எனது படம்
ஆண்களோ பெண்களோ அவர்களைக் கட்டுப்படுத்தி ஒழுக்க நெறி பிறழாமல் வாழச் செய்வது ஓரளவுக்கே சாத்தியம். வாழ்தல் குறித்த அனுபவ அறிவும், மனதைப் பக்குவப்படுத்துவதற்கான தீவிர முயற்சியும், பிரச்சினை எதுவாயினும் அது குறித்துச் சிந்தித்து முடிவெடுக்கும் திறனும் அதற்கான இன்றியமையாத் தேவைகள் ஆகும்.

புதன், 21 ஜனவரி, 2026

பக்திமான்களுக்கான ஒரு ‘பத்தரைமாற்று’க் குட்டிக் கதை!

சாலையைக் கடந்துகொண்டிருந்த ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது அந்த வாகனம்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, அவனுடைய அடையாள அட்டையிலிருந்த தொ.பே. எண்ணுக்குத் தகவல் தந்தான் கூலித் தொழிலாளி தங்கராசு.

விரைந்து வந்த சிறுவனின் பெற்றோர், மருத்துவரைப் பார்த்துவிட்டு, தங்கராசுவை அணுகினார்கள்.

“பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க பிள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். ஆண்டவனாப் பார்த்து உங்களை அனுப்பியிருக்கார்.  ரொம்ப நன்றிங்க” என்று சொல்லித் தங்கராசுவின் இரு கைகளையும் பற்றித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டார் சிறுவனின் தந்தை.

நீங்க வேண்டிக்காமலே அவராகப் பார்த்து உங்களுக்கு உதவி செய்ய என்னை அனுப்பியிருக்கார். ஆனா, என் ஏழு வயசுக் குழந்தை காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. நான் தப்புச் செஞ்சிருந்தா அதுக்கான தண்டனையை எனக்குக் கொடுத்துட்டு, என் ஏதுமறியாப் புள்ளையை மீட்டுத் தந்துடுன்னு அவரை வேண்டிக்காத நாளே இல்ல. இன்னிக்கிவரை அவர் கருணை காட்டல.” -தங்கராசுவின் கண்களில் மடை திறந்தாற்போல் கண்ணீர்.

ஆறுதல் சொல்லும் வகையறியாமல் மனம் கலங்கினார் சிறுவனின் தந்தை.