பக்கங்கள்

புதன், 30 அக்டோபர், 2019

நல்லாக் கேட்டாரய்யா நெல்லைக் கண்ணன்!!!

‘காமதேனு’[27.10.2019] வார இதழுக்குப் பேட்டி அளித்தார் நெல்லைக் கண்ணன். பேட்டி கண்டவர் முன்வைத்த கேள்விகளில், “இலக்கியம், அரசியல், ஆன்மிகம் என்றிவற்றில் எதை விரும்பிப் பேசுவீங்க?” என்பதும் ஒன்று.
நெல்லைக் கண்ணனின் பதில்:
#நான் அடிப்படையில் தமிழறிஞன். அந்த வகையில் இலக்கியம்தான்யா மன நிம்மதியைத் தரும். 

திருக்குறள் படிச்ச ஒவ்வொருவனுக்குமே நாட்டுல நடக்குற தவறுகளைத் தட்டிக் கேட்க உரிமை இருக்கு.

இன்னிக்கித் தேங்காய் உடைக்கிறதும், அலகு குத்துறதும், கொடை நடத்துறதுமே ஆன்மிகம்னு நினைக்கிறாங்க. அப்படி இல்லை. உண்மையைத் தேடுறதுதான் ஆன்மிகம்.

ஒரு மாநில முதல்வர் தன்னோட எதிரிகளை அழிக்கிறதுக்காக யாகம் நடத்துறார். சாமி என்ன கூலிப்படையா?#

-----தேங்காய் உடைக்கிறவங்களுக்கும் அலகு குத்துறவங்களுக்கும் யாகம் பண்ணுறவங்களுக்கும் உறைக்கும்படியாகத்தான் கேட்டிருகிறார் கண்ணன். ஆனால் கண்ணன் கொஞ்சம் யோசிச்சிப் பார்த்திருந்தா, கடவுள் ஒரு கூலிப்படை ஆள்தான் என்பது புரிந்திருக்கும்.

புராணங்கள் சொல்லும் கதைகளின்படி, அவருக்கு அடிபணியாத அரக்கர்களை, சூலாயுதம், சக்கரம், அக்கினின்னு விதம் விதமான கருவிகளைப் பயன்படுத்தி அவர் கொன்றொழித்தார் என்பதை அறியலாம்.

நினைச்ச காரியம் நிறைவேறுவதற்குப் பக்தகோடிகள் கடவுளுக்குக் காணிக்கை செலுத்துகிறார்கள். இது நெல்லைக் கண்ணனின் நினைவுக்கு வந்திருந்தால், “கடவுள் என்ன வியாபாரியா?” என்று கேட்டிருப்பார்.

கடவுள்களுக்கு வண்ண வண்ணப் பட்டாடைகள் கட்டி, தங்கம், வைரம், வைடூரியம்னு விலையுயர்ந்த உலோகங்களால் ஆன அணிகலன் பூட்டி மனிதர்கள் அழகு பார்ப்பதை அவர் எண்ணிப் பார்த்திருந்தால், “அடே மூடர்களா, கடவுள் என்ன பேராசைக்காரரா?” என்று கேட்டுச் சாடியிருப்பார்.

“உண்மையைத் தேடுவதுதான் ஆன்மிகம்” என்று சொன்ன அவர், சற்றே ஆழமாகச் சிந்தித்திருந்தால், “அனைத்திற்கும் மூலகாரணமானது எது என்று கண்டறிவதே உண்மையைக் கண்டறிவதாகும். அப்படி ஒன்றை இன்றளவும் எந்தவொரு அவதாரமோ மகானோ உரிய ஆதாரங்களுடன் கண்டறிந்து சொன்னதில்லை. உண்மை இதுவாக இருக்கையில் கடவுள் என்று ஒரு நபரைக் கற்பித்ததே முட்டாள்தனம்” என்றும் உறுதிபடச் சொல்லியிருப்பார்.

”கடவுள் என்ன கூலிப்படையா?” என்று கேட்ட நெல்லைக் கண்ணன் அவர்கள், இன்னும் இன்னும் இன்னும் ஆழமாகச் சிந்தித்து மேற்குறிப்பிடப்பட்டவை போன்ற கேள்விகளை நிறையவே கேட்க வேண்டும்; அறியாமையில் சிக்குண்டு தவிக்கும் நம் மக்களைச் சிந்துக்கத் தூண்டிட வேண்டும் என்பதே நாம் அவர் முன்வைக்கும் வேண்டுகோள் ஆகும்.
===========================================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக