திங்கள், 31 டிசம்பர், 2018

புத்தக வாசிப்பில் தமிழனும் மலையாளியும்!!

தமிழ்நாட்டிலுள்ள பிரபல நூல் வெளியீட்டாளர்கள், பிரபலக் கதாசிரியர்களின் நூல்களைப் பிரசுரித்து விற்பனை செய்தால், பிரசுரித்த பத்து ஆண்டுகளுக்குப் பின்னரும் சில நூறு பிரதிகளாவது விற்பனை ஆகாமல் தேங்கிக் கிடக்கும். இவற்றைப் பரபரப்பாக விற்பனையாகும் பிற நூல்களோடு இலவசமாகக் கொடுத்துவிடுவார்கள். தவறினால், விற்பனையாகாத பிரதிகள் கரையான்கள், எலிகள், பூச்சிகள் என்று பலவித ஜீவராசிகளுக்கும் இரையாக நேரிடும்.

ஆனால், அருகிலுள்ள கேரள மாநிலத்தில் புத்தக வெளியீடு இப்படியொரு அவலநிலையில் இல்லை.

அங்கே, எந்தவொரு நூலும் எடுத்த எடுப்பில் பத்தாயிரம் பிரதிகள் பிரசுரமாகி விற்றுத் தீர்ந்துவிடுகின்றனவாம்[தரம் காரணமோ?]. இரண்டாம் பதிப்பு, மூன்றாம் பதிப்பு[ஒவ்வொரு முறையும் பத்தாயிரம் படிகள்] என்று அச்சடித்துத் தள்ளுகிறார்களாம்.

அங்கே அவர்கள் தரமான வாசகர்களை நம்பிப் பத்தாயிரம் பிரதிகள் வெளியிடுகிறார்கள். இங்கே பொது நூலகத்தை நம்பி ஆயிரம் பிரதிகள் அச்சிடுகிறார்கள். நூலகம் ஏற்கவில்லை என்றால் பதிப்பாளர் நிலைமை 'ஐயோ பாவம்'தான்.

இங்கு முதல் பதிப்பு நூல்கள் விற்பனை ஆனாலே போதும் என்பது நிலைமை. தொடர் பதிப்புகள் வெறும் கனவு மட்டுமே.

மலையாளிகளின் சுய மொழிப்பற்றும், ஆர்வமும், வெறியும் தமிழர்களுக்கு இல்லை...இல்லவே இல்லை.

மலையாள சினிமாச் சுவரொட்டிகளைப் பார்க்கும்போது, தேனீர்க்கடை மலையாளி, ''ஓ...இது எங்கள் மலையாற்றூர் ராமகிருஷ்ணன் கதையாக்கும். ஈ சினிமா தகழி சிவசங்கரம்பிள்ளை கதை அல்லோ'' என்பார். நம் தமிழ்ச் சகோதரரோ.....

''கமல் படம்; ரஜினி படம்; சமந்தா படம்...'' என்றெல்லாம் சொல்லிச் சொல்லிப் பூரிப்பார். 

எம்.டி.வாசுதேவன் நாயர் வெளிநாடு சென்றுவந்த அனுபவங்களை மலையாளத்தில் நூலாக வெளியிட்டால், உடனே அதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட ஒரு நாயர் தயாராக இருப்பார்[அவர்கள் தங்கள் மொழி நூல்களைக் காசு கொடுத்து வாங்குகிறார்கள்].

இப்படி, மலையாளிகள் கட்டுக்கோப்பாக, ஒற்றுமையாகச் செயல்பட்டு உயர்ந்து நிற்கிறார்கள்.

தமிழனுக்கு.....

சக எழுத்தாளன் மீது பொறாமைப்பட்டு, வீங்கி வெடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.
------------------------------------------------------------------------------------------------------------------
நன்றி: கண்ணன் மகேஷ்; 'வாங்க எழுதலாம்', தமிழ்ச்சோலைப் பதிப்பகம், போரூர், சென்னை-600116.

வெள்ளி, 28 டிசம்பர், 2018

இனி, தமிழ்நாட்டுச் சாமிகளுக்கு இந்தியில் 'அர்ச்சனை'!!!

கிறித்தவ மதம் எங்கிருந்தோ இங்கு வந்தது. இங்குள்ள எல்லாத் தேவாலயங்களிலும் கிறித்தவர்கள் தமிழில்தான் வழிபடுகிறார்கள்; சடங்குகள் செய்கிறார்கள். அவர்கள் வணங்குகிற சாமி கோபித்துக்கொள்ளவில்லை.

நம் கோயில்களில் உள்ள மிகப் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில்தான்[காலந்தோறும் எழுத்து வடிவம் மாறியுள்ளது] உள்ளன.

''சாம்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் -எந்தன்
சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்'' என்றார் பாவேந்தன் பாரதிதாசன்.

நாம் பேசுவதும் எழுதுவதும் தமிழில்தான்.  உலக அளவில், மொழி அறிஞர்களால் பாராட்டப்பட்டது இம்மொழி. 

இம்மொழியில் கோயில்களில் அர்ச்சனை செய்தால் சாமிகளுக்குக் கோபம் வருமா? சாபம் கொடுக்குமா?

இன்னும் எத்தனை காலத்துக்கு, சமஸ்கிருதம் தேவ பாஷை என்று புளுகப்படுவதை நம்பி மூடனாகவே வாழப்போகிறான் தமிழன்? 

இவனின் இந்தச்  சூடுசொரணை கெட்ட அவலநிலை நீடித்தால்.....

இந்தி இந்தியாவின் பெரும்பான்மையினர் பேசும் மொழி. எங்கும் இந்தி எதிலும் இந்தி எனும் நிலை உருவாகிவருகிறது. இந்தி நாட்டை...மன்னியுங்கள், இந்தியநாட்டை ஆளுகிறவர்களுக்கு இந்தியே பிடித்த மொழி. சாமிகளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இனி 'இந்தி'யாவிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் இந்தியில்தான் மந்திரம் சொல்லப்படுதல் வேண்டும் என்றொரு ஆணை பிறப்பிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆக.....

சமஸ்கிருதத்தின் இடத்தை இந்தி கைப்பற்றவிருக்கிறது[நகைக்காதீர்கள். இதுவும் நடக்கும்]. தமிழ்.....

நம் அரசியல்வாதிகளுக்கான 'மேடை மொழி'யாக என்றென்றும் நீடிக்கும். ஹ...ஹ...ஹ...!!!

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!
------------------------------------------------------------------------------------------------------------------
அமேசான் கிண்டிலில் நான் படைத்த 07 நூல்கள்:
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: புத்துணர்ச்சிக் கதைகள் (Tamil Edition)

காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition)ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition)


கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition)
பத்து ரூபாயில் கடவுள்: சிறுகதைகள் (Tamil Edition)அடடா இந்தப் பெண்கள்!!!: சிலிர்ப்பூட்டும் சிறுகதைகள் (Tamil Edition)
100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)






வியாழன், 27 டிசம்பர், 2018

இந்தக் கதையைச் சொன்னவனா, நம்புகிறவனா இருவரில் முழுமூடன் யார்?

கேரள மாநிலம் செங்கனூரில் பகவதி கோயில் என்று ஒர் அம்மன் கோயில் உள்ளது.

உள்ளே இருப்பது கற்சிலைதான். அதற்குப் புடவை கட்டி, நகைகள் பூட்டி, அலங்காரம் பண்ணி, அபிசேகம், ஆராதனை எல்லாம் செய்வது ஒரு நம்பூதிரிப் பிராமணன்.

ஒரு நாள் அந்த ஆள் ஓர் அதிசயத்தைக் கண்டாராம். அது.....

அம்மன் கட்டியிருந்த வெள்ளைச் சேலையில் 'அந்த' இடத்தில் இளஞ்சிவப்பு நிறத்தில் கறை படிந்திருந்தது. அது எதனால் என்று பல மேதைகள் ஆய்வு செய்ததில், அம்மன் 'தூரம்'[மாத விலக்கு] ஆகியிருந்தது தெரிந்ததாம்.

மூன்று நாள் கழித்து அம்மனை ஆற்றில் குளிப்பாட்டினார்கள்; இன்றெல்லாமும் குளிப்பாட்டுகிறார்கள். இதற்கு 'ஆறாட்டு' என்று பெயர்.

'அந்த' மூன்று நாட்களும் கோயிலில் கன்னியர்கள் காவல் காக்கிறார்கள்.

அம்மனின் கற்சிலை வீட்டுக்குத் 'தூரம்' ஆகிறதாம். மூன்று நாள் காவலாம். அப்புறம், ஆறாட்டாம்[இம்மாதிரி மூடநம்பிக்கைக் கதைகள் நாடெங்கும் பரவிக் கிடக்கின்றன]. அடச் சே.....

அம்மனுக்கு மாதவிலக்கு உண்டாகிறது என்று சொல்லப்படும் இது போன்ற கதைகளுக்கும், ஐயப்பன் என்றொரு சாமி பிரமச்சாரியாக[ஏன்?] இருக்கிறார் என்று சொல்லப்படும் கதைக்கும் என்ன பெரிய வேறுபாடு?

