புதன், 31 ஜூலை, 2019

ஐயகோ பாவம் அத்தி வரதர்!!!

‘அத்தி வரதர் இருக்க வேண்டிய இடம் குளமா,கோயிலா?’ என்னும் தலைப்பில் நேற்று[30.07.2019] இரவு 10.00 மணிக்கு நெற்றியில் விபூதி பூசிய ஒருத்தரும் நாமம் போட்ட இன்னொருத்தரும் சன் தொலைக்காட்சியில்[பகுத்தறிவுப் பரம்பரையில் வந்தவங்களுக்குச் சொந்தமானது] விவாதம் பண்ணினாங்க.
அத்தி வரதர் க்கான பட முடிவு
விவாதம் ரொம்பக் காரசாரமாவே ஆரம்பிச்சுது. அதைப் பின்தொடரவும் விவாதத்தில் வென்றவர் யாருன்னு அறிந்துகொள்ளவும் ரொம்பவே ஆசைப்பட்டேன். அந்த ஆசை நிறைவேறல. 

‘அத்தி வரதர் இருக்க வேண்டிய இடம் குளமா, கோயிலா?’ங்கிற தலைப்பைப் பார்த்ததுமே வாய்விட்டுச் சிரிக்க ஆரம்பிச்சதுதான் காரணம்.

சிரிப்பைக் கட்டுப்படுத்தவே முடியலைங்க.. சிரிச்சிச் சிரிச்சி ரெண்டு கண்ணிலேயும் கண்ணீர் நிறைஞ்சு வழிஞ்சதுல விவாத நிகழ்ச்சியைப் பார்க்க முடியாம போச்சு. கட்டுக்கடங்காத சிரிப்புக்குக் காரணம் என்னன்னு கேட்குறீங்களா?

பல ஆண்டுகளா குளத்துக்குள் கிடந்த அத்தி வரதரைத் தூக்கிவந்து கோயிலில் படுக்க வைச்சாங்க. அது சயனம் கோலமாம். தரிசனம் பண்ணினா செத்தப்புறம் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும்னு ஊடகங்களுக்குத் தகவல் சொல்ல, அவங்களும் இதை ஊதிப் பெருசாக்கினாங்க. மக்கள் கூட்டம் அலைமோதிச்சி. சொர்க்கத்தில் இடம் பிடிக்கறதுன்னா சும்மாவா?

நாளையிலிருந்து நின்ற கோலத்தில் வரதர் தரிசனம் தருவாராம்.

கோயிலுக்குள் இருந்த வரதரைக் குளத்துக்குள் தூக்கிப் போடுறது; அப்புறம், தூக்கிவந்து கோயிலுக்குள் படுக்க வைக்கிறது; நிற்க வைக்கிறதுன்னு வரதரைப் படாத பாடுபடுத்துறாங்க இந்த மனுசங்க.

இதுல எதுக்காவது வரதர்கிட்டே இவங்க ‘permission' வாங்கினாங்களான்னா, இல்ல. தரமாட்டார்னு பயப்படுறாங்களா? கனவுல வந்து சொன்னாருன்னு அடிச்சிவிட்டாப் போதுமே. பக்தி விசயம்கிறதால பக்தகோடிகள் யாரும் சந்தேகம் கிளப்ப மாட்டாங்க.

வரதரின் நின்ற கோலத் தரிசனம் முடிஞ்சதும் மறுபடியும் குளத்துக்குள் சயன கோலத்தில் கிடத்துறது வழக்கமாம்.

இதுக்குத்தான் இப்போ எதிர்ப்புக் கிளம்பியிருக்கு. கோயிலுக்குள்ளேயே அவர் இருக்கணும்னு சிலர் சொல்ல, அது விவாதத்துக்குரியதா ஆயிடிச்சி. இதன் விளைவுதான் ‘சன்’ தொலைக்காட்சியில் இடம்பெற்ற இரு நபர்களுக்கிடையேயான விவாதம்.

காரசாரமான இந்த விவாதம்தான் எனக்குள் அடங்காத சிரிப்பை வரவழைச்சுது. அபூர்வ சக்தி படைத்த அத்தி வரதர் இருக்கவேண்டிய இடத்தையும், இருத்தற்குரிய கோலத்தையும் முடிவு செய்கிறவர்கள் அற்ப மனிதர்களா என்பதை நினச்சிச் சிரிச்சேன்...இரவு உறங்கப்போகும்வரை சிரிச்சேன்; நடுநடுவே உறக்கம் கலைஞ்சி சிரிச்சேன்.

காலையில் எழுந்தப்புறமும் இது குறித்த நினைப்பு வந்தபோதெல்லாம் சிரிச்சேன்.

இன்னமும் சிரிப்பு அடங்கலீங்க. சிரிப்பைக் கட்டுப்படுத்திட்டுத்தான் இந்தப் பதிவை எழுத ஆரம்பிச்சேன்னா பாருங்களேன்!
=================================================================================

செவ்வாய், 30 ஜூலை, 2019

எழுத்தாளர் ராஜேஷ்குமார் மன்னிப்பாராக!!!

வணக்கம் ராஜேஷ்குமார்!

தமிழில் ஆயிரக்கணக்கில் மர்மக் கதைகள் படைத்து உலகளவில் சாதனை நிகழ்த்தியவர் என்ற வகையில் தங்களைப் பெரிதும் மதிப்பவன் நான். தங்களின் கதைகளில் கணிசமானவற்றை வாசித்து மகிழ்ந்திருக்கிறேன். மர்மக் கதைகளாயினும் அவற்றின் முடிவு[கள்] ஏதேனும் ஒரு வகையில் வாசகன் மனதில் நல்ல சிந்தனைகளை விதைப்பனவாய் அமைந்திருப்பதை மனதளவில் பாராட்டியுமிருக்கிறேன்.

ராணி வார இதழில், தொடர்ந்து வெளிவரும், வாசகர்களின் கேள்விகளுக்கான தங்களின் பதில்களை இடைவிடாமல் வாசிக்கும் வழக்கமுடையவன் நான்.

இந்த வார ராணி[28.07.2019]யில் இடம்பெற்றுள்ள தங்களின் பதில்களில் கீழ்க்காணும் ஒன்று என் மனதை உறுத்துவதாக அமைந்துள்ளது. 

கடவுள் சிலையைக் ‘கல்’ என்று தயங்காமல் சொல்பவர்களில் நானும் ஒருவன். ஆனால், நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் ரூபாய் நோட்டை வெறும் காகிதம் என்று நான் சொல்வதில்லை. காரணம்.....

‘ரூபாய் நோட்டு’ எனப்படும் இந்தக் காகிதம் சமுதாயத்தில் பெரிதும் மதிக்கப்படுகிற ஒன்று. இதைப் பகிர்வதன் மூலம், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலைமதிப்பிற்கேற்ப எந்தவொரு பொருளையும் நம்மால் பெற்றுக்கொள்ள முடியும்; விரும்பிய இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள இயலும். இவ்வகையில், இன்னும் பல பயன்களை இந்தக் காகிதத்தின் மூலம் நம்மால் பெற்றிட இயலும். எனவே, இதனை வெறும் காகிதம் என்று அலட்சியப்படுத்தாமல் ‘ரூபாய் நோட்டு’ என்று போற்றுகிறோம்.

நீங்கள் இந்தக் காகிதத்தையும் கடவுள் சிலையையும் ஒப்பிட்டிருக்கிறீர்கள். இந்த ஒப்பீட்டின் மூலம், ரூபாய் நோட்டை வெறும் காகிதம் என்று சொல்ல மறுப்பவர்கள் கடவுள் சிலைகளைக் கடவுளாக ஏற்காமல் ‘கல்’ என்று சொல்வது ஏன் என்று கேள்வி எழுப்பி, அவ்வாறு சொல்வது முட்டாள்தனம் என்கிறீர்கள்.

