Nov 11, 2012

விகடன், குமுதம், குங்குமம் இதழ்களின் கவனத்திற்கு.....

இது, புதுமையான ஓர் ‘ஊடல் உறவு’க் கதை!

தரமான ஒரு பக்கக் கதை கிடைக்காமல் அல்லாடும், ’நம்பர் 1’ வார இதழ்களான குமுதம், விகடன், குங்குமம்  இதழ்களின் ஆசிரியர்களுக்கு எமது அன்பான அழைப்பு.

முற்றிலும் மாறுபட்டதும், தரமானதும், புதுமையானதுமான ஒரு ஒ.ப.க. இது.

ஊடலில் தொடங்கிக் கூடலில் முடியும் இந்தப் புத்தம் புதிய கதையை உங்கள் இதழ்களில் எம் அனுமதியின்றியே பிரசுரித்துக் கொள்ளலாம்.

சன்மானம் எதுவும் தேவையில்லை!

கதைத் தலைப்பு:           என்னைத் தொடாதே!

தன்னைத் தொட வந்த வினோதனின் கைகளைத் தட்டிவிட்டாள் அமுதா.

கட்டிலிலிருந்து இறங்கிப் பத்தடி தள்ளி, கட்டாந்தரையில் அவனுக்கு முதுகு காட்டிப் படுத்தாள்.

“ஏண்டா இத்தனை கோபம்?” தயங்கித் தயங்கி அவளை நெருங்கி, பட்டும் படாமலும் அவளின் வழவழத்த இடையைத் தீண்டினான் வினோதன்.

“அடச்சீ...” என்று சீறிய அவள், மரவட்டை போல் தன் பொன் மேனியைச் சுருக்கிக் கொண்டு, மேலும் ஓரடி தள்ளிப் படுத்தாள்.

“நான் தப்பேதும் பண்ணலையே. ஏன் தண்டிக்கிறே?” என்றான் அவன்.

“ஏழெட்டு பொண்ணுகளைக் காதலிச்சிருக்கீங்க. அத்தனை பேரோடவும், பீச், பார்க், ஆத்தங்கரைன்னு டூயட் பாடியிருக்கீங்க. லாட்ஜ்களில் ரூம் போட்டுக் கூத்தடிச்சிருக்கீங்க. நினைச்சாலே குமட்டுது.”

வெறுப்புடன் நெருப்பு வார்த்தைகளைக் கக்கினாள் அவள்.

மருண்டான் அவன்; துவண்டான்.

“இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?” கவலை தொனிக்கக் கேட்டான்.

“உங்க டைரியில் படிச்சேன்.”

டைரிய எடுத்து வந்து, அவளிடம் நீட்டி, “முழுசும் படிச்சியா?” என்றான்.

வாங்க மறுத்த அவள்.....

“பாதி படிச்சதும் நெஞ்சு வெடிச்சுடும் போல இருந்துச்சி. தூக்கி வீசிட்டேன்.”

“அமுதா, பெண்கள் விசயத்தில் ‘தில்’ உள்ளவன் கல்யாணத்துக்கு முந்தியே ஆசை தீர விளையாடி முடிச்சுடறான். என்னை மாதிரி கோழைங்க, ’அந்த சுகத்தை’க் கற்பனையில்தான் அனுபவிச்சுத் திருப்தி பட்டுக்கிறாங்க. என்னைப் பொருத்தவரைக்கும், டைரியில் குறிப்பிட்ட மாதிரி எந்தப் பெண்ணையும் நான் காதலிச்சதில்ல; கூடிக் களிச்சதும் இல்ல; சும்மா எழுதி வெச்சேன். அதைப் படிக்கிறதில் ஏதோ ஒருவித சுகம்.

நம் கல்யாணம் நிச்சயம் ஆனதும், டைரியில், ‘இவை அனைத்தும் கற்பனையே’ன்னு எழுதி வெச்சேன். நீ அதைப் படிக்கல.

இதை அழிச்சிருக்கணும். நான் ஒரு அடிமடையன். அதைச் செய்யல.

என் மனசைத் திறந்து நடந்ததையெல்லாம் சொல்லிட்டேன். நம்புவாயா செல்லமே.”

சொல்லி முடித்த வினோதன், அமுதாவின் முதுகுப் பக்கம் சரிந்து படுத்து, மென்மையாய் அவளின் கருங்கூந்தலை வருடிக் கொடுத்தான்.

பதில் ஏதும் தராத அமுதா புரண்டு படுத்தாள், அவனுடன் இணைந்தாள்; இழைந்தாள்!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