இம்மாதிரிக் கதைகளைக் கட்டுகிற அயோக்கியர்களும் சரி, நம்புகிற முழு மூடர்களும் சரி இனி ஒருபோதும் திருந்தப்போவதில்லை.

உலகம் அழியும் அழியும் என்கிறார்கள். சீக்கிரம் அழிந்து தொலைத்தால் நல்லது!


------------------------------------------------------------------------------------------------------------------



புதன், 26 டிசம்பர், 2018

எங்கள் கொங்குநாட்டு விவசாயிகள்!![புத்தம்புதிய கதை]]

துள்ளோட்ட நடையிலும், எதிர்பாராத முடிவுடனும் உங்களின் மனம் கவரும் 'கமகம' மண்வாசனைக் கதை. தவறாமல் படித்து மகிழுங்கள் அல்லது வருந்துங்கள்!

ஏழூர்ப்பட்டிக் கிராமத்தின் அம்மன் கோயிலில், பாத்தியப்பட்ட அத்தனை ஊர் மக்களும் திரண்டிருந்தார்கள்.

இருவார காலப் பண்டிகையின் இறுதி நாள் அது.

கரகாட்டம், கோலாட்டம், இசைத்தட்டு நடனம், அம்மனின் சப்பரப் பவனி, வாண வேடிக்கை என்று  வழக்கமான கோலாகலத்துடன் இரவுப்பொழுது கழிய, பொழுது புலர்ந்ததும் கம்பம் பிடுங்கிக் காவிரியாற்றில் திருமுழுக்குச் செய்ததோடு ஏறத்தாழப் பண்டிகை முற்றுப்பெற்றிருந்தது. மிச்சமிருப்பவை, காலை நேரக் கிடாவெட்டும், பகல் விருந்தும், மாலை நேர மஞ்சள் நீராட்டமும்தான்.

அம்மனிடம் வேண்டுதல் வைத்தவர்கள், கோயிலில் தத்தம் ஆட்டுக் கிடாய்களுக்குக் கழுத்தில் மாலை அணிவித்து, பெரிய பண்ணையின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். பெரிய பண்ணை வீட்டு ஆட்டுக் கிடாயை 'முதல் காவு' கொடுப்பது அங்கு பரம்பரை வழக்கமாக இருந்தது.
''என்னப்பா, பெரிய பண்ணை வீட்டுக் கிடாய் இன்னும் வரக்காணமே?'' -ஆளாளுக்குக் கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

இப்படி, எல்லோரையும் சலிப்புக்குள்ளாக்கித் தாமதமாக வருவதே பெரிய பண்ணைக் குடும்பத்தாரின் பரம்பரைக் குணமாக இருந்தது. அப்போதைய பண்ணையார் திருமலைச்சாமியும் இதற்கு விதிவிலக்கானவர் அல்ல. தமது நெருங்கிய சொந்தபந்தங்கள் சூழ மிக மெல்ல நடந்து கோயிலை நோக்கி வந்துகொண்டிருந்தார். கூடவே, ஒரு குட்டிக் குதிரை அளவுக்குக் 'கொழுகொழு' என்றிருந்த அவருடைய ஆட்டுக்கிடாயும் அழைத்துவரப்பட்டது.

''உங்க பக்கத்துத் தோட்டக்காரர் அத்தப்பன் கிடா வெட்டுறாரா?'' என்று திருமலைச்சாமியின் பெரியப்பா மகன் கேட்டார்.

''அம்மனுக்கு நேர்ந்துவிட்ட கிடாயை, வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட வக்கில்லாம வித்துட்டான் அவன். காவு கொடுக்கிறதுக்கு யார்கிட்டயோ கடன் சொல்லி ஒரு கிடா  வாங்கியாந்திருக்கான்னு சொன்னாங்க'' என்றார் திருமலைச்சாமி. அவர் குரல் தொனியில் ஏகத்துக்கு இளக்காரம்.

''அவர் ரொம்பவே நொடிச்சிப்போய்ட்டார்னு சொன்னாங்க. நிஜமா மாமா?'' -கேட்டவர் வெளியூரில் பொறியாளராக வேலை பார்க்கும் பெரிய பண்ணையின் தங்கை மகன்.

''என்னைப் பகைச்சான்; கெட்டுப்போனான்.''

''பங்காளிகளுக்குள்ள என்ன தகராறு?''

''கோயில் வந்திடிச்சி. அப்புறம் சொல்றேன் மாப்பிள்ளை'' என்றார் பெரிய பண்ணை.

பெரிய பண்ணைக்குச் சொந்தமாகப் பரந்துபட்ட பாசன நிலம் இருந்தது. லேவாதேவி பண்ணியதில், தேவைக்கு மேல் பணம் சேர்ந்திருந்தது.

வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் வசதி இல்லாத விவசாயிகளுக்குக் கடன் தருவதில் முன்னுரிமை வழங்கினார் பெரிய பண்ணை. நிலத்தை அடமானம் எழுதி வாங்கிக்கொண்டு கடன் தருவார். குறிப்பிட்ட காலக்கெடு முடிந்ததும் கடன் வசூல் ஆகாத நிலையில் அந்த நிலத்துக்கு அவரே உரிமையாளர் ஆகிவிடுவார். இப்படியாகத்தான் அவருக்கு அளவில்லாமல் சொத்துச் சேர்ந்தது.

அத்தப்பனின் விவசாய நிலத்தை அடுத்திருந்த சுப்பராயனின் பத்து ஏக்கர் புஞ்சை இந்த வகையில்தான் அவருக்குச் சொந்தம் ஆனது. அந்தப் பத்து ஏக்கர் புஞ்சைக்கும் அவருடைய பூர்வீக நிலத்துக்கும் நடுவே அத்தப்பனின் நாலு ஏக்கர் மேட்டுக்காடு இருப்பது பெரிய பண்ணையின் உள்மனதைக் குடைந்துகொண்டே இருந்தது. 

அத்தப்பனை அழைத்து, ''கொஞ்சம் நிலத்தை வெச்சிகிட்டு மானாவாரிப் பயிர் பண்றே. பருவ மழை இல்லேன்னா அதுக்கும் வழி இல்ல. கை மேல பணம் தர்றேன். எனக்கு வித்துடு. வேற தொழில் செஞ்சி பிழைச்சிக்கோ'' என்றார்.

அத்தப்பன் மானஸ்தர். ''நீர் ஒன்னும் எனக்குப் பிழைக்க வழி சொல்ல வேண்டாம். இது என் பூர்வீகச் சொத்து. லட்சம் லட்சமா கொட்டிக் கொடுத்தாலும் இதை விற்க மாட்டேன்'' என்று வெடித்தார்.

''தேடி வர்ற அதிர்ஷ்டத்தை எட்டி உதைக்கிறே. இந்தப் பூர்வீகச் சொத்தை வெச்சிகிட்டு இதுவரை என்ன சம்பாதிச்சிக் கிழிச்சே?'' -சீண்டினார் திருமலைச்சாமி.

வெகுண்ட அத்தப்பன், ''உன் கண் முன்னாலயே சம்பாதிச்சிக் காட்டுறேன்'' என்று சவால்விட்டுப் போனார்.

அடுத்த சில வாரங்களிலேயே, தன் நிலத்தை அடமானம் வைத்துக் கடன் வாங்கினார் அத்தப்பன்; நிலத்தடி நீர்மட்டம் பார்ப்பவரை அழைத்துவந்து, அவர் குறித்துக் கொடுத்த இடத்தில் 'ஆழ்துளைக் கிணறு' தோண்டினார். துளையில் தண்ணீர் சீறிப் பாய்ந்தது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார் அத்தப்பன். ஆனால், அந்த மகிழ்ச்சி கொஞ்சம் நாட்களே நீடித்தது. இவருடைய துளைக்கிணற்றை ஒட்டிய தன் நிலப்பகுதியில் ஒரு ஆழ்துளைக் கிணறு குடைந்தார் திருமலைச்சாமி. சரியாக ஐநூறாவது அடியில் தண்ணீர் பொங்கிப் பீறிட்டது. இரண்டு கிணறுகளுக்கும் ஒரே நீரோட்டம் என்பதை அறிந்து, துளையின் ஆழத்தை ஆயிரம் ஆக்கினார் பெரிய பண்ணை.

சக்தி வாய்ந்த மோட்டார் பொருத்தி இரவுபகலாய் நீரை உறிஞ்சித்தள்ளினார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. அத்தப்பனின் துளைக்கிணற்றில் தண்ணீர் வருவது குறைந்து குடிக்க மட்டுமே மிஞ்சியது.
பெரிய பண்ணையின் பழிவாங்கும் படலம் அத்துடன் முற்றுப்பெறவில்லை.
அத்தப்பனின் பட்டா நிலத்தில், ஒரு பெரிய வயல் அளவுக்குப் புறம்போக்கு நிலம் சேர்ந்திருந்தது. அதையும் சேர்த்துத்தான் விவசாயம் செய்துவந்தார் அத்தப்பன். விவசாயக் கூலிகளைத் தூண்டிவிட்டு அதில் குடிசை போடவைத்தார்.

குடிசை போட்டவர்களிடம், ''இது என் அனுபோகத்தில் இருக்கு. இங்க நீங்க குடிசை போட்டது தப்பு. அப்புறப்படுத்துங்க'' என்றார் அத்தப்பன்.

