துகொள்ளவும் வேண்டாம். காரணம்.....
எனக்குள்ள சந்தேகத்தைக் கேள்வியாக்குவதற்கு இந்த அளவுக்கான ‘புரிதல்’ போதும்.
மேற்கண்ட, கண்டறிதல்கள் மூலம், பிளக்க இயலாதது என்று எதுவும் இல்லை என்பது உறுதியாகிறது. ஒரு காலக்கட்டத்தில், ‘குவார்க்’ எனப்படும் நுண்ணிய துகள்களயும் பிளந்து, அவை ‘துவார்க்’[கற்பனை] எனப்படும் மிக நுண்ணிய துகள்களால் ஆனவை என்று கூறவும் செய்வார்கள் விஞ்ஞானிகள்.
பின்னர், துவார்க்குகளையும் பிளந்து, அவை மிக மிக நுண்ணிய துகள்களால் ஆனவை என்று சொல்லி அவற்றிற்கும் வேறு பெயர் சூட்டவும்கூடும்.
இந்தப் ‘பிளப்பு’ வேலையை மனிதகுலம் உள்ளளவும் விஞ்ஞானிகள் செய்துகொண்டே இருப்பார்கள். காரணம், இதுவரை அறிவியலாளர் பெற்ற அனுபவங்கள், பிளக்க முடியாதது என்று எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதால்.
ஏதேனும் ஒரு காலக்கட்டத்தில், தாம் கடைசியாகக் கண்டறிந்த துகள்களை, ”இவை பிரிக்க முடியாத துகள்கள்; இவையே கடவுள் துகள்கள்” என்று அவர்கள் அறிவிப்பார்களேயானால், அது, கடவுளை வைத்துப் பிழைப்பு நடத்துவோர்க்குப் பேருதவியாக அமையவும்கூடும். ஹி...ஹி...ஹி!
====================================================================================



புதன், 26 ஆகஸ்ட், 2020

‘இணை தேடும் இளசுகள்!’.....டாக்டர் சாலினி

டாக்டர் சாலியை அறியாதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவானதே என்பது என் நம்பிக்கை. பாலுணர்வு பற்றிய மூடநம்பிக்கைகளை ஒழிக்கப் பெரிதும் பாடுபட்டுக்கொண்டிருக்கும் இளம் பெண் மருத்துவர் இவர். 

இவருடைய http://linguamadarasi.blogspot.com/ என்னும் தளத்தில் வாசித்ததொரு பதிவின்[ஜூன் 26, 2014] ஒரு பகுதியை[நகல்] இங்கு பகிர்கிறேன். பதிவின் தலைப்பு என்னுடையது.

ஒரு மருத்துவர், தனக்கென ஒரு தளம் தொடங்கி, மனம், உடல் தொடர்பான பயனுள்ள பதிவுகளை எழுதுதல் பெரிதும் வரவேற்கத்தக்க நற்பணியாகும். இதில் இடம்பெற்றுள்ள மொழிப் பிழைகளைப் பொருட்படுத்த வேண்டாம்.

மருத்துவர் சாலினியின் அனுமதியின்றி இப்பகுதி எடுத்தாளப்பட்டுள்ளது. அவருக்கு என் மனம் நிறைந்த நன்றி.
                                                           *                     *                        *
Dr. Shalini C - Family Physician - Book Appointment Online, View ...
காரணம் இயற்கையை பொருத்த வரை பருவம் அடைந்த உடனே எதிர்பாலின ஈர்ர்பு ஏற்பட்டு ஆக வேண்டும்.  ரொமாண்டிக கனவுகள் உருவாக வேண்டும். எனக்கே எனக்கென்று ஒரு ஆள் வேண்டும் என்கிற வேட்கை தலை தூக்க வேண்டும். இது பொதுவாய் பெண்களுக்கு பன்னிரெண்டில் இருந்து பதினாறூக்குள்ளூம், ஆண்களுக்கு பதினான்கில் இருந்து பதினெட்டுக்குள்ளும் நடக்கும் ஒரு பருவ மாற்றம்.  

