அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 31 அக்டோபர், 2019

மூன்று பெரிய மதங்களும் மூன்று சிறிய கேள்விகளும்!

கிறித்துவ மதம், இஸ்லாம் மதம், இந்து மதம் ஆகிய மூன்றும் உலகின் மிகப் பெரிய மதங்கள் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

The World Factbook கணிப்பின்படி..........

உலகின் மக்கள் தொகை: 7,021,836,029 (July 2012 est.)

கிறித்தவர்கள்: 33.39% (Roman Catholic 16.85%, Protestant 6.15%, Orthodox 3.96%, Anglican 1.26%),

இசுலாமியர்: 23.2%,

இந்துக்கள்: 13.8%, பௌத்தர்: 6.77%, சீக்கியர்:0.35%, .................[Wikipedia]

Top Ten Religions of the World with maps and tables ...’ தரும்[பழைய] புள்ளி விவரம்:

Religion:Members:
Christianity2 Billion
Islam1.2 Billion 
Hinduism785 Million 
Buddhism360 Million 
Judaism17 Million
Sikhism16 Million
Baha'i5 Million
Confucianism5 Million
Jainism4 Million
Shintoism3 Million
Wicca.7 Million
Zoroastrianism.2 Million

இந்த மதங்களின் வரலாற்று ரீதியான நடவடிக்கைகளால் சமுதாயத்திற்கு விளைந்த நன்மை தீமைகள் குறித்துக் கணக்கற்ற ஆய்வுகளும் விவாதங்களும் நிகழ்த்தப்பட்டன; படுகின்றன.

எனினும், மதங்கள் குறித்தும், அவை போற்றும் கடவுள்கள் குறித்தும் எழுப்பப்பட்ட மிக ஆழமான பல கேள்விகளுக்கு இன்னும் நேரிடையான பதில்களோ, ஏற்கும்படியான விளக்கங்களோ கிடைத்திடவில்லை.

இந்நிலையில், இம்மூன்று பெரிய  மதங்கள் குறித்து, என் உள்மனதைக் குடைந்துகொண்டிருந்த மூன்று சிறிய கேள்விகளை இங்கு பட்டியலிடுகிறேன்.
கேள்வி ஒன்று: 

பிற உயிர்களைக் கொன்று உணவாக்கிக் கொள்வதை அல்லாஹ் அனுமதிப்பதாக இஸ்லாம் மதவாதிகள் சொல்கிறார்கள். ‘In the Qur'an, we only have the right to kill any living being for consumption because He, the Creator of them, has given us this privilege via religion - killing for food would otherwise be a criminal act!’- [www.quranicpath.com/finerpoints/halal_meat.html]

‘பிராணிகள், குறைந்த அளவில் வலியை அனுபவிக்கும் வகையில் அவற்றைக் 
கொல்வதற்கான வழிகளையும் குரான் குறிப்பிடுவதாக அவர்கள் சொல்கிறார் 
கள்

‘பிராணியை அறுக்குமுன் கத்தியை நன்றாகத் தீட்டி, இறைவன் பெயரைச் சொல்லி,கழுத்தில் வேகமாக அறுப்பதுகழுத்தில் முக்கால் பாகம் வரை அறுப்பதால் பிராணிகளுக்கு அதன் வலி  தெரியாதுஏன் என்றால் மூளைக்கும் கழுத்துக்கும் உள்ள வலி நரம்புகள் துண்டிக்கபடுகின்றனபிராணிக்கு அறுக்கும் போது உள்ள வலி வெறும் நொடிதான் ’ [hadith-collection.blogspot.com/p/blog-page_06.html]

ஐம்பது நொடியோ ஐந்து நொடியோ ‘வலி’ உண்டு என்பது உண்மைதானே?

இங்கே இறைவன் பெயரைச் சொல்வதன் அவசியம் என்ன? என்ன பயன்? வலி முற்றிலும் 
இல்லாமல் போகிறதா என்ன?

எல்லாம் வல்லவன் இறைவன். அனைத்தையும் படைத்தவனும் அவனே. படைப்பாளியான அவன், உயிர்கள் ஒன்றையொன்று கொன்று தின்று வாழும்படியாக ஏன் படைத்தான்?

படைத்தது இருக்கட்டும், வலி உணர்வைத் தந்தது ஏன்? 

செய்வதையும் செய்துவிட்டு, வலியைக் குறைப்பதற்கான வழிகளையும் அவனே குரான் மூலம் சொல்லித் தருகிறானா? கடவுள் என்ன விளையாடுகிறாரா?

இஸ்லாம் மதவாதிகள் இதுபற்றியெல்லாம் சிந்தித்ததே இல்லையா?


கேள்வி இரண்டு:

கடவுளின் புதல்வரான ‘ஏசு’,  மீண்டும் இம்மண்ணில் வந்து 
பிறக்கவிருப்பதாகக் கிறித்தவ மத போதகர்கள் 
மேடைகளில் முழங்குவதும் ஊடகங்களில் உரையாற்றுவதும் யாவரும் 
அறிந்ததே.

அவர் மீண்டும் அவதரிப்பதற்கான  அவசியம் எதனால் நேர்ந்தது?