கொஞ்சமே கொஞ்சம் சிந்தித்திருந்தால் இவ்வாறான ஓர் ஒப்பீட்டை முன்வைத்திருக்க மாட்டீர்கள்.

ரூபாய் நோட்டு என்னும் காகிதத்தைப் பகிர்வதன் மூலம் நாம் விரும்பியதைப் பெற்றிட இயலுகிறது. அது போல.....

கல்லால் ஆன ஒரு சிலையைப்[என்னைப் பொருத்தவரை அது 100% ஒரு கல்தான்] பகிர்வதன் மூலம் நாம் விரும்புவதை பெற்றிட இயலாது என்பதைத் தாங்கள் சிந்தித்து உணர்ந்திருந்தால் மேற்கண்ட பதிலைத் தந்திருக்க மாட்டீர்கள் என்பது என் கருத்து.

இக்கருத்துரையைத் தங்களால் மறுக்க இயலுமா ராஜேஷ்குமார்?!
--------------------------------------------------------------------------------------------------------------------------

திங்கள், 29 ஜூலை, 2019

சிந்தனைக்கு எல்லை உண்டா?!

#விஞ்ஞானி ஐன்ஸ்டைன் காகிதத்தில் கணக்குப் போட்டுத்தான் ஒப்புமைத் தத்துவத்தைக் கண்டறிந்தார். அவர் சொல்லியுள்ள ஒரு கருத்துரை நம் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. அது.....‘ஒரு குறிப்பிட்ட எல்லை வரைதான் நான் சிந்தித்தேன். அதற்குப் பிறகு என் மனம் திடீரென்று எங்கோ தாவிச் சென்று இந்தத் தத்துவத்தைக் கண்டறிந்தது#
மனம் க்கான பட முடிவு
‘மனோசக்தியின் அற்புத ஆற்றல்’[ராஜி புத்தக நிலையம், நாகப்பட்டினம்; முதல் பதிப்பு: 2015] என்னும் தம் நூலில் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார் பி.சி.கணேசன் என்னும் எழுத்தாளர். ஐன்ஸ்டைனின் கூற்றுக்கான ஆதாரம் எதையும் நூலாசிரியர் காட்டினார் அல்லர்.

ஒரு குறிப்பிட்ட எல்லைவரைதான் விஞ்ஞானி சிந்தித்தார் என்கிறார் பி.சி.கணேசன். அதென்ன குறிப்பிட்ட எல்லை? சிந்திப்பதற்கு எல்லையோ வரம்போ உண்டா? இல்லையே. அப்புறம் எப்படி ஒரு எல்லைவரைதான் சிந்தித்ததாகச் சொன்னார்?

‘மனம் தாவிச் சென்றது’ என்பதும் விவாதத்திற்குரியது.

நம்மை முற்றிலுமாய் இயக்குவதும் சிந்திக்க வைப்பதும் மூளைதான். மனம் என்று ஒன்று இருப்பதே இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அது தாவிச் செல்வது எப்படி?

ஆக, ஐன்ஸ்டீனின் கூற்றுக்குப் போதிய விளக்கம் தராததோடு உரிய ஆதாரங்களையும் இணைக்காதது பெரும் தவறு ஆகும்.

“நான் விண்வெளியிலிருந்து எண்ணங்களைப் பெறுவதுண்டு” என்று விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் சொன்னதாகவும் இதே நூலில் குறிப்பிட்டிருக்கிறார் கட்டுரை ஆசிரியர். இதற்கும் ஆதாரம் ஏதும் தரப்படவில்லை. விண்வெளியிலிருந்து பெறுவது குறித்த விளக்கமும் இல்லை.

எதையாவது எழுதிப் பிரபலம் ஆகவேண்டும் என்று நினைக்கிற நம் எழுத்தாளர்களில் பெரும்பாலோருக்கு, விவாதத்திற்குரிய கருத்துகளை முன்வைக்கும்போது அவற்றிற்கான சான்றுகளையும் தருதல் வேண்டும் என்னும் பொறுப்புணர்ச்சி கொஞ்சமும் இல்லை என்பது வருந்துதற்குரியது.
=================================================================================


ஞாயிறு, 28 ஜூலை, 2019

“தமிழைப் புறக்கணிக்க இந்தியாவால் முடியாது. இந்தியாவைப் புறக்கணிக்கத் தமிழால் முடியும்; தமிழரால் முடியும்”

மிழ்நாட்டில் தமிழ்நாட்டுப் பள்ளிகளுக்காக, தமிழர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஆங்கிலப் பாடநூலில்(பிளஸ்-2) தமிழின் தொன்மையை மறைத்தும் குறைத்தும் எழுதப்பட்டுள்ளது. வட மொழியின் தோற்றம் கி.மு.2000 என்றும் தமிழின் தொன்மை கி.மு. 300 தான் என்றும் பொய்யிலும் பொய்யாக ஒரு புலனாய்வு செய்யப்பட்டுள்ளதைக் கவிஞர் மு.மேத்தா மிகவும் வன்மையாகக் கண்டித்துள்ளார். 
#மாணவர்களுக்கான கல்வியில் கலப்படக்காரர்கள் மறைந்து கிடப்பதையும் ஆதிக்கம் செலுத்துவதையும்  நாம் அனுமதிக்க முடியாது.

மறைந்து கிடப்பதை, மறைக்கப்பட்டதை அறிந்து கொள்வதும், அறிவித்துக்கொள்வதும் தான் அறிவு. அறிவை வளர்க்கும் கல்விக்கூடங்களிலேயே மெய்யைப் புதைத்து, பொய்யை விதைத்துத் தங்கள் குலதர்மக்கொடியேற்றப் பார்க்கும் கொடியவர்களை மட்டுமல்ல அவர்கள் கூடாரங்களைக் கொளுத்தி முடிக்கும் வரை எங்கள் குரலும் ஓயாது; கூட்டமும் கலையாது.

தமிழர்கள் உறுமி எழ வேண்டிய நேரம் இது. வடமொழிக்கு வால் பிடித்துத் தங்கள் வக்கிரக் கொள்கைக்கு ஆள் பிடிக்கும் கூட்டத்தின் வாயாடித்தனத்தை இன்னும்  அணுவளவு நேரம் கூட நாம் அனுமதிக்க முடியாது.

பாடப்புத்தகத்தின் பகுதிகளை மாற்றினால் மட்டும் போதாது. இதற்குக் காரணமானவர்களையும், கண்டுபிடித்துத் தமிழில்... இன்னும் தமிழ்நாட்டில் இருந்தும் மாற்றவேண்டும். இல்லையென்றால் முன்னர் நடந்தது போல் மற்றும் ஒரு மொழிப்போரை இந்தியா சந்திக்க வேண்டியது இருக்கும்.


ஒன்றாக இருக்கும் உள்ளங்களை மட்டும் அல்ல; தேசத்தையும் உடைத்துவிடல் ஆகாது. கல்விக் களத்தில்தான் பலவிதமான கொடூரங்கள் நடந்து வருகின்றன. தேர்வுக்கு மேலும் தேர்வு. தேர்வின் மேலும் தேர்வு என்று நீட் கொள்கையின் நீசர்கள் தமிழகத்தை நாசப்படுத்தி வருவதை எரிமலையாய்க் குமுறிக்கொண்டிருக்கும் தமிழ் இதயங்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றன என்று எச்சரிக்கிறேன்.

