சற்று முன்னர்[பிற்பகல் 3.00-3.30 மணி] , நியூஸ் 8 தமிழ், கலைஞர் முதலான தொலைக்காட்சிகளின் மூலம் அறியக் கிடைத்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பதிவு எழுதப்படுகிறது. www.patrikai.com செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்திய அரசின் ‘ஆயுஸ்’ அமைச்சகம் நடத்திய[18-20 தேதிகளில்] ‘யோகா’ இணையப் பயிற்சி வகுப்பில் தமிழ்நாட்டின் மருத்துவர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
இதில் கலந்துகொண்ட அமைச்சகச் செயலர் வைத்தியா ராஜேஷ் கொட்டெச்சா இந்தியில் மட்டுமே உரையாற்றியிருக்கிறார். ஆங்கிலத்திலும் உரையாற்றுமாறு நம் மருத்துவர்கள் வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதற்கு அவர் அளித்த பதில்.....
“இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம்.”
தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனிமொழி, வைரமுத்து, கமல்ஹாசன் போன்றோர், “இந்தியாவின் மொழி இந்தி மட்டும்தானா?” என்று கேட்டுக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
“இம்மாதிரி நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்கின்றன. மோடி அரசு வேடிக்கை பார்க்கிறது” என்று சொன்னதோடு அமைச்சகச் செயலர் மீது கடும் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்றும் உறுதிபடச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்.
“இனி இம்மாதிரி நிகழ்வுகளில் தொடர்பு மொழியான ஆங்கிலமே இடம்பெறுதல் வேண்டும். அல்லது, உடனடி ஆங்கில மொழிபெயர்ப்பாவது வழங்கப்படுதல் வேண்டும்” என்று நடுவணரசுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் கனிமொழி.
இம்மாதிரி நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கிறார்கள் அமைச்சர்கள் என்று ஸ்டாலின் கூறியதில் ஒரு திருத்தம்.....
அவர்கள் வேடிக்கை பார்க்கவில்லை; வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் இந்தியைத் "திணி...திணி...திணி" என்று அலுவலர்களைத் தூண்டிவிடுவதே அவர்கள்தான்.
இன்று, “இந்தி தெரியாவிட்டால் அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பிலிருந்து வெளியேறு” என்று சொல்லியிருக்கிறார்கள். இனி, வரும் நாட்களில்.....
“இந்தி தெரியாதவனெல்லாம் இந்தியாவைவிட்டே வெளியேற வேண்டும்" என்று உத்தரவு போடுவார்களோ?!