ஏற்கனவே அவதரித்த போது, தன் அவதரிப்பின் நோக்கங்களை முற்றிலுமாய் நிறைவேற்றத் தவறினாரா? அப்படியொரு தவற்றைக் கடவுளின் புதல்வர் செய்வாரா?

கடவுள், கடவுளாக இருந்துகொண்டே எதையும் சாதிக்க முடியும் என்கிறபோது அவர் மனித உருவில் அவதரிப்பதற்கான தேவை ஏன் நேர்ந்தது?

கிறித்தவ மதபோதகர்கள் சிந்திப்பார்களா?


கேள்வி மூன்று:

இஸ்லாமிய மதம் வன்முறையால் பரப்பப்பட்டது என்பார்கள். “இல்லை...இல்லை. இங்கே நிலவும் சமத்துவம்தான் பிற மதத்தவர் எம் மதத்தைத் தழுவக் காரணம்” என்கிறார்கள் இஸ்லாம் மதவாதிகள்

 ‘கிறித்தவம் பணபலத்தால் விரிவுபடுத்தப்பட்டது’ என்பதை மறுத்து, “ஏழை எளியவர்களுக்கு நாங்கள் பலன் கருதாமல் செய்யும் தொண்டுதான் எங்கள் மதம் வளரக் காரணம்” என்கிறார்கள் கிறித்தவ மதபோதகர்கள்..

இவர்களின் நிலை இவ்வாறாக  இருக்க, ஜாதிமத வேற்றுமைகள் குறித்தோ, பொதுத் தொண்டு குறித்தோ பெரிதும் கவலை கொள்ளாமல், பல்லாயிரக் கணக்கில் பிள்ளையார் சிலைகளைக் கரைப்பது, ஆண்டு தவறாமல் ஆண் பெண் சாமிகளுக்குக் கல்யாணம் கட்டி வைப்பது, அறிவுக்கொவ்வாத, கடவுளர் பற்றிய ஆபாசக் கதைகளை மேடைகளிலும் ஊடகங்களிலும் சலிக்காமல் சொல்லிக்கொண்டிருப்பது என்றிவ்வாறு மக்கள் மனங்களில் மூடநம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறார்கள் இந்துமதவாதிகள்.

மூடநம்பிக்கைகளை வளர்ப்பதன் மூலம் தம் மதத்தை வளர்க்க முடியும் என்று நம்புகிறார்கள் இவர்கள்.

இந்த அறிவியல் யுகத்தில் இனியும் இந்த நம்பிக்கை நீடிக்குமா?

மேற்கண்டவை, நான் கேட்ட கேள்விகள் . இன்னும் கேட்க நினைப்பவை எத்தனையோ!
*****************************************************************************************************************

புதன், 30 அக்டோபர், 2019

நல்லாக் கேட்டாரய்யா நெல்லைக் கண்ணன்!!!

‘காமதேனு’[27.10.2019] வார இதழுக்குப் பேட்டி அளித்தார் நெல்லைக் கண்ணன். பேட்டி கண்டவர் முன்வைத்த கேள்விகளில், “இலக்கியம், அரசியல், ஆன்மிகம் என்றிவற்றில் எதை விரும்பிப் பேசுவீங்க?” என்பதும் ஒன்று.
நெல்லைக் கண்ணனின் பதில்:
#நான் அடிப்படையில் தமிழறிஞன். அந்த வகையில் இலக்கியம்தான்யா மன நிம்மதியைத் தரும். 

திருக்குறள் படிச்ச ஒவ்வொருவனுக்குமே நாட்டுல நடக்குற தவறுகளைத் தட்டிக் கேட்க உரிமை இருக்கு.

இன்னிக்கித் தேங்காய் உடைக்கிறதும், அலகு குத்துறதும், கொடை நடத்துறதுமே ஆன்மிகம்னு நினைக்கிறாங்க. அப்படி இல்லை. உண்மையைத் தேடுறதுதான் ஆன்மிகம்.

ஒரு மாநில முதல்வர் தன்னோட எதிரிகளை அழிக்கிறதுக்காக யாகம் நடத்துறார். சாமி என்ன கூலிப்படையா?#

-----தேங்காய் உடைக்கிறவங்களுக்கும் அலகு குத்துறவங்களுக்கும் யாகம் பண்ணுறவங்களுக்கும் உறைக்கும்படியாகத்தான் கேட்டிருகிறார் கண்ணன். ஆனால் கண்ணன் கொஞ்சம் யோசிச்சிப் பார்த்திருந்தா, கடவுள் ஒரு கூலிப்படை ஆள்தான் என்பது புரிந்திருக்கும்.

புராணங்கள் சொல்லும் கதைகளின்படி, அவருக்கு அடிபணியாத அரக்கர்களை, சூலாயுதம், சக்கரம், அக்கினின்னு விதம் விதமான கருவிகளைப் பயன்படுத்தி அவர் கொன்றொழித்தார் என்பதை அறியலாம்.

நினைச்ச காரியம் நிறைவேறுவதற்குப் பக்தகோடிகள் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள். இது நெல்லைக் கண்ணனின் நினைவுக்கு வந்திருந்தால், “கடவுள் என்ன வியாபாரியா?” என்று கேட்டிருப்பார்.