ஆங்கிலத்துக்கும், வடமொழிக்கும் இடமுண்டு. தமிழுக்கு இடம் இல்லை. என்று அஞ்சல் தேர்வில் அஞ்சாமல் செயல்படுத்தி இருக்க கூடியவர்களைக் காலம் ஒரு காலத்திலும் மன்னிக்காது. தமிழைப் புறக்கணிக்க இந்தியாவால் முடியாது. இந்தியாவைப் புறக்கணிக்கத் தமிழால் முடியும்; தமிழரால் முடியும்.

‘இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்’ என்று தமிழைத் தலையில் தூக்கிக்கொண்டு கூத்தாடியவன் பாரதி. அதைக் காலில் போட்டு மிதிக்க வேண்டும் என்று கயவர்கள் நினைத்தால் அவர்கள் கருகிப் போகக் கூடும் என்பதை மனம் உருகிச் சொல்லிக் கொள்கிறேன்.

குறைந்தபட்சம் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாது இந்தியாவின் அதி மேதாவிகள் இறங்கி வர வேண்டும். இல்லையென்றால் அவர்களின் உயரங்கள் நொறுக்கப்படும்.

உலகம் அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடும். மீண்டும் ஒரு மொழிப்போர் தமிழ்நாட்டில் இருந்து புறப்படுமேயானால்....

இது ஒரு பிரிவினைவாதியின் பிதற்றல் அல்ல; ஒன்று பட்டு வாழ வேண்டும் என்று உண்மையாக நினைக்கிற ஒரு கவிஞனின் உரத்த குரல்.

கவிஞர் மு.மேத்தா#
====================================================================================
நன்றி: தினத்தந்தி[28.07.2019] நாளிதழ்

சனி, 27 ஜூலை, 2019

பட்டும் திருந்தாத கர்னாடக முதலமைச்சர்!!!

கர்னாடக முதலமைச்சராக இருந்த குமாரசாமி பதவி இழந்த நிலையில், ப.ஜ.க. பிரமுகரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா நேற்று[26.07.2019] நான்காவது முறையாக அந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

பதவி ஏற்ற அவர், ‘B.S.Yeddiyurappaa' என்னும் தன் பெயரை 12 ஆண்டுகளுக்குப் பிறகு, 'B.S.Yediyurappa' என்று மாற்றியுள்ளார்[’தமிழ் இந்து 27.07.2019].
நியூமராலஜி க்கான பட முடிவு
#நியூமராலஜியில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள இவர் கடந்த 2007இல் முதல்வராகப் பொறுப்பேற்றபோது நியூமராலஜியின்படி தன் பெயரை ஆங்கிலத்தில் ‘B.S.Yeddiyuurapaa' என்று மாற்றிக்கொண்டார். ஆனால், 07 நாட்களில் பதவியை இழந்தார். அதன் பிறகு 02 முறை முதல்வரானபோதும் அவரால் பதவிக்காலம் முடியும்வரை நீடிக்க முடியவில்லை. எனவே, 4ஆம் முறையாக முதல்வராகப் பதவியேற்ற அவர் தன் பெயரை ஆங்கிலத்தில் 'B.S.Yediyurappa' என்று மாற்றியுள்ளார்# என்பதாகக் குறிப்பிட்டுள்ளது இந்த நாளிதழ்.

சைகைகள் மூலமாகவும் ஒலிக்குறிப்புகள் வாயிலாகவும் ஓரளவுக்கு எண்ணங்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டிருந்த ஆதி மனிதர்கள், சிந்திக்கும் அறிவு வாய்க்கப்பெற்ற பின்னர், தாங்கள் வெளியேற்றும் நீண்ட ஒலிகளைக் காலப்போக்கில், சிறு சிறு கூறுகளாக்கி ஒலி எழுத்துகளாக வடிவமைத்தார்கள். ஒலிகளுக்கான பொருள்களையும் நிர்ணயித்து, எண்ணங்களைப் பகிர்வதற்குப் பயன்படுத்தினார்கள். காலப்போக்கில் ஒலிவடிவங்களுக்கு வரிவடிவமும் தரப்பட்டன.

ஆக, மொழி என்பது மனிதர்களுக்கான முழுக்க முழுக்க ஒரு கருவி மட்டுமே. மற்றபடி, எழுத்துகளை மாற்றியோ, கூட்டிக் குறைத்தோ பயன்படுத்துவதால் வாழ்க்கையில் எந்தவொரு அதிசயமும் நிகழாது.

நிகழ்த்தலாம் என்று சொன்ன ஏமாற்றுப் பேர்வழிகளால் கண்டுபிடிக்கப்பட்டதே நியூமராலஜி.

இந்தப் பித்தலாட்டத்திற்கு ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பிற மொழிகளில் தகுதியற்றவையா?

ஆன்மிகம் மட்டுமல்லாமல் ஜோதிடம், ராசிக்கல், நியூமராலஜி, வாஸ்து போன்றவற்றின் மீது அதீத நம்பிக்கை கொண்டவராம் எடியூரப்பா.

இத்தனை மூடநம்பிக்கைகளின் உறைவிடமாக உள்ள இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதால் கர்னாடக மக்களுக்குப் பெரிதாக நன்மை ஏதும் விளைந்துவிடப் போவதில்லை.

இனியேனும், இவர் மேற்குறித்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட முயலுதல் வேண்டும்.

செய்வாரா? கிஞ்சித்தேனும் முயற்சி செய்வாரா?!
=================================================================================

வெள்ளி, 26 ஜூலை, 2019

நாமக்கல்லில், ‘நடந்த’ கோலத்தில் அத்தி வரதப்பர்!!!

கீழ்வருவது இன்றைய தினமலர் நாளிதழ்ச் செய்தி. இன்றைய காலைக்கதிர் நாளிதழும் இதே செய்தியை வெளியிட்டுப் புளகாங்கிதம் அடைந்திருக்கிறது.

நேற்று முன்தினம் வரை, சயன கோலத்தில் இருந்த அத்தி வரதரை நேற்று முதல் நின்ற கோலத்தில் எழுந்தருளச்செய்தனர்[தூக்கி நிறுத்தலையாம்] அர்ச்சகர்கள். அடுத்த மாதம், 17 வரை, இக்கோலத்தில் காட்சியளிப்பார் வரதர். ஆக., 6ல், மகா சுதர்சன யாகம், 16 மாலை, 'கஜேந்திர மோட்ச' உற்சவம் நடக்கவுள்ளது[தினமலர் 26.07.2019]

[ஆக, காஞ்சிபுரத்து அத்தி வரதப்பரை முந்திக்கொண்டுவிட்டார் சேலத்து அத்தியார். காஞ்சிபுரத்தார்  ஆகஸ்டு முதல் தேதியில்தான் எழுந்தருள இருக்கிறாராம்].

ஒரு விசேடச் செய்தி நாமக்கல்லிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பரவிக்கிடக்கிறது. அது.....

சேலத்தில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிற அத்தி வரதப்பர், அடுத்த மாதம் 18ஆம் தேதி நாமக்கல் வந்து சேர்ந்து ‘நடந்த’ கோலத்தில் தன் பக்தர்களுக்குக் காட்சி தந்து அவர்களைப் பரவசத்தில் ஆழ்த்தப்போகிறாராம். இந்தத் தகவல், இங்குள்ள பிரபலமான கோயில் ஒன்றின் பிரதான அர்ச்சகருக்கு வரதப்பரால் அசரீரியாகச் சொல்லப்பட்டதாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
அத்தி வரதர் வரலாறு க்கான பட முடிவு
சிலையைப் படுக்க வைத்து, சயன கோலத்தில் அத்தி வரதப்பர் அருள்பாலிக்கிறார் என்று சொல்வதையும், தூக்கி நிறுத்தப்பட்ட சிலைக்குள்ளிருந்து அவர் அருள் புரிகிறார் என்பதையும் நம்புகிற எங்கள் ஊர் மக்கள், அர்ச்சகர்களின் உதவியில்லாமல் தாமே எழுந்து நடந்து, ‘நடந்த கோலத்தில் தங்களுக்கு அவர் காட்சி தரவேண்டும் என்று வரதப்பரை வேண்டினார்கள். அவர்களின் கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டுவிட்டதாகத் தெரிகிறது.