இப்படி எதுவுமே நடக்கவில்லை என்றால், அந்த பதின்பருவத்தினருக்கு எதிர் பாலினர் மீது நாட்டமே வரவில்லை என்றால், அவர் உடலில் போதுமான ஹார்மோனே ஊரவில்லை என்று அர்த்தமாகிவிடும்.

அந்த அளவிற்கு மிக இயல்பான, நடந்தே தீர வேண்டிய மனமாற்றம் இந்த துணை தேடும் படலம்.  ஆனால் பெண்ணின் திருமண வயது 18 தானே.  ஆணின் திருமண வயது 21 தானே.  அதற்குள் எப்படி காதல், கல்யாணம் கத்திரிக்காய் எல்லாம் என்றால் அதுவும் சரிதான். 

தாகூரும், பாரதியும், பெரியாரும் ரொம்பவே போராடி தான் பெண்ணின் திருமண வயதை உயர்த்தினார்கள். இல்லை என்றால் நம்மூர் மூடநம்பிக்கைவாதிகள் எல்லாம் மனு தர்மத்தில் சொல்லபட்ட முட்டாள் தன்ங்களில் ஒன்றான கன்னிகாதானத்தை தானே பின்பற்றினார்கள்.  கன்னிகாதானம் என்பது நம்முடைய கலாச்சாரத்தின் சிறப்பல்லவா? என்று உடனே வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வராதீர்கள். கன்னிகா என்றால் பூப்படையாத 8 வயதிற்கு கீழே இருக்க கூடய பெண், வயதிற்கு வந்துவிட்டால் பெண் கன்னியாகிவிடுவாள்.  அதற்கு முன்பே, அவள் பூப்பையாத கன்னிகையாக இருக்கும் போதே, அவளை அக்மார்க் கற்போடு ஒருவனுக்கு கட்டிக்கொடுத்துவிடுவது தான் ஒரு நல்ல தகப்பனுக்கு அழகு என்று நினைத்தார்கள் அக்கால இந்தியர்கள்.  

அதற்கு பிறகு திருமணம் செய்துவைத்தால் தான் என்ன கெட்டுவிடுமாம்? என்றால், அந்த பெண்ணே கெட்டு போய்விடுவாளாம், அவள் வயதிற்கு வந்துவிட்ட பிறகு அவள் பூர்ண கற்போடு இருக்கிறாள் என்பதற்கு கேரண்டியே இல்லையாம். எதற்கு இந்த வம்பெல்லாம், வயதிற்கு வருவதற்கு முன்பே கட்டிக்கொடுத்துவிட்டால், அவள் கற்பை பற்றிய கேள்வியே வர்றாதே.

இன்றைய கணிப்பின் படி பதினாறு வயதிற்கு கீழ் இருக்கும் பெண்ணொடு உடலுறவு கொண்டால் அது ரேப் என்றாகும், தண்டனை கிடைக்கும்.  ஆனால் 1947க்கு முன்னால், இந்த கன்னிகாதான முறையே இந்திய பாரம்பரியத்தின் உச்சகட்ட எடுத்துக்காடு, இந்திய பெண்ணின் கற்பொழுக்கத்திற்கா உச்சகட்ட சான்று என்று பால்கங்காதர் திகலர் மாதிரி பெருசுகள் கூட இந்த முறைக்கு வக்காலத்து வாங்கினார்கள் என்றால் பாருங்களேன்.

எது எப்படியோ, ஆனால் காலத்தோடு நம் கட்டமைப்புகளும், கண்ணோட்டங்களும் மாறுகின்றன.  அந்த கால பெண்ணுக்கு படிப்புரிமை கிடையாது.  அவள் வெறூம் ஒரு வேலை செய்கிற, குட்டி போட்டு வளர்க்கிற, ஆணுக்கு சேவகன் செய்கிற ஒரு ஓசி மிஷின் மட்டுமே, அதனால் சட்டு புட்டுனு ஒரு மிஷினை வாங்கி போட்டோமா, வேலைய பார்த்தோமா என்று அக்கால் மனிதர்கள் நினைத்தார்கள்.  