கடவுள்களுக்கு வண்ண வண்ணப் பட்டாடைகள் கட்டி, தங்கம், வைரம், வைடூரியம்னு விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அணிகலன் பூட்டி மனிதர்கள் அழகு பார்ப்பதை அவர் எண்ணிப் பார்த்திருந்தால், “அடே மூடர்களா, கடவுள் என்ன பேராசைக்காரரா?” என்று கேட்டுச் சாடியிருப்பார்.

“உண்மையைத் தேடுவதுதான் ஆன்மிகம்” என்று சொன்ன அவர், சற்றே ஆழமாகச் சிந்தித்திருந்தால், “அனைத்திற்கும் மூலகாரணமானது எது என்று கண்டறிவதே உண்மையைக் கண்டறிவதாகும். அப்படி ஒன்றை இன்றளவும் எந்தவொரு அவதாரமோ மகானோ உரிய ஆதாரங்களுடன் கண்டறிந்து சொன்னதில்லை. உண்மை இதுவாக இருக்கையில் கடவுள் என்று ஒரு நபரைக் கற்பித்ததே முட்டாள்தனம்” என்றும் உறுதிபடச் சொல்லியிருப்பார்.

”கடவுள் என்ன கூலிப்படையா?” என்று கேட்ட நெல்லைக் கண்ணன் அவர்கள், இன்னும் இன்னும் இன்னும் ஆழமாகச் சிந்தித்து மேற்குறிப்பிடப்பட்டவை போன்ற கேள்விகளை நிறையவே கேட்க வேண்டும்; அறியாமையில் சிக்குண்டு தவிக்கும் நம் மக்களைச் சிந்துக்கத் தூண்டிட வேண்டும் என்பதே நாம் அவர் முன்வைக்கும் வேண்டுகோள் ஆகும்.
===========================================================================




செவ்வாய், 29 அக்டோபர், 2019

‘அம்மா...அம்மா...அம்மா’... அம்மம்மா!!!

ஒரு பொறம்போகு நிலத்தை ஆக்கிரமிச்சி, ஒரு துக்கிளியூண்டு கீத்துக்கொட்டாயி போட்டு, அதில் ஒரு சாமி சிலையை வெச்சி, கையில் ஒரு வெங்கலமணியும் தீபாராதனைத் தட்டுமா தொழிலை ஆரம்பிக்கீறாங்க வேலைவெட்டி இல்லாதவனுக.

ஆரம்பத்தில் எட்ட நின்னு வேடிக்கை பார்த்துட்டுப் போற பொதுமக்கள் ‘எதுக்கும் கும்பிட்டு வைப்போம்’னு கும்பிட ஆரம்பிக்கிறாங்க.

கையில் காசு உள்ளவன் ரெண்டு பேரு நின்னு கும்பிட்டு உண்டியலில் போட்டுட்டுப் போனா, அதைப் பார்த்துட்டு மத்தவனும்  போடுறான்.

”இந்தச் சாமியை வேண்டிகிட்டா இருக்கிற தோசம் எல்லாம் கழிஞ்சிடுது; நினைக்கிற காரியம் கைகூடுது”ன்னு நாலு முட்டாளுங்க சொல்லிவைக்க, சாரி சாரியா மக்கள் வந்து கும்பிட ஆரம்பிச்சுடுறாங்க.

சின்னஞ்சிறு உண்டியல் மாயமாகிப் பெரியதொரு ராட்சத உண்டியல் அந்த இடத்தை ஆக்கிறமிக்குது.

கீத்துக் கொட்டகை இருந்த இடத்தில்  பிரமாண்ட அடுக்குமாடிக் கோயில்! அக்கம்பக்கத்தில் இருக்கிற பொது நிலமும் கோயிலுக்குச் சேர்க்கப்படுது. 

நாட்கள் செல்லச் செல்ல கோயில் சொத்து கோடிக்கணக்கில் பெருகுது. கோயிலுக்கு என்பதைவிட கோயிலை உருவாக்கிய சாமியாருக்கு என்று சொல்வதே பொருத்தமா இருக்கும். ஆக.....

மக்களின் பலவீனங்களை அத்துபடியாய்த் தெரிந்துகொண்டு சாமியார் வேடம் போட்டவனெல்லாம் கோடிகோடியாய்ச் சொத்துச் சேகரித்தான் என்பது வரலாறு.  இந்த வரலாறெல்லாம் நம்மில் மிகப் பலருக்கும் தெரியுமோ தெரியாதோ, அதைச் சுருக்கமாகவோ சற்றே விரிவாக மீள்பதிவு செய்வது என் நோக்கமல்ல.

இரண்டு பிரபல சாமியார்களின்...அல்ல, பூசாரிகளின் வாழ்த்துச் செய்திகளை நாளிதழ்கள் அவர்களின் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளன.

 இந்தப் படத்தில் உள்ளவர் ‘சக்தி அம்மா’வாம்.


இந்தப் படத்தில் உள்ளவரும் அம்மாதான்.

முன்பெல்லாம் சாமியார் வேடம் போட்டவர்கள் தங்களை, ‘அவதாரம்’, ‘பகவான்’, ’நடமாடும் தெய்வம்’, கலியுகக் கடவுள்’ என்றெல்லாம் அழைத்துக்கொண்டார்கள். 

இவர்கள் ‘அம்மா’ என்று அழைத்துக்கொள்கிறார்கள்.

