அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

கைம்பெண்களைக் கடவுள்களாக்கி எரித்த காட்டுமிராண்டிகள்!!!

//..........18-ம் நூற்றாண்டு வரை சதிக்கு ஆதரவாகவே பெரும்பான்மை மக்கள் இருந்தனர். அதை, புனிதச் சடங்காகவே கருதினர். தமிழகத்தில் சோழர் காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் அதிகமாக இருந்தமை பற்றிச் சான்றுகள் கிடைத்துள்ளன..........
                                     
..........இந்தியாவில் ஆண்டுக்கு 8,125 பெண்கள் சதியில் உயிரை இழந்தனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம்// [‘மழைக் காகிதம்’ -malaikakitham.blogspot.com]
                                      *                                 *                             *

மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்த நம் மூதாதையர்கள் உடன்கட்டை ஏறுதல் சம்பவங்களை எப்படியெல்லாம் ரசித்து மகிழ்ந்தார்கள்[ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்வரை] என்பதற்கு ஒரு நிகழ்வை எடுத்துக்காட்டாகத்[சம்பவத்தின் ஒரு பகுதி மட்டும்] தருகிறேன்.

//.....ஊரே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. அனைவரும் சொல்லொணா ஆனந்தம் அடைந்தனர்.

பரபரவென்று காரியங்களைச் செய்தனர்.

தீப்பாயும் விதவை கமலாதேவி அணிய வேண்டிய பட்டும் நூலும் கலந்த மஷ்ரூ என்ற ஆடை வாங்கிவரப்பட்டது. அவளை அலங்கரித்தார்கள். விதவை ஆனபின் அவள் அணியாத ஆபரணங்கள் அவளுக்கு அணிவிக்கப்பட்டன. வீட்டிலிருந்த நகைகள் தவிர இரவல் வாங்கியும் அணிவித்தார்கள்.

செய்தி ஊர் முழுக்கப் பறையறைந்து அறிவிக்கப்பட்டது.

கமலாதேவியை ஒரு பல்லக்கில் அமர வைத்து கடவுளின் சிலையைத் தூக்கிச் செல்வது போல மெதுவாக நடந்தனர்.

மேளதாளங்கள் முழங்கின. பஜனை கோஷ்டிகள் பாடிக்கொண்டு வந்தன. பெருத்த ஆரவாரத்துடன் கிராமமே ஊர்வலமாகச் சென்றது. வெள்ளைக்காரன் உடன்கட்டை ஏறுவதற்குத் தடை விதித்திருந்ததால், ஊர்வலம் சுடுகாடு செல்லாமல் ஒரு தோட்டத்தை அடைந்தது.

ஒரு உயரமான மரத்தடியில், கட்டாந்தரையில் வறட்டியை அடுக்கிச் சிதையைத் தயார் செய்தார்கள்.

கமலாதேவியின் உடலில் பூட்டப்பட்டிருந்த நகைகள் கழற்றப்பட்டன.; அவள் சிதையில் படுக்க வைக்கப்பட்டாள்.

அப்போதே அவள் உணர்வுகளற்றுச் சிலை போல் கிடந்தாள்.

அவள் முகத்தையும் வலது கையையும் மட்டுமே வெளியே தெரியும்படி வைத்துவிட்டு, அவளை வறட்டியால் மூடினார்கள்.

அவள் கையில் ஒரு பிடி வைக்கோளைக் கொளுத்திக் கொடுத்தார்கள். அது எரிந்து சாம்பலாய் உதிர்ந்ததும் அவள் தன் வாயைத் திறந்து தன் சிதைக்குத் தீ மூட்டுமாறு கூறினாள்[!!!!!].

அவள் முகத்தை மூடி மண்ணெண்ணையையும் பசு நெய்யையும் சிதையில் ஊற்றித் தீ வைத்தார்கள்.

அங்கே பெருத்த ஆரவாரம் எழுந்தது. மேளதாளங்கள் உரக்க ஒலித்தன [அவளின் அலறல் அமுங்கிப் போகும் வகையில்]. மக்களின் வாழ்த்தொலிகளும் ஏனைய வாத்தியங்களின் ஓசைகளும் விண்ணைப் பிளந்தன//[ஆதார நூல்: கடவுளின் அடிமைகள்’. ஆசிரியர்:  மிஸ் காதரின்மேயோ. தமிழில்: ப.சீனிவாசன். மருதம் பதிப்பகம், 202,கடைவீதி, ஒரத்தநாடு. முதல் பதிப்பு:2000]
=====================================================================
’சதி’ குறித்த ஒரு கருத்துரை:
இதைச் சொல்லும்போது இன்னொன்றும் தோன்றுகிறது. இப்போது பலர் ஸதி,ஸஹகமனம், உடன் கட்டையேறுதல் என்ற பெயர்களில் பதியோடு சேர்ந்து பத்தினியையும் உயிரோடேயே தஹனம் செய்வது வலுக்கட்டாயமாக நடத்தப் பட்டுவந்தது என்கிறார்கள். கொடூரமாக ஸ்திரீகளை சிதையிலே தள்ளிக் கொளுத்தினார்கள் என்று வைகிறார்கள். எங்கேயாவது யாராவது இம்மாதிரி கொடூரமும் பண்ணியிருக்கலாமோ என்னவோ? ஆனால் இது பொது விதி இல்லை. இஷ்டப்பட்டவர்கள் மட்டுந்தான் – பரம பதிவிரதைகளாக இருந்தவர்கள்தான் – புருஷன் போனபின் ஜீவனை வைத்துக் கொண்டு இருக்கமுடியாமல் துடித்துத் தாங்களாகப் பிரியப்பட்டு உடன் கட்டை ஏறியிருக்கிறார்கள். என் பால்யத்தில் கூட இப்படிப்பட்ட பதிவிரதைகளைப் பறறிக் கேட்டிருக்கிறேன். ‘ஐயோ உயிரோடு இப்படி அக்னியில் பொசுங்குகிறாயே!’ என்று பந்துக்கள் கதறிய போது, ‘அக்னி பொசுக்கவேயில்லை. புருஷனை ஆலிங்கனம் செய்து கொள்கின்ற ஸுகத்தோடாக்கும் சாகிறேன்’ என்று சிரித்துக் கொண்டே சொன்னபடி தஹனமாயிருக்கிறார்களாம்.
‘பதி போனபின் நாம் உயிரை வைத்துக் கொண்டிருக்க முடியாது’ என்று நினைக்கும் உயர்ந்த உணர்ச்சி இன்றைக்கும் யாராவது லட்சத்தில், கோடியில் ஒரு ஸ்திரீக்கு இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் எப்போதாவது வருஷத்துக்கு ஒரு தரமாவது, ஏதாவது ஊரில் இப்படி ஒரு ஸ்திரீ உடன்கட்டை ஏறினாள்; சட்டம் இடம் தராத போதிலும், பந்துக்கள் தடுத்த போதிலும் கேட்காமல் இப்படிப் பண்ணினாள் என்று பேப்பரில் பார்க்கிறோம். பழைய காலத்து உடன்கட்டைகளைவிட இதுதான் ரொம்ப விசேஷம் என்று எனக்குத் தோன்றுவதுண்டு. பூர்வத்தில் அந்த லட்சியத்துக்கு அநுகூலமான சூழ்நிலை இருந்து பலபேர் அப்படி செய்தார்கள். இதனால் பிறத்தியார் கட்டாயப் படுத்தாவிட்டாலும், இப்படிப் பலபேர் போவதைப் பார்த்து அவர்களுக்கு உத்தம லோகம் ஸித்திப்பதாக சொல்கிறார்களே என்று தாங்களாகவே அரைமனஸாக ஓரிரண்டு பெண்கள் அக்காலத்தில் ஸஹகமனம் பண்ணியிருக்கலாம். இன்றைக்கோ அப்படிப்பட்ட சூழ்நிலை இல்லாததால் இத்தனை கலிப் பிரவாஹத்தில், சீர்திருத்த நாட்களில் யாராவது உடன்கட்டை ஏறினால் இதுதான் ரொம்ப genuine [உண்மையானது] என்று நினைக்கிறேன்.’
-அண்மைக்காலத்தில் இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியவர் இன்று உயிரோடு இல்லை என்பதால் அவரின் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. நீங்களாகவே புரிந்துகொண்டால் மகிழ்ச்சி.  

நன்றி.