''முடியாது. இது ஒன்னும் உன் பட்டா நிலம் இல்ல; பொறம்போக்கு'' என்றார்கள் கூலித் தொழிலாளர்கள்.

''பத்து வருசமா இதுக்கு சிவாஜிமா வரி கட்டுறேன்.''

''வரி கட்டுனா பட்டாக் கொடுக்கணும்கிறது கட்டாயம் இல்ல. அதை ரத்து பண்ணிட்டுக் குடியிருக்க இடம் இல்லாத எங்களுக்குப் பட்டா போட்டுத் தரச்சொல்லி கலெக்டருக்கு விண்ணப்பம் கொடுத்திருக்கோம்.''

''உங்க கோரிக்கையை ஏத்துகிட்டு கவர்மெண்டு உங்களுக்குப் பட்டா கொடுத்தப்புறம் இங்கே குடிசை போடலாம். இப்போ எல்லார்த்தையும் அப்புறப்படுத்துங்க.''

''முடியாது. உன்னால் ஆனதைப் பார்த்துக்கோ.''

கையூட்டுப் பெறும் அரசு அதிகாரிகளை எப்போதும் தன் 'கவனிப்பில்' வைத்துக்கொண்டு, தான் நினைப்பதைச் சாதிக்கிறார் பெரிய பண்ணை என்பது அத்தப்பனுக்குத் தெரிந்தே இருந்தது. ''உங்களுக்கெல்லாம் இத்தனை தைரியம் எப்படி வந்துதுன்னு எனக்குத் தெரியும். உங்களைத் தூண்டிவிட்ட அந்த அயோக்கியன் யார்னு எனக்குத் தெரியும். அவன் நாசமாய்ப் போவான்'' என்று மண்ணை அள்ளிப் பெரிய பண்ணையின் வீடு இருந்த திசையில் தூற்றினார் அத்தப்பன். அது மட்டும்தான் அவரால் முடிந்தது.

வெத்து ஆளா இருந்து எதையும் சாதிக்க முடியாது. பணக்கட்டு வேணும். அது இல்லேன்னா சனக்கட்டாவது இருக்கணும். அத்தப்பனுக்கு இந்த இரண்டுமே இல்லை என்பது பரிதாபம். கட்டிய பெண்டாட்டியையும் ஒரு பெண் குழந்தையையும் நிரந்தர நோயாளியான மாமனாரையும், குடிகார மைத்துனனையும் துணையாகக் கொண்ட அவரால் பெரிய பண்ணையை எதிர்த்து எதுவும் சாதிக்க முடியாது என்பது அவருக்கே தெரிந்துதான் இருந்தது.

இந்தச் சம்பவம் நடந்த மறுநாளே, கூலித் தொழிலாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக அத்தப்பன் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு வாரம் கழித்துப் பிணையில் வீடு திரும்பினார்.

கிடாயுடன் வந்த பெரிய பண்ணைக்கு வழிவிட்டு விழாக்கூட்டம் மரியாதை செலுத்தியது.

கிடாயின் கழுத்தில் பிணைக்கப்பட்டிருந்த கயிற்றைப் பிடித்தவாறு அம்மன் சந்நிதிக்கு எதிரே இருந்த பலிபீடத்தை நெருங்கினார் பெரிய பண்ணை.

கிடாயின் கழுத்தில் பூமாலை அணிவித்துத் தீபாராதனை காட்டி, பயபக்தியுடன் தீர்த்தச் செம்பைக் கையில் ஏந்திக் கிடாயின் மீது தீர்த்தத்தைத் தெளித்தார் பூசாரி.

காலதாமதம் செய்யாமல், தெளிக்கப்பட்ட தீர்த்தம் வெளிப்பட்டுச் சிதறும் வகையில் ரோமம் சிலிர்த்து, ஒட்டுமொத்த உடம்பையும் சிறிது நேரம் சிலுப்பிக் குலுக்கியது ஆட்டுக்கிடா.

''முதல் காவுக்கு அம்மனுடைய அனுமதி கிடைச்சிட்டுது'' என்று அனைவருக்கும் கேட்கும்படியாக உரத்த குரலில் சொன்ன பூசாரி, பலி பீடத்தில் சாத்தப்பட்டிருந்த பெரிய வெட்டரிவாளைக் கையில் ஏந்தினார்.

கிடாயின் கழுத்தைக் குறி வைத்து அரிவாளை ஓங்கினார். ஓங்கிய கை தாழ்வதற்குள், இன்னொருவரின் கை அதைத் தடுத்தது. அந்தக் கை அத்தப்பனுடையது.

கண்ணிமைப் பொழுதில், பூசாரியின் கையிலிருந்த அரிவாளைத் தன்வசப்படுத்திய அவர், அதே வேகத்தில் பெரிய பண்ணையைப் பற்றி இழுத்து, பலிபீடத்தின் முன்னால் தள்ளினார். மல்லாக்க விழுந்த அவரின் கழுத்தில் குறி பிசகாமல் அரிவாளை இறக்கினார்.

பெரிய பண்ணையின் தலை துண்டாகித் தரையில் உருண்டது. வெறி பிடித்தவர் போல, குருதி வெள்ளத்தில் கிடந்த பெரிய பண்ணையை இரண்டு கால்களாலும் மாறி மாறி மிதித்தார் அத்தப்பன்.

சற்றே எதார்த்த நிலைக்குத் திரும்பிய பின்னர், பெரிய பண்ணையின் தலையைக் கையில் ஏந்திய அவர், பேரதிர்ச்சியின் பிடியில் சிக்குண்டிருந்த ஊர் மக்களைப் பார்த்து.....

''சாமி ஏத்துக்கும்னு சொல்லி வாய் பேசாத உயிர்களைப் பலி கொடுக்குற பாவத்தை இனியும் செய்யாதீங்க. அதுக்குப் பதிலா, இந்தப் பெரிய பண்ணை மாதிரியான அயோக்கியர்களைக் காவு கொடுங்க'' என்றார்.

ரத்தச் சேறு பூசிய அவருடைய கால்கள் சற்றுத் தொலைவில் இருந்த கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகம் நோக்கிக் கம்பீரமாக நடை பயின்றன.
------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 24 டிசம்பர், 2018

தமிழன் தலை நிமிரப் பாடுபட்ட அறிஞர் அறவாணன் நினைவாக.....

'தமிழறிஞரும் பகுத்தறிவாளரும் முன்னாள் துணைவேந்தருமான அறவாணன் மறைந்தார்' -இது, இன்றைய[24.12.2018] சோகச் செய்தி. அவரின் நினைவைப் போற்றும் வகையில், அவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி மீள்பதிவாக வெளியடப்படுகிறது.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டு பேசி... வாழ்ந்த...வாழும் தமிழ் மன்னர்களோ மக்களோ, ‘தமிழன்’ என்னும் உணர்வுடன் ஓர் இனத்தவராக ஒரு போதும் ஒன்றுபட்டு வாழ்ந்ததில்லை!!!

மாறாக, சேரர் குடியினர், சோழர் குடியினர், பாண்டியர் குடியினர், வேளிர் குடியினர் என வேறு வேறு குடியினராகப் பிரிந்தும், பிளந்தும், பகைத்தும் நின்றனர். தமக்குள்ளே போரிட்டுக்கொண்டு ஒருவரையொருவர் அடுதலும் தொலைதலுமாக இருந்தனர்.

இவர்கள் வாழ்வில் சமயங்கள் ஊடுருவிய பிறகு சைன மதத்தார் எனவும், பௌத்த மதத்தார் எனவும், சைவ மதத்தார் எனவும், வைணவ மதத்தார் எனவும் மத அடிப்படையில் பிரிந்து நின்றனர்.

பிற்காலத்தில், இவர்களே இசுலாமியர், கிறித்தவர் என மாறுபட்டு வாழ்ந்தனர்.
பல்லவர் காலம்  தொடங்கிச் சாதிப் பிரிவுகள் வலுப் பெற்றன. தமிழ் மக்கள் அனைவரும் பல்வேறு சாதிப் பாகுபாடுகளில் புதையுண்டனர்.

ஐரோப்பியரின் வரவும் உறவும் ஏற்பட்ட பிறகு காரல் மார்க்ஸ் கருத்து இங்கு பரவியது. சோவியத் ஒன்றியம், சீனா ஆகிய பொதுவுடைமை நாடுகளின் செல்வாக்கும் இணைந்து கொண்டது. இதன் விளைவாக, வர்க்க அடிப்படையில் மேல்தட்டு, நடுத்தட்டு, அடித்தட்டு என்று மக்கள் பிரிந்தனர்.

வெள்ளைக்காரனிடமிருந்து காப்பியடித்துக் கற்றுக்கொண்ட கட்சிவழி அரசியல் ஒன்றிப் பரவிய பிறகு அதே தமிழ் மக்கள் வேறு வேறு கட்சியினாராய்ப் பிரிந்தனர்.