இவர்கள் அம்மா என்று சொல்வது மனிதர்களை ஈன்றெடுக்கும் மனித இனத்து அம்மாக்களை அல்ல; ஆனானப்பட்ட முழுமுதல் கடவுளின் துணைவியான ‘சக்தி’யை!

அந்தச் சக்தியை வழிபட நினைப்பவர்கள் தங்களை   வழிபட்டால் போதும் என்று இவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.

இது நம்மில் எத்தனை பேருக்குப் புரியும்?!
=======================================================================

சனி, 26 அக்டோபர், 2019

தமிழறிஞர்களும் தணியாத தாம்பத்திய சுகமும்!

பழந்தமிழறிஞர் பலருக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர் இருந்திருக்கிறார்கள்.
கலித்தொகையைப் பதிப்பித்தவராக அடையாளப்படுத்தப்படும் சி.வை.தாமோதரம்பிள்ளைக்கு மூன்று மனைவியர்; பத்துப் பிள்ளைகள். 

புதுமைப்பித்தன் ‘சாபவிமோசனம்’ கதையை எழுதுவதற்குக் காரணமாக அமைந்த ‘அகலிகை வெண்பா’ என்னும் நூலை எழுதிய கால்நடை மருத்துவரான வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியாருக்கு இரண்டு மனைவியர்; ஆறு பிள்ளைகள். 

1300 ஆண்டுகளுக்கான வானியல் பஞ்சாங்கத்தை உருவாக்கியவரும், கோள்களின் அடிப்படையில் இலக்கிய நூல்களின் காலத்தைக் கணித்தவருமான எஸ்.டி.சாமிக்கண்ணுப் பிள்ளைக்கு இரண்டு மனைவியர்; பதினாறு பிள்ளைகள்.

{தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியான மறைமலை அடிகளார், குடும்பத் தலைவனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியர்[ஒருத்தி கருவுற்றால் ‘அந்த’ச் சுகத்துக்கு இன்னொருத்தி தேவை. அவளும் கருவுற்றால்...கற்பனை செய்துகொள்க] தேவை என்னும் கொள்கை உடையவர்}.

15 வயதில் திருமணம் செய்துகொண்ட நாவலர் சோமசுந்தர பாரதியார், தம் 48ஆம் வயதில் மறுதிருமணம் செய்தார். [ஆதாரம்: ‘தமிழறிஞர்கள்’, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில். தகவல் உதவி: தமிழ் இந்து 26.10.2019]

இவ்வாறாக நீண்டுகொண்டே போகிறது தமிழறிஞர்களின் தாம்பத்திய மோகம் குறித்த  பட்டியல்.

‘அது’ விசயத்தில் தமிழறிஞர்கள் அதீத ஆர்வம் படைத்தவர்களாக இருந்தமைக்கு.....

அகத்துறை இலக்கியங்களின் முக்கியப் பாடுபொருளாக இருந்த, பெண்களின் அண்ணாந்து ஏந்திய[மேல் நோக்கிய] மென் கொங்கைகள் குறித்தும் அகல்[அகன்ற] அல்குல் குறித்தும் ஆழ்நிலை ஆய்வுகளில் ஈடுபட்டது காரணமோ!?

அக்காலத் தமிழறிஞர்கள் அப்படி! இக்காலத் தமிழறிஞர்கள்?
===========================================================================




வெள்ளி, 25 அக்டோபர், 2019

தமிழ் எழுத்தாளர்களை மதித்துப் போற்றும் தமிழ்நாட்டு நீதிமன்றம்!

பிரபல எழுத்தாளர் கி.ராஜநாராயணன், வார இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் ஆதிதிராவிடர்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்ததாக மதுரைக்காரர் ஒருவர், மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்குத் தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்குத் தொடுக்கப் போதிய முகாந்தரம் இல்லையென்று வழக்கைத் தள்ளுபடி செய்தார்[‘தமிழ் இந்து’ 25.10.2019]. அவர் எழுத்தாளர் கி.ரா. குறித்துத் தெரிவித்த கருத்து பின்வருமாறு:

‘கி.ரா. பிரபல எழுத்தாளர்; பல்வேறு விருதுகளைப் பெற்றவர்’ 

நீதிபதி அவர்கள், குறிப்பிட்டதொரு வகுப்பாரைத் தன் நாவல் மூலமாக இழிவுபடுத்திவிட்டதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில் பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் விடுவிக்கப்பட்டதையும் நினைவுகூர்ந்திருக்கிறார்.

மேற்கண்ட இரு எழுத்தாளர்களுமே சர்ச்சைக்குரிய நூல்களைத் [கி.ரா...‘பாலுறவுக் கதைகள்’{தலைப்பு நினைவில்லை}; பெ.மு...‘மாதொருபாகன்’, ‘கெட்ட வார்த்தை பேசுவோம்’] தந்தவர்கள் எனினும், தங்களின் தரமான படைப்புகள் மூலம் தமிழுக்குப் பெருமை சேர்த்தவர்கள் என்ற வகையில், நீதிபதிகளால் விடுவிக்கப்பட்டு மதித்துப் போற்றப்பட்டது வரவேற்கத்தக்கதாகும்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோருக்குத் தமிழ் மக்கள் என்றென்று கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

கி.ராஜநாராயணன் க்கான பட முடிவு
பெருமாள் முருகன் க்கான பட முடிவு







புதன், 23 அக்டோபர், 2019

நாவலாசிரியர் பூமணியின் ‘வெக்கை’ ஒரு ‘மொக்கை’க் கதையா?!