இத்தனை சின்ன பெண், இன்னும் வளர்ச்சி முழுமை பெறாத உடம்போடு, மகபேற்றின் போது மாண்டு போனால்?  அது தான் மலிவாய் கிடைக்கும் மிஷின் ஆயிற்றே.  போனதை கழித்துக்கட்டிவிட்டு, மற்றொன்றை கட்டிக்கொண்டால் கூடவே நிறைய சீதனுமும் ஃபிரீயாய் கிடைக்குமே!  பெரும்பாலான ஆண்களுக்கு இந்த ரொம்பவே சவுகரியமாய் இருந்ததால், அதற்கு மேல் அது பற்றி அவர்கள் யோசிக்கவே இல்லை.

ஆனால் தாகூரும், பாரதியும், பெரியாரும், நேருவும், பெண்ணை இப்படி வெறும் ஒரு உற்பத்தி யந்திரமாக பார்க்கவிரும்பவில்லை.  பெண்கள் கல்வி, வளர்ச்சி, அறிவு மேம்பாடு மாதிரியான விஷ்யங்களும் பெற்று இன்னும் அதிக அதிகாரத்துடன் வாழ வேண்டும் என்பதில் மிக முனைப்பாய் செயல்பட்டார்கள் இந்த நான்கு ஆண்களும்.  காந்தி, திலகர் மாதிரியான பெண் முன்னேற்றமா அதெல்லாம் எதுக்கு? கலாச்சாரம் கெட்டுடும் என்கிற ஆசாமிகளை மீறி, இந்த நால்வரும், ரொம்பவே போராடி பெண்களுக்கென பல உரிமைகளை பெற்று தந்தார்கள்.
=========================================================================================

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

பிள்ளையாரப்பா... இவங்களைக் கொஞ்சம் திருத்தப்பா!

கீழ்க்காண்பது, சற்று முன்னர் படித்த நேற்றைய[24.08.2020] நிகழ்வு குறித்த செய்தி. ஊடகங்கள் பலவற்றிலும் வெளியாகியிருக்கு[ https://www.updatenews360.com/other/two-boys-drowned-while-trying-to-dissolve-ganesh-idol-in-a-lake-near-hosur-24082020/ ]

#கிருஷ்ணகிரி: சூளகிரி ஏரியில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரிப் பகுதி வாணியர் தெருவைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணன்-சகுந்தலா தம்பதியினர். இவர்களுக்குப் பகவதி, முரளிச் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்துள்ளர். கொரோனா தொற்று காரணமாகப் பள்ளிகள் சில மாதங்கள் விடுமுறையில் உள்ளதால் இருவரும் வீட்டிலேயே இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமின்றி கொண்டாடப்பட்டது. மேலும், அவர்கள் வீட்டில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு வதுள்ளனர் இந்த நிலையில் இன்று வீட்டில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலையைக் கரைக்கச் சூளகிரி துரை ஏரிக்கு, பகவதி மற்றும் முரளி சென்றுள்ளனர்.
அப்போது சிலையை ஏரியில் விட்டுவிட்டு ஏரியின் ஆழப் பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது ஆழப் பகுதியில் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூளகிரி காவல்துறையினர் இரு உடல்களையும் மீட்டு, சூளகிரி அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுவர்கள் இருவர் ஏரியில் மூழ்கிப் பலியான சம்பவம் சூளகிரிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.#
2 Children drowned in lake in Sulagiri, Krishnagiri
பெருந்தகையீர்,

இந்தச் சிறுவர்கள் உயிரிழந்தது ஏன்?

பிள்ளையாரை ஏரியில் கரைக்கச் சென்றதால்.

சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பது ஏன்?

காரணம் பெரும்பாலோருக்குத் தெரியாது[கற்பனைக் கதை இருக்கு].

கரைச்சா[விசர்ஜனமாம்!] புண்ணியம் கிடைக்கும்னு யாரோ சொன்னதை நம்பி ஒவ்வொரு ஆண்டும் சில உயிர்களையாவது பலி குடுக்கிறீங்களே, [கடந்த ஆண்டு கர்னாடகாவில் இரு சிறுவர் பலி] ஏனய்யா?

