#comments { display: none!important; }

Nov 15, 2012

’கரு’ ஒன்று...’கதை’ இரண்டு!!

ஒன்று ‘குமுதம்’ கதை! மற்றொன்று ‘ராணி’யில் வெளியானது! சிறந்தது எது?

கதை 1

தலைப்பு:நீ தொட்டால்...’ [குமுதம் 08.09.10]

படைத்தவர்: பரமசிவம்

“கொட மிளகா பஜ்ஜி போடுன்னு ஒரு மாசமா சொல்லிட்டிருக்கேன். காதுல போட்டுக்க மாட்டேங்குறே. கண்ணுச்சாமியின் குரலில் ஏக்கம் கலந்த வருத்தம்.

“யோவ் முந்தா நாள் போட்டேனே. போடப் போடத் தின்னு தீர்த்தியே, மறந்து போச்சா?” என்றாள் கல்யாணி.

”ஏண்டி பொய் சொல்றே.”

“நான் எதுக்குப் பொய் சொல்லணும்? பத்து நாள் முந்தி, சுடச்சுடக் குழிப் பணியாரம் வேணும்னே. போட்டுத் தந்தேன். வயிறு முட்டத் தின்னே. அடுத்த நாளே, ‘பணியாரம் கேட்டேனே, ஏன் போடலே’ன்னு கோவிச்சுட்டே. நல்லா போதை ஏத்திட்டு வந்து திங்குறே. தூங்கி முழிச்சா எல்லாம் மறந்து போயிடுது!” முகம் சிவக்கச் சொன்னாள் கல்யாணி.

“என்னை மன்னிச்சுடு புள்ள.” குழைவாகச் சொல்லிக் கொண்டே கல்யாணியின் இடையில் கை போட்டான் கண்ணுச்சாமி.

“குடிச்சுட்டு வந்து என்னைத் தொடுற வேலையை வெச்சுக்காதே. நான் கர்ப்பம் ஆயிட்டா ’எப்பத் தொட்டேன்’னு சந்தேகமா பார்ப்பே” என்றாள் அவள்.

“இதோ பாருடி, நான் தாலி கட்டின புருசன். படுன்னா படுக்கணும்” என்று அவள் தோளைத் தொட்டான் அவன்.

அவனைத் தள்ளிவிட்ட அவள், “நான் சொன்னா சொன்னதுதான். இனியும் குடிச்சிட்டு வந்து என்னைத் தொடக் கூடாது. மீறித் தொட்டா என் உடம்பில் உசுரு இருக்காது” என்றாள் கண்டிப்பான குரலில்.

குடிசையின் ஒரு மூலையில் முடங்கிப் படுத்தான் கண்ணுச்சாமி.

கதை 2

தலைப்பு: ‘தொட்டுப்பார்...’

படைத்தவர்: ‘பசி’

நள்ளிரவு.

குடிசையின் தட்டிக் கதவைத் தட்டக் குனிந்தான் பொன்னுச்சாமி.

ஏனோ தயங்கினான்.

மேட்டுத் தெரு சம்பங்கி நினைவுக்கு வந்தாள். அளவான சதை மேடுகளுடன் ‘சிக்’கென்று இருப்பாள். அவள் ‘ரேட்’ அதிகம். ஒரே ஒரு தடவை அவளிடம் போயிருக்கிறான் பொன்னுச்சாமி.

பிள்ளையார் தெரு பிரபா சுமார்தான்; ஆளும் கறுப்பு. ஆனால், ‘ரேட்’ கம்மி. என்றாலும் இவன் கையில் இப்போது பைசா இல்லை. இருந்த கொஞ்சம் பணமும் ‘டாஸ்மாக்’குக்குப் போய்விட்டது.

பொன்னுச்சாமியால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. காந்திநகர் சரசுவைத் தேடிப் போனான்.

”போன வாரம் வந்து ‘இருந்துட்டு’க் கடன் சொல்லிட்டுப் போனே. இன்னிக்கும் கடனா? சீ...போ வெளியே” என்று இவனைக் கழுத்தைப் பிடித்துத் தள்ளினாள் அவள்.

’அதே’ நினைப்பாக இருந்த பொன்னுச்சாமி, வாடிய மனதுடன் தன் குடிசைக்குத் திரும்பினான்.

தட்டிக் கதவைத் தட்டியவாறே, “சிவகாமி...” என்று தன் மனைவியை அழைத்தான்.

கதவைத் திறந்துவிட்டுச் சுருண்டு படுத்துவிட்டாள் சிவகாமி.

மூலையில் சிம்னி விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

சிவகாமியின் காலடியில் அமர்ந்து, அவளின் கெண்டைக் காலைச் சுரண்டினான் இவன்.

இவனின் கையைத் தட்டிவிட்டாள் அவள்.

மனம் தளராத பொன்னுச்சாமி, மெல்லத் தன் ஒரு கையை அவள் மார்பின் மீது படரவிட்டான்.

‘விசுக்’கென எழுந்த அவள், “மரியாதையா விலகிப் போயிடு” என்று எச்சரித்தாள்.

“நான் உன் புருசன் சொல்றேன், படுடி” என்று குழறிக்கொண்டே அவளைக் கட்டித் தழுவ முற்பட்டான் இவன்.

எரவாணத்தில் செருகியிருந்த அரிவாளைச் ‘சரக்’கென உருவியெடுத்த சிவகாமி, “கையில் காசு இருந்தா தாசிகளைத் தேடிக்கிறே. பைசா இல்லேன்னா பொண்டாட்டி தேவைப்படுறா. பொண்டாட்டின்னா வெறியைத் தணிக்கிற வெறும் மிஷின்னு நினைச்சிட்டியா? இனி ஒரு தடவை படுடின்னு சொன்னா, கண்டதுண்டமா வெட்டிப் போட்டுடுவேன். ஜாக்கிறதை” என்று கர்ஜித்த சிவகாமி, உயர்த்திப் பிடித்த அரிவாளுடன் பத்ரகாளி போல் நின்றாள்.

குடிசையின் ஒரு மூலையில் சுருண்டு படுத்தான் பொன்னுச்சாமி.

0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000