ஆம், எதிர்வரும் ஆகஸ்டு 18ஆம் நாளில் ‘நடந்த’ கோலத்தில் காட்சிதர இருக்கிறார் அத்தி வரதப்பர்!. 

பக்தகோடிகளே, எக்காலத்திலும் எவ்விடத்திலும் வாய்க்காத அரும்பெரும் பேறு இது. வாய்ப்பைத் தவறவிடாதீர்கள். நாமக்கல் வந்து, அத்தி வரதரைத் தரிசனம் செய்து, சொர்க்கத்தில் உங்களுக்கென்று ஓரிடத்தை ‘ரிசர்வ்’ செய்துவிடுங்கள்!

நன்றி.
=================================================================================

வியாழன், 25 ஜூலை, 2019

கேள்விகள் இங்கே. விடைகள் எங்கே?..... எப்போது?!

இந்தப்பதிவு, 18.06.2012இல் எழுதப்பட்டது. 2015இல் மறுபதிவு செய்யப்பட்டது. இன்னொரு தடவை மட்டுமல்ல, இனி எப்போதும்...கி.பி.18.06.20000000000000000000000000000000000000000000000000000000000000000019லும்கூட [மறு...மறு...மறு...பிறவியில்!] வாசிக்கலாம். அப்போதும் இது உங்களைச் சிந்திக்கத் தூண்டும்! ஹி...ஹி...ஹி!

 ‘கடவுள் உண்டா இல்லையா?’

மிகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடை பெறும் இவ்விவாதத்தில், ‘அனுமானம்’ என்னும் ‘உத்தி’ யைத் துணைக் கொண்டு, வெகு எளிதாகக் கடவுளின் ‘இருப்பை’ நிலை நாட்ட முயன்று வருகிறார்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள்.

ஒரு மண்பாண்டத்தைப் பார்க்கிறோம். அதை வனைந்தவர், அதாவது, படைத்தவர் ஒரு குயவர் என்பதை அறிகிறோம்.

நார்களாலும் களிமண் போன்ற பிற உபகரணங்களாலும் உருவாக்கப்பட்ட , ஒரு கூட்டைக் காணுகிற போது, அதை உருவாக்கியது ஒரு பறவை என்பதை அறிய முடிகிறது.

இவையெல்லாம் அரதப் பழசான எடுத்துக் காட்டுகள்.

இன்று புதிய புதிய உதாரணங்கள் தரப்படுகின்றன.

ஓர் ஓவியத்தைக் கண்ணுறும் போது. அது தானாக உருவாகவில்லை; அதை வரைந்தவன், அதாவது படைத்தவன் ஓர் ஓவியன் என்பதையும், ஒரு கணினி தானாகத் தோன்றிவிடாது; அதைத் தோற்றுவிக்க ஒரு தொழில் நுட்ப அறிஞன் தேவை என்பதையும் மிக எளிதாக நம்மால் உணர முடிகிறது. [இப்படிப் பல எ-டுக்கள் தருகிறார்கள்]

இம்மாதிரி அனுபவங்களை விவரித்து, ஒரு பொருள் தானாக உருவாவதில்லை; அதை உருவாக்க, அதாவது, படைக்க ஒருவர் தேவை என்று பிறரை நம்ப வைக்க முயலுகிறார்கள்.

‘மண்பாண்டம், கணினி போன்றவற்றைப் போல, நாம் பார்க்கிற இந்தப் பிரபஞ்சப் பரப்பிலுள்ள ஒவ்வொரு பொருளையும், உயிரையும் பிறவற்றையும் தோற்றுவிக்க, அதாவது, படைக்க ஒருவர் தேவை’ என்ற முடிவுக்குப் பிறரை இட்டுச் செல்கிறார்கள்.

இவ்வாறு முடிவெடுப்பதைத்தான் ‘அனுமானம்’ என்பார்கள்.

‘இது இப்படி நிகழ்ந்தது. எனவே, அதுவும் இப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும்’ என வாதிப்பது இதன் அடிப்படை அம்சம்.

ஒன்றை இங்கு மிக ஆழமாக மனதில் பதித்தல் அவசியம்.

அனுமானம் என்பதும் ஒருவகை நம்பிக்கைதான். எல்லா அனுமானங்களும் ‘உண்மை’ ஆகிவிடா. காரணங்கள் பல உள்ளன.

அவற்றில் ஒன்று............

ஓவியத்தைப் பார்த்ததும், அதை வரைந்தவர் ஓர் ஓவியர் என்று முடிவெடுப்பதிலேயே தவறு நிகழ்கிறது.

ஓர் ஓவியர், ‘தானே தனியராய்’ வெறுங்கைகளுடன் அதைப் படைத்தாரா?

அதை உருவாக்க, வண்ணம், தூரிகை, தாள் போன்ற மூலப் பொருள்கள் தேவையாயிற்றே. [செய்பவன்,கருவி,காரியம் என்றெல்லாம் நம் முன்னோர்கள் இது பற்றி ஆய்வு நிகழ்த்தியிருக்கிறார்கள்]. இங்கே, படைப்புக்கு அடிப்படைத் தேவையாக இருக்கும் பொருள்கள் மற்றும் சாதனங்களை ‘மூலப் பொருட்கள்’ எனக் கொள்வோம்.

மூலப் பொருள்களை வழங்கியவர்களும் படைப்புக்குத் துணைக் காரணமாக இருக்கையில், ஓவியத்தை ஓவியன் மட்டுமே ‘படைத்தான்’ என்று முடிவெடுப்பது தவறல்லவா?

ஒரு பொருளின் தோற்றம் பற்றிச் சிந்திக்கும் போது, அதை ‘ஒருவர் படைத்தார்’ என்று முடிவெடுப்பதில் நம்மவர்களுக்கு ஏன் இத்தனை ஆர்வம் என்பது புரியாத புதிராக இருக்கிறது!

அவ்வாறு முடிவெடுப்பதால் விளையும் பயன் என்ன என்பதும் விளங்கவில்லை.

‘வெளி’யிலுள்ள அத்தனை பொருள்களையும் உயிர்களையும் பிறவற்றையும் கடவுள் என்றுஒருவர் படைத்தார் என்று அனுமானிக்கும் போதும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இதே தவற்றைத்தான் செய்கிறார்கள்.

அனைத்தையும் உருவாக்குவதற்கான ‘மூலப் பொருள்களை அவருக்குப் பிறர் வழங்கினார்கள்; அல்லது, அவை கடவுளைப் போலவே ‘என்றும் இருப்பவை’ எனக் கொண்டால்....................

‘முழு முதலானவர்’, ‘எல்லாம் வல்லவர்’ எனப்படும் அவரது தகுதிகளுக்குப் பங்கம் நேர்ந்துவிடும் என்பதால்..........

மூலப் பொருள்கள் அனைத்தையும் அவரே படைத்துக்கொண்டார் சொல்லியிருக்கலாம். அது ஏற்புடையதுதானா?  “அல்ல” என்பதே நம் பதில்.