சாமி கும்பிடுங்க. பிள்ளையாரையும் வீட்ல வைச்சிக் கும்பிடுங்க யாரும் தடுக்கல. அது உங்களுக்குள்ள உரிமை[நான் கும்பிடுறதில்ல. அது வேறு விசயம்]. நீங்கள் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடக் கூடாது என்று கொடுமதியாளர்கள் கட்டிவிட்ட கதைகளை நம்பி மோசம் போகிறீர்களே, இது சரியா?

சிந்திக்கிற அறிவு மனிதர்களுக்கு வாய்ச்சிருக்கு. அது உங்களுக்கும் இருக்கு. அதைக் கொஞ்சமாவது பயன்படுத்துங்க. இது என் பணிவான வேண்டுகோள்.

இந்த மாதிரியெல்லாம் எழுதினா, மனசைப் புண்படுத்திட்டான்னு பொங்கி எழுவீங்கன்னு எனக்குத் தெரியும். தெரிஞ்சும் ஏன் எழுதறேன்னா.....

செய்தியைப் படிச்சுட்டுச் சும்மா இருக்க முடியல. பாழாய்ப்போன மனசு கிடந்து துடிக்குதய்யா...துடிக்குது. 
=====================================================================
மிக மிக மிக முக்கியக் குறிப்பு!
இதை எழுதியதால எனக்கு எந்தவொரு நன்மையும் இல்ல[தீமை விளையலாம்!]; என் பதிவுகளை வாசித்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கூடும். அவ்வளவுதான்.

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

அமெரிக்கப் பெண்ணிடம் அடி உதை வாங்கிய தடிச்சாமியார்!!!

இவன் பேர் மணிகண்டன்; நாமக்கல்காரன்[பக்கத்தூர்]; சோம்பேறி.

உழைக்காம பிழைக்க என்னடா வழின்னு யோசிச்சான்; சாமியாராயிட்டான்.
உள்ளூரில் இந்த வேடம் எடுபடாதுன்னு, திருவண்ணாமலைக்குப் போய், இவன மாதிரி சாமியார்கள் இருக்கிற குடியிருப்புப் பகுதியில் தங்கியிருந்தான்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பொண்ணு இதே பகுதியில் ஒரு வீட்டில் தனியாகத் தங்கியிருந்தது.

அந்தப் பொண்ணை நோட்டம் விட்ட இவன், எப்படியாவது பணிய வைச்சிக் காரியத்தை முடிச்சிட்டா, அந்தப் பொண்ணையே கல்யாணமும் பண்ணிட்டு அமெரிக்கா போயி சொகுசா வாழலாம்னு மனக்கோட்டை கட்டினான்.

அன்றைய தினத்தில், கையில் ஒரு அரிவாளையும் தங்கத் தாலியையும் எடுத்துட்டு, அந்தப் பொண்ணு வீட்டுக்குப் போயி, அரிவாளைக் காட்டிப் பயமுறுத்திப் பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணினான்.

அந்த அமெரிக்கப் பொண்ணு நம்ம பொண்ணுக மாதிரி பயந்தாங்கொள்ளி அல்ல. தைரியமா இந்தப் போலிச்சாமியாரை எதிர்த்துப் போராடிச்சி. அடி உதைன்னு இவனை நிலைகுலைய வெச்சதோட, இவன்கிட்ட இருந்த அரிவாளைப் பிடுங்கி வெட்டிச்சி. இவன் தலையில் காயம். அமெரிக்கப் பொண்ணுக்கும் காயம்.

இவங்க ரெண்டுபேரும் போட்ட சத்தத்தைக் கேட்டு அக்கம்பக்கத்து மக்கள் அங்கே திரண்டாங்க. சாமியார் தடியனுக்குத் தர்ம அடி குடுத்துக் கட்டிப் போட்டாங்க. காவல்துறைக்குத் தகவல் தர அவங்க இவனைக் கைது செய்துட்டாங்க.

அந்த அமெரிக்கப் பொண்ணுக்குத் தற்காப்புக் கலை தெரியும்னு காவல்துறைக்காரங்க சொல்லியிருக்காங்க[24.08.2020 தினத்தந்தி நாளிதழ்] https://www.dailythanthi.com/Districts/tiruvannamalai

எது எப்படியோ, எங்க ஊர் மானம் அந்தரத்தில் ஊர் உலகமெல்லாம் சுத்தி வருது!
=====================================================================

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

“அந்த முருகன் எங்கே போனான்?!”

தமிழர்களின் கடவுள் நீங்கள் நினைக்கிற மாதிரி இருந்ததில்லை. தமிழர்கள் இயற்கையைத்தான் கடவுள் என்றார்கள். இயற்கை என்றால் அழகு. அழகு என்றால் முருகு. முருகு ‘முருகன்’ ஆயிற்று என்றார் திரு.வி.கலியாண சுந்தர முதலியார்.

சரி, அந்த முருகன் எங்கே போய்விட்டான்? 

இப்போது இருக்கிற முருகன் அந்த முருகன் அல்ல. ஆரியப்புராணப்படி, சிவபெருமான் மகன் சுப்ரமணியன் என்று கற்பனை செய்யப்பட்டவன்.

இன்னொருவர், சிவன் தமிழர் கடவுள் என்கிறார். ‘அவன் அன்பின் உருவம்’ என்று விளக்கமும் தருகிறார்.

இன்றிருக்கும் சிவன் அன்பு சிவனா?

அன்பே உருவான சிவன் கையில் வேலாயுதம் சூலாயுதம் எல்லாம் ஏன்? 

இப்படிக் கேள்வி எல்லாம் கேட்டால், ஆரியரின் கைங்கரியம் என்கிறீர்கள். 

அப்புறம் ஏன் அவர்கள் கற்பித்த சாமிகளையெல்லாம் கும்பிடுகிறீர்கள் என்று கேட்டால் யாரும் கவலைப்படுவதில்லை.

சரித்திரச் சான்றுகளின்படிப் பார்த்தால், புத்தர்தான் அறிவைக்கொண்டு ஆராய்ந்து சொன்னவர். சுய அறிவுடன் சிந்தித்ததால்தான் அவர் பெரிய நாத்திகர் ஆனார்.

புத்தர் அறிவுவாதி; ஆராய்ச்சிவாதி. அதனால்தான் அவரின் கொள்கைகளை மக்கள் அறியவிடாமல் அழித்துவிட்டார்கள்; அவர் ஆற்றிய தொண்டுகளையெல்லாம் மூடி மறைத்துவிட்டார்கள்.
                                            *                                *                            *
“அந்த முருகன் எங்கே போனான்?” என்று கேள்வி எழுப்பியதும், அதன் தொடர்ச்சியாகத் தமிழர்தம் சிந்தனையைத் தூண்டும் கருத்துகளைச் சொன்னதும் நான்[‘பசி’பரமசிவம்] அல்ல. 

எல்லாம் பகுத்தறிவுப் பகலவன் ஈ.வெ.ராமசாமிப் பெரியார் சொன்னவை.
=====================================================================
நன்றி: திருமழபாடி முனைவர் அ.ஆறுமுகம்[நூல்:‘பெரியார் சிந்தனைகளில் சூடும் சுவையும்’] அவர்களுக்கு. 

சனி, 22 ஆகஸ்ட், 2020

இந்தி தெரியாதவன் இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டும்?!?!?!

சற்று முன்னர்[பிற்பகல் 3.00-3.30 மணி] , நியூஸ் 8 தமிழ், கலைஞர் முதலான தொலைக்காட்சிகளின் மூலம் அறியக் கிடைத்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பதிவு எழுதப்படுகிறது. www.patrikai.com செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்திய அரசின் ‘ஆயுஸ்’ அமைச்சகம் நடத்திய[18-20 தேதிகளில்] ‘யோகா’ இணையப் பயிற்சி வகுப்பில் தமிழ்நாட்டின் மருத்துவர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இதில் கலந்துகொண்ட அமைச்சகச் செயலர் வைத்தியா ராஜேஷ் கொட்டெச்சா இந்தியில் மட்டுமே உரையாற்றியிருக்கிறார். ஆங்கிலத்திலும் உரையாற்றுமாறு நம் மருத்துவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதற்கு அவர் அளித்த பதில்.....

“இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம்.”
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனிமொழி, வைரமுத்து, கமல்ஹாசன் போன்றோர், “இந்தியாவின் மொழி இந்தி மட்டும்தானா?” என்று கேட்டுக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

“இம்மாதிரி நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று சொன்னதோடு அமைச்சகச் செயலர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்றும் உறுதிபடச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.

“இனி இம்மாதிரி நிகழ்வுகளில் தொடர்பு மொழியான ஆங்கிலமே இடம்பெறுதல் வேண்டும். அல்லது, உடனடி ஆங்கில மொழிபெயர்ப்பாவது வழங்கப்படுதல் வேண்டும்” என்று நடுவணரசுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் கனிமொழி.

இம்மாதிரி நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கிறார்கள் அமைச்சர்கள் என்று ஸ்டாலின் கூறியதில் ஒரு திருத்தம்.....

அவர்கள் வேடிக்கை பார்க்கவில்லை; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தியைத் "திணி...திணி...திணி" என்று அலுவலர்களைத் தூண்டிவிடுவதே அவர்கள்தான்.

இன்று, “இந்தி தெரியாவிட்டால் அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பிலிருந்து வெளியேறு” என்று சொல்லியிருக்கிறார்கள். இனி, வரும் நாட்களில்.....

“இந்தி தெரியாதவனெல்லாம் இந்தியாவைவிட்டே வெளியேற வேண்டும்" என்று உத்தரவு போடுவார்களோ?!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கைம்பெண்களைக் கடவுள்களாக்கி எரித்த காட்டுமிராண்டிகள்!!!

//..........18-ம் நூற்றாண்டு வரை சதிக்கு ஆதரவாகவே பெரும்பான்மை மக்கள் இருந்தனர். அதை, புனிதச் சடங்காகவே கருதினர். தமிழகத்தில் சோழர் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் அதிகமாக இருந்தமை பற்றிச் சான்றுகள் கிடைத்துள்ளன..........
                                     
..........இந்தியாவில் ஆண்டுக்கு 8,125 பெண்கள் சதியில் உயிரை இழந்தனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்// [‘மழைக் காகிதம்’ -malaikakitham.blogspot.com]
                                      *                                 *                             *

மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்த நம் மூதாதையர்கள் உடன்கட்டை ஏறுதல் சம்பவங்களை எப்படியெல்லாம் ரசித்து மகிழ்ந்தார்கள்[ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்வரை] என்பதற்கு ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டாகத்[சம்பவத்தின் ஒரு பகுதி மட்டும்] தருகிறேன்.

//.....ஊரே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அனைவரும் சொல்லொணா ஆனந்தம் அடைந்தனர்.

பரபரவென்று காரியங்களைச் செய்தனர்.

தீப்பாயும் விதவை கமலாதேவி அணிய வேண்டிய பட்டும் நூலும் கலந்த மஷ்ரூ என்ற ஆடை வாங்கிவரப்பட்டது. அவளை அலங்கரித்தார்கள். விதவை ஆனபின் அவள் அணியாத ஆபரணங்கள் அவளுக்கு அணிவிக்கப்பட்டன. வீட்டிலிருந்த நகைகள் தவிர இரவல் வாங்கியும் அணிவித்தார்கள்.

செய்தி ஊர் முழுக்கப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது.

கமலாதேவியை ஒரு பல்லக்கில் அமர வைத்து கடவுளின் சிலையைத் தூக்கிச் செல்வது போல மெதுவாக நடந்தனர்.

மேளதாளங்கள் முழங்கின. பஜனை கோஷ்டிகள் பாடிக்கொண்டு வந்தன. பெருத்த ஆரவாரத்துடன் கிராமமே ஊர்வலமாகச் சென்றது. வெள்ளைக்காரன் உடன்கட்டை ஏறுவதற்குத் தடை விதித்திருந்ததால், ஊர்வலம் சுடுகாடு செல்லாமல் ஒரு தோட்டத்தை அடைந்தது.

ஒரு உயரமான மரத்தடியில், கட்டாந்தரையில் வறட்டியை அடுக்கிச் சிதையைத் தயார் செய்தார்கள்.

கமலாதேவியின் உடலில் பூட்டப்பட்டிருந்த நகைகள் கழற்றப்பட்டன.; அவள் சிதையில் படுக்க வைக்கப்பட்டாள்.

