எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 21 மார்ச், 2025

உள்துறை அமைச்சருக்கு[அமித்ஷா]ப் பொது அறிவு பூஜ்யம்!!!

இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு நண்பன். அது பிற இந்திய மொழிகளை வலிமையாக்குகிறது என்று அமித்ஷா உரையாற்றினார்[இந்து தமிழ்].

இப்படியொரு பொய்யை அவ்வப்போது அழுத்தம் திருத்தமாகச்சொல்லிக்கொண்டிருக்கிறார் இவர். திரும்பத் திரும்பச் சொல்வதால் பொய் ‘மெய்’ ஆகிவிடாது.

இதையே கொஞ்சம் மாற்றி, “ஆங்கிலம் அனைத்து உலக மொழிகளுக்கும் நண்பன். அது அவற்றை வலிமையாக்குகிறது” என்று சொன்னால் அது அனைவரும் ஏற்கத்தக்கக் கலப்படம் இல்லாத உண்மையாக இருக்கும்.

காரணம்.....

ஆங்கிலத்திடமிருந்துதான் பல மொழிகளும் அறிவியல், தொழில்நுட்பம் தொடர்பான அம்சங்களைப் பெற்றன; பெறுகின்றன.

அமித்ஷாவின் கிளிப்பிள்ளைப் பேச்சு அவருக்குப் பொது அறிவு இல்லை என்பதைக் காட்டுகிறது; தரமில்லாத ஒரு மொழியை[இந்தி] பிற இனத்தவர் மீது திணிக்கும் மொழி வெறியின் அடையாளம் என்றும் சொல்லலாம்.

இவர் தன்னைத் திருத்திக்கொள்வது இந்திய ஒருமைப்பாடு உடைந்து சிதறாமலிருக்க உதவும் என்பதை அவர் உணர்தல் வேண்டும்.

* * * * *

https://www.hindutamil.in/news/india/1355172-people-are-using-language-issue-to-cover-corruption-home-minister-amit-shah-2.html


“பெண்ணின் மார்பைப் ‘பிடிப்பது’ குற்றமல்ல”... நீதிபதி! இவன் அநீதிபதி!!!

{கீழே இடம்பெற்றிருப்பது[நகல் பதிவில்] ஒரு குற்ற வழக்கில் நீதிபதி அளித்த தீர்ப்பு குறித்த நாளிதழ்ச் செய்தி}

“பெண்ணின் மார்பைப் பிடிப்பது, பைஜாமாவைக் கிழிப்பது போன்றவை பலாத்கார[கற்பழிப்பு] முயற்சி அல்ல” என்று ஒரு தர்ம தேவன் புரட்சிகரமானதொரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார். 

பெண்ணின் மார்பைப் பிடிப்பது குற்றமில்லை என்றால், அதை அமுக்குவதும், வருடுவதும், தடவுவதும்,  வாயால் கவ்வுவதும், சுவைப்பதும்தான் குற்றம் என்கிறாரா?

அவளின் பைஜாமாவைக் கிழிப்பது குற்றச் செயல் அல்ல என்றால், அதை அவிழ்த்தெடுத்து அம்மணம் ஆக்குவதுதான்[சிறுமி கூச்சல் போட்டதால் அதைச் செய்ய இயலவில்லை. இது பற்றிச் சிந்திக்கும் அறிவு ஒரு நீதிபதிக்கு இல்லாமல்போனது என்பது பேராச்சரியம்] அதர்மம் என்கிறாரா இந்தக் கலியுக அநீதி தேவன்?

மேற்கண்ட வகையிலான அயோக்கியத்தனங்கள் சமுதாயத்தில் அவ்வப்போது நடப்பவைதான். ஆனால், இந்தவொரு தீர்ப்பு மிக மிக மிக அரிதானதும் அவலமானதுமான ஒன்று.

தீர்ப்பு வழங்கிய நபர் உண்மையிலேயே சட்டக் கல்வி பயின்றவர்தானா என்னும் சந்தேகம் எழுகிறது[இன்னும் பல சந்தேகங்களும் உள்ளன. நீதிமன்ற விவகாரம் என்பதால் அவை தவிர்க்கப்படுகின்றன].