தானே தனக்குள் இருந்து அவற்றைப் பிரித்து எடுத்துக் கொண்டார் என்று சொல்லிச் சமாளிக்கலாம்.

இது சாத்தியம் எனின்.....இதுவே உண்மை எனின், அனைத்துப் பொருள்களும், உயிர்களும் பிறவும் முழுக்க முழுக்கக் கடவுளின் பிரதிகள் அல்லது கூறுகள் என்றாகிறது.

நீங்களும் நானும் கடவுளின் பிரதிகள்!

நாம் சிரித்தால் அவரும் சிரிப்பார். நாம் அழுதால் அவரும் அழுவார். நாம் அழுதுகொண்டே சிரித்தால் அவரும் அவ்வாறே செய்வார்.

நினைக்கும் போது மனம் பேரானந்தத்தில் மூழ்கித் தவிக்கிறது.

ஆனாலும் ஒரு சந்தேகம்.....................................

அடுக்கடுக்கான துன்பங்கள் அலை அலையாய் வந்து நம்மைத் தாக்கிச் சிதைக்கிற போது, கடவுளின் மறு பிரதியான நாம் வேதனையில் கிடந்து துடிக்கிறோமே, அது ஏன்???

ஏன்? ஏன்? ஏன்?

எல்லாம் அவரின் ‘திருவிளையாடல்’ என்கிறார்கள்.

இந்தத் திருவிளையாடல் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தொடரும்?

விடை தெரிந்தவர் யார்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


புதன், 24 ஜூலை, 2019

மஹா பெரிய கடவுளும் அவரின் வாரிசுகளும்!!!

ஒரு பத்திரிகை ஆசிரியர், புகைப்படக்காரர்களுடன் ‘மஹாஆஆஆ... பெரியவாவைத் தரிசிக்கப் போனாராம். கடவுளின் அவதாரமான அந்த மகானும் தரிசனம் தந்தாராம்.

அதுசமயம், புகைப்படக்காரர்கள் மஹா பெரியவாவிடம் அனுமதி பெறாமலே அவரைப் படம் எடுக்க ஆரம்பித்தார்களாம்.

மகானின் அனுக்கிரஹம்[அனுமதி] இல்லாமல் படம் எடுக்கக் கூடாது என்று பத்திரிகை ஆசிரியர் நினைத்தாரே தவிர அதைச் சொல்ல அவகாசம் இல்லாமல் போனதாம். மகா பெரியவாவும் மௌனம் சாதித்தாரே தவிர வாய் திறந்து ஏதும் சொல்லவில்லையாம்.

தவறு நடந்துவிட்டதே என்று வருந்தியவாறு ஆசிரியர் தன் ஆட்களுடன் அலுவலகம் திரும்பினாராம். அப்புறம் என்ன நடந்தது? கீழே உள்ள நகல் படிவத்தை வாசியுங்கள்.
இப்படியும் ஓர் அதிசய நிகழ்வா? நீங்கள் நம்புகிறீர்களா?

நான் நம்பலீங்க. ஆனாலும், ஒரு சோதனையை நிகழ்த்திப் பார்க்கணும்னு முடிவு செய்தேன். முடிவுக்கிணங்க.....

நிலவுலகில், ஒரு கடவுளாக நடமாடிக்கொண்டிருந்த மகா பெரியவா சிவலோக பதவி பெற்றுவிட்டதால், அவருடைய திருவுருவத்தை[புகைப்படம்] என் பேசி மூலம் படம் எடுத்தேன்.
[நன்றி: தினமலர்]

படம் பதிவாகவே இல்லைங்க! படம் இருக்கவேண்டிய இடத்தில் கரும்புகை சூழ்ந்திருந்ததைக் கண்டு பெருவியப்பில் மூழ்கிப்போனேங்க.

நம்புங்க. நம்பலேன்னா நீங்களும் மகா பெரியவாவின் படத்தை உங்களின் புகைப்படக் கருவியில் ஒரு தடவை ‘கிளிக்’ செய்து பாருங்களேன்! 
=======================================================================

செவ்வாய், 23 ஜூலை, 2019

கடவுள் இல்லை என்றால்.....!!!

"கடவுள் இல்லை” -அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் அறிவிப்பு!!!

ஊடகங்களில் இப்படியொரு செய்தி வெளியானால், இம்மண்ணுலகில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

னக்கு நானே எழுப்பிக் கொண்ட கேள்வி இது.

பதிலும் என்னுடையதே.

இந்தக் கேள்வி-பதிலின் நோக்கம் அனைவரையும் சிந்திக்கத் தூண்டுவது மட்டுமே; எவரொருவர் மனதையும் புண்படுத்துவது அல்ல.

டவுள் என்று ஒருவர் இல்லையென்பது உறுதி செய்யப்பட்டால், இப்போதைய நம் வாழ்க்கை முறையில் பெருத்த மாற்றங்கள் நிகழுமா?

’நிகழும்’ என்று நம்புவோர் மிகப் பலர்?

தர்ம சிந்தனை புதை குழிக்குப் போக, அதர்மம் தலைவிரித்தாடும்.

திருட்டு, கொள்ளை, கொலைச் சம்பவங்கள் பெருகும். [இப்போது என்ன வாழுகிறது என்று யாரும் கேள்வி எழுப்ப வேண்டாம்].

இளம் பெண்களைக் கடத்துவதும் கற்பழிப்பதும் அதிகரிக்கும்.

நல்லவர்களும் கெட்டவர்களாக மாற, சுய நலம் மேலோங்க, இந்த உலகமே கலவர பூமியாக மாறி, மனித இனம் போரிட்டு அழிந்து போகும்.

மிகப் பலரின் இந்த நம்பிக்கை பலிக்குமா?

நிச்சயமாக இல்லை.

கடவுளுக்குப் பயந்துகொண்டு மனிதன் குற்றம் புரியாமல் இருந்ததில்லை. [கடவுள் நம்பிக்கையாளர்கள் உணர்ச்சி வசப்பட வேண்டாம்; மேலே படியுங்கள்.]

ஒருவனுக்கு உரியதைப் பறிக்க, அல்லது திருட இன்னொருவன் அஞ்சுவதற்குக் காரணம், கடவுள் பயமல்ல; பொருளுக்கு உரியவனால் அல்லது அவனைச் சார்ந்தவர்களால் தாக்கப்படுவோம் என்ற முன்னெச்சரிக்கையே காரணம். காவலரிடம் பிடிபடுவோம்; நீதிமன்றம் தண்டிக்கும் என்று நம்புவதும் தலையாய காரணம் ஆகும்.

அகப்பட்டுக் கொள்வதற்கான சூழ்நிலை இல்லாதிருந்தும், ஒருவன் குற்றம் புரியாமல் இருப்பானாயின், அதற்கு, ‘பட்டினி கிடந்து மாய்ந்தாலும் இன்னொருவன் உழைப்பில் வந்தது நமக்கு வேண்டாம்’ என்று நினைக்கும் அவனின் மனப் பக்குவமே காரணம்.

இத்தகைய மன உறுதி ஒருவனுக்கு வாய்ப்பது, அவனுடைய சுய சிந்தனையால்; அவனைச் சார்ந்தவர்களின், சான்றோர்களின், அறிஞர்களின் வழிப்படுத்தலால்தான்.
எல்லாம் கடவுளால் என்று சொல்வதும் வலியுறுத்துவதும் மனித இனத்துக்குச் செய்யும் துரோகம் ஆகும்; மனிதனின் சுய சிந்தனையை மழுங்கடிக்கும் முயற்சி ஆகும்.
சிந்திப்பதும் செயல்படுவதும் மனித முயற்சியாலேயே சாத்தியப்படும் போது, கடவுளைத் துணைக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை; இல்லவே இல்லை.
’பிறப்பு ஏன்? இறப்பு ஏன்? துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கை ஏன்?’ என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது இயலாது என்பதை உணரும்போது, கடவுளைச் சரணாகதி அடைகிறான் மனிதன். அவ்வாறு சரணாகதி அடைந்தாலும், மேற்குறிப்பிட்டது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைப்பதில்லை என்பதை அவன் உணர மறுக்கிறான்.
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவனின் மூளையில் கடவுள் நம்பிக்கை திணிக்கப்படுகிறது.

ஒரு குழந்தையின் தாத்தா செத்துப் போக.....

‘செத்துப் போறதுன்னா என்ன/” என்று கேட்கும் குழந்தையிடம், “செத்துப் போறதுன்னா, தாத்தா சாமிகிட்ட போய்ட்டார்” என்று காலங்காலமாக நம்மவர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஐயமற அறியப்படாத, அல்லது, உணரப்படாத கடவுளைக் குழந்தையின் மனதில் திணித்து, வளரும் அதன் அறிவை ஏன் முடமாக்க வேண்டும்/

‘நம்மோட இந்த உடம்பு செயல்பட முடியாம அழியறதுதான் சாவு” என்று எதார்த்தமாகச் சொல்லலாம்.

“அழுகிப் போனா நாறும். புதைக்கிறோம், இல்லேன்னா எரிச்சிடுறோம்”என்றும் சொல்லலாம்.

இம்மாதிரி எதார்த்தமான பதில்கள் குழந்தைகளை அச்சுறுத்தும்; வாழ்வின் மீதான பற்றுதலைக் குறைக்கும் என்பதால்.....

குழந்தைகள் கேட்கும் சில கேள்விகளுக்கு, “இதைப் பத்தியெல்லாம் பெரியவங்க சொல்லியிருக்காங்க. நீ பெரியவன் ஆகும் போது எல்லாம் புரிஞ்சிக்கலாம்; நீயே கண்டுபிடிச்சிச் சொல்லலாம்” என்றிப்படிச் சமாளிப்பதே புத்திசாலித்தனம் ஆகும்.

தன் குழந்தை இன்னொரு குழந்தையை அடித்தால்.....

“அடிக்கிறது தப்பு. அது பாவம். சாமி தண்டிக்கும்” என்று பயமுறுத்துவதைத் தவிர்த்து, “நீ அடிச்சா அவன் திருப்பி அடிப்பான். அவனால முடியலேன்னா, உன்னைவிடப் பலசாலியைக் கூட்டி வந்து அடிப்பான். நீயும் துணைக்கு ஆள் தேட வேண்டி வரும். இரு தரப்பாரும் மாறி மாறி அடிச்சிக்க ஆரம்பிச்சா, யாருமே சந்தோசமா வாழ முடியாது” என்று சொல்லித் திருத்துவதே அறிவுடைமை ஆகும்.

இவ்வாறெல்லாம், எதார்த்த நிலையைப் புரிய வைத்து வளர்க்கப்படும் பிள்ளைகள், கடவுளை நம்பி, மேலும் பல மூட நம்பிக்கைகளுக்கு உள்ளாகி, மனச் சிதைவுக்கு ஆளாகாமல், சிறந்த சிந்தனையாளர்களாக உருவெடுப்பார்கள்; நல்லவர்களாக வாழ முயல்வார்கள்.

ஆக, மனிதர்கள் நல்லவர்களாக வாழ்வது மனிதர்களால்தான்; கடவுளால் அல்ல.

எனவே, ’கடவுள் என்று ஒருவர் இல்லை’ என்று அறிவிக்கப்பட்டாலும் இப்போதைய இயல்பு வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை.
==============================================================================
‘கடவுளின் கடவுள்’ என்னும் தளத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது இப்பதிவு.

திங்கள், 22 ஜூலை, 2019

அத்தி வரதரும் பக்தர்களின் மரணங்களும்!!

காஞ்சிபுரம் பெருமாள் கோயில் குளத்து நீரில் 14 ஆண்டுகள் உறைந்து கிடந்த[இதற்கென்று சுவரசியமான கதையுண்டு. ஊடகங்கள் விரிவாகப் பதிவு செய்து தம் விற்பனையைப் பெருக்கிக்கொண்டுள்ளன] அத்தி வரதப்பர் மேலே கொண்டுவரப்பட்டு, பல்லாயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டாடை கட்டி, தங்க வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு[!!!] பக்தகோடிகளின் தரிசனத்துக்குக் காட்சிப்பொருளாக்கப்பட்டார்.

அத்தி வரதரைத் தரிசித்தால் செத்தபிறகு சொர்க்கம் சேரலாம்; மறுபிறப்பைத் தவிர்க்கலாம் என்று ஊடகங்கள் செய்த பரப்புரையை நம்பித் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரதரைத் தரிசிக்கத் திரண்டார்கள். முட்டி மோதிக்கொண்டதில் இன்றளவும் 07 பேர் வரதராசரைத் தரிசிக்காமலே சொர்க்கம் சேர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில்.....

ஆன்மிகவாதிகளும் பக்தி நெறி வளர்க்கும் ஊடகவாதிகளும். ‘போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை’ என்று தமிழக அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்கள்.

இது முறையல்ல. உண்மையில் இந்தக் குற்றத்தைச் சுமக்க வேண்டியவர்கள், கீழ்க்காணும் வகையிலான கதைகளைக் கற்பித்துப் பரப்புரைகளின் மூலம் மக்களின் மனங்களில் அவற்றை ஆழமாகப் பதிப்பித்தவர்களே.

#ஆதியில் ஸ்ருஷ்டியை மேற்கொண்ட பிரம்ம தேவன் தனது காரியங்கள் செவ்வனே நடைபெற ஒரு யாகம் மேற்கொண்டார். யாகத்திற்குச் சரஸ்வதி தேவியை அழைக்காததால், துணைவி இல்லாமல் யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதால் காயத்திரி, சாவித்திரியை வைத்து யாகத்தை முடிக்க எண்ணினார். தன்னை அழைக்காமல் யாகம் செய்த பிரம்மர் தேவர் மீது கோபம் கொண்ட சரஸ்வதி தேவி, பிரம்மனின் யாகத்தை அழிக்க வேகவதி ஆறாக உருமாறி யாகத்தை நோக்கி வந்தாள்[இன்னும் எவ்வளவு காலத்துக்கு இம்மாதிரிக் கதைகளைக் கட்டிக்காத்துப் பிழைப்பு நடத்தப்போகிறார்கள்!?]. 

பிரம்ம தேவனின் யாகத்தைக் காப்பாற்றும் பொருட்டு பெருமாள், சயனம் கொண்டு நதியைத் தடுத்தார்.

யாகத்தைக் காப்பாற்றிய திருமாளிடம் தேவர்கள் உள்ளிட்டோர் வரங்கள் கேட்டனர். அவர்கள் கேட்ட வரங்களை எல்லாம் வாரி வழங்கியதால் இங்குள்ள பெருமாளுக்கு வரதர் என்று பெயர் வந்தது. 

மீண்டும் ஒரு யாகத்தை நடத்திய பிரம்ம தேவர், அத்திமரத்தால் ஆன வரத ராஜப் பெருமாளை முன்னிருத்தி யாகத்தை நடத்தினார். 