பிரபல நாவலாசிரியர் பூமணியின் ‘வெக்கை’ என்னும் புதினம் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றி மாறனால் ‘அசுரன்’ என்னும் பெயரில் சினிமா ஆக்கப்பட்டு விமர்சகர்கள் பலராலும் பாராட்டப்பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்த, இயக்குநர் வசந்தபாலனின் மதிப்புரை இந்த வாரக் குங்குமம் இதழில் வெளியாகியுள்ளது.
வசந்தபாலன்

பூமணி
#ஒரு கேங்ஸ்டரின் வாழ்க்கையை மரியோ பூஸோ ‘காட்ஃபாதர்’ என எழுதுகிறார். சேதன் பகத் அவரது கல்லூரி வாழ்க்கை, காதல்கள் பற்றி எழுதுகிறார். இதெல்லாம் ஒருத்தருடைய அனுபவமாக இருக்கும். அவருடைய கதையாக இருக்கும். இதை ஸ்கிரிப்ட் ஆக்க அதிகம் சிரமப்பட வேண்டியதில்லை.

இங்கே இலக்கிய அமைப்புடன் இருக்கிற நாவல்கள்தான் அதிகம். காட்சி வடிவத்தில் இருக்கிற நாவல்கள் குறைவு. 90க்குப் பிறகு மாடர்ன் லிட்ரேச்சர் வந்துவிட்டது. கதையே சொல்லக்கூடாது என்ற முடிவில் அவர்கள் இருந்தார்கள். உதாரணமாக ‘வெக்கை’யை எடுக்கலாம்.

‘வெக்கை’யை வைத்துமட்டும் ஒரு முழுப்படம் செய்திட முடியாது. வெற்றிமாறன் இரண்டாம் பகுதியில் ஒரு புதுக்கதை பண்ணியிருக்கார். ‘விசாரணை’யிலும் அப்படித்தான் செய்தார். எடுக்க முடிகிற, எடுக்க முடியாத நாவல்கள்னு நம்மகிட்டே இரண்டு பக்கமும் இருக்கு. ‘வெக்கை’யை வாசிச்சவங்களைக் கேட்டால் இதிலிருக்கிற எந்தத்தன்மையும் ‘அசுர’னில் இல்லை என்பார்கள். இப்படி முரண்பாடு இருக்கு.

ஆனால், சினிமாவின் மொழி ஒரு ரிதமாக உருவாகணும். திரைவடிவத்திற்கு மாற்றுகிற சிரமங்கள், திரைக்கதை ஆசிரியர்களின் போதாமை என இதெல்லாம் கலந்துதான் நம்மகிட்டே சிக்கல்கள் இருக்கு. வெற்றிமாறன் இரண்டாம் பகுதியில் ஒரு கதையை எழுதி அதை ‘வெக்கை’
யோடு சேர்த்திருக்கார். அது பெரிய பணி. ‘வெக்கை’ படிச்ச ஒரு லட்சம் வாசகர்கள் இருப்பாங்க. அவங்களை திருப்திப்படுத்தி, படம் பார்க்கிறவங்களையும் திருப்தி பண்றது உயிரை எடுக்கிற வேலை#


‘பூமணியின் நாவலில் கதையே இல்லை. பூமணியின் கதைக்கும் அசுரன் திரைப்படக் கதைக்கும் இடையே முரண்பாடு உள்ளது. படத்தின் இரண்டாம் பகுதியில் பூமணியின் கதை நிராகரிக்கப்பட்டு, வெற்றிமாறனின் கதை சேர்க்கப்பட்டுள்ளது’ -வசந்தபாலனின் விமர்சனத்தில் இவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

இந்த விவர்சனம் எழுத்தாளர் பூமணிக்குப் பெருமை சேர்க்கவில்லை. 

இதைப் பூமணி நிச்சயம் வாசித்திருப்பார். ஆனால், இதற்கான மறுப்புரையை அவர் வெளியிட்டதாகத் தெரியவில்லை. 

அவரின் கருத்தை அறிய என் போன்ற கத்துக்குட்டிகள் உட்பட அனைத்துத் தமிழ் எழுத்தாளர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்!
======================================================================== 

திங்கள், 21 அக்டோபர், 2019

நமக்கு எம்மதமும் சம்மதம் இல்லை!

அனைத்து உலகங்களும் கடவுளால் படைக்கப்பட்டது என்கிறார்கள் மதவாதிகள்.

படைத்தது ஏன்? எப்போது? எவ்வாறு? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியை அடியோடு கைவிட்டுவிட்ட இவர்கள், ‘எத்தனை நாட்களில் படைத்தார்?’ என்ற கேள்வியை மட்டும் எழுப்பி அதற்கு விலாவாரியாகப் பதிலும் சொல்லுகிறார்கள்; மனிதர்களால் எழுதப்பட்ட மத நூல்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

இவர்கள் சொல்வதில் உண்மை இல்லை என்று மறுப்புத் தெரிவித்தால் வசைமாரி பொழிகிறார்கள்; மறுப்பவர்களின் தலைகளுக்கு ‘விலை’ வைக்கிறார்கள்.

