எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 21 மே, 2025

பொல்லாத மரணமும் அல்லாடும் மனித இனமும்!!!

னிதர்களின் தீரவே தீராத கவலைகளில் தலையாயது மரணித்த  பிறகு என்ன ஆகிறோம் என்பதுதான்.

இந்த மரண பயமே மனிதர்களை ஆட்டிப்படைக்கும் மூடநம்பிக்கைகளின் விளைநிலமாக உள்ளது.

மதங்களின் தோற்றத்திற்கும் இதுவே முக்கியக் காரணமாகும். உலக அளவில் 4000க்கும் மேற்பட்ட மதங்கள் இருந்ததாகச் சொல்கிறார்கள்.

அவற்றுள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றவற்றின் எண்ணிக்கை 20 என்பது ஆய்வாளர்களின் நம்பிக்கை.

இவற்றுள் அதிக அளவில் மக்களால் பின்பற்றப்படும்  மதங்களின் கொள்கைகள் குறித்த சிறு தொகுப்புக் கட்டுரை இதுவாகும்.

கிறிஸ்தவம் மதம்: மரணம் என்பது முடிந்த முடிவு அல்ல. ஆன்மா என்று ஒன்று உண்டு. செய்யும் நன்மை தீமைகளுக்கு ஏற்ப அவற்றைச் சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ அனுப்புவதைக் கடவுள்[கர்த்தர்] முடிவு செய்கிறார்.

இஸ்லாம் மதம்: மரணம் பற்றிய அச்சம் தேவையற்றது. ஆன்மா உண்டு. மனிதர்கள் இறந்த பிறகு ஆன்மாக்களைச் சேகரிக்க அல்லா[ஹ்] தேவதைகளை அனுப்புகிறார். செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அவை செல்லும் இடம் குறித்து அல்லா நியாயத் தீர்ப்பு வழங்குவார்.

இந்து மதம்: மரணத்திற்குப் பின்னர் மறுபிறப்புகள் உண்டு. மனிதர்கள் மீண்டும் வேறொரு உடலில், விலங்கு வடிவில்கூடப் பிறப்பார்கள். ஞானிகள், மகான்கள் போன்றோர் மோட்சம் பெற்று முடிவில்லாத மறுபிறவிச் சுழற்சியிலிருந்து விடுதலை பெற முடியும். சொர்க்கமும் நரகமும் உள்ளன. கடவுள்களுக்குப் பஞ்சமில்லை.

பௌத்த மதம்: வாழ்க்கையும் மரணமும் ஒரு தொடர்ச்சி என்று பௌத்தம் சொல்கிறது. ஆன்மா உண்டு. மறுபிறப்பு எப்போது, ​​எங்கே, எப்படி நிகழ்கிறது என்பது ஒரு நபரின் திரட்டப்பட்ட கர்மாவால் தீர்மானிக்கப்படுகிறது. கடவுள் குறித்த கேள்விக்குப் புத்தர் மௌனம் சாதித்ததாகச் சொல்லப்படுகிறது.

சீக்கிய மதம்: ஆன்மா ஒருவரின் நல்வினை தீவினைகளுக்கேற்ப மறுபிறவி எடுக்கிறது. மறுபிறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறுவது கடவுளைத் தியானிப்பதன் மூலம் சாத்தியமாகும்.

ஜைன மதம்: ஆன்மா நித்தியமானது. மறுபிறப்பு உண்டு. இறுதி இலக்கு ஆன்மாவைக் கர்மாவிலிருந்து விடுவிப்பதே. பாவம் செய்யாமல் வாழ்வது அதைச் சாத்தியப்படுத்தும்.

சீன மதம்[கன்பூசியனிஸ்]: இறந்த பிறகு நமக்கு என்ன நடக்கிறது என்பதைவிடவும், மனத்தூய்மையுடன் வாழ்வதையே வற்புறுத்துகிறது சீன மதம். ஆன்மா, மறுபிறப்பு போன்றவற்றை அது பொருட்படுத்தவில்லை. 

கடவுள் மறுப்பு மதங்கள்[இவற்றை மதங்களாகக் கருதுதல் கூடாது  என்பாரும் உளர்]: கடவுள் இல்லை; ஆன்மா, மறுபிறப்பு போன்றவையும் இல்லை[நாத்திகம்>atheism அஞ்ஞானவாதம்>agnosticism, மனிதநேயம்>humanism) போன்ற பிரிவுகள் உள்ளன].

***மிகச் சுருக்கமான பதிவு என்பதால், முக்கியமான கருத்தாக்கங்கள் விடுபட்டிருக்கலாம் என்பதை நினைவில் கொள்க.