அப்போது யாகத்தின் நெருப்பு பெருமாள் சிலையைப் பாதித்தது[பாதிக்கப்படுவாரா பெருமாள் என்னும் கடவுள்?!]. இதனால் செய்வதறியாமல் தவித்த பிரம்ம தேவன் பெருமாளை வேண்டினார். 

பெருமாளின் யோசனையின் படி, தன்னைக் குளிர்விக்கக் கோயிலின் சரஸ் குளத்திற்கு நடுவில் உள்ள மண்டபத்தின் அடியில் சயனத்தில் வைக்க கூறினார். 

பிரம்மனுக்குப் பெருமாள் இட்ட கட்டளையின் படி 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை குளத்து நீரை வெளியே இறைத்துவிட்டுப் பெருமாளை வெளியே எடுத்து 48 நாட்கள் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன#[நன்றி: tamil.samayam.com]
40 ஆண்டுகள் குளத்துக்குள் கிடத்தி வைக்காமல், ஆண்டு முழுதும் பக்தர்களின் தரிசனத்துக்காகக் கோயிலில் வைத்திருந்தால் உயிரிழத்தல் போன்ற அசம்பாவிதங்கள் நேர்ந்திரா.
================================================================================

ஞாயிறு, 21 ஜூலை, 2019

அளப்பரிய பொய்களின் புகலிடமா ஆன்மிகம்?

’மனோசக்தியின் அற்புத ஆற்றல்’[ராஜி புத்தக நிலையம், நாகப்பட்டினம்; முதல் பதிப்பு: 2015] என்னும் நூலை இன்று வாசிக்க நேர்ந்தது.

மூளை நம்மை இயக்குகிறது என்பது அறிவியலாளர் ஆராய்ந்து கண்டறிந்த உண்மை. ஆன்மா, உயிர், மனம் போன்ற ஏதோ ஒன்று உடம்புக்குள் ஊடுருவியிருந்து நம்மை இயக்குகிறது என்பது இன்றளவும் நிரூபிக்கப்படவில்லை.

மேற்கண்ட நூலில், மனதின் ‘இருப்பு’ உண்மையானது என்றும், மனோசக்தியைப் பயன்படுத்தி நம் முன்னோர்கள்[ரிஷிகள், முனிவர்கள்] உட்கார்ந்த நிலையில் உயர உயரப் பறத்தல், மண்ணுக்குள் புதைத்தால் பல நாட்கள் கழித்து உயிருடன் மீண்டு எழுதல், உணவின்றி உணர்ச்சியின்றிப் பல நாட்கள் வாழ்ந்து காட்டுதல் போன்ற சித்து வேலைகளைச் செய்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார் நூலின் ஆசிரியர் பி.சி.கணேசன்.

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்வையும் பதிவு செய்திருக்கிறார்.

#மேற்குறிப்பிடப்பட்டவை போன்ற அற்புதங்களை நிகழ்த்துகிற மகான்கள் இன்றும் இருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து அயல்நாடு சென்ற நம் சாது ஒருவர் அங்குள்ள மருத்துவ நிபுணர்களிடம் ஒரு சவால் விட்டார்.

சில நிமிடங்கள் இதயத் துடிப்பை என்னால் நிறுத்திக்காட்ட முடியும் என்றார் இவர். உங்கள் உயிர் போய்விடும் என்று எச்சரித்தார்கள் மருத்துவ நிபுணர்கள். அதை மறுத்த இவர் தன் இதயத் துடிப்பை நிறுத்தினார். இவர் உடம்பில் பொருத்தப்பட்ட கருவியும் அதை உறுதிப்படுத்தியது. சில நிமிடங்கள் கழித்து[எத்தனை நிமிடங்கள் என்று குறிப்பிடவில்லை], சாது தன் இதயத்தை மீண்டும் இயக்கிக் காட்டினார்#

இந்த நிகழ்வுக்கான ஆதாரம் ஏதும் இந்நூலில் இணைக்கப்படவில்லை என்பது அறியத்தக்கது. அத்துடன், இம்மாதிரியான சாதனையால் விளையும் நன்மை என்ன என்பது குறித்தான குறிப்பும் இடம்பெற்றிலது.

இம்மாதிரியான பொய்களைப் புனைந்து பொய்யான இனப்பெருமை பேசும் வழக்கம் நம்மவருக்குப் பழகிப்போன ஒன்று.

ஐம்புலன்களின் இயக்கத்தை  முற்றிலுமாய்க் கட்டுப்படுத்தினால் மனதை வசப்படுத்தலாம். மனம் நம் வசப்பட்டால் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம் என்கிறார் நூலாசிரியர். முன்னோர்கள் சாதித்தார்கள் என்கிறாரே தவிர, சாதித்தவர் யாரெல்லாம் என்பதற்கான பட்டியலோ, சாதனைகள் யாவை என்பன குறித்த குறிப்புகளோ தரப்பட்டவில்லை.

ஐம்புலன்களையும் முற்றிலுமாய்க் கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை. தேவையும் இல்லை. புலன்களை நன்னெறியில் செலுத்தப் பயில்வதே மகிழ்வான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்பதே நாம் நினைவில் கொள்ளத்தக்கதாகும்.

இயல்பான/எதார்த்தமான வாழ்வியல் நெறிகள் குறித்து ஆராயாமல், புகழ் பெறும் ஆசையில் நடைமுறை சாத்தியமற்ற கற்பனை நிகழ்வுகளைப் புனைந்து அவற்றை மக்களிடையே பரப்புரை செய்வது மனிதகுலத்துக்குப் பெரும் தீங்கு பயக்கும் செயலாகும்.
=================================================================================
சித்தர்கள் சித்து வேலை க்கான பட முடிவு
தன்னைக் கொண்டு ஆசிரமம் அமைக்கக் கடவுள் உத்தரவிட்டதாகக் கூறி, சித்து வேலைகள் செய்து குவைத் வாழ் தமிழரிடம் ரூ.4.66 கோடி மோசடி செய்த போலிச் சாமியாரைச் சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவுப் போலீசார் கைது செய்துள்ளனர்[பழைய செய்தி] -நக்கீரன் இதழ்.
=================================================================================

சனி, 20 ஜூலை, 2019

திருமணங்களும் திசைமாறும் பெண்களும்!!!

‘அமெரிக்கன் டைம் யூஸ் சர்வே’ என்னும் அமைப்பு, திருமணம் ஆன, ஆகாத, விவாக ரத்து ஆன, கணவனை இழந்த என்று பலதரப்பட்ட பெண்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை நிலை குறித்தான கருத்துகளைத் திரட்டியது. இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு ‘HAPPY EVER AFTER' என்னும் நூலை எழுதியிருக்கிறாராம் ‘டோலன்’ என்பவர்.

பெண்களில் மேற்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த பெண்கள் நாம் நினைப்பது போல சுகபோகமாக வாழ்பவர்கள் அல்ல; சோகம் சுமப்பவர்கள் என்கிறார் இந்த நூலாசிரியர்.

திருமணம் ஆன ஆண்களால் தாம் செய்யும் தொழிலில் அதிகம் கவனம் செலுத்த முடிகிறது. ஆனால், பெண்களின் நிலை அவ்வாறு அல்ல; “பெண்ணாகப் பிறந்தால் கல்யாணம் செய்துக்கணும், பிள்ளை பெத்துக்கணும்” என்று ஆதிகாலத்திலிருந்தே தங்களை ஆண்கள் அடக்கி வைத்திருப்பதாகப் பெண்கள் கருதுகிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.

கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 60% பேர், கல்யாணம் செய்துகொள்ளவும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்களாம்.

இனி, ஆண்கள் பாடு திண்டாட்டம்தான். ஹி...ஹி...ஹி!!!