கடவுள் 6 நாட்களில் உலகங்களைப் படைத்துவிட்டு 7 ஆவது நாளில் ‘ஓய்வு’ எடுத்துக்கொண்டாராம். ‘ஆதி ஆகமம்’ முதல் அத்தியாயத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருக்கிறதாம். கிறித்தவர்கள் சொல்கிறார்கள். [-www.cmn.co.za/html/faq/how_long_create.htm]

கடவுளைப் போலவே மனிதர்களாகிய நாமும், ஆறு நாட்கள் உழைத்துவிட்டு ஏழாவது நாள் ஓய்வெடுக்கலாமாம். கடவுளின் வழியில் மனிதன்!

சூரியனின் இயக்கத்தைக் கொண்டுதான் நாட்களும் நேரங்களும் கணிக்கப்படுகின்றன. சூரியனே இல்லாத நிலையில், ஆறு நாள் என்று கணக்கிட்டது எப்படி? கதை கட்டியவர் கொஞ்சமேனும் சிந்தித்திருக்க வேண்டாமா?

ஆறு நாட்கள்! அது என்னய்யா கணக்கு?

விவரிப்புக்கு அப்பாற்பட்ட பேராற்றல் வாய்ந்த கடவுளால், ஆறே ஆறு மைக்ரோ...மைக்ரோ...மைக்ரோ நொடிகளில் [இப்படி நாம் வரையறுப்பதும் தவறுதான்] தாம் நினைப்பதையெல்லாம் படைத்துவிட முடியுமே. அப்புறம் எதற்கு ஆறு நாள் ஏழு நாள் எல்லாம்?

ஆறு நாள் குழறுபடியைப் புரிந்துகொண்ட மதப் பற்றாளர்கள்,  “ஆறு என்பது அடுத்தடுத்த கட்டங்களே தவிர, ஆறு நாட்கள் அல்ல; ஆறு கட்டங்களில் லட்சோப லட்சம் ஆண்டுகள் உழைத்து[...millions of years when God created the world...] அவர் தம் செயலைச் செய்து முடித்தார்” என்று சொல்லிச் சமாளித்தார்கள்.

உலகங்களை[பிரபஞ்சத்தை]க் கடவுள் படைத்தார் என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். எதற்கு இந்த வழவழா கொழகொழா வியாக்யாணம் என்பது நமக்குப் புரியவே புரியாத புதிராக இருக்கிறது!

பாவம் கடவுள்! அப்படி ஒருவர் இருந்தால், இந்தக் கதைகளை எல்லாம் கேள்விப்பட்டு, திக்குத் தெரியாத வெட்ட வெளியில் பித்துப் பிடித்து அலைந்துகொண்டிருப்பார் என்பதில் எள் முனை அளவும் சந்தேகமில்லை.[www.cmn.co.za/html/faq/how_long_create.htmwww.cmn.co.za/html/faq/how_long_create.htm]


இந்த ஆறு நாள் கணக்கு குரானிலும் இடம் பெற்றிருக்கிறது

அந்த ஆறு நாட்களில் ‘சொர்க்கம்,நரகம்’ ஆகியவற்றை மட்டுமே கடவுள் 
உருவாக்கினார் என்கிறது அது. ‘ஆறு’ என்பது வெறும் கணக்குதான். 
உலகங்களைப் படைக்க வரையறையற்ற ஆண்டுகள் அவருக்குத் 
தேவைப்பட்டன என்கிறார்கள் மதப் பிரச்சாரகர்கள்.. 
[The Quran in S. 7:54, 10:3, 11:7, and 25:59 clearly teaches 
that God created "the heavens and the earth" in six days.]

உயிர்களே படைக்கப்படாத நிலையில், சொர்க்கத்தையும் நரகத்தையும் கடவுள் படைத்ததன் பொருள் என்ன?

தான் படைக்கவிருக்கும் உயிர்களில் புண்ணியம் செய்பவை சொர்க்கத்திற்கும் பாவம் செய்பவை நரகத்திற்கும் செல்ல வேண்டும் என்பதற்காகத்தானே?

ஆக, பாவ புண்ணியச் செயல்களில் ஈடுபடும் வகையில் உயிர்களைப் படைப்பதென்று கடவுள் முடிவெடுத்த்திருக்கிறார்; படைத்திருக்கிறார்.

கடவுளின் இந்தச் செயல், கடும் கண்டனத்திற்கு உரியதல்லவா?

இஸ்லாம் மதத்தின் இன்றைய ‘தீவிர’ப் பற்றாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

இந்து மதவாதிகளைப் பொருத்தவரை ஆறு, ஏழு என்று கடவுளுக்குக் ‘காலக்கெடு விதிப்பதைத் தவிர்த்துவிட்டார்கள்.