இப்படிப் பிரிந்து வாழ்ந்தே பழக்கப்பட்டுவிட்ட இவர்கள், தமிழர் என எக்காலத்தும் ஒன்று திரண்டு, தமிழினத்தின் தன்மானம் காக்கப் போராடியதில்லை என்பது என்றும் நீங்காத வேதனை தரும் உண்மை.
ஒரு மதத்தார் மறு மதத்தார்க்கும், ஒரு சாதியார் மறு சாதியார்க்கும், ஒரு கட்சியார் மறு கட்சியாருக்கும் குழி தோண்டிக் கொள்கின்றனர். அவர்கள் தோண்டிய குழியில் இவர்களும், இவர்கள் தோண்டிய குழியில் அவர்களும் என அனைத்துப் பிரிவுத் தமிழருமே விழுந்து மடிகின்றனர்.

புறச்சக்திகளின் தலையீடு இல்லாமலே தமக்குள் அடித்துக்கொண்டு அழிகின்றனர்.

தமிழினத்திற்கு இழிவு நேரும்போது ஒன்று பட்டுப் போராடும் போர்க்குணம்
இல்லாததால்தான், தமிழன் பல்வேறு வந்தேறிகளுக்கும் அடிமையாக வாழ்ந்திருக்கிறான்; வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக ஆங்கிலேயர் ஆண்ட காலம் 147 ஆண்டுகள் [1801-1947] ஆகும்.


330 ஆண்டுகள் இந்தியா முழுமையும் ஆண்ட டில்லி சுல்தானியர் தமிழகத்தை மட்டும் ஆண்ட காலம் சுமார் 50 ஆண்டுகள்.


விஜய நகர ஆந்திர நாயக்கர்கள் தமிழகத்தை ஏறத்தாழ 250 ஆண்டுகள் [1572-1736] ஆண்டிருக்கிறார்கள்.


{மதுரை நாயக்கர் வழி வந்த நாயக்கர்கள் தஞ்சையை 1532 முதல் 1765 வரை [233 ஆண்டுகள்] ஆண்டிருக்கிறார்கள்]


தஞ்சையை மராட்டியர் ஆண்ட து 179 ஆண்டுகள் [1676-1855].


ஆர்க்காட்டைத் [சென்னை] தலைநகராகக் கொண்டு வட தமிழ்நாட்டை இசுலாமிய நவாப்புகள் ஆண்டது 110 ஆண்டுகள் [1710-1820].

இவ்வாறாக, ஒரு காலத்தில், இமயத்தில் நம் கொடி நட்டு, கடாரம் வென்று [இது சோழர் காலம். அப்போதும் அந்தத் தமிழ் மன்னர்கள் சமஸ்கிருதத்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்] பெரும் நிலப்பரப்பை ஆண்ட தமிழினம் குற்றேவல் புரியும் இனமாக மாறிப்போனது மறுக்க முடியாத...நம்மால் மறக்க இயலாத கசப்பான வரலாற்று உண்மை........

..........தமிழனின் ‘அடிமைப் புத்திக்கு’க் காரணங்களாய் அமைந்தவை பல. அவற்றுள் தலையாயது ‘மத நம்பிக்கை’.

தமிழன் பின்பற்றிய மதங்கள் அனைத்தும் [புத்த மதம் விதிவிலக்கு] விதியையும் அடுத்தடுத்த பிறவிகளையும் நம்பியவை. நிகழ்கால வாழ்வில் தாம் படும் துன்பங்களுக்குக் கர்மாவும் கடவுளுமே [சமணம், கடவுளை மறுத்து ஆன்மாவை முதன்மைப்படுத்துகிறது. புத்தர், கடவுள் பற்றி ஏதும் சொல்லவில்லை] காரணம் என்று எண்ணியவை.

‘மனிதப் பிறப்பின் இலக்கு, இறைவன் திருவடியைச் சேர்தலே’ என்று வலியுறுத்துவதை அடிப்படை நோக்கமாகக் கொண்டவை.

இவை, தமிழ், தமிழர் என்ற எல்லைகளைக் கடந்து, மதத்தை அவன் மனதில் புதைத்து  தமிழ் உணர்வையும் தமிழன் என்னும் இன உணர்வையும்  மழுங்கடித்துவிட்டன.


இவ்வாறு, இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டதாலேயே மிக எளிதாக மற்ற இனத்தவர்க்குத் தமிழன் அடிமை ஆகிப்போனான்.


கல்விக் கூடங்கள் நிறுவுவதையும் கல்வியின் மீதான பற்றுதலை வளர்ப்பதையும் விடுத்து, கோயில்களை எழுப்புவதிலும், பக்தியை வளர்ப்பதிலும் தமிழ் மன்னர்கள் காட்டிய அக்கறையும் கூட அவர்களின்...அவர்களைச் சார்ந்து வாழ்ந்த மக்களின் இனப்பற்று மழுங்குவதற்குக் காரணமாய் அமைந்துவிட்டது.


3ஆம் நூற்றாண்டு தொடங்கித் தமிழகத்தின் மீது பிற இனத்தவரால் பல்வேறு படையெடுப்புகள் நிகழ்ந்த போதெல்லாம், தமிழ் நாட்டை ஆண்ட தமிழ் மன்னர்களிடமிருந்து போதிய எதிர்ப்பு இல்லாத காரணத்தால், போருக்குச் சற்றும் தொடர்பில்லாத பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் கண்டதுண்டமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

மிகக் கடுமையான மதமாற்றங்கள் வாள் முனையில் நிகழ்த்தப்பட்டன.

குழந்தைகளைக் கடத்திச் சென்று மதமாற்றம் செய்வதும், கோயில் சிலைகள் உடைக்கப்படுவதும், சிலைகள் கடத்தப்படுவதும் நிகழ்ந்தன. இத்தனை கொடுமைகளையும், ஆயிரக்கணக்கில் மக்கள் மடியும் வகையில் பஞ்சங்கள் ஏற்பட்டதையும், உயிரைக் கொள்ளை கொள்ளும் நோய்களின் தாக்குதல்களையும் தாம் நம்பும் மதங்களும் கடவுளும் ஏன் தடுத்து நிறுத்தவில்லை என்பதைச் சிந்திக்கத் தவறிவிட்டனர் தமிழ் மக்கள்.

எல்லாவற்றிற்கும் தம் கர்ம வினையே காரணம் என்பதை நம்பிய அவர்கள் எல்லை கடந்த பக்தி என்னும் சகதியிலிருந்து மீண்டெழும் முயற்சியில் ஈடுபடவே இல்லை.

ஆக, எல்லாம் மதங்கள் பார்த்துக் கொள்ளும்; கடவுள் பார்த்துக்கொள்வார் என்ற அபிரிதமான நம்பிக்கையே தமிழினம் தொடர்ந்து அடிமைப்பட்டுக் கிடந்ததற்கான...கிடப்பதற்கான காரணமாய் அமைந்துவிட்டது.

‘நம்மைப் போல், ஆசியாக் கண்டத்தில் அரிசிச் சோற்றை உண்டு வாழும் ஜப்பானியரும், தாய்லாந்தினரும், சீனரும் தொலை நோக்குடன் ஐரோப்பிய வணிக, மத, ஆட்சியாளர்களை தம் நாட்டுக்குள் அனுமதிக்கவே இல்லை’ என்பதையும், உலகில் தமிழனைப் போல் இத்தனை சொரணை கெட்ட இனம் உண்டா என்பதையும் உலக வரலாறு அறிந்த தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

                     *                                          *                                           *
இது ஒரு ‘மீள் பதிவு.
*******************************************************************************************

தமிழறிஞர், டாக்டர் க.ப. அறவாணன் [மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்] அவர்கள் எழுதிய, ‘தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?’ என்னும் நூலிலிருந்து [தாயறம் பதிப்பகம், திருச்சி. முதல் பதிப்பு:டிசம்பர் 2002] தொகுக்கப்பட்டது இப்பதிவு.

சனி, 22 டிசம்பர், 2018

நம்புங்கள்...'அநுமன்' எங்கள் சாதிக்காரர்!!!

ராவணனால் கடத்தப்பட்ட சீதையை மீட்பதற்காக இலங்கை புறப்பட்ட ராமபிரான், வழியில் 'கிட்கிந்தை'யில் தங்கி, வாலியை மறைந்திருந்து[கோழைத்தனமாக] கொன்று, சுக்கிரீவனை நண்பனாக்கி, அனுமனை உள்ளடக்கிய வானரசேனையுடன்[குரங்குகளல்ல, அவற்றின் உடலமைப்புக் கொண்ட மானுடர்கள்] தன் பயணத்தைத் தொடர்ந்தார் என்பதை அறிந்திருப்பீர்கள்.

ராமன் தங்கிச் சென்ற அப்போதைய கிட்கிந்தைதான் பழைய, மலைகள் நிறைந்த 'சேலம்'[சேலம், தர்மபுரி, நாமக்கல், சங்ககிரி ஆகியவற்றை உள்ளடக்கியது] மாவட்டம் ஆகும்.
(நாமக்கல் மலை)
                                                        
இன்று இப்பகுதிகளில் வாழ்பவர்கள், அன்று கிட்கிந்தையில் அரசோட்சிய அநுமன் வகையறாக்களின் வழி வந்தவர்கள் என்பது அறியப்பட்டுள்ளது. இதற்கான ஏராள ஆதாரங்கள் என் வசம் உள்ளன[பின்னர் நூலாக வெளியிடப்படும்]. 