'மல்லிகை’க்கு நன்றி!

வெள்ளி, 19 ஜூலை, 2019

கடவுளும் சில கேள்விகளும் உங்கள் மனசாட்சியும்!!!

‘கடவுளின் கடவுள்’ என்னும் வலைப்பக்கத்தை[blog] வடிவமைத்து மிகுந்த உத்வேகத்துடன் எழுதிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், நான் ‘வாங்கிக் கட்டிக்கொள்ள'க் காரணமாக இருந்த பதிவுகளில் ‘கோயிலுக்கா போகிறீர்கள்.....? கொஞ்சம் நில்லுங்கள்!’ என்பதும் ஒன்று.
                
ஆழமாகச் சிந்திக்கத் தூண்டும் பதிவு இது என்பதால் தங்களின் மறுவாசிப்புக்காக.....

கேள்விகள் க்கான பட முடிவு
நீங்கள் கோயிலுக்குப் போகும் வழக்கம் உள்ளவரா? கீழ்க்காணும் கேள்விகளை உள்வாங்கிக் கொள்ளுங்கள். பதில் அளிப்பது உங்கள் ‘மனசாட்சி’யாக இருக்கட்டும்!

கேள்வி 1:
“கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தவர். அவர் எல்லாம் வல்லவர்; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார். அணுவிலும் அவர்தான் இருக்கிறார். ஏன்.....உங்களுக்குள்ளேயும் அவர் நிரந்தரமாய்த் தங்கியிருக்கிறார். உங்களைப் படைத்த அவருக்கு உங்களைப் பாதிக்கிற கஷ்ட நஷ்டங்கள் பற்றி அத்துபடியாய்த் தெரிந்திருக்கும். உண்மை இதுவாக இருக்கும் போது, நீங்கள் முறையிட்டால்தான் உங்கள் குறைகளை அவர் போக்குவார் என்று நினைப்பது சரியா? கொஞ்சம் சிந்திப்பீர்களா? ‘அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்’ என்ற ‘வழக்குமொழி’யெல்லாம் வேண்டாம்.

கேள்வி 2:
உங்களுக்கோ உங்களின் சொந்தபந்தங்களுக்கோ நேரிட்ட துன்பங்களைக் களையும்படி நீங்கள் எத்தனை முறை அவரிடம் முறையிட்டிருக்கிறீர்கள்? எத்தனை முறை அவர் உங்கள் வேண்டுகோள்களுக்குச் செவி சாய்த்திருக்கிறார்? ஒரு பட்டியல் போட்டுப் பார்க்கலாம். செய்வீர்களா?

கேள்வி 3:
உங்கள் வேண்டுதல்களில் ஒன்றுகூட நிறைவேற்றப்படாத பட்சத்தில், கடவுளின் கருணை உள்ளம் குறித்து நீங்கள் சந்தேகப்பட்டதில்லையா? தெளிவு பெற முயன்றதில்லையா?

கேள்வி 4:
உங்கள் கோரிக்கைகளில் பல நிறைவேறாமல் மிகச் சில மட்டுமே நிறைவேறும் நிலையில், அவ்வாறு நடப்பது கடவுளின் கருணையால்தான் என நீங்கள் நம்புவது உண்டா? “ஆம்” எனில், பல கோரிக்கைகளை அவர் நிராகரித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன?

கேள்வி 5:
அனைத்திற்கும் மூல காரணமானவர் கடவுள்தான் என்றால், நம்மைத் தாக்குகிற துன்பங்களுக்கும் அவரே காரணம். எனவே, அவரைப் போற்றித் துதி பாடுவது தேவையற்றது என்ற எண்ணம் உங்களுக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லையா? ஏன்?

கேள்வி 6:
துன்பங்கள் நேர்வது கடவுளால் அல்ல என்று நீங்கள் நம்பினால், நம்மை இம்சிக்கிற துன்பங்கள் தாமாக வந்தன என்று அர்த்தமாகிறது. நமக்கு உண்டான துன்பங்கள் விலகும் போது அவை தாமாக விலகின எனக் கொள்ளாமல் கடவுளின் கருணையால் அவை நிகழ்ந்தன என்று நம்புகிறீர்கள். அவ்வாறு நம்புவது அறிவுடைமை ஆகுமா?

கேள்வி 7:
ஒட்டு மொத்த மக்கள் சமுதாயத்தின் துன்பம் களையுமாறு பிறருடன் இணைந்து கூட்டுப் பிரார்த்தனை செய்திருக்கிறீர்களா? அம்மாதிரியான வழிபாடுகளால் எத்தனை முறை பலன் கிட்டியிருக்கிறது?

வாட்டி வதைக்கும் வறுமை, தீராத நோய்கள், மதச் சச்சரவுகள், இன மோதல்கள், இயற்கைப் பேரிடர்கள் போன்றவை காரணமாக, உயிர்கள் கடும் துன்பத்திற்கு ஆட்பட்டுச் சித்திரவதைக்குள்ளாவதையும் சீரழிந்து செத்தொழிவதையும், இது போன்ற இன்ன பிற அவலங்களையும் கடவுள் தடுத்து நிறுத்தவில்லை என்பதற்காகக் கடவுளை நொந்துகொண்டதுண்டா? அவ்வாறு நொந்துகொள்வது தவறாகுமா?

கேள்வி 8:
“கோயிலுக்குப் போயி ஆண்டவனை வழிபட்டா, ஒருவித நிம்மதி பிறக்குது; மனசு சுத்தமாகுது.” இது மிகப் பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. நீங்களும் இதை நம்புகிறீர்களா?

நம்மில் மிக மிகப் பெரும்பாலோர் கடவுளைக் கும்பிடுபவர்கள்தாம். அத்தனை பேர் மனமும் சுத்தமானவையா என்ன? [வழிபடாதவர்களின் மனங்கள் தூய்மையானவை என்று நான் சொல்லவில்லை].

கோயிலுக்குப் போவதைக் கைவிட்டு[இக்கருத்து, தனி விவாதத்திற்குரியது] ஒரு மருத்துவமனைக்குப் போகலாம். அங்குள்ள நோயாளிகள் படும் துன்பங்களைப் பார்க்கும் போது நம் உள்ளம் இளகும்; உருகும்; கெட்ட எண்ணங்கள் அகன்று அது தூய்மை பெறும்.

அனாதை இல்லங்களைப் பார்வையிடலாம். நம்மால் முடிந்த அன்பளிப்புகளை அங்குள்ளவர்களுக்குக் கொடுத்து ஆறுதல் சொன்னால். நெஞ்சில் அன்பு சுரக்கும்; மகிழ்ச்சி நிரம்பும்.

மனநலம் பாதிக்கப் பட்டவர்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்திக்கலாம். அவர்களின் பரிதாப நிலை கண்டு கண்ணீர் உகுக்கும்போது மனதில் கருணை பிறக்கும்.

இன்னும், முதியோர் இல்லம்; குழந்தைகள் காப்பகம் என்று நம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகிற இடங்கள் நிறையவே உள்ளன.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதைத் தவிர்த்து, கோயிலுக்குப் போய்க் கடவுளை வணங்கினால் நிம்மதி கிட்டும்; மனம் தூய்மையடையும் என்று சொல்லப்படுபவை ஏற்கத்தக்கனவா? 

மேற்கண்ட வினாக்கள், கடவுள் வழிபாடு குறித்துச் சிந்தித்தபோது என்னுள் முகிழ்த்தவை. இவற்றிற்கான பதில்களை  நடுநிலை உணர்வுடன் தேடுவது சிறந்த சிந்தனையாளரான உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பயன்படக்கூடும்.

நன்றி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++