முட்டை வடிவிலான உலக உருண்டையிருந்தே["Egg-shaped cosmos"]
அனைத்து உலகங்களும்[பிரபஞ்சம்] விரிவடைந்ததாகச் சொல்கிறார்கள். இது பற்றிப்  பிரமானந்த புராணம்[Brahmanda Purana] விரிவாகப் பேசுகிறதாம். [Wikipedia]

 கோழி முட்டையிலிருந்து குஞ்சு வெளியாவதைப் பார்த்த அனுபவம் இவர்களை இப்படிக் கற்பனை செய்ய வைத்திருக்கிறது. ஆண் பெண் சேர்க்கையால் புதிய உயிர் தோன்றுவது போல, பூமிப் பெண்ணும் ஆகாய ஆணும் புணர்ச்சி செய்ததால் பிரபஞ்சம் தோன்றியது என்று நம்பினார்களே, அது போல.

அந்த நம்பிக்கையின் விளைவாகச் ‘சிவலிங்கம்’ உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அது கடவுளாக வழிபடப்படுகிறது.

கொஞ்சமே கொஞ்சம் சிந்திக்கும்  அறிவு பெற்றிருந்த காலத்தில், உலகத் தோற்றம், கடவுள், படைப்பு பற்றியெல்லாம் மனிதன் மேற்கண்டவாறு மனம் போன போக்கில் அனுமானம் செய்ததில் தவறேதும் இல்லை. இந்த அறிவியல் யுகத்திலும் அவர்கள் சொல்லிவிட்டுப் போன கதைகளைத் திரும்ப மேடை ஏறி முழங்குவது ஏடுகளில் எழுதுவதும் தேவையா என்பதைச் சம்பந்தப்பட்ட மதவாதிகள் ஆராய்வது இன்றைய அத்யாவசியத் தேவையாகும்.
=======================================================================================
13.11.2014இல் ‘படைப்பு உலகம் என்னும் தளத்தில் நான் எழுதிய பதிவு இது. 2016இல் ‘கடவுளின் கடவுள்’ தளத்தில் வெளியானது. பதிவின் முக்கியத்துவம் கருதி இங்கும் இப்போது வெளியிடப்படுகிறது

சனி, 19 அக்டோபர், 2019

ஒரு ‘குடு குடு’ கிராமத்துக் கிழவியின் கதை

‘கிளுகிளு’ பருவக் குமரிகள் குறித்த காதல் கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இது சாவோடு ‘சடுகுடு’ விளையாடிக்கொண்டிருந்த ஒரு கிராமத்துக் கிழவியின் கதை. வாசிப்பது உங்கள் விருப்பம்! நீங்கள் வியத்தகு நினைவாற்றல் உள்ளவரெனின் தவிர்க்கலாம்!
சேலம்- கோவை நெடுஞ் சாலையில், சங்ககிரியை அடுத்த ஆறாவது கிலோ மீட்டரில், பல்லக்காபாளையம் செல்லும் ஊராட்சிப் பாதை கிளைவிடும் இடம். சாலையின் விளிம்பில், முகம் வைத்து நீண்டு கிடக்கும் பனை ஓலை வேய்ந்த அந்தத் தேனீர்க் கடை நல்லப்பனுடையது.

கடையை ஒட்டி, வரிசையில் குந்தியிருந்த ஐந்தாறு குடிசைகளுக்கும் சேர்த்துக் குடை பிடித்துக்கொண்டிருந்தது ஒரு பெரிய ஆலமரம்.

அதன் நிழலில், தன்னைப் போலவே காலாவதி ஆகிப்போன ஒரு கயிற்றுக் கட்டிலில் சிறு பிள்ளையைப் போல முடங்கிக் கிடந்தாள் அத்தாயி. கிழவிக்கு அன்று உடம்பு சுகமில்லை.

பல்லாங்குழி ஆடிக்கொண்டிருந்த ஆடு மேய்க்கும் சிறுமிகளில் ஒருத்தி, “ஆயா...ஒம் மருமூவ கூப்புடுது” என்றாள்.

சோறு உண்ணத்தான் மருமகள் அழைக்கிறாள் என நினைத்துவிட்ட அத்தாயி, “இப்போ சோறு வேண்டாம். ஒரு தம்ளாரு சுடு தண்ணி மாத்தரம் கொண்டாரச் சொல்லு” என்றாள்.

சில வினாடிகளில் மருமகள் வந்தாள். சூடான நீரோடு அல்ல; சுடச்சுட வார்த்தைகளோடு.

“நானும் பார்த்துட்டிருக்கேன். சாணி பொறுக்கப் போகாம காத்தாலேயிருந்து மரத்தடியிலேயே கிடத்தி வெச்சிருக்கியே, என்ன நோக்காடு வந்துது? ஊரு ஒலகத்தில் வயசானவங்க இல்ல? அவங்களுக்கெல்லாம் நோய் நொடி வர்றதில்ல? இதா ஆச்சி அதா ஆச்சி, உயிர் போகப் போகுதுங்கிற மாதிரி கட்டிலே கதின்னு படுத்துக் கிடக்கிறே. யார் யாருக்கோ சாவு வருது; இந்தச் சனியனுக்கு ஒரு சாவு வருதா?” என்று பொரிந்து தள்ளினாள்.

ரு சாணக் கூடையை அத்தாயி மீது வீசிவிட்டுப் போனாள்.

நெடுஞ்சாலையில் சாணம் பொறுக்கிக்கொண்டிருந்தாள் அத்தாயி.