அப்போதே அவள் உணர்வுகளற்றுச் சிலை போல் கிடந்தாள்.

அவள் முகத்தையும் வலது கையையும் மட்டுமே வெளியே தெரியும்படி வைத்துவிட்டு, அவளை வறட்டியால் மூடினார்கள்.

அவள் கையில் ஒரு பிடி வைக்கோளைக் கொளுத்திக் கொடுத்தார்கள். அது எரிந்து சாம்பலாய் உதிர்ந்ததும் அவள் தன் வாயைத் திறந்து தன் சிதைக்குத் தீ மூட்டுமாறு கூறினாள்[!!!!!].

அவள் முகத்தை மூடி மண்ணெண்ணையையும் பசு நெய்யையும் சிதையில் ஊற்றித் தீ வைத்தார்கள்.

அங்கே பெருத்த ஆரவாரம் எழுந்தது. மேளதாளங்கள் உரக்க ஒலித்தன [அவளின் அலறல் அமுங்கிப் போகும் வகையில்]. மக்களின் வாழ்த்தொலிகளும் ஏனைய வாத்தியங்களின் ஓசைகளும் விண்ணைப் பிளந்தன//[ஆதார நூல்: கடவுளின் அடிமைகள்’. ஆசிரியர்:  மிஸ் காதரின்மேயோ. தமிழில்: ப.சீனிவாசன். மருதம் பதிப்பகம், 202,கடைவீதி, ஒரத்தநாடு. முதல் பதிப்பு:2000]
=====================================================================
’சதி’ குறித்த ஒரு கருத்துரை:
இதைச் சொல்லும்போது இன்னொன்றும் தோன்றுகிறது. இப்போது பலர் ஸதி,ஸஹகமனம், உடன் கட்டையேறுதல் என்ற பெயர்களில் பதியோடு சேர்ந்து பத்தினியையும் உயிரோடேயே தஹனம் செய்வது வலுக்கட்டாயமாக நடத்தப் பட்டுவந்தது என்கிறார்கள். கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனால் இது பொது விதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் – பரம பதிவிரதைகளாக இருந்தவர்கள்தான் – புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்கமுடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன் கட்டை ஏறியிருக்கிறார்கள். என் பால்யத்தில் கூட இப்படிப்பட்ட பதிவிரதைகளைப் பறறிக் கேட்டிருக்கிறேன். ‘ஐயோ உயிரோடு இப்படி அக்னியில் பொசுங்குகிறாயே!’ என்று பந்துக்கள் கதறிய போது, ‘அக்னி பொசுக்கவேயில்லை. புருஷனை ஆலிங்கனம் செய்து கொள்கின்ற ஸுகத்தோடாக்கும் சாகிறேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி தஹனமாயிருக்கிறார்களாம்.
‘பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒரு தரமாவது, ஏதாவது ஊரில் இப்படி ஒரு ஸ்திரீ உடன்கட்டை ஏறினாள்; சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளைவிட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. பூர்வத்தில் அந்த லட்சியத்துக்கு அநுகூலமான சூழ்நிலை இருந்து பலபேர் அப்படி செய்தார்கள். இதனால் பிறத்தியார் கட்டாயப் படுத்தாவிட்டாலும், இப்படிப் பலபேர் போவதைப் பார்த்து அவர்களுக்கு உத்தம லோகம் ஸித்திப்பதாக சொல்கிறார்களே என்று தாங்களாகவே அரைமனஸாக ஓரிரண்டு பெண்கள் அக்காலத்தில் ஸஹகமனம் பண்ணியிருக்கலாம். இன்றைக்கோ அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாததால் இத்தனை கலிப் பிரவாஹத்தில், சீர்திருத்த நாட்களில் யாராவது உடன்கட்டை ஏறினால் இதுதான் ரொம்ப genuine [உண்மையானது] என்று நினைக்கிறேன்.’
-அண்மைக்காலத்தில் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியவர் இன்று உயிரோடு இல்லை என்பதால் அவரின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. நீங்களாகவே புரிந்துகொண்டால் மகிழ்ச்சி.  

நன்றி.