இன்று இப்பகுதிகளில், கடுமையான உழைப்புக்கு உதாரணமாக விளங்குகிற சாதிகளில் எங்கள் சாதி குறிப்பிடத்தக்கதாகும். எனவே, அன்று ராமபிரானுக்காகக் கடுமையாக உழைத்த அனுமன், இன்று நாட்டுக்காக உழைக்கிற எங்களின் சாதியைச் சார்ந்தவர்தான் என்பதை உறுதியுடனும் மிக்க பெருமையுடனும் நான் சொல்லிக்கொள்கிறேன்.

இன்றளவும் இந்த அரிய உண்மையை அறியாத என் சாதி மக்கள், அவர்கள் அறிந்துகொள்வதோடு நாடெங்கும் பரப்புரை செய்தல் வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

அத்துடன்.....

அனுமன் எங்கள் சாதியைச் சேர்ந்தவர் என்பதை இந்த நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும் அறிவாராக.

''அனுமன் உன் சாதிக்காரர் என்கிறாய்...சரி. உன் சாதியைச் சொல்லவில்லையே?'' என்று கேட்கிறீர்கள்தானே.

அது...வந்து...அது வந்து...ஹி...ஹி...ஹி...

முக்கிய குறிப்பு:

இப்பதிவுக்குத் தூண்டுதலாக அமைந்த 'இந்து தமிழ்'[22.12.2018]ச் செய்தி கீழே[சுருக்கமாக].....

#சமீபத்தில், ராஜஸ்தான் தேர்தல் பிரச்சாரத்தின்போது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத்,  ''அனுமன் ஒரு தலித்...'' என்றார்.

நேற்று முன்தினம் பஜகவைச் சேர்ந்த 'புக்கல் நவாப்' என்பவர், ''முஸ்லீம்களின் பெயர்கள் ஒலிப்பது போல் அனுமனின் பெயரும் ஒலிப்பதால் அனுமன் ஒரு முஸ்லீம்'' என்றார்.

இந்நிலையில், உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர் 'லக்ஷ்மி நாராயண் சவுத்ரி', ''அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்தவர் அனுமன் என்பதால் அவர் ஜாட் சமூகத்தவர் ஆவார்'' என்று கூறியிருக்கிறார்#
------------------------------------------------------------------------------------------------------------------
100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition)
அமேசான் கிண்டிலில் 06 நூல்கள் வெளியாகியுள்ளன.

வியாழன், 20 டிசம்பர், 2018

ராஜேஷ்குமாரின் பதிலுக்குப் பதிலாக ஒரே ஒரு கேள்வி!

எழுத்தாளர் ராஜேஷ்குமார், 'உங்கள் கணை...என் அஸ்திரம்' என்னும் 'கேள்வி-பதில்' பகுதியில், 'கண்ணுக்குத் தெரியாத கடவுளை நம்ப மறுக்கிறதே மனம்?' என்னும் 'ராணி' வார இதழ்[23.12.2018] வாசகரின் கேள்விக்கு.....

'பார்ப்பதற்குப் பெட்ரோல் வெறும் திரவம்தான். ஆனால், ஆகாய விமானத்தையே தூக்கிக்கொண்டு பறக்கும் சக்தி அதில் இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா?' என்று பதில் சொல்லியிருக்கிறார். இதன் மூலம், நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், கடவுள் என்னும் சக்தி இருப்பதாகச் சொல்கிறார் எழுத்தாளர்.
மேம்போக்காக யோசித்தால், ''ஆகா, என்ன அருமையான பதில்!'' என்று பாராட்டத் தோன்றும். கொஞ்சம் நுணுகி ஆராய்ந்தால்.....

நம் கண்ணுக்குத் தெரியாத சக்தி பெட்ரோலுக்குள் இருக்கிறது. அது விமானத்தையே அந்தரத்தில் பறக்கச் செய்கிறது. இது உண்மை. இதன்மூலம், பிரபஞ்சத்திலுள்ள பொருள்களையும் உயிர்களையும் இயக்குவதற்கு ஏதோ ஒரு சக்தி இருப்பதும் உண்மை என்றாகிறது.

இப்போது, எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களிடம் நாம் கேட்க விரும்பும் கேள்வி.....

பெட்ரோலில் உள்ளடங்கியிருக்கிற சக்தியை நாம் 'சக்தி' என்று அறிந்திருக்கிறோம். அவ்வளவுதான். அதற்கென்று ஒரு 'பெயர்' சூட்டி, அதனை வழிபடுவது இல்லை. பிரபஞ்சப் பொருள்களையும் உயிர்களையும் இயக்குகிற அந்தச் சக்தியும் ஒரு 'சக்தி' மட்டுமே[அது, எப்போதும் இருந்துகொண்டே இருப்பதா? தோன்றியது என்றால், தோன்றியது எப்படி? எப்போது? நல்லது, கெட்டதுன்னு எல்லாவற்றிற்கும் அதுதான் காரணமா? இப்படிக் கேட்கப்படுகிற கேள்விகளுக்கு விடை தெரிந்தவர் எவருமில்லை] அந்தச் சக்திக்கு மட்டும் 'கடவுள்' என்று நாமகரணம் சூட்டியதோடு, அதை வழிபடவும் செய்கிறார்களே, இது ஏன்?

பதில் சொல்வாரா ராஜேஷ்குமார்?
------------------------------------------------------------------------------------------------------------------
100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)
அமேசான்கிண்டிலில் 6 நூல்கள்(புதுப்பிக்கப்பட்டவை)வெளியாகியுள்ளன.


புதன், 19 டிசம்பர், 2018

அரங்கா.....நீ உறங்குவது ஏன்?!

புனித வைகுண்ட ஏகாதசி நாளின் காலைப் பொழுது.

என் மனைவி தந்த சுவையான தேனீரைச் சுவைக்கத் தொடங்கியபோது அவள் கேட்டாள்: ''இன்னிக்கி வைகுண்ட ஏகாதசி. விடிகாலையிலேயே பரமபத வாசல்கிற சொர்க்க வாசல் திறந்திருக்கும். நீங்க வரமாட்டீங்கன்னு தெரியும். இருந்தாலும் கேட்கிறேன், வர்றீங்களா?'' 

''நான் வர்றது இருக்கட்டும். நீ எதுக்குப் போறே?''

''சொர்க்க வாசலில் நுழைஞ்சிட்டு வந்தா செத்தப்புறம் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்னு சொல்றாங்க.''

''சொல்றவங்க யாரு?''

''எல்லாரும்தான்.''

''எந்த நம்பிக்கையில் அப்படிச் சொல்றாங்க?''

''முன்னோர்கள் சொல்லியிருக்காங்க.''

''வைகுண்ட ஏகாதசி உருவானதுபத்தி அவங்க கதையெல்லாம் சொல்லியிருக்காங்க, தெரியுமா?''

''சுரன்கிற அரக்கன் தேவர்களைத் துன்புறுத்திட்டிருந்தான். தன்னைச் சரணடைந்த தேவர்களுக்காகச் சுமார் 1000 வருடங்கள் கடுமையாக அசுரனுடன் போர் புரிந்தார் மகாவிஷ்ணு.....''

இடமறித்தேன் நான். ''மகாவிஷ்ணுங்கிற கடவுள் சர்வ வல்லமை படைத்தவர். அனைத்தையும் படைத்தவர் அவரே. அவருக்குத் தெரியாம இப்படியொரு அரக்கன் எப்படித் தோன்றினான்னு எப்பவாவது யோசிச்சிருக்கியா?'' என்றேன்.

பதில் இல்லை.

''சுரன்னு ஒருத்தன் இருந்ததாகவே வைத்துக்கொள்வோம். மேலே சொல்லு.''

''இவனோடு 1000 வருசம் போர் புரிந்து களைச்சிப்போன மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தைத் தனக்குச் சாதகமாக்கிய அசுரன், பகவானைக் கொல்லத் துணிந்த போது, அவருடைய சரீர சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டு,  அசுரனை எரிச்சிச் சாம்பலாக்கிடிச்சி.....

விழித்தெழுந்து நடந்ததை  அறிந்த மகாவிஷ்ணு, அந்தச் சக்திக்கு 'ஏகாதசி'ன்னு பெயர் சூட்டி, உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் செய்வேன்னு வரமளிச்சி, தன்னுள் மீண்டும் சக்தியை ஏத்துகிட்டாராம். இதுதான் அந்தக் கதை.''

''சண்டை போட்டுக் களைச்சிப்போனார்னு நீ சொல்லுறே. உறங்கிட்டார்னும் சொல்வாங்க. எதுவாகவோ இருக்கட்டும். பஞ்சபூதங்களால் ஆன உடலோடு வாழுற நமக்குத்தான் சோர்வு, உறக்கம் எல்லாம். கடவுளுக்கு நம்மை மாதிரி தேகம்னு ஒன்னு கிடையாது. இருந்தா, அவர் கடவுள் அல்ல. அப்புறம் எப்படி மகாவிஷ்ணு களைப்படைஞ்சார், உறங்கினார்னு எல்லாம் கதை சொன்னாங்க? பதில் சொல்லு.''

என்னவள் சொன்னாள்: ''முழுமுதல் கடவுளையே நம்பாத நீங்க இதையெல்லாம் நம்பவே மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும். உங்ககிட்ட பேச்சுக் கொடுத்ததே தப்பு.....''

மீண்டும் குறுக்கிட்டேன். ''நான் நம்புறதில்லதான். ஆனாலும், இந்த ஒரு தடவை உன்னோடு நானும் சொர்க்க வாசலுக்கு வர்றேன். வந்தா சொர்க்கத்தில் எனக்கும் இடம் கிடைச்சாலும் கிடைக்கலாம்'' என்று கிண்டலாகச் சொன்னேன்.

''சொர்க்கத்துக்குப் போக நீங்க கோயிலுக்கெல்லாம் வரத் தேவையில்லை. கடவுள் நம்பிக்கையைக் கிண்டலடிச்சி இப்படியே பதிவுகள் எழுதிட்டிருந்தீங்கன்னா, பக்தர்கள் பொறுமையிழந்து, நேரடியா உங்களை அங்கே அனுப்பி வெச்சுடுவாங்க'' என்று பதிலடி கொடுத்தாள் என் இல்லக்கிழத்தி.
------------------------------------------------------------------------------------------------------------------ 
நேற்றே[18.12,2018] எழுதிமுடித்த பதிவு இது. என் மனைவியின் எச்சரிக்கையால் உண்டான பய உணர்வு தாமதத்துக்குக் காரணமானது. ஹி...ஹி...ஹி...

இப்பதிவு indiblogger முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------
100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)
அமேசான் கிண்டிலில் 5 நூல்கள்(புதுப்பிக்கப்பட்டவை)வெளியாகியுள்ளன.

செவ்வாய், 18 டிசம்பர், 2018

கன்னியரின் கற்பு குறித்துக் 'கல கல' கவிதைகள்!

பொழுதுபோக்காக, 'Dr.இரா.பிரபா' அவர்களின் 'கற்பு-கலாச்சாரம்'[தமிழ்ப் புத்தகாலயம்] என்னும் நூலை வாசித்தபோது அதில் வெகுவாக ரசித்து மகிழ்ந்த, மகளிர் 'கற்பு' குறித்த சில கவிதைகள் கீழே. நீங்களும் வாசித்து இன்புறலாம்.
'ஒருத்தி போதாதென்று ஒரு நூறும் நாடுவீர்
உற்றயாம் பிறரை நோக்கின் 
ஓலமிட்டு உறுமியே கற்பு போச்சென்பீர்
ஒரு பாலர்க்கு ஒரு நீதியோ?' -முருகேச பாகவதர்.

'ஸ்கூட்டர்களுக்காகவும் ஃபிரிட்ஜிக்காகவும்
அலுவலகம் செல்ல
அனுமதிக்கப்படும் போது
எங்கள் கற்பின் எல்லை
விரிவாக்கப்படுகிறது'  -கவிஞர் ரோகிணி.

'கற்பின் திறத்தால் ஒரு 
நகரத்தைக் கரியாக்கலாம்
நல்ல மழை பெய்விக்கலாம்
என்றார்கள்
கற்போடு வேலை கேட்கப்போன
உன்னிடம்
கற்பையே கேட்டார்கள்'  -கந்தர்வன்.

'மதுரையைக் கொளுத்திய தெய்வீகக் கற்பைப்
பத்துக்கும் அஞ்சுக்கும் குத்தகை விடுவது
சிலம்பை ஏந்திய சிலையின் கீழேதான்'  -கவிஞர் இன்குலாப்.

'இழுத்து மூடும் சேலையிலும்
ஆணின் ஸ்பரிசம் படாத உடலுக்குள்ளும்
கற்பு ஒளிந்து கொண்டிருப்பதாய்
நான் நம்பவில்லை'  -ஒரு கவிதாயினி.

'அடுக்களை அரசி,
கற்புத் தெய்வம்,
மெல்லியலாள் என்றிவை
எல்லாம் வெறும் கனவுப்
பொன் விலங்குகள்
சுயநலக் காரர்கள் உன் மேற்சூட்டிய
மாயமுள் கிரீடங்கள்'  -மைத்ரேயி.

'கருப்பை சுமப்பதனால்
கற்பையும் சுமக்கும் பாவப்பட்ட
ஜென்மங்கள் நாங்கள்'  -ஒரு கவிஞர்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அமேசான் கிண்டிலில் என்னுடைய இன்னுமொரு நூல் சேர்க்கப்பட்டுள்ளது.

100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)


ஞாயிறு, 16 டிசம்பர், 2018

தளராத 'தன்னம்பிக்கை' எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்!

இவ்வாண்டு[2018], தமிழுக்கான 'சாகித்திய அகாடமி' விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பேட்டி இன்றைய 'இந்து தமிழ்'[16.12.2018] நாளிதழில் வெளியாகியுள்ளது. பேட்டியின் தொடக்கத்தில், 'எழுத்தை நம்பியே ஒருவர் வாழலாம்' என்று அவர் குறிப்பிட்டிருப்பது, தமிழில் எழுதிக்கொண்டிருப்போருக்கும், எழுத நினைப்போருக்கும் மிக்க மகிழ்ச்சி தருவதாகவும் தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் உள்ளது.
''எந்த வயதில் முழுநேர எழுத்தாளராக ஆவது என்று முடிவெடுத்தீர்கள்?'' என்னும் கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் நம்மைப் பெரு வியப்புக்கு உள்ளாக்குகிறது. சொல்கிறார்.....

''.....நான் ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருந்தேன்.....முனைவர் பட்டம் வாங்கிவிட்டேன் என்றால், கல்லூரியில் ஆசிரியராக வேலை கிடைத்துவிடும். அப்புறம் கல்லூரி வாழ்க்கை என்னைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கும். ஆகவே, முனைவர் பட்டப்படிப்பைப் பாதியோடு நிறுத்திவிட்டேன்.....

.....'என்ன பண்ணப்போற?' என்ற என் வீட்டாரின் கேள்விக்கு, 'நான் என் படிப்பு முழுக்கவும் உங்கள்ட்ட சரண்டர் பண்ணிடுறேன். இனி நான் வெறும் ஆள். இனிமேல் நான் என்னவாக ஆகப்போகிறேன் என்று  பார்க்கப்போகிறேன். ஏதும் முடியவில்லை என்றால் திரும்பவும் வந்து இந்தச் சானறிதழ்களையெல்லாம் திரும்ப வாங்கிக்கிறேன்' என்று சொல்லிவிட்டேன். இன்றுவரை அந்தச் சான்றிதழ்கள் அங்கேதான் இருக்கின்றன.....
நான் சென்னைக்கு வரும்போது எனக்கு எந்தப் பிடிமானமும் கிடையாது. எல்லாவற்றையும் நான் உருவாக்கிக்கொண்டேன். அப்படி உருவாக்கும்போது எனக்கு என்ன தோன்றியது என்றால், 'நான் உறுதியாக இருந்தால் அது நடக்கும்' என்றுதான். அது நடந்தது.''

''.....தமிழ் மொழியில் எவ்வளவு பெரிய மாஸ்டர்கள் இருந்திருக்கிறார்கள்! உண்மையாகவே தேவாரத்திலும் திருவாசகத்திலும் கம்பராமாயணத்திலும் கையாளப்பட்ட மொழியைப் பார்த்தால் தமிழ் நிஜமாகவே ஒரு 'மேஜிக்'தான் என்று தோன்றுகிறது'' என்று இவர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, ராமகிருஷ்ணன் அவர்களுக்குத் தமிழின் மீது இத்தனை மரியாதையா என்று வியக்கத் தோன்றுகிறது.

எழுத்தாளர் அவர்கள், தளராத தன்னம்பிக்கை மட்டுமல்ல, மிகுந்த தன்னடக்கமும் கொண்டவர் என்பதை, ''எழுதி முடித்த பிறகு எல்லாப் புத்தகங்களும் எனக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும். நாம் நினைத்ததில் பாதிகூடச் செய்ய முடியவில்லையே என்ற அதிருப்திதான் அது. சரி, அடுத்த புத்தகத்தில் சரிசெய்துகொள்ளலாம் என்று நினைப்பேன்'' என்ற அவரின் கூற்று நமக்குப் புரியவைக்கிறது.

பேட்டியின் இறுதிப் பகுதியில், தம்மால் போற்றப்படுகிற எழுத்தாளர்கள் தஸ்தாயேவ்ஸ்கியும், டால்ஸ்டாயும், புதுமைப்பித்தனும் என்று சொல்லிப் பெருமைப்படுகிறார் பிரபல எழுத்தாளர்.

''இளம் எழுத்தாளர்களில் உங்களுக்கு நம்பிக்கை தருபவர்கள் யார்?'' என்னும் கடைசிக் கேள்விக்கு.....

''நிறையப் பேர் நம்பிக்கை தருகிறார்கள்[அவர்களில் முதன்மையானவர் 'பசி'பரமசிவம் என்பது ராமகிருஷ்ணன் அவர்களின் முடிவாக இருத்தல்கூடும். ஹி...ஹி...ஹி...]. அவர்களில் ஒருவர் பேரைச் சொல்லி இன்னொருவர் பேரை என்னால் விடமுடியாது'' என்று பதில் அளித்திருப்பது அவரின் பெருந்தன்மைக்குச் சான்றாகும்.