கூடையிலிருந்து சிதறிய சாணத்தில் ஊன்றிய கால்கள் சறுக்கிவிட, இடம் பெயர்ந்து, சாலையின் நடுவே மல்லாந்து விழுந்தாள் கிழவி. 

கடூரமான ‘கிறீச்’ ஒலியோடு சாலையைத் தேய்த்து நின்றது ஒரு லாரி.

“ஏம்ப்பா நல்லப்பா, இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கிற  இந்தக் கிழவி, சாணி திரட்டி வந்து வறட்டி தட்டிப் போட்டுத்தான் உன் வீட்டு அடுப்பு எரியணுமா?” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டு நிமிர்ந்தான் டீ ஆற்றிக்கொண்டிருந்த நல்லப்பன்.

கடை எதிரே, லாரி ஓட்டுநரின் ஆதரவில் தன் தாய் நிற்பதைக் கண்டான்.

மவுனமாய்க் கிழவியை அழைத்துப் போய்க் கட்டிலில் கிடத்தினான்.

“காடு வா வாங்குது; வீடு போ போங்குது. இந்த வேலைக்கெல்லாம் போகச் சொல்லி உன்னை யார் அடிச்சது? நீ லாரியில் அடிபட்டுச் செத்துத் தொலைச்சிருந்தா, இப்போ கருமாதிச் செலவுக்குக்கூடக் கையில் காசில்ல. வேளா வேளைக்குக் கொட்டிகிட்டுச் சும்மா கிடந்து தொலையேன்.”

பேசி முடித்துவிட்டு நகர்ந்தான் நல்லப்பன்.

அதோ.....மருமகள் வந்துகொண்டிருக்கிறாள்!
======================================================================================== இது அடியேனின் படைப்பு! ‘தேனமுதம்’ என்னும் சிற்றிதழில் வெளியானது.

இன்னும் என்னங்கடா பகவான்?!

காப்பீட்டு நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து, சிறிது காலம் தலைமறைவாகி, மீண்டும் வெளிப்பட்டுத் தன்னைத்தானே “நான் கல்கி[விஷ்ணு எடுக்கவிருந்த 10ஆவது அவதாரம் என்பார்கள்]யாக அவதரித்திருக்கிறேன்” என்று சொல்லிச் சொல்லிச் சொல்லி மிகப் பெரும்பாலான மக்களை மூளைச் சலவை செய்து, கோடி கோடியாய்ச் செல்வம் சேர்த்துள்ள விஜயகுமாரை ஊடகச் செய்திகளின் வாயிலாக நம்மில் மிகப் பெரும்பாலோர் அறிந்திருப்பர் என்பதே என் நம்பிக்கை.

இன்றைய நாளிதழ்களில்.....

#இன்று 3ஆவது நாளாக இவருடைய ஆசிரமத்தில் சோதனை நடத்தப்பட்டபோது, ஆசிரம நிர்வாகிகள் ஒரு மூட்டையை ஆசிரமத்தின் பின்புறமாக வீசியெறிந்ததைக் கண்ட வருமான வரித்துறையினர் ஓடிச் சென்று அந்த மூட்டையைக் கைப்பற்றிச் சோதனையிட்டபோது அதில் 45 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது தெரிய வந்தது.

ஏற்கனவே, 24 கோடி இந்திய ரூபாய்களும் 9 கோடி வெளிநாட்டுக் கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அரசு மற்றும் தனியாருக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தொடர்பான பத்திரங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்# என்றிப்படியான பரபரப்பூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. இவை போன்ற இன்னும் பல செய்திகள் வெளியாகிட நிறையவே வாய்ப்புள்ளது.

ஏற்கனவே நீங்கள் அறிந்திருப்பதற்கான வாய்ப்புள்ள இச்செய்திகளை நினைவுபடுத்தி உங்களின் நேரத்தை வீணடிப்பது என் நோக்கமல்ல.

ஒரே ஒரு கேள்வியை நம் இதாழாளர்கள் முன்வைப்பது என் விருப்பம் ஆகும். அது.....

“நானே கல்கி அவதாரம்” என்பது தொடங்கி இந்த ஆள் பரப்புரை செய்த அத்தனை பொய்களையும் இந்நாள்வரை தவறாமல் வெளியிட்டு மூடநம்பிக்கைகளில் சிக்குண்டு தவிக்கும் மிகப் பெரும்பாலான மக்களுக்குப் பெரும் தீங்கு விளைவித்தீர்கள்.

இந்த நபர் ஒரு மோசடிப் பேர்வழி என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும், ‘பகவான் கல்கி’ என்றே குறிப்பிட்டுச் செய்தி வெளியிடுகிறீர்கள். இது நீங்களெல்லாம் தெரிந்து செய்யும் குற்றமா, அறியாமையில் செய்யும் தவறா என்பது புரியவில்லை.
[இது இன்றைய நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது]

உண்மை எதுவாயினும் இனியேனும் இந்தத் தவற்றைச் செய்யாதீர்கள்; இந்த ஆள் குறித்துச் செய்தி வெளியிட நேர்ந்தால், ‘தன்னைத்தானே கல்கி அவதாரம் என்று சொல்லிக்கொண்ட விஜயகுமார்’ என்று குறிப்பிடுங்கள்.

இது என் வேண்டுகோள்.
===========================================================================