எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 6 மே, 2024

மோடியின் 100% வெற்றிக்கு உதவுபவை பாலராமன் பாதங்களா, வாக்காளர்களின் திருவடிகளா?

டைபெற்றுக்கொண்டிருக்கும் தேர்தலில், மோடியின் ‘பாஜக’ வேட்பாளர்கள் அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டு அவர் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்பாரோ அல்லவோ, அவர் மட்டுமேனும் வெற்றி பெறுவது மிக அவசியம். இல்லையேல், வெகுவாக மனம் உடைந்துபோவார் என்பது உறுதி.


பரப்புரையில் பல்வேறு உத்திகளையும் உபாயங்களையும் கையாண்டும்கூட மீண்டும் ஆட்சிக்கட்டிலைக் கைப்பற்றுவதில் அவர் முழு நம்பிக்கை பெறவில்லை என்பதை, தான் முன்னின்று கட்டிமுடித்த அயோத்திப் பாலராமர் கோயிலுக்குச் சென்று, வேதமந்திரங்கள் முழங்க, நெடுஞ்சாண்கிடையாகச் சிலையின் முன்னால் விழுந்து வழிபட்டதன் மூலம் அறிய இயலுகிறது.

தேர்தலில் வெற்றியைத் தழுவினால், அதற்குப் பாலராமனின் கருணை என்று சொல்லிப் பெருமிதப்படுவார்.

தோற்றுவிட்டாலோ மௌனம் சாதிப்பார்; அல்லது, பழம்பிறப்புகளில் தான் செய்த பாவங்கள் காரணம் என்று சொல்லித் தன்னைத்தானே தேற்றிக்கொள்வார்.


நேர்ந்துகொண்டு, நினைத்த காரியம் நிறைவேறினால் அது கடவுளின் கருணை என்பதும், விளைவு நேர்மாறானது என்றால் பக்தர்கள் தாமே தம் மீது பழி சுமத்திக்கொள்வதும் வழக்கமான ஒன்றுதான். மோடியும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல.


எனவே, பாலராமனைச் சரணடைந்ததால், அவர் வெற்றிக் கனியைப் பறிப்பார் என்று உறுதிபடச் சொல்ல இயலாது.


அது 100% சாத்தியப்படுவதற்கான ஒரே வழி.....

இனியும் பாலராமன் சிலை முன்பாகவோ, வேறு சாமிகளின் சிலைகளின் முன்பாகவோ நீட்டிப் படுத்துப் பிரார்த்தனை செய்வதைத் தவிர்த்து, தான் போட்டியிடும் தொகுதி வாக்காளர்கள் அத்தனைப் பேரின் திருவடிகளிலும்[சற்றே குறைந்தாலும் பாதகமில்லை] விழுந்து கும்பிடுவது மிகவும் பலன் தருவதாக அமையும்.


செய்வாரா மோடி? 


செய்தல் வேண்டும் என்பது நம் விருப்பம்!


                                *   *   *   *   *

https://tamil.abplive.com/elections/prime-minister-modi-swami-darshan-at-ayodhya-ram-temple-video-going-viral-on-the-internet-181799

வாய்விட்டுச் சிரிக்கலாம்... மோடி அனுமதித்தால்!

யிர் வாழ்வதற்குப் போதுமான அளவு உணவு தேவை. சிறப்பாகச் செயல்படுவதற்கு நல்ல உடலமைப்பும், ஆழ்ந்து சிந்திப்பதற்கு முழு வளர்ச்சி பெற்ற மூளையும் தேவை.

மூளை இல்லையேல் சிந்திப்பது மட்டுமல்ல, உடம்பின் இயக்கம் முழுமையாகத் தடைப்படும்.

மனிதர்கள் என்றில்லை, கோடானுகோடி உயிர்களின் இயக்கத்திற்கும் மூளையே முழு ஆதாரம் என்று சொல்லலாம்[விதிவிலக்குகள் இருக்கக்கூடும்].

பிரபஞ்சத்திலுள்ள பொருள்களையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று கொண்டாலும், மனிதர் உட்பட ஒவ்வோர் உயிரும் தன்னிச்சையாகச் செயல்படும் வகையில்தான் அவர் படைத்திருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச உணவுகூட இல்லாமல் நாம் பட்டினி கிடந்தால், சிந்திப்பது உட்பட நாம் இயங்குவது முற்றிலுமாய்த் தடைப்படுமே தவிர, “ஐயோ பாவம்” என்று இரக்கப்பட்டு, ஆவி வடிவில் அல்லது கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஓர் உருவில் நம் உடம்பில் ஒட்டிக்கொண்டு, நாம் உண்ணும்போதும் உறங்கும்போதும் உடலுறவு கொள்ளும்போதும்[ஹி... ஹி... ஹி!!!] கடவுள் நம்மைக் கண்காணித்து இயக்குவதெல்லாம் இல்லை; இல்லவே இல்லை.

உண்மை இதுவாக இருக்க, நம் பிரதமர் மோடி அவர்கள்,  பிரபல நாளேடான ‘ஈநாடு’ பத்திரிகைக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், உலகின் சூப்பர் பவராக இந்தியாவை மாற்ற ஏதோ ஒரு தெய்வீகச் சக்தி தன்னை இயக்குவதை அடிக்கடி உணர்வதாகச் சொல்லியிருக்கிறார்.

மோடியின் இந்தக் கூற்று நம்மை வாய்விட்டுச் சிரிக்கத் தூண்டுகிறது. மோடி அனுமதித்தால்.....

சிரிக்கலாம்... சிரிக்கலாம்... வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருக்கலாம்!

                                         *   *   *   *   *

https://www.etvbharat.com/ta/!bharat/divine-power-working-through-me-in-helping-india-become-a-superpower-says-pm-narendra-modi-tns24050503662