எழுத்தாளர் ராமகிருஷ்னன் அவர்களின் தன்னம்பிக்கையைப் போற்றுவதோடு, அவர் வாழ்நாளெல்லாம் பெரும் பெரும் சாதனைகளை நிகழ்த்தி, மிகச் சிறந்த விருதுகள் பெற்றிடவும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.

நன்றி.
------------------------------------------------------------------------------------------------------------------



புதன், 12 டிசம்பர், 2018

அமேசான் கிண்டிலில் தமிழை இந்தி முந்தியது!

பிரபல இணைய [online]வணிக நிறுவனமான 'அமேசான் கிண்டில்' விற்பனையகத்தில், 25 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் விற்பனைக்கு உள்ளன['You’ll get access to great selection and prices, with over 2.5 million ebooks that are exclusive to the Kindle store'].

இவற்றுள் 7000 தமிழ் நூல்களும் அடங்கும். இந்தி, 8000 நூல்களுடன் தமிழை முந்திவிட்டது என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

'பசி'பரமசிவம் போன்ற பிரபலமான[ஹி...ஹி...ஹி...] ஏராள தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் விற்பனைக்கு உள்ளன. பல புதிய எழுத்தாளர்களின் நூல்களும் உள்ளன.

என்னுடைய இரு நூல்கள்[கிண்டில் வழிகாட்டுதலில் நானே வெளியிட்டவை] பற்றிய விவரங்கள்.....
 à®ªà®¤à¯à®¤à¯ ரூபாயில் கடவுள்: சிறுகதைகள் (Tamil Edition) by ['பசி'பரமசிவம்]
Format: Kindle Edition
File Size: 1163 KB
Print Length: 112 pages

Product Description
கதைகளின் பின்னணி.....

மனிதனுக்குச் சிந்திக்கும் அறிவு வாய்த்ததால் விளைந்த பெரும் கேடுகளுள் 'கடவுள் நம்பிக்கை'யும் ஒன்று.

'கடவுள் உண்டு' என்று சொன்னவர்கள், 'கடவுள் தோன்றியது எப்படி?', 'அவர் ஆதியும் அந்தமும் அற்றவர்; எப்போதும் இருந்துகொண்டே இருப்பவர் என்றால், அந்நிலை எவ்வாறு சாத்தியமாயிற்று?', 'உயிர்கள் அனுபவிக்கும் இன்பங்களுக்குக் காரணமானவர் அவர் எனின், துன்பங்களுக்குக் காரணமானவர் யார்?' என்பன போன்ற பகுத்தறிவு சார்ந்த கேள்விகளைப் புறந்தள்ளி, அவரின் 'இருப்பை' நிலைநிறுத்துவதிலேயே முனைப்புக் காட்டினார்கள்; காட்டுகிறார்கள்.

மனம்போன போக்கில், மதவாதிகள் உருவாக்கிய கடவுள்களின் எண்ணிக்கை பெருகியது. அவர்களுக்காக நம் மக்களால் வீணடிக்கப்படும் நேரம் அதிகம்; பொருள் மிக அதிகம்; அவர்களைப் பிரபலப்படுத்தும் போட்டியில் நேர்ந்த அழிவுகளும் ஏராளம். கடவுள் நம்பிக்கையால் உயிர்களுக்கு விளைந்த, விளைந்துகொண்டிருக்கும் தீங்குகள் பற்றிக் கருத்துரைப்பதைத் தவிர்த்து, நன்மைகளை மட்டுமே பட்டியலிடுகிறார்கள் கடவுளின்/கடவுள்களின் புகழ்பாடும் ஆன்மிகவாதிகள். விளைவு.....

மனிதகுலத்தை ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கைகளின் எண்ணிக்கை நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவற்றிலிருந்து மக்களை விடுவிக்கும் நோக்குடன் படைக்கப்பட்டவையே இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்.

நீங்கள் என்னுடன் மாறுபட்ட கருத்துடையவராயின், கதைகளின் கருப்பொருள்களும் உள்ளடக்கங்கங்களும் உங்களுக்குப் பிடிக்காமல் போகலாம். ஆயினும், கதை சொல்லும் உத்தி, கையாண்டுள்ள நடை, சொல்லாடல் போன்றவை உங்களுக்கு மிக மிக மிகப் பிடிக்கும் என்பது என் நம்பிக்கை.

Kindle Price:    99.00
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
Kindle unlimited logo
Read this title for free. Learn more
Read for Free
OR
Buy now with 1-Click ®
========================================================================
அடடா இந்தப் பெண்கள்!!!: சிலிர்ப்பூட்டும் சிறுகதைகள் (Tamil Edition) by ['பசி'பரமசிவம்]
Product details
Format: Kindle Edition
File Size: 696 KB
Print Length: 43 pages

கதைகள் குறித்து.....

உடலமைப்பில் ஆண்களைக் காட்டிலும் மனிதகுலப் பெண்கள் மிகவும் பலவீனமானவர்கள். ஆண்களுக்குக் கட்டுப்பட்டு இவர்கள் வாழ்வதற்கான முக்கிய காரணங்களுள் இதுவும் ஒன்று. ஒப்பீட்டளவில், மன வலிமையும் இவர்களுக்குக்[பெரும்பான்மையினர்] குறைவுதான்.

நெருக்கடியான சூழ்நிலைகளில், ஆராயும் அறிவைப் புறந்தள்ளி உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் இவர்கள்.
பொறுமையின் இருப்பிடமும் இவர்கள்தான். எனினும், அப்பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பொங்கி எழவும் செய்வார்கள்.

இனி வாழ்ந்து பயனில்லை என்பதான உச்சநிலை வருத்தத்திற்கு உள்ளாகும்போது இவர்கள் மரணத்தைத் தழுவவும் தயங்குவது இல்லை.
இயல்பாகவே, 'ஆண், பெண் எனும் இருபாலரில் பெண்ணே பெரிதும் நினைவுகூரத்தக்கவளாக இருக்கிறாள்'. இக்கருத்துக்கு வலிமைசேர்க்கும் வகையிலான 16 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அனைத்திலும் பெண்களே தலையாய கதைமாந்தர்கள்.

கதை நிகழ்வுகள் மட்டுமல்லாது, கதை சொல்லும் உத்தி, நடை, சொல்லாடல் ஆகியனவும் தங்களின் மனம் கவர்வனவாய் அமையும் என்பது என் நம்பிக்கை

Kindle Price:    70.00
inclusive of all taxes
includes free wireless delivery via Amazon Whispernet
Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
Kindle unlimited logo
Read this title for free. Learn more
Read for Free
OR
Buy now with 1-Click ®

'இலவசமாக வாசிக்கலாம்' என்று குறிப்பிட்டிருந்தாலும், மாதச் சந்தா செலுத்தச் சொல்லுகிறது அமேசான்!!! விவரம் கீழே.....

Unlimited Reading. Any Device.
Enjoy unlimited access to over 1 million titles on any device. Plans starting from Rs.150 a month.
Start your 30-day free trial
By clicking the button above, you agree to the Kindle Unlimited Terms of Use. You can keep up to ten books at a time and there are no due dates. Find your next great read today. You may cancel your subscription at any time by visiting www.amazon.in/kucentral.
========================================================================



திங்கள், 10 டிசம்பர், 2018

முதலில் அழிவது உலகமா, மதங்களா?!

இந்த உலகம் அழியும் என்று பலரும் ஆருடம் சொல்லியிருக்கிறார்கள். யாரெல்லாம் என்பதற்கு ஒரு பட்டியல்.....
ஒன்று:
புத்தர் வாழ்ந்து மறைந்து 2500 ஆண்டுகள் கழித்து உலகம் அழிந்துவிடும் என்பது புத்தமதத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரின் நம்பிக்கை.

[புத்தர் கி.மு.500ஆம் ஆண்டில் பிறந்தவர். அவ்வகையில் பார்த்தால் கி.பி.2000இல் உலகம் அழிந்திருத்தல் வேண்டும். அழிந்ததா? ஊஹூம்!]

இரண்டு:
தலாய்லாமா எப்போது திபத்தைவிட்டு வெளியேறுகிறாரோ, அப்போதே ஒட்டுமொத்த உலகமும் அழியும் என்றார்கள் திபெத்தியர்கள்

[செஞ்சீனா திபெத்தின்மீது 1951இல் படையெடுத்தபோது 'லாமா' தலைதெறிக்க ஓடிவந்து இந்தியாவில் அடைக்கலம் புகுந்தார். அழியலீங்களே!]

மூன்று:
மனிதர்கள் எப்போது நிலவில் காலடி வைக்கிறார்களோ, அப்போதே முழு உலகமும் அழியும் என்பது இசுலாமியர்களின் நம்பிக்கை.

[விண்வெளி வீரர் ஆம்ஸ்டிராங் அங்கு காலடி வைத்துப் பல[?] ஆண்டுகள் ஆயிற்றே. நிலவும் அழியவில்லை. உலகமும் அழியவில்லை. அமெரிக்கர்கள் பொய் சொல்லுவதாக இசுலாமியர்கள் நீண்ட காலம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஐஸ்லாந்து நாட்டின் ஒரு பகுதியில் நிலாவைப் போல ஸ்டூடியோ அமைத்துப் படப்பிடிப்பு நடத்தி அமெரிக்கா உலகை ஏமாற்றுவதாகவும் புரளி கிளப்பினார்களாம். ஹி...ஹி...ஹி!]

