மனிதனுக்கு ஆறறிவு வாய்த்துள்ளது.
இதைப் பயன்படுத்தி இவன் செய்பவை நல்லவையோ கெட்டவையோ, ஆறாவது அறிவால் சிந்தித்துக் கடவுள் என்றொருவரைக் கற்பித்ததோடு, அவரை வழிபடுவதால் பல நன்மைகளைப் பெறலாம், குறிப்பாகச் செத்தொழிந்த பிறகு சொர்க்கம் சேர்ந்து, சுகபோகத்தில் மூழ்கிக் கிடக்கலாம்(எவ்வளவு காலத்திற்கு?) என்றெல்லாம் நம்பினான்; நம்புகிறான்.
கோயில்கள் கட்டி, சிலைகள் நிறுவி, மந்திரம் சொல்லி அவற்றிற்கு உயிரூட்டி, தங்க & வைர நகைகள் பூட்டி அலங்கரித்து, விழாக்கள் நடத்தி, குஷிப்படுத்தி[கடவுள்களை]ப் பயனடைகிறானோ அல்லவோ வாழ்நாள் எல்லாம் அவரைக் கொண்டாடுகிறான்; மனம்போன போக்கில் கூத்தடிக்கிறான்.
ஆனால்,
அவர், தாம் படைத்த அனைத்து உயிர்களையும் புறந்தள்ளி, தங்களுக்கு மட்டும் ஆறறிவைத் தந்தது[அனைத்து உயிர்களையும் ஐந்தறிவினவாகவே படைத்து ஆறாம் அறிவையும் கொடுத்திருக்கலாம். கொடுத்திருந்தால், “எல்லாம் பரிணாம வளர்ச்சி; இயற்கை நிகழ்வுகள்; கடவுளும் இல்லை கத்தரிக்காயும் இல்லை” என்று பகுத்தறிவு பேச இடமிருந்திருக்காது] கருணைக் கடவுளுக்கு அழகல்ல என்று ஒருபோதும் சிந்தித்ததே இல்லை; அவரைக் கண்டித்து வசைமாரி பொழிந்ததும் இல்லை!
பயம் ஐயா பயம்! தான் கற்பித்த மாயக் கடவுளிடம் அத்தனைப் பயம் மனிதனுக்கு!