ஆக, குற்றவாளிகளுக்குத் துணைபோனதால் இவரும் குற்றவாளிதான்.

பல்வேறு வகையிலான குற்றங்கள் புரிவோரைத் தண்டிக்கச் சட்டத்தில் இடமுள்ளது. இவரைப் போன்றவர்களைத் தண்டிக்கச் சட்டத்தில் விதி ஏதும் இல்லையா?

இது குறித்துச் சிந்தித்துச் செயல்படுவது இவருக்கும் மேலான அதிகாரம் படைத்த[உச்ச நீதிமன்றம்] நீதிபதிகளின் கடமை ஆகும்.
                                        *   *   *   *   *

இறைவனை ஏமாற்றலாம்! இயற்கையிடம் பருப்பு வேகாது!!

ஆணோ பெண்ணோ, ஏழையோ பணக்காரனோ, அறிஞனோ அறிவிலியோ, அப்பாவியோ அவதாரமோ எவராயினும் மனிதர்களாகிய அவர்களிடம்[பிற உயிரிகளிடமும்தான்]  கடுகளவும் பாரபட்சம் காட்டுவதில்லை இயற்கை.

ஒருவன் கோடிகளுக்கு அதிபதியாக இருக்கலாம். ஆனாலும், குறையக் குறைய வாய்க்கு ருசியாய்த் தின்றுகொண்டே இருந்தால் அற்ப ஆயுளில் அவன் கதையை அது முடித்துவிடும்.

மகான், அவதாரம் என்றும் சொல்லித் திரிகிற ஆசாமிகளை நமக்குத் தெரியும். அடிக்கடி விரதம் நோன்பு எல்லாம் இருப்பதாக அலட்டிக்கொள்வார்கள். அதுவே வாரக்கணக்கில் மாதக்கணக்கில் என்றால் இயற்கை அனுமதிக்காது; பரலோகம் அனுப்பிவிடும்.

“நான் கடவுள்களுக்கெல்லாம் குரு” என்று சொல்லி ஊரை ஏமாற்றலாம்; உலகையும் நம்ப வைக்கலாம். மூளையில் ரத்தக் கசிவோ, மூச்சுக் குழலில் கட்டியோ வந்தால் மருத்துவரைத் தேடிப்போய்ச் சிகிச்சை பெறுதல் வேண்டும். மறுத்தால் எமலோகப் பயணம்தான்.

“நான் கடவுளால் அனுப்பி வைக்கப்பட்டவன்” என்று பீற்றிக்கொள்வர்கள் இங்கே உண்டு. அவர்களை அனுப்பியவர் கடவுளோ சாத்தானோ எதுவாகவோ இருந்து தொலைக்கட்டும். இயற்கையாகவோ செயற்கையாகவோ பக்தி செலுத்தவும் ஓர் எல்லை உண்டு. கடமைகளைப் புறக்கணித்து, கண்ட கண்ட கோயில்களுக்குப் போய், குனிந்து குனிந்து கும்பிடுவதும், தரையில் விழுந்து விழுந்து புரளுவதுமாக இருந்தால் இயற்கை அவர்களைப் ‘பைத்தியம்’ ஆக்கிவிடும்.

ஆடிப்பாடி குதூகளிப்பதோ, ஓடியாடிக் கும்மாளம் போடுவதோ, உடலுறவுச் சுகத்தில் மூழ்க்கிக் கிடப்பதோ எதுவாயினும் அதற்கு ஒரு வரன்முறை உண்டு. அதை மீறினால், ஆணோ பெண்ணோ இயற்கை வேடிக்கை பார்க்காது; ஏதோ ஒருவகையில் தண்டித்துவிடும்.

ஆகவே மானிடர்களே,

கடவுளுக்குக்[இருந்தால்] காணிக்கை செலுத்தியோ, கண்ணீர்விட்டு கதறிக் கதறி அழுது புலம்பியோ செய்த குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். இயற்கையிடம் அவை செல்லுபடி ஆகாது என்பதை அறிவீராக!