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

நடுநிலை பிறழும் நடுவணரசு! உயர் நீதிமன்றம் குட்டு!!

இந்தி தெரியாதா ? தமிழ்நாட்டுக்கு ...

ஆயுர்வேதா, சித்தா ஆகியவை குறித்த வழக்கின் உயர் நீதிமன்ற விசாரணையில், ஆயுர்வேத மருத்துவத்துறைக்கு கடந்த 10 ஆண்டுகளில், ரூ3000 கோடியும், சித்தாவுக்கு 437 கோடியும் செலவழித்துள்ளதாக நடுவணரசு அறிக்கை கொடுத்துள்ளது.

அந்த அறிக்கையை ஆதாரமாகக்கொண்டு, “ஆயுர்வேதாவுக்கு 3000 கோடி ரூபாய் செலவழித்த நீங்கள், சித்தாவுக்கு 437 கோடி ரூபாய் மட்டும் செலவழித்துள்ளீர்களே, ஏன் இந்தப் பாரபட்சம்?(மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்)” என்று நீதியரசர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

பாலிமர் தொலைக்காட்சியில் இன்று[20.08.2020] பிற்பகல் 03.30 மணியளவில் இது குறித்த செய்தி வெளியிடப்பட்டது.

நீதியரசர்கள், மேற்கண்ட கேள்வியின் மூலமாக நடுவணரசின் நடுநிலை தவறிய செயல்பாட்டைக் கண்டித்திருப்பது நம்மைப்  பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற ஒரு நிகழ்வாகும்.

இந்த அரசின் பாரபட்சமான போக்கு உயர் நீதிமன்றத்தால் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதைவிடவும் பாரபட்சமான இன்னொரு செயல்பாட்டையும் முன்னிலைப்படுத்திட விரும்புகிறேன்.

மாநில மொழிகளின் வளர்ச்சிக்குச் செலவிடும்[???] தொகையைக் காட்டிலும் மிகப் பல மடங்கு இந்தி மொழிக்குச் செலவிடுகிறது அது. நாடு சுதந்திரம் பெற்றபோதிருந்து நிகழ்த்தப்படுகிற மாபெரும் பாதகச் செயல் இது.

இச்செயலை, தாய்மொழிப் பற்றாளர்கள் பலரும் அவ்வப்போது கண்டித்து அறிக்கைகள் வெளியிட்டிருக்கிறார்கள். பலன் சிறிதும் இல்லை என்பது யாவரும் அறிந்ததே.

இப்போதிய சாதகமான  சூழ்நிலையைப் கருத்தில்கொண்டு மொழி குறித்ததும், சமூக நலன் குறித்ததுமான அமைப்புகள் ஒருங்கிணைந்து, நடுவணரசின் பாராபட்சமான போக்கு குறித்து நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தால்[ஏற்கனவே வழக்குத் தொடுக்கப்பட்டதா என்பதை நான் அறியேன்], நடுவணரசு நீதியரசர்களிடம் ‘வாங்கிக் கட்டிக்கொண்டு' கொஞ்சமேனும் திருந்த வாய்ப்பிருக்கிறது.

தாமதமின்றிச் செய்து முடிக்கப்படவேண்டிய கடமை இதுவாகும்.
=====================================================================

கொசுறுப் பதிவு!

நியூஸ் 7 தொலைக்காட்சி, சற்று நேரத்தில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள் ‘மீண்டு வர’ இசை ஆர்வலர்களின் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற இருப்பதாகவும், அனைவரும் கலந்துகொள்ளுதல் வேண்டும் என்றும் செய்தி[[பிற்பகல் 03.45 மணி] சொல்லிக்கொண்டிருக்கிறது.

நல்ல முயற்சி. 

மேலும், எஸ்.பி.பி.யுடன் உலகிலுள்ள அனைத்துக் கொரோனா நோயாளிகளும் மீண்டு வர வழிபாடு நிகழ்த்தலாமே?

ஒரு பெரும் நோயாளிக் கூட்டத்தையே சேர்த்துக்கொண்டால் கூட்டுப் பிரார்த்தனையால் பலன் விளையாதா? கடவுள்கள் கண்டுகொள்ள மாட்டார்களா?!