நான்கு:
கண்ணுக்குத் தெரியாத ஒரு கறுப்புக் கோள் பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. பாலைவனத்தில் ஒருவித நீல நிறப் பூ பூக்கும். பூத்த மறு வினாடியே உலகம் வெடித்துச் சிதறும். இப்படிச் சொல்பவர்கள், அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில் வாழும் 'ஹோபி' இன மக்கள். 

[இது ஒருவகையில் நம்பக்கூடியதுதானாம். அரிசோனா மாநிலத்தில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எரிநட்சத்திரக்கல் ஒன்று விழுந்ததால் ஒரு பெரும் பள்ளம் அங்கே உருவானதாம். அதன் ஆழம் 600 அடி. சுற்றளவு மூன்று மைல். 

இது போலவே, அசுரவேகத்தில் வந்துகொண்டிருக்கிற கறுப்புக் கிரகம் மோதி உலகம் அழியும் என்று 'ஹோபி'கள் சொல்வது பலிக்கக்கூடும் என்கிறார்கள் சில அறிவியல் அறிஞர்கள்.

ஐந்து:
பகவான், 'கல்கி' அவதாரம் எடுக்கும்போது உலகம் அழியும் என்கிறது இந்துமதம்.

[அழிவு நிகழும் அந்த நாள் குறித்து அவதாரம் எவரும் திருவாய் மலர்ந்தருளவில்லை!].

ஆறு:
கிறித்தவர்களும் உலகம் ஒரு நாள் அழியும் என்றார்கள். எப்போது?

உலகக் கிறித்தவர்களின் தலைவர்கள் பட்டியலில் போப்பாண்டவர்களின் வரிசையில், 'பீட்டர்' என்னும் பெயருள்ளவர் இடம்பெறும்போது.

பீட்டரின் வருகையைப் பீதியுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம் கிறித்தவர்கள்.

[பீட்டர் எப்போது வருவார்? பீட்டருக்குத்தான் தெரியும்].

எது எப்படியோ, ஏதோ ஒரு காரணத்தால் அல்லது காரணங்களால்  உலகம் ஒரு நாள் அழியுமா?

கோடிக்கணக்கான மனிதப் படுகொலைகளுக்கும், ஏராளமான பொருட்சேதங்களுக்கும், புதிய புதிய மூடநம்பிக்கைகளின் உருவாக்கத்திற்கும்[இவற்றோடு ஒப்பிடும்போது விளைந்த நன்மைகள் மிகவும் குறைவு] காரணமான மதங்களுக்கு அழிவே இல்லையெனின் உலகின் அழிவு நிச்சயம்!
====================================================================
இப்பதிவு, indiblogger  முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

நன்றி: 'மோகன ரூபன்' எழுதிய, 'உலகப்பெரும் அதிசயங்கள்'; மேகதூதன் பதிப்பகம், சென்னை - 6000 005.






வெள்ளி, 7 டிசம்பர், 2018

ஆண்களைவிடவும் பெண்களே புத்திசாலிகள்!!!

*“இன்னும் என்ன பண்றே?” - கிசுகிசுத்தான் அவன். “எல்லாம் போட்டது போட்டபடி கிடக்குது” - அவள். ‘போட்டது போட்டபடி’க்கு என்ன பொருள்? 

பொருள்: ''ரொம்பத்தான் அவசரமோ?''

*ஒரு வாரம்போல வணிக நிமித்தம் ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்புகிறான் கணவன். குளித்து முடித்து, உணவருந்திப் படுக்கையறை புகுந்த அவனுக்கு ‘அந்த’ நினைப்பு!

“இன்னும் என்ன பண்றே?” -  மனைவியை அணுகிக் கிசுகிசுத்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்து, “எல்லாம் போட்டது போட்டபடியே கிடக்குது” என்று புன்முறுவல் பூத்தாள் அவள். இந்தப் புன்முறுவலுக்கான அர்த்தம்..... 

‘குழந்தை தூங்காம விளையாடிட்டிருக்கு. நாத்தனார் நாவல் படிச்சிட்டுக் கொட்டக் கொட்ட முழிச்சிட்டிருக்கா. கிழவனும் கிழவியும் தொணதொணத்துட்டிருக்காங்க. எல்லாரும் தூங்கட்டும். அவசரப்படாதீங்க’ன்னு அர்த்தம்! இது எத்தனை ஆண்களுக்குப் புரியும்?

*சில நேரங்களில், இந்தப் பெண்களின் பேச்சுக்கு எதிர்மறையாகப் பொருள்கொள்ள வேண்டும்.

தீபாவளிக்கு இரண்டு வாரம் இருக்கிறது. கணவன் அலுவலகம் புறப்படும்போது மனைவி குரல் கொடுக்கிறாள்: “இந்தத் தீபாவளிக்கு எனக்குப் பட்டுப்புடவை வேண்டாம்.”

“இன்னிக்கிச் சம்பள நாளாச்சே. மறக்காம பட்டுப் புடவை வாங்கிட்டு வந்துடுங்க” என்பதுதான் இதன் உண்மையான அர்த்தம். இதைப் புரிந்துகொண்டால் கணவன் பிழைத்தான். புரியாதவன் பாடு திண்டாட்டம்தான்.

*இருவரும் ஒரு திருமணத்திற்குச் செல்கிறார்கள். ஆடம்பரமாக உடுத்து, அழகழகான பெண்கள் எல்லாம் வருவார்கள் இல்லையா? எவளோ ஒருத்தியைச் சுட்டிக்காட்டி, “இந்தப் பொண்ணு ரொம்ப அழகா இருக்கா இல்லியா?’ என்று உங்களவள் கேட்டால், “உன்னை விடவா?” என்று கூசாமல் பொய் சொல்லத் தெரிய வேண்டும். “ஆமா” என்று உளறிக்கொட்டினால் ‘அது’ விசயத்தில் நீங்கள் பல நாள் பட்டினி கிடக்க வேண்டியிருக்கும்!

உங்கள் மனைவியின் தோழி, செல்பேசியில் உங்களையும் அழைத்துக்கொண்டு தன்  திருமணநாள் கொண்டாட்டத்திற்கு வரச் சொல்லுகிறாள். “என் நாத்தனார் ரெண்டு பேரும் ஊரிலிருந்து வந்திருக்காங்க. அவங்களையும் அழைச்சிட்டு வரவா?” என்கிறாள் உங்கள் மனைவி. தோழியிடமிருந்து உடனடி பதில் இல்லை. கொஞ்சம் அமைதிக்குப் பிறகு அழைத்துவரச் சொல்லுகிறாள் அவள்.

அந்த அமைதிக்கு என்ன பொருள்?

“வேண்டாம்” என்பதே, அது உங்கள் மனைவிக்கும் பிற பெண்களுக்கு மட்டுமே புரியும். உங்களைப் போன்ற ஆண்களுக்குப் புரியாது.

*கணவனும் மனைவியுமாக இரண்டு ஜோடிகள் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புகிறார்கள். முதலில் ஒரு ஜோடியின் வீடு வந்துவிடுகிறது. அந்தப் பெண், “வாங்களேன், காபி சாப்பிட்டுப் போறது” என்கிறாள்.

“சரி” என்று தலையாட்ட இருந்த உங்களைத் தடுத்து, “பரவாயில்ல அக்கா. வீட்டில் அவசர வேலை இருக்கு” என்று உங்களை இழுத்துக்கொண்டு வீடு வந்து சேர்கிறாள் உங்கள் துணைவி.

‘வாங்களேன்’, ‘போறது’ போன்றவை வெறும் உபச்சார வார்த்தைகள் என்பது உங்கள் குடும்பத் தலைவிக்கும் புரியும்; உங்களுக்குப் புரியவே புரியாது.

*உங்கள் வீட்டில், எதிர்பாராமல் வந்த விருந்தாளியைச் சாப்பிட அழைக்கிறாள் உங்கள் மனைவி. “நீங்களும் சாப்பிடுங்க” என்று சொல்லாமல், “சாப்பிட்டுடுங்களேன்” என்று சொன்னால், அதற்குப் போதுமான அளவு உணவு இருப்பில் இல்லை என்று அர்த்தம். 

குரலின் ஏற்ற இறக்கம்,  வார்த்தைகளுக்கு இடையே விடும் இடைவெளி, புருவங்களின் அசைவு, இழுத்துவிடும் பெருமூச்சு என்றிவைகளுக்கேற்ப பெண்களின் பேச்சுக்கான அர்த்தமும் மாறுபட்டுக்கொண்டே இருக்கும்.

பெண்களின் பேச்சை முழுமையாகப் புரிந்துகொள்வது பெண்களுக்கு மட்டுமே சாத்தியம். ஆண்களுக்கு?

ஊஹூம்!
*************************************************************************************************

மார்ச் 1997 ‘ஓம் சக்தி’ இதழில் முருகுசுந்தரம் அவர்கள் எழுதியதைக் கொஞ்சமே கொஞ்சம் மாற்றங்களுடன் பதுவு செய்திருக்கிறேன்.